http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 12

இதழ் 12
[ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

இன்னல்களைக் களைவோம்
மூதூரும் முதுமக்கள் தாழியும்
பகவதஜ்ஜுகம் - 3
ஆந்தையும் உண்டுதான் படித்த ஞான்றே!
திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் திருக்கோயில்
மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும்
கோயில்களை நோக்கி - 1
தட்டுவார் திறனுக்கேற்பத் திறக்கும் கதவுகள்!
கல்வெட்டாய்வு -10
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம்
சங்கச்சாரல் - 11
குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
இதழ் எண். 12 > கலையும் ஆய்வும்
மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும்
அர. அகிலா
கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டைச் சாலையில், கந்தர்வக்கோட்டையில் இருந்து ஏறத்தாழப் பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மங்களாவூர், அருகிலுள்ள வெள்ளாள விடுதியின் உட்கிடை ஊராக வருவாய்ப் பதிவுகளில் குறிக்கப்படுகிறது. மிகப் பிந்தங்கிய சிற்றூராகக் காணப்படும் இவ்வூரில், பெருவழியின் வலப்புறம் களையிழந்து காணப்படுகிறது மத்யார்ச்சுனேசுவரர் திருக்கோயில்.

கோடையிலும் வற்றாதிருக்கும் பெருங்குளத்தையொட்டி அமைந்திருக்கும் கோயிலின் முன்னால், சிதைந்த மண்டபமொன்று வெறும் தூண்களை மட்டும் உடைமைப் பொருள்களாகக் கொண்டு நிற்கிறது. இத்தூண்களுள் ஒன்றில் இம்மண்டபத்தைக் கட்டியவர் கைகூப்பி வணங்கியபடி இதைச் சீரமைக்கும் வேண்டுகோளுடன் நிற்கிறார். இங்கேயே நந்தியொன்று கோபுரப் பார்வையில் அமர்ந்துள்ளது. கோபுரவாயிலின் இருபுறத்தும் சிதைந்த நிலையில் உயரமான திண்ணைகள். இவற்றின் எஞ்சியிருக்கும் தூண்கள், திருமலை நாயக்கர் மகால் தூண்களை நினைவுபடுத்துவதுடன், இம்மண்டபம் வளமையாக இருந்தபோது எப்படி இருந்திருக்கும் என்பதையும் உணரவைப்பனவாய் அமைந்துள்ளன. அடித்தளம் மட்டும் கருங்கல் பணியாகவும் மேற்றளங்கள் செங்கல் கட்டுமானமாகவும் நிற்கும் முத்தளக் கோபுரம் பிற்காலப்பணி.

கோபுரவாயிலுள் நுழைந்ததும் நடைமண்டபமும் மையக்கோயிலும் எதிர்கொள்கின்றன. விரைந்து முடிக்கக் கருதிக் கட்டப்பட்டாற்போல் நிற்கும் நடைமண்டபம், வடக்கிலும் தெற்கிலும் திருச்சுற்றாய் விரிந்து மேற்கில் பரவுகிறது. இம்மண்டபத்தின் வடபுறத்தே பெரியநாயகி என்ற பெயருடன் திகழும் அம்மனின் திருமுன், இருதளக் கலப்பு வேசர விமானமும் முகமண்டபமுமாய் நிற்கிறது. ஒழுங்கற்ற திருப்பணியாக இருந்தாலும் இரண்டுமே கருங்கல் கட்டமைப்புகளாக உள்ளன.

அம்மன் திருமுன்

துணைத்தளம், பெருந்தாமரை, உருள்குமுதம், கண்டம், கபோதம் கொண்ட கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி கொண்டெழும் அம்மன் திருமுன் விமானத்தின் சுவரை சதுரபாதத்தின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. தாமரை வரை எண்முகமாக உள்ள இத்தூண்களின் பலகை மேல் வீரகண்டமும் போதிகையும். போதிகையின் மதலைகள் உத்தரம் தாங்க, நாணுதல்கள் பூமொட்டுடன் தாழ்ந்துள்ளன. மேலே வாஜனம், தாமரை, வலபி, கூரை. கூரையின் வெளிநீட்டலான கபோதம் ஆழமற்ற கூடுவளைவுகளுடன் உள்ளது. ஆர உறுப்புகளும், இரண்டாம் தளமும், வேசர கிரீவமும் சிகரமும் செங்கற்பணிகளாக உள்ளன. விமானச் சுவரில் முப்புறத்துமுள்ள கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. விமானக் கட்டமைப்பிலேயே உள்ள முகமண்டபத்தின் வாயில் தெற்கு நோக்கியுள்ளது.

கருவறையில் அம்மன் பெரியநாயகியாய்ப் பின்கைகளில் அக்கமாலையும் மலரும் ஏந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டு சமபங்கத்தில் எழுந்தருளியுள்ளார். இத்திருமேனி பிற்காலத்தது. முதலில் இருந்த திருமேனியின் இடப்பின்கை சிதைவுற்றதால், அத்திருமேனியை மையக்கோயில் பெருமண்டபத்திற்குள் எழுந்தருளச் செய்து, கருவறையில் இப்புதிய சிற்பத்தை நிறுவியுள்ளனர். பழைய அம்மன் எழிலுடன் உள்ளார். அழகான திருமுகம். இடப்பின்கை சிதைவு தவிர வேறொரு குறையுமற்ற இந்தத் திருமேனியும் வழிபாட்டில் உள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

சுற்றுத் திருமுன்கள்

திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் திருப்பணிக்கு ஆளாகியிருக்கும் பிள்ளையார் திருமுன் இருதள நாகர விமானமும் முகமண்டபமும் பெற்றுள்ளது. விமானக் கட்டமைப்பு முறையற்ற தாங்குதளமும், சுவரும், கூரையும் பெற்று, சுதையுருவங்களுடனான மேற்றளத்துடன் விளங்குகிறது. கருவறையிலிருக்கும் பிள்ளையார் சிற்பமும் பிற்காலத்ததே. முகமண்டபத்தில் பழனியாண்டியின் சிற்பமொன்று நிறுத்தப்பட்டுள்ளது. வடமேற்கு மூலையில் இரு திருமுன்கள் உள்ளன. அவற்றுள் தெற்குத் திருமுன்னில் முருகன் ஆறுமுகனாய் மயில் மீது அமர்ந்துள்ளார். இருபுறமும் தேவிகள் தெய்வானையும் வள்ளியும் ஒரு கையில் மலரேந்தி மறுகையை நெகிழ்த்தியுள்ளனர். மூவருமே பிற்காலத் திருமேனிகள்.

விமானத்தருகே வடபுறத்திருக்கும் சண்டேசுவரர் திருமுன்னும் பிற்காலப் பணியே. உள்ளே பிற்காலத் திருமேனியராய் சுகாசனத்திலுள்ள சண்டேசுவரர் வலக்கையில் மலரேந்தி இடக்கையைத் தொடை மீதிருத்திச் சடைபாரத்துடன் காட்சிதருகிறார். வடகிழக்கில் யாகசாலையும். இரு திருமுன்களும் உள்ளன. திருமுன்களில் பைரவரும் சூரியனும் இடம்பெற்றுள்ளனர். இரு கைகளிலும் தாமரையேந்தியுள்ள சூரியன் இங்குள்ள சிற்பங்களிலேயே சற்றுப் பழமையானவர். பைரவர் திருமுன்னிற்கும் சூரியன் திருமுன்னிற்கும் இடையிலுள்ள வெளியில் பிற்காலச் சனீசுவரர் மக்கள் வரத்து நோக்கி வினை நீக்கக் காத்திருக்கிறார். தென்கிழக்கில் மடைப்பள்ளி.

மையக்கோயில்

பெருமண்டபம், முகமண்டபம், விமானம் என அமைந்திருக்கும் மையக்கோயிலின் மூன்று கட்டமைப்புகளுமே சமகாலத்தன. ஓரளவிற்கு நன்னிலையில் பராமரிக்கப்பட்டு வரும் இம்மூன்று கட்டமைப்புகளும் திருப்பணி காணவுள்ளன. முந்து திருப்பணியின்போது இக்கட்டமைப்புகளிலிருந்த கல்வெட்டுகள் முழுவதும் சிதறடிக்கப்பட்டதாகக் கோயிலின் முன்னாள் சிவாச்சாரியாரை நேர்முகம் கண்டபோது அறியமுடிந்தது. பெருமண்டபத் தாங்குதளத்திலும் முகமண்டபத் தாங்குதளத்திலும் சிதைந்தழிந்த அக்கல்வெட்டுகளின் சில துணுக்குகளைக் காணமுடிகிறது.

பெருமண்டபம்

துணைத்தளம், தாமரை உபானம், ஜகதி, உருள்குமுதம், கண்டம், பட்டிகை கொண்டமைந்த பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி கொண்டெழும் பெருமண்டபச் சுவரை எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. இவ்வெண்முகத் தூண்கள் நாகபந்த முனைகள் கொண்ட சதுரபாதமும் எண்முக உடலும் பெற்றுள்ளன. பலகை தவிர்ந்த இவற்றின் மேலுறுப்புகளும் எண்முகமாகவே உள்ளன. போதிகைகளின் மதலைகள் உத்திரம் தாங்க நாணுதல்கள் பூமொட்டுடன் தாழ்ந்துள்ளன. மேலே வாஜனம், தாமரை, வலபி, கூரை. கூரையின் முன்னிழுப்பான கபோதத்தில் ஆழமற்ற கூடுகளும் வளைவுகளும் உள்ளன. மேலே பூமிதேசம். வட, தென் சுவர்களில் சட்டத்தலை பெற்ற ருத்ரகாந்த அரைத்தூண்களினால் அணைக்கப்பட்டுள்ள கோட்டங்கள் பஞ்சரங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெறுமையாக உள்ள அக்கோட்டங்களுள், வடபுறக் கோட்டத்தின் கீழ் வேதிக்கண்டத்தில் திருமஞ்சண நீர்வழி காணப்படுகிறது. இது பின்னாளைய இணைப்புப்போல் தெரிகிறது.

பெருமண்டப வாயிலின் வலப்புறம் பிள்ளையாரும் இடப்புறம் பழனியாண்டியும் புடைப்புச் சிற்பங்களாகச் சுவரிலேயே செதுக்கப்பட்டுள்ளனர். இம்மண்டபத்தின் உட்புறத்தை, சதுரம், கட்டு, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலான தூண்கள் தாங்குகின்றன. மேலே போதிகைகள், உத்திரம், வாஜனம், வலபி, கூரை. உத்திரத்தின் கீழ்ப்பகுதி கொடிக்கருக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூன்று தூண்களின் நடு சதுரத்திலிருந்து புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இம்மண்டபத்தின் வடபுறத்தில் நெடுக ஒரு திண்ணையும் தென்புறத்தில் சிறு திண்ணையும் உள்ளன. வடபுறத்தே பழைய அம்மன் திருமேனி தென்பார்வையாக நிறுத்தப்பட்டுள்ளது.

முகமண்டபம்

விமானத்தைப் போலவே துணைத்தளமும், சுவரும் கூரையும் பெற்றிருக்கும் முகமண்டபத்தின் தென்புறக் கோட்டத்தில் ஆடற்கோலப் பிள்ளையாரும் வடகோட்டத்தில் துர்க்கையும் உள்ளனர். பிள்ளையாரின் வலமுன்கையில் உடைந்த கொம்பும், பின்கைகளில் அங்குசமும் உள்ளன. இடமுன்கை அர்த்தரேசிதத்தில் வீசப்பட்டிருக்கப் பின்கையில் மோதகம். துதிக்கை இடம்புரியாய், இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. தலையில் கரண்ட மகுடமும் மார்பில் முப்புரிநூலும், உதரபந்தமும் இடுப்பில் சிற்றாடையும் அணிந்து, தாமரைத் தளத்தின் மீது இடப்பாதத்தைப் பார்சுவமாய் நிறுத்தியிருக்கும் இப்பெருமானின் வலப்பாதம் சூசியில் உள்ளது. இரு தந்தங்களில் வலத்தந்தம் உடைந்துள்ளது. பொதுவாக ஆடற்கோலப் பிள்ளையார்கள் ஊர்த்துவஜானு கரணத்தில் வடிக்கப்படுவதே மரபு. ஆனால், இங்கு அதற்கு மாறாக சூசிவித்தா கரணம் போலப் பிள்ளையாரின் ஆடற்கோலம் அமைந்திருப்பது மாறுபட்ட அமைப்பாக உள்ளது.

வடகோட்டத்தில் உள்ள கொற்றவை, சமபங்கத்தில் எருமைத் தலை கோட்டுருவமாகக் கீறப்பட்டுள்ள கருங்கல் தளத்தில் நிற்கிறார். பின்கைகளில் சங்கும் சக்கரமும். முன்கைகளில் வலக்கைக் காக்கும் குறிப்புக் காட்ட இடக்கை கடியவலம்பிதமாகத் தொடையில் உள்ளது. இடையில் கணுக்கால்வரை நெகிழும் பட்டாடை. தலையில் கரண்ட மகுடம்.

விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கத்திலும் முகமண்டபத்திற்கும் பெருமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கத்திலும் குடப்பஞ்சரங்கள். உட்புறம் வெறுமையாக உள்ள முகமண்டபத்தின் வாயிலில் இருபுறத்தும் பேரளவிலான சுதைக் காவலர்கள் நிற்கின்றனர்.

விமானம்

பிதுக்கமான சாலைப்பத்திகளுடன் துணைத்தளத்தின் மேலமர்ந்துள்ள விமானத்தின் தாங்குதள உறுப்புகளில் வர்க்கபேதம் காட்டப்பட்டுள்ளது. சாலைப் பத்திக்கான தாங்குதளம் கபோதபந்தமாகப் பெருந்தாமரையில் தொடங்குகிறது, இதன் மேற்பரப்பில் மேனோக்குத் தாமரைவரி காட்டப்பட்டுள்ளது. மேலே உருள்குமுதம், அதன் மீதும் ஒரு மேனோக்குத் தாமரைவரி உள்ளது. அடுத்த உறுப்பான கண்டம் பாதங்கள், கம்புகளுடன் அமையக் கபோதம் ஆழமற்ற கூடுவளைவுகளுடன் மேலே பூமிதேசம் பரவ இடமளித்துள்ளது. வேதிகைத்தொகுதி கண்டம், கீழ்நோக்குத் தாமரைவரி, வேதிகை, துணைக்கம்பு பெற்றுள்ளது.

கர்ணபத்திகளுக்கான தாங்குதளம் பாதபந்தமாகத் தாமரை உபானத்தில் தொடங்குகிறது. மேலே கம்பு, ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, மேற்கம்பு உள்ளன. ஜகதி, குமுதம், பட்டிகை ஆகிய உறுப்புகளின் மேல் மேனோக்குத் தாமரைவரியும், கண்டத்தின் மீது கீழ்நோக்குத் தாமரைவரியும் சிற்றுறுப்புகளாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பகுதியிலுள்ள வேதிகைத் தொகுதி வேதிக்கண்டம், ஆழமற்ற கூடுவளைவுகளுடனான கபோதம் பெற்று முற்றிலும் மாறுபட்ட அமைப்புகளுடன் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

அடுத்துள்ள மேற்கம்பின் மேலெழும் சுவரை, நாகபந்த முனைகள் கொண்ட சதுரபாதங்களின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. இத்தூண்களின் பலகை தவிர்த்த பிற மேலுறுப்புகளும் எண்முகமாகவே உள்ளன. சதுரப் பலகையின் மேல் வீரகண்டமும் போதிகையும். போதிகையின் மதலை உத்திரம் தாங்க, நாணுதல் பூமொட்டுடன் தாழ்ந்துள்ளது. உத்திரத்திற்கு மேல், வாஜனம், தாமரை, வலபி, கூரை. கூரையின் முன்னிழுப்பான கபோதம் ஆழமற்ற கூடு வளைவுகளுடன் கீழ்ப்பகுதியில் சந்திரமண்டலம் பெற, யாளிவரியற்ற பூமிதேசம் மகரத்தலைகளுடன், அவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் பூப்பதக்கங்கள் பெற்றுள்ளது.

முத்தளக் கலப்பு வேசரமாய் அமைந்துள்ள விமானத்தின் ஆர உறுப்புகளும் மேற்றளங்களும் கிரீவ சிகரமும் செங்கல் பணிகள். ஆர மூலைகளில் கர்ணகூடங்களும், நடுவில் சாலையும் அமைய இடைப்பட்ட ஆரச்சுவரில் சிறுநாசிகைகள். அனைத்து ஆர உறுப்புகளிலும் பொலிவிழந்து போன, சிதைந்த இறையுருவங்கள் திருப்பணியை எதிர்பார்த்து ஏங்கி நிற்கின்றன.

விமான முதல் தளச் சுவரின் முப்புறத்தும் கோட்டங்கள். சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள இக்கோட்டங்களைப் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன. வடக்குக் கோட்டத்தில் நாகர் இருத்தப்பட்டுள்ளார். மேற்குக் கோட்டத்தில் பின்கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடிய வலம்பிதத்திலும் கொண்டுள்ள சிறிய அளவிலான இறைவடிவம் உள்ளது. தென்கோட்டத்தில் ஆலமர் அண்ணல் பின்கையில் அக்கமாலையும் பாம்பும் ஏந்தி வீராசனத்திலுள்ளார். முன்கைகளில் வலக்கை சின்முத்திரை காட்ட இடக்கையில் ஏடு. செவிகளில் வலப்புறம் மகரகுண்டலம். இடப்புறம் பனையோலைக் குண்டலம். மண்டையோடு பொருத்திய சடைபாரமும், கழுத்தணிகளும் கொண்டுள்ள சிவபெருமானின் வலப்பாதத்தின் கீழ் முயலகன். பெருமானின் இருபுறத்தும் முனிவர்கள் ஆகமக் கேள்வியில் ஆழ்ந்துள்ளனர்.

தென்திசைக் கடவுள் கோட்டத்தின் முன், பின்னாளில் இழுக்கப்பட்டுள்ள முன்றில் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பிலான தூண்களைப் பெற்றுள்ளது. இத்தூண்களின் கீழ் சதுரங்களில் இம்முன்றிலையெடுத்த பெருமக்கள் சிற்பங்களாகியுள்ளனர். இக்கீழ்ச்சதுரம் தாமரைத் தளத்தின் மேல் அமரக் கட்டுப் பகுதியில் நடுப்பட்டை காட்டப்பட்டுள்ளது. இம்முன்றில் மேடையில் கிழக்குப் பார்வையாக இருத்தப்பட்டுள்ள பலகைச் சிற்பத்தில் கரண்ட மகுடமணிந்து சுகாசனத்தில் நடுநாயகமாகக் காட்சிதரும் பெண்தெய்வம் ஜேஷ்டையாகலாம். வலக்கையில் மலரேந்தி இடக்கையைத் தொடையிலமர்த்தியுள்ள இவரின் இருபுறத்தும் சுகாசனத்தில் இரு பெண்சிற்பங்கள். வலப்புறம் இருக்கும் பெண் கரண்ட மகுடமணிந்து நந்தி முகத்துடன் நடுப்பெண் போலவே வலக்கையில் மலரேந்தி இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். இடப்புறம் இருக்கும் பெண்ணும் கரண்ட மகுடத்துடன் கையில் மலரேந்தியுள்ளார்.

பொதுவாக ஜேஷ்டைச் சிற்பங்களில் ஜேஷ்டை நடுநாயகமாகவும், வலப்புறம் அவர் மகன் நந்திகேசுவரனும், இடப்புறம் அவர் மகள் அக்கினிமாதாவும் காட்டப்படுவது மரபு. இச்சிற்பத்தில் வலப்புறம் இருக்கவேண்டிய நந்திகேசுவரனுக்குப் பதிலாக, நந்திகேசுவரி காட்டப்பட்டிருப்பது மாறுபட்ட அமைப்பாக உள்ளது. ஜேஷ்டைத் தொகுதி போலவே காட்டப்பட்டிருக்கும் இச்சிற்பத்தொகுதியில் மரபு விலக்கமாக நந்திகேசுவரி இடம்பெற்றிருப்பது ஆராயத்தக்கது. இது வேறெந்த கடவுட்தொகுதியையாவது குறிக்கிறதா என்பது குறித்தும் ஆராயவேண்டியுள்ளது.

கருவறை

விமான ஆதிதளத்தின் உட்புறமான கருவறையின் வாயிலை சட்டத்தலை பெற்று சதுரபாதத்தின் மீதெழும் இந்திரகாந்த அரைத்தூண்கள் தாங்குகின்றன. முறையான பக்க நிலைகளும் மேல், கீழ் நிலைகளும் பெற்றுள்ள வாயிலையடுத்துள்ள கருவறைத் தரையில் இறைவன் ஆவுடையாரின் மேல் லிங்கத் திருமேனியராய் மத்யார்ச்சுனேசுவரர் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகள் பற்றிய குறிப்பு 1930-31 ம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையில் காணப்படுகிறது. இம்மூன்றனுள் இரண்டு பெருமண்டபக் கிழக்குச் சுவரின் குமுதத்தில் உள்ளன. மிகவும் சிதைந்துள்ள இவ்விரண்டனுள் தென்புறக் கல்வெட்டு பராபவ ஆண்டு (கி.பி 1786) ஆடி மாதம் பதினைந்தாம் நாள் வெட்டப்பட்டுள்ளது. மங்கலாவூர் தானத்தாருக்கும் ஊர்க்காரர் ஒருவருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் போல் அமைந்துள்ள இக்கல்வெட்டின் முழுப்பொருளை அறியக்கூடவில்லை (1930-31:211)

வடபுறக் கல்வெட்டு பரிதாபி ஆண்டில் (கி.பி 1792) வைகாசி மாதம் இருபதாம் நாள் வெட்டப்பட்டுள்ளது. இதுவும் மங்கலாவூர் தானத்தாருக்கும் இவ்வூர் வேளாண் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தம் ஒன்றைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும் காருகால் ஓடையை இப்போது அடையாளம் காணக்கூடவில்லை (1930-31:211)

பெருமண்டபத் தாங்குதளத்தின் மேற்கு, தெற்கு ஜகதியில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகளுள், தெற்கிலுள்ள இரண்டு (1930-31:212) தொண்டைமான் ஒருவரின் கொடையைக் குறிப்பதாகவுள்ளன. பிரமாதி ஆண்டு (கி.பி.1759) தை மாதம் ஆறாம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, கோயில் பண்டாரத்தையும் குளவாயில் என்ற ஊரையும் சுட்டுவதுடன், இவ்வறச்செயல் சந்திரனும் சூரியனும் உள்ளவரை நிறைவேற்றப்படல் வேண்டுமென வற்புறுத்துகிறது.

புதிய கல்வெட்டுகள்

பெருமண்டபத்தின் மேற்கு ஜகதியில் காணப்படும் ஆனி மாதம் பதினெட்டாம் நாள் வெட்டப்பட்டுள்ள மற்றொரு துணுக்குக் கல்வெட்டில் ஏரியொன்று குறிக்கப்படுகிறது. பெருமண்டபத்திற்கு முன்னுள்ள நடைமண்டபத் தூண்கள் சிலவற்றில் அவற்றைத் தந்தவராக வை.குழந்தைவேல் என்பாரின் பெயர் உள்ளது.

வடக்கு மதிலில் காணப்படும் கல்வெட்டு கி.பி 1888 (சர்வதாரி) கார்த்திகை மாதம் தொடங்கி கி.பி 1893 (விஜய) ஐப்பசி மாதம் வரை இக்கோயிலின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கிறது. பெரிய கோயிலும் சிறிய கோயில்களும் மதிலும் பட்டுக்கோட்டை வீரப்பப்பிள்ளை வகையினரால் திருப்பணி செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டதாகக் கூறும் இக்கல்வெட்டு சில இடங்களில் கூட்டெழுத்துக்கள் பெற்றுள்ளது.

பெருமண்டபத்தைத் தாங்கும் தூண்களுள் மூன்றின் இடைச் சதுரங்களில் கல்வெட்டுகள் இருப்பது களாஆய்வின்போது கண்டறியப்பட்டது. நுழைவாயிலுக்கு அருகிலுள்ள தூண் கல்வெட்டு, அத்தூணை விக்கிரமராச மூவேந்தவேளாண் தந்ததாகக் கூறுகிறது. முகமண்டப வாயிலுக்கு அருகிலுள்ள தூணின் கல்வெட்டு, அதைச் செய்தவராக, மங்கலவாயி உடையாரான பொன்னர் பெயரைத் தருகிறது. முகமண்டப வாயிலின் வடபுறத்துத் தூணிலுள்ள கல்வெட்டு சிதைந்து விட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள இத்தூண் கல்வெட்டுகள் இரண்டும் விமானக் கட்டமைப்புக் கண்காட்டும் காலத்தோடு ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. இதனால் மங்களாவூரிலுள்ள மத்யார்ச்சுனேசுவரர் கோயிலின் காலத்தைக் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டாக உறுதிபடக் கூறலாம்.

ஏற்புக்கோடல்

இக்கோயிலை ஆய்வு செய்யும் வாய்ப்பமைத்துத் தந்த புதுக்கோட்டைத் தொண்டைமான் அரசமரபைச் சேர்ந்த திரு. துரைராஜ அவர்களுக்கும், கோயிலில் ஆய்வு செய்யும்போது துணைநின்ற சிவாச்சாரியார் திரு. செ. முத்துக்குமார் குருக்கள், ஊர்ப்பெரியவர்கள், கோயில் அலுவலர்கள் ஆகியோர்க்கும் இக்கட்டுரையாசிரியர்களின் உளமார்ந்த நன்றி உரியது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.