http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 14
இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ] 1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
அர. அகிலா, இரா. கலைக்கோவன்
தமிழகத்தில் கண்படும் இடமெல்லாம் விண்முட்டும் கோபுரங்களும் வான்தழுவும் விமானங்களுமாய்த் திருக்கோயில்களின் சிந்தையள்ளும் காட்சிகள் தான். பல மரபுப் பேரரசர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்து தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் இறைமணமும் கலைமணமும் கலந்து கமழ எழுப்பிய இத்திருக்கோயில்களின் இன்றைய நிலை நெஞ்சில் கனலெழுப்புமளவு மோசமாகியுள்ளது. மக்களாலும் மன்னர்களாலும் மகிழ்ந்து புரக்கப்பட்ட இக்கோயில்கள் இன்று புல்புதர்கள் மண்டி, மரம், செடி, கொடிகள் வளர்ந்து, மக்கள் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கும் சுவர்கள் விரிசல்விட்டு, மதில்கள் சிதறி, மாடங்கள் குலைந்து, சில இடங்களில் திருமேனிகளே வீழ்ந்து போயிருக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதற்கும் யார் காரணம்? தேவையென்றால் கோயிலுக்கு ஓடி விளக்கேற்றி அருச்சனை செய்து இறைவனுக்கு விண்ணப்ப வேண்டுதலிடும் மனிதமனம் மற்ற நேரங்களில் அந்தக் கோயில்களை ஏறெடுத்தும் பார்க்காதிருப்பது எதனால்? மக்கள் சமுதாயம் கோயில்களைச் சார்ந்து, கோயில்களைச் சூழ்ந்து குதூகலித்திருந்தது ஒரு காலம். அதே சமுதாயம் நாளடைவில் கோயில்களை நீங்கி ஒதுக்கமாய்ப் போனதால், வீழ்ச்சி இரண்டு பக்கமும் விவரிக்க முடியாத வேதனைகளோடு விரிந்துபரந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. கோயில்களை ஏன் புரக்க வேண்டும், கோயில்களுக்கு ஏன் போகவேண்டும், அங்கு என்ன இருக்கிறது என்றெல்லாம் இன்றைய மனங்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றன. பரபரப்பான வாழ்க்கை வேகங்களும் பளபளப்பான விளம்பர மோகங்களும் வாழ்க்கையைச் செயற்கையாக்கிக் கொண்டு வருகின்றன. மின்னுவதையெல்லாம் பொன்னாகப் பார்க்கும் அசட்டுத்தனம் வாழ்க்கையின் ஆணிவேரை அசைக்கத் தொடங்கியிருந்தும், அதன் பொருள் புரியாமல் புதைந்து கொண்டிருக்கும் மக்கள் சமுதாயம் நாளைகள் நரகமாகிக் கொண்டிருப்பதை உணராமலே இருக்கிறது. கோயில்களுக்கு ஏன் போகவேண்டும், அங்கு என்ன இருக்கிறது? இந்தக் கேள்விகளை இன்று பலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளைச் சற்றே மாற்றி இப்படிக் கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும்? கோயில்களுக்கு ஏன் போகக்கூடாது? அங்கு என்ன இல்லை? கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள். இறையுணர்வும் சமய நோக்கும் கொண்டு வாழ்க்கையை அமைதிப்புலமாக்கிக் கொள்ளும் ஆர்வத்துடன் திருக்கோயில் படிகளைத் தொட்டால், வாழ்க்கை வீச்சுக்களில் விக்கித்துப் போயிருக்கும் மனம் சுமைகளை விலக்கிச் சுந்தர அமைதியில் சுகமாய் மூழ்கும். கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் நமக்குள்ளும் இருக்கிறார். பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டுமென்று சிலர் கேட்கிறார்கள். கடவுள் எங்கும் இருப்பதும் நமக்குள் இருப்பதும் உண்மைதான். இந்த உண்மை நம் முன்னோர்க்கு நம்மைவிட நன்றாகத் தெரியும். இருந்தாலும் எங்கும் பரவியிருக்கும் அந்த வல்லமையை, ஓரிடத்தில் நிலைநிறுத்தி அனைவரும் கூடிக் காணும் வாய்ப்பேற்படுத்தவே கோயில்கள் வந்தன. நம்பிக்கைகளில்லாமல் வாழ்க்கையே இல்லை. அந்த நம்பிக்கைகளின் முழுமுதலாய் நம் முன்னோர்கள் கண்ட மந்திரமே திருக்கோயில்கள். நமக்கொரு வீடு என்பது போல் நாம் வழிபடும் இறைவனுக்கொரு தலம் என்று விழைந்தோர் விருப்பமெல்லாம் கோயில்களாயின. இந்தக் கோயில்கள் முதன்முதலில் இறை வழிபாட்டு நோக்கில் தான் எழுப்பப்பட்டன என்றாலும், பின்னாளில் அவை வரலாற்று விடிவிளக்குகளாய், வாழ்ந்த சமுதாயம் வரப்போகும் தலைமுறைகளுக்கு விட்டுச் சென்ற சரித்திர ஏடுகளாய் மாறியமைந்தன. தங்கள் வாழிடங்களுக்குத் தந்த முக்கியத்துவத்தைவிட, இறைக்கோயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எழுப்பினர். அதனால்தான் இன்று இராஜசிம்மரின் அரண்மனையையோ இராஜராஜரின் மாளிகையையோ நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்களால் ஆர்வக் கனவுகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பப்பட்ட திருக்கோயில்கள் இன்று நமக்கு உலகப் புகழை வாங்கித் தந்துள்ளன. உலகின் சிறப்புக்குரிய மரபுச்சின்னங்களின் பட்டியலில் அவை இடம்பெற்றுள்ளன. இந்தத் திருக்கோயில்களின் கட்டடக் கலை நுணுக்கங்கள் அந்நாளைய தமிழரின் கட்டுமானத் திறத்தைக் காட்டுகின்றன. இன்றைக்கு வளர்ந்தோங்கியிருக்கும் மிக நவீன தொழில்திறமும் அறிவியல் அள்ளித் தந்திருக்கும் கருவிகளும் செய்முறைகளும் தரமுடியாத ஒழுங்கை, நிறைவை அன்றைக்கு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிய மனிதக் கைகள் உருவாக்கியுள்ளன. விரிசல் விடாத, தண்ணீர் தேங்காத, இறங்காத தள அமைப்புகளை இன்றைய கட்டுமானங்களில் காண்பதரிது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில்கள் இன்றைக்கும் எந்தச் சலனமும் இன்றி கட்டுக்குலையாக் கட்டடங்களாய்க் காட்சியளிப்பது, அந்தக் காலக் கட்டுமானப் பொறியியலின் திறம் காட்டும் அதிசயமல்லவா. ஐம்பத்தாறுக்கும் மேற்பட்ட சின்னஞ்சிறு கோயில்கள் புடைசூழ அகலவிரிந்து அமர்ந்திருக்கும் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலும், ஒரே வளாகத்தில் மூன்றாய் அமர்ந்தும் திசைக்கொரு பார்வை தரும் கடற்கரைக் கோயில்களும், தொட்டுவிடுவேன் என்று தொடமுடியாத வானத்தை நோக்கி எழுந்துநிற்கும் இராஜராஜீசுவரமும் தமிழ் நெஞ்சின் கட்டுமான வித்தைகளல்லவா! உலகின் பல பக்கங்களில் இருந்தும் வரும் பொறியியல் வல்லுநர்கள், எப்படிச் செய்திருப்பார்கள் என்று வியந்து பேசும் இராஜராஜீசுவரத்தின் உள்ளீடற்ற விமான எழுச்சி, கல்லடுக்கி வாழ்ந்த தமிழர்கள் என்ற பெருமையை அல்லவா நமக்கு வாங்கித் தந்திருக்கிறது. இந்தக் கல்லடுக்கல் இன்று ஏன் சாத்தியமில்லாமல் போயிற்று. செங்கல்லின் நான்கு பக்கமும் சிமெண்ட் பூசினால்தான் இன்றைக்குச் சுவரெழுப்ப முடியும். ஆனால், அன்றைக்கோ கல்லின் எந்தப் பக்கமும் எதுவும் தடவாமலேயே சுவரெழுப்பிக் கட்டினர். பொறியியல் இன்று வளர்ந்திருக்கிறதா? அன்று வளர்ந்திருந்ததா? பூச்சில்லாத சுவர்கள் அசைக்க முடியாத உறுதியோடு நிற்க, பூச்சால் குளிப்பாட்டப்படும் சுவர்கள் பெருமழையில் விழுகின்றன. கட்டடத் திறன் காண மட்டுமா கோயில்கள்? அங்குள்ள சிற்பங்கள் அந்நாளைய மனிதர்களின் நாகரிகம், பண்பாடு காட்டவில்லையா? குடந்தைக் கீழ்க்கோட்டம் ஒருநடை போய்வந்தால் தெரியும், அங்குள்ள கருவறைப் புறக்கோட்டப் பெண் சிற்பங்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள், ஆடைகள், அவர்கள் நிற்கும் எழில், அவர்தம் மெய்ப்பாடுகள் என எத்தனை கற்க முடிகிறது. சிற்பங்கள் வழி அந்நாளைய கலைகள், வாழ்க்கை, போர்முறை என்று பலவும் அறிய வாய்ப்பிருக்கிறது. கோயில் உட்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் அந்நாளைய வண்ணங்களின் சிறப்பு, அவை கலக்கப்பட்ட நேர்த்தி, அவற்றால் விளக்கப்படும் சமுதாயக் காட்சிகள் என்று வரலாற்றை நம் கண்முன்னே விரித்துவைக்கின்றன. கோயில் சுவர்களில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் அந்நாளைய மனித மனங்களின் மொத்தப் படப்பிடிப்பாய் விளங்குகின்றன. அந்தக் கல்வெட்டுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நாம் யார் என்பதே தெரியாமல் போயிருக்கும். நம்மை நமக்கு அடையாளம் காட்டும் இந்தத் தலைப்பெழுத்துக்கள் இன்றைக்குப் படும்துன்பங்கள் எண்ணிலடங்கா. இந்தக் கல்வெட்டுக்களின் அருமை தெரியாத கோயிலார் இவற்றுக்கு இழைக்கும் தீமைகளை எப்படிச் சொல்வது? பல கோயில்களில் இந்தக் கல்வெட்டுகளின் மேல் சுண்ணாம்பையோ அல்லது வண்ணக் கலவைகளையோ பூசிவிடுகிறார்கள். பூச்சில்லாமல் கல்லடுக்கிய அந்தக் காலத்திறன் மதிக்கத் தெரியாத இந்தக் கால மேதாவிகள் கற்களுக்கிடையில் அள்ளிப் பூசும் சிமெண்ட் அந்தக் கல்லடுக்கில்த் தொடராக உள்ள கல்வெட்டுகளை மறைத்துவிடுகிறது. பின் மெல்லக் கீழிருக்கும் எழுத்துக்களைத் தின்றும் விடுகிறது. திருக்கோளக்குடியில் கல்வெட்டுகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் தீமை இன்னமும் கண்களில் இரத்தம் வரவழைக்கிறது. திருப்புத்தூர் திருத்தளி நாதர் கோயிலிலோ, கல்வெட்டுள்ள சுவரொன்றில் வண்ணம் அடித்து அதன்மேல் புதிதாகப் பாடலொன்றும் எழுதி நிரந்தரமாக அக்கல்வெட்டை அழித்திருக்கிறார்கள். சில கோயில்களில் திருப்பணியின்போது கல்வெட்டுள்ள கற்களைத் தலைகீழாக மாற்றி வைத்துவிடுகிறார்கள். இன்னும் சில கோயில்களில் கல்வெட்டுள்ள கற்கள் தரையமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டின் வரலாற்றைத் தரும் இக்கல்வெட்டுகளுக்கு நேரும் இக்கொடிய கேடுகளைப் பற்றி இன்றைக்கு யாருமே கவலை கொள்ளாதிருப்பது இந்த நாட்டின் அலட்சியப்போக்கிற்கு ஆதாரமாகின்றது. தலைப்பெழுத்தே இல்லாமல் போனாலும் கவலைப்படாத ஒரு சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் நெஞ்சைக் கவ்வுகிறது. நெடுந்தூக்கத்தில் இருக்கும் தமிழர்களைப் பள்ளியெழுச்சிப் பாடியோ, மெல்ல வருடியோ எழுப்பமுடியாத நிலை. இந்தத் தூக்கம் தட்டியெழுப்பினாலாவது கலையுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறை விழிப்படைந்து, நிலைத்த நிம்மதிக்கு எது தேவை என்பதைப் புரிந்து கொண்டு வரலாற்றின், கலைகளின் பெருமையுணர்ந்து புத்துணர்ச்சி கொள்ளும் வரை கோயில்கள் வாழ்ந்திருக்குமா என்பதும் தெரியவில்லை. இந்தத் துன்பமான சூழலில் கருத்துள்ள சிலராவது கையிணைத்துக் குரல் கொடுத்தால், சிறிதளவேனும் முயற்சிகளில் முனைப்புக் கொண்டால், ஒருவேளை தமிழகத்துத் தலைப்பெழுத்துக்களாம் திருக்கோயில்கள் காப்பாற்றப்படலாம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |