http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 60
இதழ் 60 [ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள பேராசிரியர் மா.ரா.அரசு அவர்களுக்கு,
வணக்கம் ஐயா. நீங்களும் குடும்பத்தாரும் நலந்தானே? உங்களை முதன் முதலில் சந்தித்து விளையாட்டைப் போல ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன ஐயா. ஐந்து அற்புதமான வருடங்கள். தேடலும் கற்றலும் நிறைந்த - ஐந்து இனிய வருடங்கள். தாகத்தோடும் பசியோடும் பழமை தேடிய ஐந்து வருடங்கள். வரலாறு டாட் காமின் நண்பர்களுடனும் அறிஞர்களுடனும் உங்களுடனும் கைகோர்த்து வரலாறு பழகிய ஐந்து வருடங்கள். இந்தப் பயண அனுபவங்களின் பகிர்தலுக்காக ஏற்பட்ட வரலாறு டாட் காம் இதழுக்கும் கூட வரும் ஆகஸ்டில் வயது ஐந்து பூர்த்தியாகிறது. உங்களைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு தஞ்சை இராஜராஜேஸ்வரம் வளாகத்தில் 2004 ஜனவரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்தான் கிட்டியது. அது எங்களுக்கு ஒரு விளையாட்டுப் பருவம் ஐயா. முதலாம் இராஜராஜர் என்பவர் யார், இராஜராஜேஸ்வரம் என்பது என்ன, கட்டுமானம் - கல்வெட்டு - சிற்பம் என்று மூழ்கும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய முகம் காட்டும் அதன் பன்முகப்பட்ட பரிமாணங்கள் எவை - என்றெல்லாம் எதையுமே புரிந்துகொள்ளாமல் சின்னஞ் சிறியவர்களுக்கே உரிய ஆர்வத்துடனும் ஆர்வக்கோளாறுடனும் இராஜஇராஜேஸ்வரம் சிறப்பிதழ் வெளியிட்டோம். முனைவர் கலைக்கோவனின் பெண் தெய்வ வழிபாடு எனும் நூல் விழாவில் வெளியிடப்பெற்றது. விழாவின் இறுதியில் நீங்கள் எங்களை வாழ்த்திப் பேசினீர்கள். அந்த விழாவில் மறக்க முடியாத பேச்சாக அது அமைந்திருந்தது ஐயா. இத்தனை வருடங்கள் கழிந்தும் அந்தப் பேச்சு இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. நீங்கள் யார்? உங்கள் உண்மையான தன்மைகள் என்ன? என்பதையெல்லாம் மெல்ல நான் அறியத் துவங்கிய நேரம் அது. வழக்கமாக நாங்கள் கூட்டும் விழாக்களில் பேசும் பெரியவர்கள் பலருக்கும் வரலாறு டாட் காமின் முந்தைய இதழ்களை / கட்டுரைகளை ஆழமாகப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுவதில்லை. நமது பத்திரிக்கையின் இணைய வடிவம் எளிமையாகக் கையிலெடுத்துப் படிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதுதான் அதற்கக் காரணம். ஆனால் அன்று நீங்கள் பேசிய பேச்சிலிருந்து எங்கள் ஒவ்வொருவரின் எழுத்துக்களையும் நீங்கள் ஆழமாக வாசித்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது. வாழ்த்து என்பதை வெறும் வாய் வார்த்தையாக - ஒரு சம்பிரதாயமாக நீங்கள் கருதவில்லை - என்பதை அன்று உணர்ந்தோம். ஒவ்வொருவர் படைப்பையுமே தனித்தனியே தொட்டுக்காட்டி, சிறப்பான சில பகுதிகளைக் குறிப்பிட்டீர்கள். பின்னாளில்தான் இந்த விழாவில் பேசுவதற்காகவே பல கட்டுரைகளையும் நகலெடுத்துப் படித்தீர்கள் என்பதை அறிந்தோம். உங்களைப் பற்றி பிரத்யேகமான ஒரு எண்ணம் மனதில் உருவாகத் துவங்கியது. அந்த விழாவிற்குப் பிறகு அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பெரிய திருக்கற்றளியைச் சுற்றிப் பார்த்தோம். என்றாலும் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு வாய்ப்பு அமையவில்லை. அதற்கு அடுத்த வருடம், நண்பர் கமலுடன் உங்களை உங்களது அண்ணா நகர் வீட்டில் சந்தித்தேன். சந்தித்த சில நிமிடங்களிலேயே பல வருடம் பழகிய ஒரு இனியவருடன் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற எண்ணம் மேலோங்கிவிட்டது. திருவள்ளுவர் "உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்" என்று குறிப்பிட்டது இதைத்தான் போலிருக்கிறது. ஒத்த மனக்கருத்தோட்டம் உடையவர்களுக்கிடையே வருடக்கணக்கான தொடர்பு வேண்டியதில்லை. பழகச் சில நிமிடங்களே போதும் போலிருக்கிறது. "தூரம் காலத்தாலும் இடத்தாலும் மட்டுமல்ல - மனதாலும் ஏற்படுகிறது" என்று தூரம் பற்றிய தனது ஆலாபனையில் (வசன கவிதையில்) கவிக்கோ அப்துல் இரகுமான் குறிப்பிடுவதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அந்தச் சந்திப்பின் முடிவில் பேராசிரியர் டாக்டர் மா.ரா.அரசு எனும் பயமுறுத்தும் பெயருக்குப் பின்னால் இருப்பது ஒரு மிக அமைதியான இனிமையான மனிதர் என்பதை உணர்ந்தோம். தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் ஏராளத்தையும் தாராளத்தையும் நல்லவற்றைப் பாராட்டுவதில் கஞ்சத்தனத்தையும் காட்டுவதுதான் உலக இயல்பு. ஆனால் உங்களின் இயல்போ இதற்கு நேரெதிர். பலதிறப்பட்ட வார்த்தைகளால் எங்களின் தன்முயற்சியை (Voluntary Effort) நீங்கள் வெகுவாகப் பாராட்டினீர்கள். கிளம்புவதற்கு முன் உங்களின் தந்தையார் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் இரண்டு புத்தகங்கள் (பெரிய புராண ஆராய்ச்சி மற்றும் கால ஆராய்ச்சி) பதிப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றைக் கொடுத்தீர்கள். அத்துடன் உங்களின் பல்கலை ஆய்வின் விளைவாக மலர்ந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தமிழ்பணி பற்றிய முக்கிய நூலொன்றையும் கையில் அளித்தீர்கள். இவையெல்லாம் போதாது என்பதைப்போல் நான் வேறு தனியாக மா.இராவின் சைவ சமய வளர்ச்சியையும் கேட்டு வாங்கிக் கொண்டேன். அத்தனை புத்தகங்களுமே ஆழமான சிந்தனைகளில் விளைந்த நல்முத்துக்கள் என்பதைப் பின்னாளில் படித்தபோது தெரிந்து கொண்டேன். உங்களுக்கு இணையத்தில் பத்திரிக்கை படிப்பது சிரமமாக இருந்ததாலும் நீங்கள் எங்களின் மாதமலரைத் தவறாமல் படிக்கவேண்டும் என்று எண்ணியதனாலும் நண்பர் கமல் இந்தியாவில் இருந்தவரை மாதாமாதம் இணையத்திலிருந்து நலலெடுத்து உங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் பணி மாற்றம் காரணமாகச் ஜப்பான் சென்ற பிறகு அந்தப் பழக்கம் வழக்கொழிந்துபோனது இன்றுவரை வருத்தமாகத்தான் இருக்கிறது. இதற்குப் பிறகு அவ்வப்போது தொலைபேசியில் பேசிப்பேசி உங்களுடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிப்போனது. ஏனெனில் எப்போது உங்களுடன் பேசினாலும் ஏதோ பேட்டரி ரீஜார்ஜ் ஆனதைப் போல மனம் நிறைந்த உற்சாகம் பெற்றுவிடும். வாழ்நாள் முழுவதும் மாணவர்களுடன் பழகினாலும் உற்சாகமிழந்து காணப்படும் பல பேராசிரியர்களுக்கு மத்தியில் உங்களின் இருப்பும் சிரிப்பும் உள்ளார்ந்த நேயமும் உண்மையான அன்பும் எத்தனை ஆரோக்கியமாக இருக்கின்றன? இத்தனை ஆண்டுகளில் அவை எத்தனை மாணவர்களை வசீகரித்திருக்கும்? எத்தனையெத்தனை இதயங்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கும்? எத்தனை இளைஞர்களின் கனவுகளை உடைபடாமல் பத்திரமாய்ப் பாதுகாத்திருக்கும்? பச்சையப்பன் கல்லூரி புண்ணியம் செய்த கல்லூரி ஐயா. அதனால்தான் அரிதினும் அரியான உங்களின் இருப்பு அதற்கு இத்தனை காலம் கிடைத்திருக்கிறது. இத்தனை வருடங்கள் நீங்கள் பணியாற்றியிருந்தாலும் ஓரிரு வருடங்களாவது உங்கள் மாணவனாக அமர்ந்து தமிழ் கற்க முடியாமல் போன பேரிழப்பை எங்கு சென்று சொல்வது? உடல் வளர்க்க வேண்டும் என்பதற்காகப் பொறியியல் படித்தேன். அதற்குப் பின் மேலாண்மை படித்தேன். உடல் வளர்த்து உடல் வளர்த்து ஒரு கட்டத்தில் வெறுமை மிஞ்ச அதற்குப் பிறகே உயிர் வளர்க்கவேண்டுமென்கிற சிந்தனையே வந்தது. தமிழ் படித்தேன் ஐயா. இத்தனை வருடங்கள் வீணாகிவிட்டனவே எனும் ஏக்கத்துடன் தேடித் தேடித் தமிழ் படித்தேன். கடனுக்காகப் படிப்பவனிடம் ஒரு முகம், கடமைக்காகப் படிப்பவனிடம் ஒரு முகம், கல்விக்காகப் படிப்பவனிடம் ஒரு முகம், ஆன்ம வளர்ச்சிக்காகப் படிப்பவனிடம் ஒரு முகம் என்று படிப்பவரின் மனநிலைக்கேற்பப் பன்முகம் காட்டும் தன்மை தமிழுக்குண்டு. தமிழ்தான் என் உயிரை வளர்த்தது. என்றாலும் பல்கலையில் சேர்ந்து முழுநேர மாணவனாகித் தமிழ் கற்கும் பருவம் என்றோ முடிந்திருந்தது. பணிபுரிந்து கொண்டே பகுதிநேர மாணவனாகத்தான் கடந்த ஐந்து வருடங்களைக் கழித்திருக்கிறேன். அதனால்தான் பச்சையப்பன் கல்லூரியில் கால்பதிக்க முடியவில்லை. வாழ்வின் எத்தனையோ இழப்புக்களில் இதுவுமொன்று. இதன் பிறகு மிக நெருக்கமாக உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு ஐராவதி உருவாக்கத்தின்போது கிடைத்தது. விழா பற்றிய திட்டங்கள், பணிப்பாராட்டு மலரின் உருவாக்கம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் உரிய ஆலோசனைகள் சொல்லி வழிநடத்தினீர்கள். அனுபவம் வாய்ந்த முதியவர்கள் திட்டமிட, செயல் திறம் நிறைந்த இளைஞர்கள் ஒன்று கூடி அத்திட்டங்களைச் செயல்படுத்தினால் ஆகாததும் உண்டோ? ஐராவதி விழா நல்லபடியாக முடிந்தது. அவ்விழாவில் உங்களின் பேச்சே முத்தாய்ப்பாக அமைந்தது. ஐராவதி விழாவில் பேசுவதற்காகவே வரலாறு டாட் காம் இணைய தளத்திலிருந்து நூறுக்கும் மேற்பட்ட பக்கங்களைப் படியெடுத்துப் படித்ததாகப் பின்னர் குறிப்பிட்டீர்கள். அந்த நூறு பக்கங்களின் சாரத்தையும் அழகாக அந்த ஆன்றோர் அவையில் அன்று எடுத்துரைத்தீர்கள். பொதுவாகவே இளைஞர்கள் இதனைச் செய்ய முன்வருவதில்லை - அதனைச் செய்ய முன்வருவதில்லை என்று முதியவர்கள் - மூதறிஞர்கள் - பல்கலையில் பெரும் பட்டங்கள் பெற்று அமர்ந்திருக்கும் பண்டிதர்கள் - குற்றப்பத்திரிக்கை படிப்பதுண்டு. ஆனால் தப்பித்தவறி ஓரிரு இளைஞர்கள் உருப்படியாக எதையாவது செய்ய முன்வந்தால், அதனைப் பாராட்டுவதற்கோ ஊக்குவிப்பதற்கோ அதே முதியவர்கள் முன்வருவதில்லை ஐயா. என்னென்ன தவறுகளெல்லாம் செய்தோம் எனும் குற்றச்சாட்டுகளும் இன்னும் எவ்வாறெல்லாம் சிறப்பாகச் செய்திருக்கலாம் எனும் ஆலாசனைகளும் வண்டி வண்டியாகக் கிடைக்கின்றனவே தவிர வெளிப்படையாக இந்த இளைஞர்கள் நன்றாகச் செயல்படுகிறார்கள். சொந்தப் பணத்தைச் செலவழித்து வரலாற்று நல்லறிஞர் ஒருவருக்காகப் பணிப்பாராட்டு மலர் வெளியிடுகிறார்கள். பல்கலைக் கழகங்களும் பாடசாலைகளும்கூடச் செய்யத்தவறிய பணியை இந்த இளைஞர்கள் தைரியமாக முன்வந்து செய்திருக்கிறார்கள். இது பாராட்டத்தக்க பணி. வாழ்த்தப்படவேண்டிய செயல் என்று குறிப்பிடுவதற்கு ஒருவருக்குக்கூட மனம் வரவில்லை. இதுபோன்ற பாராட்டுக்களை எதிர்பார்த்து நாங்கள் பணிபுரிவதில்லைதான். என்றாலும்....???? ஆனால் அன்று ஐராவதி விழாவில் நீங்கள் மட்டும் தன்னந்தனியாக நின்று இந்த மண்ணின் மரபை முற்றிலுமாக உடைத்தெறிந்தீர்கள். பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக வரலாறு டாட் காம் என்பது என்ன, அதில் வெளியிடப்படும் படைப்புக்கள் எவை என்று மிக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள். ஒவ்வொருவரின் எழுத்தையும் தனித்தனியே குறிப்பிட்டு எந்தெந்த இடங்களில் சிறப்பாக எழுதியிருக்கிறோம் என்பதையும் பிரத்யேகமாக - மிக அழுத்தமாகக் குறிப்பிட்டீர்கள். இந்த முயற்சியை மனமாரப் பாராட்டுவது நமது கடமை என்றுகூட முடித்ததாக ஞாபகம். மறுநாள் இந்தச் செய்தியை வெளியிட்ட செய்தித்தாள்கள் உங்களின் பேச்சை முழுவதுமாக இருட்டடிப்பு செய்தன. ஏனெனில் இதுபோன்று இளைஞர்கள் சிலர் வரலாற்றுப் பணி புரிந்துகொண்டிருக்கிறார்கள் எனும் செய்தி தவறியும் தமிழகத்தில் வேறு ஒருவருக்கும் தெரிந்து போய்விடக்கூடாதல்லவா? அதனால்தான். அதுமட்டுமா? நடந்த விழா ஐராவதம் மகாதேவன் எனும் நல்லறிஞரின் பணிப்பாராட்டு விழா என்பதையே மறந்து (அல்லது மறைத்து) ஏதோ ஒரு விழா - என்னவோ நடந்தது - என்பதாகச் செய்தி வெளியிட்ட அவலத்தை யாரிடம் சொல்வது? ஏதோ ஒரு செய்தித்தாள் இம்மாதிரி செய்தது என்றால் பரவாயில்லை. பலராலும் மதிக்கப்படும் பிரபல நாளிதழ்களே இம்மாதிரி நடந்துகொண்டால் என்ன சொல்லிப் புலம்புவது? பத்திரிக்கைகளின் கவனத்தையும் நாளிதழ்களின் கவனத்தையும் கவர்வதற்கும்கூடத் தகுந்தவர்களைக் தகுந்த முறையில் கவனிக்க வேண்டும் போலிருக்கிறது. இல்லையேல் செய்தி திரிக்கப்பட்டுவிடும். அல்லது முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிடும். பயன்கருதாது - ஆதாயம் தேடாது பணிபுரியும் எங்களுக்கு இதுபோன்ற பிரத்யேகக் கவனிப்புக்களைச் செய்வதற்கு நேரமும் இல்லை - சாமர்த்தியமும் இல்லை. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடுவதைப்போல வேறொரு வேடிக்கை நடந்தது. ஐராவதி புத்தம் வெளியிடப்பட்டு ஓரிரு மாதங்கள் கழித்து மங்களுர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பண்டிதர் இதனைப் பற்றிய தனது மேலான விமர்சனத்தினை நாளிதழொன்றில் பதிவு செய்திருந்தார். அதில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுவிட்டு இறுதியாக இந்தப் புத்தகம் மிக மோசமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் வரலாற்றையே அவமானப்படுத்துவதுபோல் இதன் வெளியீடு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரும் அவரைப் போன்ற நூற்றுக்கணக்கான பேராசிரியர்களும் முனைவர்களும் அவர்களை வாழவைக்கும் பல்கலைக்கழகங்களும் பல்கலைகளை நடத்தப் பணம் தரும் அரசாங்கமும் சிறிதும் அக்கறை காட்டாத ஒரு விஷயத்தை நாங்கள் எடுத்து நடத்தி முடித்ததற்கு இதுபோன்ற எச்சரிக்கைகள் எங்களுக்குத் தேவைதான். ஏனெனில் மீண்டும் இதோ போன்ற முயற்சிகளில் எம் போன்ற இளைஞர்கள் ஒருபோதும் ஈடுபட்டுவிடக்கூடாதல்லவா? அதனால்தான். எதற்காக இந்த விபரங்களை இங்கே விபரமாகக் குறிப்பிடுகிறேனென்றால், இம்மாதிரியான தாக்குதல்களினால் நாங்கள் புண்பட்டு வீழ்ந்துவிடாமல் - உற்சாகம் இழந்துவிடாமல் - இருக்க வேண்டுமென்பதில் நீங்கள் மிகுந்த அக்கறை காட்டினீர்கள். பொதுவாழ்வின் அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம். எதையும் எதிர்பாராமல் பயன்கருதாமல்தான் உழைக்க வேண்டும். தன்னலமற்ற உழைப்புக்கென்று தார்மீக பலம் ஒன்றுண்டு. அது என்றாவது ஒருநாள் வீரியத்தோடு வெளிப்படும். அன்று இம்மாதிரியான காளான் விமர்சனங்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தொழியுமென்று பலப்பல வார்த்தைகள் கூறித் தேற்றினீர்கள். எங்கள் முயற்சியின் உற்சாகம் இம்மாதிரியான நிகழ்வுகளால் தொய்ந்துவிடக்கூடாது என்பதில் நீங்கள் காட்டிய அக்கறை வியப்புக்கும் மரியாதைக்கும் உரியது. அதனால்தான் அவற்றை இக்கட்டுரையில் பதிவு செய்ய நினைத்தேன். இதன் பிறகு எங்களின் (அதாவது நான் மற்றும் நண்பர் சீதாராமன்) முதுநிறைஞர் பட்டத்திற்காக நாங்கள் பட்ட பாட்டையும் எங்களின் பொருட்டு நீங்கள் பட்ட பாட்டையும் விவரிக்கவேண்டுமென்றால் நாங்கள் படித்த பல்கலையைப் பற்றியும் அதன் அவலங்கள் பற்றியும்கூட நிறைய எழுதியாக வேண்டும். அதனையெல்லாம் விரித்தெழுதினால் மாணவர்களும் வாசகர்களும் தமிழ்நாட்டின் பல்கலைகள் மீதும் உயர் கல்வி மீதும் வைத்துள்ள சிறிதளவு மரியாதையையும்கூட இழக்க நேரிடலாம் என்பதால் சொல்லாமல் விடுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் உங்களின் உதவியின்றி அங்கு ஒன்றுமே நடந்திருக்காது. அதே பல்கலைக்கு நடையாய் நடந்து ஏராளமான பொருட்செலவும் நேரச்செலவும் செய்து யார் யாரையெல்லாமோ "திருப்தி" செய்து.... மனமும் உடலும் ஒட்டுமொத்தமாகத் தளர்ந்து சோர்ந்த பிறகுதான் வேலை நடந்திருக்கும். உங்களின் உதவியினால் ஓரளவிற்கு அலைச்சலுடன் தப்பித்தோம். பேராசிரியர் மா.ரா.அரசு அவர்களே... இனிமையும் புன்னகையும் மாறா அரசு அவர்களே.... நீங்கள் இந்த மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறீர்கள் என்பதை முதலில் எங்களால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் மனதை மட்டுமல்லாமல் உடலையும்கூட உற்சாகமாக வைத்துக் கொள்கிறவர் நீங்கள். உங்களுக்கா ஓய்வு பெறும் வயது? உங்களைப் போன்றவர்களுக்கு ஓய்வு என்று ஒன்றுகூட உண்டா என்ன? அது சரி, பணி ஓய்வு என்று ஏன் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்? உங்களைப் பொறுத்தரை பணி நிறைவு என்னல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும்? சரி, சரி - இந்த இதழின் தலைப்பிலாவது அதனைச் சரிசெய்து விடுவோம். பத்திரிக்கையியல், தமிழியல் என்று பரந்து பட்ட துறைகளில் பல்வேறு விதங்களில் பரிமளிக்கும் உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததை மட்டும் இக்கட்டுரையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். குறைப்பட்ட இப்பதிவைப் பொறுத்தருளுங்கள். உடல் நலத்தை நன்கு பேணுங்கள். முடிந்தபோதெல்லாம் நமது டாட் காம் இதழில் உங்களின் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களிடமிருந்து தமிழுலகமும் வரலாற்றுலகமும் பரந்துபட்ட பங்களிப்பை எதிர்பார்க்கின்றன. வரலாறு கொடுத்த கொடைகளுள் தலையாய கொடை ஈடிணையற்ற நட்புள்ளங்கள்தான் ஐயா. அதற்காகவே வரலாற்றைப் பிரத்யேகமாக நேசிக்கவேண்டுமென்று தோன்றுகிறது. அந்த நட்புள்ளங்களுள் தனித்து மிளிரும் தங்களின் அன்பும் புன்னகையும் வரப்போகும் பலப்பல வருடங்களுக்கும் எங்களின் கூடவே பயணித்துவர வேண்டுமென்று வானில் இருப்பவனை இறைஞ்சி இக்கடிதத்தை முடிக்கிறேன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் அன்பும் வணக்கங்களும். அன்பன். கோகுல் சேஷாத்ரி. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |