http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 93

இதழ் 93
[ மார்ச் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

மதுரகவி - தினமணி நாளிதழ் விமர்சனம்
திரும்பிப்பார்க்கிறோம் - 40
Thevarmalai
சோழ இராமாயணம் - பகுதி 01
Chola Ramayana 04
தேடலில் தெறித்தவை - 2
தலைஞாயிறு
கவி பாடிய வேந்தர்
Book Street Bonanza - 1
இதழ் எண். 93 > கலையும் ஆய்வும்
கும்பகோணத்தில் இருந்து பந்தணைநல்லூர் வழியாக வைத்தீசுவரன் கோயில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தற்போது தலைஞாயிறு என்று அழைக்கப்படும் கருப்பறியலூர். இவ்வூரில்தான் பாடல் பெற்ற1 கொகுடிக்கோயிலான குற்றம் பொறுத்தீசுவரர் கோயில் முத்தளக் கோபுரத்துடன் எளிய சூழலில் உள்ளது. அதே வளாகத்தின் தென்மேற்குப் பகுதியில் கொகுடிக்கோயில் விமானத்தின் அருகில் மலைக்கோயில் என்று அழைக்கப்படும் பார்வதிபாகர் மாடக்கோயில் இருதள வேசரமாக அமைந்துள்ளது.2 1953ல் தருமபுரம் திருமடத்தால் திருப்பணி செய்யப்பட்டுள்ள இக்கோயிலின் வெற்றுத்தளம் கருங்கல் பணியாய்ப் பழைய கட்டமைப்பிலேயே இருந்தபோதும் செங்கல் திருப்பணியாய் உள்ள இறைவன் விமானம் முற்றிலும் மாறியுள்ளது.

வெற்றுத்தளம்

2. 98 மீ. உயரமுள்ள வெற்றுத்தளம் தாமரைக்கட்டுத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்று, சிற்றுருவச் சிற்பங்களுடனான கூடுவளைவுகள் கொண்ட கபோதத்துடன் திகழ்கிறது. அச்சிற்பங்களுள் தென்புறமுள்ள சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் குறிப்பிடத்தக்கது. விரிசடையுடன் பின் கைகளில் உடுக்கையும் தீயகலும் கொண்டு இடக்காலையும் இட முன் கையையும் வீசி ஆடும் இறைவனின் வலக்கை காக்கும் குறிப்பில் உள்ளது. சோழர் கபோதக்கூடுகளில் இது போன்ற கண்கவர் சிற்பங்கள் இயல்புதான் என்றாலும் ஆடவல்லானின் இருப்பு சற்று அருமையான காட்சியே.





தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய முத்திசைகளிலும் வெற்றுத்தளம் புறந்தள்ளிய இரண்டு சாலைப்பத்திகளைப் பெற்றுள்ளது. கோட்டங்களற்ற இப்பத்திகள் பல்லவர் காலச் சாலைப்பத்திகளை நினைவூட்டுகின்றன. வெற்றுத்தளத்தின் மேலமைந்துள்ள விமானத்தை அடைவதற்கான படிக்கட்டுகள் பதினைந்தும் பிடிச்சுவருடன் வடபுறத்தே அமைந்துள்ளன. கீழ்ப்படி சந்திரக்கல்லாக அமைய, பிடிச்சுவர் மேலிருந்து கீழாக உள்ள எட்டாம் படியருகே துளைக்கைச் சுருளாய்த் தாங்கலின் மேல் அமர்ந்துள்ளது. அத்தாங்கலின் கீழிருந்து தொடரும் மற்றொரு துளைக்கைப் பிடிச்சுவர் கீழ்ப்படிகளுக்கு அணைவாகிச் சந்திரக் கல்லின் இருபுறத்தும் உள்ள தாங்கல்களில் நிறைவடைகிறது. படிக்கட்டுகளின் முடிவிலுள்ள மேற்குப் பார்த்த வாயிலின் முன்னுள்ள முன்றில் கூரையை இரண்டு முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. கூரையின் மேலுள்ள இரண்டு வளைவுகளில் வடக்குப் பார்த்த வளைவில் பிள்ளையாரும் மேற்குப் பார்த்த வளைவில் இறைவனும் இறைவியும் சுதையுருவங்களாக உள்ளனர்.

விமானம்

வெற்றுத்தளத்தின் மீதமர்ந்துள்ள விமானம் ஒரே அளவாய் அமைந்த இரண்டு தளங்கள் பெற்றுள்ளது. இரண்டுமே செங்கல் கட்டுமானங்கள். 2. 87 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ள கீழ்த்தளம் வேதிகை, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்று, வடக்குத் தவிர்த்த முத்திசை களிலும் வெற்றுத்தளம் போலவே திசைக்கு இரண்டு புறந்தள்ளிய சாலைப்பத்திகள் பெற்றுள்ளது. கிழக்கில் இச்சாலைப்பத்திகளுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதி வலைச்சட்டம் பெற்ற திறப்பாக உள்ளது. இத்திறப்பின் பக்கநிலைகள் போல் காட்டப்பட்டுள்ள நான்முக அரைத்தூண்கள் மேலே உத்திரம், வாஜனம், கூரை, கபோதம் பெற்றுள்ளன. சாலைப் புறந்தள்ளல்கள் மூன்று திசைகளிலும் ஆரஉறுப்புகளாகப் பஞ்சரங்களைப் பெற்றுள்ளன. இப்பஞ்சரங்கள் இரண்டாம் தளச் சாலைப்பத்திகளை நிறைத்துள்ளன.

முதல் தளம் போலவே அமைந்துள்ள இரண்டாம் தளத்திலும் வடக்குத் தவிர்த்த முத்திசைகளிலும் பக்கத்திற்கு இரு சாலைப் புறந்தள்ளல்கள் உள்ளன. இப்புறந்தள்ளல்கள் முதல் தள ஆரப்பஞ்சரங்களைக் கொண்டுள்ளன. இரண்டாம் தளத்தின் மேல் அமைந்துள்ள வேசர சிகரத்தின் கிழக்கு கிரீவகோட்டம் நன்கு முன்னோக்கி நீட்டிப் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. அதன் கீர்த்திமுகத்தில் சிவபெருமான் காட்சிதருகிறார். தெற்கு கிரீவகோட்டத்திற்கு முன் வடிவமைக்கப்பட்டுள்ள கர்ணகூடம் போன்ற கட்டமைப்பின் தென்முகத்தில் வாயில் போல் அமைத்து இருபுறத்தும் சுதைக் காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். வாயிலின் முன் நின்ற நிலையில் சுதைச் சிங்கம் உள்ளது.

தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் காணப்படும் உள்ளடங்கிய கிரீவகோட்டக் கீர்த்திமுகங்களில் ஆலமர்அண்ணலும் விஷ்ணுவும் நான்முகனும் உள்ளனர். இரண்டாம் தளக்கூரையின் நான்கு மூலைகளிலும் பக்கத்திற்கிரு நந்திகள் உள்ளன. அனைத்து கிரீவகோட்டங்களும் வெறுமையாக உள்ளன. விமானக் கீழ்த்தளத்தின் வடகிழக்குப் புறந்தள்ளல் முன்றிலுக்குப் பின்னமைந்த கருவறைக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. அதன் கூரை மேல் உயரக் குறைவான இரண்டாம் தளம் அமைய, மேலே நான்முகனைக் கொண்ட கீர்த்திமுகம்.

விமானத்தின் கீழ்த்தளத்தில் உள்சுற்றுடனான கருவறை உள்ளது. சிவபெருமானும் உமையும் சுகாசனத்தில் சுதையுருவங்களாய் உள்ளனர். சடைமகுடம், சிற்றாடை, கழுத்தணிகள், மகர குண்டலங்கள் செவிப்பூக்கள், தோள், கை வளைகள் அணிந்துள்ள தோணியப்பரின் பின்கைகளில் மானும் மழுவும். வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடகத்தில் உள்ளது. இறைவன், இறைவியின் கீழிறக்கிய பாதம் இருத்தத் தாமரைத் தளங்கள் காட்டப்பட்டுள்ளன. இறைவனின் இடப்புறமுள்ள இறைவி கரண்டமகுடம், பட்டாடை அணிந்து, வலக்கையை கடகத்திலும் இடக்கையை இருக்கையின்மீதும் இருத்திக் காட்சிதருகிறார்.

கருவறையின் சுவர் உறுப்பு வேறுபாடுகளற்ற செங்கல் கட்டுமானமாய் உள்ளது. சுற்றுவழியின் கூரைச்சுவர் நெருக்குதல் அற்ற நிலையில் சிமெந்துப் பலகைகளால் மூடப்பட்டுள்ளது. கருவறையின் தெற்கிலுள்ள மரப்படிகள் இரண்டாம் தளத்திலுள்ள சட்டைநாதர் திருமுன்னுக்கு அழைத்துச் செல்கின்றன. மரப்படிகளின் முடிவில் தென்பார்வையாகச் சட்டைநாதர் திருமேனி அமைந்துள்ளது.

குற்றம் பொறுத்தீசுவரர்

மாடக்கோயிலின் வடபுறம் விளங்கும் கொகுடிக்கோயிலின் விமானம் ஒருதள வேசரமாகக் கபோதபந்தத் தாங்குதளம், வேதிகை, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் சாலைப்பத்திகளைச் சற்றே புறந்தள்ளியுள்ளது. இந்திரகாந்தத் தூண்களால் அணைக்கப்பட்டுள்ள இப்பத்திகள் முத்திசைகளிலும் கோட்டப் பஞ்சரங்கள் பெற்றுள்ளன. தெற்கு, மேற்குக் கோட்டங்களில் சோழர் கால ஆலமர்அண்ணலும் இலிங்கோத்பவரும் அமைய, வடக்கில் அண்மைக் கால நான்முகன் உள்ளார்.



வலப் பின் கையில் பாம்பும் அக்கமாலையும் ஏந்தி, இடப் பின் கையில் தீச்சுடர் அமைய, வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் வல முன் கை சின் முத்திரையில் உள்ளது. விரிசடை, மகர, பனையோலைக் குண்டலங்கள், கழுத்தில் நீளமான அக்கமாலை, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்துள்ள பெருமானின் இட முன் கை சுவடியுடன் தொடையில் அமர்ந்துள்ளது. இறைவன் வீற்றிருக்கும் தளமுகப்பில் அடியவர்கள் காட்சிதர, இறைவனின் வலப்புறத்தே நந்தி அமர்ந்துள்ளது.

சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், உதரபந்தம், புலிமுகக் கச்சுப் பெற்ற சிற்றாடை, இடைக்கட்டுக் கொண்டு நிற்கும் இலிங்கோத்பவரின் பின்கைகளில் மான், மழு அமைய, முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் உள்ளன. விமானத்தின் கர்ணபத்திகளில் குடப்பஞ்சரங்கள். கபோதக்கூடுகளில் கண்ணப்பர் வரலாறு போன்ற சிற்றுருவச் சிற்பங்கள் உள்ளன. செங்கல் கட்டுமானமாக உள்ள கிரீவத்தின் கோட்டங்களில் தெற்க்ில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் அர்த்தபத்மாசனத்தில் விஷ்ணுவும் வடக்கில் அதே அமர்வில் நான்முகனும் சுதையுருவங்களாக உள்ளனர். கோட்டக் கீர்த்தி முகங்களில் திசைக்கேற்ப இறைத்திருமுகங்கள் உள்ளன.

விமானம் ஒத்த கட்டமைப்புடன் விளங்கும் முகமண்டபக் கோட்டங்களில் தென்புறம் சோழர் காலப் பிள்ளையாரும் வடபுறம் அண்மைக் கால மகிடாசுரமர்த்தனியும் உள்ளனர். பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்திக் கரண்டமகுடம் சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை, தாள்செறிகள் கொண்டு நிற்கும் சுந்தரப் பிள்ளையாரின் வல முன் கை உடைந்த தந்தம் கொள்ள, இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. வலத்தந்தம் சிதைந்துள்ள இச்சிற்பம் பெயருக்கேற்றார் போல் பேரழகுடன் சுந்தரப் பிள்ளையாராகவே திகழ்வது குறிப்பிடத்தக்கது. முகமண்டபத்தின் முன் உள்ள பெருமண்டபத்தின் வடபுறம் கோல்வளை நாயகியின் ஒருதள வேசர விமானம் முகமண்டபத்துடன் உள்ளது. அதன் கிழக்கில் ஆடவல்லான் திருமுன்.

இக்கோயிலின் வடபுறத்தே சோழர் கால நான்முகனும் மகிடாசுரமர்த்தனியும் இடுப்பிற்குக் கீழ் சிதைந்த நிலையில் மண்ணில் புதைந்துள்ளனர். சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள் சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம் கொண்டு காட்சிதரும் நான்முகனின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. முன்கைகள் சிதைந்துள்ளன. கரண்டமகுடம், மகர குண்டலங்கள், சரப்பளி, மார்புக்கச்சு அணிந்து பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி நிற்கும் மகிடாசுரமர்த்தனியின் முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் உள்ளன. இவற்றின் அருகே பைரவர் சிற்பத்தின் தலை மட்டும் காணப்படுகிறது.

கல்வெட்டுகள்

இக்கோயில் வளாகத்திலிருந்து 19 கல்வெட்டுகள் படியெடுக் கப்பட்டுள்ளன.3 அவற்றுள் ஐந்து கல்வெட்டுகள் மூன்றாம் இராஜராஜருக்குரியவை. இரண்டு கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கரின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டவை. இரண்டாம் இராஜாதிராஜரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றும் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டொன்றும் இங்குள்ளன. நான்கு கல்வெட்டுகள் உருவச் சிற்பங்களின் பெயர்களைத் தருவனவாக அமைந்துள்ளன.4 ஒரு கல்வெட்டு கோட்டப் பிள்ளையாரைச் சுந்தரப் பிள்ளையார் என்று அழைக்கிறது.5 இரண்டு கல்வெட்டுகள் விக்கிரமசோழ வேளார் திருமலை திருமஞ்சண மண்டபம், குற்றம்பொறுத்த ஈசுவரர் கோயிலின் பெருமண்டபம் ஆகியவற்றை எடுப்பித்த தகவலைப் பகிர்ந்துகொள்கின்றன.6 மூன்று கல்வெட்டுகள் மன்னர் பெயரின்றிக் கிடைத்துள்ளன.

வளநாடு, நாடு, ஊர்

பெரும்பாலான கல்வெட்டுகளில் பார்வதிபாகர் கோயிலாகக் குறிக்கப்படும் இவ்வளாகம், இராஜாதிராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டு அகரம் ஸ்ரீகுலோத்துங்கசோழன் தனி நாயகச் சதுர்வேதிமங்கலத்தில் இருந்தது. இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் ஒன்றிலேனும் தலைஞாயிறு, பறியலூர்7 எனும் ஊர்ப்பெயர்கள் கோயிலிருக்கும் இடத்தைச் சுட்டுவனவாக இடம்பெறாமை வியப்பளிக்கிறது. உய்யக்கொண்டார் வளநாடு, அமரநாடு எனும் வருவாய்ப் பிரிவுகளுடன் ஆறு ஊர்ப்பெயர்களை இக்கல்வெட்டுகளில் இருந்து பெறமுடிகிறது.8

அரசு அலுவலர்கள்

நான்கு கல்வெட்டுகள் அரச ஆணைகளாக விளங்கிய போதும் மூன்றாம் குலோத்துங்கரின் இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே திருமந்திர ஓலைநாயகமாக நெறியுடைச்சோழ மூவேந்தவேளாரும் கையெழுத்திட்டவர்களாகக் குருகுலராயர், மழவராயர், விழிஞத்தரையர், வயிராதராயர், வேணாடுடையார், மலையப்பராயர், காடுவெட்டி, நரசிங்கபன்மர், அமரகோன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.9 அவற்றுள் ஒன்று, பிரம்மேந்திரர், வாணாதிராஜர் இவர்தம் பரிந்துரையேற்று மகாசபைக்கான தேர்தல், அதன் உறுப்பினர்களின் தகுதி குறித்த சில புதிய வரையறைகளை முடிவு செய்து தனிநாயகச் சதுர்வேதிமங்கலத்திற்கு மன்னர் ஆணை அனுப்பிய தகவலைத் தருகிறது.10

கோயிலுக்கான கொடைகள்

சோழகுலாறன் மங்கலாதிராசர் தேவி, பார்வதிபாகருக்கு வழிபாட்டிற்காக 100 கழஞ்சுப் பொன் அளித்ததுடன் விமானத்திற்கான தூபியையும் செய்தளித்தார்.11 சொன்னவாறு அறிவான் பட்டன் கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாக 12,000 காசு களுக்கு நிலம் விற்றார்.12 விலைத்தொகையில் 10,000 காசு தரப்பட்டது. எஞ்சிய 2,000 காசு பிறகு தரப்படும் எனத் தானத்தார் கூறி, அக்காசு வராமையின், சொன்னவாறு அறிவான் ஆராய்ச்சியார் ஓலை, முதலிகள் ஓலை இவற்றுடன் அம்பலத்திற்கு வந்து வாதிட்டு 2,000 காசுகளைப் பெற்றதாகக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இந்நிலத்திற்கான எல்லைகளைக் குறிக்கும்போது தில்லை நாயக வாய்க்காலும் பார்வதி வதியும் சுட்டப்பட்டுள்ளன. பிள்ளை வில்லவராயர் குற்றம்போத (குற்றம் பொறுத்த?) பெருமாளுக்குப் பள்ளியறை நாச்சியாகப் பண்ணமர் மென்மொழி யாளை எழுந்தருளுவித்ததுடன், அம்மைக்கான அமுது, பூசை இவற்றிற்காக ஆண்டுக்கு 20 கலம் நெல் உடலாக அளித்தார்.13

ஆண்டார் திருஞானசம்பந்தர் தாம் இக்கோயிலில் எழுந்தருளுவித்த திருஞானம் பெற்ற பிள்ளையாருக்கு (சம்பந்தர்) உச்சி அமுதுக்கு உடலாக 2,000 காசுகள் அளித்தார். இறைவனுக்குப் படையலான பிறகு அவ்வுணவு மாகேசுவரருக்கு ஒடுக்காக வழங்கப்பட்டது. திருவாதிரைத் திருநாளில் சம்பந்தர் எழுந்தருளும்போது மாலை, அமுது படைக்கவும் விளக்கு எண்ணெய்க்காகவும் 1,500 காசுகள் அளிக்கப்பட்டன. இந்த எழுந்தருளல் முதல் ஆறு மாதங்களில் சிறுகாலைச் சந்தியிலும் பின் ஆறு மாதங்களில் ஞாயிறு அன்றும் நிகழ்ந்தது.14

சம்பந்தர் திருமேனிக்குச் சிறுகாலைச் சந்தியின்போது வெள்ளைக் குத்தல் அரிசி, பருப்பு, கரும்புக்கட்டி, பால், வாழைப் பழம், ஐந்து வகைக் கறியமுது, தேங்காய், உப்பு, மிளகு, சீரகம், நெய், வெற்றிலைப் பாக்கு இவை படைக்கவும் மேற்பூச்சுச் செய்யவும் கைவிளக்கு ஏற்றவும் திருவாதிரையின்போது முப்பது அப்பம் படைக்கவும் மகாதேவன் என்பார் 14,000 காசுகளைப் பண்டாரத்தில் ஒப்புவித்தார்.15

கோயில் தானத்தாருள் ஒருவரான சுந்தரப் பெரும்பிள்ளை அர்த்தசாமக் கட்டளைக்காக இலுப்பைத் தோட்டமும் குளமும் அளித்தார்.16 கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு, கோயில் நிலங்களுக்கான வரிவிலக்கை அறிவிப்பதுடன் மன்னரின் வெற்றி களையும் பட்டியலிட்டுள்ளது.17 கோயிலின் சில நிலங்களில் இருந்து வராதிருந்த வரியினங்களை அதன் பிற நில வருவாயில் இருந்து செலுத்துமாறு அரச ஆணை பிறப்பிக்கப்பட்டது.18 மற்றோர் அரச ஆணை, பெறாமல் விடுபட்ட வரி வருவாயான 78,105 கலம் நெல்லைப் பெற்றனுப்பப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.19

விளக்குகள்

இக்கோயில் இறைவன் திருமுன் இரண்டு நந்தாவிளக்குகள் ஏற்ற வாய்ப்பாக வேதவனமுடையார் கருணாகரதேவர் கொடையளித்தார். கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் கொடை பற்றிய விவரங்களை அறியக்கூடவில்லை.20

சிறப்புச் செய்திகள்

நாட்டவர்களின் குறைகளை நீக்கச் சில சலுகைகளை அறிவிக்கும் அரச ஆணையாக அமைந்துள்ள கல்வெட்டு அக்கால நடைமுறைகளை வெளிச்சப்படுத்துகிறது. இந்த ஆணையின்படி, அதுநாள்வரை நாட்டார் செலுத்திய பொதிச் சத்தக்கூலி, பெருங்குடிகள் பேர்க்கடமை ஆகியன தவிர்க்கப்பட்டன. தேவர்கள் சிறுமுறி, வகைசெய்வார் காசு இவற்றையும் மடத்தில் உண்பவர்களுக்கு ஆறு காசுகளும் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டது. சிறுமுறி கொணர்ந்த சேவகருக்குச் சோறிட்டு எச்சில் எடாதொழியுமாறு கூறப்பட்டதுடன் வேலிக்காசு, குதிரைக்காசு இவற்றைப் பெருங்குடிகளே இறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றின் வழி வேளாளர் நலியாமல் செய்க என்று சபைக்கு உணர்த்தப்பட்டது. தில்லைநாயகன் பெரும்பண்டாரம், வாரியப்பெருமகன், இலச்சினைப்படி நெல் அளப்பு, அம்பலம் என்பன இக்கல்வெட்டால் அறியப்படும் பிற தரவுகளாகும்.21

குறிப்புகள்

1. சம்பந்தர் 3 : 31; சுந்தரர் 7 : 30.
2. ஆய்வு நாள் 15. 9. 2009. இம்மாடக்கோயிலை அறிமுகப்படுத்தியவர் திரு. பால. பத்மநாபன்.
3. ARE 1926-27: 140-158.
4. திருஉடையார், சோழகுலாறன் மங்கலாதராசர், இவர் மகனார் பெருமாள் ஆகிய பெயர்கள் வெட்டப்பட்டிருந்தபோதும் அவற்றிற்குரிய சிற்பங்கள் தற்போது இல்லை. மங்கலாதராசர் பெயர் இரு இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.
5. ARE 1926-27: 155.
6. ARE 1926-27: 151, 158.
7. ஊர்க்கணக்கின் பெயரைச் சுட்டுமிடத்துப் பறியலூர்க் கிழவன் என்கிறது கல்வெட்டு. ARE 1926-27: 145.
8. துள்ளுவார்க்குடி, பனங்காட்டங்குடி, அம்பர், வெண்காடு, திருக்கழிப்பாலை, பறியலூர்.
9. ARE 1926-27: 147, 148.
10. ARE 1927, II 28. K. A. Nilakanta Sastri, The Cholas, pp. 498-499.
11. ARE 1926-27: 140.
12. ARE 1926-27: 143.
13. ARE 1926-27: 144.
14. ARE 1926-27: 149.
15. ARE 1926-27: 145.
16. ARE 1926-27: 156.
17. ARE 1926-27: 157.
18. ARE 1926-27: 146.
19. ARE 1926-27: 147.
20. ARE 1926-27: 152.
21. ARE 1926-27: 150.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.