http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > கலையும் ஆய்வும்
கட்டடக்கலை ஆய்வு - 2
ச. கமலக்கண்ணன்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முந்தைய இதழில் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்த 19 பேரில், 17 பேர் முறையே பாதபந்தம் மற்றும் பிரதிபந்தம் என்ற சரியான விடைகளை எழுதியிருந்தனர். அதில் 5 பேர் நார்த்தாமலை மற்றும் கொடும்பாளூர் என்று இடங்களின் பெயரையும் சரியாகக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்குக் கல்கி பாணியில் ஒரு 'பேஷ்'.

இந்த இதழில் பாதாதிகேசம் முறையில் மையப்பகுதியான சுவரைப் பற்றி எழுதலாம் என நினைத்திருந்தேன். ஆனால் தாங்குதளத்தைப் பற்றியே இன்னும் நிறைய விளக்க வேண்டியிருப்பதால், சுவர்ப்பகுதி அடுத்த இதழில் இடம்பெறும். அந்தக் கணக்கும் சுவரைப் பற்றியது என்பதால், அதுவும் அடுத்த இதழில்.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள். தரையிலிருந்து உபானம் ஆரம்பமாகிறது. அதற்கு மேல் ஜகதி, உருள்குமுதம், கம்புகளுடன் கூடிய கண்டம், பட்டிகை மற்றும் தூண் எனப் பாதபந்தத் தாங்குதளத்தைக் கொண்டு அமைந்துள்ளது.

பாதபந்த அதிஷ்டானம்


இது எந்த ஊர்க் கோயிலாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? விடை கடைசியில் தரப்பட்டுள்ளது.

கருவறை மற்றும் மண்டபங்களுக்குத்தான் தாங்குதளம் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பீடங்களுக்கும் வரும். சில சமயம் மண்டபங்களுக்கே வராமலும் கூட இருக்கும். படத்தில் காட்டியுள்ளவை சில உதாரணங்கள்.

அதிஷ்டானம் இல்லை


அதிஷ்டானம் இல்லாத மண்டபம்

பீடம்


அதிஷ்டானத்துடன் கூடிய பீடம்

நந்தி மண்டபம்


அதிஷ்டானத்துடன் கூடிய நந்தி மண்டபம்

சரி. எதற்காக இந்த தாங்குதளங்கள்? அழகுக்காகவா? கட்டடத்தைத் தாங்குவதற்காகவா? அல்லது வேறு எதையாவது உணர்த்துவதற்காகவா?

அனைத்துக்கும்தான்.

சதுரத்திலும் வட்டத்திலும் எண்பட்டையிலும் என்ன அழகு இருக்கிறது?

இந்தக் கேள்விக்கு விடையைத் தெரிந்து கொள்ளுமுன், ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இக்கற்றளிகள் எல்லாமே இதற்கு முன் மரம் மற்றும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கோயில்களின் வடிவை ஒட்டியே அமைக்கப்பட்டவை.

இப்படி யோசித்துப் பாருங்கள்!! மக்கள் கருவறைக்கு வெளியில் நின்று வழிபடுவார்கள். அப்போது கருவறை சற்று உயரமாக இருந்தால்தானே உள்ளே இருக்கும் இறைவனை அனைவராலும் காணமுடியும்? ஆக, கட்டடம் நிலமட்டத்திலிருந்து சற்று உயரே அமைந்திருக்க வேண்டும். முதன்முதலில் இவ்வாறு உயர்த்திக் கட்ட முடிவு செய்தபோது, ஒரு மேடை போல அமைத்து, அதன் மீது கருவறையை அமைத்திருப்பார்கள். காலப்போக்கில் எல்லாக் கோயில்களிலும் ஒரே மாதிரியான வெறுமையான மேடையைப் பார்த்துப் பார்த்து அலுப்புத் தட்டுகிறது என்பதால், சிறிது சிறிதாக மாற்றங்கள் செய்யப்பட்டு, கற்றளிகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இந்த வடிவத்தில் இருந்திருக்கும். அதை அப்படியே கல்லில் வடித்து விட்டனர்.

அப்படியானால் அவற்றுக்கு ஜகதி, குமுதம் போன்ற பெயர்கள் எப்படி வந்தன?

இதைத்தான் ஆகம விதிகள் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் வெறுமையான மேடை அழகான ஒரு தாங்குதளமாக மாறும்போது, மற்ற கோயில்களிலும் அதைப் பின்பற்ற நேரிடுகிறது. ஒரே வடிவத்தை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உருவாக்கும்போது, தரப்படுத்துதல் (standardization) தேவைப்படுகிறது. இந்தத் தரப்படுத்தலின் போது, ஒவ்வொரு பாகத்துக்கும் பெயர் சூட்ட வேண்டியிருக்கிறது. அவ்வாறு வந்தவைதான் ஒவ்வோர் உறுப்புக்கும் உள்ள பெயர்கள். பல்லவர்களின் இறுதிக் காலத்தில்தான் இந்த ஆகம விதிகள் முழுமை பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. அப்போது சமஸ்கிருதம் பரவலாக உபயோகத்தில் இருந்ததால், அம்மொழியிலேயே பெயர்கள் அனைத்தும் சூட்டப்பட்டன. அவை காரணப்பெயர்களா இடுகுறிப்பெயர்களா என சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்தான் கூறவேண்டும்.

காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலுள்ள தேவகுளிகை ஒன்றின் பாதபந்தத் தாங்குதளத்தைப் பாருங்கள். எவ்வளவு திருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது!!

கைலாசநாதர் ஆலயத் தாங்குதளம்


பல்லவர்களின் தொடக்க காலத்தில் இந்த ஆகம விதிகள் முழுமை பெறாமையால், கட்டுப்பாடுகள் ஏதுமின்றிச் சிற்பிகள் அவரவர் கற்பனாசக்திக்கேற்ப எழில் கொஞ்சும் சிற்பங்களைச் செதுக்கிக் குவித்தனர். பின்னர் வந்த சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் இந்த ஆகம விதிகளைப் பின்பற்றியே அமைக்க வேண்டியிருந்ததால், சிற்பிகளின் கற்பனைக் குதிரைகளுக்கு மரபு என்னும் கடிவாளம் போட்டது போல் ஆகிவிட்டது. ஆனாலும் இந்தச் சோழ தேசத்துச் சிற்பிகளின் கற்பனைக் குதிரைகள் இருக்கின்றனவே, அவை கண்களை மூடியிருக்கும் கவசத்தையும் மீறிப் பார்க்கக்கூடிய X-Ray கண்கள் படைத்தவை என்பதற்கு, புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலிலிருக்கும் கண்டபாதத்திலுள்ள உள்ளங்கையகல இராமாயணச் சிற்பங்களே சான்று. துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சுமெத்தை என்பது போலச் சோழச் சிற்பிகளுக்கு மரபுவிதிகளே உளிகளாம்.

மாமல்லபுரம் அருகிலிருக்கும் இராஜசிம்மர் காலத்துக் கோயிலான வாயலூரிலுள்ள மண்டபத்தின் உபபீடத்தைப் பாருங்கள். பெண்கள் கோலாட்டம் ஆடுவது மிக அருமையாகக் காட்டப்பட்டுள்ளது.

வாயலூர்


வாயலூரிலுள்ள மண்டபம்

கோலாட்டம்


கோலாகலக் கோலாட்டக் காட்சி

ஆமாம்!! இதை ஏன் தாங்குதளம் என்று சொல்லாமல் உபபீடம் என்று அழைக்கிறோம்?

சென்ற இதழில் கூறியிருந்தபடி, ஜகதி, குமுதம், கண்டம் மற்றும் பட்டிகை அல்லது ஜகதி, குமுதம், பிரதிவரி எனத் திட்டமான அனைத்து உறுப்புகளும் இருந்தால்தான் அது தாங்குதளம். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் அது உபபீடம்.

இதைப்போலவே கீழுறுப்பான ஜகதியில் அந்நாளைய மக்களின் வாழ்க்கைமுறை பூதவரியின் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றாய்வுக்குத் துணைபுரியும் முக்கியச் சான்றாகும். அதுமட்டுமின்றி, அந்நாளில் வழக்கத்திலிருந்த இசைக்கருவிகளைப் பற்றியும் இந்தப் பூதகணங்களால் அறியமுடிகிறது. வியக்கத்தக்க ஒரு விஷயம் என்னவெனில், இந்தப் பூதவரி கூரை உறுப்பான வலபியில் மட்டுமே காணப்படும். விதிவிலக்குகளாக வெகுசில கோயில்களே இருக்கின்றன. உதாரணமாக உத்திரமேரூரிலுள்ள சுந்தரவரதப் பெருமாள் கோயிலின் உபபீடத்தில் பூதகணங்கள் காட்டப்பட்டுள்ளன. வரிசையாக பூதங்கள் காட்டப்பட்டிருந்தால் அது பூதவரி. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்டப்பட்டிருந்தால் அவை பூதகணங்கள்.

ஒரு தாங்குதளத்திற்கு நான்கு உறுப்புகள் அவசியம் இருந்தாக வேண்டும் என்ற மரபை மீறாமலேயே அந்த நான்கு உறுப்புகளுக்குள் சிற்பங்களைப் புகுத்தியிருக்கிறார்கள்!! அதையும் எவ்வளவு கலை நுணுக்கத்துடன் வடித்திருக்கிறார்கள்!! வாழ்க்கைமுறைகளை விளக்குவதற்காக எந்த உறுப்பிலும் சிற்பங்களை வடிக்கச் சிற்பிகள் தயங்கியதே இல்லை.

புள்ளமங்கையிலுள்ள 19 cm X 17 cm அளவுள்ள இந்தச் சிற்பத்தைப் பாருங்கள்.

வாலிவதம்


ஒரு தலைவனின் மரணம்

வீரம் வீழ்ந்து கிடக்கிறது

அழுகைக்கு ஆயிரம் முகங்கள்

வரலாறு விசும்புகிறது

இவையெல்லாம் என்ன தெரியுமா? லால்குடியிலுள்ள ஒரு பெண்கள் பள்ளியின் வைரவிழா மலருக்காக டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் எழுதிய வரலாற்றின் தேவை என்ற கட்டுரையில் பிரசுரமாகியிருந்த மேற்கண்ட படத்தைப் பார்த்து அப்பள்ளி மாணவிகள் உதிர்த்த வார்த்தைகள். வாலி நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டு வரலாறே அழுதது என்ற பொருளில் 'வரலாறு விசும்புகிறது' என்று அழைக்க அந்தப் பிஞ்சு உள்ளத்துக்குத் தோன்ற வைத்த வலிமை இந்தச் சிற்பத்துக்கு உண்டு. கணிணியின் பெரிய திரையில் இப்படத்தை சில வினாடிகள் உற்றுப் பாருங்கள்! எவ்வளவு சிறிய சிற்பத்துக்குள் எத்தனை உருவங்கள்! ஒவ்வொன்றின் முகத்திலும் எத்தகைய உணர்ச்சிகள்! இன்றைய நாகரிக உலகில் மனிதனுக்கு வேண்டிய மிக அத்தியாவசிய குணங்களான Creativity எனப்படும் கற்பனைத் திறனையும் individuality எனப்படும் தனித்துவத்தையும் வளர்த்துக்கொள்ள உதவும் வரலாற்றை இறந்தவர்களைப் பற்றிப் படிக்கும் பாடம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

முதல் படத்திலுள்ள கட்டடம், அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்திலுள்ள Jersey City நகரில் Washington Blvd மற்றும் York St ஆகியவை சந்திக்கும் இடத்திலுள்ள ஒரு தபால் நிலையம். அமெரிக்காவிலுள்ள ஒரு கட்டடத்தில் சோழர்காலப் பாணி எப்படி வந்தது என நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது, இது ஏன் செவ்விந்திய சோழனால் கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது என்று ஒரே போடாகப் போட்டார் ஒரு நண்பர்!!!

(தொடரும்)

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.