http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 60
இதழ் 60 [ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
நான் அரசு சாரை முதன் முதலில் சந்தித்தது பச்சையப்பன் கல்லூரியில்தான். முதுநிறைஞர் பட்டப்படிப்பிற்கு பச்சையப்பன் கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தேன். அரசு சார் அந்தக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்ததாலும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் அவருடைய நண்பர் என்பதாலும் எனக்காகப் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அங்குப் படிப்பதற்கு வாய்ப்பமையவில்லை. இரண்டாம் முறை அரசு சாரை டாக்டர் இரா. கலைக்கோவனின் வீட்டில் ஐந்து நாட்கள் நடந்த அவர்களுடைய குடும்பச் சந்திப்பில்தான் முதன் முதலில் பார்த்தேன். அந்தக் குடும்பச் சந்திப்பு விழாவில் டாக்டரின் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களும் அவர்களின் பிள்ளைகளுமாய் இருபத்தைந்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்தச் சந்திப்பிற்கு அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னையிலிருந்து அழைத்து வந்தது அரசு சார்தான் என்பதை அறிந்தபோது அவருடைய ஒருங்கிணைக்கும் ஆற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். பின்னாளில் அரசு சார் குடும்பம் தொடர்பாக நடந்த பல விழாக்களை நேரிலும் குறுந்தகட்டிலும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த விழாக்கள் அனைத்தையும் முன்னின்று நடத்தியவர் அரசு சார்தான். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை உறுப்பினர்களையும் ஒன்றிணைப்பது எளிதான செயலன்று. தம் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர் தங்களுக்குள் நெருக்கமாவதுடன் அவரவர்தம் பெற்றோர்களையும் பிற உறவுகளையும் நன்கு புரிந்துகொண்டு, ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி வளரவும் வாழவும் வேண்டும் என்பதற்காகவே இத்தகு சந்திப்புகளை அரசு சாரும் டாக்டரும் இணைந்து உருவாக்குகிறார்கள் என்பதை அறிய நேர்ந்தபோது என் உள்ளத்தில் அவர்கள் இருவர் மீதும் பெருமதிப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் நல்ல முறையில் சிறக்க வேண்டும் என்று நினைக்கும் அவர்தம் எண்ணம் போற்றத்தக்கது. அரசு சாருடைய பேச்சை முதன் முதலில் சிராப்பள்ளியில் ஜெசி மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவின்போது கேட்டேன். அவருடைய நகைச்சுவைப் பேச்சைக் குழந்தைகள் மிகவும் இரசித்தனர். சென்னை மக்களுடைய வழக்கு மொழியில் அவர் பேசியது கூடுதல் சிறப்பாக அமைந்தது. சிராப்பள்ளி வாழ் மக்களுக்கு அது முற்றிலும் மாறுபட்ட சொற்பொழிவாக அமைந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் அவருடைய நகைச்சுவைப் பேச்சை மிகவும் இரசித்தனர். அதற்குப் பிறகு அவருடைய பல சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் வரலாற்றுத்துறையில் வ. உ. சி. யின் விடுதலைப் போராட்டத் தியாகங்கள் குறித்து அவர் கூறிய செய்திகள் வரலாற்று ஆசிரியர்களான எங்களுக்கே புதிய செய்திகளாக அமைந்தன. தமிழ்ப் பேராசிரியராக இருந்தும் வரலாற்றில் இவ்வளவு ஆர்வம் கொண்டு செய்திகளைச் சேகரித்திருக்கிறாரே என்று துறைப் பேராசிரியர்கள் அனைவரும் அன்று மிகவும் வியந்தனர். இதழியல் தொடர்பான அவர் சொற்பொழிவுகள் சிலவற்றையும் கேட்டிருக்கிறேன். ஓர் இதழ் எப்போது, யாரால் தொடங்கப்பட்டது, தொடங்கப்பட்ட காரணம் என்ன? அதில் யாரெல்லாம் கட்டுரைகள் வழங்கியிருக்கிறார்கள், அந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவம் என்ன, என அந்த இதழ் தொடர்பான அத்தனைச் செய்திகளையும் தேதி, மாதம், ஆண்டு என அனைத்தும் குறித்து விரிவாகப் பேசுவார். இவ்வளவு நாட்களையும் மானப்பாடமாகக் கூறுகிறாரே என்று வியக்கும் வண்ணம் அவருடைய பேச்சு அமையும். அவருடைய நினைவாற்றல் வியந்து போற்றற்குரியது. இதழியலில் அவருடைய ஆழ்ந்த புலமையை அவருடைய முனைவர் பட்ட ஆய்வேட்டைப் படித்தபோது நன்றாகப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஆய்வேட்டில் அவர் தந்திருக்கும் அடிக்குறிப்புகளைப் பார்த்தாலே அவர் அந்த ஆய்வேட்டிற்காக எவ்வளவு உழைத்திருக்கிறார், எவ்வளவு நாள், மாத, ஆண்டு இதழ்களைப் படித்துச் செய்திகளைச் சேகரித்திருக்கிறார் என்பதை ஆய்வேட்டைப் படிப்போர் அறிந்துகொள்ளலாம். தமிழ்ப் பேராசிரியர்கள் தங்கள் ஆய்வேடுகளுக்காகக் களப்பயணம் செய்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அரசு சார் தூத்துக்குடிக்குப் பலமுறை சென்று களஆய்வுகள் செய்ததையும் அங்கிருந்து பல முக்கியமான ஆவணங்களைப் பெற்றதையும் அறிந்தபோது களஆய்வுகளுக்கு அவர் அளித்திருந்த முக்கியத்துவம் பெருவியப்புத் தந்தது. அதுவே அவர் மீதிருந்த மதிப்பைப் பன்மடங்காக்கியது. அரசு சார் அவர் மாணவர்களுடன் பழகும் பாங்கும் மிகவும் சிறப்பானது. நாங்கள் ஒரு முறை தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் கோயிலுக்குக் களஆய்வுக்குச் சென்றிருந்தபோதுதான், இன்று மாலை அரசு சார் கோயிலுக்கு வந்து நம்மோடு களஆய்வில் கலந்து கொள்வதாகக் கூறியிருக்கிறார் என்று டாக்டர் தெரிவித்தார். அப்போது அரசு சார் கரந்தைக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் கல்லூரி முடிந்து மாலையில் கோயிலுக்கு வந்தார். அவருடன் ஒரு பெரிய மாணவர் படையும் வந்திருந்தது. கல்லூரி நேரம் முடிந்த பின்பும் மாணவர்கள் ஆசிரியருடன் வந்திருப்பது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஏறத்தாழ இரண்டு மணிநேரம் அனைவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். உரையாடிக் கொண்டிருந்தோம் என்பதை விட சிரித்துக்கொண்டிருந்தோம் என்பதே சரியாக இருக்கும். அதற்குக் காரணம் அரசு சார். அவர் சொல்லிய ஒவ்வொரு செய்தியும் நகைச்சுவையுடன் இருந்தது. அவருடைய விருந்தோம்பலும் மிகவும் போற்றத்தக்க ஒன்று. முதன் முதலில் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது மதிய உணவு பரிமாறப்பட்டது. அரசு சார் சாப்பிட வாங்க என்று அழைத்தார். உள்ளே நுழைந்ததும் அவர் வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டைப் பார்த்ததும் நான் பயந்து விட்டேன். அவ்வளவு பெரிய தட்டில் அனைத்தும் அவரே பரிமாறியிருந்தார். அப்போதுதான் டாக்டர் சொன்னார், ‘எங்கள் குடும்பத்தில் எங்கள் பெரிய அண்ணன் இளங்கோவனுக்குப் பிறகு விருந்தோம்பலில் அரசுவை யாரும் விஞ்சமுடியாது’ என்று. அந்த முதல் விருந்து என்னால் மறக்கமுடியாத ஒன்று. அதற்குப் பிறகு நாங்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம் ஆகிய ஊர்களுக்குக் களப்பயணம் செல்வதென்றால் அரசு சார் வீட்டில்தான் தாங்குவோம். ஒவ்வொரு முறையும் எங்கள் அனைவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறி அவருடைய தாயன்பால் எங்களைத் திணறடிப்பார். அவருடைய துணைவியாரும் அன்போடு உடனிருந்து பரிமாறி எல்லாவற்றையும் நாங்கள் உண்ணுமாறு பார்த்துக்கொள்வார். அரசு சார், டாக்டர் இருவரும் உரையாடுவதை பலமுறை கேட்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது. இருவரும் தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், இதழியல், தத்துவம், சினிமா, புதினங்கள் என அனைத்தும் பேசுவார்கள். அந்த உரையாடலில் பல புதிய, அரிய செய்திகள் இருக்கும். பல அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் எழுத்துக்கள் பற்றியும் அவர்தம் குணநலன்கள் பற்றியும் விரிவாகப் பேசுவார்கள். இவ்வளவு செய்திகளை இவர்கள் எங்கிருந்து தொகுத்திருப்பார்கள் என்று நமக்குத் தோன்றுமளவுக்குப் பல சுவையான செய்திகள் அவர்கள் உரையாடலில் இருக்கும். இருவரும் தங்கள் உரையாடலில் செய்திகளைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றாலும், இடைஇடையே நகைச்சுவை கலந்திருக்கும். அரசு சார் கூறும் சில செய்திகள், அவர் உண்மையாகக் கூறுகிறாரா அல்லது நகைச்சுவையாகக் கூறுகிறாரா என்பதை எளிதில் புரிந்துகொள்ளமுடியாதவாறு அமைந்திருக்கும். ஏனென்றால், நகைச்சுவையான செய்திகளைக் கூட உண்மையான செய்திகள் போல் சிரிக்காமல் கூறுவார். சிறிது யோசித்தபின் அச்செய்தி நகைச்சுவை பொருட்டு வந்தது என்பது நமக்குப் புரியும். அந்த அளவிற்குச் சிறப்பானதாக, நினைத்து நினைத்து மகிழும்படியாக அவர் நகைச்சுவை இருக்கும். அரசு சார் இதழியல் பற்றி அதிகமாகப் பேசுவதையும் கவனித்திருக்கிறேன். ஒவ்வோர் இதழ் பற்றியும் மிகவும் விரிவாகக் கூறுவார். குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வெளிவந்த பல இதழ்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசுவார். அவை எவ்வாறு அக்கால வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன என்பதையும் விடுதலைப் போராட்டத்திற்கு அவ்விதழ்கள் எந்த அளவிற்குப் பணியாற்றியிருக்கின்றன என்பதையும் மிகவும் நுணுக்கமான தரவுகளுடன் விளக்குவார். இதழியல் தொடர்பாகப் பல அரிய தரவுகளைப் பல்லாண்டுகளாகத் தொகுத்து ஒரு புதையலைப் போல் அவர் சேமித்து வைத்திருக்கிறார். அந்தப் புதையலை எத்தனையோ பேர் அனுபவித்திருக்கிறார்கள் என்றாலும்கூட அது எடுக்க எடுக்கக் குறையாத வளமான செல்வம். அந்தச் செல்வத்தைத் தங்கள் ஆய்வுகளுக்கு அவரிடமிருந்து பெற்றுப் பயன்பெறுவது இதழியல் மாணவர்களின் கடமை என்றால் அது மிகையாகாது. அரசாங்கமும் பல்கலைக்கழகங்களும் இதழியல் நிறுவனங்களும் அரசு சாருடைய இதழியல் பணிகளைப் பாராட்டவும் பயன்படுத்திக் கொள்ளவும் முன்வரவேண்டும். அவருடைய உழைப்பிற்கு இந்தச் சமுதாயம் அளிக்கவேண்டிய மரியாதையை வரலாறு டாட் காம் வழங்க முன்வந்திருப்பது பெருமைக்குரியது. வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவிற்கு என் உளம் கனிந்த பாராட்டுக்கள் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |