http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 4

இதழ் 4
[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தரவுகளைத் தொகுப்போம்
மத்தவிலாச அங்கதம் - 2
கதை 3 - கண்டன்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
கல்வெட்டாய்வு - 3
ஆத்மாவின் அடையாளங்கள்
கட்டடக்கலை ஆய்வு - 4
இராஜசிம்மன் இரதம்
Rare Karana Sculptures from Thirumalapadi
இராகமாலிகை - 3
சங்கச்சாரல் - 4
கோச்செங்கணான் யார் - 2
இதழ் எண். 4 > பயணப்பட்டோம்
இராஜசிம்மன் இரதம்
கோகுல் சேஷாத்ரி
மாமல்லபுரம் பயண அனுபவங்கள் - பகுதி 1


சென்னை மாமல்லபுரம் சாலையில் அந்த வண்டி எண்பது - இல்லை, தொண்ணுறு - இல்லை தொண்ணூறுக்கும் மேல்... ஏதோ ஒரு கிலோமீட்டர் வேகத்தில் அதி-விரைந்துகொண்டிருந்தது.

இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா ? அட, வண்டியின் உள்ளே நாமும் உட்கார்ந்திருக்கிறோம் ஐயா ! அதுதான் பிரச்சனையே...

வண்டியோட்டிய நண்பர் நம் தனிப்பட்ட அபிப்பிராயத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் லேன்ஸரை மிகத் திறமையாய்ச் செலுத்திக் கொண்டிருந்தார். அவரது திறமை நெடுஞ்சாலைக்கு நடுவில் ஒரு தெருநாய் புகுந்து புறப்பட்டதில் தெரிந்தது. அந்த ஜீவனுக்கு ஆயுள் அன்றைக்கு முடியவில்லை போலும் - எப்படியோ பிழைத்துக் கொண்டது.

சரி, நடப்பது நடக்கட்டும் என்று பாரத்தைத் தலைக்கு மேல் போட்டுவிட்டு அக்கடாவென்று சாய்ந்துகொண்டோம்.

முன்வரிசையில் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய ஆய்வாளர் டாக்டர்.அகிலா அமைதியாக உட்கார்ந்திருந்தார். நம்மோடு வருபவர்களை இத்தனை நிம்மதியாக இருக்க விடுவதா? என்கிற நினைப்புடன் பல நாட்களாகக் கிடப்பில் போட்டிருந்த சரித்திர சந்தேகங்களைத் தூசிதட்டி அவர்முன் கேள்விகளாய் அள்ளி வீசினோம். நம்முடன் பயணம் செய்த நண்பர்களும் இந்தப் புண்ணிய காரியத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள முன்வந்தார்கள்.

பேச்சு சோழன், பாண்டியன், பல்லவன், முத்தரையன் என்று அலைபாய்ந்து கோச்செங்கணானான திருக்குலத்து வளர்ச் சோழனிடம் சென்று நின்றது.

இந்தச் சோழன் சாதாரண ஆளில்லை - அந்தக் காலத்திலேயே ஒன்றல்ல, இரண்டல்ல, எழுபத்து நான்கு மாடக்கோயில்களைக் காவிரியின் கரைப்பகுதிகளில் எடுப்பித்தவன். திருமங்கையாழ்வார் திருநாறையூரைப் (அதாங்க நாச்சியார் கோயில்..) போற்றிப் பாடும் பத்து பாசுரங்களில் இந்த மன்னனை செம்பியன், செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன், தெய்வவாள் வங்கொண்ட சோழன், தென்தமிழன், திருக்குலத்து வளர்ச் சோழன் என்று பல்வேறு பெயர்களில் புகழ்ந்து தள்ளுகிறார்.

இதோ மாதிரிக்கு ஒன்று...


முருக்கிங்கு கனித்துவர் வாய் பின்னைக் கேள்வன் மன்னொம் முன்னவியச் சென்று - வெற்றிச்
செருக்களத்துத் திறழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடி சென்னி வைப்பீர் !
இருக்கிங்கு திருமொழிவாய் எண்தோளீசர்க்கு எழில்மாடம் எழுபதுசெய்து உலகாண்ட
திருக்குலத்து வளர்ச்சோழன் சேர்ந்த கோயில் திருநரையூர் மணிமாடம் சேர்மின்களே !


ஆழ்வார் மட்டுமல்ல - சமயக்குரவரான அப்பரும் இந்த சோழனைப் பாடியிருக்கிறார்...ஆக நாயன்மாராலும் ஆழ்வாராலும் பாடப்பெற்ற
ஒரே அரசன் என்ற பெருமை செம்பியர்கோன் கோச்செங்கணானுக்குக் கிடைக்கிறது.

அடக் கடவுளே - சோழனைப் பற்றிப்பேச வேறு நேரமா கிடைக்கவில்லை? மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள அறுசுவை அரசு உணவகத்தை நெருங்கும்போதா பேச்சு அத்தனை சுவைபடப் போகவேண்டும்? பேச்சில் முழுவதுமாக மனதைப் பறிகொடுத்து விட்டதால் சரியாகவே சாப்பிட முடியவில்லை போங்கள்!

வள்ளுவர் "செவிக்குணவிலாத பொழுதுகளில் மட்டும் போனால் போகிறதென்று கொஞ்சம் வயிற்றையும் கவனித்துக்கொள்" என்று சொன்னாலும் சொன்னார்... அருமையான பொங்கல் சட்னியிலும் இட்லி சாம்பாரிலும் மூழ்கித் திளைக்காமல் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் திளைக்க வேண்டியதாகி விட்டது.

தன்னை மறந்த கலந்துரையாடலில் எப்போது சென்னையைக் கடந்தோம்... எப்போது திருவிட எந்தையைக் (திருவிடந்தை) கடந்தோம்... எப்போது மாமல்லபுரத்தை நெருங்கினோம் என்றே தெரியவில்லை...திடீரென்று இடது பக்கம் ஒரு பழங்காலக் கோயில் - மண்மேடிட்ட இடத்திலிருந்து எட்டிப் பார்க்க -

அடடா ! பல்லவர் பூமியை நெருங்கிவிட்டோம் போலிருக்கிறதே...








முசுகுந்தேஸ்வரர் கோயில்




அது இந்த நூற்றாண்டின் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட முசுகுந்தேஸ்வரர் கோயில் என்று தெரிவித்தார் அகிலா. நிதானமாய் நின்று பார்க்க நேரமில்லாததால் வேனிலிருந்தே அந்தப் பழங்காலப் பெருமானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்தோம்.

மாமல்லபுரத்தில் நுழைந்து நல்லதொரு இடத்தில் தனது அதிவேக இரதத்தை நிறுத்தினார் நண்பர். இறங்கியவுடன் இரண்டு கால், இரண்டு கைகளெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றனவா என்று ஒரு முறை இரகசியப் பரிசோதனை செய்துகொண்டோம். காலம் கெட்டுக் கிடக்கிறதல்லவா ?

நாங்கள் வந்திருந்தது குறிப்பாக பஞ்ச பாண்டவர் இரதம் என்று அழைக்கப்படும் இரதங்களைப் பார்க்க - அதிலும் குறிப்பாக தருமராஜர் இரதம் என்று அழைக்கப்படும் ஒரே ஒரு கோயிலை மட்டும் பார்க்க!

ஆச்சரியமாக இல்லை?

சிற்ப அற்புதங்கள் நிறைந்த மாமல்லபுரம் வரை வேலை மெனக்கெட்டுச் சென்றுவிட்டு ஒரே ஒரு கோயிலை மட்டும் பார்த்துவிட்டு வருவதா, என்கிறீர்களா ?

அட, ஆமாங்கறேன்!

ஒவ்வொரு முறை பழங்காலக் கோயில்களுக்குச் செல்லும்போதும் "எல்லா இண்டு இடுக்குகளையும் விடாமல் பார்த்துத் தீர்த்துவிட வேண்டும்!" என்கிற ஆவேசத்தில் சென்றுவிட்டு ஒன்றையும் உருப்படியாகப் பார்க்காமல் திரும்புவதுதான் நமது வழக்கம். அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத் தான் இந்த "ஒரே ஒரு இரதத்தை" நோக்கிய பயணம்.

இந்த இரதங்களுக்குப் பஞ்ச பாண்டவர் இரதம் என்று முதன் முதலில் பெயர் வைத்தானே - அவன் மட்டும் இப்போது நம் கையில் கிடைத்தால் ஒரு வழி செய்து விடலாம் ! இதே இரதங்கள் ஐந்து அல்லாமல் நான்காக இருந்திருந்தால் இராம இலட்சுமணர் இரதங்கள் என்று பெயர் வைத்திருப்பானோ ? போதாக்குறைக்கு அங்கிருக்கும் ஒரு சில அரைகுறை கைடுகள் அந்த இடங்களுக்கு வனவாசத்தின்போது பஞ்ச பாண்டவர் வந்து தங்கியதாகவும் சாப்பிட இலைகூட இல்லாமல் அங்கிருந்த பாறைகளைத் துடைத்து அதன்மேல் சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டதாகவும் வெள்ளைக்காரக் கிழவர்களிடம் கரடி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

(இதாவது பரவாயில்லை - ஊருக்கு சற்று தள்ளி ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ள இதேபோன்ற வேறு இரு கோயில்களுக்கு பிடாரி இரதங்கள் என்று பெயர் வைத்து விட்டார்கள் !)

உண்மையில் இந்த ஐந்தும் இரதங்களேயில்லை - கோயில்கள் ! அதுவும் மிக முக்கியமான சில செய்திகளைப் பின்னர் வரும் சந்ததியர்க்குத் தெரியப்படுத்தவேண்டும் என்கிற பரந்த நோக்கில் பல்லவ மன்னர்கள் விட்டுச் சென்ற சரித்திரப் புதையல்கள்.

பல்லவர்க்கு பலகாலம் முன்னாலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலவகையான தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டன. சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் இதற்கான குறிப்புக்கள் நிறைய உள்ளன.

ஒரு உதாரணத்திற்கு சிலம்பின் இந்திரவிழாவூரெடுத்த காதையின் சில வரிகளை நோக்குவோம்.


"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்....."


இவை எல்லாமே கோயில்கள்தான் - ஆனால் மரத்தாலும் செங்கல்லாலும் சுண்ணத்தாலும் கட்டப்பட்ட கோயில்கள். (அரசன் வாழும் அரண்மனைகூட கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும் )

காலம் இந்தப் பழம்பெருமை வாய்ந்த கோயில்களை ஈவு இரக்கமின்றி சிதைப்பதைப் பார்த்த பல்லவ மாமன்னர் மகேந்திரவர்ம பல்லவர், வழக்கமான பொருட்களை விடுத்து மலைகளைக் குடைந்து கோயில்களை அமைக்கும் உத்தியை புகுத்தினார். அழிவே இல்லாத பரம்பொருளுக்கு அழிவே இல்லாத கற்பாறைகளில்தான் கோயில்களை அமைக்கவேண்டும் என்கிற எண்ணம் போலும் ! மண்டகப்பட்டு கல்வெட்டில் அவரே இந்தச் செய்தியைப் பெருமை பொங்கச் சொல்லிக்கொள்கிறார்.

மாமன்னர் உத்தரவுக்கு மறுப்பேது ?

தென்னகத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலிருந்தும் சிற்பிகள் திரண்டனர். எங்கெல்லாம் மலைகளும் பாறைகளும் தென்பட்டனவோ அங்கெல்லாம் கல் பொளிக்கும் ஓசை கேட்கத்துவங்கியது.

மகேந்திரரின் வழிவந்த பல்லவ மன்னர்களின் காலத்தில் இந்தத் திருப்பணி பல்வேறு வளர்ச்சிகளை கண்டு கலா இரசிகரான இரண்டாம் நரசிம்மவர்மர் காலத்தில் உச்ச நிலையை எய்தியிருந்தது. இராஜசிம்மன் என்று பெயர்பெற்ற இப் பெருவேந்தர்தான் மாமல்லபுரத்தில் எழில் வாய்ந்த ஏழு கட்டுமானக் கோயில்களை கடற்கரையில் நிறுவியவர்.








பஞ்ச பாண்டவ இரதங்கள் என்றழைக்கப்படும் கோயில்கள்




இவர் காலத்திலோ அல்லது இவர் காலத்திற்கு சற்று முன்னரோதான் பஞ்ச பாண்டவ இரதங்கள் என்று நாம் அழைக்கும் கோயில்களைச் செதுக்கும் பணி ஆரம்பித்திருக்க வேண்டும். அங்கு கிடந்த சிறு குன்றுகளையும் பாறைகளையும் பார்வையிட்ட சிற்பிகட்கு பல்வேறு கற்பனைகள் உதித்திருக்க வேண்டும். அவற்றில் ஒன்று - அதுவரை மரத்தாலும் மண்ணாலும் கட்டப்பட்டு மெதுமெதுவாய் அழிந்துகொண்டிருந்த கோயில்களின் மாதிரியை பாறையில் நிரந்தரமாய்ச் செதுக்கிவைக்க வேண்டும். பிற்காலச் சந்ததியர்க்கு அவை அதுவரை கட்டப்பட்டுவந்த கோயில்களின் மாதிரியை விளக்குமல்லவா ?

அந்த இடத்தில் சிற்பிகளுக்கு கோயில்கள் வடிக்கத் தோதாக ஐந்து குன்றுகள்தான் அகப்பட்டன.

ஒவ்வொரு பாறையிலும் ஒவ்வொரு வகையான கோயிலின் மாதிரி வடிவத்தை காண்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதிலும் அவற்றுள் முதலாவது திருக்கோயில் ஆதிமக்களால் முதன்முதலில் வணங்கப்பட்ட கொற்றவை தேவிக்கான கோயிலாக இருக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டது.








பூரணமாக முற்றுப்பெற்ற கொற்றவை கோயில்




மீதிப் பாறைகள் அளவில் சிறியதாக இருக்கவே, அவற்றில் மிருக உருவங்களைச் செதுக்க முடிவு செய்தார்கள்.

அந்தோ ! அந்த சிற்பிகளுக்கு அற்புதமான கற்பனை வளம் இருந்ததேயன்றி தீர்க்க தரிசனம் குறைவுதான். இல்லையேல் அழகிய கொற்றவைக் கோயிலை முடித்த கையோடு கோயிலின் மேற்புறம் "ஐயா தமிழர்களே ! இது கொற்றவைக் கோயில் ! இதற்கும் மகாபாரதத்தின் திளெபதிக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை !" என்று பல்லவ கிரந்தத்தில் பொறித்துவிட்டுப் போயிருப்பார்கள் அல்லவா ?

கோயில்களைச் செதுக்க ஆரம்பித்த நேரம் சரியில்லை போலிருக்கிறது - பாழாய்ப் போன போர் ஒன்று வந்து சிற்பிகளின் மகத்தான பணியைப் பாதியில் நிறுத்திவிட்டது. ஒரே ஒரு கோயில் முழுவதும் முடித்து மற்ற கோயில்களில் பணியை முக்கால்வாசி முடித்துவிட்ட நிலையில் அந்தச் சிற்பிகள் எல்லோரும் மனமேயில்லாமல் மாமல்லபுரத்திலிருந்து தத்தம் சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்களில் சிலர் அந்தக் கோயில்களை மறக்கவே முடியாமல் கடைசி மூச்சு உள்ளவரை "முடிச்சிட்டு வந்திருக்கலாம் !" என்று புலம்பியபடியே உயிரை விட்டனர். அவர்களின் ஆன்மா இன்றளவும் மாமல்லபுரம் பூமியில்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன.








தருமராஜ இரதம் என்றழைக்கப்படும் அத்யந்த காமம்





அந்த இரதங்களுள் தருமராஜர் இரதம் என்று பெயர் பெற்ற கோயில்தான் அளவில் பெரியது. மூன்று அடுக்குகளைக் கொண்டது. கோயிலின் ஆதிதளம் முடிவுபெறாத நிலையில் இந்த மேல் அடுக்குகளை அடையப் படிகள் இல்லை - ஏணி வைத்து ஏறித்தான் சென்றாக வேண்டும். அதனால்தான் இந்த இரதம் மட்டும் பொதுமக்களின் "கைவண்ண"த்திலிருந்து இதுநாள்வரை தப்பிப் பிழைத்திருக்கிறது.

இரதத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களின் அரமியச் சுவர்களில்தான் அற்புதமான சிற்பங்கள்... இந்தச் சிற்பங்களை முறைப்படி பார்த்து இரசித்து வரத்தான் மேற்படிப் பயணம் !

தொல்பொருள் இலாகாவினரின் தயவில் ஏணியை எடுத்துக் கொண்டு பஞ்ச பாண்டவர் இரதத்தை (வேறு வழியில்லை - தெரிந்தோ தெரியாமலோ கோயில்களுக்கு இப்படியொரு பெயர் ஏற்பட்டுவிட்ட பின்னர் அவற்றை மாற்ற நாம் யார் ?) நெருங்கினோம். போகும் வழியில் கண்களை அப்படி இப்படித் திருப்பினால் வேறு ஏதாவது ஒரு சிற்ப அற்புதம் பாய்ந்து கவ்விக் கொள்ளும் என்பதால் "கொக்குக்கு ஒரே மதி" என்ற எண்ணத்துடன் இரதங்களை நல்லபடியாக அடைந்தோம்.

இந்த இரதத்தைப் பற்றித் தொல்பொருள் அறிஞர் கூ.ரா.சீனிவாசன் Sculptures of Dharmaraja Ratha என்றொரு அற்புதமான புத்தகம் எழுதியுள்ளார். அவருக்குப்பிறகு இந்தக் கோயிலை முறைப்படி ஆராய்ந்த தமிழகத்தின் முதுபெரும் வரலாற்றாய்வாளர் டாக்டர்.இரா.கலைக்கோவன் அத்யந்த காமம் என்ற பெயரில் தமிழில் ஒரு புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய தூண்டுதலின் பேரில்தான் மேற்படிப் பயணம் அமைந்தது என்று சொல்லத்தேவையில்லை.

அதிகாலை வெயில் முகத்தில் சுளீரென்று அடிக்க ஏணியில் காலைவைத்து ஒவ்வொருவராக ஏறத்துவங்கினோம். நேரம் அதிகாலையென்பதால் திருவாளர்.பொதுஜனம் இன்னும் ஆஜராகவில்லை. நிதானமாக இரண்டாவது தளத்தை அடைந்தோம்.

அடடா! கீழிருந்து இரதத்தைப் பார்க்கையில் இத்தனை சிற்பங்கள் இதற்குள் ஒளிந்திருப்பது தெரியவே தெரியாது! ஒவ்வொன்றும் என்ன அழகு...








குறுகலான சுற்றுப்பாதையில் பல்லவர்கால சிற்ப ஜாலங்லள்




ஒவ்வொரு தளத்திலும் ஒரு மிகக் குறுகலான சுற்றுப் பாதை - அதனைத் தாண்டி எழும் அரமியச் சுவற்றில் விதவிதமாய்ச் சிற்பங்கள்...நடப்பதற்கே ஏறக்குறைய ஒன்றறை அடி அகலப் பாதைதான் உள்ளது.. இரண்டுபேர் சேர்ந்தார்போல் நடக்கக்கூட முடியாது...இந்த இடைவெளிக்குள் இத்தனை சிற்ப ஜாலங்களா ?

அதுவும் ஏற்கெனவே அங்கிருந்த மலைப்பாறையைக் குடைந்து அத்தனையும் செதுக்கப்பட்டிருக்கின்றன.. சிறிதளவு தவறு நேர்ந்தாலும் போதும் ! கோயில் அவ்வளவுதான்... சரி செய்யவே முடியாது சீர்குலைந்து விடும்.

கோயிலை செதுக்கும் வேலை பாறையின் கீழிருந்து ஆரம்பித்ததா, மேலிருந்து ஆரம்பித்ததா என்று உறுதியாகக் கூற இயலாது.
எப்படி இருப்பினும் அதில் முதல் தளமான ஆதிதளம் இத்தனை உயரம் இரண்டாவது தளம் இத்தனை உயரம் என்று கணக்கு வைத்துக் கொண்டு கவனமாய் செதுக்கிக் கொண்டு வரவேண்டும். இரதம் முழுமைபெறாவிட்டாலும் கலசத்திலிருந்து அடித்தளம் வரை விகிதம் மாறாமல் செதுக்கிக் கொண்டு வந்த நேர்த்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை.








இரண்டாவது தளத்திற்குச் செல்வதற்காக இரதத்தோடு ஒட்டி செதுக்கப்பட்டுள்ள படிக்கற்களில் டாக்டர் அகிலா




அந்தக் காலத்தின் அளவைகள் என்னென்னவோ ? கல் பொளிக்கும் உத்திகள் எத்தனை எத்தனையோ - இன்று அவற்றையெல்லாம் யாரரிவார் ?

வெயில் உச்சிக்கு வரும்முன் மேலுள்ள தளங்களை முடித்துக்கொண்டுவிடலாம் என்று முனைவர் அகிலா கூறவே, இரதத்தின் பின் பக்கத்திலிருந்த சிறிய படிகள் வழியாக மூன்றாவது விமானத் தளத்தை அடைந்தோம்.








அத்யந்த காமத்தின் அமைப்பு




தரையிலுள்ள முழுமைபெறாத ஆதிதளத்தின் மீதிருந்து தளம் தளமாக எழும் விமானம் படிப்படியாகச் சுருங்கிக்கொண்டே வந்து மூன்றாவது தளத்திற்குமேல் கிரீவம், சிகரம் என்று நிறைவடைந்து விடுகிறது.

(மேலும் பயணிப்போம்...)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.