http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 115

இதழ் 115
[ ஜனவரி 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வயலும் வளமும்
Revolution in Reclamation
பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோயில்
ஆக்கூர் தான்தோன்றி மாடம்
தேடலில் தெறித்தவை - 19
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 9
Kundardarkoil-2
இந்திர விழா
இதழ் எண். 115 > கலையும் ஆய்வும்
பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
சென்னை - காஞ்சிபுரம் சாலையில் சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊருக்குச் சற்று முன்னதாக மின்சார அலுவலகம் (E.B. Substation) அமைந்துள்ள சாலையில் கிழக்கே 1 கி.மீ தொலைவில் பென்னலூர் என்ற ஊர் அமைந்துள்ளது.



ஊரின் துவக்கத்தில் அமைந்துள்ள ஏரியின் அருகே அகத்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். சுற்றுச்சுவர் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளது.



மேலும் திருச்சுற்றில் உள்ள பரிவார ஆலயங்களான சுப்ரமணியர் சன்னிதி, அம்மன் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை முழுமையும் கற்கள் கீழே விழுந்து முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. சன்னிதிகளில் தெய்வ மூர்த்தங்களான சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. இக்கோயிலின் தெற்குப்பக்கத்தில் அமைந்துள்ள நுழைவுவாயில் 15-16ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நுழைவு வாயிலின் கற்களும் கீழே விழுந்து, அதன்மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.



இக்கோயிலின் கருவறை மேல்தளத்தின்மீது வேப்பமரம், ஒதியமரம், ஆலமரம் போன்றவை (30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மரங்களாக உள்ளன) வளர்ந்து கோயில் கருவறை, சுவர் ஆகியவை மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. மரங்களின் வேர்கள் கற்களுக்கு இடையில் ஊடுருவியிருப்பதால் சுவரில் உள்ள கற்கள் கீழே விழும் நிலையில் உள்ளன. கோயிலைச் சுற்றி முட்செடிகள் வளர்ந்துள்ளன.



கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில். நுழைவுவாயிலில் பலிபீடம், நந்தியெம்பெருமான் ஆகியவை வழிபாட்டில் உள்ளன. பலிபீடத்திற்கு முன்பாக சதுரவடிவிலான ஒரே கல்லால் ஆன கற்தொட்டி உள்ளது. இதன் விளிம்பில் "ஸ்வஸ்திஸ்ரீ திருவெண்காட்டு நங்கை" என்ற 12-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்து அமைதியுடன் கல்வெட்டுப் பொறிப்பு காணப்படுகிறது. இக்கல்தொட்டியை "திருவெண்காட்டு நங்கை" என்ற பெண் செய்தளித்திருக்க வேண்டும். நந்திக்குப் பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிடேக வழிபாடுகளை ஊர்மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நந்திக்கு எதிரே கருவறை முன்மண்டபச் சுவரில் இறைவனைத் தரிசிக்க வசதியாகச் சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது.

கருவறை:

கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சி தருகிறார். ஊர்மக்கள் அவ்வப்பொழுது வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கருவறையை அடுத்து முன்மண்டபம் உள்ளது. முன்மண்டபத்துத் தூண்கள் உருளைவடிவில் (விருத்தக்கால்), தூணின் கலசப்பகுதிக்குக் கீழே தொங்குமாலை போன்ற அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருகின்றன. இறைவனை வழிபட முன்மண்டபத்தின் தெற்குப்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின்வழி மேலேறிச் செல்ல வேண்டும்.



கருவறைக்கு மேலே விமான அமைப்பு இல்லை. செங்கல்-சுதையால் ஆன விமானம் இருந்திருக்க வேண்டும். செவ்வக வடிவில் கருவறை அமைந்துள்ளது. சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. இவற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றில்கூடத் தெய்வத் திருமேனிகள் இல்லை.

கருவறை பாதபந்த அதிட்டான அமைப்புடன் விளங்குகிறது. தேவகோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள மகரதோரணத்தின் நடுவே அழகிய சிற்பங்களுடன் காணப்படுகின்றன. தெற்கிலிருந்து சுற்றி வரும்பொழுது மகரதோரணத்தின் நடுவில்
தெற்கு: (1) அகத்தியர் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி. அகத்தியருக்குப் பின் ஒரு அடியவர் காணப்படுகிறார்.
(2) கபோத அமைப்புடன் கஜலட்சுமி வடிவம் (இப்பகுதி பிற்காலத் திருப்பணியின்போது இங்கு அமைக்கப்பட்டதாக விளங்குகிறது)
மேற்கு: (3) பிரகலாதன் தொழ அமர்ந்த நிலையில் காட்சிதரும் நரசிம்மர்
வடக்கு: (4) பிரம்மா இறைவனை வழிபடும் காட்சி
(5) ஆலிலைக் கண்ணன்
ஆகிய சிற்ப வடிவங்கள் அழகு செய்கின்றன.




மகரதோரணத்திற்கு மேலே கருவறையின் கபோதப் பகுதிக்குக் கீழே பூதகணங்கள் பல்வேறு நிலையில் நடனம் ஆடிக்கொண்டும், பலவிதமான இசைக்கருவிகளை வாசிக்கும் நிலையிலும் சிற்பங்களைக் காணலாம். பூதவரிசைக்கு இடையே உத்தரப் பகுதியில் கீழ்க்கண்ட புடைப்புச் சிற்பங்கள் (Relief Sculptures) காணப்படுகின்றன.



(1) கொண்டை அலங்கரிக்கப்பட்ட தலையுடன் அமர்ந்திருக்கும் ஒரு ஆடவர் இறைவனை வழிபடும் காட்சி.
(2), (3) கண்ணப்ப நாயனார் வரலாற்றைக் கூறும் இரு சிற்பங்கள். கண்ணப்பன் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி. அடுத்து தன் கண்ணை அம்பால் எடுக்கும் காட்சி.
(4), (5) சண்டேசுவர நாயனார் கதை. முதலில் விசாரதருமரான சண்டேசுவரர் பாற்குடம் கொண்டு இறைவனுக்கு அபிடேகம் செய்யும் காட்சி, அடுத்துப் பால்குடத்தைக் காலால் உதைத்த தனது தந்தையான எச்சதத்தனை மழுவினால் வெட்டும் காட்சி.
(6) லிங்கத்தின்மீது பசு பால் சொரியும் காட்சி
(7), (8) கருவறை நுழைவுவாயிலின் மேலே அமைந்துள்ள பகுதியில் யானை மற்றும் குரங்கு (அனுமன்) சிவலிங்கத்தை வழிபடும் காட்சி.



கல்வெட்டுகள்:

இக்கோயிலில் கல்வெட்டுகள் முன்மண்டப நுழைவுவாயிலின் இருபக்கச் சுவரிலும், அடித்தளப் பகுதியிலும், முன்மண்டபக் கிழக்குச் சுவரிலும் காணப்படுகிறது.



பென்னலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் சோழர் காலத்தில் "பெருநல்லூர்" என அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளினால் அறிய முடிகிறது. மேலும் இவ்வூர் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்துச் செங்காட்டு நாட்டு உலகளந்தசோழ சதுர்வேதி மங்கலம்" எனக் குறிக்கப்படுகிறது.



தொண்டை மண்டலத்தில் இருந்த 27 கோட்டங்களில் "செங்காட்டுக் கோட்டம்" ஒன்றாகும். அது இன்றைய ஸ்ரீபெரும்புதூர் பகுதியாகும். செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு பெரும்புதூரான என்ற குறிப்பு சிவபுரம் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. மேலும் சோமங்கலம் கோயில் கல்வெட்டிலும் செங்காட்டுக் கோட்டம் பற்றிக் குறிப்பு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள செரப்பனஞ்சேரி கோயிலிலும் இக்கோட்டம் பற்றிய குறிப்பு வருகிறது. 'செங்காடு' என்ற ஊர் ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொண்டைநாட்டில் இருந்த 182 நாட்டுப்பிரிவுகளில் ஒன்றாகச் 'செங்காட்டு நாடு'ம் விளங்கியிருப்பதை அறியமுடிகிறது. இக்கோயிலில் காணும் கல்வெட்டில் "திருமன்னி விளங்கும்.... செங்கோல் நாவலம் புவிதொறும் நடாத்திய கோவிராஜகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவர்க்கு" என்ற மெய்கீர்த்தி காணப்படுவதால் முதலாம் குலோத்துங்கசோழன் (கி.பி. 1070-1120) காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் "அகத்தீசுவரமுடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார். பிற்காலத்தில் நடைபெற்ற திருப்பணியில் சில கல்வெட்டுகள் இடம் மாறியுள்ளன.

திருக்கோயிலின் சுவரில் உள்ள கற்களில் திருப்பணி செய்வதற்காக வரிசை எண்கள் இடப்பட்டுக் காணப்படுகின்றன. கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மழைபெய்யும்பொழுது இறைவன்மீது மழைநீர் விழுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி நடைபெற்று வழிபாடுகள் மேற்கொள்ள ஊர்மக்கள் விரும்புகின்றனர்.

பின்குறிப்பு:

(1) சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினரால் 14-12-2014 அன்று திருக்கோயிலின்மீது வளர்ந்திருந்த மரங்கள், செடி, கொடிகளை அகற்றித் தூய்மை செய்தனர். இந்த உழவாரப் பணியில் ஊர்மக்களும் ஆர்வமாகப் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலுக்குத் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
(2) இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் படியெடுக்கப்பட்டுவிட்டது.
(3) தொண்டைமண்டலம் - கோட்டமும், நாடும் - புலவர் செ. இராசு, செங்கற்பட்டு மாவட்டக் கருத்தரங்கு - பக்கம் 9.
(4) காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு - இரா. சிவானந்தம் - தொல்லியல்துறை வெளியீடு - 2008, தொண்டை மண்டல நாட்டுப் பிரிவுகள், பக்கம் 226-227.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.