http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 146
இதழ் 146 [ மே 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
கோயில் கட்டுமானக்கலையின் பரிணாம வளர்ச்சியில் கொடும்பாளூர் வேளிர்களின் பங்கை ஆய்வாளர்களானாலும் சரி, ஆர்வலர்களானாலும் சரி, எவருமே எளிதில் புறந்தள்ளிவிடுதல் என்பது துளியும் சாத்தியமன்று! கோயில்கள் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஆயிரமாயிரம்!! சிரத்தையுடன் தேடுபவர்களுக்கு அவைகள் காட்டும் பரிமாணங்கள் தான் எத்தனை?!
வரலாற்று வரைவியலில் வரலாற்றாளர்களை இருவகையாக பிரித்திருப்பர். ஒருவகையினர் கிடைக்கின்ற தரவுகளை அப்படியே அதன் உண்மைத்தன்மையுடன் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் காலப் பதிவாக பதிந்து ஆயிரம் வருடங்கள் கழித்து வரும் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாய் வரலாறு அறிவிக்கும் ஆசான்களாக விளங்குவர். இவர்கள் "Factual Historians" என்று அழைக்கப்பட்டு வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாக இடம் பிடிப்பர், மற்றொருவகையினர் கிடைத்த தரவுகளைக் கொண்டு அவர்களுடைய புரிதலுக்கேற்றவாறு சில கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி விட்டுச் செல்வர். இவர்கள் "Interpretational Historians" என்றழைக்கப்படுவர். வரலாறு இவ்விருவகையினரையும் கொண்டே தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்டு நீண்ட தன் பயணத்தை தொய்வின்றித் தொடருகிறது என்றால் அது மிகையாகாது.வரலாறு இவ்விருவகையினரையுமே ஏற்றுக்கொண்டுள்ளது என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையினை மேற்கொண்டு தொடருகிறேன்! ஏனிந்தப் பீடிகை? இந்தக்கட்டுரையில் இக்கோயில் குறித்த கல்வெட்டுக்களோ அல்லது இக்கோயிலின் சிற்ப அமைப்பு குறித்தோ விவரிக்கப் போவதில்லை ! இவை இரண்டும் தவிர்த்து விவாதிக்கவோ, விவரிக்கவோ என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கும் வினா என் காதில் விழுகிறது. இக்கட்டுரையில் இக்கோயில் வளாகம் பற்றி மட்டுமே நாம் காணப் போகிறோம்! "ஆயிரம் வருடத்திற்கு முந்தைய கோயில் வளாகத்தில் என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?" என்ற இயல்பான கேள்வியின் நியாயம் புரிந்து கொள்ளக்கூடியதே! கொடும்பாளூர் மூவர் கோயில் என்றழைக்கப்படும் இவ்வாலய வளாகத்தில் இரண்டு கோயில்கள் முழுமையாக காணும் வண்ணமும் ஒரு கோயில் அதிஷ்டான உருவாக்கத்துடனும் நம் முன்னே காட்சியளிக்கிறது! அவை மட்டுந்தானா? என்றால் நிச்சயமாக இல்லை! இந்த மூன்றாவது திருக்கோயில் அதிஷ்டானத்துடன் மட்டும் காணப்படுவது போல் இவ்வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் இம்மூன்று கோவில்கள் தவிர்த்து மேலும் ஒரு பதினைந்து ஆலயங்களும் மேற்கில் ஒரு கோபுர நுழைவாயிலும் அதிஷ்டானம் மட்டுமே பெற்று இப்பொழுதும் நாம் காணும் வண்ணம் இங்கிருப்பது கவனிக்கத்தக்கதோடல்லாமல் குறிப்பிடவும் தக்கது. இக்கோபுர வாயிலையும் ஒரு கோயிலென கணக்கெடுத்து மூவர் கோயில் தவிர்த்து இவ்வளாகத்தில் பதினாறு ஆலயங்கள் உள்ளதாக முந்தைய வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும். நிற்க! பொதுவாக வரலாற்றாய்வில் கோவில்களை அதன் அகல நீளங்களை அளந்து பார்ப்பது நமது வழக்கங்களில் ஒன்று. அவ்வாறாக இம்மூன்று ஆலய அதிஷ்டானங்களையும் அளக்க முற்பட்டபோது அவைகள் அகலத்தில் 22'(முழுமையாக்கப்பெற்று) பெறுவது நம் கவனத்தை ஈர்த்தது.உடனே ஒட்டுமொத்த வளாகத்தையும் அளந்து பார்ப்போம் என்ற எண்ணம் வந்தது. ஒட்டு மொத்த வளாகமும் நான்குபுறமும் மதில் சுவர் கொண்டுள்ளது எஞ்சியுள்ள மதில் கட்டுமானம் கொண்டு நன்கறியலாம். கிழக்கு மேற்காக இருபுறமும் 165'(முழுமையாக்கப்பட்டு) தெற்கு வடக்காக இருபுறமும் 143'(முழுமையாக்கப்பட்டு) நமக்கு அளவுகளாகக் கிடைத்தன. அதிஷ்டான அளவுகளையும் இவ்வளாக அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க திடீரென ஒரு யோசனை தோன்றியது ! அது என்னவென்றால் இவ்வளவுகளை ஒரு பொது எண் இணைக்கிறது என்பது தான்! சரி! இது என்ன பிரமாதம் எந்தக்கோயிலை ஆய்வு செய்தாலும் இப்படி ஏதேனும் கூறலாமே என்று கேட்பதும் காதில் விழுகிறது. இக்கட்டுரையில் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்டு வரைந்த வளாக வரைபடமும், இவ்வளாகத்தின் கழுகுப் பார்வைக் காட்சியில் இவ்வளவுகளை பொருத்தி வரையப்பட்ட வரைபடங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அவைகளைப் பார்க்கும் போது அளவுகளும் அவைகள் வெளிப்படுத்தும் கருத்துருவாக்கங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! பொதுவாக ஆலய கட்டுமானங்களை ஆய்வு செய்யும் போது பத்திப்பிரிப்பு குறித்த ஆய்வை அவசியம் செய்வது வழக்கம் . அத்தைகைய முயற்சியை இவ்வளாக ஆய்வுக்கும் உட்படுத்த முற்பட்டபோது பல பரிமாணங்கள் விரிந்தன. மேலே காட்டப்பட்டுள்ள வரைபடத்தில் நீல நிறப்பகுதி முழுமையான கட்டுமானத்தையும் கருப்பு நிறப்பகுதி அதிஷ்டானம் வரையே உள்ள அமைப்பிலும் காணப்படுவதை வளாகத்தில் நாம் காணலாம். இவ்வரைபடத்தில் எண் ஒன்றாகக் குறிக்கப்பட்ட பகுதி கோபுர வாயில் ஆகும் எண் இரண்டு பலிபீடம், எண் மூன்று நந்தி மேடை,எண் நான்கு மூன்று கோயில்களுக்குமான பொதுவான மஹாமண்டபம், எண் ஐந்து,ஆறு,ஏழு ஆகிய மூன்றும் பிரதான ஆலயங்கள், எண் எட்டிலிருந்து எண் இருபத்தியிரண்டு வரை வளாகத்தில் உள்ள ஆலயங்கள், எண் இருபத்திமூன்று ஈசான்ய மூலையில் அமைந்த கிணறு ,எண் இருபத்திநான்கு மூன்று கோயில்களுக்கும் பொதுவிலமைந்த இடைநாழிகை என இவ்வளாகம் அமைப்பு பெற்றிருக்கிறது . (அளவுகளின்படி வரைந்த வரைபடம்) மேலே உள்ள படத்தில் சிவப்பு நிறக் கோடுகள் வளாகத்தை பத்திகளாகப் பிரிக்கின்றன. தென்மேற்குத்திசையிலிருந்து வடகிழக்காக்ச்செல்லும் கோடு ஈசான்யத்திலமைந்த கிணற்றை சரிபாதியாக வெட்டிச்செல்வதில் அந்தக்கால பொறியியல் துல்லியமாகக் கணிதத்துடன் சம்மந்தப்பட்டது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளும் வகையில் இன்றும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் வடகிழக்குத்திசையை ஈசன்யம் என்றும் நீர் நிலை இங்கு அமைந்தால் சிறப்பு என்னும் மரபு தற்காலத்திலும் கடைபிடிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. (வளாகத்தின் கழுகுக்காட்சி-அளவுகளுடன் பொருத்தப்பட்டது) மேலே உள்ள படத்தில் சிவப்பு நிறக் கோடுகள் வளாகத்தை பத்திகளாகப் பிரிக்கின்றன. இந்தப் படத்தில் தென்மேற்குத்திசையிலிருந்து வடகிழக்காக்ச்செல்லும் கோடு ஈசான்யத்திலமைந்த கிணற்றை சரிபாதியாக வெட்டிச்செல்வதை நாம் நேரிடையாகவே பார்க்க முடிகிறது. இப்படத்தில் இரண்டு வட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. சிறிய வட்டம் அகலத்தை மையமாக வைத்தும் பெரிய வட்டம் நீளத்தை மையமாக வைத்தும் வரையப்பட்டிருக்கிறது. நான்கு மூலைகளிலும் அமைந்த திசை ஆலயங்கள் இவ்வட்டத்திற்கு வெளியிலும், இவ்வட்டத்திற்குள்ளே பதினோரு ஆலயங்களும் வருவதைக் காணலாம். சிவ வழிபாட்டின் பல வழிகளில் ருத்ர வழிபாடும் ஒன்று . ருத்திரர்கள் பதினொருவர் ஆவர். இவர்கள் ஏகதச ருத்திரர் என்றும் அழைக்கப்படுவர். எனவே இம்மூவர் ஆலயமும் கூட சிவனின் வாமதேவம், சத்யஜோதம் மற்றும் அகோரம் ஆகிய மூன்று வடிவங்களுக்குமான தனிக்கோயில்கள் என்றும் கருதலாமோ என்று கட்டுரையாசிரியர் சிந்திக்கின்றார். மேலே குறிப்பிட்ட படத்தில் உள்ள நான்கு மூலைகள் நீங்கலாக அமைந்த ஆலயங்களை ஏகத்தச ருத்திரர்களின் ஆலயமாக கட்டுரை ஆசிரியர் கருதுகிறார். இக்கருதுகோள்களின் உண்மைகள் தொடரும் ஆய்வுகளில் நிறுவப்படலாம் அல்லது ஒரு கருத்துருவாக்கமாகவே தொடர்ந்து நீடிக்கலாம். கீழே பதினொரு பிரிவாக ஆலய வளாகம் பிரிக்கப்பட்ட வரைபடம் காட்டப்பட்டுள்ளது. அதில் வரும் சிவப்பு நிறக்கோடுகள் ஆலய மதிலின் வெளிப்புறம் முடியும் எல்லைக்கோடுகள் என்று அறிக. (அளவுகளின்படி பதினொரு பாகமாகப் பிரிக்கப்பட்ட வரைபடம்) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |