http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 137

இதழ் 137
[ செப்டம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள் திறந்து கருணையோடு காத்திருந்தது வரலாறு
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 9
திருவலஞ்சுழி - ஸ்வேத விநாயகர் - அமைவிடம்
புள்ளமங்கையில் நெடியோன் சிற்பம்
பொழில்சூழ் திருப்புள்ளமங்கை வளாகம்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 3
ஒரு கல் மண்டபம் எனும் திருக்கழுக்குன்றம் குடைவரை
கலியாப்பட்டி ஆய்வுப்பயணம்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 2
இதழ் எண். 137 > பயணப்பட்டோம்
கலியாப்பட்டி ஆய்வுப்பயணம்
சு.சீதாராமன்

 



பயணங்கள் வாழ்வை மேம்படுத்தும் எனில் ஆய்வுப்பயணங்கள் என்ன செய்யும்? வெகுநிச்சயமாக நம் வாழ்வையும் சிந்தனைகளையும் மேம்படுத்தும் என்பது என் கருத்து.



கடந்த 02-09-2017 அன்று மேற்கொண்ட ஆய்வுப்பயணம் பல புதிய அனுபவங்களைத் தந்தது. குறிப்பாகப் பழங்காலக் கோயில்களின் அமைவிடங்களை அணுகுவதிலும் கண்டடைவதிலும் உள்ள சிக்கல்களை வெள்ளிடைமலைபோல் வெளிப்படுத்தியது.



02-09-2017 காலை 9 மணிக்கு நானும் எனது நண்பர் திரு.கிருஷ்ணனும் "காளியாபட்டி" (அப்படித்தான் இதுவரை நினைத்திருந்தேன்) சென்றுவருவது என முடிவெடுத்துப் பயணத்திற்கு ஆயத்தமானோம். சரி, முன்பு சென்று வந்தவர்களைக் கேட்டு எப்படிச் செல்வது என முடிவு செய்வோம் என்றெண்ணியவுடன் நம் நினைவுக்கு வந்தவர் மரு.சுந்தரேசன் அவர்கள். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் பொதுமேலாளராக பணிபுரிந்தவர். மேலும் காளியாபட்டிக்கு சென்று வந்தவர் என்ற முறையில் அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் கூறியது பெரிதும் உதவியாக இருந்தது. அவர் புதுக்கோட்டையிலிருந்து சென்றதால் அந்த வழியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.



அவர் கூறிய வழி இதுதான். "புதுக்கோட்டையிலிருந்து கிள்ளுக்கோட்டை வந்து அங்கிருந்து கீரனூர் செல்லும் பாதையில் உள்ளதாக ஞாபகம்" என்று கூறினார். கிள்ளுக்கோட்டை என்றவுடன் நமது புவியியல் அறிவு வேலைசெய்யத் தொடங்கியது. நாம் புதுக்கோட்டை செல்லத்தேவையில்லை. தஞ்சை சென்று திருச்சி செல்லும் சாலையில் அசூர் விலக்கில் இடதுபுறம் திரும்பினால் விசலூர் வழியாகக் கிள்ளுக்கோட்டையை அடையலாம் என்று மனம் வழிகளைக் கணிக்கத்தொடங்கியது.



சரி, சென்று வரலாம் என முடிவெடுத்து இருவரும் கிளம்பித் தஞ்சையில் சிற்றுண்டி அருந்தி அசூர் விலக்கில் சரியாகத் திரும்பினோம். அசூர் விலக்கிலிருந்து சுங்கச்சாவடி சுமார் 250 மீட்டர்தான் இருக்கும். சற்றுத் தொலைவு பயணப்பட்டவுடன் அசூர் கிராமம் வந்தது. அங்கு இரண்டு சாலைகள் பிரிந்தன. சரி, விசாரித்துவிட்டு மேலே தொடர்வோம் என்றெண்ணி அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளிடம் "காளியாப்பட்டி"க்கு எப்பக்ச் செல்வது என வினவினோம். ஒரு பெரியவர் அப்படி ஒரு ஊரே இப்பகுதியில் இல்லை என்று ஒரே போடாகப் போட்டார்! ஆஹா இப்படி விசாரிக்காமல் கிளம்பி வந்து விட்டோமே என்று யோசிக்க, மீண்டும் நண்பர் மரு.சுந்தரேசனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்! "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்" என்று தகவல் வந்தது.



காரை விட்டு இறங்கி சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு,



"ஐயா! நான் கும்பகோணத்தில் இருந்து வருகிறேன். இங்குக் கிள்ளுக்கோட்டைக்குப் பக்கத்தில் காளியாபட்டி என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். இங்கிருந்து எப்படிச் செல்வது என்று கூறினால் நன்றாக இருக்கும்" என்று அப்பெரியவரை வினவினேன்.



"தம்பி நீங்கள் ஊர் பெயரை தப்பா சொல்றீங்க"



"அப்படியானால் அந்த ஊரின் பெயர் என்ன ஐயா?"



"கலிபட்டி" 



அப்பாடா என்ற ஒரு நிம்மதிப் பெருமூச்செறிந்தேன். நல்லவேளை நாம் நேரத்தை வீணாக்கவில்லை. சரியான பாதையில்தான் வந்திருக்கிறோம் என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.



"இப்படியே நேர போங்க. விசலூர் வரும். அங்கேருந்து கிழக்கே திரும்புங்க. கொஞ்ச தூரத்துல கலிபட்டி வரும்".



என்று கூற, ஆஹா நாம் புவியியலறிவு அற்புதம் என்று என்னை நானே மனதிற்குள் மெச்சிக்கொண்டிருக்கும் போதே அதே பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒருவர் தாமாகவே முன்வந்து, 



"கலிபட்டிதானே? எதுக்கு விசலூர்லாம் போய்க்கிட்டு? இந்தா இப்படியே போனீங்கன்னா சேங்களூர் வரும். அங்கேர்ந்து மலையடிப்பட்டி விலக்கு வரும். அங்க கேட்டீங்கன்னா சொல்லுவாங்க. இப்படியே போங்க " என்று வலிய வந்து உதவினார்.



சரி இந்த பெண்மணி கூறுவதுதான் சரியாக இருக்கும் என்று மனதிற்குள் தீர்மானம் செய்துகொண்டு இருவருக்கும் நன்றி கூறிச் சேங்களூர் வழியில் பயணத்தைத் தொடர்ந்தோம்! சேங்களூரை அடைந்தவுடன் அங்கிருந்த ஒருவரிடம்,



"ஐயா கலிபட்டிக்கு எப்படி போகணும்?"



என்று விசாரிக்க,



"என்னது கலிபட்டியா?" என்று அவர் வினோதமாக வினவ மறுபடியும் அடி வயிற்றில் புளிகரைக்கத் தொடங்கியது.



"ஆமாம் ஐயா! கலிபட்டிதான்"



"அப்படிலாம் ஒரு ஊரே இங்கிட்டுக் கிடையாது" என்றார்.



சரி இவரிடம் காளியாபட்டி என்று சொல்லிப்பார்ப்போம் என்று யோசித்து,



"ஐயா காளியாபட்டினு ஏதேனும் ஊர் இங்கிட்டு இருக்கா?"



"ஆமாம்! ஆனா அது "காளியாபட்டி" கிடையாது. "கலியாப்பட்டி"ன்னு ஒரு ஊர் இருக்கு" என்றார். அப்பாடா! மறுபடியும் ஒரு நிம்மதிப்பெருமூச்சு.



"இப்படியே ஒரு 5 கிலோமீட்டர் நேர போங்க! மலையடிப்பட்டி விலக்கு வரும். அங்கன அப்படியே மேக்க திரும்புங்க! ஒரு அர கிலோமீட்டர்ல இடதுபக்கம் ஒரு ஆர்ச் வரும். அங்கனருந்து கொஞ்ச தூரத்துல கலியாபட்டி கிராமம் வரும்" என்று விரிவாக கூறினார்.



"ஆமாம் அங்க எங்க போறீங்க?"



"ஒரு பழைய காலத்து சிவன் கோவிலை பாக்கறத்துக்கு" என்று



பதில் கூறினேன்



"அந்த ஊர்ல ஒன்னும் சிவன்கோயில்லாம் இல்லியே, ஒரு பெருமாள் கோவில்தான் இருக்கு" என்று கூற அப்பாடா முதல்ல அந்த ஊர் இருக்கு அப்புறம் கண்டிப்பா ஒரு கோவில் இருக்கு என்று மனதில் உறுதி செய்துகொண்டு அவருக்கு நன்றிகூறி மலையடிப்பட்டி விலக்கு நோக்கிப் பயணித்தோம்.



மலையடிப்பட்டி விலக்கிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பிப் பயணிக்க ஒரு அரை கிலோமீட்டரில் "கலியாபட்டி" 1 கி.மீ என்ற வழிகாட்டி நம்மை வரவேற்றது. சேங்களூரில் வழிகூறியவர் சரியாகத்தான் நம்மை வழிநடத்தியிருக்கிறார் என்று மனதிற்குள் நினைத்து, அடுத்து அவர் கூறிய "ஆர்ச்" இருக்கிறதா எனப் பார்வையை வீச, அவர் கூறிய மாதிரியே ஒரு "ஆர்ச்" இருந்தது.



 





 



 





 



அந்த ஆர்ச்சிலிருந்து அரை கிலோ மீட்டரிலேயே கிராமம் வந்து விட்டது. அப்பாடா ஒருவழியாக "கலியாப்பட்டி"க்கு வந்தாச்சு. மனம் குதூகலித்தது. ஆனால் அந்தக் குதூகலம் கொஞ்ச நேரந்தான் நீடித்தது. அங்குச் சுற்றும்முற்றும் பார்வையை வீச, யாருமே கண்ணில் படவில்லை. சற்றுதூரம் செல்ல அங்கு ஒரு வீட்டின் முன்புறத்தில் இரு பெண்மணிகள் உரையாடிக்கொண்டிருந்தனர். சரி இவர்களிடம் கேட்போம் என்று எண்ணி,



"அம்மா இந்த ஊர்ல ஒரு பழைய காலத்து சிவன் கோவில் ஒண்ணு இருக்குல்ல, அத பார்க்கதான் வந்துருக்கோம், அந்த கோயிலுக்கு எப்படி போறது" என்று வினவினேன்



"இந்தூர்ல சிவன் கோவில்லாம் இல்ல, பெருமாள் கோவில் தான் இருக்கு" என்றார் முதல் பெண்மணி



"அம்மா கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கம்மா நாங்க ரொம்ப தூரத்திலேர்ந்து இந்தக் கோவிலைப் பார்க்கறதுக்குன்னே வந்திருக்கோம்" என்று சற்று கலவரத்துடன் மீண்டும் வினவினேன்.



அருகிலிருந்த பெண்மணி,



"இந்த! அவங்க "ஓட்ட கோவில" சொல்றாங்கன்னு நினைக்கிறேன்" என்றார்!



"ஓட்ட கோவிலா? இந்தா இப்படியே போங்க. கொஞ்ச தூரத்துல போயி அங்கிட்டிருந்து கிழக்க போங்க! நிறைய வண்டிப்பாதை போகும்! அதுல போனீங்கன்னா ஒரு ஏரி வரும். அங்கனதான் ஓட்டக்கோவில் இருக்கு" என்று முதல் பெண்மணி கூற, அப்பாடா! ஒரு வழியாகக் கோவில் இருக்கும் திசையைக் கண்டுபிடித்தாயிற்று என்று நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தோம்! ஆனால் அந்த மகிழ்ச்சியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.



அவர்கள் கூறியது போல் சற்றுதூரம் தெற்கே சென்று கிழக்கு நோக்கித் திரும்பினோம். அவர்கள் கூறியது போலவே முதலில் ஒரு வண்டிப்பாதை போனது. அதில் தொடர்ந்து போகக் கொஞ்சதூரத்தில் இரண்டு மூன்று பாதைகள் பிரிந்தன! சரி எதில் போகலாம் என்று யோசிக்க அவர்கள் கூறிய ஏரி ஞாபகத்திற்கு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தால் கண்ணுக்கெட்டியதூரம் வரை வேலிக்கருவைக் காடுகள்தான் தெரிந்தன. விசாரித்தறிய அக்கம்பக்கத்தில் ஆட்களே இல்லை! சுற்றிலும் அப்படி ஓர் அமைதி! 



சரி, சுவடுகள் அழுந்தப் பதிந்த பாதையில் செல்லலாம் என்று முடிவெடுத்துக் கொஞ்சதூரம் சென்றவுடன் காட்டுப்பூச்சிகளின் சத்தம் அந்த அமைதியான சூழலில் காதைப்பிளந்தது! பாதைகள் போய்க்கொண்டே இருந்தன. அங்கங்கு பிரிவுகள்! சரி யாரேனும் கண்ணில் படும்போது சரியான பாதையை விசாரித்துக்கொள்ளலாம் என்று எண்ணினேன்! பொன்னியின் செல்வன் நாவலில் கோடியக்கரைக் காட்டில் நுழைந்தவுடன் சரியான வழிகாட்டி இல்லையேல் சுற்றிச் சுற்றி வரவேண்டும். காட்டிலிருந்து வெளியே வரமுடியாது என்று பூங்குழலி கூறும் வசனம் ஞாபகத்தில் வந்து போனது!



நல்லவேளை இது அப்படி ஒன்றும் பெரிய காடு இல்லை. ஒன்றும் சரியா வரவில்லை என்றால் கிராமத்துக்குச் சென்று யாரையாவது அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே சற்றுத்தொலைவில் ஒரு வயதான பாட்டி மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.



அவர் இருக்கும் இடம் வரை கார் செல்லமுடியாதது போல் தோன்றவே, "கிருஷ்ணா" அந்த பாட்டிட்ட போய் ஓட்டக்கோயில் எப்படிப் போறதுன்னு கேட்டுட்டு வாங்க" என்று நண்பரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் என்னை அண்ணா என்று அன்புடன் அழைப்பது வழக்கம். 



"சரி அண்ணா" நான் போய் விசாரித்து வருகிறேன் என்று அந்தப் பாட்டியிடம் சென்று விசாரித்தார். அந்தப் பாட்டி விவரங்கள் கூறவே,



"அண்ணா நம்ம வந்த வழியில் ஆரம்பத்திலேயே பிரியும் ரோடுகளில் தெற்கு நோக்கிப் பிரியும் ரோடுதான் ஏரிக்குப் போகும்" என்று பாட்டி கூறுவதாகவும் அந்த ஏரியின் தெற்குக்கரையில் "ஓட்டக்கோயில்" இருப்பதைப் பாட்டி உறுதிசெய்ததாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.



மீண்டும் வந்த வழியே திரும்பினோம். கிட்டத்தட்டப் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்தோம்! அங்கிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் விலக்கில் வண்டியைத் திருப்ப ஒரு பத்து மீட்டர் கூட போயிருக்கமாட்டோம்! வண்டிப்பாதை ஒத்தையடிப்பாதையாக மாறியது. வழியின் இருபுறமும் முட்கள்! 



 





 



சரி! வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்று பார்ப்போம் என்று முடிவு செய்து அந்த ஒத்தையடிப்பாதையில் சிறிதுதூரம் கிழக்கு நோக்கிச் சென்றோம். சிறிதுதூரம் சென்றவுடன் மீண்டும் ஒரு வண்டிப்பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் பின் கிழக்கே திரும்பியும் சென்றது. வண்டிப்பாதையை அடைந்தவுடன் ஏரி கண்ணுக்குப் புலப்படத்தொடங்கியது! சரி நாம் இருவரும் இரண்டு புறமாகச்சென்று கோவில் என்கிருக்கிறதென்று தேடுவோம் என்று கிருஷ்ணாவிடம் கூறி ஆளுக்கொரு திசை நோக்கி கோவிலைத்தேடத் தொடங்கினோம்!



நான் தெற்குப்புறமாகவும் கிருஷ்ணா வடக்குப்புறமாகவும் சென்றோம். இந்நிலையில் நான் மீண்டும் மரு.சுந்தரேசனைத் தொலைபேசியில் அழைக்க முயன்றேன்! இம்முறை எனது அலைபேசியில் சிக்னல் இல்லாமல் போகவே முயற்சியைக் கைவிட்டுக் கோவில் தேடுவதில் தீவிரமானேன்! ஒரு நூறு மீட்டர் சென்றவுடன் அலைபேசியில் சிக்னல் கிடைக்கவே மீண்டும் மரு.சுந்தரேசனைத் தொலைபேசியில் அழைக்க முயன்றேன்! இம்முறை தொடர்பு எல்லையில் அகப்பட நான் இருக்கும் இடத்தைக்கூறிக் கோவிலுக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று வினவினேன்! அவர் மிகவும் அமைதியாக எனக்குத் தெரியாதுங்க நான் ஊர்ல நுழைஞ்சவுடனே ஒரு பெரியவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டேன். அவர்தான் வழிகாட்டினார் என்று கூறவே நான் பிறகு பேசுவதாக தெரிவித்துவிட்டு, சரி ஊருக்குள் சென்று யாரையாவது உள்ளூர்க்காரரை அழைத்து வந்து எப்படியும் இன்று கோவிலைக் கண்டுபிடித்தே தீருவது என்று முடிவுசெய்து கார் இருக்கும் திசைநோக்கித் திரும்பி நடந்தேன். இதற்குள் கிருஷ்ணா "அண்ணா இங்கு ஒரு கோவில் கோபுரம் போன்று ஒன்று தெரிகிறது இதுவா பாருங்கள்" என்றழைக்கவே சற்று நிம்மதியானேன்! 



அவரருகில் சென்று அவர் குறிப்பிட்ட திசையில் நோக்க, கோவில் சிகரத்தின் உச்சி லேசாகத் தெரிய ஒரு நூறு மீட்டர் கோயிலின் திசை நோக்கி நகர, சிகரம் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அவ்விடத்திலிருந்து எங்கள் கார் ஒரு 600 மீட்டர் தொலைவில் இருந்தது. உடனே, கிருஷ்ணா,



"அண்ணா! நீங்கள் கோவிலுக்குச் செல்லுங்கள்!"



நான் போய்க் காரிலிருந்து கேமரா, தண்ணீர் மற்றும் உங்கள் டெம்பிள் கிட் (ஓர் அளக்கும் மின்னணுக் கருவி, இஞ்ச் டேப், பேனா, குறிப்பேடு, ஐபேட் ஆகியவை அடங்கியது) ஆகியவற்றை எடுத்து வருகிறேன் என்று உதவிக்கரம் நீட்டினார். மகிழ்ச்சியுடன் நான் கோயில் நோக்கிச் செல்ல, கிருஷ்ணா காரை நோக்கி சென்றார். மேலும் ஒரு 600 மீட்டர் செல்லக் கோயில் வளாகம் முழுவதும் கண்களில் தெரிய மனம் மீண்டும் குதூகலத்தில் ஆழ்ந்தது.

 





 



சமீபத்தில் மழைபெய்திருக்கும் போலத் தெரிந்தது. ஏரியில் நடக்கும்போது மணலில் கால் உள் வாங்கியது! இப்பொழுது வேறு ஒரு பிரச்சனை. சரியாக மணி 12.30 உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. தாகம் வெயிலின் உக்கிரத்தை உடலுக்கு உணர்த்த, கிருஷ்ணாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கிருஷ்ணாவைக் காணவில்லை. கிட்டத்தட்ட ஒரு 45 நிமிடங்கள் இந்த வெயிலில் அலைந்திருக்கிறோமே என்று ஒருகணம் யோசிக்க, அலைந்தாலும் கோவிலைக்கண்டுபிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி வெயிலின் தாக்கத்தை எளிதாக சமன் செய்தது.



 





 



கிருஷ்ணா வரும் வரை அலைபேசியில் உள்ள புகைப்படக்கருவி கொண்டு கோவிலைப் படமெடுத்துக்கொண்டிருந்தேன்! சற்றுநேரம் ஆகியும் அவர் தென்படாததால் அவரை அலைபேசியில் அழைத்தேன். அவரிடம் இரண்டு அலைபேசிகள் உண்டு. ஒன்றை அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறார். இன்னொன்றை "சைலண்ட் மோடில்" போட்டுவிட்டார் போலும்! இரண்டு அலைபேசியிலும் பதில் கிடைக்காமல் போகவே, சரி வரும்போது வரட்டும். அதுவரையில் ஆய்வில் கவனம் செலுத்துவோம் என்று ஆய்வில் மூழ்கினேன். சற்றுநேரத்தில் அவர் அனைத்து உபகரணங்கள் மற்றும் தண்ணீருடன் அவ்விடம் வந்து சேர்ந்தார்!



அன்று நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்பானது கிருஷ்ணா என்னுடன் வந்ததே ஆகும்! அவர் வராமல் தனியாக வந்திருந்தால் இன்னும் சிரமப்பட்டிருக்க வேண்டியதாயிருந்திருக்கும். ஒருவேளை பிறிதொருநாள் பார்த்துக்கொள்வோம் என்று திரும்பியிருந்தாலும் திரும்பியிருப்பேன்! நல்லவேளை அன்றையபொழுது அற்புதமாகக் கழிந்தது. முதலில் நீர் அருந்தித் தாகம் தணித்துக்கொண்டு ஆய்வில் கவனம் செலுத்தலானேன்! சுற்றிலும் ஓர் ஈ, காக்கை இல்லை எங்களிருவரைத்தவிர. சற்றுநேரம் கழித்து ஒரு மாடு மேய்க்கும் பெரியவர் அங்கு வந்தார்! எங்களைப் பார்த்துக்கொண்டு நீண்டநேரம் பேசாமலிருந்தார். பிறகு விசாரித்தார். நான் கலியாப்பட்டி கோவிலை ஆய்வுசெய்ய வந்திருப்பதாக கூறவும், அவர், இது கலியாப்பட்டி இல்லை அந்த ஊர் இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்றார்!



 





 



(என்னுடன் வந்த திரு.கிருஷ்ணன்) 



இம்முறை நான் பதறவோ வருத்தப்படவோ இல்லை! கோயில் கண்முன்னே இருக்கிறது! அவர் கூறுவது உண்மைதான்! ஊரிலிருந்து கோவிலின் அமைவிடம் தொலைவுதான்! இருப்பினும் இதனைச் சரிபார்த்து விடுவோம். ஒருவேளை இது இன்னொரு கோவிலாக இருந்தால் ஒரு புதிய கண்டுபிடிப்பாக அமையுமே என்று எண்ணி, எனது ஐபேடைத் திறந்து தாகி எழுதிய "என்சைக்ளோபீடியா ஆப் செளத்திண்டியன் டெம்பிள் ஆர்க்கிடெக்சர்" நூலிலுள்ள கலியாப்பட்டியின் படத்தைப் பார்த்தேன்!

 





 



சந்தேகம் இல்லை. இது கலியாப்பட்டியேதான் என்று உறுதிசெய்து, மேற்கொண்டு எனது ஆய்வைத்தொடர்ந்தேன்! கோயில் பற்றிய தகவல்கள் நிச்சயமாக ஓர் ஆய்வுக்கட்டுரையாக மலரும். இக்கோயிலை அடைய யான் பெற்ற துன்பம் பெறாதிருக்க இவ்வையகம் என்பதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை இது!

 





 



(கோவில் அமைவிடம்-மூன்று பக்கம் வயல்கள்,ஒருபக்கம் ஏரி)



புவியியல்ரீதியாக பூமத்தியரேகைக்கு வடக்கே 10*38'24" இலும் கிரீன்விச்சிற்கு கிழக்கே 78*53' 23" லும் அமையப்பெற்ற இந்த அற்புத ஆலயம் முத்தரையர்களின் கட்டுமானக் கோயில்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 





 



(திருச்சி,தஞ்சை மற்றும் புதுக்கோட்டையிலிருந்து கலியாப்பட்டி)



திருச்சியிலிருந்து இரண்டு வழிகளில் இக்கோயிலை அடையலாம். ஒன்று இக்கட்டுரையாசிரியர் வந்த வழியாகிய அசூர், சேங்களூர், மலையடிப்பட்டி விலக்கு வழியாகக் கலியாப்பட்டியை அடைவது. 





 



இன்னொன்று கீரனூர் வந்து அங்கிருந்து கிள்ளுக்கோட்டைப் பாதையில் விசலூர் வழியாக மலையடிப்பட்டிக்கு முன்பே வலதுபுறம் கலியாப்பட்டி "ஆர்ச்"ல் திரும்ப அங்கிருந்து கோவிலை அடைவது. (இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வரைபடத்தைப் பார்க்கவும்.) 



 





 



தஞ்சையிலிருந்து வருவதற்கு இக்கட்டுரையாசிரியர் வந்த பாதையே சரியான பாதையாகும். புதுக்கோட்டையிலிருந்து குன்றாண்டார் கோயில் வழியாகக் கிள்ளுக்கோட்டை, மலையடிப்பட்டி வழியாகக் கலியாப்பட்டியை அடையலாம் .



(வேறு ஒரு பயணத்தில் சந்திப்போம்…!)

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.