http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 159

இதழ் 159
[ நவம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

பேய் பாடிய பிஞ்ஞகனின் ஆடல்கள்
எடுத்த படியும் அடித்த படியும்
புள்ளமங்கை ஆலந்துறையார் தாங்குசிற்பங்கள்
கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 4
ஜப்பானியப் பழங்குறுநூறு - 1 (துளியுதிர் இரவு)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 4
இதழ் எண். 159 > கலையும் ஆய்வும்
பேய் பாடிய பிஞ்ஞகனின் ஆடல்கள்
பால.பத்மநாபன்

அழகு என்பது எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒன்று. கரு முதிர்ந்து, வெளியே வந்த நாள் முதல் கல்லறை சென்று சேரும் நாள்வரை, இது மனித உயிர்களால் ஓம்பப்படுகின்ற ஒன்று. சிகை திருத்தி சீவி சிங்காரித்துக்கொள்ளும் ஆசை சிதைக்குச் செல்லும்வரை சிதைவதில்லை. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒன்று. அதிலும் பெண் மனம் அதிகமாகவே ஆசைப்படுகின்றது. இயற்கையாய் அமைந்த உடல் அழகை மேன்மேலும் அதிகரிக்க, ஆடம்பர ஆடை உடுத்தி, ஆபரணங்கள் பூண்டு, ஒப்பனை ஏற்றி தன்னை அழகில் சிறந்தவளாக ஆக்கி கொள்ளவே ஆசைப்படுகின்றது பெண் மனம். இதற்கு வயது, ஒரு வரம்பு அல்ல. ஆனால் இந்த அழகுணர்ச்சியிலிருந்து விடுபட்டவர்களும் உண்டு. பற்று இற்றுப் போய், உறவு துறந்து துறவு துவங்கிய நிலையில் இதை துறந்தவர்களும் உண்டு. இதே நிலை தான் ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்டது. அப் பெண், தான் இனி தன் கணவனோடு சேர்ந்து வாழமுடியாது என்ற நிலையில், தன் கணவன் காண வேண்டிய இந்த வனப்பு மிக்க உடல் மறையவும், பிறர் காண அருவருத்தக்க பேய் உருவம் வேண்டியும் விண்ணப்பிக்க, சிவபெருமான் அருளால் அவ்வுருவமும் பெற்றார். அவர்தான் " புனிதவதி " என்ற இயற்பெயருடன் ,காரைக்காலில் வாழ்ந்த புனிதர்.

சைவ சமயத்தில் பக்தி இலக்கியக்கள் என்றால், பொதுவாக "மூவர் முதலிகள் " என்று சோழர்களின் கல்வெட்டுகளில் பெருமையாக பேசப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் யாத்த தேவாரமும், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் , சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும் தான் பேசப்படுகின்றன.. 12 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பான "பதினோராந் திருமுறை "யில் உள்ள பாடல்கள் பற்றி சிலர்தான் பேசுவர் ..இதற்கு காரணம் அப்பரும், சம்பந்தரும், சுந்தரரும் ஊர்தோறும் சென்று நூற்றுக்கணக்கான கோயில்களைப் பற்றி பாடியுள்ளனர். இப் பாடல்கள் பதிகம் என அழைக்கப்பட்டன்.. 10 பாடல்கள் கொண்டது ஒரு பதிகம் ஆகும். இப் பதிகம் பெற்ற கோயில்கள் மக்கள் மனத்தில், சிறப்புப் பெர்று, அக் கோயில் பெற்ற பதிகங்களும் பதியவும் தொடங்கின. பல்லவர் காலம் தொடங்கி சோழர் காலத்திலும் அரசு ஆதரவுடன் இப் பதிகங்கள் பெரும்பாலும் கோயில்களில் பாடப்பட்டுவந்தன.

கி.பி.4-ம் . நூற்றாண்டை ஆரம்பமாகக் கொண்டும், கி.பி.250 முடிவாகக் கொண்ட காலமான சங்க காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்களும், சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்ற காப்பியங்களும் சைவ சமயத்தின் மூல முதல்வராக இருந்த சிவபெருமானைப் பற்றி அதிகம் பேசவில்லை. கி.பி. 7-ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும், கி.பி. 9-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த சுந்தரரும், படைத்திட்ட தேவாரங்கள், சிவபெருமானின் சிறப்பை, அவர் தம் தோற்றத்தை, உடுத்திய உடையை, கையில் வைத்திருந்த கருவிகளை, பூண்ட ஆபரணங்களை, செய்த வீரச்செயல்களை, அவரின் ஆடல் பாடல்களை, அவரை வழிபட்டு அருஞ்செயல் செய்திட்ட அடியவர்களை இப்படி பல்வேறு கோணங்களில் படம் பிடித்து காட்டுகின்றன.

சங்க காலத்திற்கு பிறகும் தேவாரம் பாடப்பெற்ற காலத்திற்கு முன்பும் இடையில் 4 அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் காரைக்கால் அம்மையார், அப்பர், சம்பந்தர்க்கு முன்னோடியாய், அவர்கள் படைத்திட்ட பதிகங்களுக்கு முன்னோடியாய், திருவாலங்காட்டு திருநீலகண்டமான சிவபெருமானை பற்றி பதிகங்கள் இரண்டு பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சிவபெருமானை பற்றி அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டைமணிமாலை ஆகியவற்றையும் படைத்துள்ளார். இவர் பாடிய முதல் நூல் அற்புதத் திருவந்தாதி. அடுத்து திருவிரட்டைமணிமாலையும் இறுதியில் திருவாலங்காடு பதிகங்களையும் படைத்திட்டார் (1) அப்பர், சம்பந்தர் படைத்திட்ட பதிங்கங்களுக்கு, இவை காலத்தால் முற்பட்டதாகையால் இவை மூத்த பதிகங்கள் என அழைக்கப்படலாயிற்று.

அந்தாதி என்பது, முன்பாட்டில் முடிவுச்சொல் அடுத்த பாட்டின் முதல் சொல்லாக வரும். முதல் பாட்டின் முதல் சொல், ஈற்றுப் பாட்டின் இறுதிச் சொல்லோடு ஒன்றி வருவதாகும். இரட்டைமணிமாலை என்பது இரண்டு வெவ்வேறு மணிகள் மாறி மாறி அமைய, தொடுக்கப்பட்ட மாலைபோல் கட்டளை கலித்துறை முன்னும் வெண்பா பின்னுமாக முறையே தொடர்ந்து அந்தாதித் தொடையால் மாலை போன்று அமையப் பாடப்படுவதாகும்.

