http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 14
இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ] 1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சங்கச் சிந்தனைகள்
அதோ ! போர்முரசம் ஒலிக்கிறது.... கூடவே பறை, கொட்டு முதலான கருவிகள் எழுப்பும் ஓசைகளும் கேட்கின்றன. கொம்பு "பூ.....ம் ! பூ....ம் !" என்று அதிர "ஓ.....ம் !" எனும் சங்கநாதம் கம்பீரமாய் கிழக்கு வாசல் அமைந்துள்ள திசையிலிருந்து எழுகிறது. அது அழைப்பொலி. "பகைவன் படையெடுத்திருக்கிறான் - நாட்டில் உள்ள ஆண்கள் யாவரும் நாட்டைக் காக்க வருக !" என்று வேந்தன் எழுப்பும் வரவேற்பொலி. அவன் மெய்ப்பையை சரிசெய்து கொண்டான். இடைக்கச்சை சற்றே இறுக்க உள்ளே அணிந்திருந்த ஐம்படைத்தாலி உறுத்தியது. வில்லை வலக்கையில் மாட்டி அம்பறாத்துணியை இடமுதுகில் படியவிட்டு நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டான். வேல் பூசையறையில் ஒரு ஓரத்தில் மஞ்சள் குங்குமமெல்லாம் தடவி தயாராக இருந்தது. அதனைத் தீண்டுகையில் சுரீரென்று ஏதோ கணுக்கால்களில் பாய்ந்தது. அது அவன் தந்தையின் வேல். போர்க்களத்தில் மார்பில் ஈட்டியும் அம்புகளும் துளைத்தெடுத்திருக்க உயிர் எப்போதோ பிரிந்துவிட்டபோதும் அவருடைய கைகள் இந்த வேலினை விடவேயில்லையாம் ! சிரமப்பட்டுத்தான் பிரித்தார்கள் என்று அன்னை சொல்வாள். அவன் தன் தந்தையை கண்களால் கண்டதில்லை. ஆனால் அவ்வப்போது இந்த வேலினை தொடும்போதெல்லாம் அவரைத் தீண்டுவது போலிருக்கும் - அதிலும் இன்று சற்று அதிகமாகவே.... அன்னை சற்று தள்ளாடியபடியே எழுந்து வருகிறாள்... "கிளம்பும் நேரம் வந்துவிட்டதா என்ன ?" "சங்கொலி எழும்பிவிட்டதே அம்மா ! இப்போது கிளம்பினால்தான் கிழக்கு வாசலை இன்னும் அரை நாழிகை நேரத்தில் அடையலாம் !" அவளுக்கு இப்போதெல்லாம் பார்வை அடிக்கடி மங்குகிறது. சற்றே கண்களைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கிறாள். அவன் சிரித்த முகத்தோடு நின்றுகொண்டிருக்கிறான். அடடா ! இந்தக் கோலத்தில் அவரே மீண்டும் மறுபிறவியெடுத்து நம்முன் நிற்பதாகவல்லவா தோன்றுகிறது ! "ஐயா ! நீ ஜெயிக்க வேண்டும் ஐயா !" நான் கொற்றவைக்கு நேர்ந்து கொள்கிறேன் !" - அவள் தன் மடியிலிருந்த ஒரு சில எளிய கழஞ்சுகளை ஒரு மஞ்சள் துணியில் அவசர அவசரமாக முடிந்து வைக்கிறாள். இருபது வருடங்களுக்கு முன்புகூட அவள் இப்படித்தான் நேர்ந்து கொண்டாள். ஆனால் கொற்றவைக்குக் கண்ணில்லை. நெஞ்சு நிறைய அம்புகளாக வாயிலில் அவருடைய உடல் வந்து இறங்கியபோது.... கண்களில் சரசரவென்று நீர் கோர்த்துக் கொள்கிறது. இல்லை ! இப்போது அவள் அழக்கூடாது. இவள் அழுதால் பிள்ளை தளர்ந்துவிடுவான். இவள் கண்களின் கண்ணீரை அவனால் தாங்க முடியாது. அவன் பார்க்காத கணத்தில் இரகசியமாக அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். அவனுடைய மனையாளும் குழந்தையையும் உக்கிராண அறையிலிருந்து வெளிப்படுகிறார்கள். அழுதிருக்கிறாளா என்ன - கண்களெல்லாம் சிவந்ததுபோல் தெரிகின்றனவே.... குழந்தை அவனைப் பார்த்த மாத்திரத்தில் சிரித்துக்கொண்டே அவனிடம் தாவுகிறது. அவன் அதனைக் கட்டியணைத்து உச்சி முகர்கிறான். பால்மணம் நாசியை நிறைக்கிறது. குழந்தையை தூக்கியபடி வாயிலுக்கு வருகிறான். கால்களில் கழல்களை அணிந்துகொள்கையில் குழந்தை கழல்களை ஏதோ விளையாட்டுப்பொருள் என்று நினைத்துக் கைகளால் அளைகிறது. அவனுடைய தாயும் மனையாளும் அவனுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டிடுகின்றனர். அவனுடைய தாய் அவனை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள்.... முகத்தைக் கட்டிக்கொண்டு உச்சி முகர்கிறாள்... ஏனோ திடீரென்று அவனைப் பிரசவிக்கையில் ஏற்பட்ட தவிப்பு மீண்டும் அவளுக்கு ஏற்படுகிறது.... அவனுடைய மனையாளும் அவனை விழுங்கிவிடுவதைப் போல் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள்... இரவில் வலிந்து வலிந்து காதலோடு தழுவிய உடல்.... முத்தங்களால் நனைத்த மார்பு.... ஒரு வேளை இப்போது பார்க்கும் இந்தக் கோலத்தை மட்டுமே மனதில் தாங்கிக்கொண்டு மீதிவாழ்நாளை அவள் கழிக்க நேரலாம்... அதனால்தானோ என்னவோ கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்... இரவெல்லாம் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தாலும் ஒரு சொட்டு நீர்கூட அவன் முன்னால் வீட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் நிற்கிறாள்... அவனும் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறான். ஏனோ தந்தையின் ஆன்மா அவனை ஆக்கிரமிப்பதைப்போன்றதொரு உணர்வு அந்த வேலினைக் கையிலேந்திய கணத்திலிருந்து அவனுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.... "வெற்றிவேல் ! வீரவேல் !" என்று வானத்தைப் பார்த்து முழங்குகிறான். மறுகணம் திரும்பிப்பாராமல் கிழக்கு வாசலை நோக்கி வீறு நடைபோட்டுச் செல்கிறான். அவனுடைய முகத்தில் சூரியனைப்போல ஒரு வீரக்களை சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. அவன் வீரனாகவே பிறந்தவன். வீரனாகவே வளர்ந்தவன். எப்போதும் அவன் தன்னை வீரனாகத்தான் உணர்ந்திருக்கிறான் - ஒருவேளை அவன் தந்தையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்... தன்னுடைய படையின் பலம் எத்தனை ? எதிரிகள் படையின் பலம் எத்தனை ? நாம் இன்று தோற்போமா ? ஜெயிப்போமா ? என்பதான எந்தக் கேள்விகளும் அவன் மனதில் எழவில்லை. போர் ! அந்தப் போரில் அவன் வாள்சுழற்றியாக வேண்டும் ! அவ்வளவுதான்.... அவனுடைய தாய் தாரமொடு நாமும் நின்றுகொண்டு அவன் விலகி விலகிச் செல்வதைப் பார்க்கிறோம். போரில் அவன் ஒருவேளை வெற்றி பெற்று பெருவீரனாகத் திரும்பி வரலாம்..... அவனுடைய மகனை அவனினும் சிறந்த வீரனாகப் பயிற்றுவிக்கலாம்... அல்லது மார்பில் வேலோ அம்புகளே தாங்கி விழுப்புண்களோடு குற்றுயிரும் குலையுயிருமாய்க்கூடத் திரும்பலாம்.... அல்லது அவனும் தன் தந்தையைப் போலவே வீழ்ந்து பட்டும் கைகளில் வேலினை விடாமல் பற்றியபடியே உயிர்துறக்கலாம்... ஏதாவது ஒரு புலவன் அவன் புகழைப் பாடலாம்... போர் பூமியில் அவனுடைய உற்றார் அவனுக்கு நடுகல் வைத்து வழிபடலாம்... அவன் குலத்திற்கு அவன் வீரம் நல்கும் குலதெய்வமாக ஆகலாம்.... அவன் அப்பழுக்கில்லாத சுத்த வீரன் ! அதுதான் இப்போது முக்கியம். அன்றைய தமிழ்ச் சமூகத்தில் இரு உணர்வுகள் - இயல்புகள் - மற்றவற்றினும் மதித்துக் கொண்டாடப்பட்டன. அவை காதலும் வீரமும். காதலின் உச்சத்தையும் வீரத்தின் உச்சத்தையும் பல்வேறு விதமாகப் படம்பிடிக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் பல உண்டு. அவை காலக் கண்ணாடிகளாக நின்று அந்த மனிதர்களின் மனப்போக்கை இன்றும் விளக்குகின்றன.. சங்க நூல்களுள் மிகத் தொன்மையான தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல - இலக்கியமும் கூட. புறத்திணையியல் வகைகளை விளக்கப்புகும் தொல்காப்பியர் வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை என்று விளக்கிக்கொண்டே வரும்போது தும்பைத்திணையின் இயல்பைக் கூற முற்படுகிறார். எதிர்த்து வரும் பகைவேந்தரை வீரம் பொருதப் போரிட்டு அழிப்பது தும்பைத்திணையாகும். மற்ற திணைகளுக்கெல்லாம் அவ்வத் திணைகளின் இயல்பையும் இலக்கணத்தையும் மட்டும் கூறிவிட்டுச் செல்பவர் தும்பைக்கு மட்டும் சற்றே நிதானித்து - நான்கு வரிகள் எடுத்துக்கொண்டு - அந்தத்திணையின் பெருமையை விரித்துரைக்கிறார். இந்தக் கட்டத்தில் திணையின் சிறப்பியல்பான வீரத்தின் உச்சத்தை விளக்க ஒரு உதாரணம் அவருக்குத் தேவைப்படுகிறது. தாம் பார்த்தவற்றுள் கேட்டவற்றுள் உச்சக்கட்ட வீரக் காட்சியாக எது அவரது மனதில் நின்றதோ அதையே பதிவாக்கியிருக்கிறார் அவர் என்று நம்பலாம். "கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு இருபாற்பட்ட ஒரு சிறப்பின்றே..." (தொல்காப்பியம் / பொருளதிகாரம் - புறத்திணையியல் - எண் 1017) தொல்காப்பியர் காட்டும் இந்தக் காட்சியும் இந்தக் காட்சியின் பதிவிற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை. "பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் மேன்மேலும் வந்து பாய்தலால் உயிர்நீங்கிய வீரனின் உடல் இருகூறுபட்ட போதும் நிலத்தில் சாய்ந்துவிடாமல் போர்முகம் காட்டும் சிறப்பினை உடையது இத்திணை !" என்கிறார். சற்று விரித்துக் கூறின் : அந்த வீரனுடைய உடலை அம்புகளும் வேலும் விடாமல் தாக்கின. ஒரு கட்டத்தில் உயிர் பிரிந்துவிட்டது. உயிரைப் பிரிந்த உடல் தாக்கப்பட்ட அம்புகள் மற்றும் வேல்களினால் ஏறக்குறைய இரண்டாகப் பிளந்தது. அப்படிப் பிளந்த பிறகும்கூட அந்த உடல் தாங்கியிருந்த உயிர் ஒரு சுத்த வீரனுடைய உயிர் என்பதால் அது நிலத்தில் சடேலென மரம்போல விழுந்துவிடாமல் மெதுவாக ஆடியபடி நிற்கும் வீரப்புகழை விரித்துரைக்கும் சிறப்புக்களை உடையது தும்பைத் திணையாகும் ! புறநானூற்றுப் பாடல்களில் வீரத்தைப் பாடும் பாடல்கள் பல உண்டு. ஆனால் தொல்காப்பியம் காட்டும் இந்தக் காட்சி அவற்றிலிருந்து தனித்து நின்று அந்நாளைய நிலத்தில் விளைந்த வீர விளைச்சலை ஒரு அதிர்ச்சி மிக்க உதாரணம் மூலம் பளிச்சென்று வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுகிது. உடலெங்கும் அம்புகளாலும் வேலாலும் துளைக்கப்பட்டு லேசாகத் தள்ளாடியபடி முன்னேறும் அந்த வீர உடலை கற்பனை செய்து பாருங்கள் - அதிர்ந்துபோய் விடுவீர்கள் ! "கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்.." - அந்த உடலில் அம்புகள் பாயவில்லை, ஈ மொய்ப்பதுபோல் மொய்த்திருக்கின்றன... அப்பப்பா ! ஒரே வரியில் சாட்டையடியாக அந்தக் காட்சி நமது மனக்கண்களில் சட்டென்று உருப்பெற்று விடுகிறது. இப்படி உடல் இருகூறான பின்பும் மெதுவாக உடல் ஆடுதல் அட்டை என்னும் உயிரினத்தின் இயல்பென்பதால் இந்த வகை வீரத்திற்கு "அட்டையாடுதல்" என்றும் பெயராம் ! இதெல்லாம் ஒரு காலம். இந்நாளைய தமிழ் வீரத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனல் பேனாக்கத்தியை நீட்டி ஒரே ஒரு குப்பத்து ரெளடி முரட்டுத்தனம் செய்தால் ஒரு கூட்டமே கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது. இன்றைய கவிஞர்களால் வீரத்தைப் பாட முடிவதில்லை. பாடுபொருளாகக்கூடிய வீரம் அவர்களுக்குத் தென்படுவதில்லை. காதலோடு அவர்கள் நின்றுவிடுகிறார்கள். நிறைவடைந்துவிடுகிறார்கள். (மேலும் சிந்திப்போம்)this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |