http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 159
இதழ் 159 [ நவம்பர் 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
அரியலூர் மாவட்டத்துத் திருமழபாடி சோழர் காலத்தில் மழுவாடி என்று அறியப்பட்டது. இவ்வூரிலுள்ள மழுவாடி ஈசுவரர் கோயில் பாடல் பெற்ற சிறப்புடையது. செங்கல் கட்டுமானமாக இருந்த அதன் இறையகம் காலப்போக்கில் பழுதுற்றது. சிதைவுற்ற இறையகத்தைத் திருப்பணி செய்யக் கருதிய சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் படைத்தலைவர் மும்மடிசோழ பிரம்மமாராயர், அதற்குத் தம்மை அனுமதிக்குமாறு மன்னரின் 28ஆம் ஆட்சியாண்டின்போது (பொ. கா. 1013) வேண்டுகோள் வைத்தார். பேரரசர் இசைவளிக்கச் செங்கல் கட்டமைப்பை முழுவதுமாய் அகற்றிக் கற்றளியாக்கும் திட்டம் உருவானது. பழங்கோயில் என்பதால் காலங்காலமாக இறைவழிபாட்டிற்கும் படையல்களுக்கும் பலர் அளித்த கொடைகள் கட்டுமானத்தில் கல்வெட்டுகளாக இருந்தன. கட்டடத்தை அகற்றும் முன் அந்த அறக்கட்டளைப் பதிவுகளைப் படியெடுத்துப் புத்தகத்தில் பதிவுசெய்ய வேண்டியிருந்தது. அரசு உயர்அலுவலரான இருமுடி சோழ மூவேந்தவேளாரும் திருப்பணியாளரான மும்மடிசோழ பிரம்மமாராயரும் திருமழுவாடியை உள்ளடக்கியிருந்த கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்து சபையாருக்கும் மழுவாடி ஊரை நிருவகித்து வந்த அரசின் சிறுதனப் பணிமகனான ஆலங்குடியைச் சேர்ந்த அமலன் உத்தமசோழனுக்கும் இது குறித்து விரிவான ஓலை அனுப்பினர். மும்மடி சோழ பிரம்மமாராயர் சார்பில் திருக்கற்றளிப் பணிக்குப் பொறுப்பேற்றிருந்த தூதன் நம்பிபிரான் கூத்தாடி, அமலன் உத்தமசோழனுக்காக அரசர் படைப்பிரிவான வில்வாள் கொந்தவரில் பணியாற்றிய சோமாசி குட்டதாழி ஆகிய இருவரும் கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்து சபை வாரிய உறுப்பினர்கள் சிலரும் கண்காணிகளாக அமைய, கட்டுமானத்திலிருந்த கல்வெட்டுகளைப் புத்தகத்தில் பதிவுசெய்யும் பணி தொடங்கி முடிந்தது. இராஜராஜரின் இறுதிக் காலத்தில் தொடங்கிய கற்றளிப்பணி அவர் மகனான சோழப் பேரரசர் முதல் ராஜேந்திரரின் காலத்தில் தொடர்ந்து, அவரது 14ஆம் ஆட்சியாண்டின் (பொ. கா. 1026) தொடக்கத்தில் நிறைவுற்றது. திருப்பணிக்கு முன் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பழங்கல்வெட்டுகளைப் புதிய கட்டுமானத்தில் பொறிக்கவேண்டியிருந்தது. அதற்கான ஆணை மன்னரின் தண்டநாயக்கர் இராமன் அருமொழியான உத்தமசோழ பிரம்மமாராயன் ஓலை வழி பிறந்தது. 'திருமழுவாடி உடையார் விமானம் (இறையகம்) முன் வாங்கிச் செய்கிறபோது இஸ்ரீவிமானத்துள்ள கற்படி மாற்று சேர்த்த பொத்தகப்படி மீளக் கல்வெட்டுவிக்க' எனும் கல்வெட்டு வரிகள் குறிப்பிடத்தக்கன. தண்டநாயக்கரின் ஓலை அவர் சார்பில் மழுவாடிக் கோயில் பணிகளை மேற்கொண்ட குளவன் சோழனுக்கும் அருங்கலமுடையான் பட்டாலகன் தூதுவனான திருமழுவாடி பிச்சனுக்கும் கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பப் பெற்றது. அவ்வோலையைக் கண்ணுற்ற கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்து சபையாரும் பெரும்புலியூர் சபையாரும் அறக்கட்டளைப் பதிவுகளைப் புதிய கட்டுமானத்தில் மீள வெட்டும் பணியைக் கண்காணிக்கச் சிலரை நியமித்தனர். அக்குழுவில் திருமழுவாடி பிச்சனுடன் குளவன் சோழன் சார்பாக ராஜராஜத் தெரிந்த பரிவாரத்து களமன் பனையன் இடம்பெற்றார். கோயில் கணக்கர் அரையன் மதுராந்தகனான சோழப் பெருங்காவிதியின் உதவியாளர் ஊரான் பட்டாலகன், எதிர்க்கணக்காக ஊர் சிவபிராமணன் கௌசிகன் நெற்குப்பை, இறைவனை ஆராதிக்கும் வேங்கடவன் மழுவாடி ஆகியோர் உறுப்பினர்களாக அமைந்த அக்குழுவில் கோயில் உவச்சர்களும் மெய்க்காப்பாளர்களும் இடையர்களும் சபை வாரிய உறுப்பினர்களும் ஊர் சிவபிராமணர் சிலரும் இடம்பெற்றனர். 'இவ்வனைவர் கண்காணியாலும் இவ்வனைவர் கணக்கினாலும் கல்வெட்டுவித்தபடி முன்பு கல்வெட்டுச் சேர்த்த பொத்தகப்படி' என்று முடியும் ராஜேந்திரரின் கல்வெட்டு மீளப்பதிவு செய்யும் பணி சிறக்க நிறைவுற்றதை மகிழ்வுடன் தெரிவிக்கிறது. ஒரு கோயிலில் நிறுவப்படும் கொடை கோயில் சார்ந்த தகவல்களுடன் ஊர், மக்கள் தொடர்பான வரலாற்றுத் தரவுகளையும் உள்ளடக்கியதாகவே அமைந்தது. இறைநோக்கில் வழங்கப்பெற்ற இத்தகு கொடைகள், காலகாலத்திற்கும் நின்று நிலவவேண்டும் என்ற நோக்குடனேயே சூரியனும் சந்திரனும் உள்ளவரை அவை நிகழ்த்தப்படும் என்ற உறுதிப்பாட்டோடு அக்காலத்தே கைக்கொள்ளப் பெற்றன. அதனால்தான், அத்தகு கொடைகளை ஓலைப்பதிவுகளாக மட்டும் கொள்ளாமல், கல்லிலும் செம்பிலும் பொறித்தனர். தாமிரப்பட்டயங்கள் காணாமற் போனாலும் கல்வெட்டுகள் காலம் கடந்து நிற்கும் என்று நம்பினர். அந்த நம்பிக்கையைப் பழங்காலத்துத் திருப்பணியாளர்கள் தலைமேல் வைத்துப் போற்றினர். கோயிலில் எத்தகு மாற்றம் நிகழ்ந்தாலும் பழம் பதிவுகளைக் கண் போல் போற்றிக் காத்தனர். காக்க முடியாத காலங்களில் உள்ளது உள்ளபடி படியெடுத்து மீள்பதிவு செய்தனர். அவர்தம் பெருமைக்குரிய அக்கடப்பாட்டுணர்வைத் திருமழபாடியின் தந்தை, மகன் இருவர் காலக் கல்வெட்டுகள் நம் கண்முன் நிறுத்துகின்றன. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |