http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 12

இதழ் 12
[ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

இன்னல்களைக் களைவோம்
மூதூரும் முதுமக்கள் தாழியும்
பகவதஜ்ஜுகம் - 3
ஆந்தையும் உண்டுதான் படித்த ஞான்றே!
திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் திருக்கோயில்
மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும்
கோயில்களை நோக்கி - 1
தட்டுவார் திறனுக்கேற்பத் திறக்கும் கதவுகள்!
கல்வெட்டாய்வு -10
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம்
சங்கச்சாரல் - 11
குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)
இதழ் எண். 12 > சுடச்சுட
மூதூரும் முதுமக்கள் தாழியும்
பால.பத்மநாபன்
பண்டைக்கால மனித இனம் தம்மோடொத்த மனிதர்கள் இறந்து விட்டால் அந்த உடலை நாயும் நரியும் கழுகும் தின்னுமாறு அங்கேயே போட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்வர். நாகரீகம் வளர்ச்சியடைய, ஆற்றோரங்களில் நிலையாக தங்கி மனிதன் வாழத்தொடங்கிய பின்பே இறந்துபோன மனிதர்களின் உடலை, கற்களை வரிசையாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி நடுவில் பிணங்களை வைத்து மூடும் காலமும் இருந்தது. இந்தக் காலகட்டத்தைப் பெரும் கல்லறை பண்பாட்டு ஊழி (Megalithic Age) என்று அழைப்பர். பின்னர் மண்ணில் குழிதோண்டி புதைக்கும் வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் நாகரீகம் வளர்ச்சி அடைய அடைய பிணங்களை மண்ணால் செய்த புதைகலன்களில் வைத்து புதைக்கும் வழக்கத்தையும் அதன்பின் சுட்டெரிக்கும் பழக்கத்தையும் பெற்றார்கள் என அறிகிறோம்.

இன்றும் பாரசீக இனத்தில் 'சொராஸ்டர்' என்ற சமய மக்கள் இறந்தவர்களின் உடல்களை ஓரிடத்தில் வைத்து அவை அழுகி நாற்றமெடுத்து கழுகு போன்ற பறவைகள் தின்னும்படி செய்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.

பண்டைக்காலத் தமிழினம் இறந்தவர்களின் உடல்களை, அல்லது இறந்தவர்களின் எலும்புகளை மண்ணால் செய்த புதைகலன்களில் வைத்து அவற்றுடன் அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களையும் உடன் வைத்து மண்ணிற்குள் புதைத்து விடுவர்.

இம்மட்கலன்களது நாட்டுப்புற வழக்கில் "மதமதக்கா சால்" என்றும் அறிஞர்கள் "முதுமக்கள் தாழி" என்றும் சிலர் பிணஞ்சுடு சாம்பற் கொள்கலம் (Urn) என்றும் அழைப்பர். பிணங்களை தாழியினுள் வைத்து புதைக்கும் பழக்கம் சங்க காலத்திலும் இருந்து வந்துள்ளது. குளமுற்றம் என்னும் இடத்தில் கிள்ளிவளவன் என்னும் சோழன் துஞ்சியதை அறிந்த ஐயூர் முடவனார் என்னும் சங்கப் புலவர்

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
இருடிணிந்தன்ன குரூத்திரட் பரூஉப்புகை
அகலிரு விசும்பினூன்றுஞ்சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
அளியை நீயே யாங்கா குவைகொல்
நிலவரை சூட்டிய நீணெடுந்தாணைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை
விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவ ருலக மெய்தினனாதலின்
அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி
வனைதல் வேட்டனை யாயினெனையதூஉம்
இருநிலந்திகிரியாப் பெருமலை
மண்ணா வனைத லொல்லுமொ நினக்கே

(புறம் - 228)

என்று பாடியுள்ளார்.

கிள்ளி வளவனின் பூத உடம்பை விட, நில உலகு முழுவதும் பரந்து விரிந்து, வானளவு உயர்ந்து நிற்கின்ற புகழுடம்பை புதைக்க தாழி செய்ய வேண்டுமாயின் நில உலகை ஆழியாகவும், மேரு மலையை மண்திரளாகவும் கொண்டு தாழி செய்ய இயலுமோ? என்று குயவனை நோக்கிப் பாடியுள்ளார். இவ்வாறு சங்க இலக்கியத்தில் வரலார்ரு ஆவணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்ற தாழிகள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கிடைத்து வருகின்றன.

கும்பகோணம் நகரத்திற்கு தெற்கே 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அண்ணலக்ரஹாரத்தைச் சேர்ந்த அரிய திடல் என்ற பகுதியிலும், அருகே அமைந்துள்ள கீழ்க்கொற்கையிலும் (குறுக்கை) இதன் தென்மேற்கே சோழர்களின் தலைநகர்களுள் ஒன்றாய் இருந்த பழையாறைக்கு அருகில் உள்ள திருமேற்றளி நந்தன் மேட்டிலும், உடையாளூரிலும் இம்முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

கீழ்க்கொற்கைத்தாழி

கீழ்க்கொற்கை சிவன் கோயில் வடக்குத் தெருவில் வசிக்கும் எஸ். உதயகுமார் என்பவரின் வீட்டின் கொல்லைப்புறத்தே கிடைத்த இரு தாழிகள் வரலாறு அறியாமையினரால் உடைத்தெறிந்து ஓரங்கட்டப்பட்டிருந்தன. இக்கட்டுரை ஆசிரியர், இவர்தம் நண்பர்கள் தொல்லியல் ஆய்வர்கள் திரு. குடவாயில் சுந்தரவேலு மற்றும் கோ.ஜெயபாலன் உதவியுடன் இத்தாழி முழுமைப்படுத்தப்பட்டது. இதன் மையப்பகுதியில் 5 துளைகளும் அதன் நடுவே மற்றொரு துளையும் உள்ளது, தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களில் தாழிகள் கிடைத்தபோதிலும், துளைகள் உள்ள தாழிகள் கிடைப்பது இதுதான் முதல் முறையாகும்.

தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இத்தாழி 85 செ.மீ. உயரமும், 1 மீ. 70 செ.மீ சுற்றளவும் உள்ளது. இதன் ஓடு 2 செ.மீ கனமுள்ளது. இத்தாழியினுள் பளபளக்கும் கருப்பு-சிவப்பு, கருப்பு நிற உயரிய வகை மட்பாண்டங்களும் உடைந்த சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெரும் கற்கால ஈமச்சின்னங்களான, கற்பதுக்கையின் மைய அடைப்புப் பலகையின் நடுவில் துளை செய்து அமைக்கும் வழக்கம் பெருங்கற்காலத்தில் இருந்து வந்துள்ளது. துளையுள்ள இத்தாழி கிடைத்ததிலிருந்து இவ்வழக்கம் பின்னர் எழுந்த சங்க காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது போலும்.

உடையாளூர் தாழி

உடையாளூர் திரௌபதியம்மன் கோயில் தெருவில் ஒரு மூதாட்டி மனையில் குழிதோண்ட முற்படுகையில் சுமார் 2 அடி ஆழத்தில் இத்தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொற்கையில் கிடைத்த தாழியை விட பெரிய அளவில், சுமார் 1 மீ. 15 செ.மீ உயரமும், 2 மீ. 7 செ.மீ சுற்றளவும் 95 செ.மீ. விட்டமும், 1 அங்குல கணமும் உள்ளது. இதன் வாய் சுமார் 2 அடி அகலம் உடையதாக இருந்திருக்கும். இதன் தோள் பகுதியில் ஒரு வட்ட உருட்டல் மீது கட்டைவிரல் பதித்து முக்கியும், அதற்கு கீழே சரியத் தொடங்கும் இடத்தில் 3/4 அடி உயரத்திற்கு அலைத்தோற்ற அலங்கார வேலைப்பாடும் பாங்குற பதியப்பட்டுள்ளன.



இத்தாழியினுள் செந்நிறத்தில் ஒரு சிறு கலயமும், தரம் வாய்ந்த பளபளக்கும் கருப்பு-சிவப்பு வட்டில்கள் சில நல்ல நிலையிலும், ஆஜானுபாகுவான ஒரு முழு மனிதனின் மண்டைஓடு கடைப்பற்களுடன் கூடிய தாடை, நெஞ்சுக்கூடு, தொடை, முழங்கால் எலும்புகளும் இருந்தன.

சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அண்ணலக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த அரிய திடல் என்னும் பகுதியில் கிடைத்த தாழியும் உடையாளூர் தாழியைப் போன்றே வடிவமைப்பும் அலங்கார அமைப்பும் ஒருங்கே பெற்றுள்ளது.

கும்பகோணத்திற்கு மிக அருகே அமைந்த தாழிகள் கிடைத்த இவ்வூர்கள் எல்லாம் நம் முன்னோர்கள் நுழைந்த நாகரீக காலத்தை சுட்டிக்காட்டும் மூதூர்களாகத் திகழ்கின்றன.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.