http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 146
இதழ் 146 [ மே 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
வரலாறு படும் பாடு! அன்புள்ள வாருணி, நலந்தானே. 1. 5. 2019 தினமணி படித்து இதழின் தலையங்கப் பக்கத்தில், 'அவசியமில்லை, அறநிலையத்துறை!' எனும் தலைப்பில் திரு. டி. எஸ். தியாகராசன் எழுதியுள்ள கட்டுரையில் தரப்பட்டுள்ள வரலாற்றுச் செய்திகள் குறித்துக் கேட்டிருந்தாய். நீ கருதியவாறே பல தரவுகள் பிழையாக உள்ளன. நானே உனக்கு எழுதவேண்டும் எனக் கருதியிருந்தபோது உன் மடல் வந்தது. 29. 4. 2019 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நான்காம் பக்கத்தில் தஞ்சாவூர்க் கோயிலின் கல்வெட்டுகள் இந்தி மொழிக்கு மாற்றப்படுவதாகப் பரவிய செய்தியை மறுத்து நம் இனிய நண்பர் முனைவர் சு. இராசவேல் அளித்திருந்த நேர்முகம் வெளியாகியிருந்தது. அதிலிருந்த ஒரு செய்தி குறித்தே உனக்கு எழுத நினைத்திருந்தேன். அதற்குள் தினமணி கட்டுரை உன் வழி என் கண்முன். முதலில் தினமணி பார்ப்போம். 1. 'கோச்செங்கணான் சோழன் செங்கற் கோயில்களைக் கற்கோயில்களாக மாற்றி மகிழ்ந்ததாக' அக்கட்டுரையில் திரு. டி. எஸ். தியாகராசன் எழுதியுள்ளமை சரியன்று. கட்டுரையாளரே இவ்வரிக்கு மேலுள்ள வரியில், 'செங்கற்களால் கட்டப்பட்டு வந்த கோயில்கள் பல்லவ மன்னர்கள் காலத்தில் கற்கோயில்களாக வளர்ச்சி பெற்றன' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பல்லவர் ஆட்சியை நிலைப்படுத்திய சிம்மவிஷ்ணுவுக்குக் காலத்தால் முற்பட்டவர் கோச்செங்கணான். மாடக்கோயில்களை எழுப்பிப் புகழ்பெற்றவர். அவரை சம்பந்தர், சுந்தரர், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர். கோச்செங்கணான் எழுப்பிய அனைத்துக் கோயில்களும் செங்கல் கட்டுமானங்கள். (டாக்டர் மா. இராசமாணிக்கனார், பெரியபுராண ஆராய்ச்சி, பக். 79-86, கோ. வேணி தேவி, இரா. கலைக்கோவன், மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள், பக். 15-31) 2. 'ராஜகோபுரங்களை விஜயநகரப் பேரரசின் காலத்தில் எழுப்பினார்கள்' என்ற கட்டுரையாசிரியன் சுட்டலும் சரியன்று. பிற்சோழர் காலத்திலிருந்தே பேரளவிலான கோபுரங்கள் உருவாகியுள்ளன. பிற்பாண்டியர் காலக் கோபுரங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலிலும் கல்வெட்டுச் சான்றுகளுடன் இன்றும் எழுச்சியோடு திகழ்கின்றன. விஜயநகர அரசர்கள் இவர்களைப் பின்பற்றினார்கள் என்பதே சரி. 3. இராஜராஜன் பெருவுடையார் கோயிலில் விளக்கு வைக்கத் திட்டம் வகுத்ததாகக் கூறும் கட்டுரையாசிரியர், கால்நடைகளின் விலை குறிப்பிட்டு, 'ஆடோ, மாடோ மன்னனிடம் பெற்ற உழவன் தினம் ஒரு உழக்கு நெய்யை கோயில் விளக்கெரிக்கத் தரவேண்டும் என்பது நிபந்தனை' என்று எழுதியுள்ளார். இச்செய்தியைக் கட்டுரையாளர் எந்தக் கல்வெட்டின் வழிப் பெற்றார் என்பது தெரியவில்லை. தெரிந்துகொள்ள விழைந்து தினமணிக்கு எழுதியுள்ளேன். கோயில்களுக்குக் கொடையாகத் தரப்பட்ட கால்நடைகளைப் பெற்று அவற்றைப் பராமரித்துக் கோயில்களில் விளக்கேற்ற எண்ணெய், நெய் தந்தவர்கள் ஆயர் (இடையர்) பெருமக்கள். கல்வெட்டுகள் அவர்களைத் தேவரிடைச் சான்றோம் என்று பெருமைப் படுத்துகின்றன. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் கோயிலின் எந்தக் கல்வெட்டிலும் உழவர்களுக்கு இராஜராஜன் கால்நடைகளைக் காசுக்கு விற்றதாகவோ, உழவர்கள் அவற்றைக் கொண்டு நெய் தந்து விளக்கேற்றியதாகவோ செய்தியில்லை. 4. 'தஞ்சாவூர்க் கோயிலில் ஓதுவார்கள், நடனக்கலைஞர்கள் என 49 பேர் இருந்தனர்' என்கிறார் கட்டுரையாசிரியர். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்தவர்கள் பிடாரர்கள் என்றழைக்கப்பட்டனர். அவர்களின் எண்ணிக்கை 48. 49அன்று. கோயிலில் பணியாற்றிய தளிச்சேரிப் பெண்டுகள் 400 பேர். அவர்கள் சோழ மண்டலத்தின் பல ஊர்களிலிருந்து முதலாம் இராஜராஜர் காலத்தே தஞ்சாவூருக்கு வரவழைக்கப்பட்டவர்கள். (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2, எண்கள் 65, 66; மு. நளினி, இரா.கலைக்கோவன், தளிச்சேரிக் கல்வெட்டு, பக். 13-79.) 5. தஞ்சைக் கோயிலின் உற்சவமூர்த்திகளை அலங்கரிக்கச் சோழர் காலத்தில் பயன்படுத்திய பொன், முத்து, வைரம், பவழம், மாணிக்கம் ஆகியவற்றாலான நகைகளைப் பட்டியலிடும் கட்டுரையாளர், அவற்றின் அன்றைய மதிப்பை 17, 473 காசு என்கிறார். இந்தக் கணக்கை அவர் எந்தக் கல்வெட்டின் வழிப் பெற்றார் என்பதும் தெரியவில்லை. வைரம், முத்து, மாணிக்கம், பவழம் என்பன கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளதே தவிர, அவற்றின் விலை இராஜராஜீசுவரம் கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை. நானறிந்தவரையில் பிற சோழர் காலக் கல்வெட்டுகளிலும் அவற்றின் விலைத்தரவுகள் இல்லை. கட்டுரையாளர் எங்கிருந்து அவற்றின் அக்கால விலை மதிப்புகளைப் பெற்றார் என்பதறிய தினமணிக்கு எழுதியுள்ளேன். திரு. தியாகராசன் தகவலளிப்பின் சோழர் காலப் பொருளாதாரம் பற்றிய பல புதிய பரிமாணங்களை அறியலாம். 6. திருவீழிமிழலை விமானம் சோழர் காலத்தே பொற்றகடுகளால் போர்த்தப்பட்டது உண்மை. ஆனால், அதைச் செய்ததாகக் கட்டுரையாளர் குறிக்கும் பல்லவன் பட்டாலி நங்கை இராஜராஜசோழனின் அணுக்கி அன்று. அப்பெருமாட்டி முதலாம் இராஜாதிராஜரின் அணுக்கியாவார். (ஆ. பத்மாவதி, திருவீழிமிழலைக் கல்வெட்டுகள், தொடர் எண். 509/1977; இரா. கலைக்கோவன், வாருணிக்கு எழுதிய வரலாற்று மடல்கள், பக். 83-87) 7. 'கி. பி. 1218இல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சைநகரை அழித்ததாகக் கூறும் கட்டுரையாளர் தியாகராசன், கி. பி. 1311இல் மாலிக்கஃபூர் கண்டியூரில் 15 நாட்கள் தங்கி ஒரு லட்சம் வீரர்கள் கொண்டு தஞ்சாவூர் நகரை நிர்மூலமாக்கியதாகக் குறிக்கிறார். 1218இல் பாண்டியரால் அழிக்கப்பட்ட தஞ்சாவூரை இந்த இடைப்பட்ட 93 ஆண்டுகளில் மீட்டுருவாக்கம் செய்த அரசர் யார்? மூன்றாம் இராஜராஜர், மூன்றாம் இராஜேந்திரர், சுந்தரபாண்டியரை அடுத்து வந்த பாண்டிய அரசர்கள், ஒய்சளர்கள் என யாரும் தஞ்சாவூர் நகரில் ஆட்சிசெய்யவில்லை. பாண்டியரால் அழிக்கப்பட்ட தஞ்சாவூரை மீண்டும் பெருநகராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமைக்கும் சான்றுகளில்லை. இந்த இடைப்பட்ட 93 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த போர்க்களங்கள் பல. இந்நிலையில், ஏற்கனவே பாண்டியர் அழித்த தஞ்சாவூரில் மாலிக்கஃபூர் நிர்மூலமாக்க என்ன இருந்ததென்பது கேள்விக்குறியே. எல்லாவற்றையும்விட முக்கியமானது இவ்விரு படையெடுப்பு களிலும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரமோ, கண்டியூர் வீரட்டானேசுவரமோ அருகிலுள்ள பழனம், சோற்றுத்துறை, பூந்துருத்தி முதலான சோழர் காலக் கோயில்களோ சேதமுறவில்லை என்பது. 8. 'இறையுணர்வோ, சமயப்பற்றோ இல்லாத நம் தலைமுறையினர் நிர்வகிக்க முற்படுவதால் தான் இத்தகைய அவலங்கள் எழுகின்றன' என்று கோயில்களில் நிகழும் முறைகேடுகள் குறித்துக் கட்டுரையாளர் கூறியிருப்பதும் சரியன்று. கோயில்களில் முறைகேடு என்பது காலங்காலமாக நிகழ்ந்துவரும் ஒன்று. கோயில்கள் பெருகியதாகக் கருதப்படும் முற்சோழர் காலத்திலிருந்தே சபைகளை நிருவகித்தவர்களாலும் கோயில் நிருவாகத்தாலும் அங்குப் பூசை செய்தவர்களாலும் கோயில் சார்ந்த சொத்துக்களில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்த்தப் பட்டமை கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும். முதல் இராஜராஜர் காலத்தில் கோயில் சொத்துக்கள் சார்ந்து நிகழ்ந்த ஊழல்களை அரசு உயர்அலுவலர்கள் ஆய்ந்து கண்டறிந்து உடனுக்குடன் தண்டனைகள் வழங்கியமை கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. (இரா. கலைக்கோவன், எழில்கொஞ்சும் எறும்பியூர், பக். 158-184; மு. நளினி, இரா. கலைக்கோவன், கற்குடியும் தவத்தறையும், பக். 151-152 ; மு. நளினி, இரா. கலைக்கோவன், எறும்பியூரும் துடையூரும், ப. 77 ) கோயில் சார்ந்த அவலங்கள் தொடர் நிகழ்வுகள் என்பதைத் திருப்புத்தூர்த் திருத்தளிநாதர், திருவரங்கம் அரங்கநாதர் கோயில்களின் பிற்பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மெய்ப்பிக்கும். மனிதர்கள் இயங்கும் இடங்களில் முறைகேடுகள் இல்லாமல் இரா. இறையுணர்வும் சமயப்பற்றும் உள்ளவர்களாகக் கட்டுரையாளர் கருதும் முந்து தலைமுறையினரும் நூற்றாண்டுக் காலமாகக் கோயிற் சார்ந்த முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தமை கல்வெட்டுகளால் வெளிப்படும்போது குற்றத்திற்கும் இறை, சமயப் பற்றுக்கும் தொடர்பின்மை தானே புலப்படும். கட்டுரையாளர் திரு. தியாகராசன் குறிப்பது போல் இன்றைக்குக் கோயில்களை நிருவகிக்கும் நம் தலைமுறையினர் இறையுணர்வோ, சமயப்பற்றோ அற்றவர்கள் என்பது நியாயமன்று. முறைகேடுகள் அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்பதும் சரியன்று. வரலாற்றுக் களங்களாக விளங்கும் பத்திமைச் செல்வங்களான கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் ஒழுங்குறப் பதிவுசெய்து நிருவாகத்தைச் சீரமைத்து முறைகேடுகள் நிகழாமல் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, 'அவசியமில்லை அறநிலையத்துறை' எனும் அவரது முழக்கம் பயன்தராது. இனி, தஞ்சாவூர்த் தமிழ்க் கல்வெட்டுகள் இந்தியில் மாற்றப்பட்டதாகப் பரவிய செய்தியும் அது குறித்த நண்பர் சு. இராசவேலின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்முகமும் காண்போம். இது குறித்து ஏற்கனவே தினமணியில் என் கருத்து வெளியானது. இராசவேலும் தினமணியில் கருத்துப் பதிவுசெய்துள்ளார். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் செய்தி குறிக்குமாறு போலத் தமிழ் பிராமி எழுத்துக்களில் அன்று. அக்கல்வெட்டுகள் அனைத்தும் நன்னிலையில் யாரும் படிக்குமாறு உள்ளன. அவற்றைப் பிற மொழிக்கு மாற்றும் முயற்சிகள் ஏதும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. செய்தியில் இணைக்கப்பெற்ற படங்களில் தெரிந்த கல்வெட்டுகள் தஞ்சாவூரை ஆண்ட மராத்தியர் காலத்தவை. அவை மோடி, நாகரி எழுத்துக்களில் பொறிக்கப் பெற்ற மராத்தி மொழிக் கல்வெட்டுகள். இரண்டாம் சரபோஜி காலத்தில் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றைச் சுட்டும் கல்வெட்டுகளும் மராத்திய அரசர்களின் மரபுவழி கூறும் கல்வெட்டுகளும் அக்கோயிலில் சரபோஜி காலத்தில் பதிவுசெய்யப்பட்டன. அண்மைக் காலத்தே இராஜராஜீசுவரத்தில் மேற்கொள்ளப்பட்ட புதுக்குப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டுத் துண்டுகளே படத்தில் இடப்பெற்றுள்ளன. இச்செய்தி குறித்து எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்கு அளித்த நேர்முகத்தில் திரு. சு. இராசவேல் தெரிவித்ததாக வெளியாகியிருந்த ஒரு தகவல் என்னை வியப்பிலாழ்த்தியது. கோயிலின் தெற்கு, மேற்குச் சுற்றுச் சுவர்களிலுள்ள கல்வெட்டுகள், சோழர் படைத்தலைவர் கிருஷ்ணன் இராமன் இலங்கைப் படைவீரர்களைக் கொண்டு அவற்றை எழுப்பியதாகத் தெரிவிப்பதாகவும் புதுக்குப் பணியின்போது கிடைத்த தமிழ்க் கல்வெட்டுகள், இக்கோயிலில் பணியாற்றிய இலங்கைப் படைவீரர்களுள் சிலர் கோயில்பணிக்குக் கருங்கல்துண்டுகளை வழங்கி அவற்றில் தமக்களிக்கப்பட்ட பெருந்தரம், சிறுதரம் எனும் பட்டங்களைப் பொறித்துள்ளதாகவும் திரு. இராசவேல் கூறியிருப்பதாகச் செய்தியில் பார்த்தேன். உடன் அது பற்றி அறிய விரும்பி நண்பர் இராசவேலைத் தொடர்பு கொண்டேன். 'இலங்கைப் படைவீரர்களைக் கொண்டு இராஜராஜீசுவரத் திருச்சுற்றுச் சுவர்கள் கட்டப் பட்டதாகத் தாம் கூறவில்லை' என்று உறுதியளித்த நண்பர், எக்ஸ்பிரஸ் செய்தியாளர் தஞ்சாவூரில் வழங்கும் செவி வழிச் செய்தியைத் தம் நேர்முகத்துடன் இணைத்துப் பதிவுசெய்துவிட்டதாக வருந்தினார். தவறான அந்தத் தகவல் வரலாறாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தால் சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அலுவலகத்தோடு தொடர்புகொண்டு செய்தியிலுள்ள பிழை, இராசவேலின் மறுப்பு இரண்டு குறித்தும் தெரிவித்தேன். வரலாற்றில் ஏற்கனவே இருக்கும் குழப்பங்கள் போதாவென்று நாளும் பொழுதுமாய்ப் புதுப்புது புனைந்துரைகள், கற்பனைகள், அவரவர் விருப்பம் போலான மொழிவுகள் காற்றிலும் எழுத்திலும் பரவி வருகின்றன. கேட்பாரும் படிப்பாரும் காண்பாரும் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், எத்தன்மைத்தாயினும் எச்சரிக்கையுடன் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பார்களானால் மட்டுமே வரலாறு பிழைக்கும். சரிதானே வாருணி. அன்புடன், இரா. கலைக்கோவன் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |