http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 93

இதழ் 93
[ மார்ச் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

மதுரகவி - தினமணி நாளிதழ் விமர்சனம்
திரும்பிப்பார்க்கிறோம் - 40
Thevarmalai
சோழ இராமாயணம் - பகுதி 01
Chola Ramayana 04
தேடலில் தெறித்தவை - 2
தலைஞாயிறு
கவி பாடிய வேந்தர்
Book Street Bonanza - 1
இதழ் எண். 93 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 40
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

அதற்குப் பிறகு சரக்கொன்றையைப் பல இடங்களில் பார்த்திருந்தாலும் ஆமூர்க் காட்சி கண்களில் இருந்து விலகவே இல்லை. திரு. அகிலனின் எழுத்தாளுமை சரக்கொன்றையை ரோகிணியாகவே என்னுள் நிறைத்திருந்தது. ஒரு கதைத் தலைவி இயற்கையோடு இயைந்து படிப்பவர் உள்ளத்தே தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் அந்தப் பாங்கு அனுபவித்தவர்களுக்கே புரியும்.கபினி நீர்த்தேக்கத்துக்கு அருகிலும் புனே சனிவார்க்கோட்டையிலும் நான் கண்ட சரக்கொன்றைகளும் கோடுகளைத் தாண்டி எனக்கு ரோகிணியையும் அவரது உணர்வு வெளிப்பாடுகளையுமே நினைவூட்டின. செம்மண் நிலத்தோடு ஐக்கியமான குறுந்தொகை நாயகி போலவே சரக்கொன்றையோடு ரோகிணி என்னுள் உயிர்த்திருந்தார்.

30. 3. 1991 அன்று காலை எசாலம், பிரம்மதேசம், எண்ணாயிரம், பனைமலை, மண்டகப்பட்டுக் கோயில்களைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டோம். திரு. கொடுமுடி சண்முகன் எண்ணாயிரத்தைச் சேர்ந்த அவர் நண்பர் ஒருவரை எங்களுடன் வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தியாவின் நிகரற்ற பெருவீரரும் அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி நெடுந்தொலைவுத் தென்கிழக்கு நாடுகளை வென்ற ஒரே இந்திய மன்னருமான முதலாம் இராஜேந்திரசோழரின் எசாலம் சிவன் கோயிலை நாங்கள் அடைந்தபோது காலை 10 மணி. எங்கள் வருகை அறிவிக்கப்பட்டிருந்ததால் கோயிலாரும் ஊராரும் காத்திருந்தனர். அவர்கள் அன்போடு தந்த இளநீரைப் பருகிய பிறகு ஒருதள வேசர விமானமாக அமைந்திருந்த அக்கோயிலைச் சுற்றிப் பார்த்தோம்.

கோயில் திருப்பணியின்போது கிடைத்த எசாலம் செப்பேடுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையிடம் அடைக்கலமானதால் அவற்றுடன் கிடைத்த செப்புத்திருமேனிகளை மட்டுமே காணமுடிந்தது. விமானத்தின் தெற்கு கிரீவகோட்டத்தில் இடம்பெற்றிருந்த வீணையேந்திய சிவபெருமானின் தோற்றமும் கோட்டத்தின் நாசிகைத் தலைப்பில் காணப்பெற்ற ஆடவல்லானின் சிற்பமும் கவனத்தைக் கவர்ந்தன. தமிழ்நாட்டுக் கோயில்களின் கிரீவகோட்ட நாசிகைத் தலைப்புகளில் ஆடவல்லான் இடம்பெற்றுள்ள இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சோழர் காலக் கோயில்களில் கட்டுமானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இடம்பெறும் சிற்பங்களுள் ஒன்றாக ஆடவல்லான் அமைந்தது. சிராப்பள்ளியிலுள்ள முற்சோழர் கோயில்களுள் ஒன்றான எறும்பியூர் விமானத்தின் தெற்குக் கோட்ட மகரதோரண வளைவில் ஆடவல்லானைக் காணலாம். திருப்பழனம் சிவன்கோயில் விமான ஆதிதளக் கபோதக் கூட்டில் ஆடவல்லானைப் பார்க்கமுடியும். ஆதிதளக் கோட்டச் சிற்பமாகப் பல கோயில்களிலும் கண்டபாத, வேதிபாதச் சிற்பமாகப் பல கோயில்களிலும் தொங்கல் அலங்கரிப்பாய் ஐயாறப்பர் சுற்றுமாளிகைத் தூணிலும் இடம்பெற்றுள்ள ஆடவல்லானின் முதல் காட்சி சீயமங்கலம் அவனிபாஜனத்தில்தான் புஜங்கத்ராசிதமாகக் கிடைக்கிறது.

பிரம்மதேசத்தில் இரண்டு சோழர் கோயில்கள் உள்ளன. ஆளரவமின்றி இருந்த அக்கோயில்களை முழுமையான அளவில் ஆராய்ந்தோம். சமபங்கத்தில் சுவரருகே காணப்பட்ட பிள்ளையார் சிற்பம் எங்களைப் பெரிதும் கவர்ந்தது. சோழர் காலத்தில் வடிக்கப்பட்ட அச்சிற்பத்தின் உடலமைப்பும் அலங்கரிப்பும் தோற்ற அமைதியும் யாரையும் கவரும் தன்மையன. எண்ணாயிரம், முதல் இராஜேந்திர சோழரின் கல்வெட்டுகளைக் கொண்டிருக்கும் எளிய கோயிலாகும். இவ்வூரில்தான் வரலாற்றுப் புகழ் பெற்ற வேதக்கல்லூரி சோழர் காலத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அக்கல்லூரி நிருவாகத்தைப் பற்றிப் பேசும் நெடிய கல்வெட்டு அரியதொரு வரலாற்றுப் புதையலாகும். நளினி அக்கல்வெட்டைப் படிக்க நாங்கள் சூழவிருந்து கேட்டோம். எண்ணாயிரத்தில் உடன் வந்தவரின் உறவுகள் இருந்தமையால் மதிய உணவு அங்கமைந்தது.

ஒரு பெருமாட்டியின் வீட்டில் உள்ளன்போடு சமைக்கப்பட்ட சுவையான உணவை அருந்தும் வாய்ப்புக் கிடைத்தது. என் பெரியம்மாவைப் போலவே தோற்றமும் பழக்கமும் கைச்சுவையும் கொண்டிருந்த அப்பெருமாட்டியிடம் நாங்கள் ஐக்கியமானோம். தம் குடும்ப உறுப்பினர்களைப் போலவே எங்களைக் கருதி, உபசரித்த அப்பெருமாட்டி என்னைத் தம் மகனாகவே ஏற்றுக்கொண்டார். பின்னாட்களில் எண்ணாயிரம் பகுதிக்கு எப்போது சென்றாலும் மதிய உணவு அவ்வம்மையின் இல்லத்தில்தான். அவர் குடும்பமே எங்களுக்காகக் காத்திருக்கும். ஏழ்மையிலும் எளிமையிலும் வெளிப்படும் கலப்படமற்ற அன்பு விலை மதிப்பற்றது. எங்கள் பேறு பல ஊர்களில் அத்தகு இனிய அன்பிற்கு நாங்கள் ஆட்பட்டோம்.

அனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பனைமலை, இராஜசிம்மப் பல்லவரின் கோயிலைப் பெற்றதாலேயே வரலாற்று வரைபடத்திற்குள் இடம்பிடித்த சிற்றூர். இராஜசிம்மர் காலச் சிற்பிகள் வரலாற்றில் முதல் முறையாகக் கோயிற் கட்டுமானத்தில் புதியதொரு முயற்சியைத் தொடங்கிய இடம் பனைமலை. பல ஆண்டுகளாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த அக்கோயிலை ஆர்வத்துடன் ஆராய்ந்தோம். விமானச் சுவரின் சாலைப்பத்தியை நான்கு திசைகளிலும் நன்கு முன்னிழுத்து அவற்றுள் மூன்றை அங்காலயங்களாக்கியிருக்கும் பல்லவக் கட்டுமான அறிஞர்களின் புத்தமைப்பு, முதல் பார்வையில் விளங்கவில்லை என்றாலும், விமானத்தை அடி முதல் நுனிவரை மீண்டும் மீண்டும் ஆராய்ந்தபோது தெளிவாகப் புலனாகியது. கிழக்குச் சாலை இழுப்பு, கருவறைக்கு முன்னால் பக்கச்சுவர்களில் நான்முகன், விஷ்ணு சிற்பங்களுடன் சிறு மண்டபமென அமைந்திருந்தது.

வடக்குச் சாலை இழுப்பின் உட்சுவரில்தான் உமை அன்னையின் ஒல்காப் பேரெழில் ஓவியம் இன்றும் வண்ணம் கெடாமல், வடிவழகு குலையாமல் காட்சியளிக்கிறது. நெடு நேரம் அந்த ஓவியத்தை இரசித்தபடி நின்றிருந்தோம். 1200 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பெற்ற அந்த ஓவியம் பல்லவக் கலைஞர்களின் கற்பனைத் திறன், வண்ணக் கலவைகளில் அவர்கள் பெற்றிருந்த பயிற்சி, மனித உடலின் வளைவு நெளிவுகளில் வேண்டும் அளவிற்கு அழகைத் தேக்கிக் கண் களை வயப்படுத்தும் வித்தைகளில் அவர்களின் விரல்கள் கொண்டிருந்த தேர்ச்சி இவற்றைத் தெள்ளிதின் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கண்ணில் வினைஞர் என்று இலக்கியங்கள் குறிப்பிடுவது இத்தகு மேதைகளைத்தான்.

மேற்குச் சுவரில் சிவபெருமானின் குஞ்சிதக் கரணம் ஓவியமாகி உள்ளது. இராஜசிம்மருக்கு இந்தக் கரணத்தின் பால் இருந்த அளவற்ற ஈடுபாட்டைக் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிற்பங்களால் அறியலாம். பனைமலையில் இருந்து இறங்கும்போது வழியில் இயற்கையான குகை ஒன்றின் சுவரில் வெட்டப்பட்டிருந்த இராஜசிம்மரின் விருதுப் பெயர்களைப் படித்தோம். இராஜசிம்மர் காலச் சிம்மவாஹினி பலகைக்கல் சிற்பமாய் இங்குக் காட்சிதருகிறார்.

விழுப்புரம் திரும்பும் வழியில் முதலாம் மகேந்திரவர்மரின் முதற் குடைவரையான மண்டகப்பட்டுக்குச் சென்றோம். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை உதவி இயக்குநர் நண்பர் திரு. கு. தாமோதரன் துணையுடன் அடுத்த நாள் காலை திண்டிவனத்திற்கு அருகிலுள்ள திருவக்கரைக் கோயிலுக்குச் சென்றோம். செம்பியன்மாதேவி காலத் திருப்பணியான அந்தக் கோயிலில் கண்கவர் எழிலுடன் அமைந்த ஆடவல்லான் திருமேனி இடம்பெற்றுள்ளது. தாமோதரன் துணையுடன் அத்திருமேனியை ஆராய்ந்து படங்கள் எடுத்தோம். திருவக்கரை கற்படிவங்களுக்குப் புகழ்பெற்ற ஊராகும். அவற்றைப் பார்த்த பிறகு கீழ்வாலை ஓவியங்களைக் காணச் சென்றோம். இடம் தெரிந்தவர் உடன் வந்திருந்தபோதும் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்த பாறையைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. மிகுந்த முயற்சிக்குப் பின்பே பாறையைக் கண்டறிந்து ஓவியங்களைப் பார்த்தோம். பேராசிரியர் திருமாறன், இலலிதாம்பாள் ஆகிய இருவருக்கும் தென்னாற்காடு மாவட்டக் களஆய்வு மிகுந்த பயனுடையதாக அமைந்ததென அறிந்தேன்.

1. 4. 1991 காலை நான் மருத்துவமனை வந்தபோது என்னைக் காணச் சென்னையிலிருந்து ஆய்வு மாணவர் ஒருவர் வந்திருப்பதாக உதவியாளர் மருதநாயகம் தெரிவித்தார். நான்கு நாட்கள் ஊரில் இல்லாமையால் மருத்துமனையில் கூட்டம் இருந்தது. வந்திருந்தவர்களைப் பார்த்து முடித்ததும் ஆய்வு மாணவரை வரவழைத்தேன். சென்னையில் இளநிலைக் கலைக்கல்வி பயின்று முறைப்படி ஆடல் கற்றிருந்த செல்வி வே. கல்பகம் தம்முடைய ஆடற்கரணங்கள் தொடர்பான முனைவர் பட்ட ஆய்வுக்காக என்னைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னார்.

தினமணிகதிரில் தொடர்ந்து வெளியான ஆடற்கரணங்கள் பற்றிய என்னுடைய கட்டுரைகளைத் தாம் படித்திருப்ப தாகவும் கரணங்களைப் பற்றி நன்கறிந்த ஒருவரிடமே தாம் ஆய்வு செய்ய விழைவதாகவும் கூறிய அவரிடம் தொடர்ந்து உரையாட முடியாதபடி நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். அதனால், விரிவான அளவில் பேச அன்று மாலையும் அடுத்த நாளும் அவர் வந்தபோது, அவருடைய தேவை, பயிற்சி, கரணங்கள் இவை குறித்துச் சில பேசினோம்.

கரணங்கள் குறித்த என்னுடைய விளக்கங்களில் மகிழ்ந்த கல்பகம் என் வழிகாட்டலில் தம்முடைய முனைவர் ஆய்வைத் தொடர விரும்பினார். அவருடைய ஆர்வமும் ஆடற்கலையில் அவர் பெற்றிருந்த பயிற்சியும் என்னை இசைவளிக்குமாறு செய்தன. தாம் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் கோயிலில் உள்ள ஆடற்கரணச் சிற்பங்களைப் பார்த்ததில்லை என்றும் அவற்றைப் பார்க்க உதவமுடியுமா என்றும் அவர் கேட்டபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த கடிதம் என் நினைவிற்கு வந்தது. கல்வெட்டியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய முனைவர் கா. இராசனின் தகுதி காண் பருவப் பணிகளைச் சீர்தூக்கும் குழுவில் என்னை உறுப்பினராக நியமித்துக் குழுக்கூட்டம் 4. 4. 1991 பிற்பகல் துணைவேந்தர் அறையில் நடைபெறும் என்பதைச் சுட்டி அதற்கான என் இசைவு கேட்டு அக்கடிதம் வந்திருந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புதல் தந்திருந்தமையால் அது பற்றிக் கல்பகத்திடம் கூறி அவர் வருவதானால் அன்று மாலை தஞ்சாவூர்க் கரணங்களைப் பார்க்கலாம் என்று அழைத்தேன்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.