டிசம்பர் சீஸன் கச்சேரிகளுக்குச் செல்லும் பொழுது, ஒரு நாளில் பல கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு கிடைக்கும். சில நாட்களில் காலை 9.00 மணி கச்சேரி பிரமாதமாய் இருக்கும். மதியம் 12.30 மணி கச்சேரியைக் கேட்டால், 9.00 மணிக்கு கச்சேரி கேட்ட நினைவே இருக்காது. 2.30 மணி கச்சேரியை கேட்டவுடன், இதுதான் சுகத்தின் உச்சகட்டம், இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் என்று தோன்றும். ஆனாலும் 6.00 மணி ப்ரைம் டைம் கச்சேரியை விட மனது வராமல் அதையும் கேட்போம். அந்த கச்சேரி, பிரம்மானந்தமாய் அமைந்து அந்த நாளை, பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய தினமாய் மாற்றிவிடும்.
இந்த அனுபவம் சங்கீதத்துக்கும் மட்டுமல்ல, கோயில்களுக்கும் உண்டு. ஊட்டத்தூரைக் கண்டு மயங்கிய நாங்கள், திருப்பட்டூரைக் கண்டதும், இதை மிஞ்ச வேறொன்றுமில்லை என்று நினைத்தபடி திருச்சிக்குத் திரும்பினோம். அரங்கனைக் கண்ட திருப்பானாழ்வார் "என் இனிய அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே" என்று சொன்னது போல், "திருப்பட்டூரைக் கண்ட கண்கள் (இன்று) மற்றொன்றினைக் காணாதே" என்று நினைத்து, அன்றைய மதியத்தை முனைவர் கலைக்கோவனின் இல்லத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி அளவளாவியபடி கழித்தோம். அவரே, "சாயங்காலம் எங்கேயாவது பக்கத்துல போயிட்டு வரலாமா?" என்று வினவ, பேராவல் கொண்ட எங்கள் மனது வேண்டாம் என்றா சொல்லும்?
திருச்சி-கோயம்பத்தூர் நெடுஞ்சாலையில் இருக்கும் அல்லூரில், "வரப்புல இருக்கற சிவன் கோயில் எங்கே?" என்று ஊர் மக்களிடம் கேட்டால், சரியான வழி கிடைக்கும் இடத்தில் அமைந்துள்ள கோயிலை அடைந்தோம். கோயிலைச் சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. நாங்கள் போன சாயங்கால வேளையில் வீசிய தென்றலில் பலத்த சலசலப்பிற்கிடையில் கோயிலை ரசிக்கத் தொடங்கினோம். இப்பொழுதெல்லாம், எந்த கோயிலுக்குச் சென்றாலும் எங்களது கழுத்து எங்களையறியாமலே வளைந்து, எங்களை மேல்நோக்க வைக்கிறது.
6 மாதங்களுக்கு முன், ஒரு கோயிலுக்குச் சென்றால், பூதவரி என்ற ஒன்றை பார்த்திருப்பதே துர்லபம். இப்பொழுது என்னடா என்றால், கோயில் கருவறையை கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளாமல், பூதவரிக்கே முதல் மரியாதை கொடுக்கிறோம். தென்புறத்திலிருக்கும் பராந்தக சோழனின் கல்வெட்டே, அக்கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் பழமையானது. அவரைத் தவிர, சுந்தர சோழனின் கல்வெட்டும் இங்கேயிருக்கிறது.
கோயில்களில் இருக்கும் பல சிற்பங்கள் கடவுளைக் குறிக்கும் வகையிலும், அமானுஷ்யமாகவும் இருக்கும். அக்கால மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையிலான சிற்பங்கள் பலவற்றை பூதவரியில் காணலாம். மேற்குப் புறச் சுவரில், மூக்கினுள் திரி போன்ற நீளமான எதையோ விட்டுக் கொண்டிருக்கும் பூதத்தைப் பார்க்கையில், ஒரு குழந்தை செய்யும் குறும்பின் சித்தரிப்பு போல எனக்குத் தோன்றியது. 'சிரட்டைக் கின்னரி' (நம்ப கொட்டாங்கச்சி வயலினைத்தான் இப்படிச் சொல்லியிருக்காங்க), 'குழல்', 'கொம்பு', 'மத்தளங்கள்', 'இலை தாளம்' (அட! அதுதாங்க நம்ப ஜால்ரா) போன்ற இசைக்கருவிகள் எல்லாம் பூதவரியில் காணக்கிடைக்கிறது. வடபுறச் சுவரில், இலக்கியங்களில் கூறப்படும், 'குடக்கூத்து' சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பூதம் தனது ஒரு கையை நீட்டி, உள்ளங்கைக்கும் முழங்கைக்கும் இடையிலான பகுதியில் ஒரு குடத்தைத் தாங்கி நடனமாடுவது போலச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.