http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 12
இதழ் 12 [ ஜூன் 16 - ஜூலை 15, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
ஸ்ரீனிவாசநல்லூர் என்று ஒரு ஊர் இருக்கிறதே அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அப்படிக் கேள்விப்பட்டிருந்து அங்கு போய் என்ன தான் இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் மேலே படிக்கவும். அப்படி ஆர்வமில்லை என்றாலும் அல்லது இதுவரை இப்படி ஓர் ஊர் பெயரை கேள்வியே பட்டதில்லை என்றாலும் பாதகம் ஒன்றும் இல்லை. இக்கட்டுரையை படித்தபின் அப்படி ஆர்வம் வரவில்லையெனின் என் பெயரை மாற்றியமைத்துக்கொள்கிறேன் (email Name தான்).
நீங்கள் எப்பொழுதாவது திருச்சி சென்றால், அங்கு பார்க்கவேண்டியவற்றை எல்லாம் பார்த்த பின்னும் ஒரு அரை நாள் அவகாசம் இருந்தால், ஸ்ரீனிவாசநல்லூர் குரங்கநாதர் ஆலயத்தை ஒரு தரம் பார்த்துவிட்டு வரவும். நாமக்கல் செல்லும் வழியில், முசிறியில் இருந்து சற்று தொலைவில், உங்களுக்கு சிரமம் கொடுக்காமல், நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லாது, ரோடிலிருந்து பார்த்தாலே தெரியும் படி, அமைந்திருக்கிறது இக்கோயில். கோயில் என்னமோ நாலு கிரவுண்டிற்கும் குறைவான நிலப்பரப்பில் தான் அமைந்திருக்கிறது, கோயில் மட்டும் ஒரு 2,400 சதுர அடி இருந்தால் அதிகம். மிகவும் சிறிய கோயில் தானே, பார்க்க ஒரு அரை மணி நேரம் போதும் என்று நினைத்துவிடாதீர்கள். என்னைப் பொருத்தவரையில், 2 நாள் இருந்தாலும், முழுமையாய் பார்க்கமுடியாது. ஒரு நாள், அல்லது குறைந்தபட்ஷம் ஒரு அரை நாளாவது அவகாசம் இல்லாமல் அக்கோயிலை பார்க்க செல்வது வீண். கோயில் ASI வசம் இருக்கிறது. அக்கோயில் Watchman நீங்கள் செல்லும் போது இருந்தால் அன்று கண்டிப்பாக மழை பெய்யும். பூட்டியிருக்கும் கோயிலை திறந்துவிடச் சொல்லி உள்ளேயும் சென்று பார்க்கலாம். அப்படி இல்லையென்றாலும் ஒரு குறைவும் இல்லை. கோயிலினுள் பார்ப்பதற்கு என்ன இருக்கிறதோ தெரியாது. ஆனால் பார்க்கவேண்டிய, பார்த்து ரசிக்கக்கூடிய, இரசித்து பல நாள் மீண்டும் மீண்டும் நினைத்து மகிழத்தகுந்த அரிய அழகிய உயிருள்ள சிற்பங்கள் அனைத்தும் கோயிலின் வெளிப்புறத்திலே அமைந்திருக்கின்றன. சரி இப்பொழுது கோயிலுக்கு சமீபத்தில் வந்து விட்டீர்கள். கோயிலுக்கு சற்று தள்ளி அமைந்திருக்கும் ஒரு (Watchman) வீட்டின் முன்னால் சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டே கோயிலை ஒருமுறை நன்றாகப் பார்க்கவும். பார்த்தவுடன் உங்களுக்கு ஒரு வித்தியாசம் புலப்படும். கண்டுபிடித்தீர்களா?? என்னடா! கோயிலைப்பற்றிக் கூறுகிறேன் என்று, ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள் என்கிறாள், என்று நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கிறது. அக்கோயில் முத்தளமும் (Three floors) விமானமும் கொண்டது. பார்த்தவுடன், கோயிலின் கீழ் தளத்திற்கும் மற்ற தளங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் புலப்படும். அது ஏனென்றால், அக்கோயில் ASI வசம் ஒப்படைக்கப்பட்ட பொழுது கீழ் தளம் தவிர மற்ற தளங்கள் மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்திருந்தன. பிறகு ASI யால் அக்கோயில் சீரமைக்கப்பட்டது. என்னதான் அக்கரை எடுத்து சீரமைத்தாலும், இப்பொழுது சீரமைக்கும் பணியில் இருப்பவர்களின் கைவேலை, சோழரின் கைவண்ணத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா என்ன. இருந்தாலும் சோழர் காலத்தில் எவ்விதம் செய்திருப்பார்களோ அவ்வாறே செய்யப் பிரயத்தனப்பட்டிருப்பது கண்கூடு. இப்படி சீரமைத்தபொழுது முதல் தளம் முடியும் இடத்தில் கபோதத்திற்கு (Roof), கீழ் உள்ள வலபியில் இருந்திருக்கவேண்டிய பூதவரி வெரும் கல்லடுக்குகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதைக் கண்டு நீங்கள் வருந்தவில்லை எனின் உங்களுக்கு பூதவரி என்றால் என்னவென்று தெரியாது அல்லது தெரிந்திருந்தாலும், அதன் முக்கியத்துவம் உணராதவர். இன்னொரு கேள்வி. இக்கோயிலைப் போல் எங்கேயாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா?? வேறுவிதமாய் கேட்கிறேன். நீங்கள் தஞ்சை இராஜராஜீச்வரம் (பிரகதீஸ்வரர் கோயில்) கோயிலை பார்த்திருக்கிறீர்களா?? அக்கோயிலுக்கும் இக்கோயிலுக்கும் ஏதாவது ஒற்றுமை புலப்படுகிறதா?? சரி பதிலை நானே சொல்லிவிடுகிறேன். பராந்தகன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் பாணியிலேயே தஞ்சையிலிருக்கும் இராஜராஜீச்வரம் (பிரகதீஸ்வரர் கோயில்) பிற்காலத்தில் அதாவது இராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. பொதுவாக கோயில்களில் (நான்கு பக்கமுள்ள சதுர வடிவக் கோயிலை உருவகப்படுத்திக்கொள்ளவும்) ஒவ்வொரு தளமும் அதன் கீழுள்ள தளத்தைவிட சற்று உள்ளடங்கி இருக்கும். ஒவ்வொரு தளம் முடிந்து அடுத்த தளம் ஆரம்பமாகும் இடத்தில் கர்ணகுடா, சாலா, பஞ்சரம் என்ற உருப்புகள் இருக்கும். குடத்தை திருப்பிப் போட்டு வைத்து அதன் மேல் ஒரு கொண்டை வைத்தது போல் நான்கு மூலைகளிலும் இருக்கும் உருப்பு கர்ணகுடா (கர்ண என்றால் Corner, குடா என்றால் குடம்). English U வைத் திருப்பிப் போட்டு மேலே ஒரு சிறிய கொண்டை வைத்தது போல் ஒவ்வொரு பக்கங்களிலும் நடுவில் இருக்கும் உருப்பு சாலா. இந்த சாலாவிற்கும், கர்ணகுடங்களுக்கும் நடுவில் மாட்டுவண்டியின் மேல் கூரை (inverted U shaped) போல் இருக்கும் உருப்பு பஞ்சரம். இக்கோயிலிலும் இராஜராஜீச்வரத்திலும், முதல் தளம் முடிந்தபின், இரண்டாம் தளம் அதே நிலையில் (உள்ளடங்காத நிலையில்) ஆரம்பித்துவிடுகிறது, சாலை, கர்ணகுடா எல்லாம் மூன்றாம் தளத்திலிருந்து தான் காணக்கிடைக்கிறது. சரி கோயிலை தொலைவிலிருந்து ஒருமுறை பார்த்துவிட்டாகிவிட்டதல்லவா? இப்பொழுது கோயிலருகில் சென்று கோயிலை வலம் வரலாம். பொதுவாக கோயிலை மூன்று அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் வலம் வருவார்கள், இக்கோயிலை நூறு அல்லது ஆயிரம் முறைகூட வலம் வரலாம். என்றாலும் மூன்று முறை வலம் வரும் பொழுது நீங்கள் என்னென்ன பார்க்கலாம் என்று இக்கட்டுரையில் சொல்கிறேன். கிழக்கு திக்கை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் கோயில் பிரதிபந்த அதிஷ்டானம் கொண்டது. அதாவது பிரதிவரியால் (யாளி வரியால்) அலங்கரிக்கப்பட்ட அதிஷ்டானம் (basement) கொண்டது. யாளிவரியை பிறகு பார்த்துக்கொள்ளலாம். கிழக்குப்பக்கம் இருக்கும் கதவைத் தாண்டி, உள்ளே நுழைந்து முதல் முறை வலம் வர தொடங்கிவிட்டீர்களா?. முதல் வலத்தில் நீங்கள் பார்க்கவேண்டியவற்றை அடுத்த இதழில் காணலாம். (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |