http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1771 Articles]
Home About US Temples Facebook
Issue No. 137

இதழ் 137
[ செப்டம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள் திறந்து கருணையோடு காத்திருந்தது வரலாறு
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 9
திருவலஞ்சுழி - ஸ்வேத விநாயகர் - அமைவிடம்
புள்ளமங்கையில் நெடியோன் சிற்பம்
பொழில்சூழ் திருப்புள்ளமங்கை வளாகம்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 3
ஒரு கல் மண்டபம் எனும் திருக்கழுக்குன்றம் குடைவரை
கலியாப்பட்டி ஆய்வுப்பயணம்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 2
இதழ் எண். 137 > கலையும் ஆய்வும்
பொழில்சூழ் திருப்புள்ளமங்கை வளாகம்
சு.சீதாராமன்

 கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் ஒரு கி.மி தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமத்தில் "பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான் போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கை" என்று ஆளுடையபிள்ளையால் பதிகம் அருளிச்செய்யப்பட்ட "திருஆலந்துறை மகாதேவர் கோயில்" அமைந்துள்ளது.

 

 (புவியியல் அமைவிடம் நன்றி : கூகள் எர்த்)புவியியல்ரீதியாகப் பூமத்தியரேகைக்கு வடக்கே 10*53'24" இலும் கிரீன்விச்சிற்குக் கிழக்கே 79*10.29'28" லும் அமையப்பெற்ற இந்த அற்புத ஆலயம் முற்சோழர் ஆலயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

 

 (குடமுருட்டியிலிருந்து திரு ஆலந்துறையாரின் கோவில் அமைவிடம்)இத்திருக்கோயில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் சுமார் 700 மீட்டர் தொலைவிலும் அய்யம்பேட்டை கண்டியூர் சாலைக்கு வடக்கில் சுமார் 200 மீட்டர் தொலைவிலும் கோவிலைச்சுற்றிலும் கோவிலின் கிழக்கேயும் விரிந்து பரந்த அழகிய "பசுபதி கோவில்" கிராமத்தில் பாங்குற அமைந்துள்ளது.  

 பொன்னி நதியின் கிளைநதியாகிய குடமுருட்டி ஆற்றையும் பொன்னியாகவே பாவித்த ஆளுடைய பிள்ளையார் இக்கிராமத்தின் அமைவிடத்தை இவ்வாறு விளக்குகிறார்."மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்

புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்

கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த

அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே"மேலும் பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை

அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்

கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்

சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.இத்திருத்தலத்தின் அமைவிடப் பெருமையைக்கூறிச் சந்தத்துடன் பாடி ஆடத் தவநிலை கிட்டும் என்று உறுதிபட எடுத்துரைக்கிறார்! தன் பெயர் சொல்லிச் சொல்லும் இச்செய்தியை ஞானசம்மந்தப்பெருமானின் அனுபவமாகவே நாம் கொள்ளலாம்.கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் பின்னாளில் கட்டப்பட்ட 3 நிலைக் கோபுரத்துடன் நம்மை மகிழ்ந்து இனிதே வரவேற்கும் பாங்கு அனுபவத்தால் அறியப்படவேண்டிய ஒன்றாகும். பார்த்த மாத்திரத்தில் இத்திருக்கோயில் வளாகம் தூய செவ்வகம் போல் தோன்றினாலும் அது அவ்வாறு அமைக்கப்படவில்லை என்பது அளவுகளின்பால் தெரியவருகிறது. கோபுரத்தின் இரு மருங்கிலும் அணைத்துச்செல்லும் மதில் சுவர் தென்புறம் கிழக்கு மேற்காக 45' அடியும் வடபுறம் கிழக்கு மேற்காக 65' அடியும் பெறுகிறது. ஒட்டு மொத்தமாகக் கோபுரத்துடன் சேர்த்துக் கிழக்குப் புறத்தில் 132' அகலமும் மேற்குப்புறத்தில் வடக்கு தெற்காக 128' அடி அகலமும் ஏறக்குறையக் கிழக்கு மேற்காக இருபுறமும் 208' நீளமும் பெற்று, 676' அடி சுற்றளவு பெற்று, ஏறக்குறைய 27,200 சதுர அடியில்  அமைந்த இவ்வாலயத்தின் சுற்று மதில்சுவர் சற்று ஒழுங்கற்ற செவ்வகமாக அமைக்கப்பட்டிருப்பது சற்று சிந்தனையைத் தூண்டியது.

 

 (புள்ளமங்கை –மொத்த வளாகமும்-கிழக்கிலிருந்து)பின்னாளில் அமைக்கப்பட்ட மதிற்சுவர் என்பதால் சரியாக அமைத்திருக்கமாட்டார்களோ என்ற எண்ணம் ஒரு கணம் வந்து போனது. கோபுரத்தின் கட்டுமானம் பார்த்தவுடன் அவ்வெண்ணம் உடனே மறைந்தது. செங்கற்களால் சுதைபூசி அமைக்கப்பட்டிருந்தாலும், கோபுர அமைப்பின் நேர்த்தி நன்றாகவே உள்ளதை உணர்ந்து என்ன காரணமாக இருக்கும் என்று மதிலைச் சுற்றி வந்ததில் ஓர் உண்மை புலப்பட்டது. அது என்னவெனில் ஆலயத்தின் தென்புறம் வீடுகள் அமைந்துள்ள ஒரு வீதியுள்ளது. கோபுரம் வீதி முடியும் இடத்தில் நடுநாயகமாக அமைய வடபுறம் அதிகமாக இடம் அமைந்தமையால் கோபுரத்தின் இடதுமதில் சுமார் 20' அதிகம் பெற்றிருப்பது உணரப்பட்டது. இருப்பினும் நீளம் கிட்டதட்ட ஒரே அளவாக அமைய அகலம் மட்டும் கீழ்ப்புறத்தில் அதிகமாக அமைய என்ன காரணம் என்று யோசிக்க பளிச்சென்று ஒரு காரணம் மனதில் பட்டது! அது இந்நாளில் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் "வாஸ்து" வாக இருக்கலாம். வாஸ்து சாஸ்திரப்படி வடகிழக்கு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும். எனவே கோபுரமும் மதிலும் பின்னாளைய கட்டுமானமாக அமைந்தபோதிலும் பராந்தகரின் பெயருக்கும் புகழுக்கும் ஊறு விளையா வண்ணம் சரியான முறையிலேயே நிறுவப்பட்டதில் மகிழ்ந்து கோபுர நுழைவாயில் வழியாக ஆலயத்தில் நுழைகிறோம்!

 

 (கட்டுரையாசிரியரால் அளவுகளின்படி வரையப்பெற்ற வளாக வரைபடம்)கோபுர வாயிலின் உள்ளே நுழைந்தவுடன் உயரமான திறந்த அடைப்புச்சுவர்களற்ற மண்டபம் நடுவில் இரண்டு வரிசைகளில் (வடக்கு தெற்காக) ஐந்தைந்து தூண்கள் பெற்று (கிழக்கு மேற்காக) 36' அடி அகலமும் 46' (தெற்கு வடக்காக) நீளமும் பெற்று அழகாக அமைந்திருக்கிறது. இடதுபுறம் அதாவது தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும் வலதுபுறம் அதாவது ஈசானிய பாகத்தில் அம்மன் கோவிலும் அமையப்பெற்றிருக்கிறது.அதனைத்தொடர்ந்து பெருமண்டபம் நடுவில் இரண்டு வரிசைகளில்(கிழக்கு மேற்காக) ஐந்தைந்து தூண்கள் பெற்றுத் தெற்கு வடக்காக 36' அடி அகலமும் கிழக்கு மேற்காக 46' அடி நீளமும் பெற்று அழகாக அமைந்திருக்கிறது. இது உயரத்தில் திறந்த வெளி மண்டபத்தை விட சற்று குறைவாகும். வடக்குப்பக்கம் 5 தூண்களும் தெற்குப்பக்கம் சுவற்றுடன் அணைந்து ஐந்து அரைத்தூண்களும் ஆக மொத்தம் 20 தூண்கள் பெற்றமைகிறது. இம்மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் அமையப்பெற்றிருக்கின்றன.வடக்குப்பகுதியில் நடராஜருக்கு ஒரு மண்டபம் அமைக்கப்பெற்றிருக்கிறது. இம்மண்டபத்தின் மேற்குப்பகுதி தென்மேற்கு மூலையில் ஒரு பண்டக அறையுடனும் வடமேற்குப் பகுதியின் ஒருபகுதியில் கிணறும் அமைக்கப்பெற்றும் நடுவில் மஹாமண்டபம் செல்வதற்கு 10 அடி நீளமும் 6'3" அகலமும் பெற்ற நுழைவாயில் அமைந்திருக்கிறது.அதனைத் தொடர்ந்து மஹாமண்டபம் நடுவில் இரண்டு வரிசைகளில் கிழக்கு மேற்காக மும்மூன்று தூண்கள் பெற்றுத் தெற்கு வடக்காக 26' அடி அகலமும் கிழக்கு மேற்காக 31' அடி நீளமும் பெற்று அழகாக அமைந்திருக்கிறது. கிழக்குப்பக்கமும் மேற்குப்பக்கமும் இரண்டிரண்டு அரைத்தூண்கள் சுவற்றுடன் அணைந்து ஆக மொத்தம் 10 தூண்கள் பெற்றமைகிறது.அதனைத் தொடர்ந்து முகமண்டபம் நடுவில் இரண்டு வரிசைகளில் வடக்கு தெற்காக இரண்டிரண்டு தூண்கள் பெற்றுத் தெற்கு வடக்காக 20' அடி அகலமும் கிழக்கு மேற்காக 22' அடி நீளமும் பெற்று அழகாக அமைந்திருக்கிறது. தெற்குப்பக்கமும் வடக்குப்பக்கமும் இரண்டிரண்டு தூண்கள் சுவற்றுடன் அணைந்து ஆக மொத்தம் 8 தூண்கள் பெற்றமைகிறது.அதனைத் தொடர்ந்து கருவறை விமானம் தெற்கு வடக்காக 25'3" அடி அகலமும் கிழக்கு மேற்காக 25'3" அடி நீளமும் பெற்று அழகான சதுரமாக அமைந்து மூன்று தளமாக கிரீவம், சிகரம், ஸ்தூபி பெற்று 45' உயரத்தில் விண்ணில் உறைகிறது.கோபுர வாயிலின் உள்ளே நுழைந்தவுடன் உள்ள உயரமான திறந்த அடைப்புச்சுவர்களற்ற மண்டபத்தின் இடப்புறமும், பெருமண்டபத்தின் தெற்குச்சுவரின் மையப்பகுதியிலும் உள்ள வழிகளின் வாயிலாகத் திருச்சுற்றுப் பகுதியை அடையலாம். இத்திருச்சுற்றுப்பகுதியின் தெற்கே 182' கிழக்கு மேற்காகவும் 28' தெற்கு வடக்காகவும் சுமார் 5096' சதுர அடி பரப்பளவில் ஒரு நந்தவனம் அமைந்துள்ளது. முகமண்டப வெளிச்சுவர் ஆரம்பிக்கும் அவ்விடத்தில் இடப்புறமாக நந்தவனத்தை அடைய ஒரு வழி அமைக்கப்பட்டுள்ளது. இத்திருச்சுற்றுப்பகுதியின் தென்மேற்குப் பாகத்தில் விநாயகர் கோவிலும், விநாயகர் கோவிலை அடையுமுன் இடப்பகுதியில் நந்தவன மதில்சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ள சப்தமாதர் சிலைகள் வடக்கு நோக்கிய நிலையிலும் உள்ளன. திருச்சுற்றின் மேற்குப்பகுதியில் முருகனின் ஆலயம் அமைந்துள்ளது. திருச்சுற்றின் வடமேற்குப்பகுதியிலும், வடக்குப்பகுதியிலும் சுமார் 6241' சதுர அடியில் "ட" வடிவத்தில் மற்றுமொரு நந்தவனம் அமைந்துள்ளது. இந்நந்தவனம் துர்க்கைக் கோட்டத்திற்கு நேராகப் பக்தர்கள் நிற்கும் வண்ணம் மதில்சுவர் வரை கூரை அமைத்துச் சுமார் 890' சதுர அடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. முக மண்டபச்சாலையின் வடமேற்கில் சண்டேஸ்வரருக்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. சண்டேஸ்வரரை வணங்கித் திருச்சுற்றில் கிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு மதில்சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் நெடியோன் சிற்பத்தைப் பார்த்துவிட்டு அம்மன் திருமுன்னை வலம் வந்து மீண்டும் உயரமான திறந்த அடைப்புச்சுவர்களற்ற மண்டபத்தினை அடைந்து கோபுரம் வழியே வெளியேற புள்ளமங்கை வளாகம் முழுமையுறுகிறது.(தொடரும்)…..

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.