http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 14

இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ]
1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
கதை 6 - மாதேவடிகள் ஹாரம்
அம்ம அழகிதே
இராஜசிம்மேசுவரம் கல்வெட்டுகள்
தேவதேவிக் கல்வெட்டுகள்
கோயில்களை நோக்கி - 3
நெஞ்சை நிமிர்த்தும் நேற்றைய வரலாறுகள்

கட்டடக்கலைத் தொடர் - 11
அரை நாள் பயணம்....அரை மனதுடன்....
Brushstrokes from Pallava Era - Part I
சங்கச் சிந்தனைகள் - 2
இதழ் எண். 14 > கதைநேரம்
கதை 6 - மாதேவடிகள் ஹாரம்
கோகுல் சேஷாத்ரி
பகுதி ஒன்று - பட்டன் சொன்ன கதை


புகைமூட்டத்தில் கருவறை என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை.... சை! அகில் என்று ஒரு வஸ்துவை கைகளில் வைத்துக்கொண்டு இவர்கள் படுத்துகிற பாடு இருக்கிறதே...இது போதாதென்று வத்திகளிலிருந்தும் தூபதீபங்களிலிருந்தும் வரும் புகை வேறு !

ஹர ஹர மகாதேவா என்கிற கோஷம் காதைப்பிளக்கிறது...

மிகக் கடுமையான நெரிசல்... திருவாதிரை நாள் தரிசனமென்றால் ஊரே திரண்டு வரவேண்டுமென்று வேண்டுதலா என்ன ?? ஆனாலும் வரவர சோழராஜ்ஜியத்தில் பக்திப் பைத்தியம் முற்றி வருகிறது... அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி !

அப்பாடா! கொஞ்சம்போல புகை மூட்டம் விலகி உருவங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன.

நான் இன்னும் தரிசனத்திற்குச் செல்லவில்லை.. முக மண்டபத்திலேயே காத்திருக்கிறேன் - கூட்டம் கொஞ்சம் குறையட்டும் என்று. வியர்வை தாங்க முடியாமல் அர்த்த மண்டபத்திலிருந்து வெளிப்பட்ட ஈசான பட்டர் என்னை அடையாளம் கண்டு கொண்டார் !

"என்ன திருமலை ? எங்கே இந்தப் பக்கம் ?"

"என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள் ? அதுதான் திருவாதிரைநாள் தரிசனத்திற்காக ஊரே திரண்டு வந்திருக்கிறதே!"

அது சரியப்பா... ஆனால் நீயோ வைணவன் ! அதிலும் திருமேற்றளியில்(1) வேலை செய்பவன்...அதனால்தான் எங்கே உங்கள் ஆச்சாரியார் அனந்த பட்டரைப்போல் நீயும் சிவ பஞ்சாட்சர மந்திரத்தைக் கேட்டாலே முகத்தை திருப்பிக்கொள்வாயோ என்று நினைத்தேன்..

(1)அந்நாளில் திருமால் கோயில்கள் பெரும்பாலும் ஊரின் மேற்கு திசையிலேயே அமைந்திருக்கும். மேற்குக் கற்றளி என்பது மருவி மேற்றளி ஆயிற்று.

அனந்த பட்டர் எனக்கு ஆச்சாரியனா ? எனக்கு ஆச்சாரியன் குறுக்கு வழியில் வேலை செய்யும் என் மூளையும் அதனை சுறுசுறுப்பாய் இயக்கும் வெற்றிலையும்தான்...இதையெல்லாம் இவரிடம் சொல்லி கதையளந்துகொண்டிருக்க நான் இங்கு வரவில்லை.

"எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது பட்டரே...சென்ற திருவாதிரையிலும் நான் வந்திருந்து உமக்கு உதவியாக எல்லா வேலைகளும் செய்தேனே...மறந்துவிட்டீரா...?"

"ஓ...இப்போதுதான் கொஞ்சம்போல ஞாபகம் வருகிறது....வயதாகிவிட்டதில்லையாப்பா..?"

மேலும் பேச்சு வளர்வதற்குள் உள்ளிருந்து அழைப்பு வரவே பட்டர் உள்ளே சென்றுவிட்டார். மனிதர் வாயாடி.. அனந்த பட்டருக்கு நேரெதிர் !

பட்டரே, அடியேன் வந்திருப்பது ஈசான மங்கலத்துக்(2) கற்றளிப் பெருமானின் திருவாதிரைநாள் திவ்ய தரிசனத்துக்காக அல்ல.

(2)இன்றைய திருச்செந்துறை. திருச்சியிலிருந்து 10.5 கிமீ தொ¨­லவில் உள்ள காவேரித் தென்கரைக் கிராமம்.

கூட்டம் சற்று குறைந்துவிட்டது... உள்ளே செல்ல வேண்டியதுதான். சாயரட்சைக்கு வேறு நேரமாகிறது.... கொஞ்ச நேரம் தாமதமாக வந்தாலும் அனந்த பட்டர் கத்தித் தீர்ப்பார். சகிக்க முடியாது.

அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்தேன். ஒரு ஓரத்தில் பக்தர்கள் கொண்டுவந்த மாலைகள் மலையாய் குவிந்திருந்தன.

அமத்தி இன்றைய தரிசனத்திற்கு வருவாளா என்ன ? மாட்டாள்.சர்வ நிச்சயம். கூட்டம் அதிகமாயிருக்கும் நாட்களில் கோயிலுக்கு வருவதில்லையென்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறாள். இப்போது அவளைப்பற்றிய வீண் சிந்தனை எதற்கு ?

உள்ளே பார்வையைச் செலுத்தினேன். மாலைகளும் நாகாபரணமும் அணிந்து வைரங்கள் பதிக்கப்பட்ட பட்டையுடன் சர்வாலங்கார பூஷிதராய் பரமேஸ்வரர்.
அவருக்கென்ன ? அரிகுல கேசரி அரிஞ்சய சோழரின் பிராட்டி பூதி ஆதிச்ச பிடாரியார் தாம் கற்றளியாய் கோயிலை புதுப்பித்த காலத்திலேயே(3) ஏகப்பட்ட
நிவந்தங்கள் அளித்திருந்தார்... அதனைத்தவிர ஆதித்தர், பராந்தகர், கண்டராதித்தர் என்று எத்தனை பேர் !

(3)ஏறக்குறைய ஒன்பதாம் நூற்றாண்டு. ஆதாரம் 1903 வருட கல்வெட்டு எண் 316.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல்...என்னுடைய பார்வை சற்றே துழாவி லிங்கத்தின் கீழே ஆவுடையார்(4) மேல் பதிந்தது.

(4)லிங்கத்தை தாங்கியிருக்கும் வட்ட வடிவமான கீழ்ப்பகுதி

ஆ...அதோ தெரிகிறது...நான் உண்மையி­ல் தரிசிக்க வந்த தெய்வம் !

ஒரு வருடத்திற்கு முன் பார்த்தது. இத்தனை சிறியதாகவா இருக்கிறது...? நான் இன்னும் சற்றே பெரியதாக இருக்குமென்று நினைத்துக் கொண்டு..
பொறு.இங்கிருந்து சரியாகத் தெரியவில்லை. இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தாக வேண்டும்.

கூட்டத்தில் வழிகண்டுபிடித்துச் செல்வது முடிகிற காரியமாயில்லை...நான் திண்டாடுவதை ஈசான பட்டர் கவனித்துவிட்டார் போலிருக்கிறது... என் கைகளை பிடித்துக்கொண்டுபோய் மளமளவென்று சன்னிதானத்திற்கருகில் சென்று விட்டார் |

"பார் ! பரமேஸ்வரப் பெருமானடிகளை நன்றாக தரிசனம் செய்துகொள் !"

அடடா... பட்டருக்கு என்மேல் என்ன கரிசனம், என்கிறீர்களா ? அதுதான் இல்லை ! நாளையே - நான் தரிசனத்திற்கு வந்து சென்ற நிகழ்ச்சியை காவேரிக்கரையில் அனந்த பட்டரிடம் - விஸ்தாரமாய் விவரிப்பார் பாருங்கள்... அப்படியே அசந்துபோய் விடுவீர்கள் !அனந்தரிடம் நான் ஏறக்குறைய வீர சைவனாகவே மாறிவிட்டதுபோல் பேசுவார்...அதற்கு அச்சாரமாய்த்தான் இந்த விசேஷ கவனிப்பு.

எனக்கு இந்த முட்டாள்களைப் பற்றியோ அவர்களது சைவ வைணவ தத்துவச் சித்தாந்தச் சிக்கல்கள் பற்றியோ சிறிதும் கவலையில்லை. என் முழு கவனமெல்லாம் - அதோ லிங்கத்தின் மார்பில் பளபளவென்று பிரகாசத்தை வாரியிறைக்கிறதே...அதன்மீதுதான்.

அது ஒரு ஹாரம். இரத்தின ஹாரம். மாதேவடிகள் ஹாரம் என்று ஊர்க்காரர்கள் குறிப்பிடுவார்கள்.

பரமேஸ்வர மூர்த்தத்தின் மேல் - அடடா, எத்தனை கம்பீரமாய் படிந்திருக்கிறது, பாருங்கள் ! மிக மிக உயர்ந்த ராசிக்கற்கள் பதித்து - தீபஒளியில் கோடி சூரிய ஜாஜ்வல்யத்துடன் ...என்ன ஜொலிப்பு ! என்ன ஜொலிப்பு !

ஹாரத்தின் நடுவில் தெரியும் புலிப் பதக்கம்....அதன் கண்களாகப் பதிக்கப்பெற்ற மாணிக்கக்கற்கள்...சுற்றிலும் தெரியும் நுட்பமான வேலைப்பாடுகள்...
இன்றைய தேதியில் இதனை மதிப்பிடுவதே கடினம்.

எத்தனை மஞ்சாடிகளிருக்கும் ? சை, நானொரு முட்டாள் ! இன்னமும் மஞ்சாடிக்கணக்கிலேயே இருக்கிறேன் பாருங்கள்... மஞ்சாடிகளிலெல்லாம் இதன் மதிப்பை சொல்லவே முடியாது ! வேண்டுமானால் பொற்கழஞ்சுகளில்...குத்துமதிப்பாய்ச் சொல்ல முடியுமா ?

மாணிக்க ஆசாரியிடம் இதன் மதிப்பைக் கேட்ட போது ஓரு கணம் திகைத்துப் போய்விட்டான் ! அதெல்லாம் ராஜநகைகளைய்யா என்று ஒரே வார்த்தையில் மழுப்பிவிட்டான்.

ராஜ நகைதான். சிவஞான கண்டராதித்தரின் பிராட்டியும் அரசர் உத்தமச் சோழரை பெற்ற தாயுமான மூதாட்டி செம்பியன் மாதேவடிகள் அளித்த ராஜ நிவந்தம்.
எதையெதையோ ராஜ நிவந்தம் என்கிறார்கள் - இதல்லவோ உண்மையில் ராஜ நிவந்தம் !

நிவந்தம் பற்றிய விபரம் பின்னாளில் பகைவர்களுக்கு தெரியவந்தால் ஆபரணத்திற்கு ஆபத்து வந்துவிடுமென்று கருதி விஷயத்தை சாசனமாய்க்கூட கற்றளியிலோ தாமிரப் பட்டயங்களிலோ பொறிக்கவில்லை - அத்தனை எச்சரிக்கை !

ஈழ தேசத்து ஆசாரி எவனோ செய்த நகை என்று கேள்வி...தன்னுடைய இலங்கைப் படையெடுப்பின்போது பராந்தகச் சோழ மகாராஜா சிறப்பாய் தன்னுடைய இராஷ்டிரகூடத்து இராணிக்காக செய்து கொண்டுவந்ததாம். பொக்கிஷத்திலிருந்து பிராட்டியார் தூக்கி இந்த ஊர் கற்றளிப் பெருமானாருக்குக் கொடுத்துவிட்டார். இன்றைய தேதியில் பொன்னும் முத்தும் புரண்டோடும் பாண்டிய மண்ணில்கூட இத்தனை வேலைப்பாடுகளுடைய ஆபரணங்களை பார்ப்பது அரிது....அடடா ! எத்தனை அழகு !

ஹாரம் வருடத்திற்கு ஒருநாள் - அதாவது திருவாதிரையன்றைக்கு மட்டும்தான் அதற்கான ஆபரணப் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு பெருமானுக்கு அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் ஊரிலிருக்கும் அமிர்த கணத்தாரின்(5) கோயில் பொக்கிஷத்தில்தான் நிரந்தர வாசம்.

(5)அந்நாளில் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இத்தகைய சபையாரிடம் இருந்தது.

இந்தக் கதையெல்லாம் எதற்காகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா ? சொன்னால் பயந்து விட மாட்டீர்களே ? இந்த ஹாரத்தை இன்றிரவு திருடப்போகிறேன் !

என்ன...ஏன் திடுக்கிடுகிறீர்கள் ? மாட்டிக்கொள்வேனென்று நினைக்கிறீர்களா ?

மாட்டேன்.

எல்லாம் திட்டம். அப்பழுக்கில்லாத சரியான திட்டம் ! ஏறக்குறைய ஒருவருடத்திற்கும் மேலாக மூளையை கசக்கிக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகத் துல்லியமான திட்டம்.

எல்லா சாதக பாதகங்களையும் உத்தேசித்து சகல விபரங்களையும் சேகரித்து....சொன்னால் அசந்துபோய் விடுவீர்கள் ! ஆனால் உங்களிடம் அதன் விபரங்களை விளக்க இப்போது அவசியமுமில்லை, அவகாசமுமில்லை. மேற்றளிக்குச் செல்ல நேரமாகிவிட்டது....போய்க்கொண்டே பேசுவோம்.

ஈசான பட்டரிடம் விடைபெற்றுக்கொள்கிறேன்.

"என்ன - மேற்றளி வேலைக்கு நேரமாகிவிட்டதாக்கும் ?" ­என்றார் பட்டர்.

வேறு எவராவது இதே வாக்கியத்தை சொல்லியிருந்தால் எனக்கு சாதாரணமாய்த்தான் தோன்றியிருக்கும். சிவபட்டரது திருவாயிலிருந்து வருவதால் இதனை ஏளனமாகத்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. அதாவது - உனக்கென்ன பெரிய வெட்டி முறிக்கும் வேலை ? அவசரப்படுவதற்கு - இந்த திருவாதிரை நாளில், பெருமாள் தரிசனத்துக்கு எந்த ஊர்க்காரன் வந்துவிடப்போகிறான் ? - என்பதாக.

பட்டரே ! என்னைப்பற்றி உமக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இன்றிரவு நான் செய்ய இருக்கும் காரியத்தை மட்டும் கேள்விப்பட்டீரானால்... "ஆமாம் !" என்று சிரித்தபடி கிளம்பிவிட்டேன்.

" பிரசாதம் வாங்கிக்கொள்ளவில்லையா ?" - என்ற பட்டரின் அடுத்த கேள்வியை காதில் வாங்காததுபோல் வெளியேவந்தேன்.

சை... கொஞ்ச நேரத்தில் என்னமாய் வியர்த்து விட்டது ! உடம்பில் பூசியிருந்த நாமமெல்லாம் அழிந்துபோய்... இந்தக் கோலத்தில் அனந்த பட்டர் கண்களில் பட்டோமானால் கத்தித் தீர்ப்பார்.

புழக்கடை நந்தவனம் வழியாகத்தான் மனைக்குள் நுழையவேண்டும்.


***********************************************************************************************


சோழநாட்டில் காவேரியின் தென்கரையில் ஊறையூர் கூற்றம் ஈசான மங்கலம் பிரம்மதேயத்தில் அமைந்துள்ள திருமேற்றளி(6) புலலிய விண்ணகரத்தில்(7) அடியேனுக்கு வேலை. தேவ கன்மி (8).

(6) இன்றைய தேதியில் இத்திருக்கோயிலை காணமுடியவில்லை. எனினும் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயிலில் இருக்கும் கல்வெட்டொன்று இவ்வூரில் ஒன்பதாம் நூற்றாண்டில் புலலிய செட்டி என்பவரால் கற்றளியாக்கப்பட்ட திருமால் கோயில் இருந்ததை உறுதிபடுத்துகிறது. கல்வெட்டு .எண்.325 / 1903
(7) விஷ்ணுக் கிருகம் (திருமால் கோயில்) என்பது மருவி அந்நாளில் விண்ணகரம் என்று வழங்கப்பட்டு வந்தது.
(8) கோவில் ஊழியர்.

தினமும் காவிரியிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரவேண்டும். காலையிலும் மாலையிலும் குருகூர் சடகோபரின் திருவாய்மொழி ஓதவேண்டும் ! மற்றபடி கோயிலின் பிரதான பட்டர் அனந்தருக்கு உதவியாய் எடுபிடி வேலைகளைச் செய்ய வேண்டும். அவ்வளவுதான். இதற்காக கோயில் வருமானத்திலிருந்து அமிர்த கணத்தார் எனக்கு வருடாந்திரப் படியளக்கிறார்கள். (எத்தனையென்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள் - சொல்லிக்கொள்வதற்கே வெட்கமாக இருக்கிறது)

இதே வேலையை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு திங்களும் ஒவ்வொரு வருஷமும் செய்து கொண்டேயிருக்க வேண்டியதுதான் ! அனந்த பட்டர் ஒருவேளை மண்டையைப்போட்டால் பிரதான பட்டனாகும் வாய்ப்புண்டு...அதுவும் கிராம சபையாரோ அமிர்த கணத்தாரோ மனதுவைக்கும் பட்சத்தில் ! அவர்கள் ஒருவேளை வேறு யாரையாவது சிபாரிசு செய்தால்... அதுவும் போயிற்று ! மறுபடியும் திருமஞ்சன தீர்த்தம்...திருவாய்மொழி.. ஜென்ம ஜென்மாந்திரத்திற்கும் காவேரிக்குக் குடம் தூக்கிக் தூக்கி நாசமாய்ப் போக வேண்டியதுதான்.

எனக்கு முன்னால் குடம் தூக்கிய தேவகன்மிக் கிழவன் ஐம்பது வருடங்களாய் இதே ஸ்ரீகாரியப்(9) பணியில் ஈடுபட்டிருந்தானாம்... அனந்த பட்டர் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். அதாவது நானும் அவனைப்போலவே காலாகாலத்துக்கும் குடம் தூக்கித் தூக்கி பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டுமாம் !

(9) கோயில் ஊழியம்.

அனந்தரைத் திட்டக்கூடாது...பாவம் - நல்லவர்தான். தஞ்சையில் வியாபாரத்தில் நொடித்துப்போய் கஷ்டப்பட்ட காலத்தில் அவர்தான் ஸ்ரீகாரியத்துக்கு வாயேன் என்று இழுத்து விட்டவர். (ஏன் வந்தோமென்று இப்போது தோன்றுகிறது - அது வேறு கதை !). ஆனால் பரலோகத்திற்காக புண்ணியம் சேர்த்துக் கொள்வதில் இருக்கும் அக்கறையில் பாதியையாவது இகலோகத்தில் செளகரியமாய் இருப்பதில் காட்டலாமல்லவா ? மாட்டார்.

ஆனால் என் சித்தாந்தம் வேறு.

இந்த உலகத்தில் பூர்விக சொத்துபத்துக்களற்ற ஒருவன் நியாயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவதற்குள் நிச்சயம் பற்களெல்லாம் உதிர்ந்து நரைதட்டி கூன்விழுந்துவிடும். உடம்பில் தெம்பில்லாது போனப்புறம் கையில் பணம் இருந்தாலென்ன ? போனாலென்ன ?

அதனால் உடம்பிலும் மனதிலும் வலுவிருக்கும்போதே நிறைய பொருள் சேர்க்கவேண்டும் - அதுவும் விரைவாக. அதற்கு தடாலடியாக ஏதாவது செய்தால்தான் உண்டு ! அப்போதுதான் நானும் பெருந்தனக்காரர்களையும் அரசியல் அதிகாரிகளையும் போல் வசதியான மேல்தட்டு வாழ்க்கை வாழமுடியும்.

நான் போடும் வெற்றிலையிருக்கிறதே...அ..இருங்கள் - கொஞ்சம் அந்த புனித வஸ்துவை அதக்கிக் கொண்டு விடுகிறேன். ஆஹா ! இப்போதுதான் கொஞ்சம் சுறுசுறுப்பே வருகிறது !

ம்...என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ? வெற்றிலை புராணம் - இல்லையா ? இந்தப் வெற்றிலையிருக்கிறதே - அது என் மூளையை ஒருபோதும் சும்மாயிருக்க விடுவதில்லை. அதைச் செய்யலாமே.. இதைச் செய்யலாமே.... இப்படிச் செய்தால் என்ன?.. என்று சதா சர்வகாலமும் ஏதாவது யோசனை செய்துகொண்டேயிருக்கும்.

அப்படிச் சென்ற திருவாதிரை நட்சத்திரத்தன்றைக்கு மனதில் தோன்றிய திட்டம்தான் இந்த நகைத்திருட்டு. ஈசான பட்டர் அன்றும் வழக்கம்போல வாயை மூடிக்கொண்டிராமல் இந்த நகையின் அருமை பெருமைகளையெல்லாம் கதையளந்து கொண்டிருந்தார். அதன் வடிவம் - அமைந்துள்ள மிக நுண்மையான வேலைப்பாடுகள் - உபயோகப்படுத்தப்பட்ட தோஷமற்ற கற்கள் - புலி வடிவில் உருவகப்படுத்தப்படும் ஜய லஷ்மி -

"திருமலை ! இதைப் போல் ஒரு ஆபரணத்தை இந்த சோழதேசம் இதுவரை பார்த்ததில்லை ! இனியும் ஒருக்காலும் பார்க்க முடியாது !"

நானும் பக்திசிரத்தையுடன் கேட்பதுபோல் நிறைய விஷயங்களை சேகரித்துக்கொண்டேன். அவருக்கு உதவியாக அன்றுமுழுவதும் இருக்கப்போவதாகக் கூறி கோயிலின் சகல நடமாட்டங்களையும் கண்டறிந்தேன்.

தரிசனம் முடிந்தபின் எப்போது அலங்காரம் கலைக்கப்படுகிறது...நகை முதலில் எங்கே வைக்கப்படுகிறது... அதற்கு காவல் எத்தனைபேர்... அமிர்த கணத்தார் நகையை திரும்ப வாங்கிக்கொள்ள வரும் - ஏறக்குறைய நள்ளிரவு - நேரம்...அவர்களுடன் காவலுக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை.... கோயில் பொக்கிஷப் பெட்டி....என்று அத்தனை விஷயங்களையும் மனதில் கவனமாய்க் குறித்துக்கொண்டேன்.

ஒரு சில மணித்துளிகள் - அல்லது அதற்கும் குறைவான நேரம்தான் எனக்கு உண்டு. அதற்குள் காரியத்தை முடித்தாகவேண்டும்.

முடித்துவிடுவேன்.

என் திட்டத்தில் எனக்கு முழு நம்பிக்கையிருக்கிறது.

திருடுவதற்கு சிவன்கோயில் நகைதான் கிடைத்ததா ? வேறு நகையா இல்லை - என்கிறீர்களா ?

காரணம் இருக்கிறது ஐயா !

முதல் விஷயம் - நகை வருடத்திற்கு ஒருநாள்தான் வெளியே வருகிறது. மற்றபடி அதனை கவனிப்பாரில்லை. அதாவது நகை களவு போனதே மிகத் தாமதமாகத்தான் தெரியவரும்.அதிருஷ்டம் இருந்தால் அடுத்த வருடம் திருவாதிரைக்குப் பெட்டியைத் திறக்கும் போதுதான்....இல்லை. இடையில் சில திங்களுக்கு ஒருதடவையாவது பொக்கிஷம் மேற்பார்வையிடப்படும்.அப்போது கண்டுவிடித்து விடுவார்கள். இருந்தாலும் எனக்கு சில திங்களாவது அவகாசம் கிடைக்கும். அது எனக்குப் போதும் - ஊரைவிட்டு, நாட்டைவிட்டுக் கிளம்ப.

இரண்டாவது விஷயம் - நகையோ மிகப் பிரபலமான ராஜ நிவந்தம். அது தொலைந்துவிட்டதென்று அரசாங்கத்துக்குத் தெரிந்தால் விஷயம் மிகுந்த சிக்கலாகிவிடுமென்று அமிர்த கணத்தார் கூடுமானவரை இதனை மறைத்துவிடவே முயல்வார்கள். (இதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது...ஏனெனில்...உம்...அதை அப்புறம் சொல்கிறேன் ! ) திருட்டு அரசாங்கத்தின் காதுகளுக்கு போகவில்லையென்றால் - விசாரணை ஏது...? திருடனைக் கண்டுபிடிப்பதேது.. ?

மூன்றாவது விஷயம் - நான் திருட இருப்பதோ கோயில் போக்குவரத்து மிக மிக அதிகமாயிருக்கும் திருவாதிரை நாளில் ! எனவே யார் வந்தது யார் போனது என்று ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரிக்க முடியாது...

இதற்கெல்லாம் மேலாக நான் போட்டிருக்கும் அப்பழுக்கில்லாத திட்டம்... மாதேவடிகள் ஹாரம் எனக்காகவே செய்யப்பட்டது ஐயா ! சிவன் சொத்து குலநாசம் என்றெல்லாம் என்னிடம் புளுகாதீர்கள்.....அதற்கெல்லாம் இந்தத் திருமலை மசியமாட்டான்.

பேசிக்கொண்டே கோயிலுக்கு வந்துவிட்டேன், பாருங்கள் ! அடக்கடவுளே.. வருவது யார் - அனந்த பட்டரா ? இவர் கண்களில் படுவதற்கு முன்பாக...

"திருமலை...எங்கேயடா போய்த் தொலைந்தாய் ! சாயரட்சை தரிசனத்திற்கு இருவாட்சி மாலை கட்டி முடித்துவிட்டாயா ?"

"இதோ...பத்து நிமிடங்களில் கட்டி முடித்துவிடுகிறேன் ... பூக்களை எங்கே வைத்திருக்கிறீர்கள் ?"

"நாசமாய்ப் போயிற்று ! அதையும் என்னையே கேட்கிறாயா ? நண்பகலில் பூக்காரன் வந்தபோது மேற்றளியில் நீயில்லையா ?"

தொலைந்தது ! என்னத்தைச் சொல்வேன் ? திருவாதிரை நாள் தரிசனத்திற்குச் சென்றேன் என்றா ? மனிதர் தூணைப் பிளக்காமலே நரசிம்ம அவதாரம் எடுத்துவிடுவார்...

"திருத்தளிகை(10)க்கு வெல்லம் இல்லை... அதனால்தான் செம்பொன்னானிடம் சொல்லலாமென்று..."

(10)கோயில் சமையல்

ஏதோ நல்ல நேரம்...சரி சரி என்று சொல்லிவிட்டு மனிதர் நகர்ந்துவிட்டார்.

அதற்குப்பிறகு மாலைகட்டி.... நைவேத்தியம் தயாரித்து....குளித்துவிட்டு வந்திருந்த நான்கே நான்கு ஊர்க்காரர்களுக்குமுன் திருவாய்மொழி ஓதி.. (இதாவது பரவாயில்லை- சில நேரங்களில் ஒருவருமே வரவில்லையென்றாலும்கூட மொழி ஓதியே ஆகவேண்டுமென்று பட்டர் பிடிவாதம் பிடிப்பார் பருங்கள்....அப்படியே கழுத்தை நெறித்துவிடலாமாவென்று தோன்றும்! )

அப்பாடா ! ஒருவழியாய் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு கிளம்புவதற்குள் எத்தனை நேரம் ஆகிவிட்டது...


***********************************************************************************************


பரமேச்சுரக் கிருகத்தை(11) அடைந்தபோது கூட்டம் வெகுவாய் குறைந்திருந்தது... இன்னும் சற்று நேரம் கழித்து நடை மூடிவிடுவார்கள். அதற்குள் நான் உள்ளே நுழைந்தாக வேண்டும்.

(11) சிவன் கோயிலை அந்நாளில் இவ்வாறு குறிப்பிடுவார்கள்

ஈசான பட்டர் கண்களில் படாமலிருப்பது நல்லது...ஒருவேளை தவறிப்போய் பட்டுவிட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம்தான்...

கோயில் வாயிலில் சற்று நேரம் ஒதுங்கி நிற்கிறேன். கொஞ்சம் வெற்றிலை போட்டுக்கொள்ளலாம்.

திடீரென்று சந்தேகம் வந்து இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன்...ஐயோ ! அதைக் காணவில்லையே! கீழே விழுந்து விட்டதா ? முட்டாள் ! பதட்டத்தில் இடதுகச்சையில் தேடிக்கொண்டிருக்கிறாய்...கிளம்பும்போது வலது கச்சையில்தானே வைத்தாய் ? அப்பாடா ! பத்திரமாய்த்தான் இருக்கிறது....

முகத்திலெல்லாம் வியர்வை அரும்பி... சை ! பயப்படுகிறேனா என்ன ?

உள்ளே நுழைய வேண்டியதுதான். மனிதர்கள் தலை சிறிது நேரம் தெரியவில்லையென்றாலும் நடையை உடனே மூடி விடுவார்கள்... அவர்கள் அவசரம் அவர்களுக்கு !

நுழைந்தேன்.

முக மண்டபத்தில் கோயில் தேவகன்மிகள் ஓரிருவர் தலை தெரிகிறது... அவர்களை ஒரு சிநேகமான புன்னகையுடன் கடந்து - மெதுவாய் நட, ஏன் அவசரப்படுகிறாய்? - அர்த்த மண்டபத்தில் நுழைகிறேன்.

கடைசி பக்தர்கள் இருவருக்கு பட்டர் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் சரியாய் தெரியவில்லை..ஈசான பட்டரா அது ? இல்லை போலிருக்கிறதே...இவர் கொஞ்சம் இளமையானவராய் தெரிகிறாரே..

என் பார்வை அவசர அவசரமாய் மண்டபத்தின் தென்மூலையில் பதிந்து...நல்லவேளை ! காலையில் பார்த்ததுபோல் அப்படியேதான் இருக்கிறது !

பட்டர் என்னை கவனித்துவிட்டு தீபத்தட்டுடன் வருகிறார். விபூதி கொடுத்துவிட்டு அவர் கருவறையை நோக்கி திரும்ப... ஏறக்குறைய அதே சமயத்தில் மண்டபத்தில் இருந்த மற்ற இருவருமே தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.

இதுதான் சரியான சமயம் !

ஒரே ஒரு கணம் முக மண்டபத்திலிருந்து யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தேன்...ஒரே ஒரு கன்மி தெரிகிறான்.
ஆனால் அவனும் பட்டரைப்போல் எனக்கு முதுகுகாட்டித்தான் நிற்கிறான்..

ஒரே எட்டில் தாவி தென்மூலையை அடைந்து...அடுத்த சில கணங்களில் ஓரத்தில் குவிக்கப்பட்டிருந்த மாலைகளுக்கிடையில் நான் படுத்துக்கொண்டிருந்தேன் !

அப்பப்பா ! சிறியதும் பெரியதுமாய் எத்தனை வகை மாலைகள்.... அவை போதாதென்று வில்வம் முதலான இலை தழைகள் வேறு ! நன்றாக உடல் முழுதும் தெரியாத வகையில் மறைந்து கொள்கிறேன்... நடப்பவற்றை கவனிப்பதற்கென்று கண்களுக்கெதிரில் மட்டும் ஒரு மிகச்சிறிய துவாரம்.

அர்த்த மண்டபத்தில் நான்கே நான்கு நெய்விளக்குகள்தான் உண்டு....இந்தக் குறுகிய வெளிச்சத்தில் - ஒரு ஓரத்தில் குவிந்துகிடக்கும் குப்பையை ஒருவரும் கவனிக்கப்போவதில்லை !

திட்டத்தின் முதல் கட்டம் முழுவெற்றி !

சென்ற திருவாதிரை நாளில் ஈசான பட்டர் புலம்பியது அப்படியே காதுகளில் ஒலிக்கிறது... "எத்தனைமுறை சொன்னாலும் மாலைக்குவியலை மறுநாள்தான் சுத்தம் செய்வேன் என்கிறான் நாசமாய்ப் போன வேளத்தான்... திருவிழா நாட்களில் பக்தர் கூட்டத்துக்கு எத்தனை இடைஞ்சலாய் இருக்கிறது பார்....!"

திருமலை ! உன் மூளையே மூளையடா ! சர்வ சாதாரணமான ஒரு கிழவனின் புலம்பலை வைத்து இப்படி ஒரு அபாரமான திட்டம் வேறு யாருக்கு உதிக்கும் ?
நீ தஞ்சையில் உத்தம சோழதேவருக்கே பிரதான அமைச்சனாய் இருந்திருக்க வேண்டியவன் - பிறந்த நேரம் கொஞ்சம் தவறிவிட்டதால் இப்படியெல்லாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய்.

பட்டர் அர்த்த மண்டபத்தை கடந்து வெளியேறுகிறார்.

இன்னும் கொஞ்ச நேரம்தான்... அதற்குப்பிறகு நடை மூடிவிட்டு அலங்காரங்கள் கலைக்கப்பட்டு....அப்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாலைகளை கழற்றி சகட்டு மேனிக்கு தென்மூலையில் - அதாவது என்மேல் - எறிவார்கள் !

சை ! இந்த மாலைகளின் வாழைநாரும் இலை - பூக்காம்புகளும் என்னமாய்க் குத்துகின்றன...பரமேஸ்வரப் பெருமான் எப்படித்தான் இதனை வருடம் முழுவதும் சகித்துக்கொண்டிருக்கிறாரோ... கொடுமையான சித்திரவதை.

வாயிலில் ஏதோ சப்தம் கேட்கிறது....நடையை ஒருவழியாய் மூடிவிட்டார்கள் போலிருக்கிறது. அப்பாடா !

கற்றளிப் பெருமானாரே ...சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும். இன்றிலிருந்து நான் உம்முடைய தீவிர பக்தன். உம் அருளால் என் திட்டம் முழுவெற்றி அடைந்து விட்டால் நான் வீரசைவனாகக்கூட ஆகிவிடுகிறேன் ! தவறேயில்லை. வேண்டுமானால் இதே கோயிலுக்கு பதினைந்து பொற்கழஞ்சுகளுக்கு - சற்று அதிகமா என்ன ? - நந்தா விளக்கையும் ஏற்றி வைக்கிறேன் !

கடந்த இரண்டு வருடங்களாய் பெருமாளை நம்பியதற்கு புளியோதரையும் தத்தியோனத்தையும்(12) தவிர என்னத்தைக் கண்டேன் ?

(12) தயிர் சோறு

பட்டரும் மற்றொருவனும் (உதவியாளனா ?) அர்த்த மண்டபத்தைக் கடந்து கருவறைக்குள் நுழைகிறார்கள். அலங்காரங்கள் அகற்றப்படும் சப்தம் கேட்கிறது.

பட்டர் குரலை உயர்த்துகிறார் - "மெதுவாய்....வைரப்பட்டைகளை எடுக்க அவசரப்படாதே ! முதலில் மாலைகளை கழற்றி...இல்லை! - அங்கே வீசாதே ! அர்த்த மண்டபத்தில் சென்று மற்ற மாலைகளுடன் போடு - கருவறையாவது சற்று சுத்தமாய் இருக்கட்டும் !"

அவன் அக்கறையின்றி என்மேல் மேலும் சில குப்பைகளை வீசிவிட்டுப் போனான்...தாழம்பூ மாலை போலிருக்கிறது - என்ன மணம் !

"பார்த்து ! பார்த்து! மூடனே - அது ஒப்புயர்வில்லாத மாதேவடிகள் ஹாரமடா ! அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? மெதுவாய் எடு ! எடுத்து என் கைகளில் இருக்கும் பெட்டியில் வை ! கூடவே கொஞ்சம் புஷ்பங்களையும் எடுத்துப்போடு ! வேண்டாம் - நாகாபரணத்தை எடுக்காதே - காலையில் எடுத்துக் கொள்ளலாம்..."

தாழம்பூ வாசத்திற்கு அப்படி என்னதான் சக்தியுண்டோ...இப்படியொரு மயக்கம் வருகிறதே...அமத்திகூட அடிக்கடி தாழம்பூ சொருகி..க்....சீ...இந்த நேரத்திலும் அவள் நினைப்புதானா வரவேண்டும்...அந்த வாசனையுடன்...அவள் பூசிக்கொள்ளும்....கஸ்தூரி மஞ்...சள் வாசனையும்...க...ல...ந்...து...

திருமலை ! என்ன இது ? காரியம் கைகூடி வரும் நேரத்தில் மயங்கிக்கொண்டிருக்கிறாய் ? கண்களை சுருக்கி விரித்து - கைகளைத்தான் அசைக்கவே முடியாதே - ஒருவழியாய் கொஞ்சம் தெளிந்தேன்.

இதென்ன ? கைகளில் ஏதோ ஜந்து ஊறுகிறதுபோல் தெரிகிறதே...புழுவா ?

புழு இத்தனை நீளமாகவாயிருக்கும் ? தாழம்பூ வாசம்...ஐயோ ! பூ நாகமா ?

அசையாமல் படுத்திருந்த எனக்கு குப்பென்று உடல்பூராவும் வியர்த்தது... அடப்பாவிகளா ! தாழம்பூ மாலையை இந்த ஜந்துவோடே லிங்கத்திற்கு அணிவித்துவிட்டீர்களா ??

எல்லோர் கைகளிலிருந்தும் தப்பித்து கடைசியில் நீ என் தலையிலா விடிய வேண்டும் ? பெருமானே ! பழி வாங்க முடிவே செய்து விட்டாயா ?

திருமலை...இது நீ எதிர்பாராத விஷயம் ! விஷக்கடி பட்டு பிராணனை விடுவதற்குள் உன் கடைசி பிரார்த்தனைகளை செலுத்திக்கொள் ! அடுத்த பிறவியிலாவது பாவ காரியங்களே செய்யமுடியாத காக்கையாகவோ குருவியாகவோ...

அட ! மாலைக்குவியலுக்கு முன் நெளிந்தபடி செல்வது என்ன ? என் கையிலிருந்து இறங்கிய அதே ஜந்துதான் ! சிவபெருமான் கருணையே கருணை ! என்னைக் காப்பாற்றிவிட்டார் !


***********************************************************************************************


நேரம் மிக மிக மெதுவாய்ச் செல்வதுபோல் தோன்றுகிறது..இரவு இரண்டாம் ஜாமம் ஆகியிருக்குமா ?

கருவறையிலோ நான் படுத்திருக்கும் அர்த்த மண்டபத்திலோ ஒருவரும் இல்லை.

பட்டரும் அந்த தேவகன்மிகளும் முக மண்டபத்தில் ஏதோ கதையளந்துகொண்டிருக்கிறார்கள். பராந்தகச் சுந்தரச் சோழர், அருமொழி, மதுராந்தகர் முதலானோரின் பெயர்கள் அடிபடுகின்றன...அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் போலும்! தஞ்சாவூரின் சிக்கலான அரசியல் சதிகள் - அதிகார துஷ்பிரயோகங்கள் - பதவிப் பரிமாற்றங்கள் - உறவுமுறைச் சிக்கல்கள் பற்றியெல்லாம் இந்தப் பயல்களுக்கென்ன தெரியும் ? என்னைக் கேளுங்கள் - அப்படியே அள்ளியள்ளி விடுவேன் !

அர்த்த மண்டபத்தின் இரண்டு நந்தா விளக்குகள் உயிரை விட்டுவிட்டன....இதற்காகத்தானே இத்தனைநேரம் காத்துக்கொண்டிருந்தேன் ! பெயருக்குதான் நந்தா விளக்கு...இந்தப் பயல்கள் உடனே இவற்றை ஏற்றி வைக்க மாட்டார்கள். இருட்டு எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மெதுவாய் எழுந்து எட்டிப் பார்த்தேன்... நல்லவேளை ! ஒருவரும் கருவறையை நோக்கியபடி அமர்ந்திருக்கவில்லை ! இதுதான் சரியான சமயம். மேலும் தாமதித்தால் அமிர்த கணத்தார் வந்துவிடக்கூடும்.

கால்களெல்லாம் மரத்துப்போய் - எழுந்திருப்பதே கடினமாய் இருக்கிறது.

இனிதான் என் திட்டத்தின் கடினமான பகுதிகள் ஆரம்பம்....ஆனால் திருமலைபட்டன் தான் முன் வைத்த காலை ஒருபோதும் பின்வைப்பதில்லையே !

மாலைக்குவியல்களிலிருந்து மெதுவாய் வெளிக்கிளம்பி கருவரைக்குள் நுழைகிறேன்...

விசுவநாதரே ! ஒரு வைணவன் உமது கருவறைக்குள் வந்ததற்காக மன்னித்துக்கொள்ளும் ! குளித்துவிட்டு சுத்த பத்தமாகத்தான் வந்திருக்கிறேன்...

கருவரையில் ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்கிறது.. அதன் மெல்லிய வெளிச்சத்தில் என் நிழல் பூதாகாரமாய் சுவற்றில் விழ - சட்டென்று சுவர் ஓரமாய் ஒதுங்கிக் கொள்கிறேன்.

சீக்கிரம்! அதோ...அதுதான் ஹாரப் பெட்டி...எடு ! எடு !

இடுப்பிலிருந்து - நான் செய்த ஹாரத்தின் நகலை எ­டுக்கிறேன்...பொன்முலாம் பூசி, இரத்தினங்களுக்கு பதில் சாதாரண வண்ணக் கற்களை பதித்து...
அப்படியொன்றும் மோசமில்லைதான் - இருந்தாலும் மாணிக்க ஆசாரி இன்னும் கொஞ்சம் சிரத்தையாய் வேலை செய்திருக்கலாம். அவன் செய்த வேலைக்கு இருபத்தைந்து பொன் பகல் கொள்ளை ! ஆனால் அவனை விட்டால் எனக்கும் வேறு கதியில்லையே...

பெட்டியிலிருந்து அசலை எடுக்கிறேன். அருகில் வைத்துப் பார்க்கும் போது என் நகல் அசலைவிட கொஞ்சம் பெரியதாக தெரிகிறது !
வேலைப்பாடுகளும் அத்தனை சுகமில்லை...இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்த்துவிட வேண்டியதுதான். இத்தனை தூரம் வந்தாகி விட்டது...என்னதான் ஆகிறதென்று பார்த்து விடுவோம் !

அசலை எடுத்துக்கொண்டு நகலை பெட்டியில் வைக்கிறேன். வேண்டுமென்றே நகையைச் சுற்றி பூக்களை பரவலாக போடுகிறேன்.. இந்த வெளிச்சத்தில் - யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வராத பட்சத்தில் - இது நகல் என்று கண்டுபிடிப்பது சற்றுக் கடினம்தான்.

பெட்டியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு சப்தம் செய்யாமல் வந்து என் பழைய இடத்திலேயே பதுங்கிக் கொள்கிறேன். காரியம் முடிந்துவிட்டது. இனி பேசாமல் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஒப்புயர்வற்ற மாதேவடிகள் ஹாரம் இப்போது என் இடுப்புக் கச்சையில் ! திட்டத்தின் ஆபத்தான இரண்டாம் கட்டமும் முழுவெற்றி ! அடப்பாவி திருமலை... ஜெயித்துவிடுவாய் போலிருக்கிறதே !

வாயிலில் ஏதோ அரவம் கேட்கிறது - அமிர்த கணத்தார் வந்துவிட்டார்களா என்ன ?

பட்டர் பரபரப்போடு கருவரைக்குள் நுழைகிறார்.... நான் மூச்சு விடுவதைக் கூட நிறுத்திவிட்டேன்.

என் கணக்குப்படி அமிர்த கணத்தாரின் தலைமை கண்காணிப்பாளன் மட்டிலும்தான் இப்போது அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்து கருவரைக்கருகில் நிற்கவேண்டும். மற்றவர்களெல்லாம் முக மண்டபத்திலிருந்து பொக்கிஷப் பெட்டியை குழுமி நின்றபடி தரிசிப்பார்கள். அதுதான் மரபு.

மண்டபத்தில் நிழல் ஆடுகிறது...மிகக் கஷ்டத்துடன் தலையின் மிகச்சிறிய பகுதியை திருப்பிப் பார்க்கிறேன்...

அதோ பயபக்தியுடன் கருவரைக்கெதிரே நிற்கிறானே - அவன்தான் தலைமை கண்காணிப்பாளன் நக்கன் கண்டன். கண்டனின் பாட்டனாரான பரதையன் நக்கன் கண்டன்(13) என்பான் பராந்தகச் சோழ மகாராஜா காலத்தில் திருவாய் கேள்வியாய் இருந்து இந்தக் கோயிலுக்கு பல நிவந்தங்கள் விட்டானாம். அதிலிருந்து அவர்கள் குடும்பத்திற்குத்தான் வழிவழியாய் அமிர்த கணத்தின் தலைமை பதவி !

(13) ஆதாரம் - 1903ல் பதிப்பிக்கப்பெற்ற கல்வெட்டு எண்கள் 291 மற்றும் 300.

அர்த்த ஜாம பூஜை ஆரம்பித்து விட்டதற்கு அறிகுறியாக கோயில் காண்டாமணி அடித்துவிட்டு ஓய்கிறது.

பூஜை முடிந்து பிரசாதமெல்லாம் கொடுத்தபின் பட்டர் நகைப் பெட்டியை எடுத்து வருகிறார்... என் பரபரப்பு உச்ச கட்டத்தை அடைந்து விட்டது.

கொஞ்சம் வெற்றிலையை அதக்கிக்கொண்டால் நன்றாக இருக்கும். நாக்கு வேண்டும் வேண்டுமென்கிறது.. ஆசையை அடக்கிக் கொண்டேன்.

அமிர்த கணத்தான் இப்போது ஒரே ஒருமுறை பெட்டியைத் திறந்து நகை உள்ளதா என்று பார்ப்பான். அதுதான் எனக்கு மாபெரும் சோதனை !

கடவுளே ! அதோ பெட்டியைத் திறக்கிறான்... ஒரே பூக்களாக இருப்பதால் - ஐயோ ! - ஓரிரண்டு பூக்களை வெளியே எடுக்கிறானே ! நகையை பார்த்துவிட்டு..அப்பாடா ! பெட்டியை ஒருவழியாய் மூடிவிட்டான் !

திருமலை ! உன் அதிருஷ்டமே அதிருஷ்டம் ! இந்தக் கணத்திலிருந்து தனலட்சுமியின் பூரண அருளுக்குப் பாத்திரமாகிவிட்டாய் !

சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை...அந்த இருட்டில் தனியே புன்னகைத்துக் கொள்கிறேன்...சே ! வாய்விட்டு மனதார சிரிக்கக்கூட முடியவில்¨­ல !

அவ்வளவுதான் - என் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறிவிட்டது. இனி இப்படியே படுத்திருந்துவிட்டு அதிகாலையில் திருமஞ்சன வேளத்துக் கிழவன் சுத்தம் செய்வதற்கு கதவைத் திறக்கும்போது - இருட்டில் சப்தம் செய்யாமல் வெளியேறிவிடவேண்டியதுதான்...

அடுத்து ஊரைவிட்டு கிளம்புவதைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

என்னுடன் மாணிக்க ஆசாரியையும் கிளப்பிக் கொண்டு போய்விட முடியுமா ? சேர தேசத்தில் நகை வியாபாரிகளுக்கு பெருமதிப்பு என்று ஏதாவது சொல்லிசம்மதிக்க வைக்க வேண்டும். அவனை இங்கேயே விட்டு வைத்தால் நகை திருட்டு விஷயம் வெளியே வரும்போது ஏதாவது உளறி வைப்பான்...

எங்கள் இருவருக்குமே குடும்பம், குழந்தை - குட்டி ஒன்றுமில்லை. எனவே..மிஞ்சிப்போனால் பத்து நாட்கள் ! அதற்குள் கிளம்பிவிடுவோம்.

பாவம் அனந்தர்...கிளம்புகிறேன் என்று சொன்னால் மாய்ந்து போவார் ! ஓரிரு வருடங்கள் கழித்து வேறு வேஷத்தில் ஊருக்கு வந்து அவரை தகுந்த முறையில் கவனித்துவிட்டுப் போகவேண்டும்.

கிளம்புவதற்குமுன் அமத்தியை...

அந்த பாழாய் போனவளை சந்தித்துத்தான் ஆகவேண்டுமா ?

சரி, ஒருமுறை! ஓரே ஒருமுறை ! என்னுடைய மகத்தான வெற்றியை கொண்டாடுவதற்காக - ஓரே ஒருமுறை - சந்தித்துவிட்டு வந்துவிடலாம். அதற்குப் பின்பு வாழ்நாளில் அவளை பார்க்கப்போகிறேனா என்ன ?

அந்தக் கிழவியையும் ஒரு கை பார்த்தே ஆகவேண்டும் ! அன்று எத்தனை கேவலமாக பேசிவிட்டாள் ? அடியேய் ! பட்டன் பெருந்தனக்காரன் ஆகிவிட்டானடி !


***********************************************************************************************


பகுதி இரண்டு - அமத்தி சொன்ன கதை


தங்க முலாம் பூசிய தட்டில் மீண்டும் ஒருமுறை முகத்தைப் பார்த்துக் கொள்கிறேன்.

நான் அழகியா ? இதுதான் எப்போதும் என்னை நானே கேட்டுக்கொள்ளும் ஒரே கேள்வி !

சிலசமயம் மிகுந்த அழகி என்பதுபோல் தோன்றும். வேறுசில சமயங்களில் அப்படியொன்றும் பெரிய அழகியில்லை என்பதுபோலவும் தோன்றும். இதுவரை திட்டவட்டமான எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை ! என்ன செய்வது ?

கண்களுக்கு நீளமாய் மைதீட்டிக் கொள்கிறேன்...என்னுடைய அழகே என் விரிந்த கண்கள்தான் என்று பலர் கூறியிருக்கிறார்கள். பருத்துக் குவிந்த அதரங்கள்..சற்றே பூசிய கன்னம்...நீங்களே சொல்லுங்கள் - நான் அழகியா இல்லையா ? எல்லோரும் சொல்கிறாற்போல் ஆஹா! நீதான் நான் பார்த்தவர்களில் பேரழகி ! என்று சொல்லிவிட்டுப் போய்விடாதீர்கள்...

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கேட்டுவிடுகிறேனே - அந்த தேவமங்கையைவிட நான் அழகா இல்லையா ? அதை மட்டும் மறைக்காமல் சொல்லிவிடுங்கள் !

பெயரைப்பாருங்கள் ! தேவமங்கையாம்...ஏதோ தேவலோகத்திலிருந்து நேரே பூமியை இரட்சிக்க வந்திறங்கியவளைப்போல ! முதன் முதலில் அவளை பரமேச்சுரக் கற்றளியில் சந்தித்தபோதே சுத்தமாய் எனக்குப் பிடிக்கவில்லை.... பார்வையில் என்ன திமிர் ? நடையில் என்ன அலட்சியம் ?

வேண்டுமென்றே நான் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் நேரங்களில் அவளும் வருகிறாள். அவளுடைய ஒய்யாரத்தை இந்த ஊர்க்காரன்களும் திறந்தவாய் மூடாமல் இரசிக்கிறான்கள் ! ஊருக்குள் புதுவரவு அல்லவா ?

புதியதாய் ஒரு கழுதையை தகுந்த அலங்காரம் செய்து வீதியில் விட்டால் அதைப்பார்த்துக்கூட பல்லிளிப்பார்கள்...சீச்சீ !

காசுமாலையையும் ஒட்டியாணத்தையும் அணிந்து கொள்கிறேன். கைகளுக்கு நெளிகள்...வைர வளையல்கள்.... காதுகளுக்கு மகரத் தோடுகள்... இத்தனை அணிமணிகள் அணிந்தும் ஏதோ குறைபாடு இருப்பதைப் போலவே தோன்றுகிறதே...அது ஏன் ?

முன்பெல்லாம் இப்படி தோன்றாது. அவளுடைய புதுவிதமான அலங்காரத்தை பார்த்ததிலிருந்துதான் இப்படியெல்லாம் தோன்றுகிறது ! (எத்தனை முயன்றாலும் அந்த நாசமாய்ப் போகிறவளின் ஞாபகம்தான் திரும்ப திரும்ப வருகிறது பாருங்களேன்...)

அவள் என்னளவிற்கு நகைகள் அணிந்துகொள்வதில்லை. நேற்றுக்கூட கோயிலுக்கு ஒரே ஒரு மெல்லிய வைரச் சங்கிலிதான் அணிந்துகொண்டு வந்திருந்தாள்..இருந்தும் அவளுடைய அரக்கு நிற மார்புக் கச்சுகளுக்குமேல் அது எத்தனை எடுப்பாய்த் தெரிந்தது ! அந்த வகைச் சங்கிலிகளை சோழதேசத்தில் நான் பார்த்ததேயில்லை. சேர நாட்டு நகையா என்ன ?

இரண்டு நாழிகைகளாக நான் செய்துகொண்ட அத்தனை அலங்காரங்களும் அந்த ஒற்றைச் சங்கிலிக்குமுன் வீணாகப் போய்விட்டதே !

என் அம்மா ஒரு பழம் பஞ்சாங்கம். இதைப்போன்ற அழகான மெல்லிய நகைகளை செய்துகொள்ளவே விடமாட்டாள் ! காலா காலத்துக்கும் அழியாமல் இருக்கவேண்டுமென்று தடிமன் தடிமனாய் இரும்புச் சங்கிலிகளைப்போல் ஆசாரியைச் செய்யச் சொல்வாள்.... அவளை நினைத்தாலே எரிச்சலாக வருகிறது அவளுக்கு உலகத்தில் நாகரீகம் என்று ஒன்று மாறிக்கொண்டிருக்கும் விஷயமே தெரிவதில்லை !

மார்புக் கச்சுகளை சரிசெய்து கொள்கிறேன். எனக்கு அகவை(14) இருபத்தியொன்று என்று சொன்னால் யாராவது நம்புவார்களா ? நானே நம்ப மாட்டேன் ! அதனால்தான் அம்மாவும் எல்லோரிடமும் தைரியமாய் எனக்கு வரும் ஆடியில்தான் பதினைந்து அகவை முடியும் என்று சொல்லி வருகிறாள்.

(14) வயது

இன்னும் இரண்டு நாட்களுக்கு வேலை மிக அதிகம். திருவாதிரை கழிந்துவிட்டதால் கோயில் நாட்டியக் கச்சேரிக்கு அமிர்த கணத்தாரிடமிருந்து உத்தரவு வந்துவிட்டது.

திருவாதிரை ! சென்ற திருவாதிரைக்குத்தானே தஞ்சையிலிருந்து ஈசானமங்கலத்திற்கு குடிபெயர்ந்தோம்....அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா என்ன ? நாட்கள்தான் எத்தனை வேகமாய் ஓடுகின்றன...!

நாளை மறுநாள் கச்சேரி. அதற்கு என்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.

என்ன நகை அணிவது, எந்த விதமான கொண்டை போட்டுக்கொள்வது, எந்த வண்ண ஆடை அணிவது முதலான விஷயங்களை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இதிலெல்லாம் அம்மா நல்லவேளையாக தலையிடுவதில்லை.

அபிநயத்திற்கு திருநாவுக்கரசரின் பதிகத்தை எடுத்துக்கொள்ளலாமென்று இருக்கிறேன்... என்னுடைய நிருத்தாசிரியர்(15) அதை இன்னும் முடிவுசெய்யவில்லை.

(15) நட்டுவனார்

ஏதோ சப்தம் கேட்கிறது...அம்மா வருகிறாள்...முகத்தில் ஏன் இத்தனை பரபரப்பு ? "அடியே ! கேட்டாயா சங்கதியை ! இந்த நக்கன் கண்டனுக்கு என்ன திமிர் பார்த்தாயா ?"

அம்மா எப்போதும் இப்படித்தான். விஷயத்தைச் சொல்வதற்குமுன் நிறைய சுற்றி வளைப்பாள்.. நக்கன் கண்டன் - செல்வாக்கு மிகுந்த கோயில் அமிர்த கணத்து தலைவன். அவனுடைய ஆதரவினால்தானே நாங்களே இங்கு வரமுடிந்தது ?

"போன திருவாதிரையில் உன் கச்சேரியை என்னமாய் அமர்களப்படுத்தினான்... இப்போது அந்த சிறுக்கி வந்ததுமுதல் என்னமாய் மாறிவிட்டான் பார் !"

சிறுக்கி என்று யாரைக் குறிப்பிடுகிறாள் ? வேறுயாரை ? தேவமங்கையாய்த்தான் இருக்கும் !

"விஷயத்தைச் சொல்லேன், அம்மா !"

"விஷயமென்னடி விஷயம் ! என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறான் ? இவனுடைய ஆதரவில்லாவிட்டால் நாம் ஷீணித்துப் போய் விடுவோமென்று நினைத்துவிட்டானா என்ன ?? வாணியஞ் செட்டியிடம் சொல்லி இவனை ஒரு வழி செய்கிறேனா இல்லையா பார் !"

நான் ஒன்றும் சொல்லவில்லை. இவளுடைய ஆரவாரங்கள் ஆர்ப்பாட்டங்களெல்லாம் இப்போது எனக்கு பழகி விட்டன.

"என்ன அநியாயம் ? என் பெண் ஆடிமுடித்த அதே மேடையில் வேறொருத்தி ஆடுவதா ? அதை நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா ?"

"யார் என் பின்னே ஆடப் போகிறாளாம் ?"

"வேறுயார் - அந்த..........."

அப்பப்பா... இந்த அம்மாவுக்குத்தான் எத்தனை வசவுகள் தெரிகின்றன ! காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை...! இது ஓரளவிற்கு நான் எதிர்பார்த்ததுதான். நான் ஆடிமுடித்தபின் அதே கோயில் மேடையில் தேவமங்கை ஆடப் போகிறாளாம். ஆடினால் ஆடிக்கொள்ளட்டுமே !

கண்டன் மங்கையின்மேல் ஒரு கண் வைத்துவிட்டான் என்பது ஊரறிந்த ரகசியம். அவன் தயவிருந்தால் கோயிலில் ஆகாத காரியம் உண்டா என்ன ? அவள் ஆடட்டும் - பாடட்டும் - வரும் வருமானத்தையும் நன்றாக எங்களைப்போல் அனுபவிக்கட்டும் ! வேண்டாமென்று சொல்லவில்லை ! அவளும் என்னைப்போல் ஒரு பெண்தானே... பிழைத்துப் போகிறாள்...!

ஆனால் தேவையில்லாமல் அடிக்கடி என்னை சீண்டிப் பார்க்கிறாளே - அதுதான் எனக்குப் பிடிப்பதில்லை.இருக்கட்டும். இந்த அமத்தி யாரென்பதை அவளுக்கு காட்டி விடுகிறேன்.

வாயிலில் ஏதோ ஆள் அரவம் கேட்க அம்மா வெளியே சென்று விட்டாள்.

அலங்கார விஷயம் இப்போது மிக மிக முக்கியமாய் படுகிறது எனக்கு. என் அணிமணிகளையும் ஜொலிப்பையும் பார்த்தவுடனேயே அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடவேண்டும். அதற்குப் பின் இருக்கவே இருக்கிறது என் சொக்கவைக்கும் நாட்டியம் ! தான் இவளுக்கு எந்த வகையிலும் ஈடானவள் அல்ல என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டுவிட்டால் அதற்குப்பின் அவளால் சரியாக நாட்டியத்தில் கவனம் செலுத்த முடியாது....ஏதோ அரைகுறையாய் ஆடிவிட்டு அவமானத்துடன் திரும்ப வேண்டியதுதான் !

எனவே இந்தமுறை கச்சேரிக்கு மிகக் கவனமாய் என்னை தயார் செய்துகொள்ள வேண்டும். அடியே மங்கை! இந்த அமத்தியைப் பற்றி நீ இன்னும் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லையடி!


***********************************************************************************************


"அமத்தி ! அடியே அமத்தி ! எங்கேயடி போய்விட்டாய் ?"

அம்மாவின் குரல் கர்ண கடூரமாய் ஒலிக்கிறது. பக்கத்து அறையிலேயே இருந்தாலும் இப்படித்தான் கத்துவாள்... ஏனென்று புரியவில்லை.

"என்ன அம்மா ?"

"அடியே - அந்த திருமலை வந்திருக்கிறானடி! உன்னை சந்தித்துவிட்டு இரண்டு வார்த்தை பேசவேண்டுமாம்!"

"எந்தத் திருமலையை சொல்கிறாய் ?"

"அட - மறந்துவிட்டாயா ? அந்த திருமேற்றளி பட்டனடி !"

"ஓ அவனா !"

வெற்றிலை படிந்த பற்களும் அழுக்கு வேட்டியுமாய் அசிங்கமான ஒரு உருவம் என் மனதில் தோன்றிற்று - அவனேதான் ! தஞ்சையில் இருக்கும்போதே அவனுக்கு என்மேல் ஒரு கண்...அடிக்கடி வருவான். ஏதோ வியாபாரம், வெளிநாடு என்பான். அம்மாவும் பெரியமனிதன் போலிருக்கிறது என்று கொஞ்சம் மரியாதையாகவே இருந்தாள்.

அதற்குப்பிறகு நீண்ட நாட்கள் கண்களிலேயே படவில்லை. பின் ஈசான மங்கலத்திற்கு நாங்கள் குடிபுகுந்தபின் ஒருநாள் திடீரென்று தோன்றினான் ! வியாபாரம் ஏதோ நஷ்டமாம் - அதனால் பிழைப்புக்காக இங்கே வந்துவிட்டானாம்.

அம்மா அவன் தோற்றத்தை வைத்தே அவனிடம் ஒன்றும் தேறாது என்பதைக் கண்டுகொண்டுவிட்டாள். மேற்றளியில் ஸ்ரீகாரியம் செய்துகொண்டிருப்பவனிடம் ஐந்து பொற்கழஞ்சுகளை சேர்ந்தாற்போல் பார்ப்பதே பெரிய விஷயம் - எனவே வாயிலோடே பேசி அனுப்பி விட்டாள்..

அவன் அடுத்த முறை வந்தபோதுதான் வாக்குவாதம் முற்றி - அம்மா பல்லக்குத் தூக்கிகளை விட்டு அவனை அடித்து விரட்டி... எதற்காக இப்போது வந்திருக்கிறான் ?

"அடியே! ஆளே அடியோடு மாறிவிட்டானடி... முன்பெல்லாம் என்னக் கண்டாலே எப்படி நடுங்குவான் ? இப்பொழுது வந்துபார்...அவன் அமர்ந்திருக்கும் தோரணையை...!"

அம்மாவுக்கு காசுதான் முக்கியம்...பட்டனிடம் ஏதாவது தேறுமென்று தெரிந்தால் எளிதில் விட்டுவிடமாட்டாள் ! அவனுக்கும் அறிவில்லை - சென்றமுறை நடந்ததையெல்லாம் மறந்துவிட்டானா என்ன ?

அம்மா தொடர்ந்து சொல்கிறாள் - "அவனுடைய மாமனுக்கு நேரடியான வாரிசு இல்லாததால் ஏகப்பட்ட சொத்துக்களை இவன்பேரில் திருப்பாதிரிப்புலியூரில் எழுதிவைத்து விட்டாராம் ! இன்னும் மூன்று நாட்களில் ஊரைவிட்டுக் கிளம்புகிறானாம்..."

பாருங்கள் ! இதுதான் அதிருஷ்டமென்பது...கோயில் மூலையில் கிடந்தவன் ஒரேநாளில் குபேரனாகிவிட்டான் !

"அவனுடைய வாய்சாலகத்தை நான் நம்பத்தயாராயில்லை...இருந்தாலும் நீ அவனிடம் பக்குவமாய்ப் பேசி விஷயத்தை முழுவதும் தெரிந்துகொள்! நமக்கும் உபயோகப்படும்."

அம்மாவின் போதனைகள் இருக்கிறதே...அப்பப்பா! கொஞ்ச காலம் முந்திப் பிறந்திருந்தால் இந்த நாட்டிற்கே ராணியாகியிருப்பாள்! அத்தனை சாமர்த்தியம் !

"அடியே - அவனிடம் நயமாய் பேசி கிளம்புவதற்குமுன் அவன் ஞாபகமாய் ஏதாவது அட்டிகை செய்துபோடச்சொல்லேன் !"

எத்தனை ­­எளிதாய் யோசனைகள் வருகின்றன பாருங்கள்....அவளுடைய அறிவில் நூற்றிலொரு பங்குகூட எனக்குக் கிடையாது ! அவன் ஊரைவிட்டுப் போய்ச் சேருமுன் எங்களுக்கு ஏதாவது அழவேண்டும் என்று விதியிருந்தால் அதை மாற்றவா முடியும் ?

"சரி - கொஞ்ச நேரம் கழித்து உள்ளே அனுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன் !"

"என் ராஜாத்தி !" - என்று அம்மா திருஷ்டி கழிக்கிறாள்.

இது எதற்கென்றால் முரண்டு பிடிக்காமல் நான் அவனை உள்ளே வரச் சொன்னதற்காக. வெற்றிலை நாற்றத்தையும் கோயில் அழுக்கையும் சற்று நேரம் சகித்துக்கொண்டாக வேண்டும்... ஆனால் அந்த சாவகத்து வணிகனுக்கு இவன் எவ்வளவோ மேல்!

அம்மாவை போகச் சொல்லிவிட்டு சற்று புனுகும் சந்தனமும் பூசிக் கொள்கிறேன்... இப்போது வெளியில் நடப்பதைப் பார்க்க வேடிக்கையாயிருக்கும் - அதனால்தான் சற்று நேரம் கழித்து வரச்சொன்னேன்.

அறையின் மாடக்கதவை திறக்க - முன் அறை நன்றாகவே தெரிகிறது.

அட! திருமலை பட்டனா இது? அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறானே ! மழிக்கப்பட்ட முகமும், அங்கவஸ்திரங்களும், அவன் உட்கார்ந்திருக்கும் தோரணையும்....

அம்மா வழக்கம்போல சேடிப் பெண்ணை கவரிவீசச் சொல்லிவிட்டு அவனுக்கு சூடான பாலை வெள்ளிச்சொம்பில் கொடுக்கிறாள்... அப்பாடி ! என்ன நெளிவு...என்ன குழைவு...அம்மா நாட்டியக்காரியாய் இல்லாதுபோனாலும் மிகக் கைதேர்ந்த நடிகை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அவளுடைய மட்டு மரியாதைகளை அந்த பட்டனும் கால்மேல் காலாட்டியபடி ரசிக்கிறான் பாருங்கள்...அதைச்சொல்லுங்கள்!

இருவரும் எ­தற்காகவோ சப்தம்போட்டுப் பெரிதாய்ச் சிரிக்கிறார்கள்... அட...எழுந்துவிட்டானே ? நான் இப்போது உள்ளே சென்றாக வேண்டும்.


***********************************************************************************************


"நீ தஞ்சையிலிருந்து இங்கு வந்தது முதல் உன்னிடம் பேச முயன்றுகொண்டிருக்கிறேன்...உன் அம்மாதான்...உன்னை நெருங்கவே விடவில்லை!"

அம்மா சொன்னதுபோல் ஆள் சற்று பளபளப்பாகத்தான் ஆகியிருக்கிறான்...காசு வருகிறது என்றாலே தோலில் ஒரு மினுமினுப்பு தோன்றிவிடும்போல் தெரிகிறது.

"அம்மாவைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே...." - அவளை விட்டுக்கொடுக்கவும் முடியாது - அதே சமயம் இவனுடைய பழைய கோபத்தையும் சரிக்கட்டியாக வேண்டும்.

"எனக்காக சென்றமுறை நடந்ததையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்!"

அம்மாவுடைய இடைவிடாத பயிற்சியில் - எப்படியெல்லாம் பேசக் கற்றுக் கொண்டு விட்டேன்...!

"அதை நான் எப்போதோ மறந்துவிட்டேனே, அமத்தி!"

பெயர் சொல்லி கூப்பிடுகிறான் - எனில் சந்தோஷமான மனநிலையில் உள்ளான் என்று அர்த்தம். இவன் வாயைப் பிடுங்கி உண்மையிலேயே சொத்து ஏதாவது வந்துள்ளதா - அப்படிவந்திருந்தால் அதன் மதிப்பு என்ன - போன்ற விபரங்களை அறிய வேண்டும்....நாட்டியப் பயிற்சிக்கு வேறு நேரமாகிக் கொண்டிருக்கிறது!

"புதிய மாதுளை முத்துக்கள் உதிர்த்து வைத்திருக்கிறேன் - கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா ?"

"வேண்டாம் அமத்தி! உன் அம்மாவே வந்தவுடனேயே பால் பழமெல்லாம் கொடுத்து உபசரித்துவிட்டார்..."

"எங்களையெல்லாம் விட்டுவிட்டு கிளம்புகிறீர்கள் போலிருக்கிறதே ?"

"ஆமாம்...அப்படியொரு சூழ்நிலை உருவாகிவிட்டது! என்ன செய்வது..?"

"ஆனாலும் உங்கள் மாமனுக்கு உங்கள் பேரில் மிகுந்த அன்புதான்..."

"அ..ஆமாம்! ஆமாம்!"

மாமனைப் பற்றி பேசியவுடன் அவன் முகம் சற்று மாறுவதை கவனித்துவிட்டேன்.

"அப்போது அவருடைய கடைசி காலத்தில் உங்களை தன்னுடன் வைத்துக்கொண்டிருக்கலாமே - இங்கு நீங்கள் கிடந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டிய அவசியமில்லையே!"

"அவர் கூப்பிட்டுக் கொண்டேதான் இருந்தார்...நான்தான் பெருமாள் பணி தடைபட்டுக்கொண்டிருக்கக் கூடாதென்று...."

இவனாவது.. பெருமாள் பணிக்காக இங்கேயே இருப்பதாவது ? நிச்சயம் புளுகிக் கொண்டிருக்கிறான்.. என்னுடைய அஸ்திரத்தில் ஒன்றை எடுத்து வீச வேண்டியதுதான்!

"நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் - என் மனதில் பட்டதை சொல்லிவிடட்டுமா ?"

"சொ...ல்லேன் ?"

"இந்த மாமன் மச்சான் வேலையெல்லாம் வெற்றுப் புளுகு! என் அம்மாவை சரிக்கட்டி என்னுடன் பேசுவதற்காக இப்படியெல்லாம் பொய் சொல்லி.."

"இ...இல்லை! இல்லை! நான் சொல்வதெல்லாம் உண்மைதான்..."

"பின் நீங்கள் சொல்வதை நான் எப்படி நம்புவது ? ஏதாவது ஆதாரம் உள்ளதா ?"

"நம்பாவிட்டால் போயேன்!"

அடடா! நான் இவ்வாறு பேச்சை திருப்பியிருக்கவே கூடாது! அவனுக்கு கோபம் வந்துவிட்டது....அதனால் நஷ்டம் எங்களுக்குத்தான்! இவனை சரிப்படுத்தியாக வேண்டுமே...

"கோபித்துக் கொள்ளாதீர்கள்! நீங்கள் சொல்வதில் எனக்கு நம்பிக்கை வந்தால்தானே நானும்....உங்களுடன்......"

"சரி ! சரி ! ஆதாரத்தை நான் காட்டுகிறேன் ! ஆனால் உன் அம்மாவிடம் இதைப்பற்றி மூச்சு விடக்கூடாது..."

எனக்கு இதில் சுவாரஸ்யம் வந்தது ... முதல் முறையாக அம்மாவிற்குத் தெரியாத ஏதோ ஒரு விஷயம் எனக்குத் தெரியப் போகிறது!

"சரி !"

"சரியென்று சொன்னால் பத்தாது ! திருக்கற்றளி ஈசுவரர் மேல் சத்தியம் செய் !"

அவனுக்கு என் பலகீனம் தெரிந்திருக்கிறது....பெருமான் மேல் செய்த சத்தியத்தை ஒருபோதும் என்னால் மீற முடியாது. சற்று தயக்கத்திற்குப்பின், கையிலடித்து சத்தியம் செய்ய...என் கைகளை அப்படியே பிடித்துக் கொண்டுவிட்டான்!

"விடுங்கள்...முதலில் உங்கள் ஆதாரத்தைக் காட்டுங்கள் ! அதற்கப்புறம்தான் எல்லாம்.."

அவன் ஒரு அலட்சியப் புன்னகையோடு இடைக்கச்சிலிருந்து எதையோ எடுக்கிறான்...

அப்பாடி ! இதென்ன நகை ? எத்தனை வேலைப்பாடுகள்....என்ன ஜொலிப்பு !

ஏதோ ஹாரம் போல் தெரிகிறது....கொள்ளை அழகு! இந்த வகை மெல்லிய ஹாரங்கள் சோழநாட்டில் செய்யப் படுவதில்லை... ஈழ தேசம் அல்லது சாவகம் சென்று வருவோரிடம் ஒருவேளை கிடைக்கலாம் !

இது எப்படி இவன் கைகளில் ? அந்த புலியின் கண்களைப் பாருங்களேன் - மிக மிக உயர்ந்த ஜாதி மாணிக்கக் கற்களென்று நினைக்கிறேன் - எப்படி தணல்போல் ஜொலிக்கின்றன!

என் விரிந்த விழிகளில் தெரிந்த ஆச்சரியம் அவனுக்கு குதூகலத்தை அளித்தது.. உடனே அவசர அவசரமாய் இடைக்கச்சில் வைத்து பத்திரப்படுத்திவிட்டான் ! யமகாதகன் !

"என்ன பெண்ணே! அப்படிப் வாயைப் பிளந்துகொண்டு பார்க்கிறாய் ?"

இதனை அணிந்துகொண்டு நாளை மறுநாள் கோயிலுக்குச் சென்றால் எப்படியிருக்கும் ? அந்த தேவமங்கை ஓடிவந்து என் கால்களில் விழுந்துவிடமாட்டாள் ?

"பெண்ணே! இதன் மதிப்பு தெரியுமா உனக்கு ?"

"போங்கள்! இது விலைமதிப்பற்றது என்பதுகூட தெரியாதவளா நான் ?"

"இது என் மாமனின் குலச்சொத்து பெண்ணே! இப்போதாவது என்னை நம்புகிறாயா இல்லையா ?"

"ஆஹா ! நிச்சயம் நம்புகிறேன்"

"அப்படிச் சொல்லடி, என் செல்லக் கிளியே.."

அவன் எனக்கு மிக அருகில் வந்துவிட்டான்...மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய தருணம். உண்மையாகவே இது குலச்சொத்தா ? அல்லது எங்காவது திருடியிருப்பானா ? அப்படியே திருடியிருந்தாலும் இந்த ஊரில் திருடவில்லையென்பது நிச்சயம் - இல்லையேல் நகை களவுபோன செய்தி இத்தனை நேரம் அம்மாவின் காதுகளில் விழுந்திருக்க வேண்டுமே...

"அதை என் கழுத்தில் போட்டு அழகு பார்ப்பீர்கள் என்று நினைத்தேன்... அதற்குள் உள்ளே வைத்துவிட்டீர்கள்..!"

"ஆ ! அதற்குத்தானே இதை எடுத்து வந்திருக்கிறேன் ! ஆனால் இதனை உனக்குப் போட்டு அழகு பார்க்குமுன்..."

அவன் ஒரே எட்டில் தாவி என்னை அணைத்தான்...

"விடுங்கள்...என்ன இது...? நிருத்த ஆசிரியர் வருகிற சமயம்.!"

அப்பா ! என்ன பிடி பிடிக்கிறான் ! அந்த நகையை எப்படியாவது அவனிடமிருந்து கறந்து கச்சேரிக்கு அணிந்துகொண்டேயாக வேண்டும். ஆனால் அதற்கு விலையாக அவன் என்னையே அல்லவா கேட்கிறான் ?? இவனை நம்புவதற்கில்லை. எல்லாம் முடிந்துபோனபின் நகையை கொடுக்கவில்லையென்றால்...?

அம்மாவிடம் விஷயத்தை சொல்லக்கூடாது என்று சத்தியம் வேறு வாங்கித் தொலைத்திருக்கிறான். அதனால் அவளிடம் யோசனை கேட்க முடியாது! இந்நிலையில் எனக்கு சிந்திக்க கொஞ்சம் அவகாசம் தேவை.

"இப்போது அதற்கு சமயம் சரியாக இல்லை....ஆசிரியர் வரும் நேரம். பகல் வேளையாய் வேறு இருக்கிறது - நாளை மாலை வாருங்களேன் !"

"ச...சரி....!"

நாளை வருவானா ? வருவான். நம்பித்தானாக வேண்டும்.


***********************************************************************************************


அதற்குப்பிறகு எனக்கு முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன.

மாலை ஆசிரியர் வந்து கச்சேரிக்கான பதிகங்களை சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனார். நடனம் மிக நன்றாகவே அமைந்துவிடுமென்று நம்புகிறேன்.

மாலை அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தேன். இன்று அந்த திமிர்பிடித்தவளை காணவில்லை. அம்மா பரமேஸ்வரப் பெருமானடிகளிடம் நடனத்தில் எனக்கே வெற்றியளிக்கும்படி பிரார்த்தனை செய்து கொண்டு ஐந்து கழஞ்சுகளை முடிந்து வைத்தாள். நான் மனதுக்குள் திருமலையை நாளை மாலை கட்டாயம் திரும்ப அனுப்பும்படி கோரினேன்...ஹாரத்தை கச்சேரியில் அணிந்து கொண்டேயாக வேண்டும் !

என்ன சொல்லி அவனிடமிருந்து ஹாரத்தை எடுப்பது என்பதுதான் என்னுடைய ஒரே சிக்கல் ! அவன் சென்றது முதல் அதைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறேன்...

பட்டர் பிரசாதங்களை எடுத்துக் கொண்டு வந்தார்.

பாழாய்ப் போகிறவன் ! அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டான் - அவளிடம் யோசனை கேட்காமல் என்னால் செயல்படவே முடியாது போலிருக்கிறதே!

"கச்சேரிக்கு முன்னால் சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதம்மா !"

"ஆஹா! எல்லாம் பெருமான் சித்தம்..."

ஆட்களை விட்டு நகையை அவனிடமிருந்து பலவந்தமாக பறிக்கும் முயற்சியை முதலிலேயே நிராகரித்துவிட்டேன். ஏனெனில் அது ஒருவேளை உண்மையிலேயே மாமன் கொடுத்த குலச்சொத்தாயிருந்து தொலைந்தால்...நான் செய்வது திருட்டாகக் கருதப்பட்டு ஊரை விட்டே விரட்டி விடுவார்கள்!

எவரையாவது அவனைப் பின்தொடர்ந்துபோய் நகையை கவர்ந்து வரச் சொல்லலாமென்றால் - அதிலும் சிக்கல் ! நகை காணாமல் போன விஷயம் கச்சேரிக்கு முன்னரே எல்லோருக்கும் தெரிந்துபோய்...அதை அணிந்துகொள்ள முடியாமல் போய்விடும் !

"என்னடி ? பிரகாரத்தை சுற்றக் கிளம்பாமல் அப்படி என்ன யோசனை ?"

சீ...இதென்ன ? மிகத் தவறான வழிமுறைகள் பற்றி இறைவனின் சன்னிதானத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ? அந்த நகை நான் கச்சேரியில் ஒருநாள் அணிவதற்காக மட்டும்தானே - அதனை அவனிடமே நேரடியாய் இரவலாகக் கேட்டா­ல் என்ன ? அதில் பிரச்சனை ஒன்றுமில்லைதான்... ஆனால் அவன் தரவேண்டுமே ! அவசர அவசரமாக நகையை காட்டியவுடனே உள்ளே எடுத்து வைத்துக் கொண்ட வேகத்தைப் பார்த்தால் அவன் இரவல் கொடுக்கக்
கூடியவனாய் தெரியவில்லை...

ஒருவேளை தரமறுத்துவிட்டால் ? அவ்வளவுதான்.காலாகாலத்திற்தும் தேவமங்கைக்கு கால்பிடித்து விட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான் !

ஈசான பட்டர் நல்ல மனிதர்...நம்மிடம் அவருக்கு அனுதாபம் உண்டு. தேவமங்கை என்னுடன் நாட்டியமாடப் போகும் விஷயத்தை தனியே விசாரித்தார். பெருமானடிகள் அருள் உனக்கு பூரணமாய் உண்டு என்று ஆசீர்வதித்தார்.

இல்லை - இதனை விட்டுவிடமுடியாது.
இரவல் கேட்டு வைப்போம்... கொடுத்துவிட்டால் மிக நல்லது. இல்லையேல் ? இல்லையேல் - வேறு ஏதாவது செய்தாக வேண்டும் ! இந்நிலையில் எனக்கு உதவக்கூடியவள் ஒரே ஒருத்திதான்... நகை விஷயத்தை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று மட்டும்தானே சத்தியம் செய்திருக்கிறேன் ?

"என்னடி - நான் என்னவோ பேசிக்கொண்டேயிருக்கிறேன் - நீ பதில் சொல்லாமல் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருக்கிறாயே ? அந்த பட்டன் வந்து சென்றது முதல் உன் முகமே சரியில்லை - என்னிடம் என்னவென்று சொல்லக்கூடாதா ?"

சொல்லமுடியாதே அம்மா ?

"ஓன்றுமில்லையம்மா...நாட்டியம் பற்றித்தான் யோசனை !"

அம்மாவின் கண்களில் சந்தேகம் போகவில்லை....என்னிடமே பொய்யா ? ­என்பதுபோல் ஒரு பார்வை!


***********************************************************************************************


அறையில் ஒரு மயக்கம் தரும் சூழ்நிலை....அகில், சந்தனம், கஸ்தூரி முதலான பலவித நறுமணப் பொருட்களிலிருந்து வரும் புகையால் அறையே ஏதோ வான அந்தரத்தில் மிதப்பதைப்போல் காண்கிறது.

இத்தகைய சூழலில் ஒரு அழகிய இளம் பெண்ணை அருகில் காணும் எவனுக்குமே தலை சற்று கிறுகிறுக்கும். அறிவு தெளிவை இழக்கும். காமம் உடல் முழுதும் பித்தமாய்ப் பரவும்.

பட்டனைப் பற்றி சொல்லவே வேண்டாம்...ஒரு நிதானத்திற்கு வர மிகவும் அவஸ்தைப்படுகிறான்.

"எங்கே வராமலே போய்விடுவீர்களோ என்று நினைத்தேன்...."

"என்ன அமத்தி அப்படிச் சொல்லிவிட்டாய் ? கடந்த மூன்று வருடங்களாக இந்த நாள் வராதா என்று காத்துக் கொண்டிருக்கிறேன் !"

நான் புன்னகைத்தேன். ஹாரத்தை கையில் எடுத்து வந்திருக்கிறானா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

"என்று ஊரைவிட்டு கிளம்புகிறீர்கள் ?"

"இன்றே கிளம்பியிருப்பேன் - நீ வரச் சொன்னதால், நாளை மறுநாள் கிளம்புகிறேன். நாளை பிரயாணத்துக்கு உகந்த தினமாக இல்லை!"

"இடைக்கச்சை ஏன் இத்தனை இறுக்கமாக அணிந்து கொண்டிருக்கிறீர்கள் ?"

"மிக முக்கியமான விஷயம் அங்கே இருக்கிறதே..!" அவன் கண்சிமிட்டினான்.

ஆக அதனை இடுப்பை விட்டு கீழே இறக்கி வைப்பதேயில்லை - அத்தனை எச்சரிக்கையாயிருக்கிறான்.

"நேரடியாகவே கேட்கிறேன் அமத்தி ! நீ என்னுடனேயே வந்து விடுகிறாயா ? உன்னை நான் மகாராணி மாதிரி வைத்துக் கொள்வேன். சொத்து சுகங்களுக்கும் குறைவிருக்காது..."

"ஆ ! அத்தனை கொடுத்து வைத்தவளா நான் ?"

"ஆம் அமத்தி. உன்னிடம் நான் உயிரையே வைத்திருக்கிறேன்!"

"அப்படியெனில் நான் ஒரு உதவி கேட்பேன் - தட்டாமல் செய்வீர்களா ?"

"சொல் - முடிந்தால் நிச்சயம் செய்வேன்!"

"அ...அந்த ஹாரத்தை நாளை ஒரு நாளைக்கு என்னிடம் இரவலாகத் தர முடியுமா ? நாளை மாலை இதே நேரத்தில் கட்டாயம் திருப்பித்தந்து விடுவேன்!"

"அது...வந்து..."

"பார்த்தீர்களா ? என்மேல் உங்களுக்கு நம்பிக்கையேயில்லை !"

"அதற்கில்லை அமத்தி - அந்த குலச்சொத்தை ஒருவருக்கும் இரவலாகவோ தானமாகவோ தரக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு ! அதற்கு ஒப்புக்கொண்டபின்தான் நகையையே தரச் சம்மதித்தார்கள் பாதிரிப்புலியூர் கிராமசபையினர் !"

எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாக புளுகுகிறான் என்று வியந்தேன். இவனையும் அம்மாவையும் அருகருகில் வைத்து வாய்சாலகத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் ! அநேகமாய் அம்மாதான் ஜெயிப்பாள்.

இனி இவனிடம் கேட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை... நிச்சயம் தரமாட்டான்.

"குலக்கட்டுப்பாடு என்றால் தரவேண்டாம் ! ஆனால் கேட்பதற்கென்னவோ புதுமையாக இருக்கிறது.. நீங்கள்தான் நகையின் உரிமையாளர் - ஆனால் உங்களாலேயே அதனை விற்க முடியாது !"

"ஆம் ! புதுமையான ஏற்பாடுதான் ! பல காலத்திற்குமுன் எங்கள் குலத்து முன்னோர் எவரோ சொத்தையெல்லாம் விற்று குடும்பத்தை நடுச்சந்திக்கு இழுத்துவந்து விட்டாராம்...அதனால்தான் என் பாட்டனாரின் முப்பாட்டன் காலத்திலிருந்து இந்த நகையையும் இன்னும் சில சொத்துக்களையும் இப்படி கட்டுப்பாடு செய்து காப்பாற்றி வருகிறார்களாம் ! நகையை விற்கக் கூட வேண்டாம் - விற்க முயற்சி செய்தேன் என்று ருசுவானாலே என் வாரிசு உரிமை பறிக்கப்படும் ! அதனால் என்னை தவறாக நினைக்காதே !"

ஓரு கணம் நானே அசந்து போய் விட்டேன் - இவன் சொல்வதெல்லாம் பொய்யென்றுதான் இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறோம்...ஒருவேளை அத்தனையும் உண்மையாயிருந்தால் ?? அவன் கொடுத்த விபரங்கள் துல்லியமாக இருக்கின்றன - ஆனாலும் உள்மனது இவனை பொய்யன் என்றுதான் இன்னமும் கூறுகிறது.

எது எப்படியிருந்தாலும் நகையை பெற்றுத்தான் ஆக வேண்டும் ! இவன் குலச்சொத்தை அணிந்துகொண்டு நான் ஆடியதை வேலை மெனக்கெட்டு பாதிரிப் புலியூருக்குப் போய் யார் சொல்லப் போகிறார்கள் ?

"கொஞ்சம் பால் சாப்பிடுகிறீர்களா ?"

"ஆஹா! அதற்கென்ன ?"

எதற்காக ­இவன் கடைவாயில் புன்னகை நெளிகிறது ? என்னை ஆழம் பார்க்கிறானா என்ன ?ஏலக்காயும் குங்கமப்பூவுமிட்ட வாசனைப் பசும்பாலை வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வருகிறேன்.

அவன் வாங்கிக் கொண்டு - "முதலில் உனக்கு ஒரு வாய்.."

நான் நினைத்தது சரியாய்ப் போயிற்று. இவன் என்னை அணுவளவும் நம்பவில்லை. பாலில் என்ன கலந்திருப்பாளோ என்று அஞ்சுகிறான்.

"சரி..நீங்களே கொடுக்கும்போது..."

சற்றே தயக்கமின்றி ஒரு மடக்கு அருந்திவிட்டுச் சிரிக்கிறேன். அவன் ஓரிரு கணங்கள் எனக்கு ஏதேனும் ஆகிறதா என்பதை கவனித்துவிட்டு ஒரே மூச்சில் கிண்ணத்திலிருந்த பால் முழுவதையும்...

"இ...ரு..ங்க..ள் ! அதற்குள்ளாகவா..."

என்னை கட்டுப்படுத்திக்கொண்டு கட்டிலில் அமர்கிறேன்..அவன் அர்த்தமேயில்லாமல் என்னைப்பார்த்து சிரிக்கிறான். வெற்றிலை படிந்த அந்தப் ப..ற்..கள்....

மீண்டும் தலை சுற்றுகிறது ! மருந்து வேலை செ..ய்..ய தொடங்கி...வி..ட்..ட


***********************************************************************************************


படுபயங்கரமான குகை ! அதில் நான் முடிவேயில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்.... எவரோ என்னைத் துரத்தி வருகிறார்கள்...! அதோ காலடிச் சத்தம் நெருங்கிவிட்டது... இனியும் என்னால் ஓட முடியாது ! மூச்சு மிக வேகமாய் வாங்குகிறது - இனி ஒரு அடியெடுத்து வைத்தாலும் இறந்து கீழே விழுந்து விடுவேன் !

அதோ அவர்கள் தெரிகிறார்கள்...

"விடாதே! அவள்தான்..பிடியுங்கள் - பிடித்து சிறிது நேரம் சித்திரவதை செய்துவிட்டு வாளைப்பாய்ச்சிக் கொன்றுவிடுங்கள் !"

அடடா ! தேவமங்கை என்ன அழகாய் ஆணையிடுகிறாள் பார்த்தீர்களா ? அட - அவள் சோழமாதேவிக்குரிய மணிமகுடமும் அணிமணிகளும் அணிந்திருக்கிறாளே ? அடிப்பாவி - சொக்குப் பொடியிட்டு அரசனையே கைப்பாவையாக்கிவிட்டாளா ?

காவலர்கள் அரச ஆணைக்காக அரசனின் முகத்தைப் பார்க்கிறார்கள்.. அவன் மெல்லிய குரலில் மகாராணியார் சொல்கிறபடியே செய்துவிடுங்கள் என்கிறான்....கொஞ்ச நாட்களாக அவன் இந்த ஒரு வாக்கியத்தைத்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறானென்று நினைக்கிறேன் !

அவள் என்னை சர்வ அலட்சியமாய் நோக்கி - "ம் ! வேகமாக நடக்கட்டும் !" என்கிறாள்.

"காவலர்களே! அபலையான பெண்ணொருத்தியை சித்திரவதை செய்வதுதான் உங்கள் ராஜ தர்மமா ?" என்று கண்ணீருடன் கேட்கிறேன்...

"அரசியார் சொல்வதே ராஜதர்மம் !"

"ஆம் ! ஆம் ! அரசியார் சொல்வதே ராஜதர்மம் !" - நூறு - ஆயிரம் குரல்கள் அதை ஆமோதிக்கின்றன...

"பரமேஸ்வரா ! அதிகம் சிரமம் வைக்காமல் இந்த அபலையை உன் சன்னிதானத்திற்கு அழைத்துக்கொள் !"

அப்போது எவரும் எதிர்பாராத ஒரு காரியம் நடக்கிறது...

வான வெளியிலிருந்து ஏதோ இரு கரங்கள் என்னை மேலே இழுக்கின்றன...அக்கா! அக்கா! என்ற சப்தம் மேலே கேட்கிறது. யாரது ? என் சேடி நாரணியின் குரல்போலத் தெரிகிறதே!

மேலே செல்ல விடாமல் காவலர்கள் என் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றனர்!

"விடுங்கள்! விடுங்கள் ! அவர்களை ஒரேயடியாய் உதைத்துத் தள்ளிவிட்டு மேலே செல்ல முயல்கிறேன் - ஆனால் அது முடிகிற காரியமாக இல்லை?

"அக்கா! அக்கா !!"

தொடர்ந்து குரல் மேலே கேட்கிறது.... ஒரு பெருமுயற்சி செய்து அவர்களை உதறிவிட்டு....

"ஆ- அக்கா ! நல்லவேளை! கண்விழித்து விட்டீர்கள் - நான் பயந்தே போனேன் !"

என் கண்கள் மீண்டும் சொருகிக் கொள்கின்றன - நாரணி மீண்டும் கொஞ்சம் தண்ணீரை முகத்தில் தெளிக்கிறாள்.

அப்பா! என்ன வலுவான மயக்கம்! எழுந்திருக்கவே முடியவில்லையே....

அவள் எ­ன்னை மெதுவாய் நிமிர்த்துகிறாள்.

"நல்லூர் வைத்தியன் வாங்கிய கழஞ்சுகளுக்கு வஞ்சனையில்லாமல் மயக்க இரஸம் கொடுத்திருக்கிறான் அக்கா! உங்களை எழுப்புவதற்குள் நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே"

நான் பார்வையாலேயே - அவன் எங்கே ?

"உள் அறையில் கிடத்தியிருக்கிறோம் அக்கா! நீங்கள் கவலையே படாதீர்கள்...இன்னும் ஆறு ஜாமங்களுக்கு அவன் நிச்சயம் எழுந்திருக்கவே மாட்டான் !"


***********************************************************************************************


ஹாரத்தை இன்னமும் கூடப் போட்டுப்பார்க்க முடியவில்லை - எங்கே, அம்மா விட்டால்தானே ! நொடிக்கொரு தடவை அறைக்குள் வந்து போய்க் கொண்டிருக்கிறாள்...

அவளுக்கு இன்னும் சிறிது நேரத்தில் கச்சேரிக்குப் புறப்படவேண்டிய பரபரப்பு. கவலையே படாதே அம்மா ! என் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு தேவமங்கை சொல்லாமல் கொள்ளாமல் மண்டபத்தை விட்டு ஓடுகிறாளா இல்லையாவென்று பார் !

அப்பாடா! வண்டிக்காரன் குரல் கேட்கிறது...அம்மா அவனை கவனிக்கக் கிளம்பிவிட்டாள்!

ஹாரத்தை கையிலெடுக்கிறேன் - ஏன் கை நடுங்குகின்றன ? அமத்தி, அதைரியப்படாதே ! தைரியமே ஜெயம் ! அடர் பச்சை நிற மார்புக் கச்சுக்கு நடுவில் அது கம்பீரமாய் படிகிறது..அப்பா! கொள்ளை அழகு !இதை அணிந்துகொண்டபின் நானென்ன ஆட்டக்காரி போலா இருக்கிறேன் ? ஏதோ இராஷ்ரகூடத்து இளவரசி போலல்லவா ஜொலிக்கிறேன்!

மங்கை - இந்த அமத்தியின் அழகுக்குமுன் நீ வெறும் கால் தூசடி !

அம்மா வரும் சப்தம் - அவசர அவசரமாய் பொன்னாடையை மேலே போர்த்திக் கொள்கிறேன். ஐயோ அம்மா ! இத்தனை அழகாக உன் பெண்ணை பார்ப்பதற்கு உனக்கு கொடுத்து வைக்கவில்லையே ?

"அமத்தி... கிளம்பு - கோயிலிலிருந்து வண்டி வந்து விட்டது !"

வாயிலில் நாரணி ஆரத்தியெடுக்கிறாள் - ஆனாலும் அவளுக்கு திமிர் அதிகம்...அம்மாவை எதிரில் வைத்துக்கொண்டு இப்படியா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது ?


***********************************************************************************************


பரமேஸ்வரர் சன்னிதானம். வெளியில் என்னதான் சுற்றிச் சுழன்றாலும் இந்த இடத்திற்கு வந்ததும் மனம் சாந்தி பெற்றுவிடும்.

ஆனால் இன்று அப்படியில்லை - கொஞ்சம் பரபரப்பாகவே உள்ளது.

எதிரில் தேவமங்கை அலட்சியமாய் நின்றுகொண்டிருக்கிறாள் - அவளும் என்னைப்போலவே பொன்னாடை போர்த்திக் கொண்டிருப்பதால் அலங்காரம் சரிவர தெரியவில்லை...

மங்கை ! ஒரு பயங்கர அதிர்ச்சிக்கு தயார் செய்துகொள் ! உன் முன்னால் நிற்பவள் நீ அடிபணியவேண்டியவளடி !

சிறப்பு பூஜை எங்கள் இருவரையும் முன்னிருத்தி நடந்து கொண்டிருக்கிறது... அமிர்த கணக் கூட்டத்தாரோடு அமர்ந்திருக்கும் நக்கன் கண்டன் அடிக்கடி அவளைப் பார்த்துப் பல்லிளிக்கிறான்.. அவளும் வெட்கமில்லாமல்...சீச்சீ! இறைவன் சன்னிதானத்தில் வந்துமா இப்படி ?

பூஜை ஒருவழியாய் முடிகிறது.

பட்டர் எங்களுக்கு மரியாதை செய்வதற்காக பரமேஸ்வரர் மேல் போட்டிருந்த மாலையை விலக்குகிறார்.

இதுதான் மங்கைக்கு பேரிடி விழப்போகும் கட்டம்...எனக்கே அவளைப்பார்த்து ஒருகணம் பரிதாபமாய் இருக்கிறது ! இருவரும் சொல்லிவைத்தாற்போல் போர்த்தியிருக்கும் பொன்னாடையை ஒருங்கே விலக்குகிறோம்.

மங்கை முதலில் என்னை கவனிக்காதவள்போல வேறெங்கோ பார்த்துவிட்டு - என் பக்கம் திரும்பி..ஹாரத்தை கவனித்து...ஒருகணம் அதிர்ந்து...

இதென்ன ? அமிர்த கணத்தார் இருவரும் என்னையே கவனித்துக்கொண்டிருக்கிறார்களே ? அதில் ஒருவன் என் ஹாரத்தைக் காட்டி மற்றவனிடம் ஏதோ சொல்கிறான் !

சரிதான் ! இன்னும் பல திங்களுக்கு என் நகையைப் பற்றித்தான் பேசிப் பேசித் தீர்ப்பார்களென்று நினைக்கிறேன்..

பாவம் அம்மா ! என் பின்புறம் நிற்பதால் என்ன நடக்கிறதென்று தெரியாமல் மலங்க மலங்க விழிக்கிறாள் !

பட்டர் மாலைகளைக் என்முன் கொண்டுவந்து அணிவிக்கபோகும்போது... இதென்ன ? இவர் முகம் இத்தனை விகாரமாக மாறுகிறதே ?

அடடா ! அபசகுனம் ! தட்டை கீழே போட்டு விட்டார் !

என் மார்பை வெறிகொண்டவர்போல் நோக்கி - "மா.....மாதேவடி....மாதேவடிகள்...ஹா...ஹா..."

இதென்ன ? யாராவது இங்கே வாருங்களேன்... பட்டருக்கு பயித்தியம் பிடித்துவிட்டது போலிருக்கிறது !

அமிர்த கணத்தார் ஏன் இத்தனை விரோதப் பார்வையோடு என்னை நெருங்குகின்றனர் ? ஐயையோ - இவர்கள் எல்லோருக்குமே பயித்தியம் பிடித்து விட்டதா என்ன ? யாராவது ஊர்க்காவல் அதிகாரியை கூப்பிடுங்களேன் !

அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் என்னை நேராகக் குறிவைத்து நெருங்கிக் கொண்டிருந்தனர்.

(முற்றும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.