http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 159

இதழ் 159
[ நவம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

பேய் பாடிய பிஞ்ஞகனின் ஆடல்கள்
எடுத்த படியும் அடித்த படியும்
புள்ளமங்கை ஆலந்துறையார் தாங்குசிற்பங்கள்
கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 4
ஜப்பானியப் பழங்குறுநூறு - 1 (துளியுதிர் இரவு)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 4
இதழ் எண். 159 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 1 (துளியுதிர் இரவு)
ச. கமலக்கண்ணன்

நூல் அறிமுகம்:

பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் நிலப்பிரபுக்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சதாய்யே என்ற மன்னர் கி.பி. 1235ல் 百人一首 (Hyaku nin isshu - Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97வது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

இவை அனைத்தும் தான்கா என்னும் பாடல் வகையைச் சேர்ந்தவை. 5 அடிகளில் அமையும் இப்பாவகையின் சீர்கள் 5-7-5-7-7 என்ற வடிவைக் கொண்டிருக்கும். இந்த நூறு பாடல்களில் சிலவற்றைத் தமிழாக்கி வெண்பா வடிவில் தரவிரும்பும் அடியேனின் சிறுமுயற்சியே இக்கட்டுரைத்தொடர்.

பாடல் 1: துளியுதிர் இரவு

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
秋の田の
かりほの庵の
苫をあらみ
わが衣手は
露にぬれつつ

கனா எழுத்துருக்களில்
あきのたの
かりほのいほの
とまをあらみ
わがころもでは
つゆにぬれつつ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் தென்ஜி (தென்ச்சி என்றும் அழைக்கப்பட்டார்)

காலம்: கி.பி. 626-671

நகாதொமி வம்சத்தையும் சோகா வம்சத்தையும் வீழ்த்திவிட்டுத் தென்ஜி வம்சத்தை நிறுவியவர். ஜப்பானின் தலைநகரை நரா மாகாணத்திலிருந்த அசுகா என்ற இடத்திலிருந்து ஷிகா மாகாணத்தின் தற்போதைய ஓட்சு நகரிலிருக்கும் ஓமி என்ற இடத்துக்கு மாற்றினார்.

ஜப்பான் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு வம்சம் சோகா வம்சம். புத்த மதம் இந்தியாவில் தோன்றி சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 6ம் நூற்றாண்டில் ஜப்பானில் பரவத் தொடங்கியது. சோகா வம்சத்தின் ஷோதொக்கு என்ற இளவரசர் ஜப்பானின் வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்தவர். இவர்தான் ஜப்பானின் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை 17 பிரிவுகளுடன் உருவாக்கியவர். அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்த சுய் வம்சத்தினருடன் தொடர்பு கொண்டு இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு தூதுக்குழுக்களைப் பரிமாறிக்கொண்டு உலகத் தொடர்பை ஏற்படுத்தியவர். இத்தூதுக் குழுக்கள் மூலம் கி.பி 10ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் சீனாவுக்குச் சென்று கலை, கலாச்சாரம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு தகவல்களை ஜப்பானுக்குக் கொணர்ந்தனர். இவர்தான் புத்த மதத்தை ஜப்பானின் அரச மதமாக ஆக்கினார். இவர் காலத்தில் நரா நகரில் கட்டப்பட்ட ஹோர்யூஜி கோயில் உலகின் பல்வேறு கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டு கட்டப்பட்டது.

கி.பி 622ல் ஷோதொக்கு இறந்தபிறகு இருக்கா என்பவர் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். இவரைத்தான் இப்பாடலின் ஆசிரியர் பேரரசர் தென்ஜி தோற்கடித்தார். தென்ஜியும் ஜப்பானின் அரசியலில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்ததில் ஷோதொக்குவுக்குச் சளைத்தவரல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் சில பிரிவுகளைத் திருத்தினார். அதுமட்டுமின்றி, நீதிமுறை, வரிகள், சமூக அமைப்பு, இராணுவம் எனப் பல முன்னெடுப்புகளைச் செய்தார். பிற்காலத்தில் மார்க்கோபோலோ போன்ற பல பயணிகளும் வணிகர்களும் மதத்தலைவர்களும் பயன்படுத்திய பட்டுப்பாதை (Silk Road) இவரது காலத்தில்தான் கி.பி. 651ல் உருவாக்கப்பட்டது. சிறந்த ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் கலைகளிலும் இலக்கியங்களிலும் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள் என வரலாறு கண் சிமிட்டும் நேரம் இது. இதே காலகட்டத்தில் நம் ஊரில் முதலாம் மகேந்திரவர்மரும் இராஜசிம்மரும் மாமல்லபுரத்திலும் காஞ்சிபுரத்திலும் கலையின் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால், ஜப்பானில் பேரரசர் தென்ஜி இலக்கியம் படைக்கத் தொடங்கியிருந்தார்.

பாடுபொருள்: அறுவடைக் காலத்தின் ஓர் இரவு

பாடலின் பொருள்: அறுவடையின்போது இரவு நேரங்களில் திணைப்புனம் காக்கும் உழவர்களுடன் ஓர் இரவைச் செலவிட ஒரு தற்காலிகக் குடிலில் தங்கியிருந்தேன். வைக்கோல் கொண்டு வேயப்பட்டிருந்த அக்குடிலின் கூரையில் இருந்த இடைவெளியின் வழியே என் தோள்மீது இறங்கிய பனித்துளிகளால் என் உடை ஈரமாகிக் கொண்டிருந்தது.

குடிலின் கூரை உழவர்களின் வாழ்க்கையைக் குறிப்பதாகச் சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.

வெண்பா:

உயர்பேர் ஒழுக்கத் துழவர் பயிர்செய்
வயல்சேர் பொசிநீர் வரம்பின் - உயர்கதிர்
நெல்நீங்கு புல்வேய்க் குடில்சிந்து தண்துளி
மெய்ப்பை நனைக்கும் இரவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.