"கோதிலோர் பொருளைக் குறித்து அய்யிரண்டு பாவெடுத்துரைப்பது பதிகமாகும் "என்று முத்துவீரியம் (2) கூறுவதால், பதிகம் என்பது கடைக்காப்பு நீங்கலாக பத்து பாடல்கள் கொண்டது என விளங்கப்பெரும்.. கிடைக்கப் பெற்ற பதிகங்களில் காரைக்கால் அம்மையாரின் பதிகம் காலத்தால் மூத்தது போல், அவர் பாடிய அந்தாதியும் ,திருவிரட்டைமணிமாலையும் காலத்தால் மூத்தது ஆகும்..

பிற்காலத்தில் சுந்தரரால் " பேயார்க்கும் அடியேன் " என போற்றி 60 நாயன்மார்களில் ஒருவராகவும், பின்வந்த சேக்கிழார் பெருமானாரால் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் வகைப்படுத்தப்பட்ட, காரைக்கால் அம்மையார், திருமுறை பாடிய ஆசிரியர்களில் இவர் மட்டுமே பென்பாற் புலவர் ஆவார்.

காரைக்கால் அம்மையார் தோற்றம்

காரைக்கால் அம்மையாரின் தெய்வ பக்தி காரணமாக, அவர் செய்த அரும் செயலைக் கண்டு, அவரின் கணவர், தனது மனைவி ஒரு தெய்வப் பிறவி என்றும், இவர் வணங்குவதற்கும் போற்றதலுக்கும் உரியவர் என்றும், அதனால் இவரை வ்ட்டு விலகி வேறொரு பெண்ணை மணந்து குழந்தை பெற்று அக் குழந்தைக்கு இவரது பெயரான புனிதவதி என்று பெயரிட்டு வாழ்ந்து வருவதாக சுற்றத்தார் மற்றும் காரைக்கால் அம்மையார் முன்னிலையில் தெரிவித்ததால் ,கேட்ட காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம், கணவருக்காக வனப்பு மிக்க இத் தசைப் பொதியைச் சுமந்து நின்றேன் இனி இது தேவையில்லை. உன்னை போற்ற, உன் கணங்களுள் ஒன்றான பேய் வடிவம் தனக்கு வேண்டும் என்று வேண்ட பிஞ்ஞகன் அருளால் எலும்பு உருவம் கொண்ட பேய் வடிவம் பெற்றும்,. தன்னை " காரைக்கால் பேய் " என்றும் அழத்துக்கொண்டார். இவரே இதனை தன் பாடலிலும் தெரிவித்துள்ளார்.



திருவிடைமருதூரில் காரைக்கால் பேய் செண்டு தாளம் வாசிப்பது

"………………………..காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே " (3)

" …………………….கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி ஆட பாவம் நாசமே." (4)

( பொருள்: தீ போன்ற வாயையும் பற்களையும் உடைய காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் பத்தும் பாடி ஆடிட பாவங்கள் தொலைந்து போகுமே )

சிவபெருமானுடைய பேய் கணத்தில் தான் இருப்பதை பெருமையோடு கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்

"…………………………………………. பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம். " (5)

பதிகம் எழுந்த காரணம்

இறைவனின் இருப்பிடமான கயிலை மலையைக் காணவிரும்பி மலையை அடைந்து மலை மேல் காலால் நடபபது தகாது என்று கருதி, தலையாலே சென்றதால் தலைவனால் கவரப்பட்டு " அம்மையே " என்று அழைக்கும் பேறு பெற்றவர்.. சிவபெருமானிடம் அம்மையார், " தாங்கள் ஆடும்பொழுது கண்டு, தங்கள் திருவடி கீழிருந்து நாம் மகிழ்ந்து பாடவேண்டும் " என்று வேண்ட, தென் திசையிலே திருவாலங்காட்டினிலே நாம் நடனம் ஆடும்போது, நீ கண்டு மகிழ்ந்து பாடுக என்று அரனாரும் அருளிச் செய்தார். அம்மையும் திருவாலங்காடு அடைந்து அரனாரின் அழகிய ஆடல் கண்டு " கொங்கை திரங்கி " என்று மூத்த முதல் திருப்பதிகத்தை பாடினார்.

இக் காட்சியே பின் வந்த சோழர் சிற்பிகள், நடராஜர் நடனத்தில் கீழ் இசை வாசிக்கும் இனியவராய் ,பாடும் பாவலராய் படைத்திட்டனர். திருப்புகலூரில் கோட்டச் சிற்பமாக காணப்படும் நடராஜர் திருவடி கீழ் சிரட்டை கின்னரி என்ற இசைக் கருவி இசைப்பவராக இவரைக் காணலாம். கூகூர், , கங்கைகொண்ட சோழபுரம், செம்பியன் மாதேவி, தப்பளாம் புலியூர் போன்ற இடங்களில் பாடுபவராய், எலும்புருவில் பேயாய் காணலாம்.



திருப்புகலூரில் காரைக்கால்பேய் சிரட்டை கின்னரி வாசிப்பது

63 நாயன்மார்களின் சிற்ப தொகுதியில், 62 நாயன்மார்கள் நிற்கும் நிலையில் இருக்க,, அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காணப்படுவார். .62 நாயன்மார்கள் மனித வடிவில் இருக்க, அம்மை மட்டுமே பேய் வடிவம் தாங்கி அமர்ந்திருப்பார்.. பதிகங்களில் முதன் முதலில் பண்ணை புகுவித்து, இசைப் பாடல்கள் அடங்கிய பதிகங்களாய் தந்த இந்த இனியவர்,. தனது இரு மூத்த பதிகங்களில், முதல் பதிகத்தை நட்டபாட்டை பண்ணிலும், இரண்டாம் பதிகத்தை இந்தளப் பண்ணிலும் அமைத்திட்டார். இவரை பின்பற்றியே சம்பந்தரும் தனது " தோடுடைய செவியன் " என்ற முதல் பதிகத்தை நட்டப்பாட்டை பண்ணிலும், இரண்டாம் பதிகத்தை இந்தளப் பண்ணிலும் பாடியது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அம்மையார், பதிகம் முடிந்தவுடன் கடைக்காப்பு பகுதியில் பாடல் ஆக்கிய தன் பெயரைக் குறிப்பிட்டு , இந்த பத்து பாடல்களை பாடினால் பெறும் பயன் பற்றியும் பதிவுசெய்துள்ளார். பதிகங்களில் இம்முறையைப் பின்பற்றியே சம்பந்தரும் சுந்தரரும் கையாண்டிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

ஆடல்வல்லானாகிய சிவபெருமானின் ஆடல் வகைகள், ஆடல் நடைபெற்ற களம், பெருமானின் தொற்றம், உடல் நிறம், அவர் கொண்ட ஒப்பனை, சூடிய மலர்கள், பூண்ட ஆபரணங்கள், உடுத்திய உடை, கைப்பிடியில் உள்ள கருவிகள், இசைக்கருவிகள், , உடனிருக்கும் பேய்கள், அவை தம் தோற்றங்கள், இயக்கிய இசைக் கருவிகள், ஆடிய ஆடல்கள், ஆடலின் வகைகள், பாடிய பாடல்கள் , .உடனிருக்கும் பறவைகள், மற்ற விலங்குகள், ஆடலில் அவை பங்கு பெற்றமை ஆகியவற்றை பற்றி விரிவாக பேசும் முதல் புலவர் அம்மையாரே அதிலும் ஆடுகளமான சுடுகாட்டினை காட்சிபடுத்தியமை வேறு எவரும் செய்திலது



கங்கை கொண்ட சோழபுரத்தில் பேய் செண்டு தாளம் வாசிப்பது

அம்மையார் அறிமுகப்படுத்தும் கூத்தப்பெருமானின்,கூத்து வகைகளை தெரிந்து கொள்வதற்கு முன், தொல்காப்பியர் காலதில், மற்றும் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்த கூத்துக்கள் பற்றியும், பிற்பாடு எழுந்த கூத்துகள் பற்றியும் அவை பிரிக்கப்படிருந்த விதம் பற்றியும் சிறிது காண்போம்.,

தொல்காபியர் காலத்தில், வள்ளி, காந்தள், தேர்க்குரவைகள், அமலை, ஓடாக் கழல் நிலை, வெறியாட்டு, ஆகிய கூத்துக்கள் இருந்தனவாக தொல்காப்பியம் கூறுகின்றது. (6)

சங்ககாலத்தில் மக்கள் ஆடலாக குரவை, துணங்கை, தோளி, ஒள்வாள் அமலை , துடியாடல் ஆகியவை இருந்தன. (7) தொழிற்சார்ந்த கலைஞர்களான கோடியர் ,வயிரியர், கண்ணுளர், கூத்தர், விறலியர் ஆகியோர் ஆடிய ஆடல்களாக கழைக்கூத்து, வெறியாட்டு, வேலன் வெறியாட்டு, ஆடுமகள் வெறியாட்டு, பேடியாடல், ஆகியவை சுட்டப்படுகின்றன (8). இதனோடு இறையாடல்களாக கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம், குடக்கூத்து, மல்லாடல், ஆகியவை குறிக்கப்படுகின்றன. (9)

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம் ,மணிமேகலை ஆகியவற்றின் உரையாசிரியர்கள் தரும் உரை கொண்டு கூத்துக்கள் அக்காலத்தில் அகம் சார்ந்தவை புறம் சார்ந்தவை என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்ததை அறியலாம். .அகக்கூத்துக்கள் இரண்டு வகைப்படும் அவை
1) சாந்திக் கூத்து
2) விநோதக் கூத்து

சாந்திக் கூத்து

அகக் கூத்தான சாந்திக் கூத்து நான்கு உட் பிரிவுகள் கொண்டது (10) .அவை
1) சொக்கம்
2) மெய்
3) அவிநயம்
4) நாடகம்

சொக்கம் என்பது 108 கரணங்கள் கொண்ட சுத்த நிருத்தம் ஆகும். (11)

மெய்க்கூத்து தேசி, வடுகு ,சிங்களம், என மூன்று உட்பிரிவுகள் கொண்டது, அது அகமார்க்கம் எனவும் அழைக்கப்பட்டது. (12)

அவிநயம் என்பது கதை தழுவாது பாடப்பட்ட அல்லது உரைக்கப்பட்டதற்கான பொருளை கை,கால் மற்றும் உடல் உறுப்புகள் மூலம் உணர்த்துவது. (13)

நாடகம் என்பது கதை தழுவி வரும் கூத்து ஆகும் (14)



திருஇந்தளூரில் காரைக்கால் பேய் செண்டுதாளத்துடன் இசைப்பது



ஆடுதுறையில் காரைக்கால் பேய் செண்டு தாளம் இசைப்பது



செம்பியன் மாதேவியில் காரைக்கால் பேய் செண்டு தாளம் இசைப்பது

விநோதக் கூத்து

குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை ஆகிய ஆறு கூத்துக்களை கொண்டது விநோதக் கூத்தாகும். (15)

இவ்வகை கூத்துக்களில் காரைக்கால் அம்மையார், தான் கண்ட கூத்தப்பெருமானின் கூத்துகளை சொக்கமாகவும் அவிநயம் அடங்கிய நிருத்தமாகவும் காண்கிறார்.



கரந்தையில் இறைவனின் ஆடலைக் கண்டு மெய்மறந்து போற்றுவது



தப்பளாம் புலியூரில் காரைக்கால் பேய் செண்டு தாளம் இசைப்பது

அவிநயக்கூத்து

நான்கு உட்பிரிவுகள் கொண்ட சொக்கம் என்ற கூத்தில், மூன்றாவது உட்பிரிவாக வரையரை செய்யப்பட்ட அவிநயக்கூத்து நான்கு உட்பிரிவுகளை உள்ளடக்கியது என்கிறது நாட்டிய சாத்திரம் அவை

1) ஆகார்யம் 2) ஆங்கிகம் 3) வாசிகம் 4) சாத்விகம் (16)

1) ஆகார்யம்

ஆடுதல் நடைபெறுகின்ற களம், ஒளி, ஒலி, ஆடற்கலைஞர்கள் செய்து கொள்ளும் ஒப்பனை, அணிந்திருக்கும் ஆடை, அணிகலன்கள், கைக்கொள்ளும் கருவிகள் ஆகியவை பற்றி கூறுவது ஆகும்

2) ஆங்கிகம்

உடல் உறுப்புகளால் பாடலின் அல்லது உரையின் பொருளை வெளிப்படுத்துவது. ஆங்கிகம் ஆகும்.

3) வாசிகம்

பாடல் அல்லது உரை மூலம் ஆடலின் பொருளை உணர்த்துவது வாசிகம் ஆகும்.

4) சாத்விகம்

ஆடல் ஆடும் ஆடுநர் , தாம் ஆடும் ஆடலின் கருவோடு ஒன்றி,, தாமே அதுவாகி ஆடும்போது ஆடுநரின் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே சாத்விகம் ஆகும்.

அவிநயத்தின் குறிக்கோளே ஆடலைப் பார்ப்பவர் அதை விளங்கிக் கொள்ளவேண்டுமென்பதும், அவ்வாடல் எந்த களத்தில் எந்தக் கருவை மையமாக்கி நிகழ்த்தப்படுகின்றதோ, அந்த களத்தில் அந்த நிகழ்வில், பார்ப்பவர் தாமும் ஒருவராகி ஒன்றிப் போகுமாறு செய்வதுதான் என்கிறார் அறிஞர் மருத்துவர் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள் (17).

இந்த கூத்து வகைகள் அடிப்படையில், பிஞ்ஞகனின் கூத்துகளை காரைக்கால் பேய் செப்பியபடி ஆராய்வோம்.

ஆடுகளம்

ஆடலுக்கு இன்றியமையாதது ஆடுகளமாகும். அக்களம் ஆடுபவருக்கு உகந்ததாகவும், ஆடும் பொருளுக்கு உகந்ததாகவும் இருக்கவேண்டும். அம்மையார் அறிமுகப்படுத்தும் காடு , முடி சார்ந்த மன்னனும் கடைசியில் பிடி சார்ந்த சாம்பல் ஆவான் என்றும் சொல்லப்படுகின்ற காடு. " காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழியே " என்று பட்டிணத்து அடிகளும் குறிப்பால் உணர்த்திய காடு அது. . ஆம் சுடுகாடுதான் அது. சமரசம் உலவும் இடமும் இதுதான் சம்சார பந்தமும் துறந்து உறங்கும் இடமும் இதுதான்.

அம்மையார் இக் காட்டை, காடு, சுடுகாடு, இடுகாடு, பெருங்காடு, வெண்காடு, முதுகாடு, மயானம் , ஈமவனம், ஈமப்பெருங்காடு, பேய்காடு, தீப்பெருங்காடு என்று பலவிதமாய் பகர்கின்றார்.. இக் காட்டையே அம்மையார் அறிமுகப்படுத்தும் ஆடல்வல்லானின் ஆடுகளமாக காண்கிறார்.. இக் காட்டில் பேய், பூதம், ஆண்டலை<, ஆந்தை ,கோட்டான், ஓரி என அழைக்கப்படும் கிழநரி,,கூகை, குரங்கு,,ஆகியவைகள் கூட்டமாக வசித்து வரும் காடு அது. இக்காட்டை பாட்டில் படம் பிடித்துக் காட்டும் அம்மையாரின் வருணணைகளை இருவிதமாகப் பார்க்கலாம்.

1) சுடுகாட்டின் சுற்றுப்புற காட்சிகள்
2) உயிரினக் காட்சிகள்

சுடுகாட்டு சுற்றுப்புறக் காட்சிகள்

அது ஒரு பொன்மயமான அந்தி மயங்கும் ஆரம்ப நேரம்.(18) பாலை நிலத்துக்குரிய வாகை மரங்கள் விரிந்து நின்றிட, அதனின்று முற்றிய வெண்மையான நெற்றுக்கல் காற்றில் அசைந்தாடுதலால் ஏற்படுகிண்ற ஒலி கேட்கின்ற சுடுகாடு. அதை அம்மை ,

" வாகை விரிந்து வெண்ணெற்றொலிப்ப " என்கிறார். அங்கே

" ஈகை படர்தொடர் கள்ளிநீழல் ஈமம் இடுசுடு காடு " என்கிறார் (19)

வீசி கொடி படர்ந்த சுள்ளிச்செடியின் நிழலில், பிணங்கள் வரிசையாய் அடுக்கப்பட்டிருக்குமாம். எட்டி, இலவம், ஈகை, சூரை ,காரை, கள்ளி போன்ற மரம் , செடி, ,கொடிகளும் சூழ்ந்து நின்ற காடாம். அங்கே கழுகு போன்ற பறவைகளால் குடல் கெளப்பட்ட பிணங்கள் நிறைந்திருக்குமாம். பிணமேடையில், பிணம் ஒன்று தீயில் வெந்துகொண்டிருக்கின்றது. அப்பிணத்தின் தசை தீயினால் உருகி நிலத்தை நனைத்துக்கொண்டிருக்கின்றது .பக்கமே உள்ள
" முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்து உக்குக்
கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காடு ’’ என்கிறார் (20)

பிணம் எரிந்து கொண்டிருப்பதால் பக்கமே உள்ள முள் மரம் தீய்ந்து, முளரி என்ற முள் செடியும் கருகி, கள்ளிச் செடியும் வற்றி, விளாமரம் உள்ள வெங்காடாம். மறுபுறத்தே முற்றிய மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்கள் நான்கு பக்கமும் சிதறிக் கிடக்கிறாதாம். மற்றொரு புறத்தே இண்டு என்ற காட்டுச்செடி படர்ந்திருக்க, பிணங்கள் சுடப்படுவதால் ஏற்படும் புகை மேலே எழும்பி வெளியே வந்துகொண்டிருக்கும் காட்சி காணப்படும் காடு அது என்கிறார் அம்மை..

உயிரினங்களின் காட்சிகள்

பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் அந்த முதுகாட்டை சூழ்ந்திருந்த சுற்றுப்புற காட்சிகளை விவரித்த அம்மை, அங்கு நடமாடும் உயிரினங்களான நரிகள், கோட்டான்கள், ஆந்தை, ஆண்டலை, பருந்து கூகை, ஊமன், கிழநரி ,குரங்கு, சீவற்பறவை ஆகியவற்றின் செயல்கள் பற்றியும், குடியிருந்து குடும்பம் நடத்தும் ஆண்பேய், பெண் பேய் ,சிறு பேய் ஆகிய கூட்டத்தைப் பற்றியும் பகர்கிறார்.

ஒருபுறத்தே

" கூகையோடு ஆண்டலை பாட, ஆந்தை கோடதன் மேற்குதித்து ஓட" என்கிறார். (21)

கோட்டானோடு ஆண் தலை போன்ற வடிவினையுடைய பறவை பாட, ஆந்தை கொம்புடன் அதன் மேல் குதித்து ஓட,.ஆண் குரங்கு ஒன்று அங்குள்ள மூங்கில் மரங்களில் சுற்றித் திரிகின்றதாம். அச் சுடுகாட்டில் பருந்து, கூகை, சீவற்பறவை , ஆந்தை போன்ற பறவைகள் முட்டையிடுகிற காட்சியையும் அம்மை பதிவு செய்கிறார். மறுபுறம் வேள்விக்குரிய குழியினுள் இடப்பட்ட பலிச் சோற்றை குறுநரி ஒன்று எடுத்துத் தின்றதையும் அதனைக் கண்ட பேய்கள் இதனை முன்னமே பார்க்காமல் போனோமே எனச் சீற்றம் கொண்டு கையடித்து சுடுகாட்டினை சுற்றி சுற்றி வந்து ஓடுகிறதாம், மற்றொருபுறம் வெந்துகொண்டிருக்கின்ற பிணத்தின் விழுதாக உள்ள ஊனினை விழுங்கி, வெண்மயமான மண்டையோட்டுத் தலைகளை மாலையாக அணிந்த ஒரு பேயானது, தன் பிள்ளையை காளி என்று பெயரிட்டு சிறப்புடன் வளர்த்து ,தூசி தட்டி,முலைப்பால் கொடுத்துவிட்டு சென்றது.. சென்ற தாயின் வரவைக் காணாது அழுது உறங்குகின்றதாம் காளி என்ற அந்த குட்டிப் பேய்.. பெரிய பேய்கள் எல்லாம் பிணத்தை எடுத்து சாப்பிட்டபின்பு அங்கு வந்த சிறு பேய் ஒன்று கிளரிக் கிடந்த சுடுகாட்டைத் தடவி உண்பதற்கு உணவு ஏதுமின்றி இருத்தலை நினைத்த வண்ணமாய் அங்கு உறங்குமாம் . சிறு பேயின் சிரமப்படுதலையும் காட்சிப் படுத்துகின்றார்.

" கொங்கை திரங்கி நரம்பு எழுந்து குண்டுகண் வென்பல் குழிவயிற்றுப்
பங்கி சிவத்து இரு பற்கள் நீண்டு பரடு உயர் நீள் கணைக்கால் ஓர் பெண்பேய்
தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத்திசையும் வீசி
அங்கம் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே" (22)

கொங்கைகள் வற்றி, நரம்புகள் மெலெழுந்து, கண்கள் குழி விழுந்து, பற்கள் வீழ்ந்து, வயிற்றில் குழி விழுந்து, தலையிலுள்ள முடி சிவப்பாகி, கோரைப்பற்கள் இரண்டும் நீண்டு, கணுக்கால் இரண்டும் உயர்ந்துள்ள ஒரு பெண் பேய், தான் தங்கியுள்ள சுடுகாட்டில் திடீரென்று அலறுகிறது. காட்சி ஆரம்பமாகிறது அதற்குண்டாண ஆரம்பக் கட்ட ஒலி போலும். திரை விலகுகிறது.



கூகூரில் காரைக்கால் பேய் செண்டு தாளம் இசைப்பது.

அம்மையால்,
"திரங்கு வல்வாய் பேய் ", (23)
" பறை போல் விழிகட்பேய் ", (24)
"பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய் " (25)
" உலறு கூந்தல் அலறு பகுவாய் பேய் " (26)

என்று வர்ணிக்கப்பட்ட பேய்கள் முதலில் வருகின்றன. அவை கூடி ,குதூகலித்து, கும்மாளமிட்டபடியே உள் நுழைகின்றன. அவை ஒரு குழுவாக இணைந்து ஆடியதாம் . சில பேய்கள் பக்க வாத்தியமாய் முழவம் முழங்க, சில பேய்கள் உடுக்கையையும், பறையையும் கொட்ட இசைப் பிராவகம் அங்கே ஆரம்பமானது அவ்வேளையில் ஆடல்வல்லானாகிய அம்பலவாணர் அரங்கிற்குள் நுழைகிறார்.

தோற்றம்

அரங்கிற்குள் நுழைந்த ஆடல்வல்லானின் உடல் நிறம் தழலைப்போல் ஒளியை உடைய செம்மேனி உடையதாய் இருக்கின்றது.. இதனை அம்மை

" ………………………………..தழற்கொண்ட சோதிச்செம் மேனி " என்று புகழ்கிறார். (27)

நீண்டு தொங்குகின்ற சடைகளை தூக்கி கட்டி சடாமகுடமாக்கி, அதில் கொன்றை மாலையைச் சுற்றி கட்டி, அங்கங்கே எருக்க மலர், வன்னி ஆகியவற்றை சூடியுள்ளார். சூடுவற்கு அங்கே மணம் வீசும் மலர்கள் மட்டுமல்ல. மதி மயக்கும் அழகு கொண்ட பிறை மதியும் ,ஆடும் அரவமும் அங்கே இருந்தனவாம். அது மட்டுமல்ல .பேரிரைச்சலோடு புகுந்த கங்கையும் அங்கே இருந்தும் ஈரம் படாத சடைமுடிகளோடு காட்சிதருகிறாராம். இதனை அம்மை,

"……………………………………………… ஆறுபுக்கு நனையாச் சடைமுடி" என்கிறார்.(28)

விடம் உண்டதனால் கருப்பாகிப் போன கண்டத்தை உடையவனாகவும் ஒருசமயத்தில் உமையோடு இணைந்து உமையொருபாகனாகவும் பார்வைக்குப்படும் சங்கரன், நாராயணனோடு இணைந்து சங்கரநாராயணனாகவும் காட்சியளிக்கிறார் . அவர் மார்பில்

" தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு " என (29)

அம்மை சொல்வதுபோல மார்பில் மாலையாக ஏறிய பாம்பும் ,கூர்மையும் கடுமையும் கொண்ட பன்றியின் கொம்பும், இருந்தனவாம்.. இவை மட்டுமா. தலையோடுகளை மாலையாகக் கட்டி வெண்மையான எலும்புகளையும் அதனிடையே கட்டி அணிந்துள்ளாராம். புள்ளிகள் கொண்ட மாந்தோலை முப்புரிநூலோடு இணைத்து முதுகில் வைத்தும், புலித்தோலை அரையில் உடுத்தி அதன் மேலே ஆடும் அரவத்தை அரைக் கச்சாக அணிந்தும், திருநீறு பூசி, மெய்யில் சுடலை பொடி பூசி, ஆடலை துவக்கினார். ஆடலுக்கு வெளிச்சம் வேண்டும் அல்லவா. அதற்கு அங்குள்ள பிணத்திற்கு இறுதிச் சடங்குகள் செய்யும் உரிமையுடையவர்கள் பிணத்திற்கு இட்ட செந்தீயை விளக்காக கொண்டு ஆட ஆயத்தமானார் .இதனையே அம்மை

" தக்கவர் இட்ட செந் தீவிளக்கா " என்றார் (30)

இறையாடல்

காளியுடனான போட்டியில், காளியை கேலி செய்து, வாதம் செய்து , மண்டலம் என்று சொல்லப்படுகின்ற ஆடலின் ஆரம்ப நிலைக்கு கால்களை இயக்கி இரு கால்களையும் பக்கவாட்டில் பார்சுவமாய் திருப்பி முழங்கால் அளவில் சற்று மடக்கி இடுப்பை அசைத்து சற்றே குனிந்த நிலையில் ஆடலை ஆரம்பிக்க, ஆட்டம் வேகமெடுக்கிறது. வேகத்தின் விளைவாய் ஒரு காலை எடுத்து உடலிலிருந்து விலகுமாறு அண்டத்தில் வீசி தூக்கியதால் ஏற்பட்ட உடல் சாய்வை சமப்படுத்தி, நேராக நிமர்ந்து நின்று ஒரு கரணம் தோன்றுமாறு ஆடினார். அந்த விக்ஷ்னுகிராந்தம் என்ற கரணத்தை ஆட, .போட்டியாளரான காளி வெட்கி தான் ஒரு பெண் என்பதால் காலை மேலே தூக்கி ஆகாயத்தில் வீசுதல் தகாது என்று எண்ணி இக் கரணத்தை செய்ய வெட்கி போட்டியிலிருந்து விலகினார். (31)

சுத்த நிருத்தம் என்றும் சொக்கம் என்றும் சொல்லப்படுகின்ற ஆடலில் அடங்கிய 108 கரணங்களில் ஒன்றான இக் கரணத்தை நாட்டிய சாத்திரம் 100 வது கரணமாக விக்ஷ்னுகிராந்தம் என்று அடையாளப்படுத்துகின்றது சிவாகமங்கள் இதை ஊர்த்தவதாண்டவம் என்று சொல்கிறது, ஆடல் வல்லான் வெற்றிபெற்ற இக் கரணத்தை இக் காட்டில் ஆடினார் என்றும் எப்படி ஆடினார் என்பதை அழகுபடத் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்,

மண்டலம் நின்றங்கு உளாளம் இட்டு
வாதித்து வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்ந்து ஆடும் எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே .(32)

சொக்கம் ஆடி வெற்றி பெற்ற சொக்கன், இக்கரணத்தை ஆடியவுடன் சுற்றி ஆடிக் கொண்டிருந்த, பேய்கள் ஒரு குழுவாக இணைந்து துணங்கை என்ற ஆடலை ஆடியதாம் ஆடிய பேய்களை உற்று நோக்கினால் அவை எல்லாம் நெடும் பற்களும் குழி விழுந்த கண்களையுடையதாய் இருந்தன..இதனை அம்மையார்



(32அ)

‘ ……………………………………………….. நெடும்பற் குழிகட்பேய்
துணங்கையெறிந்து " என்கிறார்.(33)

( துணங்கை என்பது சங்க காலத்தில் மக்களால் மிகப் பரவலாக ஆடப்பட்ட ஒரு ஆடலாகும் என்றும் இது பொதுவாக மகளிர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய ஆடலாகும் என்றும் இதற்கு தலைக்கை தருவது ஆடவர் பங்காக இருந்தது என்றும் புறவாழ்வான போர்களத்தில் நடத்தப்பட்ட வெண்றாடு துணங்கை என்ற ஆடல் ஆடவர் ஆடலாய் அமைந்தது என்கிறார் அறிஞர் மருத்துவர் முனைவர் இரா,கலைக்கோவன் அவர்கள் )

இந்த துணங்கை கூத்தை ஆடிய பேய்களை பெண் பேய்கள் என்று அம்மை குற்ப்பிடாததால் இவைகளை ஆண் பேய்களாக நாம் எடுத்துக் கொண்டால் புறக்கூத்தான போரில், வெற்றிபெற்ற்தையடுத்து ஆடப்படுகின்ற வெண்றாடு துணங்கையைத் தான் இப் பேய்கள் ஆடியிருக்கவேண்டும்.ஏனென்றால் காளியுடனான ஆடற் போட்டியில் வென்ற கருத்தனாரின் கணங்கள் அல்லவா அவை.

மறுபுறத்தே

"சுழலும் அழல்விழிக் கொள்ளி வாய்பேய்
சூழ்ந்து துணங்கையிட்டு ஓடியாடி " ஆடல் செய்கிறாதாம்.(34)

கொள்ளிவாய் பேய்கள் கூடி துணங்கைக் கூத்தை ஆடி முடித்தவுடன் அடுத்த ஆடல் ஆரம்பமாகிறது. பித்தன் வடிவம் ஏற்று அடுத்த ஆடலை ஆடத்தொடங்கினாராம் அந்த பிஞ்ஞகன். இதனை அம்மை

" பித்த வேடம் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே ". என்கிறார் (35) இதற்கு

" கூளிக் கணங்கள் குழலோ டியம்ப " குழகன் ஆடினாராம். (36)

நேரம் செல்லச் செல்ல ,ஆட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. நள்ளிரவும் வந்தது .நாயகனுக்கு பிடித்தமான நேரம் அது அல்லவா.

" இரவில் தீயாடும் எம்மனார் " (37)
" பொங்கிரவில் ஈமவனத்து ஆடுவதும் " (38)
" பேரிரவில் ஈமப்பெருங்காட்டில் " (39) என்கிறார் அம்மை.

ஆடு களத்தில்

" காலுயர் வட்டனை இட்டு நட்டம் " (40) ஆடினார் என்று அம்மை பாடுகிறார் வட்டணை என்பது ஆடல் வல்லானின் அழகிய ஆடல் நடையைக் குறிப்பதாகும். வலமிருந்து இடமாகவும் ,இடமிருந்து வலமாகவும் சுழன்று நடந்து வட்டமிட்டாற் போல் வருவதே வட்டணையாகும். திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூர் குரக்குநாதர் கோயிலில் உள்ள பிச்சைத்தேவர் சிற்பம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். (40அ)



சீனிவாசநல்லூரில் வட்டணை பயிலும் வடிவழகர்

பின் வந்த அப்பர் பெருமானும் இறைவனின் வட்டணை நடையை சிறப்பாக வலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) பதிகத்தில் பாடியுள்ளார்

" பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
பசுசாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாகி யிங்கே வந்தார்க்
கெவ்வூரீர் எம்பெருமா நென்றே நாவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே (41)
பிணங்கள் எரிந்து முடிந்ததும் சாம்போலோடு இருக்கும் களத்தில் நின்று கையில் `கனல் ஏந்தி ஆடுகிறார் ஆடும் வேகத்தில் " தாழ் சடை எட்டுத் திசையும் வீசி" (42) அங்கம் குளிர்ந்து அனலில் ஆடுகிறாராம். ஆடுதலால் வீரக் கழல் ஒலித்திட பேயொடு கையில் கனல் ஏந்தி தீயில் ஆடுகிறராம். அவ்வாட்டத்தால்

"அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகாய் அழல் சிவந்த வாறோ " (43)

எதனால் எது சிவந்தது என்று அறிய முடியவில்லையாம். அந்த ஆட்டத்திற்கு நரி யாழினை மீட்டி இசைத்து ஊளையிட, பகண்டை என்ற பறவை ஆடிப் பாடியதாம். இதைப்பார்த்த இறைவனும் பல இசைக் கருவிகளை வைத்து வாசித்து ஆடுகிறாராம் அவை என்னனென்ன இசைக்கருவிகள் என்பதை அம்மையே பட்டியலிடுகிறார்.

" சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதந் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து" (44)

சச்சரி , கொக்கரை , தக்கை , தகுணி ,துந்துபி ,தாளம் , வீணை ,மத்தளம் , கரடிகை ,தமருகம் ,குடமுழா ,மொந்தை முதலிய கருவிகள் இங்கே சுட்டப்படுகின்றன. இவைகளில் கொக்கரை என்ற காற்றுக் கருவியும், தகுணி, துந்துபி, மத்தளம் ,கரடிகை ,தமருகம் ,குடமுழா ,மொந்தை ஆகிய தோற் கருவிகளும் தாளம் என்ற கஞ்சக் கருவியும் காரைக்கால் அம்மையாரே முதன் முதலில் வரலாற்று உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். (44அ) இந்தக் கருவிககளை எல்லாம் இயக்கி இசை எழுப்பிய இறையனார் மனம் உகந்து பாடவும் செய்கிறார். அவர் எவ்வாறு பாடினார் என்பதை அம்மை

" துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம்
உழைகுளி ஓசைபண் கெழுமப்பாடி " (45) என்ரு பதிவு செய்கிறார்.

துத்தம் ,கைகிளை , விளரி , தாரம் , உழை , குளி , ஓசை என்ற ஏழு பண்களில் பாடத்தொடங்குகிறார். பாடத்தொடங்கியவுடன் நிருத்தத்தையும் தொடங்குகிறார். அந்த நிருத்தனின். அவிநயக் கூத்தும் ஆரம்பமாகிறது. ஆகாரியம் என்று கூறப்பட்ட அமைப்பின் படி, ஆடுகளமான பிணமேடையில் சுற்றி நடமாடுகின்ற விலங்குகள், பறக்கின்ற பறவைகள் அவை தம் எழுப்புகின்ற ஒலியின் பின் புலத்தில், ஒப்பனையேற்றிய தோற்றத்தில் எரிகின்ற பிணத்தீயினிணுள் கையில் கனல் ஏந்தி ஆடுகின்றார். ஆடல் துவங்கியவுடன் பாடல் பிறக்கின்றது. பாடல் துவங்கியவுடன் அதன் பொருளுக்கேற்ப கை கால், கண் மற்ற உடல் உறுப்புகள் இயங்கி ஆங்கிகம் அமைப்பில் அசைவு பெற்று, , உள்ளத்தில் உருவாகும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப இயங்குவதால், வாசிகம் அமைப்பில் பாடல் பிறக்க, சுற்றி கூடியிருந்த

" திரங்குவர் வாய்ப் பேய் நின்று பாட " (46)
" பறை போல் விழிகட்பேய் கொட்ட " (47)
" பேய் கொட்ட முழவரங் கூளி பாட " (48) குழகர் ஆடி,ட. பார்வையாளராக இருந்த
" மலையான் மகளும் மருண்டு நோக்க " (49)

அங்கே ஆடலும் ,பாடலும் ,இசைத் தொகுப்பும் சங்கமித்து இருந்தன.

கூத்தனாரின் ஆடல் கண்டும் பாடல் கேட்டும் சூழ இருந்த பேய்களும் கூளிகளும் தங்களை மறந்து மயங்கி களிப்படைந்து தாங்களும் சாத்விகம் என்ற அவிநயக் கூத்தின் கோட்பாட்டிற்குள் ஆடியும் பாடியும் இசைத்து இருந்தன.

நேரம் செல்ல செல்ல ஆட்டத்தின் சுழற்சியின் வேகமும் கூடிற்று ஆனந்தம் பெருக்கெடுக்கிறது ஆடல் வல்லானுக்கு. ஆடலும் ஒரு வடிவெடுக்கிறது. அங்கே ஆனந்த தாண்டவம் மலர்கிறது. சிவகாமத்தில் குறிப்பிடப்படும் ஆனந்த்தாண்டவம், நாட்டியசாத்திரம் குறிபிடும் 108 கரணங்களில் 24 ஆவ்து கரணமாக புஜங்கத்ராசிதம் என அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த ஆடலை ஆடும் புனிதன் "புயங்கன்" என அழைக்கப்படுகிறான். அவனின் கால், வீசும் நிலையிலும் தீக்குள் எட்டு திசையிலும் அவனின் விரிசடை, வீசும் நிலையிலும், சுழன்று ஆடும் தத்துவத்தை உள்வாங்கி உளி மூலம் படைத்திட்ட பல்லவ சிற்பிகள் சோழச் சிற்பிகள் எத்தனை எத்தனையோ அதிலும் வார்ப்பில் வடித்திட்டு,வடிவிட்டு வழங்கிய திருமேனிகள்தான் எத்தனை எத்தனையோ. அழகு ரசம் சொட்ட சொட்ட , கிட்ட கிட்ட வந்து ஆவல் பார்க்கத் தூண்ட, மனத்தில் மயக்கம் ஏற்ப்படுத்திய அந்த மாயவனின் சிலைகள்தான் எத்தனை எத்தனை. கண் கொண்டு பார்த்ததனால் கவரப்பட்டு களவாடி கடல் தாண்டிப் போய் காலப்பெட்டகத்தில் கருவூலமாய் கண்டு, பின் கானாமல் போன அந்த கருத்தனாரின் சிலைகள்தான் எத்தனை எத்தனையொ. இப்படி எல்லோராலும் விரும்பப் படுகின்ற அந்த புஜங்கத்ராசிதம் கரணத் தோற்றத்தின் அழகில் மயங்கி, பின் வந்த அப்பர் சுவாமிகள்

" குனித்த புருவமும் கொவ்வைசெவ் வாயில் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே " (50)

என்று பாடியுள்ளார் .அப்பர் பார்வையில் பட்ட பரமனின் கொவ்வை செவ்வாயும் , குமின் சிரிப்பும் அம்மையின் பார்வையில் படவில்லை.போலும் அம்மையின் பார்வையில் அரனாரின் ஆடும் வேகமும், வீரியமும் , சுழற்சியும்தான் தென்பட்டது.

" காடும் கடலும் மலையும் மண்ணும்
விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவம் புயங்கன் எங்கள்
அப்பன் ஆடும் இடம் திருவாலகாடே " (51) என்று பதறுகிறார்

இறைவன் கேட்கவில்லை ஆடல் இன்னும் வேகம் கொள்கிறது. இதனைப் பார்த்து அச்சம் கொண்ட அம்மை பாடுகிறார்

" அடிபேரின் பாதாளம் போகும் அடிகள்
முடிபேரின் மாமகுடு பேரும் கடகம்
மறிந்தாடு கைபேரில் வாந்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றாது அரங்கு " (52) என்கிறார்.



புஜங்கத்ராசிதத்தில் புயங்கன்

இறைவனே நீங்கள் ஆடல் கொள்ளும்போது தங்கள் திருவடி வேகமாகப் பெயர்ந்திடுதலால் கீழுள்ள பாதாள உலகம் நிலை பெயர்ந்திடும். தாங்கள் திருமுடியைப் பெயர்த்து விரைவாக ஆடினால் அது வானத்தின் உச்சியை முட்டி அதுவும் பெயர்ந்திடும். வளையல்கள் கொண்ட திருக்கரங்களை வீசி ஆடினால் பெரிய திசைகளும் தம் நிலை குலைந்துபோகும். ஆகவே இவற்றை எல்லாம் அறிந்து நடனம் புரிந்திடுக. இந்த சிறிய ஆடுகளம் தங்களின் ஆனந்தத் தாண்டவத்தை தாங்காது நிலைகுலையும் என அம்மை எச்சரிக்கிறார். அம்மை பாடிய பாட்டை பரமனார் கேட்டிருக்கவேண்டும். ஏனென்றால் சுழன்ற காடும் கடலும் மலையும் மண்ணும் விண்ணும் தற்போது சுழலவில்லையே. பக்தரின் பக்திமயமான பாசத்தை பார்ப்பவனல்லவோ அந்த பரமேஸ்வரன்.

அடிக்குறிப்புகள்

1) பதினொராந் திருமுறை-மூலமும் உரையும்- புலவர் பி.ரா. நடராஜன்
2) காரைக்கால் அம்மையார் –கோமதி சூரியமூர்த்தி-பக்கம் 24
3) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-11
4) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது திருப்பதிகம் பாடல்-11
5) அற்புதத் திருவந்தாதி-பாடல்-86
6) தலைக்கோல்-இரா.கலைக்கோவன் -பக்கம்-127,128,129,130.
7) தலைக்கோல்-இரா.கலைக்கோவன் -பக்கம்-133-137.
8) . தலைக்கோல்-இரா.கலைக்கோவன் -பக்கம்-144-146.
9) . தலைக்கோல்-இரா.கலைக்கோவன் -பக்கம்-147.
10) சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன் -பக்கம்-16
11) சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன் -பக்கம்-16
12) சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன் -பக்கம்-16
13) சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன் -பக்கம்-16
14) சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன் -பக்கம்-16
15) சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன் -பக்கம்-16
16) தலைக்கோல்-இரா.கலைக்கோவன் -பக்கம்-32.
17) தலைக்கோல்-இரா.கலைக்கோவன் -பக்கம்-32
18) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-10,
மற்றும் இரண்டாவது பதிகம் –பாடல் -7
19) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-3.
20) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது திருப்பதிகம் பாடல்-5
21) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-3.
22) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-1.
23) இரட்டை மணிமாலை- பாடல்-15.
24) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-1
25) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-6
26) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-8
27) இரட்டை மணிமாலை- பாடல்-11
28) இரட்டை மணிமாலை- பாடல்-13
29). அற்புதத் திருவந்தாதி-பாடல்-38
30) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-10
31) முனைவர் மருத்துவர் இரா.கலைக்கோவன் அவர்களுடன் கைபேசியில் உரையாடிய செய்தி நாள்- 25.09.2021
32) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-4
32அ) நன்றி. ஆடல்வல்லான் – திருவாவடுதுறை ஆதினம் வெளியீடு
33) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-1
34) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-7
35) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-4
36) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-6
37) அற்புதத் திருவந்தாதி-பாடல்-30
38) அற்புதத் திருவந்தாதி-பாடல்-25
39) அற்புதத் திருவந்தாதி-பாடல்-51
40) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-7
40அ) தலைக் கோல்- இரா.கலைக்கோவன் –பக்கம்- 37
41) அப்பர் –தேவாரம்-6-58-7
42) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-1
43) அற்புதத் திருவந்தாதி-பாடல்-98
44) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-9
44அ) சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன் -பக்கம்-163
45) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-9
46) இரட்டை மணிமாலை- பாடல்-15
47) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-1
48) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-1
49) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –இரண்டாவது பதிகம் பாடல்-8
50) அப்பர் –தேவாரம்-
51) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் –முதல் திருப்பதிகம் பாடல்-8
52) அற்புதத் திருவந்தாதி-பாடல்-77

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.