http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 137
இதழ் 137 [ செப்டம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியன்று திருவலஞ்சுழிக்குச் சென்று ஸ்வேத விநாயகரைத் தரிசிக்கச் சென்றேன்! பக்திபூர்வமான பயணம்தான். இருப்பினும் ஆய்வுக்கண்கள் வழியாகத் திருக்கோயில்களை அணுகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது! ஸ்வேத விநாயகரை வணங்கி வலஞ்சுற்றாக வரும்போது மண்டபத்தின் பின்புறம் பஞ்சரக்கருவறையாக அமைந்த ஸ்வேத விநாயகரின் விமானம் கவனத்தை ஈர்த்தது. காரணம் பஞ்சரங்கள் மிகுந்த எழிலுடன் அமைக்கப்பட்ட ஸ்வேத விநாயகர் மண்டபக்கோயிலின் கருவறை அதனை அடுத்திருந்த பலிபீடத்துடன் ஒட்டிக்கொண்டிருந்ததுதான். வலஞ்சுழி வளாகத்தில் என்ன இடத்திற்கா பஞ்சம்? கிட்டத்தட்டக் கிழக்கு மேற்காக வடபுறம் 926'6", தென்புறம் 926'9", தெற்கு வடக்காகக் கீழ்ப்புறம் 373'11", மேற்புறம் 361' அடியும் கொண்ட சுமார் 3,40,517 சதுர அடி பரப்பளவில் நீண்ட வலஞ்சுழி வளாகத்தில் 6' X 6' சிறிய அளவே உள்ள இந்த மண்டபக் கருவறைக்கு இடம் கிடைப்பதில் என்ன சிக்கல் என்று மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டது. பலிபீடமும் நந்தி மண்டபமும் ஏற்கனவே இவ்வளாகத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்! எது எப்படியோ எது முன்னதாக இருப்பினும் புதியதாக அமையவுள்ள கட்டுமானம் இருக்கும் இன்னொரு கட்டுமானத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும் இடம் விட்டும் கட்டமைக்கப் போதுமான சாத்தியக்கூறுகளும் இடவசதியும் இருந்தும் இந்த மண்டபக் கருவறையும் பலிபீடமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல அமைந்திருக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று மனம் தொடர்ந்து இச்செய்தியை அவதானிக்கத் தொடங்கியது.
ஸ்வேத விநாயகரின் மண்டபக்கருவறையும் பலிபீடமும்
வலஞ்சுழி வளாகத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்வேத விநாயகர் ஆலயம்
உடனே நம் கவனம் ஒட்டு மொத்த வளாகத்திற்கும் சென்றது. நந்தி மண்டபத்திலிருந்து மேற்கே கபர்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும்முன் மேலும் இரண்டு கோபுர வாயில்களைக் கடக்க வேண்டும். நந்தி மண்டபத்திலிருந்து மேற்கே முதலாவது கோபுரவாயில் ஏறக்குறைய 50' (49'10") தொலைவில் உள்ளது. அதேபோல் ஸ்வேத விநாயகர் ஆலய அலங்கார மண்டபத்தை அடுத்த உற்சவ மண்டபத்திலிருந்து கிழக்கே வீதியை அடைய இரண்டு கோபுர வாயில்களைக் கடக்க வேண்டும். உற்சவ மண்டபத்திலிருந்து கிழக்கே முதலாவது கோபுரவாயில் ஏறக்குறைய 60' தொலைவில் உள்ளது. இப்படியாக ஸ்வேத விநாயகர் கோயிலுக்கும் நந்தி மண்டபத்திற்கும் முன்னும் பின்னும் குறைந்த பட்சம் 50' தொலைவிற்கு இட வசதி இருந்தும் ஒரு அரை சதுர இடைவெளி கூட இல்லாமல் பலிபீடமும் கருவறையும் அமைக்கப்பட்ட பாங்கு வெகு நிச்சயமாக ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை உறுதி செய்தது. சரி யோசிப்போம் என்று அங்கிருந்த நால்வர் கோயிலின் மண்டபத்திண்ணையில் அமர்ந்தேன். சற்றுநேரத்தில் தொடர் அலைபேசி அழைப்புகளில் கவனம் கொள்ள, மண்டபத்திலிருந்து தெற்கும் வடக்குமாக நடந்தவாறே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அலைபேசியின் அழைப்புகள் ஓய, நான் நின்று கொண்டிருந்த இடம் வலஞ்சுழி வளாகத்தின் தெற்குக் கோபுர வாயில்! சட்டென்று மனதில் பொறிதட்டத் திரும்பி வடக்கு நோக்க, ஸ்வேத விநாயகர் சன்னதி பளிச்சென்றி தெரிந்தது!. ஆஹா இந்த வாயிலுக்கும் ஆலய அமைப்பிற்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும்! அது நம் கேள்விக்கான விடையாகவும் அமையலாம் என்று எண்ணி அந்த நோக்கில் சிந்தனையை விரிக்க, விடையும் கிடைத்தது!
நந்தி மண்டபம்- ஸ்வேத விநாயகர் ஆலயம் இருப்பிடம் சுட்டும் படம் ஆம்! கபர்தீஸ்வரர் சன்னதியிலிருந்து வளாகத்தின் கிழக்குக் கோபுர வாயிலின் மையத்திற்கு ஒரு நேர்கோடும், தெற்குக் கோபுர வாயிலின் மையத்திலிருந்து வடக்குமதில் நோக்கி ஒரு நேர்கோடும் வரைந்தால், அவைகள் சந்திக்கும் புள்ளி விநாயகர் மண்டபத்தின் மையப்புள்ளியாக அமைவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மையப்புள்ளியை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட கருவறையே ஸ்வேத விநாயகர் ஆலயத்தின் மண்டபக் கருவறையாகும்! ஒருவேளை இக்கருத்துரு காரணமாகவே இக்கோயில் மண்டபக்கருவறையாக அமைக்கப்பட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது. கருவறையின் நீள அகலங்கள் கூட்டப்பட்டிருந்தால் மேலும் பலிபீடத்தின் மீது அமையவோ அல்லது அதனை அகற்றி இடம்பெயரச்செய்யவோ வேண்டியிருக்கும் என்பதாலேயே இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க இயலவில்லை!
சரி, இத்திருக்கோயிலை எழுப்பும்போது ஏன் இந்த நந்தி மண்டபத்தையும் பலிபீடத்தையும் சற்று மேற்கு நோக்கி நகர்த்தியிருக்கக்கூடாது என்ற கேள்வி இன்னும் எஞ்சி நின்றது! அதற்கான விடையைத் தேடவும் வளாகம் முழுக்க ஒரு கழுகுப்பார்வையிட இதற்கும் ஏதேனும் காரணம் இருக்கும் என்று யோசிக்க மீண்டும் அளவுகளின் துணைகொண்டு இதனை அணுக, இதற்கும் விடை கிடைத்தது. மேலே படத்தில் உள்ள வட்டத்தைப் பாருங்கள். நந்திமண்டபத்தை மையமாக வைத்து வரைந்த வட்டமே அது! மேற்கில் அமைந்த மதிலையும் கிழக்கில் அமைந்த கோபுரத்தையும் தொட்டுச்செல்வதைத் தெளிவாகக் காணலாம்! ஆம், வலஞ்சுழி வளாகத்தின் மையப்புள்ளியில்தான் இந்த நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது! நந்தி மண்டப மையக்கோட்டைத் தெற்கு வடக்காக நீட்டினால் அது தெற்கு மதில்சுவரைச் சந்திக்கும் புள்ளியிலிருந்து 26'9" கிழக்கே தள்ளியே தெற்குக் கோபுரத்தின் மையப்புள்ளி அமைகிறது. ஏன் நந்தி மண்டப மையத்தை நோக்கி இவ்வாயில் எழுப்பப்படவில்லை என இன்னொரு கேள்வி எழ, மீண்டும் வளாகத்தை வெளிப்புறமாகச் சுற்றிவந்ததில் இதற்கான விடையும் கிடைத்தது! தெற்குக் கோபுரத்திற்கு நேராகத் தெற்குநோக்கிச் செல்லும் வீதியை மையப்படுத்தியே தெற்குக் கோபுரம் அமைக்கப்பெற்றிருக்கிறது என்பதும் விளங்கியது. இந்த இரண்டு கூறுகளின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காதிருக்கும் பொருட்டே பலிபீடத்தை ஒட்டியிருந்தாலும் பரவாயில்லை என்று இந்த ஸ்வேத விநாயகரின் மண்டபக்கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது போலும்! இக்கேள்விகளுக்கு விடைகிடைத்த மகிழ்ச்சியில் மீண்டும் மண்டபக்கருவறையை நோக்க, மீண்டும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பொதுவாகக் கருவறை விமானங்களில் உறையும் இறைவனின் வாகனம் விமானத்தின் கீரீவத்தில் இடம் பெறும். அவ்வகையிலே இங்கே மண்டபத்தின் மேற்குப் பஞ்சரத்தில் இடம்பெற்ற இந்த மண்டபக் கருவறை உபானம், ஜகதி, குமுதம், கண்டம் மற்றும் கபோதத்துடன் கூடிய கபோத பந்த தாங்கு தளம் பெற்று, தாங்குதளத்தின் மீது சுவர், கூரை, அதன் மேல் கிரீவம், சிகரம் ஸ்தூபி என ஆறங்கங்கள் பெற்று விமானமாகவே எழுவதைப்பார்க்க முடிகிறது. இந்த விமானத்தின் கீரீவத்தில் விநாயகரின் வாகனமான "மூஞ்சூறு" தெற்கிலும் வடக்கிலும் காண்பிக்கப்பட்டமையே நமது ஆச்சரியத்திற்குக் காரணம்!
இந்த ஆய்வு கீழ்க்கண்ட முடிவுகளை வழங்குகிறது! 1) நந்தி மண்டபம் வளாகத்தின் கிழக்கு மேற்கு எல்லைகளின் மையத்தில் அமைந்துள்ளது. தெற்கு வடக்காகப் பார்க்கும்போது தெற்குப் பகுதியில் வளாகம் அதிக இடம் பெற்றமையால் நான்கெல்லைகளின் மையமாக நந்திமண்டபம் அமையாமல் கிழக்கு மேற்கு எல்லைகளில் மட்டுமே மையம் பெறுகிறது. (ஒருவேளை, தெற்குப்புறம் பிற்காலங்களில் விரிவு செய்யப்பட்டிருக்கலாம்) 2) ஸ்வேத விநாயகர் ஆலயத் தெற்கு நோக்கிய நுழைவாயிலின் மையமும் தெற்குக் கோபுரத்தின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வுண்மையைக் கருத்தில் கொண்டால் இக்கோபுரமும் விநாயகர் ஆலயமும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எழுப்பப் பட்டிருக்கலாம் என்பதும் புலனாகிறது. மேலும் விநாயகர் ஆலய மண்டபப் பலகணியிலிருந்து கிழக்குக் கோபுர மையம் நேர்கோட்டில் அமைவதும் கூர்ந்து நோக்கத்தக்கது. ஆகவே ஸ்வேத விநாயகர் ஆலயம் கிழக்கு மற்றும் தெற்குக் கோபுர மையங்களிலிருந்து கிழக்கே பலகணி வாயிலாகவும் தெற்கே நுழைவாயில் வாயிலாகவும் பார்வை பெறுகிறது. 3) மண்டபக் கருவறையாக அமைக்கப்பட்டபோதிலும் கிரீவத்தில் தெற்கிலும், வடக்கிலும் விநாயகரின் வாகனமான "மூஞ்சூறு" பெற்று, கபோதபந்த அதிஷ்டானம், சுவர், கூரை, கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகிய ஆறு அங்கங்களையும் பெற்று இவ்விமானம் சிறப்புப் பெறுகிறது. ஆஹா! விநாயகர் சதுர்த்தியன்று ஸ்வேத விநாயகரின் அருளால் மேற்கூறிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றமையோடு வரலாறு.காம் வாசகர்களோடு இச்செய்திகளைப் பகிர்ந்து கொள்வதிலும் நிறைவுபெற்று இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |