http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1771 Articles]
Home About US Temples Facebook
Issue No. 14

இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ]
1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
கதை 6 - மாதேவடிகள் ஹாரம்
அம்ம அழகிதே
இராஜசிம்மேசுவரம் கல்வெட்டுகள்
தேவதேவிக் கல்வெட்டுகள்
கோயில்களை நோக்கி - 3
நெஞ்சை நிமிர்த்தும் நேற்றைய வரலாறுகள்

கட்டடக்கலைத் தொடர் - 11
அரை நாள் பயணம்....அரை மனதுடன்....
Brushstrokes from Pallava Era - Part I
சங்கச் சிந்தனைகள் - 2
இதழ் எண். 14 > கலையும் ஆய்வும்
கட்டடக்கலைத் தொடர் - 11
ச. கமலக்கண்ணன்
கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி

சோழப்பேரரசர் முதலாம் இராஜராஜர் மேற்கண்ட சொற்றொடரால் வியந்து போற்றிய பல்லவத்தளிதான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில். கட்டடக்கலைக் கூறுகளின் ஒப்பு நோக்கில், தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு மாதிரியாக விளங்குவதாகக் கருதப்படுவதுதான் இந்தக் காஞ்சிபுரத்துப் பெரியகோயில். திருக்கொருக்குத்துறை (சீனிவாசநல்லூர்) குரக்கநாதர் ஆலயமும் கச்சிப்பேட்டு (காஞ்சிபுரத்து) கைலாசநாதர் கோயிலையும் முன்மாதிரியாக வைத்துத்தான் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் எழுப்பப்பட்டது என்பது அறிஞர் கருத்து.

இந்தச் சிறப்பிதழுக்காக கைலாசநாதர் ஆலயத்துக்கு டாக்டர். இரா. கலைக்கோவனுடன் வந்து பார்த்த போது பல அதிசயங்கள் எங்கள் கண்முன் விரிந்தன. ஏற்கனவே இரண்டு மூன்று முறைகள் இங்கு வந்திருந்தபோதிலும், விமான அமைப்பைப் பார்த்துக் குழம்பிப் போயிருந்தோம். முதல் முறை வந்த போது அங்காலயங்கள் பற்றி டாக்டர் தொலைபேசியில் கூறியிருந்தார். இதென்ன பிரமாதம்! ஒவ்வொரு கோட்டத்தைச் சுற்றியும் இரண்டு புறத்திலும் பக்கச்சுவர்களை எழுப்பி விட்டால் அங்காலயமாகி விடுகிறது எனச் சாதாரணமாக நினைத்துக் கொண்டு விட்டோம். ஆனால் அவருடன் வந்து கூரை உறுப்புகளைப் பார்த்த போதுதான் தலை சுற்றியது. மதிய நேரத்துச் சூரியனை அண்ணாந்து பார்த்ததால் அல்ல! சிக்கலான விமான அமைப்பால். இக்கற்றளிக்கு எத்தனை தளங்கள் என்று எண்ணிச் சொல்லுங்கள் என டாக்டர் கேட்டபின்தான் அதன் பிரம்மாண்டமும் கட்டடக்கலைப் பொறியாளர்களின் திறமையும் புரிந்தது. முன்பு சிதிலமடைந்திருந்த பகுதிகளை அகற்றிவிட்டு முந்தைய கட்டடக்கலை அமைப்பு மாறாமல் அப்படியே கட்டி இருக்கிறார்களே! தொல்லியல் பரப்பாய்வுத் துறையை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

சரி! அங்காலயம் என்று சொன்னோமே! என்ன அது? விமானத்தின் ஒரு தளத்திலிருக்கும் ஒவ்வொரு பத்தியையும் ஒரு தனிக் கோயில் அல்லது கருவறை போலப் பாவித்து உள்ளே இருக்கும் இறைத்திருமேனி தொடர்பான மற்ற சிற்பங்களையும் பக்கச் சுவர்களில் அமைப்பதுதான் அங்காலயம். இது ஒரு தனிக் கருவறை என்பதால், இதையும் தாங்குதளம், கூரை உறுப்புகள், கிரீவம் மற்றும் சிகரம் என ஆறங்க விமானமாக அமைத்திருக்கிறார்கள். இதனால் வந்ததுதான் குழப்பமே. கர்ணப்பத்திகளின் நாகர சிகரமாகக் கர்ணகூடுகளும் சாலைப்பத்திகளின் சாலை சிகரமாகச் சாலையும் வர, எவை அங்காலயத்தின் சிகரங்கள்? எவை ஆர உறுப்புகள்? என மண்டையைப் பிய்த்துக் கொண்டோம். நல்ல வேளை! பஞ்சரப்பத்தியையும் ஒரு அங்காலயமாக ஆக்கி, அதற்கு ஒரு கஜ பிருஷ்ட விமானத்தையும் வைத்திருந்தால்? அவ்வளவுதான்! மாதக்கணக்கில் அங்கேயே இருந்து சிக்கல் நிறைந்த இந்த அற்புதத்தைப் படைத்த இராஜசிம்மரை மாறி மாறிப் புகழ்ந்து கொண்டும் திட்டிக் கொண்டும் இருந்து Manic Depressive disorder வியாதியே வந்திருக்கும். அன்று டாக்டர் உடன் வந்திருந்ததால் ஒரளவு புரிந்தது.

உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள்!புகைப்படங்கள் சிலநேரங்களில் உண்மையை மறைத்துக் குழப்பத்தை உண்டுபண்ணிவிடும். ஆகவே, இக்கட்டுரையின் பிரதியை எடுத்துக் கொண்டு நேரில் சென்று பார்ப்பது நல்லது.

வழக்கமாக முகமண்டபத்துடன் கூடிய பஞ்சரப்பத்தியில்லாத ஒரு நாகர விமானத்திற்கு நுழைவு வாயில் உள்ள சுவர் நீங்கலாக, மூன்று சாலைப்பத்திகள் மற்றும் ஆறு கர்ணப்பத்திகள் இருக்கும். ஆனால் அங்காலயமாக மாறும்போது, ஆறு கர்ணப்பத்திகள் நான்கு ஆலயங்களாக ஆகிவிடுகின்றன. எப்படி? கருவறை கிழக்கு நோக்கியிருந்தால், தெற்கு நோக்கிய தென்கிழக்கு மூலையின் கர்ணப்பத்தி ஒரு ஆலயமாகவும், தென்மேற்கு மூலையின் இரண்டு கர்ணப்பத்திகள் ஒரு ஆலயமாகவும், வடமேற்கு மூலையின் இரண்டு கர்ணப்பத்திகள் ஒரு ஆலயமாகவும், வடக்கு நோக்கிய வடகிழக்கு மூலையின் ஒரு கர்ணப்பத்தி ஒரு ஆலயமாகவும் மாறிவிடும். கீழே உள்ள படத்தில் விளக்க முயற்சித்திருக்கிறேன்.தரைத்தளத்தின் வரைபடம்


1 - கைலாசநாதர்

2 - கருவறை நுழைவாயில்

3 - சாந்தார நாழி

4 - பூட்டப்பட்டுள்ள ஒரு அறை. அதன் சுவரிலும் ஏதாவது சிற்பம் இருக்கக்கூடும்.

5 - செப்புத்திருமேனிகள் வைக்கப்பட்டுள்ள அறை

6,10,14 & 18 - கர்ணப்பத்தியிலுள்ள அங்காலயங்கள்

7,9,11,13,15 & 17 - பத்திகளைப் பிரிக்கும் பகுதியிலுள்ள சிற்பங்கள்

8,12 & 16 - சாலைப்பத்தியிலுள்ள அங்காலயங்கள்

19 - முகமண்டபம்

20 - முகப்பு

சிவப்பு வண்ணம் உள்ள இடங்களில் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

கைலாசநாதர் கோயிலின் அங்காலய அமைப்பைப் பற்றிக் கூறும்போது இதன் முன்னோடியான பனைமலை தலகிரீசுவரர் ஆலயத்தையும் இதற்குப் பின் அமைக்கப்பட்ட காஞ்சி வைகுந்தப் பெருமாள் ஆலயத்தையும் உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயிலையும் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. பனைமலைதான் அங்காலயங்களின் முதல் சோதனைக்களம். இங்கு சாலைப்பத்திகள் மட்டும் அங்காலயமாக மாறியுள்ளன. கர்ணப்பத்திகள் கோட்ட அளவிலேயே இருக்கின்றன. அதிலும் தரைத்தளத்திலுள்ள சாலைப்பத்தி மட்டும் அங்காலயமாக உள்ளது. முதல் சோதனையின் முடிவை வைத்து இரண்டாவது சோதனைக்களமான கைலாசநாதரில் சாலைப்பத்தி மட்டுமல்லாது எல்லாப் பத்திகளையும் அங்காலயமாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் பல்லவச் சிற்பிகள். அதன் பின்னர் இரண்டாம் நந்தி வர்மரால் எடுப்பிக்கப்பட்ட காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலிலும் சாலைப்பத்தி மட்டும் அங்காலயமாக்கப்பட்டுள்ளது. தந்தி வர்மர் கட்டிய உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் கைலாசநாதரும் வைகுந்தப் பெருமாளும் சேர்ந்த கலவை எனக் கூறலாம். முதன்முதலில் இதைப் பார்க்கும்போது நிச்சயம் மனதில் ஒரு குழப்பம் உண்டாகும். என்ன இது? யாராவது apprentice சிற்பிகளை வைத்துக் கட்டப்பட்டதா? என்றுகூட நினைக்கத் தோன்றும். ஆர உறுப்புகளான சாலை, கூடு மற்றும் பஞ்சரம் ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்று மாற்றி ஒன்றை வைத்து ஒரு பெருங்குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கிறார்கள். இடையிடையே சிற்பங்கள் வேறு. கீழே உள்ள படத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.