http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 146
இதழ் 146 [ மே 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
சிராப்பள்ளி வளனார் கல்லூரி வரலாற்றுத்துறைக் கருத்தரங்கில்தான் புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் க. ப. அறவாணனை முதன்முறையாகச் சந்தித்தேன். இயேசுசபையினரின் காகிதக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பேசிய அறவாணன், மதுரை நாயக்கர், மைசூர்க்காரர்கள் இடையில் நிகழ்ந்த மூக்கறுப்புப் போர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். பொழிவு முடிந்ததும் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் அருமைராஜன் மூக்கறுப்புப் போர் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பினார். அவரும் இயேசு சபைக் குறிப்புகளைக் கொண்டு ஆய்வு செய்தவர் என்பதால் இருவர் விவாதங்களும் சுவையாக அமைந்தன. மூக்கை அறுத்த பிறகு உயிரோடு வாழமுடியாது என்று ஒருவரும் முடியும் என்று மற்றொருவரும் வாதிட்டனர். அப்போது கூட்டத்திலிருந்த நான் இடையிட்டேன். மூக்கின் அமைப்பு விளக்கி, அதன் முன்பகுதி மட்டுமே அறுக்க முடியும் எனச் சுட்டி, அப்பகுதி அறுக்கப்படுவதால் உயிரிழப்பு நேராது என்பதைப் புரியவைத்து அமர்ந்தேன். என் விளக்கம் ஏற்கப்பட்டு விவாதம் முடிவுக்கு வரப் பேராசிரியர் அறவாணன் நண்பரானார்.
அவருடன் உரையாடியபோது என் ஆய்வுகள் பற்றிக் கேட்டறிந்தார். பரவலான அவர் படிப்பு என்னை வியக்கவைத்தது. அவர் எழுதிய நூல்களை அளித்தார். அவரது அன்பான அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. நான் சென்னைப் பல்கலைக்கழகம் சார்ந்து இலக்கிய இளவல் பட்டப்படிப்புப் படிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தவர் கல்வி தொடர்பாக எது வேண்டுமாயினும் கேட்குமாறு அன்புடன் கூறினார். நண்பர் அப்துல் மஜீதும் இளவல் அரசும் ஏற்கனவே அவரைப் பற்றிய அறிமுகத்தை அளித்திருந்தமை அவருடன் நட்பாகத் துணையானது. அதற்குப் பிறகு சிராப்பள்ளி வந்த போதெல்லாம் சந்தித்தார். அவரது இலக்கிய ஆளுமையும் என் வரலாற்றுத் தேடல்களும் அச்சந்திப்புகளின்போது பகிர்ந்து கொள்ளப்படும். பழந்தமிழர் எழுச்சி குறித்த அவரது கண்ணோட்டமும் அவர்கள் பிறமொழி, பிற பண்பாட்டு அடிமைகளாக மாறியதற்கான அரசியல், வரலாற்றுக் காரணங்களை ஆய்ந்து, வகைப்படுத்தி அவற்றினின்று விடுபடும் வழிகளை முன்னிருத்தும் பாங்கும் பரவலாக அவரது உரைகளில் வெளிப்படும். இலக்கியங்களில் இருந்து தெரிந்தெடுத்த நுணுக்கமான வரலாற்றுத் தரவுகளைப் பலமுறை அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். புதியவர்களை, இளைஞர்களை ஊக்குவிப்பதில் அறவாணன் இணையற்றவர். அவருடைய அன்பான தழுவலில் எழுச்சி பெற்ற பல இளம் ஆய்வாளர்களைப் பின்னாளில் சந்தித்திருக்கிறேன். என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையிலும் இலக்கியமும் வரலாறும் எங்களை ஒன்றிணைத்தன. தமக்கு நம்பிக்கையூட்டும் தகுதியுடைய இளையோருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கி, அவர்தம் திறனறிந்து வளரச் செய்வதில் அறவாணனுக்கு இணையானவர்களாக மிகச் சிலரையே நான் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். கல்வித்துறையின் பல வாயில்களில் நான் நுழையுமாறு செய்தவர் அவர். 1988இல் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத் தேர்வாணையரிடமிருந்து வந்த மடல் அத்தகு வாயில்களுள் ஒன்றின் முதல் கதவைத் திறந்தது. அப்பல்கலையின் தமிழ்த்துறை முதுநிறைஞர் பட்டப் படிப் பில், 'தென்கிழக்கு ஆசியாவிற்குத் தமிழ்ப் பண்பாட்டின் பங்களிப்பு' என்ற தலைப்பில் அமைந்திருந்த பாடத்திற்குக் கேள்வித்தாள் தயாரித்து அனுப்புமாறு தேர்வாணையர் கேட்டிருந்தார். அவர் அனுப்பியிருந்த பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் தேடிப் படித்து வினாத்தாள் தயாரித்து அனுப்பினேன். அவ்வாய்ப்பின் வழித் தென்கிழக்கு ஆசியத் தமிழ்ப் பண்பாடு பற்றி பலவும் அறிய முடிந்தது. போரோபுதூர், பெரம்பனான் முதலிய கோயில் தொகுதிகளைப் பற்றி விரிவாகப் படித்தறிந்தேன். 1978இல் தாய்லாந்து சென்றிருந்த அனுபவமும் கேள்வித்தாள் தயாரிப்பில் உதவியது. கேள்வித்தாள் ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தப் புதுச்சேரி சென்றேன். இரட்டை மதிப்பீடு முறை வழக்கில் இருந்ததால் நானும் துறைசார்ந்த பேராசிரியரும் திருத்தினோம். 18 மாணவர்கள் எழுதியிருந்தபோதும் என் திருத்தலில் எண்மரே தேர்ச்சி பெற்றனர். ஆனால், துறைத் தேர்வாளர் அனைவருக்கும் தேர்ச்சி அளித்திருந்தமையால் இரு மதிப்பீடுகளுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாகக் கருதிய தேர்வாணையர், மூன்றாம் மதிப்பீட்டிற்கு வழிகோலினார். அந்த அனுபவம் பல்கலைசார் கல்விச்சூழல்களை விளங்கிக் கொள்ள உதவியதுடன், பின்னாளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினனானபோது மாணவர் அறிதிறனுக் கேற்பப் பாடங்களைத் திட்டமிடத் துணைநின்றது. இந்திய மருத்துவ மன்றச் சிராப்பள்ளிக் கிளையின் கலைப் பிரிவு ஆண்டுதோறும் நிகழ்த்திய பொங்கல்விழாக்களில் வரலாற்று நாடகங்களை அரங்கேற்றிய காலமது. அவை குறித்தும் அவற்றில் என் பங்களிப்புக் குறித்தும் திரு. அறவாணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகப்பள்ளி தொடங்கவிருப்பதாகக் கூறியவர், அது தமிழ்த்துறையுடன் இணைந்து அமையவிருப்பதாகவும் தெரிவித்தார். அப்பள்ளிக்கான கல்வித்திட்டங்களை முறைப்படுத்தும் குழுவில் என்னை அவர் இணைக்கப்போகிறார் என்பதை அப்போது நான் உணரவில்லை. பல்கலைத் துணைவேந்தர் முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் அக்குழுவின் முதற்கூட்டம் அறிவிக்கப்பட்டபோதுதான் எனக்கும் அதில் அவர் பங்களித்திருப்பதை அறிந்தேன். பள்ளிப் பருவத்திலிருந்தே நாடகங்களில் ஆர்வமும் அனுபவமும் கொண்டு அரங்கக்கலை பழகியிருந்தமையாலும் பல்கலை சார்ந்த நடைமுறைகளில் அறவாணன் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையிருந்தமையாலும் அப்பொறுப்பை ஏற்றேன். நாடகத்துறை வல்லுநர்களான பேராசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, இராமாநுஜம், கூத்துப் பட்டறை திரு. ந. முத்துசாமி ஆகியோருடன் இணைய இருந்து நாடகப்பள்ளிக்கான கல்வித் திட்டத்தை உருவாக்க, நான் பயின்றிருந்த ஆடற்கலை நூல்களும் நாட்டியசாத்திரமும் பெருந்துணையாக அமைந்தன. அக்குழுவில் வேறு யாரும் ஆடற்கரணங்களில் என் அளவிற்கு அனுபவம் பெற்றிராமையின் அக்குழுவின் விருப்பத்திற்குரிய உறுப்பினனாக முடிந்தது. பேராசிரியர் அறவாணன் அளித்த அந்த வாய்ப்புப் பல்துறை அறிஞரான இந்திரா பார்த்தசாரதியுடன் நெருக்கமாகவும் பல கற்கவும் வழிவகுத்ததுடன், கூத்துக்கலையின் நுணுக்கங்களை முத்துசாமியிடமிருந்து அறியவும் காரணமானது. கல்வித்திட்டக் குழுவில் என் செயல்முறை தந்த நிறைவின் காரணமாக நாடகப்பள்ளியின் பாடத்திட்டக் குழுவிலும் மூன்றாண்டுகள் உறுப்பினராகத் தொடரமுடிந்தது. அம்மூன்றாண்டுகளில் நான் அறிந்துகொண்ட பன்மொழிசார் நாடகக்கலை நூல்களுக்குக் கணக்கில்லை. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் ஆர்வம் ஏற்படவும் அதை நாட்டியசாத்திரத்துடன் ஒப்பிட்டு ஆராயவும் நாடகப்பள்ளிப் பொறுப்பே முதற்காரணமானது. அறவாணனைச் சந்திக்கும்போதெல்லாம் நான் அறியநேர்ந்த புதியன குறித்தும் என் ஆய்வின் வழி வெளிப்பட்ட தரவுகள் பற்றியும் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்வேன். அதே ஆர்வத்துடன் அவற்றைக் கேட்டு, அவை தொடர்பான பிற செய்திகள் இருப்பின் தெரிவிப்பதோடு, தொடர்ந்து செயற்படுமாறு ஊக்கப்படுத்துவார். தனி மனிதனாக இயங்கிக் கொண்டிருந்த என்னை நிறுவனமாக்கியவர் அவர்தான். 'ஓர் அமைப்பை உருவாக்கி அதை முன்னிருத்தி உங்கள் ஆய்வுப்பணிகளை முறைப்படுத்துவது எதிர்காலத்தில் பயன்தரும்' என்ற அவரது வழிகாட்டலின் அடிப்படையில் தோன்றியதுதான் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். ஆய்வுமையச் செயல்முறைகள், சட்டதிட்டங்கள் குறித்துப் பலமுறை கலந்துரையாடியுள்ளோம். நிறுவனங்கள் தொடர்பான அவர் அனுபவங்கள் பெருந்துணையாயின. ஆனந்தரங்கரை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரது நாட்குறிப்போடு நான் பழக வழியமைத்தவரும் பேராசிரியர் அறவாணன்தான். ஆனந்தரங்கர் கருத்தரங்குகளில் 1990 முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினேன். அவ்வாய்ப்புகளால் பல நன்மைகளைப் பெற்றேன். அவற்றுள் தலையாயது புதுச்சேரியையும் விழுப்புரம் மாவட்டத்தையும் சுற்றி அமைந்துள்ள பல கோயில்களை ஆய்வுசெய்ய முடிந்தமை. பல அருமையான ஆய்வாளர்களின் அறிமுகமும் நட்பும் அந்தக் கருத்தரங்குகளால் எனக்கு வாய்த்தன. எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர்கள் இ. சுந்தரமூர்த்தி, பாண்டுரங்கன், அறிவுநம்பி, முதுமுனைவர் இரா. இளங்குமரன் எனப் பலரோடு பழகி அவர்தம் ஆய்வுமுறைகளையும் இலக்கிய நோக்குகளையும் உரைவழங்கும் பாங்கினையும் அறியமுடிந்தது. புதுச்சேரிப் பேராளர்களின் பரிவும் தமிழ், வரலாறு இரண்டின்பால் அவர்களுக்கிருந்த இணையற்ற ஈடுபாடும் என் தந்தையாரிடம் அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பும் பேரன்பும் இக்கருத்தரங்குகளில் பங்கேற்றதன் வழி அறிந்தேன். அனைத்தினும் மேலாக ஆனந்தரங்கர் என்ற வரலாற்று நாயகரை உறவாக்கிக் கொள்ளவும் 18ஆம் நூற்றாண்டு வரலாற்றை உள்வாங்கவும் அறவாணன் தந்த வாய்ப்புகளே உதவின. ஒரு மாவட்டம், சில காலகட்டம் என்ற சிறிய வளையங்களிலிருந்து விடுபடவும் கலைகளின் புதிய பரிமாணங்களை நுகரவும் என்னை இடப்பெயர்ச்சி செய்தவர் அருமை நண்பர் அறவாணனே ஆவார். ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து அவர்தம் ஆய்வுக் கட்டுரைகளை நூல்களாக்கிப் பதிப்புச் செலவுகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு செய்த பேராசிரியர் அறவாணனால் பொருள், பதிப்பு வசதியற்ற பல ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை அச்சேற்றவும் அதன் வழிப் படிப்பாரிடையே பரவலான அறிமுகம் பெறவும் முடிந்தது. முடியும், விழிப்பு எனும் அவரது இரு பதிப்புகளில் நானும் பங்கேற்றுள்ளேன். சுந்தரரின் வாழ்வியல் குறித்த, 'சில நேரங்களில் சில கேள்விகள்' என்ற என் ஆய்வுக்கட்டுரை அது போன்ற பதிப்புகளுள் ஒன்றிற்காக எழுதப்பட்டதுதான். ஆய்வுசெய்யவும் கருத்தரங்குகளில் பங்கேற்கவும் கட்டுரை கள் எழுதவும் துறைசார் பேராசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் தந்து உற்சாகப்படுத்துவதைத் தம் தலையாய பணியாக அவர் கொண்டிருந்தமை அவரோடு பழகிய காலங்களில் நான் நேரிடையாகக் கண்ட காட்சியாகும். துறைசார் தகவல்களுடன் மடல்களையும் செய்தியிதழ்களையும் தொடர்ந்து வெளியிட்ட அவரைப் பின்பற்றியே பின்னாளில் தமிழ்ப் பல்கலைக்கழகமும் அது போன்ற முயற்சிகளைத் தொடங்கியது. புதியன நினைப்பதிலும் அவற்றைச் செயல்வடிவிற்குக் கொணர்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவார். அவர் துறைத்தலைவராக இருந்த காலத்தில்தான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பிறதுறை சார்ந்த பட்டதாரிகளும் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள முடிந்தது. அவரது வழிகாட்டலில் அத்தகு புதிய திட்டத்தின் கீழ் முனைவர் பட்டம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கொடுமுடி திரு. ச. சண்முகன். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அறிமுகப்படுத்தியிருந்தபோதும், ஆண்டுதோறும் நிகழ்ந்த அம்மன்றக் கருத்தரங்குகளில் நானும் மைய ஆய்வாளர்களும் பங்கேற்க உந்துதலாக விளங்கியவர் அறவாணன்தான். 1997இல் பிஷப் ஈபர் கல்லூரியில் தொடங்கிய எங்கள் பங்களிப்பு, 2004வரை தொடர்ந்தது. இக்கருத்தரங்குகளினால் தமிழ்நாடு தழுவிய அனைத்துத் தமிழ்ப் பேராசிரியர்களின் கவனத்திற்கும் எங்கள் ஆய்வுகள் கொண்டு செல்லப்பட்டன. பேராசிரியர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழண்ணல், மெய்யப்பன், மோகன் ஆகியோருடன் நல்லுறவு கொள்ள இக்கருத்தரங்குகள் பாதையிட்டன. ஆண்டுதோறும் ஓர் ஆய்வுக் கட்டுரையேனும் எழுத வேண்டுமென்ற நெறிமுறைக்குள் எங்கள் ஆய்வு மைய ஆய்வர்களைக் கொணர்ந்த பெருமை பேராசிரியரையே சாரும். பங்கேற்ற இரண்டாம் ஆண்டிலேயே அவ்வாண்டின் கருத்தரங்கில் வழங்கப்பட்ட கட்டுரைகளில் சிறந்த கட்டுரையாக நளினியின் ஆய்வுக்கட்டுரை பரிசு பெற்றது. இக்கருத்தரங்குகளின் போது பேராசிரியரின் தலைமைப் பண்புகளை எங்களால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அவர் பொறுப்பில் இயங்கியவரை கட்டுரைத் தொகுப்புகள் கருத்தரங்க முதல் நாள் காலையிலேயே உறுப்பினர்களுக்குக் கிடைத்துவிடும். மாணவர்கள், உடன் பணியாற்றுபவர்கள், நண்பர்கள் என ஒரு குழு எப்போதும் அவரைச் சூழ இருந்து செயலாற்றும். திட்டமிடுதலிலும் அதை முறையாக, காலந்தவறாமல் நிறைவேற்றுவதிலும் அவருக்கு இருந்த ஆற்றல், அவர் கீழ் இயங்கிய குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் எதிரொலிப்பதைப் பலமுறை பார்த்து அனுபவித்திருக்கிறேன். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்காகச் சென்ற ஒவ்வொரு முறையும் அப்பகுதி சார்ந்த கோயில் ஆய்வுகளை மேற்கொள்ளத் தங்குமிடம் தேவையாக இருந்தது. எங்கள் தேவையை உணர்ந்த பேராசிரியர், நண்பர் கொடுமுடி சண்முகன் விழுப்புரத்தில் செயற்பொறியாளராகப் பணியாற்றுவதால் அவர் ஆளுகையின் கீழிருந்த விருந்தினர் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்று வழிகாட்டினார். சண்முகத்திடம் பேசியபோது இடமளிக்க மகிழ்வுடன் இசைந்தார். 1991 தொடங்கி, சண்முகம் விழுப்புரத்தில் இருந்தவரை பலமுறை அங்குத் தங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளோம். தம்மால் எதுவும் செய்யக்கூடுமானால் அதை யாருக்கும் எப்போதும் செய்யத் தவறாதவர் பேராசிரியர் அறவாணன். உழைப்பவர்கள் என்று தெரிந்தால் எந்த எல்லைக்கும் சென்று உதவும் பேருள்ளமும் அவருக்குண்டு. பணிகளில் மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கையிலும் ஒழுங்குகளைப் பின்பற்றுவதே அவர் நெறி. அவருடன் உரையாடுவது இன்பம் தருவதுடன் நாம் பேசுவது தொடர்பான கூடுதல் தரவுகளையும் பெற்றுத்தரும். பெரும்பாலோர் தாங்கள் பேசுவதையே விரும்புவர். ஆனால், அறவாணன் மாறானவர். சரியான திசையில் செல்லும் உரைகளைக் கேட்க விரும்புவார். தேவை நேரின் தாமும் உரியன கூறுவார். ஒருவர் பேசினால்தான் அவரை அறிந்து கொள்ள முடியும் என்ற அவரது கண்ணோட்டம் மிகச் சரியானதே. என் மாணவர்களிடம் அதே கண்ணோட்டத்துடன்தான் நான் இயங்கி வருகிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் முதுகலை வரலாற்றுப் பாடத்திட்டக் குழுக்களில் உறுப்பினனாக இருந்த காலத்து நேர்ந்த அனுபவங்களை எல்லாம் பேராசிரியரிடம் பகிர்ந்துள்ளேன். வரலாறு பாடத்திட்டம் குறித்த என் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் அவர் நன்கறிவார். அதனால்தான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைத் துணைவேந்தர் பொறுப்பேற்றுத் திருநெல்வேலி சென்ற ஓராண்டில் அதன் முதுகலை வரலாற்றுப் பாடத்திட்டக்குழு மாற்றியமைக்கப்பட்டபோது என்னை ஓர் உறுப்பினனாக அக்குழுவில் இணைத்தார். என் நண்பரும் துறைத் தலைவருமான பேராசிரியர் கு. சதாசிவம் அழைத்து உரை நிகழ்த்தச் சில முறை அங்குச் சென்றிருந்தமை துறை சார்ந்த அறிமுகம் தந்திருந்தமையால் மகிழ்வோடு அப்பொறுப்பை ஏற்க முடிந்தது. பல ஆண்டுகளாக மறுபதிப்புக் காணாதிருந்த ஆனந்தரங்கர் நாட்குறிப்பைச் செம்மையான பதிப்பாகக் கொணர விழைந்த பேராசிரியர் அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை 1996இல் ஏற்பாடு செய்து, நாட்குறிப்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த பலரையும் அழைத்திருந்தார். தாம் ஏற்கனவே அது குறித்துக் கருதியிருந்தவற்றைப் பகிர்ந்து கொண்டவர், கலந்துகொண்ட அனைவரின் கருத்துக்களையும் கேட்டபோது, சொல்வதற்குச் சிலவே எஞ்சியிருந்தன. அவருடைய திட்டமிடலும் பதிப்புத்திறனும் அத்தகையவை. நூல் பதிப்புப்பணியில் ஓரளவு அனுபவம் இருந்ததால் அவர் ஆற்றலை நன்குணர முடிந்தது. பல நூல்களின் படைப்பாளர், பல தொகுதிகளின் பதிப்பாசிரியர், பலரின் படைப்புலக வழிகாட்டி என அவருக்குப் பல பெருமைகள் உண்டு. அவரது நூல்களுள் பெரும்பான்மையானவற்றை எனக்கு வழங்கியுள்ளார். ஒவ்வொரு நூலைத் தரும்போதும் அதில் அன்பு கமழ, முத்துமுத்தான எழுத்துக்களில் உள்ளத்தைக் கவரும் சொற்களால் அவர் எழுதும் தொடர்கள் என்றென்றும் நினைவில் நிற்பவை. 1997இல் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்பில் அவர் அமைத்த அறிவியல் தமிழ்ப் பயிலரங்கு, தமிழ் மீது அவர் கொண்டிருந்த உளமார்ந்த ஈடுபாட்டிற்குச் சான்றானது. இருபதிற்கும் மேற்பட்ட அது போன்ற கல்லூரி, பல்கலைப் பயிலரங்குகளில் நான் பங்கேற்றிருந்தபோதும், அவர் நிகழ்த்திய பயிலரங்கிற்கு இணையாக வேறெதையும் குறிக்கமுடியாது. மிக அருமையாகத் திட்டமிட்டு, அனைத்து அறிவியல் தமிழறிஞர்களும் பங்கேற்குமாறு செய்து, அவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவும் தனித்தனியே தமிழ் வழி அறிவியல் கல்வி குறித்துக் கலந்துரையாடுமாறு செய்திருந்தார். பல்வேறு அறிவியல் பிரிவுகள் சேர்ந்த வல்லுநர்கள் குழுக்களில் இருந்தமையால் ஒவ்வொரு பிரிவு சார்ந்தும் அதற்கென அமைந்த பரிந்துரைகளும் அறிவியல் தமிழ்க் கல்வி சார்ந்த பொதுவான கருத்துக்களும் குழுக் கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்டு ஏற்புடையவை தொகுக்கப்பட்டன. இரண்டு நாட்கள் நிகழ்ந்த அப்பயிலரங்கில் முதல் நாள் குழுக் கலந்துரையாடல்களும் இரண்டாம் நாள் முற்பகல் குழுத் தலைவர்கள் உரையும் பிற்பகலில் அனைவரும் பங்கேற்ற கலந்துரையும் சிறக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் பயனுற நிகழ்ந்தன. நான் பங்கேற்ற அளவில் அறிவியல்தமிழ்சார் பயனுள்ள, தெளிவான பல பரிந்துரைகளை அரசுக்கும் அறிஞர்களுக்கும் முன் மொழிந்த ஒரே சிந்தனையரங்கமாக அறவாணன் அமைத்த பயிலரங்கையே சுட்ட விழைகிறேன். அவரும் அவரது குழுவினரும் அப்பயிலரங்கைத் திறம்பட வடிவமைத்திருந்தனர். மனந்திறந்து பேசக் குழுக் கலந்துரையாடல்கள் உதவியதால் உண்மைகள் வெளிப்போந்தன. அந்த உண்மைகளே அறிவியல்தமிழ் வளரவும் வாழவும் வகையான சிந்தனைகளை முன்வைத்தன. அறிவியல்தமிழில் அவருக்கிருந்த ஈடுபாடும் அதைச் செயற்பாட்டுக்குக் கொணரும் முயற்சிகளில் அவர் காட்டிய ஆர்வமும் இணையற்றன. துணைவேந்தராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டு அறிவியல் பேரவையின் மாநாடு ஒன்றை நெல்வேலி மாவட்ட ஆழ்வார்க்குறிச்சியில் சிறக்க நடத்தினார். அறிவியலின் பல்துறை சார்ந்த பல சிறந்த தமிழ்க் கட்டுரைகள் பதிவாயின. நிறைவுரையாற்ற என்னை அழைத்திருந்தார். நானும் மருத்துவப் பேராசிரியர் திரு. தெய்வநாயகமும் ஒரே மேடையில் உரையாற்றிய அந்த மாலைப்போது மறக்கமுடியாதது. அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட நெல்வேலி மாவட்டக் கோயில் ஆய்வுகளும் அந்த அழைப்பால் நாங்கள் பெற்ற கொடையாகும். அறவாணனின் நட்பு வட்டம் பெரியது. அவரது எளிமையும் பழகும் பாங்கியலும் யாரையும் நட்புக்கொள்ள வைக்கும். நலநோக்கில் நான் அவருக்கு அறிமுகம் செய்து வைத்த சிராப்பள்ளி மருத்துவர்களுடன் அவர் தொடர்ந்து நட்பிலிருந்தார். தாம் எழுதிய நூல் ஒன்றைப் பொதுநல மருத்துவர் திரு. தே. நாராயணனுக்குக் காணிக்கையாக்குமளவுக்கு அவர்களுக்குள் நட்பு நிலவியது. அவருடைய மகன் அறிவாளன் வளனார் கல்லூரியில் பட்டப்படிப்புப் பயின்ற போது என்னையே அவரின் உள்ளூர்க் காப்பாளராகக் கல்லூரியில் பதிவு செய்திருந்தார். என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் பேரன்பும் அதன் வழிப் புலப்பட்டதாகவே உணர்கிறேன். அறவாணனின் நூல்கள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். தகவல் களஞ்சியங்களாக விளங்கும் அவற்றை உருவாக்க அவர் மேற்கொள்ளும் உழைப்பையும் நான் அறிவேன். 1986இல் கஜூராஹோ கோயில்கள் ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது ஓய்வு நேரங்களில் தங்குமிடத்தில் அவருடைய பாம்பு வழிபாடு, மரவழிபாடு நூல்களே எனக்குத் துணையாயின. தமிழ்நாட்டு வரலாற்றை அறி முகநிலை நூல்களாகத் தருவதற்கு அவர் படித்த நூல்களும் பார்த்த களங்களும் எண்ணிறந்தன. பஞ்சவன்மாதேவீசுவரம் பள்ளிப்படைக் கோயிலைப் பார்ப்பதற்காக அவர், நான், மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ச. முத்துக்குமரன் மேற்கொண்ட பயணமும் அதன் வழி அக்கோயிலுக்குக் கிடைத்த பயன்களும் குறிப்பிடத்தக்கன. அக்கோயிலை அழிவினின்றும் பாதுகாக்க என்னோடு உடன் நின்று முயன்றவர்களுள் அவரும் ஒருவர். முதலமைச்சர் கவனத்திற்கு அக்கோயில் பற்றிய தகவலைக் கொண்டு சென்று அக்கோயில் காப்பாற்றப்பட முதல் கதவைத் திறந்தவர் அவரே பேராசிரியர் தமிழ்க்குடிமகன் அறநிலையத்துறை அமைச்சரானபோது என் வேண்டுகோளேற்று மேற்கொண்ட பெருமுயற்சியே அக்கோயில் இன்றிருக்கும் நிலைக்கு முதன்மையான காரணம். அறவாணனின் நட்பு வட்டத்தைப் போலவே அவரது மாணவர் வட்டமும் மிகப் பெரியது. அவரிடம் பயின்ற பலர் இன்றளவும் என் நண்பர்களாய் இருப்பதால் அவரது பயிற்றுவிக்கும் முறை, மாணவர்களின் ஆற்றலறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வளர்விக்கும் பண்பு ஆகியவற்றை நன்கறிவேன். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளிலும் பேராசிரியரின் பங்களிப்பு இருந்தமை அறிந்திருக்கிறேன். அறவாணனின் மாணவர்கள் ஒரு குடும்பம் என்ற உணர்வுடன் அவரைச் சூழ்ந்தமை அவர் ஆற்றல், அன்பு, நெறிப்படுத்தும் திறம் காட்டும். தம்மைப் போலவே துணைவியாரையும் தமிழ்ப் பெருமாட்டியாகப் பல நூல்களின் படைப்பாளியாக்கியிருக்கும் பேராசிரியர் அறவாணன் ஒத்த தமிழறிஞர்களால்தான் தமிழாய்வு இன்னமும் தழைத்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்காக உழைக்கும் சிறந்த அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் தேர்ந்து அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துமாறு ஆண்டுதோறும் அறவாணர் சாதனையாளர் விருது வழங்குவதற்காகவே தம் உழைப்பில் ஈட்டிய பொருளின் ஒரு பகுதியை ஒதுக்கிய அப்பெருந்தகை அதற்கெனவே தேர்வுக்குழு ஒன்றையும் அமைத்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் மூன்று அறிஞர்களைத் தேர்ந்து தக்கார் கொண்டு சிறப்பித்துவரும் அக்குழுவின் கவனிப்பிற்கு ஆளானமை என் பேறு. 2016ஆம் ஆண்டிற்கான அறவாணர் சாதனையாளர் விருதை அவர் முன்னிலையில் பெற்றபோது அவரது அன்பில் திளைத்த நாட்களும் அவரிடம் உரையாடிப் பெற்ற பட்டறிவும் என் நெஞ்சில் நிழலாடின. நலம் குறைந்த நாட்களிலும் உழைக்கத் தவறாத அறிஞராகவே அவர் இருந்தார். தமிழ் நலம் கருதிய அவரால் உடல்நலம் பேண முடியாமல் போனமை பேரிழப்பே. இடைவிடாத உழைப்பே அவருக்கான அடையாளம். இளையோரை ஏற்றிவிடும் ஏணி யாகவே அமைந்தது அவர் வாழ்க்கை. காலம் எனக்குள் இட்டிருக்கும் பதிவுகளில் அவருக்குத் தனியிடமுண்டு. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |