http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 135

இதழ் 135
[ ஜூலை 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

Khmer Political and Economic Expansions in Northeast Thailand under Suryavarman I (1010-1050 ACE)
ஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம்
OLOGAMADEVI ISWARAM – THIRUVAIYARU - 1
உலகப் பார்வைக்கு உதயம் - 3
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 1
காலத்தின் கவனிப்பும் தொல்காப்பியர் விருதும்
இதழ் எண். 135 > கலையும் ஆய்வும்
உலகப் பார்வைக்கு உதயம் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி

வழக்குமன்றுசெஞ்சாந்து பூசிய தரையிலிருந்து எழும் எழிலார்ந்த தூண்களால் தாங்கப்படும் கூரையோடமைந்த இம்மன்றின் கபோதம் கீர்த்திமுகத் தலைப்புக் கொண்டு மூன்று பேரளவுக் கூடுவளைவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கபோதத்தின் இரு மூலைகளிலும் நன்கு பரந்து விரியும் வள்ளிமண்டலமும் விளிம்பில் சந்திரமண்டலமும் விளங்க, கூடுகளுள் இரண்டில் கோயில் போன்ற கட்டமைப்பைக் காணமுடிகிறது. கபோதத்தின் மேல் பூப்பதக்க வரியும் அதன்மீது பூமிதேசமாய்க் கொள்ளக்கூடிய அமைப்பும் உள்ளன.வழக்குமன்றின் இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாக இரண்டு அகலமான உறுப்பு வேறுபாடற்ற நான்முகத் தூண்கள் அமைய, அவற்றிற்கு இடைப்பட்ட நிலையில் பின்புறமிருக்குமாறு ஐந்து தூண்கள் உள்ளன. அவற்றுள், இடப்புறத் தூண் மட்டுமே ஓரளவிற்குத் தெரிகிறது. பிறவற்றில் கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் ஆகிய உறுப்புகள் மட்டுமே தெரிகின்றன. போதிகைகள் குளவு பெற்ற தரங்கக் கைகளுடன் உத்திரம் தாங்க, அதை மறைத்தவாறு கபோதம் கீழிறங்கியுள்ளது. ஆங்காங்கே மாலைகளைப் போல வளைந்திறங்கும் திரைச்சீலை வளைவுகளுள்ள இம்மன்றில் வழக்காடும் இறைவனும் சுந்தரரும் நடுநாயகமாக நிற்க, விசாரிப்பவர்களுள் சிலர் இருபுறத்தும் அமர்ந்துள்ளனர். சிவபெருமானின் பின் நிற்கும் அறக்களத்தார் நால்வர் மட்டும் ஓலை ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.  மன்றின் வலப்புறம் நிற்கும் சுந்தரரின் இடப்புறம் ஒருவரும் வலப்புறம் இருவரும் அமர்ந்துள்ளனர். கால்களைக் குறுக்கீடு செய்துள்ள அவர்களுள் நடுவிலிருப்பவர் பழுத்த பழமாய், நரைத்த தலைமுடியும் நீண்டு வளர்ந்த வெண்தாடியுமாய்க் காட்சிதருகிறார். முடிந்த கொண்டையின் பெருமை அவரது தலைமுடி நீளத்திற்குச் சான்றாகிறது. வழக்குரைக்க வந்திருக் கும் வயோதிகரைப் பார்த்துப் பேசுமாறு போலத் திறந்த இதழ்களும் மேல் நோக்கிய பார்வையுமாய்த் தலையை அண்ணாந்துள்ள அவரது மேல் நோக்கிய இடக்கையும் தொடைமீது இருத்தப்பட்டுள்ள வலக்கையும் வியப்பு முத்திரையில் விரல்களை விரித்துள்ளன. முன்னும் பின்னும் அமர்ந்திருக்கும் இளையவர்களுள் பின்னாலிருப்பவர் வலக்கையில் வியப்புக் காட்ட, முன்னிருப்பவர் தம் இடக்கையை தர்ஜனியில் மேலுயர்த்தி உள்ளார். அவரது வலக்கை வியப்பிலுள்ளது. நீள்செவியர்களான இம்மூவருமே துணியை முப்புரிநூலெனக் கொண்டு சிற்றாடையணிந்துள்ளனர். அவர்தம் வலமேற்கையின் கீழ் மார்பின் பக்கப்பகுதியோடு பொருந்திய சுவடிக்கட்டுகள். முதியவரின் இடக்கையில் கங்கணம் உள்ளது. 

  

  

  

 வழக்குரைஞரான சிவபெருமானின் இடப்புறம் மூவர் அமர்ந்துள்ளனர். நால்வர் நிற்கின்றனர். அமர்ந்திருக்கும் இளையவருள் நடுவிருக்கும் மஞ்சள்மேனியர் ஏதோ கூறக் கருதியவர் போல், வலக்கையை மார்பருகே நிறுத்தி, இடக்கையை வலப்புறமாய் நீட்டி, உணர்வலைகள் முகத்தில் பொங்கக் காட்சி தருகிறார். அவரின் இருபுறத்தும் அமர்ந்திருக்கும் சிவப்பு மேனியர்களுள், வலப்புறத்தார் விழிகளை அகல விரித்துப் பெருந் திகைப்போடு வலக்கையில் சின்முத்திரை காட்டி நடுவில் உள்ளவரை நோக்க, இடப்புறத்தார் நடக்கும் வழக்கில் தம்மையிழந்து மெய்மறந்தாராய்க் கண்கொட்டாது பார்க்கிறார். துணியை முப்புரிநூலென அணிந்த முதலிருவர் நெற்றியில் திருநீறு. இடக்கையில் சுவடிக்கட்டேந்தியுள்ள மூன்றாமவர் மார்பின் இருபுறத்தும் தொங்குமாறு மடித்த துணியைக் கழுத்தில் அணிந்துள்ளார். அணிகலன்கள் ஏதுமற்ற நீள் செவியரான இம்மூவரில் யாருக்கும் மீசையில்லை.இடுப்பில் சிற்றாடையும் நெற்றியில் திருநீறுமாய் நீளவளர்த்த செவிகளுடன் நிற்பார் நால்வருள் மூவர் முன்னிருக்க, ஒருவர் பின்னிருந்து பார்க்கிறார். முன்னவர் மூவருள், முதலிருவர் கருங்கொண்டையும் தாடி, மீசையுமாய்க் காட்சிதர, மூன்றாமவர் தாடி, மீசையில் நம்பிக்கையற்றவராய்க் கொண்டையே போதுமென்று நிற்கிறார். அவரது தலையைச் சுற்றி ருத்திராக்கமாலை. மற்றவர் போல் துணியை முப்புரிநூல் என அணிந்துள்ள இம்மூவருள் வலப்புறத்தார் தாடி நன்கு வளர்ந்து முக்கோணமாய் நீள, நடுவர் குறுந்தாடி அழகராய்க் காட்சி தருகிறார். கழுத்தில் கண்டிகை அணிந்தவராய் நடுவிலிருப்பவர் தம் இருகைகளிலும் ஓலைச்சுவடியொன்றைப் பிடித்துள்ளார்.சுவடிச் செய்தி தம்மைத் துணுக்குறச் செய்துவிட்டாற்போன்றதொரு பார்வையுடன், வழக்காடி நிற்பவரை நோக்கும் அவரைப் பார்த்தபடி வலப்புறத்தாரும் பின்னவரும் பார்வையிலேயே வியப்பின் விளிம்பு காட்டிக் கேள்விகள் தொடுக்க, வலப்புறத்தார், ‘அவசரப்பட வேண்டாம் பொறுங்கள்’ என்பது போல் வலக்கையில் மெய்ப்பாடு காட்டுகிறார். இடப்புறத்தார் இந்த நிகழ்ச்சிப் பின்னலில் வியப்பின் உச்சிக்கே போனவராய்ச் சுவடிக்கட்டை மார்பின் பக்கவாட்டில் இடுக்கியிருக்கும் இடக் கையை வியப்பில் மலர்த்தி, ‘என்னவிது கொடுமை!’ என்பது போல் பரிதாபப் பார்வை சிந்துகிறார்.அறக்களத்தாரின் பல்வேறு உணர்வலைகளுக்குக் காரணமான சிவபெருமான் வலக்கையில் ஓலையும் இடக்கையில் குடையுமாய்ச் சுந்தரரை அடிமைப்படுத்தும் வகையில் வழக்கை நடத்திச் செல்ல, எதிரே சுந்தரர் செய்வதறியாதவராய், மாப்பிள்ளைக் கோலத்தில் மருட்சியுடன் நிற்கிறார். அவரது நீள்செவிகள் வெறுமையாக அமைய, கழுத்தில் பெருமுத்து ஒரு சரமாகவும் ருத்திராக்கம் ஒரு சரமாகவும் இணைந்த அணிகலன். கைகளில் கங்கணங்கள், வளைகள். இடுப்பில் பதக்கம் பெற்ற அரைப்பட்டிகை இருத்தும் பச்சை வண்ணப் பட்டுச் சிற்றாடை. மார்பில் முப்புரிநூலாய் மடித்த துணி. கம்பீரமும் அழகும் மிளிர நிற்கும் நாவலூராரின் இரு கைகளும் மார்பு நோக்கித் திரும்பியுள்ளன. ஓவியச்சிதைவால் அக்கைகளின் அமைப்பு அறியக்கூடவில்லை.            நெடிய திருமேனியராக வழக்குரைத்து நிற்கும் சிவபெருமானின் இடுப்பில் வெண்ணிறச் சிற்றாடை. வெண்தாடி வேந்தராய் நரைத்த முடியும் பெருங் கொண்டையுமாய் நீள்வெறுஞ் செவிகளுடன் உறுதி நிறைந்த எள்ளல் பார்வையுடன் இதழ்களில் இளநகை கொண்டு விளங்கும் அவரது தோற்றமே வழக்கில் வெற்றி அவர் பக்கம்தான் என்பதைக் காட்டுமாறு அமைந்துள்ளது.வெண்ணெய்நல்லூர் வழக்காடுமன்றக் காட்சி, நடந்தவற்றை நயம்பட விளக்கினாலும் வழக்கையும் அது விவாதிக்கப்பட்ட முறையையும் முழுமையாய் அறியச் சேக்கிழாரின் செவ்விய பாடலடிகளே பெருந்துணை செய்கின்றன. நாவலூரார் தமக்கடிமையென்றும் அதைக் கூறத் தாம் மணவரங்கு வந்தபோது, ஓலையைப் பறித்துக் கிழித்ததுடன், வழக்காட விரும்பின் வெண்ணெய்நல்லூர் வருகவென்று சுந்தரர் அறை கூவல் விடுத்ததாகவும் சிவபெருமான் வழக்குத் தொடுக்க, அந்தணர் அடிமையாவது இயல்பல்லவே என்று அறக்களத்தார் நகைக்க, ஓர் உடன்பாட்டால் சுந்தரர் பாட்டன் தமக்கு அடிமைப்பட்டதாகவும் அவர் எழுதித் தந்த ஓலையே சுந்தரரால் கிழிக்கப்பட்டதென்றும் சிவபெருமான் விளக்க, அறக்களத்தார் சுந்தரரிடம் கருத்துக் கேட்க, அவர் தாமொன்றும் அறியோம் என்பதுவாய் நிற்க, ஆட்சிமுறை, சாட்சி, ஆவணம் இம்மூன்றனுள் ஏதேனும் ஒன்று கொண்டு தம் கூற்றை மெய்ப்பிக்குமாறு அறக்களத்தார் முதியவர் வடிவில் வந்த சிவபெருமானுக்கு வேண்டுகோள் வைத்தனர்.தாம் வைத்திருந்த படியோலையையே சுந்தரர் கிழித்ததாகக் கூறிய சிவபெருமான், மடியிலிருந்த மூலஓலையை அறக்களத்தாரிடம் தந்தார். ஓலையைப் பார்த்த அந்தணர்கள் சாட்சிக் கையெழுத்திட்டவர்களை அழைத்து, அவர்தம் கையெழுத்துகளைச் சரிபார்த்ததுடன், சுந்தரரின் பாட்டனார் கையெழுத்துள்ள பிற ஓலைகள் கொண்டு அவர் கையெழுத்தையும் சரிபார்த்தறிந்தனர். எல்லாம் சரியாக அமைந்ததால், சுந்தரர் முதியவருக்கு அடிமையென உரைத்தனர். சுந்தரர் செய்வதறியாது திகைக்க, அத்திகைப்புக் கண்டு கிழவராய் வந்த சிவபெருமான் நகைக்க, அறக்களத்தார், தம்மை வெண்ணெய்நல்லூரன் என்றுரைத்த முதியவரின் இருப்பிடம் வினவினர். ‘அறியீரோ என் இருப்பிடம்’ என்று வினவி, ‘வாருங்கள் எனைத் தொடர்ந்து’ என அழைத்தபடி விரைந்து நடந்த முதியவரை ஆவல் மேலிட அனைவரும் பின்தொடர்ந்தனர். முதியவர் திருவருட்துறைக் கோயிலுள் புகுந்து மறைந்தார்.அறக்களத்தார் முதியவரைக் காணாது திகைத்து நின்றுவிட, சுந்தரர் மட்டும் கோயிலுள் நுழைந்து தேடினார். இறைவன் இறைவியுடன் தோன்றி, ‘நீ முன்பே நம் தொண்டன். காதல் வழிப்பட்டு நிலவுலகம் வந்தாய். பழையன நினைவூட்டவும் தடுத்தாட்கொள்ள உனக்களித்த உறுதிப்பாட்டினைக் கருதியுமே முதியவராய் வந்து வழக்காடி உனை அடைந்தோம்’ என்றார். பழைய நினைவுகளும் நடந்த நிகழ்வுகளும் படக்காட்சிகளாய் நெஞ்சிலாடச் சுந்தரர் பல்வேறு உணர்ச்சிகளுக்காளானார்.‘தடுத்தாட்கொள்ள வந்த என்னிடம் வன்மையாகப் பேசினாய். அதனால், வன்தொண்டன் ஆனாய். எனக்குப் பிடித்தது பாட்டு. என்னைத் தமிழால் பாடு’ என்ற சிவபெருமானிடம், ‘அறியாதவன் நான், அனைத்துமறிந்தவரை என்னவென்று பாடுவேன்’ என்று மருகினார் சுந்தரர். ‘மணவரங்கில் பித்தனென அழைத்தாயே, அச்சொல்லையே தொடக்கமாய்க் கொண்டு தொடர்ந்து சொற்றமிழ்ப் பாடு’ என்று வாழ்த்திய பெருமான் மறைந்தார். ‘பித்தா பிறைசூடி’ என்று பதிகமாலைகள் சுந்தரரின் திருவாக்காய்ப் பிறந்தன; தொடர்ந்தன.வழக்கு மன்றக் காட்சியைத் தொடர்ந்து முதியவரைச் சுந்தரர், அந்தணர் தொடர்வதும் சிவபெருமான் தம் இருப்பிடம் காட்டித் திருவருட்துறைக் கோயிலில் மறைவதும் அங்கு சுந்தரர் அமர்ந்து பாடுவதும் முதல் பத்தியின் நான்காம் பகுதி யாய்ச் சோழத் தூரிகைகளின் சுந்தரத் தீட்டல்களில் மலர்ந்துள்ளன. இப்பகுதியில் சிதைவுகள் மிகுதியாக இருப்பதால், காட்சித் தெளிவு குறைவுதான் என்றாலும். சேக்கிழாருக்குக் கற்பனை கலக்க அடிப்படைச் சான்றுகளாய் அமைந்தவை இவை தானே. முயன்று நோக்குவார் முழுவதும் பார்க்கலாம்.- வளரும்

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.