http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1771 Articles]
Home About US Temples Facebook
Issue No. 31

இதழ் 31
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழிசை தழைக்க...
திரும்பிப் பார்க்கிறோம் - 3
அரளிப்பட்டிக் குடைவரை
சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 1
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 1
சங்கச்சாரல் - 14
இதழ் எண். 31 > பயணப்பட்டோம்
சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 1
ச. கமலக்கண்ணன்
ஆறு மாதகால ஜப்பான் வாசத்திற்குப் பின் உடல்நிலை காரணமாகக் கிடைத்த ஒரு மாத விடுப்பை வீணாக்க மனம் வராமல், எப்படியும் சோழதேசத்துக்கு விஜயம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டு, வரலாறு.காம் குழுவினருக்கு அழைப்பு விடுத்தேன். கோகுல் அமெரிக்கப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்ததாலும், கிருபா தேர்வுக்குச் சென்று கொண்டிருந்ததாலும் மற்ற மூவரும் திருச்சியை அடைந்தோம். சோழதேசத்தை மட்டுமே கனவில் கண்டு கொண்டிருந்த எங்களுக்கு முக்கனிகளும் தானே வந்து மடியில் விழுந்ததுபோல், மூவேந்தர்களின் கோயில்களையும் கண்டுவரலாம் என்று கூறி, எங்களை ஆனந்தக் கடலில் பிடித்துத் தள்ளினார் முனைவர் இரா. கலைக்கோவன்.

கோபிசெட்டிபாளையத்திலிருந்து திருச்சிக்குக் காரில் சென்றால், எப்போதும் Non Stop ஆகச் செல்ல முடிந்ததேயில்லை. அத்தனை உறவினர்கள் வரிசையாக இருக்கிறார்கள். இதில் வரலாற்றுலகில் காலடியெடுத்து வைத்தபிறகு புதிதாக வந்து சேர்ந்த சொந்தக்காரர்கள் வேறு இரண்டுபேர். இருவரையும் சந்தித்து விட்டுச் செல்லலாம் என்று பார்த்தால், நாமக்கல்லாரின் குடைவரையைப் பூட்டி வைத்திருந்தார்கள். திறந்த பிறகு காண வேண்டுமானால், சுமார் ஒன்றரை மணிநேரம் காத்திருக்க வேண்டும். எனவே, சீனிவாசநல்லூர்க்காரரை மட்டும்தான் சந்திக்க முடிந்தது. அவர் இல்லத்திலிருக்கும் அதியற்புதச் சிற்பங்களை ஏற்கனவே வேண்டிய அளவு புகைப்படம் எடுத்திருக்கிறோம் என்றாலும், புதிதாக வாங்கியிருந்த டிஜிட்டல் கேமராவில் மீண்டும் ஒருமுறை ஆற அமரச் சுட்டபோதும் மனம் சலிக்கவேயில்லை. அந்த இளமஞ்சள் நிற வெயில் முகத்தில் படர, ஆஹா!! அந்த எழில் கொஞ்சும் மங்கையரின் புன்னகையை, அதே சிற்பியால் கூட மீண்டும் வடிக்க முடியாது.

மாலை மருத்துவமனைக்குச் சென்று, வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர் டாக்டரிடம் சிறிது நேரம் கேள்விகளைக் கேட்டு விட்டு, இரவு விருந்துக்கு அவர் இல்லத்துக்குச் சென்றோம். என்றைக்கு வயிற்றுக்கு மட்டும் உணவளித்து அனுப்பியிருக்கிறார் டாக்டர்? நான்கைந்து புத்தகங்களையும் அள்ளிக்கொண்டோம். அடுத்தநாள் காலை 6 மணிக்குக் கிளம்பலாம் என்று கூறியவரிடம், டிசம்பர் மாத அதிகாலைத் தூக்கச் சுகத்தை இழக்க விரும்பாமல், 8 மணிக்குச் செல்லலாமே என்று சமாதானப் படுத்திவிட்டு, எங்கள் ஆஸ்தான விஜய் லாட்ஜுக்குத் திரும்பினோம்.

வழக்கம்போலவே, அரைமணி நேரத் தாமதத்திற்குப் பின்னர், எங்கள் ஐவரையும் ஏற்றிக்கொண்ட அந்த டவேரா, பொதுப்பணித்துறையினரின் கருணைப்பார்வைக்கு இன்னும் ஆளாகாமல் இருந்த திருச்சி - ஜெயங்கொண்டம் சாலையில் நாலு சக்கரப் பாய்ச்சலில் பாய ஆரம்பித்தது. ஆண்டவரின் (சாரதியின் பெயர்) தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு, நாங்கள் எப்போதும்போல் கேள்விக் கணைகளை வீச ஆரம்பித்தோம். நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! என்று நளினி மேடம் கூச்சலிடும் வரை இது தொடர்ந்தது. என்னடா இது? என்றுமில்லாத வழக்கமாய்க் கேள்வி கேட்கும்போது கேட்கவேண்டாமென்கிறார்களே என்று ஆச்சரியத்துடன் திரும்பினால், அவர் நிறுத்தச் சொன்னது வண்டியை. அதற்குள் பழுவூரை அடைந்திருந்ததுதான் காரணம். அதானே பார்த்தோம்! ஒருபுறம் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வந்தாலும், பாதையையும் கவனித்துத்தான் இருக்கிறார்கள். முதலில் வண்டி நின்ற இடம் மேலப்பழுவூர் பகைவிடையீசுவரம்.

முதல் யாத்திரையின்போது, வேனில் இருந்தவாறே இதன் செங்கல் கோபுரத்தைப் பார்த்துவிட்டு, இது பழைய கோயில் அல்ல என்று நாங்களே ஒரு முடிவுக்கு வந்து, அவனிகந்தர்ப்ப ஈசுவரர் கோயிலுக்குச் சென்றுவிட்டோம். பார்த்திருந்தாலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருந்திருக்காது. பார்த்த கோயில்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கும். பயணக்கட்டுரையில் ஒரு பத்தி அதிகமாகியிருக்கும். அவ்வளவுதான். இதன் தனித்தன்மைகளான, 'தேவகோட்டங்களில்லாத முற்சோழர் காலக்கோயில்' என்பதையோ, 'தஞ்சை பெரியகோயிலுக்கு முன்பே எழுப்பப்பட்ட சாந்தாரத்துடன் கூடிய கோயில்' என்பதையோ உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்போதும்கூட, நாங்கள் தனியே சென்றிருந்தாலும் தேவகோட்டங்களில்லாத சுவர்களைக் கண்டிருப்போம். ஆனால் அது அரிதான அமைப்பு என்பதை உணர்ந்திருக்கமாட்டோம். சாந்தாரத்தைப் பார்த்திருப்போம். ஆனால் அது காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கும் தஞ்சை இராஜராஜீசுவரத்துக்கும் இடைப்பட்ட மைல்கல் என்ற நுட்பத்தை உணர்ந்திருக்கமாட்டோம். ஏதோ டாக்டர் உடன் வந்ததால் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

கோயில் வாயிலில் சாவிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் நேரத்தை வீணாக்காமல், வாயிற்காவலர்களை நோட்டம் விட்டோம். இருவருமே முற்சோழர் காலத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் ஆடை அணிகலன்கள் ஒரே வகையினதாக இருந்தாலும், குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களாவது இருந்தன. என்னதான் அழகே உருவாகச் சிற்பிகள் வடித்திருந்தாலும், முறையான பராமரிப்பில்லாவிட்டால், சிற்பம் பாழாவது உறுதி. கோயிலைக் காக்கும் இவர்களை வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்க யாரும் முன்வரவில்லை. இவற்றையும் மீறி இந்தச் சிற்பங்களின் அழகை ரசிக்க முடிகிறதென்றால், முற்சோழர் காலச் சிற்பிகளின் கைவண்ணமே. இவ்வாறு வியந்து கொண்டிருக்கும்போதே சாவியைக் கொண்டு வந்தார் காப்பாளராகப் பணிபுரியும் பெண்மணி. உள்ளே குடியிருக்கும் நாகபாம்புகள், கட்டுவிரியன்கள் எல்லாம் சௌக்கியமா? என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தோம்.

உள்ளே நுழைந்தவுடன் எங்களை டாக்டர் முதலில் அழைத்துச் சென்றது பழுவேட்டரையர் கால ஜேஷ்டையின் இருப்பிடத்துக்கு. வரலாறு ஆய்விதழ் 5வது இதழின் அட்டையை அலங்கரிக்கிறார் இந்தத் தவ்வை (வார்த்தை உபயம் : வள்ளுவப் பெருந்தகை). ஜேஷ்டை தன் மகன் நந்திகேசுவரர் மற்றும் மகள் அக்னிமாதா ஆகியோருடன் இருக்கும் இச்சிற்பம் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டிருப்பதை 'பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம்' என்ற தனது நூலில் விளக்கியிருக்கிறார் டாக்டர். நந்திகேசுவர் மற்றும் அக்னிமாதாவின் உயரம் ஜேஷ்டையின் மேற்கை வரை இருப்பதும், ஜேஷ்டையின் கொடிக்கம்பின் உச்சியில் காகம் இருப்பதும் ஆகமமரபு என்று T.A.Gopinatha Rao தனது Elements of Hindu Iconography நூலில் குறிப்பிட்டுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், ஆகமங்களின்படி வடிக்கப்பட்டிருந்தாலும், அழகு சிறிதும் குறையவில்லை. பிற்சோழர் காலத்தில் ஆகமங்கள் பெருமளவில் பின்பற்றப்பட்டதாலோ என்னவோ சிற்பிகள் தங்களின் கற்பனை எல்லையைச் சுருக்கிக் கொண்டனர் போலும். ஆனால் பல்லவர்கள் மற்றும் முற்சோழர் காலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவில்லை. அதனால்தான் இச்சிற்பங்களை வைத்தகண் வாங்காமல் ரசிக்க முடிகிறது. நேரம் போனதே தெரியாமல் ஜேஷ்டையின் Iconography யை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சிற்பங்களுக்கான நேர ஒதுக்கீடு (Quota!!!) முடிந்து போய்விட்டது. மற்ற சிற்பங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, கல்வெட்டு மற்றும் கட்டடக்கலைக்குத் தாவினோம்.

தஞ்சை பெரியகோயிலுக்கும் பகைவிடையீசுவரத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டோம். சாந்தார விமானம் இருப்பது எங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில்தான் இருக்கிறது. அதற்குப்பின் உத்திரமேரூர்க் கைலாசநாதர் கோயிலில் காணப்படுகிறது. இராஜராஜீசுவரத்தில் சாந்தாரநாழியின் இரு சுவர்களும் இரண்டு தளங்களுக்கு நீளுகின்றன. ஆனால் இங்கு காஞ்சி கைலாசநாதர் போலவே தரைத்தளத்துடன் நின்று விடுகின்றன. மேற்றளங்கள் கருவறையின் உட்சுவரின் மீதிருந்து எழுகின்றன. அதேபோல் இன்னொரு ஒற்றுமை விமானம் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது. பெரியகோயில் அளவுக்கு அகலமாக இல்லாவிட்டாலும், அதேமாதிரி கர்ணகூடம், பஞ்சரம், சாலை, பஞ்சரம், கர்ணகூடம் என்ற அமைப்பில் ஆர உறுப்புகள் அமைந்துள்ளன. அதற்கேற்றவாறு சுவர்களில் பத்திகளும் இடம்பெற்றுள்ளன. இராஜராஜீசுவரத்தைப்போல் இரு பத்திகளுக்கிடையில் குடப்பஞ்சரங்களை அமைக்காமல், தூண்களால் பிரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளம் மட்டுமே பழுவேட்டரையர் காலம். மேற்றளங்கள் பிற்காலத் திருப்பணிகளுக்கு ஆளாகி, தன் எழிலை இழந்து பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.

அடுத்து நாங்கள் பார்க்க விரும்பிய இடம் அவனிகந்தர்ப்ப ஈசுவரம்.

(தொடரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.