http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 159

இதழ் 159
[ நவம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

பேய் பாடிய பிஞ்ஞகனின் ஆடல்கள்
எடுத்த படியும் அடித்த படியும்
புள்ளமங்கை ஆலந்துறையார் தாங்குசிற்பங்கள்
கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 4
ஜப்பானியப் பழங்குறுநூறு - 1 (துளியுதிர் இரவு)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 4
இதழ் எண். 159 > கலையும் ஆய்வும்
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 4
இரா.கலைக்கோவன், மு.நளினி

மகேந்திரர் மாமல்லர் பாணிகள்

மாமல்லபுரம் குடைவரைகள் உருவான காலத்தை முடிவு செய்வதற்கு முன், கூ. ரா. சீனிவாசனின் மகேந்திரர், மாமல்லர் பாணிகள் பற்றித் தெளிவு காண்பது அவசியமாகிறது. மகேந்திரர், மாமல்லர் என்னும் இரண்டு அரசர்களின் காலத்தில் வெளிப்பட்டனவாகத் தாம் கருதும் கலைமுறைகளின் கீழ்த் தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பல்லவர் குடைவரைகளையும் அடக்கியுள்ள கூ. ரா. சீனிவாசன், அது பல்லவர் கால இறுதி வரை தொடர்ந்ததாகக் கூறி மகேந்திரர் கலைமுறையை மட்டும் மூன்று பருவங்களாகப் பகுத்துக் கொள்கிறார்.24
1. மண்டபத்தின் அமைப்பு, அலங்கரிப்பு ஆகியவற்றில் எளிமை.
2. குறைவான சிற்பங்கள்.
3. முதன்மைத் தூண்களின் அளவு, அமைப்பு.
4. இரண்டாம் வரிசைத் தூண்கள் அல்லது மண்டபத் தரையின் ஏற்ற, இறக்கம்.
5. தாய்ப்பாறைச் சிற்பமற்ற கருவறை.

இவை ஐந்தையும் மகேந்திரர் கலைமுறையின் முதல் பருவக் கூறுகளாகக் கொள்ளும் கூ. ரா. சீனிவாசன், அவற்றின் அடிப்படையில், மகேந்திரரின் கல்வெட்டுப் பெற்ற 7 குடைவரைகளை உள்ளடக்கிய 12 குடைவரைகளை மகேந்திரர் கலை முறையில் அமைந்த முதல் பருவக் குடைவரைகளாக அடையாளப்படுத்தியுள்ளார்.25

முதல் பருவக் கூறுகளில் சிற்பம், அலங்கரிப்புத் தொடர் பாக ஏற்பட்ட எளிய முன்னேற்றங்களை மகேந்திரர் கலைமுறையின் இரண்டாம் பருவ வெளிப்பாடுகளாகக் காணும் கூ. ரா. சீனிவாசன், இப்பருவக் குடைவரைகள் மாமல்லர், இரண்டாம் மகேந்திரர், முதலாம் பரமேசுவரர், இராஜசிம்மர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் உருவானவை எனக் கூறி26 மாமல்லபுரத்து தருமராஜர், கொற்றவை, அதிரணம் உட்பட்ட 9 குடைவரைகளை அப்பருவத்தில் அடக்குகிறார். அவற்றுள் அதிரணம், சிங்கவரம், மேலைச்சேரி ஆகியன கருவறையில் தாய்ப்பாறைச் சிற்பங்களைக் கொண்டுள்ளன. மகேந்திரர் காலக் கலைமுறையின் மூன்றாம் பருவக் குடைவரைகளாய் வல்லம் இரண்டாம், மூன்றாம் குடைவரைகள், கீழ்மாவிலங்கைக் குடைவரை ஆகியவற்றைச் சுட்டும் கூ. ரா. சீனிவாசன், அப்பருவத்திற்கான மகேந்திரர் கலைமுறையின் சிறப்புக் கூறுகளாக எவற்றையும் முன்வைக்கவில்லை. ஆனால், அம்மூன்றும் காலத்தால் பிற்பட்ட கலைக்கூறுகளைக் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.27 வல்லம் குடைவரைகளில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் கண்டறிந்த கல்வெட்டுகள் எழுத்தமைதி அடிப்படையில் அவற்றை மகேந்திரர் காலத்தனவாக நிறுவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.28

மகேந்திரர் கலைமுறையில் சில குடைவரைகளை அகழ்ந்த அவரது மகனான மாமல்லர், புதிய கலைமுறையிலும் சில குடைவரைகளை அமைத்ததாகக் கூறும் கூ. ரா. சீனிவாசன், அப்புதிய கலைமுறையை மாமல்லர் பாணியாகக் காண்கிறார்.29 அதன் சிறப்புக் கூறுகளாக
1. தூண்களில் ஏற்பட்ட மாற்றங்கள்: உறுப்புகள், வடிவம், அலங்கரிப்பு, விலங்கடிகள்;
2. கூரையுறுப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், இணைவுகள்: வலபியில் வரிமானம், கூடுகள் - கோணப்பட்டம் பெற்ற கபோதம், பூமிதேசம்;
3. ஆரம்;
4. கருவறையில் தாய்ப்பாறைச் சிற்பங்கள் ஆகியவற்றைச் சுட்டுவதுடன், அக்கலைமுறையில் அமைந்தனவாக மாமல்லபுரத்திலுள்ள 9 குடைவரைகளை அடையாளப் படுத்துகிறார்.3க்ஷூ

மகேந்திரர் கலைமுறைக் குடைவரைகள் பல்லவர் ஆட்சி யின் இறுதிக் காலம்வரை தொடர்ந்ததாகவும் ஆனால், மாமல்லர் கலைமுறைக் குடைவரைகள் இரண்டு தலைமுறை மட்டுமே தொடர்ந்து முதலாம் பரமேசுவரருடன் முடிவுற்றதாகவும் அவர் எழுதியுள்ளார். பரமேசுவரவர்மருக்குப் பின் வந்த இராஜசிம்மர் உள்ளிட்ட பிற பல்லவ அரசர்கள் தங்கள் பங்களிப்பாய்ப் பல புதிய கட்டமைப்புகளை உருவாக்கியபோதும் குடைவரைக் கலையில் மட்டும் அவர்கள் மகேந்திரர் கலைமுறையை அப்படியே பின்பற்றியமைக்குச் சம்பிரதாயத்தில் அவர்களுக்கு இருந்த பற்றுதான் காரணம் என்று கூறும் கூ. ரா. சீனிவாசன், அந்தச் சம்பிரதாயப் பற்றினால்தான் அதியர், முத்தரையர், பாண்டியர் முதலிய அரச மரபினரும் தத்தம் குடைவரைகளை மகேந்திரர் பாணியிலேயே ஆனால், சில மாற்றங்களுடன் அகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மலையடிப்பட்டி ஒளிபதி விஷ்ணுகிருகம், குடுமியான்மலை மேற்றளி முதலிய சில தவிர்த்த தமிழ்நாட்டின் பிற குடைவரைகள் மகேந்திரர் குடைவரைகளின் பிரதிகளாகவே அமைந்துள்ளன என்று ஓரிடத்திலும் முத்தரையர் குடைவரைகள் அவை காணப்படும் பகுதிக்கான சிறப்பியல்புகளுடன் உள்ளன என்று மற்றோர் இடத்திலும் அவர் குறிப்பிடுவது கலைக்கூறுகள் பற்றிய அவருடைய முரணான சிந்தனைகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

சம்பிரதாயம்

கூ. ரா. சீனிவாசன் சுட்டும் மகேந்திரர், மாமல்லர் கலைப் பாணிகளைத் தமிழ்நாட்டுக் குடைவரைகளில் பொருத்திப் பார்க்கும் முன் அவர் முன்வைக்கும் சம்பிரதாய நோக்குப் பற்றி ஆராய்வது அவசியமாகிறது. எது சம்பிரதாயம்? அந்த சம்பிர தாயம் எப்படி உருவாகிறது? ஒரு பழக்கமே காலப் போக்கில் வழக்கமாகிறது. ஒரு நடைமுறை பல தலைமுறைகளால் தொடர்ந்து பின்பற்றப்படும்போது அது சம்பிரதாயம் என்ற நிலையைப் பெறுகிறது. பொதுவாக, இது போன்ற வழக்குகளோ, சம்பிரதாயங்களோ எவ்வித மாற்றங்களுக்கும் உட்படுத்தப் படாமல் காப்பாற்றப்படுகின்றன. மாற்றங்கள் ஏற்படின் அவற்றிற்கு உட்படும் நடைமுறைகள் பழைய சம்பிரதாயங்களாகவோ, வழக்குகளாகவோ கொள்ளப்படா. அவை புதிய நடைமுறைகளாகவே கருதப்படும்.

அதன்படி நோக்கினால் தொண்டைமண்டலத்தில் புதிய சம்பிரதாயத்தை உருவாக்கியவர் மகேந்திரரே. அவர் கண்ணேhட்டத்தில் அவரால் உருவாக்கப்பட்ட மண்டகப்பட்டுக் குடைவரையே செங்கல், மரம், சுண்ணாம்பு, உலோகம் இல்லாமல் அவர் பகுதியில் உருவான முதல் இறையகம். அதுநாள்வரையில் கல்லில் இறையகம் காணாதிருந்த வடதமிழ்நாட்டு சம்பிரதாயத்தை உடைத்துப் புதிய சம்பிரதாயத்தைத் தொடங்கி வைக்கிறார் மகேந்திரர். பிள்ளையார்பட்டிக் குடைவரையில் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டின் எழுத்தமைதியை ஆய்வாளர் சிலர் கொள்ளுமாறு பொ. கா. ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளின், தென்தமிழ்நாட்டில் முதலாம் மகேந்திரருக்கு முன்பே எந்த அறிவிப்பும் பதிவும் இன்றியே சம்பிரதாயம் உடைக்கப்பட்டதாகக் கொள்ளலாம். கல்லில் இறையகம் கண்ட இந்த சம்பிரதாயம் தமிழ்நாட்டின் தெற்கிலோ, வடக்கிலோ தோன்றி நிலைபேறு பெற்றது.

இந்த இறையகத்தில் கூ. ரா. சீனிவாசன் சுட்டும் மகேந்திரர் கலைப்பாணி என்பது ஒரு சம்பிரதாயமாக உருவெடுக்கிறதா என்பதைப் பார்க்கலாம். எளிய அமைப்பும் அலங்கரிப்பும் பெற்ற தூண்கள் விளங்கும் மண்டபம், அதில் குறைவான சிற்பங்கள், தாய்ப்பாறைச் சிற்பமற்ற கருவறை என்பவற்றை உள்ளடக்கியதே கூ. ரா. சீனிவாசன் குறிப்பிடும் மகேந்திரர் கலைமுறை. இக்கலைமுறை சங்க காலத்திலிருந்தே வழக்கில் உள்ளது. சுதையில் அல்லது மரத்தில் செய்யப்பட்டதாகவோ, அல்லது வரையப் பட்டதாகவோ அமைந்த இறைவடிவம் கொண்ட மண்டபப் பொதியில்கள்தானே மகேந்திரரால் கல் வடிவம் பெற்றன. ஊடகச் சம்பிரதாயத்தைத்தான் மகேந்திரர் மாற்றினாரே தவிர, அமைப்பு முறையை அன்று. தூண்கள் பெற்ற மண்டபம், அதில் கருவறை என்னும் அடிப்படை அமைப்பு முறையில் தமிழ்நாட்டின் எந்த அரசமரபும் எக்காலத்தும் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. இந்த மண்ணில் விளைந்த மண்டபமற்ற கருவறைக் குடைவரைகள்கூட மண்டபமற்று உருவான முற்சங்கப் பொதியில்களின் கல்வடிவங்களே.

வழிவழி வந்த சங்க கால வடிவை அப்படியே ஏற்றுக் கொண்ட பல்லவர்களும் பாண்டியர்களும் முத்தரையர்களும் பிறரும் அவரவர் பங்கிற்குக் குடைவரைக் கலையில் குறிப்பிடத் தக்க மாற்றங்களைச் செய்துள்ளனர். தமிழ்நாட்டுக் குடைவரை களைக் கூ. ரா. சீனிவாசன் கூறுமாறு மகேந்திரரின் பிரதிகள் என்பது சரியன்று. அவை சங்க இறையகங்களின் பிரதிகள். அந்தப் பிரதிகளில் மகேந்திரர் உட்பட்ட ஆற்றலாளர்கள் அனைவரும் அவரவர் திறனுக்கும் கற்பனைக்கும் ஏற்ப எண்ணற்ற புத்தாக்கங்களை மலர்வித்துள்ளனர். அந்தப் புத்தாக்கங்கள் பலவாகவும் சிறப்பாகவும் ஒருவர் கைவண்ணமாகவும் அமையும்போது அவற்றை அந்தத் தனியரின் கலைமுறையாகவும் அவையே ஒரு மரபின் கைவண்ணமாகப் பதிவாகையில் அவற்றை அந்த மரபின் கலைமுறையாகவும் தொகுத்து அடையாளப்படுத்துகிறோம்.

சங்க காலப் பதிவான மண்டபப் பொதியிலில் மகேந்திரர் விளைவித்த புத்தாக்கங்கள் ஒன்றிரண்டல்ல. அவருடைய குடை வரைகள் அனைத்திலும் ஒரே வகைத் தூண்கள் உருவாகின என்றாலும், அந்தத் தூண்களின் சதுரங்களில் அவர் காலச் சிற்பிகள் காட்டியிருக்கும் பதக்கப் படப்பிடிப்புகள் மகேந்திரர் கலைமுறையின் முதற்படியாகச் சிறக்கின்றன. அந்தப் பதக்கங்களை மாமல்லபுரத்திலுள்ள அதே அமைப்புத் தூண்களில் ஒன்றுகூடக் கொள்ளாமையே, மகேந்திரர் கலைமுறையிலிருந்து மாமல்லபுரம் பெருமளவு விலகிவிட்டமையை உணர்த்த வல்லது. அப்படியிருக்கும்போது அவற்றை மகேந்திரர் கலைமுறையின் இரண்டாம் பருவக் குடைவரைகளாக, அதாவது, சிற்பங்களிலும் அலங்கரிப்புகளிலும் முன்னேற்றம் பெற்ற குடைவரைகளாகக் கூ. ரா. சீனிவாசன் கொண்டுள்ளமை எங்§னம் பொருந்தும்? மகேந்திரர் பதக்கங்களை முத்தரையர், அதியர், பாண்டியர் குடைவரைகள் சிலவற்றில் சந்திக்க முடிந்தாலும், மகேந்திரப் பதக்கங்களின் வகைப்பாடு, வடிப்புக்கூர்மை, அழகியல் நோக்கு ஆகியவற்றை அவற்றில் காணக்கூடவில்லை.

மகேந்திரர் கலைமுறையாக இரண்டு குடைவரைகளில் இரு வேறு இடங்களில் பதிவாகியுள்ள மகரதோரணமும் மாமல்லபுரக் குடைவரைகளைப் பொருத்தமட்டில் கொள்ளப் படாத கலை உத்தியாகவே விடுபட்டுள்ளது. ஆனால், அந்த மகரதோரணம் மும்மூர்த்தி குடைவரையை அடுத்து உருவாகியுள்ள மகிடாசுரமர்த்தினி சிற்பக் கோட்டத்தின் தலைப்பாக முற்றிலும் புதிய எழுச்சியுடன் பதிவாகியுள்ளமையையும் குறிப்பிடாதிருக்க முடியாது. பாண்டியர் பகுதியில் கோளக்குடியிலும் மலையடிக்குறிச்சியிலும் இடம்பெறும் இந்த மகரதோரணம் முத்தரையர், அதியர் பகுதிகளில் முற்றிலுமாய்க் கைவிடப்பட்டுள்ளது. கொள்ளப்பட்ட குடைவரைகளிலும் மகேந்திரர் கால வீச்சைக் காணமுடியவில்லை.

மகேந்திரர் தாம் உருவாக்கிய 7 குடைவரைகளிலும் தம் பணியைப் பதிவுசெய்தவர். அகழ்வு பற்றிய செய்தியாகவோ, விருதுப் பெயர்களாகவோ அவரை முன்னிருத்தும் கல்வெட்டுகளை அவரது குடைவரைகளின் தூண், போதிகை, உத்திரம், சுவர் என ஏதாவது ஒரு பகுதியில் காணமுடிவதை அவரது தேர்ந்த கலைமுறையின் ஓர் உத்தியாகவே கருதவேண்டும். அந்தப் பதிவு மட்டும் இல்லாது போயிருப்பின், கலைச் செழிப்புடன் உருவான அவனிபாஜனம், இலளிதாங்குரம், சஜூமல்லேசுவரம் ஆகிய மூன்று மகேந்திரக் குடைவரைகளுமே மாமல்லன் கலைப்பாணியின் முதற் பருவக் குடைவரைகளாக அவர் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும்.

அகழ்ந்தவர் பெயரைப் பதிவுசெய்யும் இந்த மகேந்திரர் உத்தியை மாமல்லபுரம் குடைவரைகளில் அரிதாகவே காணமுடிகிறது. தருமராஜர், அதிரணம் ஆகிய இரண்டிலும் உள்ள முழு அளவிலான வடமொழிப் பாடல் கல்வெட்டுகள் அகழ்ந்தவர் பெயரைத் தருவதுடன், அவருடைய விருதுப்பெயர்களையும் கொண்டுள்ளன. பெருவராகரிலும் இராமானுஜரிலும் இந்தக் கல்வெட்டுகளின் இறுதி அடிகள் இடம்பெற்று அகழ்ந்தவரைக் குறிப்பால் உணர்த்துகின்றன. பெருவராகரில் கூடுதலாக அகழ்ந்தவர்களின் உருவச் சிற்பங்கள் பெயர்ப் பொறிப்புடன் காட்சியளிக்கின்றன. மும்மூர்த்தியிலும் கொற்றவையிலும் காணப்படும், 'மல்லா', 'ஸ்ரீவாமாங்குச' என்னும் பெயர்கள் சுட்டும் அரசரை உறுதிபட அடையாளம் காணக்கூடவில்லை. கழுக்குன்றத்திலுள்ள முதலாம் நரசிம்மர் கல்வெட்டு அகழ்வு பற்றி ஏதும் கூறாவிடினும், அதன் இருப்புக் கொண்டு குடைவரையை நரசிம்மர் காலத்ததாகக் கொள்ளவேண்டி உள்ளது. எஞ்சிய குடைவரைகள் எவற்றிலும் நன்கு நிறைவு செய்யப்பட்ட வராகர் உட்பட, கல்வெட்டுப் பொறிப்புகள் இல்லாமை, மாமல்லபுரம் மகேந்திரர் உத்தியிலிருந்து மெல்ல விலகும் காட்சியைக் கண்முன் வைக்கிறது.

குடைவரையில் முன்றில் அமைக்கும் கலைமுறையை முன் மொழிந்தவர் மகேந்திரரே. அந்த மகேந்திரர் கலைமுறை மாமல்லபுரத்தில் ஓரிடத்தில் மட்டுமே கைக்கொள்ளப்பட்டுள்ளது. பிற தமிழ்நாட்டுக் குடைவரைகளில் சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் தவிர வேறெங்கும் காணப்படாத இவ்வமைப்பை விலங்கடித் தூண்கள் ஏற்றிருப்பது மாமல்லபுரத்தில் மட்டுமே என்பதையும் நினைவில் நிறுத்தினால், மகேந்திரக் கலை முறையில் மாமல்லபுரம் புதியது இணைப்பதை உணரமுடியும்.

குடைவரையின் முகப்பை ஒட்டிப் பக்கங்களில் விரியும் பாறைச் சுவர்களில் காவலர்களை அமைக்கும் கலைமுறையும் மகேந்திரருடையதே. இக்கலைமுறையைக் காலத்தால் முற்பட்டதென சில ஆய்வாளர்கள் கொள்ளும் பிள்ளையார்பட்டிக் குடைவரையில் காணக்கூடவில்லை. பாண்டியர், முத்தரையர் பகுதிகளில் காணப்படும் குடைவரைக் காவலர்கள் முகப்பையெhட்டி முன்புறத்தே நீளும் சரிவுச் சுவர்களிலோ, மண்டபத்தின் பக்கச் சுவர்களிலோதான் இடம்பிடித்துள்ளார்களே தவிர, ஒரு குடைவரையில்கூட அவர்களை மகேந்திரர் தந்திருக்கும் இடத்தில் பார்க்கமுடியவில்லை.31 இக்குடைவரைக் காவலர்கள் இடம்பெற்றுள்ள குடுமியான்மலை, கரூர்த் தான்தோன்றி, வெள்ளறைக் குடைவரை ஆகியவை மகேந்திரரின் மண்டகப்பட்டுப் போலவே கருவறைக் காவலர்கள் கொள்ளாமையும் இங்குக் கருதத்தக்கது. ஆனால், மகேந்திரரின் சஜூமல்லேசுவரம் கருவறைக்கெனத் தனிக் காவலர்களையும் பெற்றுள்ளது. விசித்திரசித்தர் என்ற தம் விருதுக்கேற்ப சங்கப் பிரதிகளில் இது போல் பல புதிய உத்திகளை மகேந்திரர் முயன்றுள்ளார்.32 அவற்றையெல்லாம் அடையாளப்படுத்தும்போது மகேந்திரர் கலைமுறை33 தானே மலர்கிறது.
1. அலங்கரிப்பற்ற குடைவரை - இலக்Îதாயதனம்
2. சிற்பங்களற்ற குடைவரை - மாமண்டூர் முதற் குடைவரை
3. அலங்கரிப்பும் சிற்பங்களுமற்ற குடைவரை - பல்லாவரம்
4. சிறிய அளவிலான புடைப்புச் சிற்பங்கள் பெற்ற குடைவரை - அவனிபாஜனம்
5. தொன்மக் காட்சியாய்ப் பேரளவிலான சுவர்ச்சிற்பம் பெற்ற குடைவரை - இலளிதாங்குரம்
6. பாதபந்தத் தாங்குதளம், வாயில் மகரதோரணம், கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்ற முகப்பு, முன்றில் கொண்ட குடைவரை - சஜூமல்லேசுவரம்
7. யாளிப்பிடிச்சுவர் முகப்புப் படிகள், சட்டத்தலை அணைவுத் தூண்கள் - வலபி - கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்ற கருவறை - இலளிதாங்குரம்
8. மண்டபப் பின்சுவர், பக்கச் சுவர் எனக் கருவறை - பல்லாவரம், சஜூமல்லேசுவரம், இலளிதாங்குரம்
9. முகப்பின் பக்கங்களில் கோட்டங்கள், அவற்றில் சிற்பங் கள் - அவனிபாஜனம்

மாமல்லபுரம் கலைமுறை

மாமல்லபுரம் குடைவரைகள் அடிப்படையில் சங்கப் பிரதிகளாக இருந்தபோதும் அவற்றில் மகேந்திரர் கலைமுறையின் பல கூறுகள் கைவிடப்பட்டுள்ளமையைக் காணலாம்.
1. தூண் சதுரங்களில் பதக்கங்கள்
2. வாயில், கோட்ட மகரதோரணங்கள் (மும்மூர்த்தியில் மகிடாசுரமர்த்தினிக்கு மட்டும் முற்றிலும் மாறுபட்ட அமைப்பில்.)
3. குடைவரைக் காவலர்கள் (இராமானுஜரில் மட்டுமே உள்ளனர்)
4. பக்கச் சுவர்க் கருவறைகள் (குரங்கணில்முட்டத்தில் மட்டும் உள்ளன)

மகேந்திரர் குடைவரைகளில் காணமுடியாத பல புத்தாக் கங்கள் மாமல்லபுரம் குடைவரைகளில் இடம்பெற்றுள்ளன.
1. முகப்புத் தூண்களின் உருமாற்றம் - உருளை, எண்முகம், பன்முகம், விலங்கடி
2. முகப்பில் சிற்பத்தொடர் பெற்றும் பெறாமலும் உள்ள வலபி (பூதவரி, அன்னவரி, கொடிக்கருக்கு)
3. தாமரை, எழுகதிர் அலங்கரிப்புடன் முழு வளர்ச்சி நிலையில் கபோதக்கூடுகள்
4. கூரையில் அமரும் பூமிதேசத்துடனான ஆரவரிசை
5. தாங்குதளம், கூரையுறுப்புகள் பெறும் மண்டபச் சுவர்கள்
6. மண்டபச் சுவர்கள் அனைத்தும் சிற்பத்தொகுதிகள் பெறுவது
7. குடைவரையின் பல்வேறு இடங்களில் தாவு யாளிகள்
8. முழுமையான ஒருக்கணிப்பில் காவலர், அடியவர் சிற்பங்கள்
9. கருவறைகளின் கூரையுறுப்புகள், தாய்ப்பாறைச் சிற்பங்கள்
10. கருவறை முன்சுவரின் கோட்டப் பெருக்கம்
11. கருவறையின் பக்கப் புறச்சுவர்களில் கோட்டங்களுடன் சிற்பங்கள்
12. பல சிற்பங்களில் இடம்பெற்றுள்ள மாறுபட்ட கை முத்திரைகள்

இவற்றின் இணைவையே கூ. ரா. சீனிவாசன் மாமல்லன் பாணியாக வரையறுத்துள்ளார். இவற்றை மாமல்லன் கலைப்பாணி என்பதைவிட மாமல்லபுரம் கலைமுறை என்பதே பொருந்தும். ஏbனனில், மாமல்லபுரம் குடைவரைகள் பதினான்கனுள் ஒன்றில்கூட அக்குடைவரையை உருவாக்கியவர் மாமல்லர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இல்லை. முதலாம் நரசிம்மர் ஆட்சிக் கால நடுகல் கல்வெட்டுகள் பலவாகக் கிடைத்திருந்தபோதும் கழுக்குன்றத்திலுள்ள கல்வெட்டுதான் தமிழ்நாட்டில் அவர் பெயருடன் கிடைக்கப்பெறும் ஒரே கட்டுமானக் கல்வெட்டு. அந்தக் கல்வெட்டிலும் வழிபாட்டுப்புறமாக அவர் வைத்த கொடை பற்றிய தகவல்தான் உள்ளதே தவிர, குடைவரையை உருவாக்கிய செய்தி அன்று.34 இந்நிலையில், கூ. ரா. சீனிவாசன் ஏன் இந்த மாமல்லபுரம் கலைமுறையை மாமல்லர் பாணியாகக் கொண்டார் என்பது விளங்கவில்லை.

குடைவரைகளின் காலம்

தருமராஜர், அதிரணம், இராமானுஜர், பெருவராகர் ஆகிய குடைவரைகளில் கிடைக்கும் சம°கிருதப் பாடல் கல்வெட்டுகளை ஒருங்கிணைத்து ஆரஹைகயில், அவை அத்யந்தகாமனையே சுட்டுகின்றன.35 கூ. ரா. சீனிவாசன் தம்முடைய தருமராஜரதம் பற்றிய நூலில் அத்யந்தகாமனை முதலாம் பரமேசுவரராக அடையாளப்படுத்தியிருப்பது நினைக்கத்தகுந்தது.36 அவரைப் பொருத்தமட்டில் சோமாஸ்கந்தர் உருவானதும் முதலாம் பரமேசுவரர் காலத்தில்தான். அதனால்தான், தம்முடைய பல்லவர் குடைவரைகள் பற்றிய நூலில், இந்த சம°கிருதப் பாடல் உள்ள தருமராஜர், அதன் பின்னடிகள் கொண்ட இராமானுஜர், பெருவராகர் ஆகியவற்றையும் சோமாஸ்கந்தர் இடம்பெற்றுள்ள மகிடாசுரமர்த்தினியையும் மாமல்லர் தொடங்கி, பரமேசுவரர் முடித்ததாக அவர் கொண்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் காணப்படும் சமசுகிருதப் பாடல் கல்வெட்டுக் குறிக்கும், 'அத்யந்தகாமன்' இராஜசிம்மரே என்பதை 'அத்யந்தகாமம்' என்ற நூலில் சான்றுகளின் அடிப்படையில் இந்நூலாசிரியர்கள் விரிவாக விளக்கியுள்ள நிலையில் மீண்டும் அவற்றை இங்கு எடுத்துரைக்கத் தேவையில்லை.37 அதிரணத்தில் காணப்படும் கல்வெட்டும் தருமராஜரில் காணப்படும் கல்வெட்டும் மிகத் தெளிவாக அவ்வக் குடைவரைகளைப் பெயரிட்டு அடையாளப்படுத்துவதுடன் அவற்றை உருவாக்கியவராக இராஜசிம்மரைச் சுட்டுகின்றன. பெருவராகரில் உள்ள உருவச் சிற்பக் கல்வெட்டுகள் அக்குடைவரையை உருவாக்கிய வர்களாக இராஜசிம்மரையும் அவர் மகன் மூன்றாம் மகேந்திரரையும் முன்னிலைப்படுத்துகின்றன. இராமானுஜரில் உள்ள பாடல் கல்வெட்டு தருமராஜர் கல்வெட்டின் இறுதி அடிகளைக் கொண்டிருப்பதால் அதையும் இராஜசிம்மர் காலத்ததாகவே கொள்ளமுடியும்.

சிறப்பான வளர்நிலைக் கூறுகள் கொண்டு விளங்கும் பெருவராகர், இராமானுஜர் உள்ளிட்ட நான்கு குடைவரைகள் இராஜசிம்மரின் பணிகளாக அடையாளப்பட்டுக் பொ. கா. எட்டாம் நூற்றாண்டுப் படைப்புகளாகின்றன. பெருவராகரிலும் இராமானுஜரிலும் காணப்படும் மாமல்லபுரம் கலைமுறையின் பெரும்பாலான கூறுகள் மாமல்லபுரம் தவிர்த்த தமிழ்நாட்டின் வேறெந்தப் பகுதிக் குடைவரைகளிலும் காணப்படாமை, அந்தக் கலைமுறையின் தனித் தன்மையையும் சிறப்பையும் இணையற்றனவாக வெளிப்படுத்துவதுடன், அவற்றின் பின் இருந்த சிந்தனையாளரான இராஜசிம்மரைப் பேராற்றல் பெற்ற பெருந்தகையாக உயர்த்துகின்றது.

மாமல்லபுரம் கலைமுறையில் உருவாகி, ஆனால், வாய்ப்பான கல்வெட்டுச் சுட்டல்கள் இன்றித் திகழும் வராகர், மும்மூர்த்தி, மகிடாசுரமர்த்தினி குடைவரைகளை அவை பெற்றுள்ள கலைக்கூறுகள், சிற்பஅமைதி ஆகியவற்றின் அடிப்படையில் இராஜசிம்மர் காலத்தனவாகவே கொள்ளமுடியும். பஞ்சபாண்டவரின் முகப்பொன்றே அது இராஜசிம்மர் காலத்தது என விளக்கப் போதுமானது.

எஞ்சியுள்ள நிறைவுற்ற குடைவரைகளான கொற்றவை, கோனேரிப் பெரியமண்டபம் ஆகிய இரண்டனுள், பெருவராகர் கொற்றவைத்தொகுதி கொண்டு கொற்றவைக் குடைவரைப் பெண் காவலர்களை ஒப்பீடு செய்ததன் வழி, அக்குடைவரையையும் இராஜசிம்மர் காலப் பணியாகவே கருதவேண்டியுள்ளது. உறுதியான சான்றுகள் கிடைக்கும்வரை கோனேரிப் பெரிய மண்டபமும் எஞ்சியுள்ள நிறைவுறாக் குடைவரைகளும் இராஜசிம்மர் காலத்திலோ, அவரைத் தொடர்ந்த பிற பல்லவ அரசர்கள் காலத்திலோ தொடங்கப்பட்டிருக்கலாம் எனக் கொள்வதே பொருந்தும்.


தளவானூர்


லளிதாங்குரம் - கங்காதரர்


லளிதாங்குரம்


மண்டகப்பட்டு


விளாப்பாக்கம்

குறிப்புகள்
24. K. R. Srinivasan, Cave-Temples of the Pallavas, p. 43.
25. மு. கு. நூல், ப. iii.
26. மு. கு. நூல், பக். 43, 49.
27. மு. கு. நூல், பக். 43, 40.
28. மகேந்திரர் குடைவரைகள், பக். 239, 246.
29. மு. கு. நூல், பக். 43, 45. முதலாம் நரசிம்மரின் கல்வெட்டுடன் விளங்கும் முதல் குடைவரையான கழுக்குன்றத்திலேயே மகேந்திரர் கலைமுறையின் சிறப்புக்கூறுகளைக் காணமுடியவில்லை. புதிய கலைமுறையை நோக்கிய சிந்தனைத் தடங்கள் இக்குடைவரையின் அர்த்தமண்டபப் பின்சுவரில் பதிவாகியுள்ளமை நோக்க, நரசிம்மர் காலத்திலேயே மகேந்திரர் கலைமுறை வழக்கிழக்கத் தொடங்கிவிட்டதையும் மாற்றங்களை நோக்கிப் புதிய கலைமுறை அரும்புவதையும் நன்கு உணரமுடிகிறது. கழுக்குன்றத்தில் முளைவிட்ட புதிய சிந்தனைகள் மாமல்லபுரத்தில் வளர்ச்சியின் உச்சத்தை அடைந்து முற்றிலும் புதிய கலைமுறையாக வடிவெடுத்துள்ளமையைப் பெருவராகர், வராகர், இராமானுஜர், மகிடாசுரமர்த்தினி, பஞ்சபாண்டவர் குடைவரைகள் காட்சிப்படுத்துகின்றன.
30. மு. கு. நூல், ப. iv.
31. ஒளிபதியில் மட்டுமே இவ்விடத்தில் அடியவர்கள் உள்ளனர். எனினும், இங்கு முகப்பு அமையாமை எண்ணத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், ப. 14.
32. மகேந்திரர் குடைவரைகள், பக். 192-216.
33. மேற்படி, ப. 212.
34. எனினும், இக்குடைவரை நரசிம்மர் காலத்தது என்பதைக் கல்வெட்டின் இருப்பொன்றே நிறுவவல்லது. இங்கு மகேந்திரரின் சிறப்பான கலைக்கூறுகள் இடம்பெறாமையும் மாற்றங்கள் உருவாகியுள்ளமையும் எண்ணத்தக்கன. மாமல்லபுரக் கலைமுறைக்கான முதல் விதை இங்குத் தூவப்பட்டதாகக் கொள்வதில் தவறில்லை.
35. அத்யந்தகாமம், பக். 110 - 129.
36. K. R. Srinivasan, The Dharmaraja Ratha and Its Sculptures - Mahabalipuram, p. 97.
37. அத்யந்தகாமம், பக். 130-150.

-நிறைவுற்றது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.