http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 137
இதழ் 137 [ செப்டம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
தெற்கிலும் வடக்கிலும் 22 அடி 3 அங்குல அகலமுடைய முகமண்டப வெளிச்சுவரின் நடுப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் மற்றும் கொற்றவை கோட்டங்களின் இருபுறமும் சுவர்ப்பஞ்சரங்கள் அமைந்துள்ளன. சுவரின் வெற்றிடத்தில் பொருத்தப்படும் சிறு முழு விமானமாகக் கருதத்தக்க இவ்வுறுப்பு தளத்தின் கபோதத்திலிருக்கும் கூடுகளை இதன் சிகரமாகக் கொள்ளத்தக்கவாறு அமைந்திருக்கும். தென்திசை மேற்குப் பஞ்சரம் இதன் தாங்குதளமானது தரையிலிருந்து எழும் உப உபானம், உபானத்தின் மேல் பத்மஜகதி, உருள்குமுதம், (ஆலிங்கப்பட்டி, அந்தரி, பிரதிமுகம், வாஜனம் ஆகியவற்றை உள்ளடக்கிய) பிரதிவரி ஆகியவற்றைக் கொண்டு பிரதிபந்தமாக அமைந்துள்ளது. வடக்குத் தவிர்த்த முப்புறமும் தெரியும் பிரதிமுகத்தில் தெற்கில் ஒன்றையொன்று நோக்கியவாறு இருக்கும் இரண்டு யாளி இணைகளும், கிழக்கிலும் மேற்கிலும் மகரங்களின் வாய்க்குள்ளிருந்து வாளை உயர்த்தியபடி வெளிப்படும் வீரர்களும் வடிக்கப்பட்டுள்ளனர். தாங்குதளத்தின்மீது மேல், கீழ்க் கம்புகளுடனும் கண்டபாதத்துடனும் கூடிய கண்டம், ஊர்த்துவ பத்மம், வேதிகை ஆகியவற்றைக் கொண்ட வேதிகைத்தொகுதி அமைந்து, அதன்மேல் உபரிகம்பு பெற்றுள்ளது.
சுவரை இருபுறமும் நான்முக அரைத்தூண்கள் அணைவு செய்ய, இரு அரைத்தூண்களும் தொங்கல், மாலைக்கட்டு, தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் ஆகிய தூணுக்குரிய அனைத்து உறுப்புகளையும் பெற்றுள்ளன. தூண்களின்மீது பட்டையுடன் கூடிய குளவுப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. வாஜனத்தின் மீதுள்ள வலபியில் அன்னவரி காட்டப்பட்டுள்ளது. மேற்கு முகத்திலும் கிழக்கு முகத்திலும் அடையாளம் காணவியலாத கணங்களும் தென்முகத்தில் ஓர் அன்ன இணையும் காட்டப்பட்டுள்ளன. போதிகையின் மேலுள்ள முன்னிழுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கில் பாம்புடன் விளையாடும் குரங்கையும் கிழக்கில் தூங்கும் குரங்கையும் அழகுற வடித்துள்ளனர். கபோதத்தின் கீழ்ப்புறத்தில் சந்திரமண்டலமும், இரு முனைகளிலும் கொடிக்கருக்குகளும், தென்முகத்தில் நேத்ரநாசிகைகளும் அவற்றின் மேற்குப்புறக் கூட்டில் மனிதத்தலையும் காட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்தின் பிரதிவரியைப் போலவே பூமிதேசத்தின் யாளிவரியிலும் கிழக்கு மற்றும் மேற்கு முகங்களில் மகரங்களின் வாய்க்குள்ளிருந்து வெளிப்படும் வீரர்கள். பூமிதேசத்தின் தென்முகத்தின் இரு ஓரங்களிலும் ஒவ்வொரு யாளி. நடுப்பகுதி சற்று முன்னிழுக்கப்பட்டு ஒன்றையொன்று நோக்குமாறு அமைக்கப்பட்ட ஒரு யாளி இணை. பூமிதேசத்தையும் கிரீவத்தையும் இணைக்கும் வேதிகைத்தொகுதியில் மேல் கீழ்க் கம்புகளுடன் கூடிய கண்டம், கொடிக்கருக்குகளுடன் கூடிய கண்டபாதங்கள், வேதிகை ஆகியனவும் அதற்குமேல் உபரிகம்பும் காட்டப்பட்டுள்ளன. பூமிதேசத்தைப் போலவே வேதிகைத் தொகுதியிலும் நடுப்பகுதி சற்று முன்னிழுக்கப்பட்டுள்ளது. கிரீவத்தின் இருபுற அணைவு அரைத்தூண்களின் தென்முகத்தைக் கொடிக்கருக்குகள் அலங்கரிக்க, கிழக்கு மற்றும் மேற்கு முகங்களைத் தாவுயாளிகள் அலங்கரிக்கின்றன. கிரீவத்தின் கோட்டத்தில் பெண்சிற்பம் ஒன்று உள்ளது. தூக்கிக் கட்டிய கொண்டையுடனும் கச்சற்ற மார்பகங்களுடனும் இடைக்கட்டு மற்றும் இடையாடையுடனும் இடக்கையில் மலரைக்கொண்டு வலக்கையைத் தொடையில் ஊருஹஸ்தமாக இருத்தியுள்ளார். இடதுகால் சமத்தில் இருக்க, வலதுகால் பார்சுவமாக இருக்கிறது. கோட்டத்தை அணைத்திருக்கும் இருபுற அரைத்தூண்களும் தொங்கல், மாலைக்கட்டு, தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் எனத் தூணுக்குரிய அனைத்து உறுப்புகளையும் கொண்டு அமைந்துள்ளன. தரங்கப் போதிகைகள் உத்திரம் தாங்க, வாஜனம், வலபி அமைந்துள்ளது. முகமண்டபச் சுவரின் கபோதத்திலிருக்கும் நாசிகையையும் இப்பஞ்சரத்தின் சிகரத்தையும் ஒரே உறுப்பாகப் பொருத்தித் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ள சிற்பிகள், சிகரத்துள் ஒரு நாகரவிமானத்தை வடித்துள்ளனர். தாங்குதளமற்ற இவ்விமானத்தின் தரைத்தளத்தின் அரைத்தூண்களும் தூணுக்குரிய அனைத்து உறுப்புகளையும் பெற்று வெற்றுக்கோட்டத்துடன் அமைந்துள்ளது. போதிகைகள், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் ஆகியன அமைந்து, கிரீவம், நாகர சிகரம், ஸ்தூபி ஆகியன அமைந்துள்ளன. தென்திசைக் கிழக்குப் பஞ்சரம்
ஏறத்தாழ மேற்குப் பஞ்சரத்தைப் போலவே கிழக்குப் பஞ்சரமும் அமைந்திருந்தாலும், சிற்சில வேறுபாடுகள் கவனிக்க வைக்கின்றன. தாங்குதளத்தில் உள்ள பிரதிவரியில் கிழக்கு மற்றும் மேற்குமுக மகரங்களின் வாயிலிருந்து வெளிப்படும் வீரர்களில் கிழக்கில் இருப்பவர் சிங்கத்தின் மீதும் மேற்கில் இருப்பவர் குதிரையின் மீதும் அமர்ந்திருக்கின்றனர். வலபியிலிருக்கும் பூதவரியில் மேற்கு முகத்தில் அன்னமும், கபோதந்தாங்கும் பூதமும் அமைய, தென்மேற்கு முனையில் தாவுயாளி அமைந்துள்ளது. தென்முகத்தில் இரு அன்னங்கள் இருக்க, போதிகைக்கு மேல் முன்னிழுக்கப்பட்ட பகுதியில் மேற்கில் நின்றுகொண்டிருக்கும் சிங்கமும் கிழக்கில் நீள்வட்ட வடிவப் படுக்கையில் படுத்திருக்கும் மனிதனும் காட்டப்பட்டிருக்கின்றனர். தென்கிழக்கு முனையில் தாவுயாளியும் கிழக்கு முகத்தில் வாத்து இணையும் தனியாக அன்னமும் அமைந்துள்ளன. கபோதத்தின் கூடுகளில் மனிதத் தலைகள் ஏதுமில்லை. கிரீவத்திலுள்ள கோட்டத்தில் இங்கு ஆடவர் சிற்பம் உள்ளது. இடக்கையில் ஏதோவொரு பொருளை ஏந்தியபடி வலக்கையைக் கடியவலம்பிதமாக வைத்துள்ளார். கிரீவத்தின் வாஜனம் மற்றும் வலபிப் பகுதிகள் சிதைந்து போயுள்ளன. சிகரத்தில் சாலை விமானம் காட்டப்பட்டுள்ளது. வடதிசைப் பஞ்சரங்கள் ஏறத்தாழத் தென்திசைப் பஞ்சரங்களைப் போலவே வடதிசையிலும் இரு பஞ்சரங்களும் சிற்சில வேறுபாடுகளுடன் அமைந்துள்ளன. வடதிசைக் கிழக்குப் பஞ்சரம் தாங்குதளத்திலுள்ள பிரதிவரியின் கிழக்குமுகத்தில் மகரத்தின் வாயிலிருந்து சிங்கம் மீதமர்ந்து வெளிப்படும் வீரர் இடம்பெற்றிருக்க, மேற்குமுகத்தில் வாகனம் ஏதுமின்றி வீரர் மட்டும் காட்டப்பட்டுள்ளார். பூதவரியின் கிழக்குமுகத்திலும் மேற்குமுகத்திலும் அடையாளம் காணவியலாக் கணத்தையும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு முனைகளில் தாவுயாளிகளையும் வடமுகத்தில் ஓர் அன்ன இணையையும் போதிகைக்கு மேல் முன்னிழுக்கப்பட்ட பகுதியில் மேற்கில் அடையாளம் காணவியலாக் கணத்தையும் கிழக்கில் படுத்திருக்கும் ஓர் உருவத்தையும் அமைத்துள்ளனர். கபோதத்தின் நேத்ரநாசிகையில் கிழக்கில் பாம்பைப் பிடித்திருக்கும் பூதமும் மேற்கில் படுத்திருக்கும் சிங்கமும் வடிக்கப்பட்டுள்ளன. கிரீவத்திலுள்ள கோட்டத்தில் இங்கு ஆடவர் சிற்பம் உள்ளது. சடைமகுடத்துடன் இடக்கையில் வில்லையும் வலக்கையில் வாள் அல்லது அம்பு எனக் கருதத்தக்க ஓர் ஆயுதத்தையும் கொண்டு கழுத்தில் சரப்பளி, உதரபந்தம், இடைக்கட்டுடன் இடக்காலைச் சற்று உயரமான பீடத்தின்மீது இருத்தியுள்ளார். சிகரத்தில் நாகர விமானம் காட்டப்பட்டுள்ளது. வடதிசை மேற்குப் பஞ்சரம் தாங்குதளத்திலுள்ள பிரதிவரியின் மேற்குமுகத்தில் மகரத்தின் வாயிலிருந்து சிங்கம் மீதமர்ந்து வெளிப்படும் வீரர் இடம்பெற்றிருக்க, கிழக்குமுகத்தில் வாகனம் ஏதுமின்றி வீரர் மட்டும் காட்டப்பட்டுள்ளார். பூதவரியின் கிழக்குமுகத்திலும் மேற்குமுகத்திலும் அடையாளம் காணவியலாக் கணத்தையும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு முனைகளில் பறக்கும் அன்னங்களையும் வடமுகத்தில் ஓர் அன்ன இணையையும் போதிகைக்கு மேல் முன்னிழுக்கப்பட்ட பகுதியில் மேற்கில் பூதத்தையும் கிழக்கில் படுத்திருக்கும் சிங்கத்தையும் அமைத்துள்ளனர். கிரீவத்திலுள்ள கோட்டத்தில் இங்குப் பெண் சிற்பம் உள்ளது. இடக்கை கடியவலம்பிதமாகவும் வலக்கையில் மலரையும் கொண்டுள்ளார். சிகரத்திலுள்ள விமானம் வேசரமாக உள்ளது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |