http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[175 Issues]
[1738 Articles]
Home About US Temples Facebook
Issue No. 4

இதழ் 4
[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தரவுகளைத் தொகுப்போம்
மத்தவிலாச அங்கதம் - 2
கதை 3 - கண்டன்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
கல்வெட்டாய்வு - 3
ஆத்மாவின் அடையாளங்கள்
கட்டடக்கலை ஆய்வு - 4
இராஜசிம்மன் இரதம்
Rare Karana Sculptures from Thirumalapadi
இராகமாலிகை - 3
சங்கச்சாரல் - 4
கோச்செங்கணான் யார் - 2
இதழ் எண். 4 > கலைக்கோவன் பக்கம்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
இரா. கலைக்கோவன்
(உமாவுக்கு வானதியின் கடிதம்)


அன்புள்ள உமா,

உன் மடல் கிடைத்தது. உனக்கும் சுந்தரிக்கும் வரலாறு குறித்து நிகழ்ந்த உரையாடலை எழுதியிருப்பதுடன், வரலாறு வாழ்க்கைக்குப் பயன்படுமா என்றும் கேட்டிருக்கிறாய். என்ன கேள்வி இது? பள்ளி நாட்களில் வரலாற்றை நேசித்துப் படித்ததால்தானே கல்லூரியிலும் முதுகலைக்கு வரலாற்றையே பாடமாகத் தேர்ந்தாய். 'வரலாறு' பற்றி அடிக்கடி நீயும் சுந்தரியும் பேசிக்கொள்வதும் விவாதிப்பதும் வரலாறு பற்றிய புரிதலை மேம்படுத்தும் என்பதால்தான், நானும் அவ்வப்போது உங்களிடம் பல கேள்விகளை எழுப்பி வந்தேன். இப்போது உனக்கு அடிப்படையிலேயே அய்யப்பாடு வந்திருக்கிறது.

வரலாறு வாழ்க்கைக்குப் பயன்படுமா என்ற கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்னால் வரலாறு என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? எது உமா வரலாறு? நீயும் நானும் பள்ளியில் படித்ததா? அல்லது இப்போது நீங்கள் கல்லூரிச் சுவர்களுக்குள் கற்பதா? அல்லது நம்முடைய தோழி நளினி கள ஆய்வுகள் என்று கூறிக்கொண்டு கோயில் கோயிலாக அலைந்து தகவல்கள் சேகரித்துக் கட்டுரைகள் எழுதுகிறாளே அதுவா? எது வரலாறு? 'நான் ஒரு கேள்வியை முன்வைத்தால், என்ன அக்கா இது, நீங்கள் ஒரு கேள்வியை எழுப்புகிறீர்கள்' என்று நீ சிரிப்பது எனக்குக் கேட்கிறது. என் கேள்விக்கு விடை கண்டால் உன் கேள்விக்கும் விடை கிடைத்துவிடும் உமா. அதனால்தான் நானும் ஒரு கேள்வி எழுப்பினேன்.

வரலாறு என்பது இறந்தகால நிகழ்ச்சிகளின் தொகுப்பு அல்லது அவை பற்றிய சிந்தனைகளின் மலர்வு என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பாடமாக நடத்துபவர்களும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் வரலாற்றைப் பார்க்கிறார்கள். சொல்லித் தருகிறார்கள். அந்த நாட்டு வரலாறு, இந்த நாட்டு வரலாறு என்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே வரலாற்றுப் பாடங்கள் எழுதப்படுகின்றன. உமா, ஒரு நிமிடம் நினைத்துப்பார். இதுதான் வரலாறா? யாரோ யாரிடமோ தோற்றுப் போனதும், யாரோ யாரையோ வெற்றி கொண்டதும், அந்த வெற்றி தோல்வி நிகழ்ந்த ஆண்டுகளும், அவர்கள் போரிட்ட களங்களும், அதற்கான காரணங்களும் எத்தனையென்று நினைவு கொள்வது? எதற்காக நினைவு கொள்வது? 'வரலாறு' என்றாலே பலர் சலித்துக் கொள்வதும் சங்கடப்படுவதும் இதனால்தான். இந்த நிமிடம் வரை வரலாற்றின் அடிநாதத்தைப் பாடத்திட்டத்தை அமைப்பவர்கள் புரிந்துகொண்டதாகத் தோன்றவில்லை.

வரலாறு நம்மோடு கைப்பிடித்து நடக்கும் ஒரு விஷயம். அது நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். வரலாறு சாசுவதமானது. அதன் பிடிக்குள் இன்றிருந்து நாளை மறையும் நீர்க்குமிழிகள் நாம்தான். ஆனால், என்ன வேடிக்கை உமா! அந்த வரலாற்றை நம் பிடிக்குள் கொணர்ந்துவிட்ட மமதை நமக்கு. அதனால்தான் கவைக்குதவாத பாடத்திட்டங்களை வகுத்துக்கொண்டு வரலாற்றை வறண்ட விஷயமாக்கி விட்டோம்.

பள்ளியில் இருக்கும்போது சோழப்பேரரசர் முதலாம் இராஜராஜரைப் பற்றிப் படித்தோமே நினைவிருக்கிறது? திருத்தவத்துறைக்கு அருகிலுள்ள திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோயிலில் கூட அவர் காலக் கல்வெட்டு இருப்பதாக நளினி கூறியிருக்கிறாள். நாம் கூட ஒருமுறை அவளுடன் சென்று அந்தக் கல்வெட்டை எழுத்தெழுத்தாகப் படித்தோமே! அந்தப் பேரரசர்தான். அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஊராட்சி உறுப்பினர் ஒருவர் தஞ்சாவூர் செல்ல விழைந்தார். அவர் விழைவுக்குக் காரணம் இருந்தது. தம்முடைய ஊரிலிருந்த கோயிலில், மன்னர் இராஜராஜர் பெயரால் அவர் நலத்திற்காக விளக்கொன்று ஏற்ற அவர் ஆர்வமுற்றார். மன்னரை நேரடியாகச் சந்தித்துத் தன் விருப்பம் கூறி அதற்கு மன்னரின் அனுமதி பெற அவர் விரும்பினார். அந்தக் காலத்தில் ஓர் ஊராட்சி உறுப்பினர்கூட மிக எளிதாக மன்னரைச் சந்திக்க முடிந்தது.

அரண்மனையில் மன்னரைப் பார்த்து மரியாதை செலுத்திய ஊராட்சி உறுப்பினர், அரசர் பெயரால் அவர் நலத்திற்காக விளக்கெரிக்க அனுமதி கேட்டார். தம் ஒருவர் நலத்திற்காக விளக்கேற்றுவதினும், நாட்டு மக்கள் அனைவர் நலத்திற்காகவும் விளக்கேற்றலே சிறந்தது என்று அவரைச் சமாதானப்படுத்தி ஊருக்கனுப்பினார் இராஜராஜர். ஊருக்கு வந்த உறுப்பினர் என்ன செய்தார் தெரியுமா? மன்னர் சொன்னதுபோல் நாட்டு மக்கள் நலத்திற்காக இறைவன் திருமுன் நாளும் ஒரு விளக்கு ஏற்ற வாய்ப்பாகப் பொற்கொடையளித்தார். அத்துடன் நாட்டு மக்களையே நினைத்திருக்கும் அந்த நல்ல அரசரின் நலத்திற்காகவும் ஒரு விளக்கேற்ற வகை செய்தார். மக்கள் மன்னரை நினைப்பதும் மன்னர் மக்களை நினைப்பதும், எத்தனை அருமையான பிணைப்பு! இந்தச் செய்தியைப் படிக்கும்போது அரசரும் குடிகளும் எப்படியிருக்கவேண்டும் என்ற அடையாளம் தெரிகிறதல்லவா? அதுதான் உமா வரலாறு. வாழ்க்கையை எது அடையாளப்படுத்துகிறதோ அதுதான் வரலாறு. அப்படி அடையாளம் காட்டி, 'நீ நடக்க வேண்டிய பாதையிது' என்று எது உன்னைப் பயணத்திற்குத் தயார் செய்கிறதோ, உன் பாதையைச் செப்பனிடுகிறதோ, நீ நடக்கும்போது உனக்குத் தோன்றாத் துணையாக உடன் வருகிறதோ, அதுதான் வரலாறு.

வரலாறு நம்மைப் பெற்றவர்களின், நமக்கு முன் வாழ்ந்தவர்களின் அனுபவப்பாடம். காலம் காத்து வைத்திருக்கும் அந்தச் சுவடுகள் வாழ்க்கையை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்தும். வரலாற்றை எங்கு படிப்பது? கோயில்களில்தான். கைகளைக் கூப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு யாரை வணங்குகிறோம் என்பதுகூடத் தெரியாமல் வணங்குமிடம் அல்ல கோயில். அது இறைவனோடும் நம் முன்னோருடனும் நம்மை இணைத்துக் கொள்ளும், தொடர்பு படுத்திக் கொள்ளும் களம். ஐம்புலன்களாலும் அனுபவிக்க வேண்டிய இடம். ஒவ்வொரு கோயிலும் மனித சமுதாயத்தின் சிந்தனை வளத்தை விதம் விதமாகப் பாதுகாத்து வைத்துள்ளன. கட்டடம், சிற்பம், கல்வெட்டு, கலைகளின் பதிவு என ஒரு கோயில் சொல்லித் தருவதைவிடவா பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கற்பித்துவிட முடியும்? வேற்றுமைகளிலும் ஒற்றுமை காத்த மாண்பை, வாழ்க்கைப் பிரச்சினைகளை நம் முன்னோர் எதிர்கொண்ட முறைமையை ஊருக்காக விட்டுக் கொடுப்பதும் ஒத்திசைவாய் இருப்பதும் கொள்கை என அவர்கள் வாழ்ந்த நேர்த்தியைக் கோயில்கள்தானே கல்வெட்டுகள் வழி விளக்கிச் சொல்ல முடியும்?

சிற்பங்கள் ஒவ்வொன்றும் சமயச் சிந்தனைகளின் வளர்ச்சியை, அவற்றோடு தொடர்புடைய வாழ்க்கை நடைமுறைகளின் பிரதிபலிப்பை எத்தனை நயமாக விளக்குகின்றன. எவ்வளவு ஆராய்ந்து, எத்தனை கலந்தாலோசித்து, எப்படிப்பட்ட கற்பனைகளுடன் உருவாக்கப்பட்டவை இந்தச் சிற்பங்கள். தள்ளி நின்றும், தடவிப் பார்த்தும் நேயமாய் நெருங்கியும் உறவாடினால் அந்தச் சிற்பங்கள் எவ்வளவு உரையாடல்களை நிகழ்த்தும் தெரியுமா? ஒருமுறை நளினியுடன் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலுக்குச் சென்றோமே நினைவிருக்கிறதா? அப்போது சுந்தரிகூட ஏதோ வருத்தத்தில் இருந்தாள். நளினி அந்தக் கோயிலின் சிற்பங்களையெல்லாம் சுற்றிக்காட்டி, ஒவ்வொன்றாக விளக்கி வந்தபோது வாலியின் மரணக்காட்சி வந்தது, போரில் காயப்பட்டு வீழ்ந்திருந்த வாலியைப் படுக்கையில் தன் மடியில் கிடத்தி அமர்ந்திருந்த தாரையையும் சுற்றிலும் துன்பத்தை வெளிப்படுத்தியவாறு அமர்ந்திருந்த வாலியின் உறவினர்களையும் மகனையின் பார்த்தபோது நாம் கண்கலங்கிப் போனோமே நினைவிருக்கிறதா? சுந்தரியின் வருத்தம் கூட அந்தத் துயரத்தின் முன் கொய்யாப் பிஞ்சாகி மறைந்தது.

நெஞ்சைப் பிழியும் புள்ளமங்கை குறுஞ்சிற்பம் - வாலியின் கடைசிக் கணங்கள்


அந்தக் காட்சியின் மொத்தப்பிழிவு துன்பம்தான் என்றாலும், ஒவ்வொரு வடிவத்தின் துன்பப் பிரதிபலிப்பும் எப்படி வேறுபட்டிருந்தது! துன்பத்தை, மனச்சோர்வை இத்தனை விதங்களில் கூட வெளிப்படுத்தக் கூடுமா என்று நாம் வியந்தது உனக்கு மறந்திருக்காது. 'ஒரு தலைவனின் மரணம்' என்று நான் அந்தச் சிற்பத்தொகுதிக்குத் தலைப்பிட்டேன். நீ, 'அழுகைக்கு ஆயிரம் முகம்' என்றாய். சுந்தரியோ, 'வீரவிளக்கு அணைந்த'தென்றாள். ஆனால் நளினி, 'வரலாறு விசும்புகிறது' என்று அழகாகவும் பொருத்தமாகவும் தலைப்பளித்தாள். இராமாயணப் பின்னணியில் வாலியின் மரணம் வரலாற்றின் விசும்பல்தான்! துரோகம் வீரமாக எழுந்து நிற்கும் இடம் வரலாற்றின் விசும்பலாகத்தானே இருக்க முடியும்? எது அறம்? எது உலகியல்? எது இராஜ தந்திரம்? என்று எத்தனை கேள்விகளை எழுப்பிக் கொண்டு அன்று உறங்கப் போனோம்!

உமா, ஒன்றை நன்றாகப் புரிந்துகொள். வரலாறு நிகழ்ச்சிகளின் தொகுப்பில் இல்லை. அதனாஇ வரலாற்றில் நிகழ்ச்சிகளே கூடாது என்று பொருளல்ல. நிகழ்ச்சிகளின் பின்னணியைப் பார். அந்தப் பின்னணியின் வேரைத் தேடு. அத்துடன் நிகழ்ச்சிகளின் பிழிவாய் வெளிப்படும் சிந்தனைத் தொடர்களை அடையாளம் காண முயற்சி செய். கற்க, கசடறக்கற்க, கற்றபின் நிற்க அதற்குத்தக என்பது குறள். எல்லாருக்கும் இதன் பொருள் தெரியும். ஆனால் இந்தக் குறளின் வழி வள்ளுவர் அடையாளப்படுத்துவது, 'கற்றல்' ஒன்றைத்தான். இது ஒரு கொள்கை. எல்லாரும் கல்வியறிவு பெற்றவர்களாய் இருக்கவேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். கற்ற சமுதாயமே உயரும் என்று நம்பினார். அதனால்தான் 'கற்க' என்றார். இது கல்வியின் முதற்படி. வாழ்க்கைத்தரம் உயர அடிப்படை. கற்பது என்று வந்தபிறகு, பிழையறக் கற்றலே அறமென்றார். கற்பது எதற்காக என்ற கேள்வியெழுந்த நிலையில், வாழ்வதற்காக என்று பதிலளித்து, கற்றது போல் வாழ்க என்றும் வாழ்த்தினார். இப்படி மூன்று படிநிலைகளில் கல்வியைக் கரைகண்ட அவரை மீறிய புதிய சிந்தனைகளேதும் இந்நாளைய கல்வி வல்லுநர்களால் கல்விக்கென்றே இயங்கும் அமைப்புகளால் வைக்கப்பட்டிருக்கிறதா? இல்லை என்று வெட்கத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டிவரும். இதுதான் வரலாற்றின் பெருமை, வளமை, நிலைப்பாடு. எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு தமிழ் மூளை எத்தனை சுருக்கமாக சொற்கட்டில் கல்வியின் விரிவை, விளக்கத்தை, வேரைப் புடம் போட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் இறும்பூது எய்துகிறது.

உமா, வரலாறு எங்கோ இல்லை. அது நம்முடன் நாளும் நடக்கிறது. விடியலில் பிறந்து, பகலில் வளர்ந்து, மாலையில் மலர்ந்து, இரவில் காத்திருந்து, மறுநாள் விடியலில் நமக்காகவே உடன் வரும் ஒப்பற்ற துணை வரலாறு. அதன் கைப்பிடித்து நடக்கக் கற்றுக் கொண்டால் வழுவற்ற வாழ்க்கை இயலுவதாகும். வரலாற்றைத் தேடுங்கள். தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை.

வரலாறு வாழ்க்கைக்காகவே. இல்லையில்லை. வாழ்க்கைதான் வரலாறு. அதனால் வரலாறாக வாழ முயல்வோம்.

அன்புடன்
வானதிthis is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.