![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [168 Issues] [1679 Articles] |
Issue No. 135
![]() ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி.மீ தொலைவில் பசுபதிகோயில் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது புள்ளமங்கை என்னும் சிற்றூர். முதலாம் பராந்தகர் காலக் கட்டுமானத்துடன் எழில் வாய்ந்த சிற்பங்களையும் கையகலப் புராணக் காட்சிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயிலை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்ற விழைவில் எங்கள் குழுவினரின் இக்கட்டுரைத் தொடர் துவங்குகிறது. முகமண்டபம் உட்புறம் கிழக்கு நோக்கிய கருவறைக்கு முன்பு 20 அடி 3 அங்குலம் நீளமும் 14 அடி 1 அங்குலம் அகலமும் 8 அடி 8 அங்குலம் உயரமும் உடைய முகமண்டபம் அமைந்துள்ளது. தெற்கிலிருந்து வடக்காக இருவரிசைத் தூண்கள் முகமண்டபத்தை முறையே 4 அடி 4.5 அங்குலம், 5 அடி 4.5 அங்குலம், 4 அடி 4.5 அங்குலம் என்ற அளவுகளில் அகலவாக்கிலும் கிழக்கு மேற்காக இருவரிசைத் தூண்கள் முறையே 7 அடி, 5 அடி 8 அங்குலம், 7 அடி 7 அங்குலம் என்ற அளவுகளில் நீளவாக்கிலும் மூன்றாகப் பிரிக்கின்றன. தெற்கிலும் வடக்கிலும் இரு வரிசை ஓரங்களிலும் அரைத்தூண்கள் அமைந்து, நடுவில் உள்ள தூண்கள் முழுத்தூண்களாக உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கின் இரு வரிசைகளின் ஓரங்களில் அரைத்தூண்கள் இல்லை. மேற்கில் கருவறை வாயிலும் கிழக்கில் முகமண்டப வாயிலும் உள்ளன. அடிப்பாகம் சதுரமாகவும் மேற்பாகம் பன்முகமாகவும் உள்ள நான்கு நடுப்பகுதித் தூண்களின் சதுரத்தின் பக்கம் 2 அடி 10 அங்குலமாகவும் பன்முகத்தின் ஆரம் 11 அங்குலமாகவும் உள்ளன. நடுவில் உள்ள நான்கு முழுத்தூண்களும் மாலைத்தொங்கல், தானம், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் என அனைத்து உறுப்புகளையும் பெற்றுள்ளன. ஒவ்வொரு தூணின் ஐந்து மாலைத்தொங்கல்கள் அழகிய சிற்றுருவச் சிற்பங்களைப் பெற்றுள்ளன. பெரும்பாலும் நடனக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்துத் தூண்களின் வீரகண்டத்திற்கு மேல் குளவுத் தரங்கப் போதிகையும், உத்தரம், வாஜனம், வலபி ஆகியனவும் அமைய, வலபியில் பூதவரி இடம்பெற்றுள்ளது.
வெளிப்புறம் கிழக்கில் பிற்காலத்தில் இணைக்கப்பட்ட மகாமண்டபத்தையும் மேற்கில் விமானத்தையும் கொண்டுள்ள முகமண்டபத்தின் தாங்குதளம் கபோதபந்தமாக அமைந்துள்ளது. இப்போதுள்ள தரைத்தளத்துக்குள் சுமார் 5 அடி ஆழத்தில் இருந்து எழும் கட்டமைப்பின் தாங்குதளம் தரையிலிருந்து உப உபானம், உபானம், ஜகதி, குமுதம், கம்புகளுடன் கூடிய கண்டம், கபோதம், பூமிதேசம் என அனைத்து உறுப்புகளையும் கொண்டுள்ளன. சாலை மற்றும் கர்ணப்பத்திகளைக் கொண்ட தெற்கு மற்றும் வடக்குச் சுவர்கள் சாலைக்கு இருபுறமும் பஞ்சரங்களைக் கொண்டுள்ளன. சாலைப்பத்திகளில் கிழக்கில் மண்டப வாயிலும் மேற்கில் கருவறை வாயிலும் அமைய, தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் கொற்றவையும் வீற்றிருக்கின்றனர். இருபுறமும் கோட்ட அணைவுத் தூண்களின் வீரகண்டத்திற்கு மேல் பட்டையுடன் கூடிய குளவுப்போதிகை, உத்தரம், வாஜனம், பூதவரி கொண்ட வலபி, சந்திர மண்டலத்துடன் கூடிய கபோதம், யாளிவரியைக் கொண்ட பூமிதேசம், அதற்குமேல் தெற்கிலும் வடக்கிலும் திசைக்கு நான்கு பூதங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. கோட்டச் சிற்பங்கள் தெற்கிலும் வடக்கிலும் 22 அடி 3 அங்குல நீளமுடைய முகமண்டப வெளிச்சுவரின் நடுப்பகுதியில் 7 அடி 10 அங்குல நீளமுள்ள சாலைப்பத்தி முன்னிழுக்கப்பட்டுச் சாலைப்பத்தியைத் தூணுக்குரிய அனைத்து உறுப்புகளையும் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைவு செய்ய, உருள் அரைத்தூண்களால் அணைக்கப்பட்ட கோட்டத்தில் இறைத்திருமேனித் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. பத்தி அணைவுத்தூண்களுக்கும் கோட்ட அணைவுத்தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் அவ்வவ்விறைகளின் வழிபாட்டுக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. உருள் அரைத்தூண்களுக்கு மேல் மகரதோரணம் அமைய, அதில் புராண நிகழ்வுகளும் ஆடல்களும் சிற்றுருவச் சிற்பங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. (தொடரும்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |