http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 31
இதழ் 31 [ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பொருளைப்பற்றி நான் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறேன். இதன் விளைவாக என் முன் எழுந்த ஒரு முக்கியமான பிரச்சினை, தமிழகத்தில் முதன்முதலாக எழுத்தறிவு தோன்றிய காலத்தின் சூழ்நிலையைப் பற்றியதாகும். தமிழகத்தில் எப்பொழுது எவ்வாறு எழுத்தறிவு தோன்றியது? எழுத்தறிவு தோன்றவும் பரவவும் துணை செய்த காரணிகள் யாவை? எழுத்தறிவினால் தமிழகத்தில் உடனடியாக ஏற்பட்ட மாறுதல்கள் யாவை? மேலும் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் அதே காலகட்டத்தில் எழுத்தறிவு ஏற்பட்டபோதிலும் அதன் விளைவுகள் தமிழகத்தைக் காட்டிலும் முற்றிலுமாக மாறுபடுவதற்கு என்ன காரணங்கள்? இக்கேள்விகளுக்கு விடைகள் இதுவரை வெளியாகியுள்ள நூல்களில் காணப்படவில்லை என்பது வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும். இதுவரை ஆய்வு நடத்தப்படாத இந்த விஷயத்தில் எல்லாச் சிக்கல்களையும் உடனடியாக விடுவிப்பது முடியாதது என்றாலும் மேலும் ஆய்வு நடத்த ஓர் உரையாடலைத் தொடங்கி வைப்பதுதான் இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள எழுத்துக்களிலெல்லாம் மிகப் பழமையானவை தமிழ்-பிராமி எழுத்துக்களாகும். இவ்வெழுத்துக்கள் ஏறத்தாழ அசோகரின் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளை ஒத்திருப்பதால் இவ்விரு எழுத்துமுறைகளும் சமகாலத்தவை என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் தமிழகத்துக் குகைக் கல்வெட்டுகள் சமணச் சார்புடையவை. அசோகரின் பாட்டனாகிய சந்திரகுப்தர் தென்னாட்டுக்கு வந்தபொழுது பத்ரபாகு முனிவரின் சீடராகிய விசாக முனிவரால் தமிழகத்தில் சமண சமயம் முதன்முதலாக பரப்பப்பட்டது என்ற கர்ண பரம்பரை வரலாற்றின் அடிப்படையில் பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் முதன்முறையாக கி.மு 300 என்ற காலகட்டத்தில் பரவியதாக ஏற்றுக்கொள்ளலாம். தமிழகத்திற்கு வடக்கில் ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலும், தெற்கில் இலங்கையிலும் காணப்படும் மிகப் பழமையான எழுத்துகளும் இதே காலகட்டத்தைச் சார்ந்தவையாகும். தமிழகத்திலும், இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற பகுதிகளிலும் இதுவரை நடந்துள்ள அகழ்வு ஆய்வுகளில் கி.மு 3-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் (சிந்துவெளி எழுத்துமுறையைத் தவிர்த்து மற்ற) எழுத்துகள் காணப்படவில்லை. ஆகையால் இச்சான்றுகளையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் கவனிக்கும்பொழுது தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும், இலங்கையிலும் கி.மு 3-ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தறிவு தோன்றியது என்று கருதலாம். தமிழகத்தில் முதன்முதலாக எழுத்துகள் தோன்றிப் பரவிய சூழ்நிலை அதே காலகட்டத்தில் திராவிட மொழிகாள் வழக்கிலிருந்த ஆந்திர-கர்நாடக மாநிலங்களிலிருந்த சூழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது என்பது உண்மையிலேயே மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தை 'முதல் அறிவொளி இயக்கம்' என்று கூறமுடியும். ஆனால் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் பிராமி எழுத்துமுறை பரவியிருந்த போதிலும் அங்கு 'அறிவொளி இயக்கம்' தோன்றியதாகக் கருதமுடியாது. இவ்விதமான மாறுபட்ட விளைவுகளுக்கு முக்கியமான காரணங்கள் மூன்றாகும். 1. ஆந்திர, கர்நாடக மாநிலங்களைக் காட்டிலும் மிக முந்தைய காலத்தில் தமிழ்நாட்டில் மக்கள் பேசும் மொழியான தமிழில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. 2. கல்வெட்டுகளிலும், பானைக்கீறல்களிலும், நாணயங்களிலும், முத்திரைகளிலும், மோதிரங்களிலும் - சுருங்கக்கூறினால் எழுதப்பட்டவை யாவையுமே - தமிழில் மட்டுமே உள்ளன. 3. அரசவையிலும், மேனிலை மக்களிடையேயும் வழிபாட்டுத் தலங்களிலும் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை தமிழகத்தில் காணப்படவில்லை. மாறாக எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு மிகப் பரவலாகக் காணப்பட்டது என்பது என் ஆய்வின் ஒரு முக்கிய முடிவாகும். மேற்கூறிய காரணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராயலாம்: மேலே கூறியபடி தமிழகத்தின் மிகப் பழைய கல்வெட்டுகள் கி.மு 3-ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன. இதுவரை கண்டெடுத்துள்ள கன்னடக் கல்வெட்டுகளில் மிகப் பழமையானது ஹல்மிடி சாசனமாகும். இது கி.பி 5-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தெலுங்குக் கல்வெட்டுகளில் மிகப் பழமையானது ரேநாட்டுச் சோழர்களின் கலமல்ல சாசனமாகும். இது கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பொறிக்கப்பட்டது. கல்வெட்டுகளில் காணப்படுவது போன்றே இலக்கியத்திலும் தமிழுக்கும், கன்னட - தெலுங்கு மொழிகளுக்கும் மிகப்பெரிய கால இடைவெளி காணப்படுகிறது. தமிழில் சங்கநூல்கள் மிகக் குறைவான காலக் கணிப்பின்படியும் கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து தொகுக்கப்பட்டவை என்று அகச்சான்றுகள் மூலமாகவும், புறச்சான்றுகள் மூலமாகவும் கருதமுடியும். ஆனால் கன்னடத்தில் கி.பி 9-ஆம் நூற்றாண்டு முதலும், தெலுங்கில் கி.பி 11-ஆம் நூற்றாண்டு முதலும்தான் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. தமிழ்க் கல்வெட்டுகளுக்கும், கன்னட - தெலுங்குக் கல்வெட்டுகளுக்கும் கால இடைவெளியைத் தவிர மற்றுமொரு மிகப்பெரிய மாறுபாடும் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப் பழைய தமிழ்-பிராமி கல்வெட்டுகள் எல்லாமே தமிழ்மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளின் வாசகங்களில் ஆங்காங்கே பிராகிருதமொழிச் சொற்கள் காணப்படினும், கல்வெட்டுகளின் அடிப்படை மொழி தமிழ்தான் என்று இப்பொழுது ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுவிட்டது. தமிழ்மொழியின் சிறப்பு எழுத்துக்களாகிய ழ, ள, ற, ன என்பன இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. வடமொழியின் வர்க்க எழுத்துக்கள் சிற்சில பிராகிருதச் சொற்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் காணப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் முற்றிலும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போன்று தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள மிகப் பழைய பானைக்கீறல்களிலும் நாணயங்களிலும் மோதிரங்களிலும் இலச்சினைகளிலும் தமிழ்மொழிதான் கையாளப்பட்டுள்ளது. காஞ்சி போன்ற தலைநகர்களிலும் அரிக்கமேடு, கொடுமணல் போன்ற வணிக மையங்களிலும் மட்டுமே மிகச் சில பானைக்கீறல்களிலும் இலச்சினைகளிலும் பிராகிருதமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது தமிழகத்தில் எழுத்துமுறை முதன்முதலாகத் தோன்றியபொழுது எழுதக் கையாளப்பட்ட மொழி தமிழேதான் என்பதில் ஐயமில்லை. கன்னட - தெலுங்கு மாநிலங்களில் அதே காலகட்டத்தில் சூழ்நிலை முற்றிலும் மாறாக இருந்தது. அவ்விரு மாநிலங்களிலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இலச்சினைகள், பானைக்கீறலகள் எல்லாமே முழுக்க முழுக்க பிராகிருதமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. எழுத்துமுறை தோன்றி 800 ஆண்டுகளுக்கு மேல் கன்னடத்திலோ, தெலுங்கிலோ கல்வெட்டுகளும் பிற சாசனங்களும் எழுதப்படவில்லை. பிராகிருத மொழி சாசனங்களில் ஆங்காங்கே சிற்சில கன்னட - தெலுங்கு மொழிச் சொற்கள் மட்டுமே காணப்படுகின்றன. இதை இன்னொரு விதமாகவும் விளக்கலாம். தமிழகத்தின் பழைய கல்வெட்டுகளில் பிராகிருதமொழிச் சொற்களைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்; அதே காலகட்டத்தில் ஆந்திர - கர்நாடக மாநிலங்களில் எழுதப்பட்டுள்ள பிராகிருத சாசனங்களில் தெலுங்கு - கன்னட மொழிச் சொற்களைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்! தமிழகத்தில் மிகப் பழமையான காலத்திலிருந்தே எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்டது என்பதற்கு இப்பொழுது பல சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் குகைகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் - பிராமி கல்வெட்டுகள் வடநாட்டிலிருந்து வந்த தமிழ் தெரியாத சமணத் துறவிகளால் எழுதப்பட்டவை என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் அகழ்வாய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான பானைக்கீறல்கள் தமிழ்-பிராமி எழுத்துக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பானைக்கீறல்கள் மதுரை, கரூர், உறையூர் போன்ற தலைநகர்களிலும் கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு போன்ற துறைமுகங்களிலும் மட்டுமல்லாது அழகரை, போளுவாம்பட்டி போன்ற சிற்றூர்களிலும் கிடைக்கின்றன. இப்பானைக்கீறல்களில் சாமானியர்களான பொதுமக்கள் கூட தத்தம் பெயர்களை எழுதியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், அதே காலகட்டத்தில் அல்லது சற்றே பிந்தைய காலத்தில் எழுந்த சங்கநூல்களை ஆக்கியோர், தொகுத்தோர் சமுதாயத்தின் எல்லாத் தளங்களையும் சார்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. சங்கப்புலவர்களில் அரசர்களும் வணிகர்களும் பல்வேறு தொழில் செய்தவர்களும் பெண்டிரும் அடங்குவர். இச்சான்றுகளை நோக்கினால் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப் பரவலாக நடைபெற்றது என்ற முடிவுக்கு வரலாம். இதே காலகட்டத்தில் ஆந்திர - கர்நாடக மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானைக்கீறல்கள் பௌத்த விகாரங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. அவை பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை; பௌத்த சமயச் சார்புள்ளவை. மேற்கூறிய சான்றுகளிலிருந்து தமிழகத்திலும் ஆந்திர - கர்நாடக மாநிலங்களிலும் முதன்முதலில் காணப்படும் எழுத்தறிவு இருவேறு வகையானவை என்றுதான் கருதமுடிகிறது. தமிழகத்தின் எழுத்தறிவைப் பொதுமக்களின் ஆதரவு பெற்ற (Popular) அறிவொளி இயக்கம் என்றும் ஆந்திர - கர்நாடக மாநிலங்களில் காணப்படும் எழுத்தறிவை மேல்மட்டத்து (Elitist) எழுத்தறிவு என்றும் வர்ணிக்கலாம். மேற்குறித்த மாறுபாடுகளுக்கு என்ன காரணங்கள் என்பதை இனி காணலாம். ஆந்திர - கர்நாடக மாநிலங்களில் அக்காலத்தில் பேசப்பட்ட மொழி பிராகிருதம் என்று கூறமுடியாது. பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ள சாசனங்களில் ஆங்காங்கே கன்னட - தெலுங்கு மொழிச் சொற்கள் காணப்படுவதிலிருந்து இத்திராவிட மொழிகளைத்தான் மக்கள் அம்மாநிலங்களில் பேசிவந்தார்கள் என்று தெரிகிறது. மேலும் கி.பி 5-ஆம் நூற்றாண்டு வரை கன்னட - தெலுங்கு மொழிச் சொற்கள் தனிமொழிகளாக வளர்ச்சியடையவில்லை என்றும் கூறமுடியாது. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு மூலமாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தனிமொழிகளாகிவிட்டன என்று தெரியவருகிறது. மேலும் தெலுங்கு - கன்னட மாநிலங்களில் சாதவாகனர்கள் போன்ற மாமன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள்; கலைநுணுக்கம் மிகுந்த பெரும் வழிபாட்டுத் தலங்கள் எழுப்பப்பட்டன. பிராகிருத மொழியில் இலக்கியம் தோன்றியது. பொதுவாகத் தமிழகத்தை விட ஆந்திர - கர்நாடக மாநிலங்கள் பண்பாட்டில் பின் தங்கியிருந்தன என்று கருதுவதற்கு எத்தகைய சான்றுகளும் இல்லை. ஆகவே மேற்குறித்தவாறு மொழிவளர்ச்சியில் மட்டும் காணப்படும் மாறுபாட்டிற்கு வேறு காரணங்கள் இருக்கவேண்டும். ஒரு மிகமுக்கியமான காரணம் தமிழகம் அக்காலகட்டத்தில் அரசியல் ரீதியாக சுதந்திரமாக இருந்தது என்பதுதான். ஆந்திர - கர்நாடக மாநிலங்கள், நந்த - மௌரியப் பேரரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தன. அசோக மன்னர் தம்முடைய 13-வது சாசனத்தில் ஆந்திரத்தைத் தம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட மாநிலம் என்று கூறியிருக்கிறார். மகத அரசின் ஆட்சிமொழி பிராகிருதமாக இருந்ததால் அப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்கள் அனைத்திலும் பிராகிருத மொழியே ஆட்சிமொழியாகவும் சமயம், வாணிபம், கல்வி போன்ற துறைகளில் பொதுமொழியாகவும் இருந்தது. மௌரிய ஆட்சி வீழ்ந்து அவர்களுக்குப் பின் ஆந்திர - கர்நாடக மாநிலங்களை ஆண்ட சாதவாகன மன்னர்களும் அவர்களுக்குப் பிறகு இக்ஷவாகு, கதம்ப, சாலங்காயன, விஷ்ணுகுண்டின், பல்லவ வம்சங்களைச் சார்ந்த மன்னர்களும் பிராகிருத மொழியையே தொடர்ந்து ஆட்சிமொழியாகப் பயன்படுத்தி வந்தார்கள். மேல்நிலை மக்கள், பொதுமக்களுக்குப் புரியாத ஒரு மொழியைத் தங்கள் ஆட்சிமொழியாக வைத்துக்கொள்வதின் மூலம் சாமான்ய மக்களை ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலக்கிவைத்துத் தாமே அதிகாரத்தைத் தொடர்ந்து செலுத்தினர் என்பது உலகறிந்த உண்மையாகும். பிற்காலத்தில் இந்திய நாட்டில் மொகலாய ஆட்சியின்போது பாரசீகமொழி ஆட்சிமொழியாக இருந்ததும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் - அதற்குப் பிறகு கூட ஆங்கிலம் ஆட்சிமொழியாக அமர்ந்திருந்ததும் சரித்திரம் காட்டும் உண்மைகளாகும். (தொடரும்) பின்குறிப்பு : இக்கட்டுரை 1996 ஆம் ஆண்டு டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடான வரலாறு ஆய்விதழுக்காக எழுதப்பட்டது. தமிழில் மொழிபெயர்த்தவர் : ஜயந்தி நாராயணசுவாமி. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |