http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 146
இதழ் 146 [ மே 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
பகுதி 6 (மண்டபம் - தெற்கு)
தென்புற மண்டபத்தின் வேதிகையில் மொத்தம் 9 பாதங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் இரண்டில் கொடிக்கருக்குகள் காண்பிக்கப் பட்டிருக்க மற்ற 7 பாதங்களில் இராமாயணத் தொடர் இடம் பெற்றுள்ளது. இராமன் குகன் படகில் கங்கையைக் கடத்தல், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று தங்குதல், பரதன் இராமனை நாடிக் காட்டுக்கு வருதல், இராமன் தண்டக வனம் புகுதல், விராடன் எதிர்படல் முதலான காட்சிகள் இப்பகுதியில் குறுஞ்சிற்பங்களாகியுள்ளன. தென்புற மண்டபத்தின் கர்ணப்பத்தியில் அமைந்துள்ள மூன்று வேதிபாதங்களுள் முதலாவதில் இராமன் குகன் படகில் கங்கையைக் கடக்கும் காட்சி காண்பிக்கப் பட்டுள்ளது (எண்.39). இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் படகில் நின்றிருக்க, முன்புறம் உள்ள குகன் நீண்ட கழியால் படகை முன் செலுத்துகிறான். அடுத்த பாதம் கங்கையைக் கடந்து இராமன் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைவதையும் முனிவர் அம் மூவரையும் வரவேற்று உரையாடுவதையும் பதிவாக்குகிறது (எண். 40). முனிவருடன் இளம் ஆசிரமவாசிகள் இருவர் காண்பிக்கப்பட்டுள்ளனர். முன்றாவது பாதத்தில் இராமனும் இலக்குவனும் ஒரு தெப்பத்தில் சீதையைச் சுமந்தவாறு யமுனையைக் கடப்பதைக் காட்டுகிறது. கன்னத்தில் கையை வைத்தபடி தெப்பத்தில் சீதை அமர்ந்திருக்க்க, இராமனும் இலக்குவனும் தோள்களில் மரத் தெப்பத்தைச் சுமந்தவாறு நதியைக் கடக்கின்றனர் (எண். 41). கணபதி கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள ஆறு வேதிபாதங்களுள் இரண்டில் (எண்கள் 42& 47) கொடிக்கருக்குகள் காண்பிக்கப்பட மீதமுள்ள நான்கிலும் இராமாயணக் காட்சிகள் பதிவாகியுள்ளன. முதல் காட்சி பரதன் தனது படைகளுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குத் திரும்புவதைக் காட்டுகிறது (எண் 43). மூன்று யானைகள், அவற்றில் பாகர்கள், வெண்கொற்றக் குடை ஏந்தும் பணியாளர்கள், குதிரை மற்றும் வாள் வீரர்கள் என்று இக்காட்சி விரிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்த இரு பாதங்களும் ஒரே காட்சியின் இரு பகுதிகளைக் கொண்டுள்ளதாகக் கருதலாம். முதல் பாதத்தில் (எண் 44) ஒரு பெண் இராமனின் தோள்களில் கைபோட்டு அவனுடன் உரையாடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இராமனுக்கு அருகில் இலக்குவனும் காட்டப்படுகிறான். இதற்கடுத்த பாதத்தில் (எண் 45) ஒரு முனிவரும் அவரின் பின் இரண்டு இளம் ஆண்களும் கிழக்குப்புறத்தை நோக்கியவாறு அமர்ந்துள்ளனர். இம்மூவரும் முந்தைய பாதத்தை நோக்கியவாறு காட்சி அமைக்கப்பட்டிருப்பதால் இராமனுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் உரையாடலை இவர்கள் ஆர்வத்துடன் செவிமடுப்பதாகக் கொள்ளலாம். இராமனுடன் உரையாடும் பெண்ணை கைகேயியாகக் கொள்ள இடமுள்ளது. இரு பாதக்காட்சிகளையும் தொகுத்து நோக்கும்போது வனத்தில் இராமனை மீண்டும் அயோத்தி வருமாறு கைகேயி ஆற்றுப்படுத்துவதையும் அதனை இராமன் மறுப்பதையும் இந்த உரையாடலை வசிட்டர் மற்றும் பரத சத்ருக்னர் கவனிப்பதையும் சித்தரிப்பதாகக் கொள்ளலாம். கணபதி கோட்டத்தின் அடுத்த பாதத்தில் இராமன் சீதை இலக்குவனுடன் தண்டக வனம் புகுவதையும் அங்கே விராடன் தோன்றி அவர்களை அச்சுறுத்துவதையும் சிற்பிகள் பதிவு செய்துள்ளனர் (எண் 46). ஜடாமகுடமாக முடியப் பட்டுள்ள தலையில் மண்டையோடு அணிந்து ஒரு கையில் மனிதத் தலையுடனும் மறு கையில் நீண்ட கழியுடனும் பயங்கர உருவில் தோன்றி அச்சுறுத்தும் நிலையில் விராடன் காட்டப்பட்டுள்ளான். அவனது நீண்ட கழியின் முனையில் அடையாளம் காணவியலாத ஒரு பொருள் காண்பிக்கப் பட்டுள்ளது. இது மனித உடல் அல்லது விலங்குடல் ஆகலாம். பகுதி 7 (விமானம் - கிழக்கு) விமானத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதிபாதத்தில் இராம இலக்குவர்களைத் தூக்கிக்கொண்டு விராடன் பறக்கும் காட்சி பதிவாகியுள்ளது (எண் 48). விராடனின் இரு கரங்களிலும் அமர்ந்துள்ள சகோதரர்கள் அவனது கரத்தினை முறுக்கி வதம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பகுதி 8 (விமானம் - தெற்கு) விமானத்தின் தென்புற வேதிகைத் தொகுதியில் வடபுறம் போலவே 12 பாதங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் 4 பாதங்கள் தென்திசைக் கடவுள் சாலைக் கோட்டத்தையொட்டி அமைந்துள்ள பிற்காலக் கட்டுமானத்தால் மறைக்கப்பட்டுள்ளன (53 முதல் 56 வரை). எஞ்சியுள்ள 8 பாதங்களில் இராமன் காட்டில் வசிக்கும் முனிவர்களைச் சந்தித்தல், சூர்ப்பனகை மூக்கறுப்பு, கர தூஷணருடனான மோதல், மாரீசன் வதம், இராவணன் சீதையைக் கடத்திச் செல்லுதல் வரையிலான இராமாயணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கர்ணப்பத்தியின் முதல் பாதத்தில் இராமனை ஒரு இளம் முனிவர் தமது மனைவியுடன் சந்திப்பது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது (எண் 49). வீராசனத்தில் உள்ள இராமன் சீதையுடன் ஒருபுறம் அமர்ந்திருக்க, மறுபுறம் இளம் முனிவரும் அவரது மனைவியும் காட்டப்பட்டுள்ளனர். இந்த முனிவரையும் அவரது மனைவியையும் அடையாளம் காண இயலவில்லை. அடுத்த பாதத்தில் சூர்ப்பனகையின் மூக்கை இலக்குவன் மூர்க்கமாக அறுத்தெறிகிறான் (எண் 50). பெரும் அலறலுடன் அத்துன்பத்தை சூர்ப்பனகை எதிர்கொள்கிறாள். சற்று தொலைவில் நின்றபடி இராமனும் சீதையும் இக்காட்சியைக் காண்கின்றனர். கர்ணப்பத்தியின் மூன்றாவது பாதத்தில் தனது சகோதரனான கரனிடம் சூர்ப்பனகை தலைவிரி கோலமாகச் சென்று முறையிடும் காட்சி இடம் பெற்றுள்ளது (எண் 51). சுகாசனத்தில் அமர்ந்துள்ள கரனுக்கு அருகில் அவனுக்கு சரிசமமான ஆசனத்தில் அவனது சேனாபதியான மூன்று தலைகளுடன் திரிசிரனும் காண்பிக்கப்பட்டுள்ளான். தென்திசைக் கடவுள் கோட்டத்தின் முதல் பாதம் இராமன் அரக்கர் சேனையுடன் போரிடும் காட்சியைப் படம் பிடிக்கிறது (எண் 52). வானிலிருந்து தன்னைத் தாக்கும் அரக்கர்களை ஆலீட நிலையில் நின்றபடி இராமன் எதிர்கொள்கிறான். பாதத்தின் ஒரு ஓரத்தில் இராமனுடன் போரிட்டு வீழ்ச்சியுற்ற திரிசிரனின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு பாதங்களும் பிற்காலக் கட்டுமானத்தால் மறைந்துள்ளன. இக் கோட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்துள்ள கடைசி பாதத்தில் சூர்ப்பனகை இராவணனிடம் சென்று முறையிடும் காட்சியைச் சிற்பிகள் செதுக்கியுள்ளனர் (எண் 57). கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி அபயம் வேண்டி நிற்கும் தனது தங்கையை இராவணன் அனுதாபத்துடன் நோக்குகிறான். நான்கு கரங்களிலும் ஆயுதமேந்தி நான்கு தலைகளுடன் உத்குடியாசனத்தில் அமர்ந்துள்ள இராவணனின் சித்தரிப்பு குறிப்பிடத்தக்கது. விமானத் தெற்புறத்தில் மேற்குப் பகுதியில் உள்ள கர்ணப்பத்தியின் இடம்பெறும் முதல் பாதம் இராமன் ஒரு முனிவருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ள காட்சியைக் கொண்டுள்ளது (எண் 58). இராமனும் சீதையும் ஒரு புறம் அமர்ந்திருக்க மறுபுறம் முனிவரும் அவரது ஆசிரமவாசிகள் மூவரும் காட்டப்பட்டுள்ளனர். தலை திருப்பி அமர்ந்துள்ள சீதையில் நிலை அவளது மனக்கவலையை வெளிப்பாடாக அமைந்துள்ளது. அடுத்த பாதம் மாரீசன் மாயமானாக வருவதையும் இராமன் கையால் மடிவதையும் சுட்டி நிற்கிறது (எண் 59). ஒரு சம்பவத்தின் மூன்று நிகழ்வுகளை ஒரே பாதத்தில் சிற்பிகள் படமாக்கியுள்ளனர். முதலில் இராமன் கரங்களால் மானைப் பிடிக்க முயல்வதும், அடுத்து பிடிக்க முடியாமல் அம்பெறிவதும் மூன்றாவதாக மாயமான் மாரீசனாக மாறி மடிவதும் அடுத்தடுத்த காட்சிகளாக அதே பாதத்தில் இடம் பெற்றுள்ளன. கர்ணப்பத்தியின் மூன்றாவது பாதம் இராவணன் தனது தேரில் சீதையைக் கடத்திச் செல்லும் காட்சியைக் கொண்டுள்ளது (எண் 60). அரக்கனாகக் காண்பிக்கப்படாமல் இராவணன் ஒரு தலையுடன் கிரீட மகுடமணிந்து அழகிய அரசனாக காண்பிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு முகத்தைக் காட்டாமல் தலை திருப்பி நிற்கும் சீதையின் உடல்மொழியில் அவளது துயரம் நன்கு வெளிப்படுகிறது. பகுதி 9 (விமானம் - மேற்கு) விமானத்தின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ள கர்ணப்பத்தியின் மூன்று பாதங்கள் மற்றும் சாலைப்பத்தியின் ஒரு பாதம் ஆகியவற்றில் புள்ளமங்கை இராமாயணக் கதையின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஜடாயு-இராவணன் யுத்தம், ஜடாயுவின் முடிவு மற்றும் கபந்தன் வதம் ஆகிய மூன்று காட்சிகள் இப்பகுதியில் காணக்கிடைக்கின்றன. கர்ணப்பத்தியின் முதல் பாதத்தில் இராவணனுக்கும் ஜடாயுவிற்குமான தீவிரமான போர் சித்தரிக்கப்பட்டுள்ளது. தனது இரு பெரும் சிறகுகளை விரித்துப் பின்புறமாகத் தாக்க முற்படும் ஜடாயுவை இராவணன் தனது நீண்ட வாளினால் வளைந்து தாக்க முற்படுகிறான் (எண் 61). அடுத்த பாதத்தில் இராவணனின் வாளால் தாக்கப்பட்டு ஒரு மரத்தின் கீழ் வீழ்ந்து கிடக்கும் ஜடாயுவை இராமனும் இலக்குவனும் சந்திக்கும் காட்சியைச் சித்தரித்துள்ளனர் (எண் 62). இராமன் பதாக முத்திரை காட்டியபடி ஜடாயுவுடன் இறுதி உரையாடலில் ஈடுபட்டுள்ளான். கர்ணப்பத்தியின் மூன்றாவது பாதத்தில் கொடிக்கருக்கு காண்பிக்கப் பட்டுள்ளது (எண் 63). சாலைக்கோட்டத்தில் அமைந்துள்ள ஆறு பாதங்களுள் ஒன்றில் இராமாயணக்கதையின் இறுதி நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டுள்ளது. வயிற்றில் தலை கொண்ட கபந்தன் என்ற அரக்கனை இராமனும் இலக்குவனும் வதம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. கபந்தனின் கரங்களை அறுத்தவாறு இரு சகோதரர்களும் அவனைக் கொல்ல முற்படுகின்றனர் (எண் 64). இப்பாதத்துடன் புள்ளமங்கையின் இராமாயணக் கதை நிறைவடைகிறது. காட்சியமைப்பு பெரும்பாலாலான பாதங்களில் ஒரே ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்வு மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்விற்கு உள்ளான 48 பாதங்களுள் 38 பாதங்கள் இத்தகைய அமைப்பில் காணப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்விலும் மிக முக்கியமான தருணத்தினை சிற்பிகள் எடுத்துக் கொண்டு அதனை சிற்பமாக வடித்துள்ளனர். உதாரணமாக தயரதன் வேள்விக்காட்சியைக் காட்டும் பாதத்தில் குள்ள பூதம் வேள்வித்தீயிலிருந்து வெளிப்பட்டு பிண்டமளிக்கும் உச்சத் தருணம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஜடாயுவிற்கும் இராவணனுக்குமான போர்க்காட்சியில் இராவணன் தனது சந்திரஹாஸம் எனும் நீண்ட வாளினால் ஜடாயுவைத் தாக்கி வீழ்த்தும் கடைசித் தருணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பாதங்களிலும் ஒரு நிகழ்வின் ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்கள் பதிவாகியுள்ளன. உதாரணமாக தாடகைக்கும் இராமனுக்குமான போர்க்களக் காட்சியில் தாடகை வானிலிருந்து திரிசூலத்தால் தாக்க முற்படுவதும் பின்னால் இராம பாணத்தினால் தாக்குண்டு தரையில் வீழ்வதும் ஒரே பாதத்தில் இடம் பெற்றுள்ளது. இதனைச் சித்தரிக்க தாடகையின் இரு வேறு நிலைகளை (தாக்குதல், வீழ்தல்) சிற்பிகள் ஒரே பாதத்தில் காட்டியுள்ளனர். அதேபோல் மாயமான இராமன் பிடிக்க முயலும் காட்சியில் அடுத்தடுத்து நிகழும் மூன்று தருணங்கள் ஒரே பாதத்தில் பதிவாகியுள்ளன. இராமன் மாயமானைப் பிடிக்க முயலுதல், பிடிக்க முடியாமல் அம்பெய்தல், மான் மாரீசனாக மாறி அலறி வீழ்தல் ஆகியவை அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. இத்தகைய சித்தரிப்புக்களைக் கொண்டுள்ள 10 பாதங்களுள் 8 பாதங்களில் இரு தருணங்களும் 2 பாதங்களில் மூன்று தருணங்களும் காணக்கிடைக்கின்றன. பாத்திரங்கள் ஆய்விற்குள்ளான 48 பாதங்களுள் 27 பாதங்களில் ஐந்து அல்லது அதற்கும் குறைவான பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 21 பாதங்களுள் 20 பாதங்களில் பத்து அல்லது அதற்கும் குறைவான பாத்திரங்கள் காணப்படுகின்றனர். பத்திற்கும் மேற்பட்ட பாத்திரங்களை ஒரு காட்சி மட்டுமே கொண்டுள்ளது. குறைவான இரு பாத்திரங்கள் மட்டுமே கொண்டுள்ள காட்சிகளாக இராவணன் சீதையை அபகரிக்கும் காட்சியையும் ஜடாயு இராவண யுத்தக் காட்சியையும் குறிப்பிடலாம். இரண்டுமே இராவணன் சம்மந்தப்பட்ட காட்சிகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகமான பாத்திரங்களைக் கொண்டுள்ள காட்சிகளாக தயரதன் வேள்வி, இராமன் சுவாகு அரக்கர் போர், பரதன் அயோத்தி திரும்புதல், இராமன் கர தூஷணர் போர் முதலான காட்சிகளைக் குறிப்பிடலாம். பரதன் அயோத்தி திரும்பும் காட்சியில் குதிரை யானைகள் உள்ளிட்ட ஒரு பெரும் சேனையே காண்பிக்கப்பட்டுள்ளதால் இதில் பத்திற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் காணக்கிடைக்கின்றன. சித்தரிக்கப்பட்டுள்ள பாத்திரங்களுள் கதையின் நாயகனான இராமனே அதிக எண்ணிக்கையிலான பாதங்களில் (28 பாதங்கள்) இடம் பெற்றுள்ளான். இவற்றுள் 23 பாதங்களில் இலக்குவனும் இராமனுடன் உற்ற துணைவனாகக் காட்சியளிக்கிறான். 15 பாதங்களில் சீதை இராமனுடன் இடம் பெற்றுள்ளாள். இலக்குவனின்றி இராமனும் சீதையும் மட்டும் இடம்பெறும் பாதங்கள் இரண்டு மட்டுமே (திருமணம் மற்றும் கானகத்தில் முனிவர்களுடன் ஆலோசனை). இம்மூவருக்கு அடுத்தபடியாக விஸ்வாமித்திரர் 10 பாதங்களில் மிகுந்த முக்கியத்துவத்துடன் இடம் பிடித்துள்ளார். தயரதன் 5 காட்சிகளிலும் கைகேயி, ஜனகர், சூர்ப்பனகை, இராவணன் உள்ளிட்டோர் 3 காட்சிகளிலும் தோன்றுகின்றனர். இராவணன் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மூன்றே காட்சிகளில் இடம் பெற்றாலும் அம்மூன்றுமே அவனது வீரத்தையும் ஆளுமையையும் விரிவாகச் சித்தரிக்கும் பதிவுகளாக அமைந்துள்ளன. சிறப்புக் கூறுகள் புள்ளமங்கை இராமாயணத் தொடரை வடித்த சிற்பிகள் இராமனின் இளமைப் பருவத்திற்கும் கானக வாழ்க்கைக்கும் பெரும் முக்கியத்துவம் அளித்து 64 வேதிபாதங்களிலும் அவை தொடர்பான காட்சிகளையே வடித்துள்ளனர். இதனால் கிஷ்கிந்தை நிகழ்வுகள், அனுமனின் இலங்கைப் பயணம், இறுதிக்கட்ட இராம இராவண யுத்தம் முதலான கதையின் பிற்பகுதி நிகழ்வுகள் முற்றாகவே தவிர்க்கப் பட்டுள்ளன. இவ்வாறு இராமனின் இளமைப் பருவத்தை இத்தனை விரிவாகக் காட்சிப்படுத்தும் முற்சோழர்கால இராமாயணத்தொடர் புள்ளமங்கை மட்டுமே. இதர இராமாயணத் தொடர்கள் மூன்றிலும் (கும்பகோணம், திருச்சென்னம்பூண்டி, திருமங்கலம்) இத்தகைய விரிவான இளமைப்பருவப் பதிவுகள் இடம் பெறவில்லை. 48 இராமாயணக் காட்சிகள் கொண்ட பாதங்களுள் 4 பாதங்களில் பிறப்புக்கு முந்தைய நிகழ்வுகளும், 12 பாதங்களில் பிறப்பு, இளமைப்பருவம் உள்ளிட்ட நிகழ்வுகளும், 9 பாதங்களில் திருமணம் மற்றும் திருமணத்திற்குப் பிந்தைய நிகழ்வுகளும், 5 பாதங்களில் தயரதன் பட்டம் சூட்ட முனைதல் மற்றும் இராமன் கானகம் ஏகுதலும், 8 பாதங்களில் பரதன் சந்திப்பு மற்றும் இராமன் கானக வாழ்வின் ஒரு பகுதியும், 9 பாதங்களில் சூர்ப்பனகை முக்கறுப்பு மற்றும் சீதை அபகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்கொண்ட கதைப்பகுதியை ஏறக்குறைய இரண்டாகப் பிரித்து முதல் பாதியை இராமன் இளமைப் பருவம் மற்றும் திருமணம் பட்டம் சூட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளைச் சித்தரிப்பதற்கும் இரண்டாவது பாதியை கானக வாழ்விற்குமாக சிற்பிகள் திட்டமிட்டுச் செதுக்கியுள்ளனர். திருக்கோயிலில் பார்வையாளர்களின் கவனத்தை நன்கு கவரும் இடங்களாக அமைந்துள்ள பாதங்களில் கதையின் முக்கியமான திருப்புமுனைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக விஸ்வாமித்திரரின் முதல் சந்திப்பு விமானத்தின் வடமேற்கு ஓரத்தில் காணப்படுகிறது. அதேபோல் இராவணன் சீதையைக் கடத்திச் செல்லுதல் விமானத்தின் தென்மேற்கு ஓரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மந்தரை கைகேயி ஆலோசனை மண்டபத்தின் வடகிழக்கு மூலையிலும் குகன் படகில் இராமன் கங்கையைக் கடத்தல் மண்டபத்தின் தென்கிழக்கு மூலையிலும் இடம் பிடித்துள்ளன. மண்டப நுழைவாயிலின் அருகில் இராமன் அயோத்தியை விட்டு நீங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கதையின் சம்பவங்களுக்கிடையே ஆங்காங்கே கொடிக்கருக்குகள் காட்டப்பட்டுள்ளதன் நோக்கத்தை இந்த ஆய்வில் முழுவதுமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. இராமாயணக் கதையின் குறிப்பிட்ட பகுதிகளை பகுத்துக் காண்பிப்பதற்காக இவை சித்தரிக்கப்பட்டிருக்கலாம். இப்பகுப்புகள் வால்மீகி இராமாயணத்திலும் கம்ப இராமாயணத்திலும் உள்ள காண்டப் பகுப்புக்களாக இங்கு அமையவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முடிவுரை முற்சோழர் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு கலைப்பதிவுகளுள் இராமாயணக் குறுஞ்சிற்பத் தொடர் தனித்துவம் வாய்ந்தது. பல்லவர் கோயில்களிலோ பிற்சோழர் காலக் கலைப் படைப்புக்களிலோ காணமுடியாத இந்த இதிகாசக் கதைத் தொடர் முதலாம் பராந்தகர் காலச் சிற்பிகளில் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகச் சுட்டலாம். பல்லவர் காலத்திலேயே சிற்பத் தொடர் எனும் கலைக்கூறு வழக்கிற்கு வந்து விட்டாலும் ஒரு இலக்கியம் சிற்பத் தொடராக அதிலும் குறுஞ்சிற்பத் தொடராக முதன்முதலில் இடம்பெறுவது முற்சோழர் காலக் கோயில்களில் மட்டுமே. இராமாயணத் தொடர் இடம்பெற்றுள் நான்கு முற்சோழர் கோயில்களுள் புள்ளமங்கை தனியிடத்துடன் திகழ்கிறது. நுணுக்கமான பாத்திரப் படைப்பு, தனித்துவம் மிகுந்த சம்பவங்கள், நெடிய நேர்த்தியான உடலமைப்புடன் பாத்திரங்களைப் படைத்தல், ஒரே பாத த்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களைப் படமாக்குதல் என்று பல்வேறு விதங்களில் முதலாம் பராந்தகர் காலச் சிற்பிகள் தமது கலைத்திறமையைக் காலத்தால் அழியாதவாறு இங்கு பதிவு செய்துள்ளனர். விரிவாக ஆராய்கையில் சோழர்கால சமூகத்தையும் விழுமியங்களையும் பழக்க வழக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும் பெரும் கருவிகளாக முற்சோழர்கால இராமாயணத் தொடர்கள் விளங்குகின்றன. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |