http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 2
இதழ் 2 [ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கோச்செங்கட் சோழன் யார்?
டாக்டர்.மா.இராசமாணிக்கனார் அவர்களின் கால ஆராய்ச்சி என்ற நூலில் வெளியான கட்டுரை.
கோச்செங்கணான் சங்ககாலத்தவனா? நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவனும் அப்பர்க்கு முற்பட்டவனுமான கோச்செங்கணான் சங்க இறுதிக் காலத்தவன் என்று பலர் கூறியுள்ளனர். இதற்கு அவர் சான்றாகக் காட்டத்தக்கவை இரண்டு. 1. 74 ஆம் புறநானூற்றுப் பாட்டின் அடிக்குறிப்பில், "சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து 'தண்ணீர் தா' என்று, பெறாது , பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு" என வரும் செய்தி. 2. பொய்கையார் சோழன் மீது களவழி பாடிச் சிறைப்பட்ட அரசனை மீட்டார் எனக் களவழி ஏடுகளின் ஈற்றில் எழுதப்பட்டுள்ள செய்தி. இவ்விரண்டு கூற்றுக்களையும் ஆராய்வோம். 1. 74 ஆம் புறநானூற்றுப் பாட்டின் அடிக்குறிப்பு அ. மேற்சொன்ன 74 ஆம் செய்யுளில் கோச்செங்கணான் என்ற பெயர் இல்லை. அடிக்குறிப்பு, பாடிய புலவன் எழுதியதும் அன்று என்பது, 'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடல்களின் கீழ் உள்ள (பிற்காலத்தார் எழுதிய) அடிக்குறிப்புக்கள் பல இடங்களில் பொருத்தமற்றவை என்பது அறிஞர் நன்கறிந்ததே. சான்றாக ஓர் இடம் குறித்துக் காட்டுவம். புறம் 389 ஆம் செய்யுளில் 'ஆதனுங்கனைப்போல நீ கொடுப்பாயாக' என வரும் தொடரைக் கண்டதும், அஃது உவமையாகக் கூறப்பட்டதென்பதையும் கவனியாமல், 'இஃது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு' என்று அடிக்குறிப்பு வரையப்பட்டுள்ளது. இங்ஙனம் பிழைபட்ட இடங்கள் பல. பொருத்தமற்ற அடிக்குறிப்புக்கள் பல. இத்தகைய அடிக்குறிப்புக்களில் செங்கணானைக் குறிக்கும் அடிக்குறிப்பும் ஒன்றாகலாம். களவழிப் பாக்களைக் காண, கோச்செங்கணான் பேரரசன் என்பதும் வீரம் வாய்ந்த பகையரசரைக் கொன்றவன் (செய்யுள் 6, வரி 16) என்பதும், போரில் கொங்கரையும் வஞ்சிக்கோவையும் கொன்றவன் (செய்யுள் 14, வரி 39) என்பதும் தெரிகின்றன. இவற்றால், இச்சோழனை எதிர்த்த வஞ்சிக்கோ (சேர அரசன்) போரில் கொல்லப்பட்டான் என்பது விளக்கமாகிறது. கணைக்கால் இரும்பொறை பற்றிய பேச்சே களவழியிற் காணப்படவில்லை. ஆ. முன்சொன்ன 74 ஆம் செய்யுள் தமிழ் நாவலர் சரிதையில், "சேரமான் கணைக்கால் இரும்பொறை செங்கணானாற் குடவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக்கு எழுதிவிடுத்த பாட்டு" என்ற தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. புறநானூற்று அடிக்குறிப்பும் இதுவும் வேறுபடக் காரணம் என்ன? இ. புறநானூற்று 74 ஆம் செய்யுள் அடிக்குறிப்பு, கணைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுளின் அடியில், "இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டரசளித்தான்" என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவ்விரு கூற்றுக்களும் தம்முள் மாறுபடுதலைக் கண்ட பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள், "துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாக, சிறை வீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரன் ஆவன் என்று கொள்ள வேண்டும் (களவழி, நாட்டார் பதிப்பு, முன்னுரை 5ம் பக்கம்) என்று கூறி அமைந்தனர். இங்ஙனம் பேரறிஞரையும் குழப்பத்திற்குட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புக்களைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது. 2. கோச்செங்கணான் 70 சிவன் கோயில்கள் கட்டினான் என்று திருமங்கையாழ்வார் குறித்துள்ளார் (திருநறையூர்ப் பதிகம், செய்யுள் 8). சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோயிலோ திருமால் கோயிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோயில்கள் பலவாக ஒரே அரசனால் கட்டப்பெற்ற காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்ககாலத்தில் அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழ் உலகில் பிறசமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக்கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஓர் அரசன் 70 கோயில்கள் கட்டினான் என்றல் நம்பத்தக்கதன்று. ஆயின், சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும் களப்பிரர், பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால் பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்ககாலப் பாண்டியன் அளித்த பிரம்மதேய உரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக்கொடுமை இருந்தது என்பது வேள்விக்குடிப் பட்டயத்தால் தெரிகிறது. அக்களப்பிரர் காலத்திற்றான் மதுரையில் மூர்த்தி நாயனார் துன்பப்பட்டார். சோழநாட்டில் தண்டியடிகள், நமிநந்தி அடிகள் போன்ற சிவனடியார்க்கும் சமணர்க்கும் வாதங்களும் பூசல்களும் நடந்தன. இத்தகைய சமயக்கொடுமைகள் நடந்து, சைவ சமயவுணர்ச்சி மிக்குத்தோன்றிய பிற்காலத்தேதான் கோச்செங்கணான் போன்ற அரசர் பல கோயில்கள் கட்டிச் சைவத்தை வளர்க்க முற்பட்டிருத்தல் வேண்டும். கோச்செங்கணானைப் பற்றித் திருமங்கையாழ்வார் வெளியிடும் கருத்துக்கள் இவையாகும். (திருநறையூர்ப் பதிகம் செய்யுள் 6,5,3,4,9) - உலகமாண்ட தென்னாடன் ('தென்னவனாய் உலகாண்ட செங்கணான்' என்ற சுந்தரர் தொடர், இதனுடன் ஒப்பு நோக்கத் தக்கது) - குடகொங்கன் சோழன் - தென்தமிழன் வடபுலக்கோன் - கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் - விறல் மன்னர் திறல் அழிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச்சோழன் - படை மன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன் இக்குறிப்புக்களால் இவன், வலிபொருந்திய அரசர் பலரைப் போரில் கொன்றவன் - வென்றவன் என்பதும், கொங்கு நாடு வென்றவன் என்பதும், சோணாட்டுக்கு வடக்கிருந்த நிலப்பகுதியை (தொண்டை நாட்டை) வென்றவன் என்பதும், சிறந்த யானைப் படை குதிரைப் படைகளை உடையவன் என்பதும் தெரிகின்றன. 'கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர்' என்றதால் சோழனை எதிர்த்தவர் மிக்க வலிமையுடைய பகையரசர் என்பது பெறப்படும். அவர்களைச் செங்கணான் 'தெய்வ வாள்' கொண்டு வென்றான் என்பதாலும் பகையரசரது பெருவலிமை உய்த்துணரப்படும். சங்க காலத்தில் இத்தகைய மன்னர் பலருடன் செங்கணான் போரிட்டது உண்மையாயின், இப்போரைப்பற்றிச் சில செய்யுட்களேனும் அக்கால நூல்களில் இருந்திருக்கும் அல்லவா? சங்க காலத்தில் தொண்டை நாடும் சோழர் ஆட்சியில் இருந்தமை மணிமேகலையால் அறியலாம். அதற்கும் அப்பாற்பட்ட வடபுலத்தை இவன் வென்றான் எனக் கொள்ளின், அப்பகையரசர் யாவர் எனக் கூறுவது? சுருங்கக் கூறின், 1. இப்போர்களைப் பற்றிய பாக்கள் சங்க நூல்களில் இல்லை 2. இவன் அரசர் பலரை வென்றவனாகக் காண்கிறான் 3. சங்க இறுதிக் காலத்தில் இங்ஙனம் ஒரு சோழன் பேரரசனாக இருந்தான் என்று கூறத்தக்க சான்றுகள் இல்லை 4. இவன் சிவன் கோயில்கள் பல கட்டினவன் இந்நான்கு காரணங்களையும் நடுவுநிலைமையினின்று ஆராயின், கோச்செங்கணான் சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாக இருத்தக் கூடும் என்ற எண்ணமே பலப்படும். கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்பது சேக்கிழார் கூற்று. தில்லை, ஒரு சிவத்தலமாகச் சங்கச் செயுயுட்களிற் கூறப்படாமை நோக்கத் தக்கது. அது கோச்செங்கணான் காலத்திற் சிறப்புப் பெற்றது. அவன் அங்கு மறையவரைக் குடியேற்றி மாளிகைகள் பல சமைத்தான் (கோச்செங்கட் சோழர் புராணம் செய்யுள் 15,16). இங்ஙனம் தில்லை சிவத்தலமாகச் சிறப்புற்றமை சங்ககாலத்திற்குப் பிறகே என்பது தவறாகாது. கோச்செங்கணானுடைய தந்தை பெயர் சுபதேவன்; தாயின் பெயர் கமலவதி என்பன என்று சேக்கிழார் கூறியுள்ளார் (கோச்செங்கட் சோழர் புராணம் செய்யுள் 7). இப்பெயர்களைச் சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் தக்க சான்றுகொண்டே கூறினாராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வடமொழிப் பெயர்கள். இங்ஙனம் சங்க காலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை வைத்துக் கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட சுமார் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால் அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன கமலவதி என்ற பெயர் ஒப்புநோக்கத்தக்கது. இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்தவன் ஆகான் எனக் கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர், சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன் காலம் மேற்சொன்ன சங்ககாலத்திற்குப் பிறகும், அப்பர் சம்பந்தர் காலத்திற்கு முன்னும் ஆதல் வேண்டும். அஃதாவது, அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 400-600க்கு உட்பட்டது எனக் கூறலாம். இப்பரந்துபட்ட காலத்துள் அவன் வாழ்ந்திருக்கத்தக்க பொருத்தமான காலம் யாதெனக் காண்போம். கோச்செங்கணான் காலம் வேள்விக்குடிப் பட்டயப்படி சங்ககாலத்திற்குப் பிறகு பாண்டியநாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது; அக்களப்பிரர் கையிலிருந்தே கடுங்கோன் தன் நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆயின், 'சோழநாடு எவ்வளவு காலம் களப்பிரர் கையில் இருந்தது? கி.பி 5 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் புத்ததத்தர் குறித்த அச்சுதனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட களப்பிரர் யார் என்பன தெரியவில்லை. 'கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் இடையில் குமாரவிஷ்ணு என்ற பல்லவன் காஞ்சியை மீளவும் கைப்பற்றினான்....... அவன் மகனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் சேனைக்கு வடவைத் தீப் போன்றவன்' என்று வேலூர்ப் பாளையப் பட்டயம் பகர்கின்றது (Epigraphica Indica Vol III Page 142). கி.பி 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனாகக் கருதப்படும் முதலாம் நந்திவர்மன் விஜய - காஞ்சிபுரத்திலிருந்து பட்டயம் விடுத்துள்ளான். ஏறத்தாழக் கி.பி. 575 இல் சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் மீட்டும் காஞ்சியைக் கைப்பற்றினான்; சோழர், மழவர், களப்பிரர் முதலியோரை வென்று காவிரிக்கரை வரை பல்லவ நாட்டை விரிவாக்கினான் என்பன வேலூர்ப்பாளையப் பட்டயமும் கசாக்குடிப் பட்டயமும் குறிக்கும் செய்திகளாகும் (Ibid, Fr. Heras, Studies in Pallava History, Page 20). இக்குறிப்புக்களால், முன் சொன்ன குமாரவிஷ்ணுவுக்குப் பின்பும், சிம்மவிஷ்ணுவுக்கு முன்பும் காஞ்சி, பல்லவர் வசம் இல்லாது அடிக்கடி கைமாறியதாக நினைக்க இடமுண்டு. அச்சுத விக்கந்தற்குப் பிறகு, சிம்மவிஷ்ணு சோழ நாட்டை வெல்லும் வரையில் களப்பிரரே சோணாட்டை ஆண்டனர் என்பதற்கு உரிய சான்றும் இல்லை. மேற்குறித்த பல்லவர் செய்திகளைக் காண்கையில், சிம்மவிஷ்ணுவுக்கு முற்பட்ட பல்லவர் நிலையாகக் காஞ்சியில் தங்கித் தொண்டை மண்டலத்தை ஆண்டதாகத் தெரியவில்லை; கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் இடையில் புத்தவர்மன் கடல் போன்ற சோழர் சேனையோடு போரிட வேண்டியவன் ஆனான்; 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்மவிஷ்ணு சோழரை வென்றான். இவற்றுள் புத்தவர்மன் செய்த போரைக் காணின் அச்சுதற்குப் பிறகு கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், சோழர் கடல் போன்ற சேனையை வைத்திருந்தனர்; அவர் பல்லவருடன் போரிட்டனர் என்பன தெரிகின்றன. இங்ஙனம் கடல் போன்ற சேனையை வைத்துக் கொண்டிருந்த சோழன் சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாகக் கருதத்தக்க கோச்சோழன் ஆகலாம். அவன் பல அரசரை முறியடித்தவன் - பெரிய யானைப்படை, குதிரைப்படைகளை உடையவன் என்பன, களவழியாலும், திருமங்கையாழ்வார் பாசுரங்களாலும் தெரிகின்றன. இச்சோழன், தனது நாட்டைப் பற்றிக் கொண்ட களப்பிரரை அடக்கிப் பின்பு வடபுலத்திலிருந்த புத்தவர்மனுடன் போரிட்டு வெற்றி கண்டனன் போலும்! இவனை 'வடபுலக்கோன்' என்று திருமங்கையாழ்வார் குறித்தமை இதுபற்றிப் போலும்! இங்ஙனமாகக் கொள்ளின், கோச்செங்கணான் காலம் புத்தவர்மன் காலமாகிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனலாம். கோச்செங்கணான் மீது பாடப்பெற்ற களவழியின் காலம் ஏறத்தாழக் கி.பி. 450-500 என்ற இராவ் சாஹிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்தும் (Vide his Tirikadukam & Sirupanjamulam, University Publication, Page 10-11, 75) இம்முடிவுக்கு அரண் செய்தல் இங்கு அறியத்தகும். நடுவுநிலையினின்றும் மேற்சொன்ன காரணங்கள் பலவற்றையும் ஆய்ந்து இம்முடிவு கொள்ளப்படின், இக்கோச்சோழனை அடுத்து, மேற்சொன்ன இடைக்காலத்தில் இருந்தவராக (பெரிய புராணம் கூறும்) புகழ்ச் சோழரை எடுத்துக் கொள்ளலாம். இவர் பெயர் சங்க நூல்களில் இல்லாததாலும் சிம்மவிஷ்ணுவுக்குப் பிறகு பல்லவர் காலத்தில் இத்தகைய சோழப் பேரரசர் இருக்க முடியாமையாலும், இந்த இடைக்காலமே இவர் வாழ்ந்த காலம் எனக்கோடல் பெரிதும் பொருத்தமேயாகும் (C.V.N. Iyer's 'Origin and Development of Saivism in South India', Page 183). அச்சுதன் போன்ற களப்பிரப் பேரரசனும், கோச்செங்கணான் புகழ்ச்சோழர் போன்ற சோழப் பேரரசரும் கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தமையாற் போலும் பல்லவர் சோழநாட்டைக் கைப்பற்றக் கூடவில்லை! கோச்செங்கணான், புகழ்ச் சோழர், களப்பிர அரசராகிய கூற்றுவ நாயனார் (C.V.N. Iyer's 'Origin and Development of Saivism in South India', Page 180-181) இவர்களை இவ்விடைப்பட்ட காலத்தவராகக் (சுமார் கி.பி. 450-500) கொள்ளின், தென் இந்திய வரலாற்றில் 'இருண்ட பகுதி' எனப்பட்ட காலத்தின் ஒரு பகுதி வெளிச்சமாயிற்றெனக் கொள்ளலாம். 'இவ்விருண்ட காலம் - பல்லவர் காஞ்சியைத் துறந்து தெலுங்கு நாட்டில் வாழ்ந்த காலம் - சோழர் இடையீட்டுக் காலமாக இருத்தல் வேண்டும்' என்று வெங்கையா போன்ற கல்வெட்டறிஞர் கொண்ட கருத்தில் (Indian Antiquarry 1908. Page 284) ஓரளவு உண்மையுண்டு என்பதும் இதனால் உறுதிப்படும். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |