http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 137
இதழ் 137 [ செப்டம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
சேரமான் பெருமாளோ இதற்கு முற்றிலும் மாறானவர். வழக்கமாய் ஒலிக்கும் சேவடிச் சிலம்பொலி கேட்கத் தவறி, அந்த ஏமாற்றம் தாளாது தற்கொலைக்கு முயன்றவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன், காலத் தாழ்வானதற்குக் காரணம் சொன்னபோதுதான் சேரமானுக்குச் சுந்தரர் அறிமுகமானார். தமக்குச் சிலம்பொலிக்க மறந்த இறைவனையும் அதற்குக் காரணமான சுந்தரரையும் அந்த இருவருக்கிடையில் இருந்த ஈர்ப்பையும் நினைத்து மகிழ்ந்தவர், அந்த நொடியே சுந்தரரைக் காண விழைந்தார். ஆரூர் வழியில் சந்திப்பு நிகழ்ந்தது. தம்மிலும் மேலாய் இறைவனை ஈர்த்தவரென்பதால் சுந்தரரிடம் சேரருக்குப் பத்திமை பிறந்தது. ஆளவிரும்பாத அன்பை உடையவரென்பதால் ஆரூராரிடமும் ஆட்பட்டார். சுந்தரரின் நிலவுலக வாழ்க்கையை இரண்டாகப் பகுக்கலாம். சங்கிலி, பரவையுடனான ஒற்றியூர், ஆரூர் வாழ்க்கை சுந்தரகாண்டத்தின் முதற்பாதி. இரட்டைக் காதலில் மூழ்கிய அந்த வாழ்க்கை பிழைகளும் தண்டனைகளும் நிறைந்த துன்ப உலா. தடுமாறி நடந்து வந்த தம்பிரான் தோழரை அந்தப் பாதையிலிருந்து மீட்ட பெருமை சேரமான் பெருமாளுக்குரியது. என்று சேரச் சந்திப்பு நிகழ்ந்ததோ, அன்றிலிருந்து கயிலாய வாயிலுக்குள் நுழைந்த நாள்வரைச் சுந்தரர் சுந்தர வாழ்க்கையரானார். கொடுங்களூரில் சுந்தரர் திருவடிகளுக்குச் சேரமான் பெய்த தூய நீராட்டு, அவர் பெற்றுச் சுமந்த பாவங்களையும் சேர்த்துக் கழுவியது. அஞ்சைக்களத்து அப்பனுக்கு இந்தப் பிள்ளையையும் சேரமான் அறிமுகம் செய்வித்தார். வேடம் பல என்றாலும், போடுபவர் ஒருவர்தானே. ஒருவரே என்றாலும், பல வேடமிட்டு நடிப்பவரும் அவர்தானே. ஆரூரரும் அஞ்சைக் களத்தரும் இழுத்த இழுப்பில் அஞ்சைக்களமே தஞ்சமெனத் தம் இறுதிப் பயணத்திற்கு இடம் தேடிக்கொண்ட சுந்தரர், திருப்புக்கொளியூரில் முதலையுண்ட சிறுவனை மீட்ட அதிசயத்தை நிகழ்த்தியது சேரமானைச் சந்தித்த பிறகுதான். சந்திக்க வந்தவர் சேரமான்தான் என்றாலும், சந்திப்பால் சேரமான் தோழரானவர் சுந்தரர்தான். சுந்தரர் வாழ்க்கையின் வேடிக்கையும் அதுதான். வாடிக்கையும் அதுதான். இராசியானவர் அவர். யார் வந்து சேர்ந்தாலும் சேர்ந்தவர் பெயரால் பெருமை பெறுவது அவருக்கென்றே வாய்த்த தவப்பேறு. தம்பிரான் வந்து சந்தித்துத் தடுத்தாட்கொண்டதால் தம்பிரான் தோழர். சேரமான் வந்து சந்தித்து நட்புக்கடம் பூண்டதால் சேரமான் தோழர். தடுக்கி விழப் போனவரைக் கைப்பிடித்துக் காப்பாற்றியவர்கள் பெயரையிழந்தார்கள். விழப்போனபோது விடுவிக்கப்பட்டவருக்குப் பெயர்களும் அவற்றின் விளைவாய்ப் புகழும் பெருமையும் தேடிவந்தன. அது சுந்தரப்பேறு. அஞ்சைக்களத்தில் ஆத்மசுகம் தேடிக்கொண்டிருந்த சுந்தரரை, புவி வாழ்க்கை முடித்துத் தம்மிருப்பிடம் வரவழைக்க உளங்கொண்டார் சிவபெருமான். இறையுலகிலிருந்து வாணன் யானையுடன் வந்தார். அஞ்சைக்களத்தில் பாடிக்கொண்டிருந்த சுந்தரர் இறையுத்தரவு கேட்டதும் சேரமானை மறந்தார். இப்படி அவ்வப்போது அவசியமானவர்களை மறப்பது அவர் இயல்பு. கண்ணால் கண்டதும் காதல் வயப்பட்டுப் பரவையை மணக்க அவர் பட்டபாடுகள் சொல்லிமுடியாது. ஆனால், ஒற்றியூர் சென்றதும் அங்குச் சங்கிலியின் பார்வை பட்டதும் பரவையை மறந்தார். சங்கிலியைக் கைப்பிடிக்கப் பொய்ச்சூள் வைக்குமளவும் துணிந்தார். அதற்கு உடந்தையாக இருக்குமாறு இறைவனிடமே கேட்குமளவு சங்கிலியாசை அவரைப் பிடித்தாட்டியது. இறைவன் சங்கிலிக்கு நடந்ததுரைத்துச் சுந்தரருக்குச் சிக்கலேற்படுத்த, உரைத்த சூளை மீறியதால் அவர் கண்ணிழந்தார். சூளுரை மீறியது பரவை நாடலால். ஆரூர்த் தேடி அலமந்து பயணித்தவர் துன்பம் சொல்லி இறைவனை நச்சரித்துப் பார்வையும் பெற்றார். ஆனால், ஒற்றியூருக்குத் திரும்பவில்லை. சூளுரைத்து மணந்த சங்கிலியை மறந்தார். பரவையிடம் ஐக்கிய மானார். ஊரெல்லாம் பஞ்சம் வந்தபோது தம் அடியவர், ஆரூர் மக்கள் அனைவரையும் மறந்து, பரவைக்குப் பசிக்கிறது என்று கோளிலி இறைவனைக் கெஞ்சி, இறைவன் தருவதைத் தூக்கிவரப் பூதமும் கேட்டு, நெல் கொணர்ந்து குவித்தார். சேரமானைக் கண்டதும் பரவையை நீங்கிக் கொடுங்களூர் புகுந்தார். அஞ்சைக்களத்தில் சேரமானையே மறந்து யானையேறினார். மறப்பது சுந்தரருக்குக் கைவந்த கலை. அவர் மறப்பதற்கும் கைவிடுவதற்குமென்றே பிறந்த பெருந்தகை. நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் என வாழ்ந்தவர் சேரமான் பெருமாள். யானையேறிச் சுந்தரர் கயிலாயம் புறப்பட்ட காட்சி கண்டவர், தம் குதிரையின் செவிகளில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி வான்வழி ஏகினார். யானையைக் கடந்து கயிலாய வாயிலையடைந்தார். அழைக்காமல் வந்தவர் என்று அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். யானை மீது வந்தவர் இறையழைப்புப் பெற்றவரென்பதால் கதவுகள் திறந்தன. கயிலாயம் நுழைந்த சுந்தரர் சிவபெருமானைக் கண்டு மகிழ்ந்து வணங்கினார். வாயிலில் சேரமான் தடைப்பட்டு நிற்பது கூறினார். அதற்குள் ஆதியுலா பாடி, அது கேட்டேனும் நுழைவாயில் கதவுகள் திறக்குமாவென சேரமான் முயன்று பார்த்தார். சுந்தரப் பரிந்துரையும் ஆதியுலாச் செவிமடுப்பும் சேரமானுக்கு இறையழைப்பாய் மலர்ந்தன. 'அழைக்காமல் ஏன் வந்தாய்', இறைவன் கேட்டார். 'தங்கள் அருள் வெள்ளம் இழுத்து வந்தது' என்றார் சேரமான். உண்மையும் அதுதானே. மகிழ்ந்த இறைவன் இருவரையும் சிவகணங்களின் தலைவர்களாக்கினார். சுந்தரர் வாழ்க்கையின் சிறப்புக்குரிய சந்திப்புகள் நான்கு. அவற்றுள் முதற் சந்திப்பும் இறுதிச் சந்திப்பும்தான் இராஜராஜரைக் கவர்ந்தன. இடைப்பட்ட சந்திப்புகள் காதலால் விளைந்தவை. அவற்றை இராஜராஜர் கருத்தில் கொள்ளவில்லை. பரவையும் சங்கிலியும் வாழ்க்கை வெள்ளத்தில் இயல்பான அலைகள். அவர்களுக்குச் சுந்தரரோ, சுந்தரருக்கு அவர்களோ பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை. காதல் உயர்வான உறவு தான். செம்புலப் பெயல் நீராய் அன்புடை நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்திடும் உன்னத உறவுதான். அது இராஜராஜருக்குத் தெரியாததன்று. பரவை சுந்தரர் சங்கிலி காதலில் வானினும் உயர்ந்த, கடலினும் ஆழ்ந்த, நிலத்தினும் பெரிதான எதையும் அவர் காணவில்லை. ஆனால், அந்தக் காதல் உறவுகளால் கடவுள் பட்டபாட்டைப் பார்த்தார். நட்பின் காரணமாய் அந்த இறையுள்ளம் தவித்த தவிப்பையும் சுந்தரச் சிக்கல்களுக்குள் சிக்கித் தப்பவும் முடியாமல், தவறு செய்யவும் கூடாமல், அங்கும் இங்குமாய் அலைபாய்ந்து, செய்வதறியாது திகைத்த தடுமாற்றத்தையும் இராஜராஜர் உள்ளத்தில் ஏற்றுணர்ந்து உருகினார். தூதுபோனதும் பொய்ச்சூளுக்கு ஒப்பியதும் பின்னர் மனமேற்காது சுந்தரர் ஏமாற்றைச் சங்கிலிக்கு உரைத்ததும் இறைவனை எத்தகு துன்பநிலைகளுக்கு ஆளாக்கியிருக்கும் என்பதை அவரால் கருதிப் பார்க்க முடிந்தது. அத்துன்பங்களையும் அவமானங்களையும் ஒரு சராசரி மனிதரைப் போல இறைவன் ஏற்றதும் பொறுத்துக்கொண்டதும் நட்பிற்காகத்தான் என்பதை நினைத்தபோது, இராஜராஜர் நெகிழ்ந்திருக்க வேண்டும். நட்பின் விசுவரூபப் பரிமாணங்கள் அவரை வியப்பிலாழ்த்தியிருக்க வேண்டும். அதனால்தான், சுந்தரர் வாழ்க்கையின் முதலும் இறுதியுமான இரண்டு நட்புச் சந்திப்புகளுக்குத் தாம் எடுப்பித்த தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துச் சாந்தார இடைவெளியின் கருவறை அகச்சுவரில் வண்ணமயமான இடமளித்தார். கீழ்ப்பத்தியின் நான்கு பிரிவுகளில் சோழர் காலக் கோயில் கட்டமைப்பு, அக்காலச் சமூகத்தின் நாகரிகப் பண்பாட்டுப் பின்னணி காண்பார், சுந்தரக் கதையின் இரண்டாம் கட்டமான சேரநாட்டு அஞ்சைக்களக் கோயில், சுந்தரர் - சேரமான் விண்ணுலா ஆகியவற்றில் தோயும்போது, சேரர் கட்டுமானத் திறனும் தமிழர் வரவேற்பு மாட்சியும் அவர்தம் விலங்கு நேயமும் இந்த மண்ணில் வளர்ந்து செழித்த கலைகளும் கண்குளிரக் காண்பர். அதற்கேற்பவே தம் நாட்டுத் தூரிகைச் செம்மல்களை வரலாற்று நோக்குடன் வரையவைத்திருக்கிறார் இராஜராஜர். சுவரின் இரண்டாம் பத்தி மூன்று பங்குகளாக்கப்பட்டு ஒரு பங்கு அஞ்சைக் கோயில் காட்டவும் இருபங்குகள் சுந்தரர், சேரமான் கயிலைப் பயணம் விளக்கவும் கொள்ளப்பட்டுள்ளன. வளரும் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |