http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 14
இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ] 1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள வாருணி,
நலம். ஜூலை 23, 24 இருநாட்களும் வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவினருடன் காஞ்சிபுரம், உத்தரமேரூர், மாமல்லபுரம் சென்றிருந்தேன். குடமூக்கு பத்மநாபன், சீதாராமன் இருவரும் உடன் வந்திருந்தனர். சுந்தர் பரத்வாஜ் தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் இணைந்தார். இரண்டு நாட்கள் ஊரில் இல்லாமையால்தான் உன் மடலைப் படித்து உடன் பதிலுரைக்க இயலாதுபோயிற்று. நீ அனுப்பியிருந்த தினமணி நாளிதழில் வெளியாகியிருந்த செய்தி ஆழ்ந்த வருத்தம் தந்தது. திருப்புகலூரில் காரைக்கால் அம்மை சிரட்டைக் கின்னரி வாசிக்கும் அந்தச் சிற்பம் பல்லாண்டுகளுக்கு முன்பே என்னால் கண்டறியப்பட்டு என் முனைவர் ஆய்வேட்டில் இடம்பெற்றுள்ளது. அச்சிற்பத்தைக் குறித்து 2003ல் வெளியான என் சோழர் கால ஆடற்கலை நூலிலும் குறிப்பிட்டுள்ளேன். முனைவர் அர. அகிலா 2004ல் மதுரையில் நடந்த இசைத்தமிழ்க் கருத்தரங்கில் வாசித்த, 'சிரட்டைக் கின்னரி'க் கட்டுரையில் அச்சிற்பம் குறித்த தரவு இடம்பெற்றுள்ளது. அக்கருத்தரங்கத் தொகுப்பிலும் அவர் கட்டுரை பதிவாகியுள்ளது. வரலாறு டாட் காம் இதழும் அக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 'சரிகமபதநி' இசையிதழில் கூட அக்கட்டுரை வெளியிடப்பட்டது. இவ்வளவு ஏன் நண்பர் குடவாயில் பாலசுப்ரமணியனே தம்முடைய நூலான, 'கபிலக்கல்'லில் (2004), 'பேயார் இசைக்கும் பாடவியம்' என்ற தலைப்பின் கீழ் இதைக் கட்டுரையாக எழுதியுள்ளார். இவ்வளவிற்குப் பிறகும் அது புதிய கண்டுபிடிப்பு என்று 2005 ஜூலையில் செய்தி வெளியிட்டால் என்ன செய்யமுடியும்? காரைக்காலம்மை வாசிக்கும் அந்தக் கருவியைப் 'பாடவியம்' என்று கருதுவதாகத் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியிருப்பது குறித்துக் கேட்டிருக்கிறாய். அவருக்கு அது பாடவியம். ஆனால் இசைத்தமிழ் அறிஞர் வீ.ப.கா. சுந்தரத்தின் கூற்றுப்படி அது சிரட்டைக் கின்னரி. நீ வேண்டுமானால் அதை 'மெராவியம்' என்று அழைத்துக்கொள். என்ன கெட்டுவிடப் போகிறது? பல்லவர், பாண்டியர் காலத்திலிருந்து வழக்கிலிருக்கும் நரம்பிசைக் கருவி அது என்பதில் கருத்து மாறுபாடு இல்லாதிருந்தால் போதாதா? வாருணி, இந்தப் பயணத்தின் போது உன்னை மிகவும் நினைத்துக் கொண்டேன். பல்லவர் பகுதியில் என் ஆய்வுகளுக்கெல்லாம் பக்கத் துணையாய் இருந்த தோழியல்லவா நீ. காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்தில் ஆய்வுசெய்யச் சென்றபோது மழை பெருந் தூறலாய் இருந்தது உனக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன். ஒரே ஒரு குடைதான் இருந்தது. அதை என்னைக் கொள்ளச் சொல்லி நீயும், உன்னைப் பிடிக்கச் சொல்லி நானும் சில நிமிடம் வாதிட்டுப் போரிட்டு, பிறகு ஒரு குடைக்கீழ், 'போனால் போகட்டும்' என்று கலித்தொகைப் பறவைகள் போல், நீ நனையக்கூடாதென்று நானும் நான் நனையக் கூடாதென்று நீயும் எண்ணி, அதனால் ஒன்று போல் இருவரும் நனைந்து, பல்லவ இரசிப்பிலும் அந்தப் பனிக்குளிரிலும் பரிதவித்துப் போனோமே, நினைவிருக்கிறதா வாருணி! 'எப்படி மறக்கமுடியும் நண்பரே', என்கிறாய்; முடியாதுதான். அதனால்தான் அந்த வளாகத்தில் நுழைந்தவுடன் என்னையும் அறியாமல் கால்கள், நாம் குடைச்சண்டை தொடங்கிய இடத்திற்கு என்னை இழுத்து வந்து நிறுத்தின. திரும்பிப் பார்க்கிறேன், வரலாறு டாட் காம் நண்பர்கள் அனைவரும் பின்னால். 'இதென்ன கூத்து' என்று அவர்களை அழைத்துக் கொண்டு, வந்த வழியே வாயிலுக்கு வந்து, கலைப் பயணம் தொடங்கினோம். இராஜசிம்மேசுவரம்! இருபத்து மூன்று ஆண்டுக் கலைப் பார்வையில் என் நெஞ்சில் நிலைத்துப் போன மிகச் சில அழகுக் களஞ்சியங்களுள் தலையாயது அத்திருக்கோயில். அதனோடு நானும் என்னோடு அதுவும் எவ்வளவோ பேசியிருக்கிறோம். எத்தனையோ பேருடன் அந்தக் கோயில் வளாகத்திற்குள் நுழைந்திருக்கிறேன். அமெரிக்கர்கள், இந்தியர்கள், நண்பர்கள், ஆய்வர்கள், உறவுகள் என்று விதம் விதமான உடன் கூட்டம் சூழ அந்தக் கோயிலைப் பல்வேறு பார்வையில் இரசித்திருக்கிறேன், படித்திருக்கிறேன், படிப்படியாய் விளங்கிக்கொண்டு மகிழ்ந்திருக்கிறேன். என்றாலும் அவை எல்லாவற்றினும் உன்னதமான அநுபவம், என் மனதிற்குகந்த தோழியான உன்னுடன் அந்தக் கோயிலைப் பார்த்த போதுதான் கிடைத்தது. உன் இரசிப்பிற்கும் அந்த இரசிப்பில் வெளிப்படும் உணர்வுக் கலவையான சொற்கோவைகளுக்கும் அவற்றின் அடியாய்ப் பிறக்கும் அறிவுபூர்வமான கேள்விகளுக்கும் தவித்துக் காத்திருப்பது எப்போதுமே எனக்குப் பிடிக்கும். பார்வை இருபுறத்தும் அளாவ, எதுவும் பேசாமல், எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்தக் கோயிலை ஒரு சுற்றுச் சுற்றியவாறே நீ நடந்தபோது, உன்னையே பார்த்துக் கொண்டுதான் நான் தொடர்ந்தேன். இராஜசிம்மரைப் பற்றியும், இறைவனும் இறைவியும் நெடுங்காலம் வந்து தங்கவேண்டுமென வேண்டியழைத்து, அவர்கட்காக அப்பெருமான் எழுப்பிய அந்த இராஜசிம்மேசுவரக் கற்றளி பற்றியும் எனக்கென்று கருத்துக்கள் உண்டு. என்றாலும், நீ என்ன சொல்லப்போசிறாய் என்று அன்று நான் தவித்த தவிப்பு உனக்குப் புரிந்திருக்கவேண்டும். நீ திரும்பினாய்; 'கலை, I am thrilled' என்றாய்! உன் கண்களில் ஒளிர்ந்த அந்தச் சுடர்! காணாத்தைக் கண்டுவிட்ட உணர்வின் தெறிப்பு அதிலிருந்தது. வாருணி, உனக்குத் தெரியுமா? இந்தக் கோயிலை முதன்முதலாகப் பார்த்தபோது நிலைகொள்ளாமல் நானும் அப்படித்தான் கதறினேன், 'அம்ம! அழகிதே' என்று. திருநாரையூர்ப் பதிகத்தில் இறைவன் எழில் கண்டு இளகிப்போன அப்பரின் இதயவீறல் அது. இந்த அழகைச் சமைக்க அந்த நயனமனோகரர் என்ன பாடு பட்டிருக்கவேண்டும்! வாருணி, எனக்கொரு நண்பர்; சிற்பிகள் மரபில் வந்தவர். அரும்பாவூர்காரர். நல்ல படிப்பாளி. 'அரசர்கள் எதுவும் செய்யவில்லை, சிற்பிகள்தான் சாதித்திருக்கிறார்கள்' என்று சிறந்த கோயில்களின் சிறப்புகளுக்கெல்லாம் அவருடைய மூதாதையரே முதற் காரணம் என்று வாதிப்பார். 'சிற்பிகள் சாதித்திருப்பது உண்மைதான். ஆனால் அவர்களைச் சாதிக்க வைத்தவர்கள் யார்?' உருவாக்கியவர்கள் சிற்பிகள்தான். ஆனால், அந்த உருவாக்கத்திற்கு விதைபோட்ட சிந்தனைக் கீறல் எங்கிருந்து வந்தது? என்று கேட்டால் அமைதியாவார். ஆணைகளாலும் வழிகாட்டலாலும் அரவணைப்பதாலும் மட்டுமே இத்தகு சிற்ப அற்புதங்களை விளைத்துவிட முடியுமென்று நம்புகிறாயா! முடியாது வாருணி, ஒருக்காலும் முடியாது. அதற்கெல்லாம் ஆசை வேண்டும்; கனவுகள் வேண்டும்; உயர, உயர என்ற வேட்கை வேண்டும்; உனக்காக, உனக்காக என்று உருகும் காதல் வேண்டும். அப்படிக் குழையும் நெஞ்சம் மட்டுமே உன்னதக் கலைப் படைப்புகளை உருவாக்கமுடியும். எத்தனை பெருமிதத்தோடு, 'செங்கல், சுதை, மரம், உலோகம் இல்லாமல் பிரம்ம ஈசுவர விஷ்ணுக்களுக்கு இந்த இலக்ஷிதாயனத்தை எடுத்தேன்' என்று தம் முதல் கற்கோயிலை மண்டகப்பட்டில் அறிமுகப்படுத்துகிறார் மகேந்திரர்! 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்று எத்தனை உன்னதக் களிப்போடு உவந்து பூரிக்கிறார் இராஜராஜீசுவரத்து வடக்கு ஜகதியில் நம் ஜனநாதர்! இந்த ஆனந்தப் பெருமிதமான அறிவிப்புகளுக்குச் சற்றும் குறைந்துவிடாமல், 'சிவபெருமானின் சிரிப்பைப் போல விளங்கும்' இந்த மிகப்பெரிய அழகிய இறை இல்லத்தை ஸ்ரீஅத்யந்தகாமர் எடுத்தார்' என்று மகிழ்ந்துரைக்கிறதே இராஜசிம்மேசுவரத்துக் கல்வெட்டுப் பதிவு, அதில் வெளிப்படும் தன்னம்பிக்கைதான் எத்தனை மேன்மையானது! எத்தனை வணங்கத்தக்கது! வாருணி, பல்லவக் கற்றளிகளிலேயே அதிக அளவில் அழகிய சிற்பங்களைப் பெற்றிருப்பது காஞ்சிபுரத்து இராஜசிம்மேசுவரம்தான். அதற்கிணையான சிற்பக் கருவூலங்களை மிகச் சில முற்சோழர் கோயில்களில் நான் பார்த்திருந்தாலும்கூட, பார்வை பரவும் இடமெல்லாம் பரவசமூட்டும் கோலங்களில் தெய்வங்கள், தேவர்கள், மனிதர்கள், பூதங்கள் என வகைவகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் நேர்த்தியையும் அவை, வடிக்கப்பட்ட கால வரலாறு பேசும் வளமையையும் இங்கு மட்டும்தான் கண்டு, உணர்ந்து, அநுபவித்துக் களித்திருக்கிறேன். இராஜசிம்மேசுவரம் பனைமலை ஈசுவரத்தின் விரிவாக்க அமைப்பு. பனைமலையில் கீழ்த்தளப் பெருஞ்சாலைப் பத்திகள் மட்டும் வெளியிழுக்கப்பட்டுத் தனி விமானத் தகுதி பெற்றன. கிழக்கில் இப்பத்தி கருவறை நுழைவாயிலானது. இந்தச் சோதனை முயற்சி தளியின் அழகைப் பெருக்கிக் காட்டியதில் நிறைவு பெற்ற பல்லவச் சிற்பாசிரியர்கள், இராஜசிம்மேசுவரத்தில் கர்ணபத்திகளையும் வெளியிழுத்து முதன்மை விமானத்தைச் சூழ ஏழு துணை விமானங்களைத் தனி விமானங்களாக்கிச் சாதனை புரிந்தனர். கிழக்குச்சாலைப்பத்தி வழக்கம்போல் கருவறை வாயிலானது. துணை விமானங்கள் முதன்மை விமானத்தினின்று தனித்துத் தெரியக்கூடாதென்றே பத்திகளுக்கிடையில் கூரையில் சாலைகள் வைத்து, ஆர ஒழுங்கில் அனைத்தும் ஒரு விமானம் எனத் தோன்றுமாறு இணைத்துள்ளனர். இந்த ஒழுங்கு நேர்வுக்கு விதை போடப்பட்ட இடம் மாமல்லபுரத்து அத்யந்தகாமம். வாருணி, இராஜசிம்மேசுவரம் தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானம். இரு சுவர்களும் சுவர்களுக்கிடையில் வலம் வரும் வழியும் பெற்றமையும் கருவறை எந்த விமானத்தில் அமைகிறதோ, அந்த விமானம் சாந்தார வகையினதாகக் கொள்ளப்படும். இராஜசிமேசுவரத்தில் கருவறையை வலம் வர விடப்பட்டுள்ள சுற்றின் அகலம் குறைவானதுதான் என்றாலும், அந்தப் புத்தமைப்பை உருவாக்கிய சிற்பிகளின் துணிவைப் பாராட்டாது இருக்கக்கூடவில்லை. இதைப் பின்பற்றியும் விரிவுசெய்துமே உத்திரமேரூர்க் கயிலாசநாதர், திருப்பட்டூர்க் கயிலாசநாதர், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழீச்சுவரம் முதலிய எடுப்பான விமானங்கள் தோன்றின. பின்னவை இரண்டிலும் இரு சுவர்களுக்கும் இடைப்பட்டமைந்த கூரையை மூடப் பலகைக் கற்களைப் பயன்படுத்தாமல் சுவர்களை நகர்த்தியே ஒருங்கிணைத்த புதுமையைக் காண முடிகிறது. இது சோழப் பொறியியல் திறத்தின் உச்சம் காட்டும் உத்தி. பல்லவர் காலத்தில் எழுந்த மிகச் சில நாற்றள விமானங்களுள் இராஜசிம்மேசுவரமும் ஒன்று. கம்பீரமான இந்த விமானத்தைச் சுற்றிலும் மதிலொட்டிய நிலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இருதளத் தளிகள் எழுப்பப்பட்டுள்ளன. இத்தளிகளுள் பெரும்பான்மையன கலப்புத் திராவிட வகையின. சில சாலைத் தளிகளாய் அமைந்துள்ளன. இத்தளிகள் அனைத்தின் முகப்பிலும் அற்புதமான சிற்பங்கள். தமிழ்நாட்டின் வேறெந்தப் பழந் திருக்கோயில்களிலும் காணமுடியாத இந்திரன் முருகன் போர், தெய்வானை திருமணம், பிரம்ம சிரச்சேதம் ஆகியன இம்முகப்புகளில் பதிவாகியுள்ளன. சில விமானங்களின் உட்புறத்தில் பல்லவர் காலத் தூரிகைச் சிதறல்களை கண்களை நிறைக்கும் வண்ணங்களில் காணமுடிகிறது. வடதமிழ்நாட்டின் முதல் எழுவர் அன்னையர் தொகுதியையும் இவ்விமானங்களுக்கு இடைப்பட்ட தென்புறச் சுவர்ப்பகுதியில் காணலாம். வளாக விமானமான இராஜசிம்மேசுவரத்தின் வடபுறம் காணப்படும் தவக்கோலச் சிவபெருமான், மாமல்லபுரத்து தர்மராஜரதமான அத்யந்தகாமத்தின் மூன்றாம் தளத் தெற்கு முகத்தில் இடம்பெற்றுள்ள தவக்கோலச் சிவபெருமானின் மற்றொரு பதிவெனலாம். சேட்டைத் தேவியின் சிற்பம் இரண்டு இடங்களில். வாருணி, விமானத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சிவபெருமானின் குஞ்சிதச் சிற்பம் நினைவிருக்கிறதா? என், 'தலைக்கோல்' புத்தகத்தின் அட்டைப்படமாகக்கூட அது இடம்பெற்றுள்ளது; அதை முதன்முதலாகக் கண்டபோது எப்படி மெய்மறந்து நின்றோம்! பரதரின் நூற்றியெட்டுக் கரணங்களுள் ஒன்றான அதை நிகழ்த்தும் சிவபெருமானின் தோற்றமும் சூழக் காட்டப்பட்டிருக்கும் இசைக் கலைஞர்களின் அமைவும் காணுந்தோறும் மயக்கவல்ல காட்சியாகும். இந்தக் கரணத்தின் மீது ரங்கபதாகையின் மணாளருக்கு அப்படி என்ன காதலோ தெரியவில்லை வாருணி! அவர் எடுப்பித்தத் திருக்கற்றளிகளுள் பெரும்பான்மையானவற்றில் இக்குஞ்சிதக் கரணம் தவறாமல் இடம்பெற்றுள்ளது. பல அளவுகளிலான சிற்பமாகவும், ஓவியமாகவும் பதிவாகியிருக்கும் இந்தக் கரணத்தில் சிவபெருமான் படிந்தாடப் பார்க்கலாம். சிலப்பதிகாரம் பேசும் நால்வகை அவிநயக் களங்களில் குஞ்சிதக் களமும் ஒன்று. நானும் நளினியும் வைகுந்தப் பெருமாள் கோயிலை ஆய்வு செய்தபோது, இக்குஞ்சிதக் கரணத்தில் ஆடும் பெண் ஒருவரின் சிற்றுருவச் சிற்பத்தை உள்மண்டபத் தூணொன்றின் மாலைத் தொங்கலிலிருந்து கண்டறிந்ததை உனக்குச் சொல்லி இருக்கிறேன். அற்புதமான அந்தக் கண்டுபிடிப்புப் பல்லவர் காலத்திலேயே கரணங்கள் மக்கள் வழக்கில் இருந்தமைக்குக் காலம் காத்துத் தந்திருக்கும் கலைச்சான்றாகும். இராஜசிம்மேசுவரத்திலுள்ள வீணையேந்திய கலைஞர்களைச் சில ஆய்வாளர்கள் அர்த்த நாரீசுவரர்களாக அடையாளம் கண்டுருக்கும் நிலையை உனக்குச் சொல்லி, அவர்கள் மார்பகமாகக் கருதியது வீணையின் குடந்தான் என்பதையும் தெளிவுறக் களத்திலேயே விளக்கிக் காட்டியிருக்கிறேன். முப்புரிநூலுக்கு மேலோ அல்லது கழுத்தணிக்கு மேலோ அமரும் வீணையின் குடத்தை எதுகொண்டு இவ்வாய்வாளர்கள் மார்பகமாகக் கருதினர் என்பதுதான் வியப்புத்தரும் கேள்வியாக முன்நிற்கிறது. மணற்கல்லால் எழுப்பப்பட்ட இராஜசிம்மேசுவரத்தின் உபானமும் பட்டிகையும் கருங்கல் பணிகள். அவற்றில்தான் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. சுற்றியுள்ள இருதள விமானங்களில் தாங்குதளத்தில் கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகள் அனைத்துமே வடமொழியில் கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளன. இராஜசிம்மரின் விருதுப்பெயர்களாகவும் அவர் இந்தக் கோயிலை எடுப்பித்தத் தகவலைத் தரும் தரவுக் களஞ்சியங்களாகவும் இக்கல்வெட்டுகள் உள்ளன. இந்தத் திருக்கோயில் விமானத்தைச் சூழ அமர்ந்த நிலையில் பேரளவிலான நந்திகள் இருப்பதை மறந்திருக்கமாட்டாய் என்று நம்புகிறேன். நாம்கூட ஒரு நந்தியின் மீதேறிதான் சில சிற்பங்களை ஆராய முடிந்தது. 'அந்த நந்திகளைச் சற்று கவனமாகப் பார்' என்று நான் கூறியபோது, 'நான் பார்த்துவிட்டேன்' என்று புன்னகைத்தாயே, அந்தப் புன்னகை உன் இரசிப்பின் தன்மையை உள்ளங்கைக் கனியாய்க் காட்டியது. தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் தளிச் சூழ் நந்திகள் இத்தனை இல்லை; இந்த அளவிலும் இல்லை. ஒவ்வொரு நந்தியும் ஒன்றிலிருந்து ஒன்று ஏதாவது ஒருவிதத்தில் இலேசாகவேனும் மாறுபடுமாறு எப்படித்தான் சிற்பிகள் செய்தமைத்தனரோ! அவை அமர்ந்திருக்கும் விதத்தின் இயல்புநிலையும் அவற்றின் முகங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பெருமித உணர்வும் நான் அங்குப் போகும்போதெல்லாம் இரசிக்கும் அற்புதங்கள். இராஜசிம்மரின் அந்த மோகன வளாகத்திற்குள் எத்தனை முறை இருந்திருக்கிறேன் என்று கணக்குச் சொல்ல முடியாத அளவிற்கு அங்குச் சென்றிருக்கிறேன். அந்தத் திருச்சுற்றில் ஆனந்தக் களிப்புடன் எனக்குப் பிடித்தவர்களுடன் உலவியிருக்கிறேன். உள்ளத்தில் துள்ளி உதடுகளிடம் விடுதலை பெற்று இராகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வளாகத்தில் பரவிய எனக்குப் பிடித்த பாடல்களுடன் தன்னந்தனியாய் அந்த வளாகம் முழுவதும் உணர்ச்சிக்குவியலாய் வலம் வந்திருக்கிறேன். உடன் வந்தவர்களுடன் பொருள் பொதிந்த உரை வீச்சுக்களில் தமிழனின் தலைநிமிர்த்தும் அந்தக் கலைக்கோயிலின் கட்டுமானச் சிறப்புகளையும் செதுக்கு நேர்த்தியையும் அளப்பரிய பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு சிற்பத்தையும், ஏன், அந்தப் படைப்பின் ஒவ்வோர் அணுவையும் கண்களால் பருகிக் கள்வெறிக் கொண்டதை இப்போது நினைத்தாலும் உள்ளம் குளிர் மழையில் நனைந்த குதூகலம் பெறுகிறது. என்ன சொல் வாருணி, கலை கலைதான்! அந்தக் கலையால் கல்லைக் கனியவைத்திருக்கும் நம் சிற்பாசிரியர்களின் கைவிரல்களை எத்தனை முறை முத்தமிட்டாலும் தகும். 'அம்ம அழகிதே' என்று அப்பர்பெருமானைப் போல் அநுபவிக்கத் தெரிந்தவர் அனைவரையுமே களிப்பால் கதறவைக்கும் இந்தப் பெருங்கோயில், சாளுக்கிய விக்கிரமாதித்தரையும் கட்டிப்போட்டதாகக் கல்வெட்டுப் பேசுகிறது. பல்லவர்களை நசுக்கிக் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிய விக்கிரமாதித்தன் இராஜசிம்மேசுவரத்தில் நுழைந்ததும் கண்கலங்கிப் போனார். மரபுப் பழி துடைக்கப் போர்தொடுத்த அவர் நெஞ்சம், கலை கொஞ்சும் அந்தக் கோயிலில் குழைந்துருகியது. எதை எதையோ அழித்த அவர் கைகளால் அந்தக் கோயிலுக்கு அள்ளித்தர மட்டுமே முடிந்தது. அழிக்க மனம் வரவில்லை. கோயிலுக்குள் நுழைந்தபோது பல்லவ பூமியை வெறுத்த அவர் உள்ளம் அந்தக் கோயில் உலா முடிந்ததும் பல்லவச் சிற்பிகளைத் தேடித் தம் ஊர் கொண்டு செல்லத் துடித்தது. மன்னரின் துடிப்பல்லவா, உடன் வடிவம் பெற்றது. பட்டடக்கல் இன்றும் பல்லவச் சிற்பிகளின் பதிவுடன் விக்கிரமாதித்தரின் இரசிப்புத் தன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. எதிரியையும் இளகச் செய்த கலை என்பதா? கலைக்கு முன் எதிர்ப்பை இழந்த இரசிகன் என்பதா? இரண்டுமே சரிதான் என்று தோன்றுகிறது. என்ன வாருணி, ' வாருங்கள் நண்பரே, ஒரு முழுநிலா நாளில் மீண்டும் அந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்த்து வருவோம்' என்று அழைக்கத் தோன்றுகிறதா? எனக்கு மட்டும் விருப்பமில்லையா? என் உணர்வுகளோடு ஒன்றிய மிகச் சில தமிழ்நாட்டுத் திருக்கோயில்களுள் அதுவும் ஒன்றல்லவா! எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதியன பேசும், புதியன காட்டும் அழகுச்செல்வமல்லவா அது! போகலாம் வாருணி, விரைவில் போகலாம். இன்னும் பார்க்க வேண்டியவை, படிக்க வேண்டியவை ஏராளமாய் அங்கிருப்பதால். அன்புடன், இரா. கலைக்கோவன் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |