http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 60

இதழ் 60
[ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பேராசிரியர் மா.ரா.அரசு
பேராசிரியர் மா.ரா.அரசு புகைப்படத்தொகுப்பு
அரசு என்னும் அறிஞர் பெருந்தகை
இதழியல் இமயம்
ஓய்வு ஏது ஐயா உங்களுக்கு
இங்கிவரை யாம்பெறவே...
அரசு என்னும் அரிய மனிதர்
பேராசிரியருக்கு, அன்புடன்...
இதழா...? இயக்கமா...?
நிலா நிலா போ! போ!
இதழ் எண். 60 > சிறப்பிதழ் பகுதி
அரசு என்னும் அரிய மனிதர்
ச. கமலக்கண்ணன்


"இதழியல் இமயம். டாக்டர். மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தின் இயக்குனர். சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறை மாணவர்களின் இச்சையப்பர். என் ஆவணக்காப்பகம். எனக்கு மட்டுமன்று. இந்த நாட்டில் எழுத்தார்வம் கொண்ட அத்தனை தேடும் நெஞ்சங்களுக்கும் இவர்தான் ஒளிவிளக்கு. மெல்லச் சிரிப்பவிழும் சொற்களுடன் இவர் தொடர் அம்புகள் எய்யும் பொழுது வலிக்காமல் வலிக்கும் என்றாலும், சிரிக்காமலும் இருக்க முடியாது."

இதுதான் முனைவர். இரா. கலைக்கோவன் அவர்கள் ஆகஸ்ட் 2008ல் ஐராவதி நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மா.ரா.அரசு அவர்களைப் பற்றி உரைத்த அறிமுகம். இந்த அறிமுகத்தில் ஒவ்வொரு சொல்லும் நூறு விழுக்காடு உண்மை என்பதை அவரை அறிந்தவர்கள் உணர்வார்கள். அல்லது இவ்விதழில் வெளியாகியுள்ள லலிதாராம் அரசுவை எடுத்த பேட்டியை வாசித்தாலும் புரிந்துகொள்ளலாம்.

ஏப்ரல் 2003. சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவன் அரங்கில் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் Early Tamil Epigraphy நூல் வெளியீட்டு விழா. இந்த நூல் வெளியீட்டு விழா எங்களின் வரலாற்றுப் பயணத்தில் ஐராவதி உள்ளிட்ட பல்வேறு புதிய அத்தியாயங்களுக்குப் பிள்ளையார்சுழி போடும் என்று அப்போது எண்ணியிருக்கவில்லை. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வித்திட்ட திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத்தான் முதல் நன்றியைக் கூறவேண்டும். விழா முடிந்த பிறகு முனைவர். இரா. கலைக்கோவன் அவர்களுடனான அறிமுகப் படலம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதுதான் அவரது தம்பி என்று அறிமுகமானார் பேராசிரியர் மா.ரா.அரசு. முதல் சந்திப்பின்போது அவருடன் எதுவும் பேசக்கூடவில்லை. பிறகு சில மாதங்கள் அவருடன் தொடர்பில்லை. ஒருநாள் டாக்டரின் இல்லத்திற்குத் தொலைபேசிய போது அரசுவுடனும் பேசும் வாய்ப்பமைந்தது. நாங்கள் வரலாற்றின்பால் கொண்டிருக்கும் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டினார். ஏற்கனவே திரு. தேவமணி ரஃபேல் அவர்கள் அரசுவைப் பற்றி நல்லவிதமாகக் கூறியிருந்தார். அவர் சென்னை திரும்பியபின் அண்ணா நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்திப்பதாக முடிவு செய்தோம். அப்பொழுது லலிதாராம் பெங்களூரிலும் கோகுல் சிங்கப்பூரிலும் இருந்ததால் நான், இலாவண்யா மற்றும் கிருபாஷங்கர் ஆகியோர் சென்றோம். மிகவும் சுவையாகப் பேசினார். அவருடன் பேசியபோது நேரம் போனதே தெரியவில்லை. தனது கருத்துக்களைக் கூறும்போது தன் மனதில் பட்டதை அப்படியே கூறியது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. போலித்தனம் இல்லாதவர் என்பதை அந்தச் சந்திப்பு எங்களுக்கு உணர்த்தியது. விடைபெறும்போது தனது நூல்கள் சிலவற்றை அன்பளித்தார்.

பிறகு 2004 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பணிமுறைப் பயணமாக மூன்று மாதங்கள் அமெரிக்கா செல்லும் வாய்ப்பமைந்தது. ஏற்கனவே அமெரிக்காவில் வைத்திருந்த வாகனத்தை விற்றுவிட்டதால், மகிழ்வுந்து இல்லாத அமெரிக்க வாழ்க்கை சற்று பயமுறுத்தியது. வார இறுதிகளில் பெரும்பாலும் அறையிலேயே பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால், புத்தகங்கள் மற்றும் ஒலி/ஒளிப்பேழைகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் வாய்த்திருந்த சென்னை புத்தகக் கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது. டாக்டர். மா. இராசமாணிக்கனாரின் நூல்களைப் பற்றி டாக்டரின் வாயிலாகக் கேள்விப்பட்டிருந்ததால், அவற்றையும் வாங்கும் எண்ணம் ஏற்பட்டது. டாக்டரைத் தொடர்பு கொண்டபோது, அரசு அவர்களிடம் இருப்பதாகக் கூறினார். பின்னர் அரசு அவர்களுடன் தொலைபேசியபோது, விற்றுத்தீர்ந்த சில நூல்களைத் தவிரப் பெரும்பாலான நூல்கள் இருப்பதாகவும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் கூறினார். அந்த வார இறுதியிலேயே அவரது இல்லத்திற்கு விரைந்தேன். 'பெரியபுராண ஆராய்ச்சி', 'சைவ சமய வளர்ச்சி', 'கால ஆராய்ச்சி' ஆகிய நூல்களை வாங்கிக்கொண்டு திரும்பினேன். 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி', 'தமிழர் திருமணத்தில் தாலி' போன்றவை அப்பொழுது அவரது கைவசம் இல்லாததால் வாங்கக் கூடவில்லை. பிறிதொரு சமயம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி டாக்டரிடம் இருந்து படியெடுத்துக்கொண்டோம். பணம் கொடுத்தால் வாங்க மறுத்துவிட்டார். ஒவ்வொருமுறை சந்திக்கும்பொழுதும் நூல்களை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்குச் சிறிது தயக்கமாக இருந்தது. அடுத்தடுத்தமுறை நிகழ்ந்த சந்திப்புகளின்போது நாங்கள் புத்தகங்கள் கேட்டதை அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக வரவேற்றிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டோம். இன்றைய இளம் தலைமுறை, குறிப்பாகத் தமிழில் பட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்கள்கூட வாசிப்பதே அரிது. அதிலும் நீங்கள் தேடித்தேடி வாங்கிப் படிக்கிறீர்களே என்று வியந்தார்.

கால ஆராய்ச்சி போன்ற நூல்களை வாசிப்பது அதுதான் முதல்முறை. இப்படி ஒரு கோணத்திலும் ஆராய்ச்சி செய்து நூல்களைப் படைக்க முடியுமா என்று வியந்துபோனேன். கல்வெட்டுகளையும் கட்டடக்கலையையும் வைத்துக் கோயில்களின் காலத்தைத்தான் கணிக்க முடியும் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, இலக்கிய, வரலாற்று மற்றும் சமய நூல்களின் காலத்தையும், அக்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்றவர்களின் காலத்தையும்கூட இலக்கியங்களின் பின்புலத்தில் கணிக்க முடியும் என்று புரியவைத்த நூல் அது. இலக்கியங்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. பெரியபுராண ஆராய்ச்சி மற்றும் சைவ சமய வளர்ச்சி ஆகியவற்றைப் படித்து முடித்தபிறகு, சைவ சமயத்தின் மீதான பார்வை புதிய கோணத்தில் திரும்பியது. என் தந்தை சைவ சித்தாந்தத்தில் முதுகலை பயின்றபோது வாங்கிய சில நூல்கள் இன்னும் எங்கள் வீட்டில் இருக்கின்றன. அதில் உள்ள செய்திகளைப் பற்றி அவர் சிலசமயம் கூறும்போது ஏற்படாத ஈர்ப்பு, இந்நூல்களைப் படித்தபோது ஏற்பட்டது. கோபிசெட்டிபாளையத்தில் வசிக்கும் பேராசிரியர் கா.அரங்கசாமி அவர்கள் சைவசமயம் தொடர்பாக நிறைய ஆய்வுகள் செய்தவர் என்று உறவினர்கள்வழி கேள்விப்பட்டதால், ஐராவதி வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதற்காகச் சென்று சந்தித்து உரையாடினேன். அதன் சாரத்தைப் பின்பொரு சமயம் தனிக்கட்டுரையாக எழுத எண்ணம் கொண்டுள்ளேன். பெரியபுராண ஆராய்ச்சியிலும் பெரியபுராணத்தின் மூலத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் சில கருத்துக்களை டாக்டர். கலைக்கோவன் அவர்கள் பின்னாளில் ஒவ்வொன்றாகக் கட்டுடைக்கும்போது, வியப்பு மேலிடும். எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் விருப்பு வெறுப்புமின்றிக் கருத்துக்களைக் கருத்துக்களால் விமர்சிக்கும் கலையை இந்தக் கட்டுடைப்புகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

பிறகு வரலாறு.காம் மின்னிதழ் ஆரம்பித்த காலத்தில் அவருடனான நெருக்கம் அதிகரித்தது. அப்போது அவருக்கு இணையத்தில் உலவும் வாய்ப்பு அவ்வளவாக இல்லாததால், மாதந்தோறும் வரலாறு.காம் மின்னிதழில் வெளியாகும் கட்டுரைகளின் அச்சுப்பிரதிகளைக் கொண்டு தருவது வழக்கம். அப்போதெல்லாம் ஏறத்தாழ மாதம் இருமுறை அவருடன் சந்திப்பு நிகழ்ந்துவிடும். வரலாறு.காம் கட்டுரைகளைத் தருவதற்காக ஒன்று, இடையில் வார இறுதிகளில் அண்ணா நகர் செல்லும்போது ஒன்று. அப்போது நான் உளவியலில் முதுகலைப்பட்டம் பயின்றுகொண்டிருந்ததால், பயிற்சி வகுப்புகளுக்காக அண்ணா நகரில் இருக்கும் ஒரு மனநல ஆலோசனை மையத்திற்குச் செல்வது வழக்கம். வார இறுதிகளில் வகுப்பு அமையும்போது அவர் இல்லத்தில் இருந்தால், சென்று சற்று உரையாடிவிட்டு வருவது வழக்கம். அவரிடம் நாங்கள் தமிழ், இலக்கணம், இலக்கியம் முதலான பல்வேறு தலைப்புகளில் கேள்விகளைத் தொடுத்து விடையைப் பெறுவது வழக்கம். உரையாடல் எவ்வளவு நேரம் நீண்டாலும் இன்முகத்துடனேயே அவரது பதில்கள் அமைந்திருக்கும். எப்போதும் அவரது நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், விரைவாக வீட்டிற்குச் செல்லாவிடில் அர்ச்சனை காத்திருக்குமே என்ற எண்ணத்திலேயே உரையாடல்களைப் பாதியில் முடித்துவிட்டுக் கிளம்புவது வழக்கம். அண்ணா நகரிலிருந்து தாம்பரம் வரை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழியில் சாலையில் செல்லும் வாகனங்களோ, நிறுத்த விளக்குகளோ, வேறு எதுவுமே மனதில் இருக்காது. அவர் அளித்த சுவாரசியமான பதில்களிலேயே மனம் இலயித்திருக்கும். வண்டி அதுபாட்டுக்கு அனிச்சைச் செயலைப்போலச் சென்று கொண்டிருக்கும்.

ஜனவரி 2005ல் தஞ்சையில் வரலாறு.காம் மற்றும் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் இணைந்து நடத்திய முப்பெரும்விழாவில் பேசும்போது நாங்கள் நூல்கள் வாங்கியதை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அப்பொழுதுதான் அவரது மேடைப்பேச்சை முதன்முதலாகக் கேட்கும் வாய்ப்பமைந்தது. டாக்டருடைய மேடைப்பேச்சு தகவல் மழையாக இருக்கும். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பவர்கள் ஒருமுறை நனைந்தாலே நிறையக் கற்றுக்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் நனையவேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அரசுவின் மேடைப்பேச்சும் தகவல் மழையாகத்தான் இருக்கும். ஆனால், சற்று நகைச்சுவைச் சாரலடிக்கும். சாதாரண விஷயத்தையும் தனது நகைச்சுவைச் சாதுரியத்தால் கேட்பவர்களைக் கட்டிப்போடும் வண்ணம் பேசமுடிவதற்குக் காரணம், அவரது பேராசிரியர் பணி என்று நினைக்கிறோம். கல்லூரி மாணவர்களைப் பாடத்தில் ஒன்றவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முப்பெரும்விழா முடிந்தபிறகு எங்களுடன் பெரியகோயிலுக்கு வந்தார். பின்னர் இரவு சென்னை செல்லும் தொடர்வண்டியில் ஒரே பெட்டியில் முன்பதிவு செய்திருந்ததால், வெகுநேரம் வரை வெவ்வேறு தலைப்புகளில் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுதுதான் திரு. அ.கி.பரந்தாமனார் எழுதிய "நல்ல தமிழில் எழுதுவது எப்படி?" என்ற அருமையான நூலைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது. பல்வேறு தருணங்களில் இதுபோன்ற நல்ல நூல்களின் அறிமுகம் கிடைக்கக் காரணமாக அமைந்தார் முனைவர் மா.ரா.அரசு.

அன்று தஞ்சை தொடர்வண்டி நிலையத்திற்கு அரசுவை வழியனுப்ப ஒரு நண்பர்கள் கூட்டம் வந்திருந்தது. அவர்கள் அனைவரும் உடன்பணிபுரிந்தவர்கள் என்று எண்ணியிருந்ததால், அவர்கள் தம் மாணவர்கள் என்று அறிமுகப்படுத்தியபோது அசந்துபோனோம். அவர் கரந்தை தமிழ்க் கல்லூரியில் பணிபுரிந்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால் இன்னும் பேராசிரியர்களாகிவிட்ட மாணவர்களின் நேசத்துக்குரியவராக இருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனை பேராசிரியர்களுக்கு இது சாத்தியமாகக்கூடிய ஒன்று? நிச்சயமாக நான் இன்றளவும் மரியாதை வைத்திருக்கும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனக்குப் பள்ளியில் வகுப்பெடுத்த பல ஆசிரியர்கள் என் தந்தையின் நண்பர்கள் என்பதால் அவர்கள் பள்ளியிலும் வெளியிலும் பழகும் விதங்களில் உள்ள வேறுபாடுகள் சிலரை மதிக்கவும், சிலர்மீது அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படாமலும் இருப்பதற்குக் காரணமாக அமைந்தன. ஆனால் அரசு அவர்களின் மாணவர்கள் அனைவரும் அவர் கரந்தையில் இருந்தபோதும் சரி, சென்னையில் இருக்கும்போதும் சரி, வீட்டிற்கு வந்து பழகும் வாய்ப்புகளைப் பெற்றிருந்ததால், அனைவராலும் நேசிக்கப்படுவது என்பது அவர் விதிவிலக்கு என்பதையே சாற்றுகிறது. தஞ்சாவூரில் தங்கும் விடுதிகூட ஏற்பாடு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார். மாணவர் ஒருவரது இல்லத்திலேயே தங்கிக்கொள்வதாகக் கூறினார். இந்தக் காலத்தில்கூட, ஆசிரியர்களைத் தங்கவைக்கும் உள்ளம்கொண்ட மாணவர்களைப் பெற்றவரா, அவரிடம் கற்றவரா, யார் பேறு பெற்றவர்கள்?

ஆரம்ப காலங்களில் தமிழ் இலக்கணம், இலக்கியம் தொடர்பாக மட்டும் சென்று கொண்டிருந்த உரையாடல்கள் காலப்போக்கில் வெவ்வேறு பரிணாமங்கள் அடையத் துவங்கின. இக்கால இலக்கியம், நாங்கள் வாசித்த நூல்களைப் பற்றிய விமர்சனங்கள், இப்போதைய எழுத்தாளர்கள், அவர்களது நடைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடு, செய்தித்தாள்கள் செய்தியைச் சொல்லும் விதம், அக்காலத்திய மற்றும் இக்காலத்திய இதழ்கள் ஒப்பீடு, வ.உ.சி, பாரதி, இராஜாஜி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் என்று பல்வேறு கோணங்களில் விரிய ஆரம்பித்தது. பெரியாரைப்பற்றிச் சில இணையதளங்களில் வலைப்பதிவுகளில் அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சில விமர்சனங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இப்படியும் பெரியாரிடம் குற்றம் காண இயலுமா என்று அப்போது நான் சிந்தித்திருக்கவில்லையாதலால், சற்று அதிர்ச்சியாக இருந்தது. அரசுவிடம் ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபோது, இதைப்பற்றிக்கேட்டு, இந்த விமர்சனங்கள் எல்லாம் உண்மைதானா? பெரியார் உத்தமபுருஷர் இல்லையா என்று வினவினேன். பொதுவாக, தமிழ் மற்றும் தமிழன் மீது அபிமானமும் அனுதாபமும் உள்ள அனைவரும் திராவிட இயக்கங்களை முழுமனதாக ஆதரிப்பவர்கள் என்ற ஒரு கருத்தியல் இன்றைய இலக்கிய மற்றும் அரசியல் உலகில் நிலவுவதுண்டு. நானும் முன்பு அவ்வாறுதான் கருதிவந்தேன். பேராசிரியர் அரசு அவர்களும் தமிழ்ப்பற்று உடையவராதலால், பெரியாரையும் திராவிட இயக்கங்களையும் அவர் எவ்வாறு நியாயப்படுத்துகிறார் என்று தெரிந்துகொள்ளவேண்டி, பெரியார் மீதான விமர்சனங்களைப் பற்றிக் கேட்டேன். ஆனால் அவர் தந்த பதில், சற்று சிந்திக்கவைத்தது. உலகில் முற்றும் தவறில்லாதவர் என்று ஒருவருமே கிடையாது. பெரியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கோணத்தில் பெரியார் மீதான விமர்சனங்களைப் புரிந்துகொண்டால், அதிர்ச்சியடைய ஒன்றுமே இல்லை என்றார். மேலும், பெரியாரைப் பற்றிப் புரிந்துகொள்ள அவரது எழுத்துக்களைப் படிக்கவேண்டும். சற்றுக் கலப்படமில்லாத வாழ்க்கை வரலாறைப் படிக்க வேண்டுமென்றால், சாமி சிதம்பரனார் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கலாம் என்றார். இவைதவிர, பெரியாரைப் பற்றிய பெரும்பாலான நூல்கள் அவரை ஒன்று கடவுள் நிலைக்கு உயர்த்தி எழுதப்பட்டவை அல்லது குறைகூற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவையாகத்தான் இருக்கும். இரண்டுமே பெரியாரைப் புரிந்துகொள்ள உதவாதவை என்று கூறினார்.

இக்காலத் தமிழ் அரசியல் பற்றியும் அவருடன் உரையாடியது ஏராளம். இன்று தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் உண்மைநிலை என்ன என்று தெளிவாக விளக்குவார். யார் உண்மையிலேயே தமிழுக்குச் சேவை செய்பவர், யார் போலியாகப் பெயர் வாங்கிக் கொண்டிருப்பவர் என்று ஆதாரபூர்வமாக உணர்த்துவார். இக்கால எழுத்தாளர் ஒருவரைப்பற்றிய பேச்சின்போது, அவர் வைத்த வெளிப்படையான கூரிய விமர்சனங்கள், அவர் நாகரிகம் கருதிக்கூடப் போலியாகப் புகழாதவர் என்று விளங்கவைத்தது. இத்தகைய விமர்சனங்கள், அவர் எப்பொழுதும் எங்கள் பணிகளைப் பற்றிக் கூறும் பாராட்டு மொழிகள் உண்மையாகவே அவர் உள்ளத்தில் இருந்து வருபவை என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து, எங்களைப் பெருமிதப்பட வைக்கும். 2005 ஜூலை இறுதியில் ஜப்பான் பயணத்தின் ஒருபகுதியாக, பெங்களூருக்குப் பணிமாறும் சூழல் ஏற்பட்டது. லலிதாராம் அப்பொழுது பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருந்ததால், எங்களின் மாதாந்திர வரலாற்றுப் பயணங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூரிலிருந்து ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது அவரைச் சந்திப்பது வழக்கம். ஒருமுறை எங்கள் அலுவலகத்தில் ஆண்டுவிழாவின் ஒருபகுதியாகத் தமிழ்க் கவிதைப் போட்டி நடைபெற்றது. பெங்களூரில் தமிழ்க்கவிதைப் போட்டி என்பது சற்று அபூர்வமான விஷயம் என்றுதான் நினைக்கிறேன். மேலதிகாரிகள் மட்டத்தில் இருந்த இரண்டு மூன்று தமிழர்களால் இது சாத்தியமானது. வாழ்க்கையில் முதன்முதலாக நான் எழுதிய கவிதைக்கு முதல் பரிசு கிடைத்ததைக் கேட்டு மிகவும் பாராட்டினார். கவிதையில் இருந்த ஓரிரு வரிகளையும் மேற்கோள் காட்டி, 'சிறந்த சொல்லாட்சி' என்று பாராட்டினார்.

பின்னர் நவம்பர் மாத மத்தியில் சென்னை வந்தபோதும் அவரைச் சந்தித்தேன். அப்பொழுதுதான் அந்த இன்ப அதிர்ச்சியைத் தந்தார். சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள டாக்டர். கலைக்கோவனையும் என்னையும் அவரது நண்பரிடம் (நிகழ்ச்சி இயக்குனருக்கும் அவர் நண்பர்) பரிந்துரைத்திருப்பதாகக் கூறினார். எனக்கு உள்ளூரப் பதட்டம் தொற்றிக்கொண்டது. ஏற்கனவே ஒருமுறை பொன்னியின் செல்வன் முதல் யாத்திரை முடிந்தபிறகு ஒரு நிகழ்ச்சியில் ஓரிரு மணித்துளிகள் பேட்டியளித்திருந்தாலும், முழு நிகழ்ச்சிக்காக நிறையத் தயார் செய்ய வேண்டியிருந்தது. அரசு அவர்கள்தான் நேர்காணலைப் பற்றி நிறையத் தகவல்களைத் தந்து, எப்படியெல்லாம் பதிலளிக்கலாம் என்று பயிற்சி தந்து, தயார்படுத்தினார். என்னுடைய பேட்டிக்கு ஓரிரு நாட்கள் முன்பு டாக்டரின் நேர்காணல் ஒளிபரப்பானது. டாக்டரும் அவருடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு ஊக்கப்படுத்தினார். இருப்பினும், இன்னும் சற்று நன்றாகச் செய்திருக்கலாமோ என்று எண்ணுமளவிலேயே நேர்காணல் அமைந்தது. இதற்காகத் தளர்ந்து விடாதீர்கள். பயத்தால் சரியாகப் பேசாத சிலரது நேர்காணல்கள் ஒளிபரப்பாகாமலேயே இருந்திருக்கின்றன. நீங்கள் என்ன கூறவேண்டும் என்று நினைத்தீர்களோ, அதைத் தெளிவாகக் கூறிவிட்டீர்கள். உங்களுடைய பேட்டி ஒளிபரப்பானதால், எதிர்பார்த்த அளவிற்கு வந்திருக்கிறது என்றே பொருள். அதனால் கவலைப்படவேண்டியதில்லை என்று ஆறுதல் படுத்தினார். இப்படியே தொய்வின்றிச் சென்றுகொண்டிருந்த உறவுப் பயணத்தில், எனது ஜப்பான் பயணம் சற்று இடைவெளியை ஏற்படுத்தியது.

மே 2006ல் ஒருமுறை இந்தியா வந்திருந்தபோது இரவு உணவுக்காகச் சுழலும் உணவகத்துக்குச் சென்றிருந்தோம். ஐந்தாறு மாதங்களாக விடுபட்டவைகளை எல்லாம் பேசித்தீர்த்தோம். அப்போது நான் ஜப்பானைப் பற்றி எழுதியிருந்த மூன்று கட்டுரைகளின் அச்சுப்பிரதியைக் கொடுத்தேன். படித்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். வழக்கம்போலவே நன்றாக ஆளப்பட்டிருந்த சொற்களையும் வாக்கியங்களையும் மேற்கோள் காட்டிப் பாராட்டினார். பேச்சு சுவாரசியத்தில் நேரம் ஓடிவிடவே, பதினொன்றரை மணி தொடர்வண்டியைப் பிடிக்க ஓடவேண்டியிருந்தது. சென்னை செண்ட்ரல் வரை வந்து வழியனுப்பினார். அன்றைக்கு அவரிடமிருந்து பெற்ற நூல் அவரது முனைவர் பட்ட ஆய்வேடான வ.உ.சி வளர்த்த தமிழ். பிறகு ஜனவரி 2007ல் என் மனைவியின் கடவுச்சீட்டுக்காக சாஸ்திரி பவனுக்குப் பலமுறை படையெடுத்துக் கொண்டிருந்தபோது சென்னையில் சிலநாட்கள் தங்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் டாக்டர்.மா.இராசமாணிக்கனாரின் நூற்றாண்டுவிழா சென்னைப் பல்கலைப் பவளவிழாக் கலையரங்கில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்று மதியம் அங்கு சென்றிருந்தபோது உடனே சாஸ்திரி பவனுக்கு வருமாறு அழைப்பு வரவே, உடனடியாகத் திரும்ப வேண்டியதாயிற்று. அதற்குச் சிலநாட்கள் கழித்து நடைபெற்ற சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு உடன்வந்து சில நூல்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அன்புடன் ஒப்புக்கொண்டவர், அரிதான பல நூல்களைப் பற்றி எடுத்துரைத்தார். தேவையான அனைத்து நூல்களையும் வாங்கும்வரை உடனிருந்தார். அதுமட்டுமின்றி, அங்கு இருந்த அவரது இதழியல் மற்றும் பதிப்பக நண்பர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்தார். பிறகு அடுத்த இந்தியப்பயணம் சற்றுக் காலம் எடுத்துக்கொள்ளவே, தொலைபேசியில் மட்டுமே உரையாடல்கள் தொடர்ந்தன. இந்த இடைவெளிக்கு ஐராவதி முற்றுப்புள்ளி வைத்தது.

2008 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஐராவதி நூல் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவது என்று இலக்கு நிர்ணயித்துக்கொண்டு செயல்பட்டோம். வரலாறு.காம் ஒரு நூலைப் பதிப்பிப்பது இதுதான் முதல்முறை. எனவே, அதன் நுணுக்கங்களை அறியாத நாங்கள், பேராசிரியர் மா.ரா.அரசுவின் உதவியை நாடினோம். கட்டுரைகளைத் தட்டச்சு செய்ய ஒரு D.T.P. Operator வேண்டும். மா.இராசமாணிக்கனார் நூற்றாண்டு மலரையும் இன்னபிற நூல்களையும் பதிப்பித்திருக்கும் அவருக்குத் தெரிந்த தட்டச்சு நிறுவனங்கள் இருந்தன. நல்ல தரத்தை எதிர்பார்க்கும் அவரைத் திருப்திப்படுத்தும் அளவுக்குச் சென்னையில் கிண்டி அருகில் ஒரேயொரு D.T.P. Operator மட்டுமே இருந்தார். அவரைத் தொடர்புகொண்டபோது, சமீபத்தில்தான் மைசூரில் வேறொரு நல்ல வேலைக்குச் சென்றிருப்பதாகத் தெரியவந்தது. சோர்ந்துபோன எங்களை அரசுதான் தேற்றினார். தரமில்லாத D.T.P. Operatorகளிடம் கொடுத்து, மோசமான நூலாக வருவதைவிட, நீங்களே செய்தால் உங்களுக்கு ஒரு திருப்தி வரும். அதுமட்டுமின்றி, லே-அவுட் எந்தமாதிரி வரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, அதை D.T.P. Operatorகளிடம் சொல்லிப் புரியவைப்பது கடினம். அதனால் நீங்களே செய்தால் நன்றாக வரும் என்று ஊக்கமூட்டினார். எனவே, துணிந்து வரலாறு.காம் குழுவே அதைச் செய்வதாக முடிவெடுத்துவிட்டோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிடத் திருப்தியான அளவுக்குத் தரமாகவே வந்தது.

இதுபோல் ஒவ்வொருமுறை ஏதாவது தவறுதலாக நடந்து நாங்கள் சோர்வடைந்த நேரங்களிலெல்லாம் எங்களுக்கு ஊக்கமூட்டிவந்தார். செய்ய விரும்பும் செயல் நல்லதாக இருக்கும்போது நடப்பவைகளும் நல்லவைகளாகவே அமையும். செயலும் கடைசியில் நல்லவிதமாக முடியும். உற்சாகமாக இருங்கள் என்று ஊக்குவிப்பார். ஐராவதியை அச்சுக்கு அனுப்பியபிறகு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள், அடுத்தவேலையான வெளியீட்டுவிழா ஏற்பாடுகள் காத்துக்கொண்டிருந்தன. என்னென்ன நிகழ்ச்சிகளை வைக்கலாம், யார்யாரை அழைக்கலாம், யாரை வெளியிட வைக்கலாம் என எங்களுக்குள் எண்ணற்ற மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் முடிவுசெய்தோம். இதிலும் ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தன. அவற்றை எதிர்கொள்ளவும் அவர் உதவி செய்தார். இதற்காகக் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு அலையவும் தயாரானார். முதலில் ரஷ்யத் தூதரகத்துடன் இணைந்த பண்பாட்டு மைய அரங்கத்தை முன்பதிவு செய்தோம். அங்கு விசாரித்தபோது அரங்கம் காலியாக இருக்கவே, முழுத்தொகையையும் கட்டி முன்பதிவு செய்துகொண்டோம். பிறகு அறிஞர்களை ஒவ்வொருவராக நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அழைத்தோம்.

பிறகு இறுதியாக அழைப்பிதழை அச்சுக்கு அனுப்புவதற்குச் சற்றுமுன் தற்செயலாகத் தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது, 'வேறொரு அரசு நிகழ்ச்சிக்கு அரங்கம் கேட்கப்பட்டிருப்பதால், தங்களுக்குத் தர இயலாது, முன்பணத்தைப் பெற்றுக் கொள்ளவும்' என்ற அதிர்ச்சிச் செய்தி வந்தது. பாவம், எங்களுக்காக வேகாத வெயிலில் அலைந்து அரங்கம் பிடித்த ஒரு நல்ல உள்ளத்தின் உழைப்பெல்லாம் வீணாகிவிட்டதே என்று வருத்தப்பட்டோம். கவலையை விடுங்கள். உங்களுக்கு அரங்கம் ஏற்பாடு செய்யவே நான் இருக்கிறேன் என்பதுபோல், அடுத்த அரங்கிற்குப் படையெடுக்க ஆயத்தமானார். ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அனுபவம் கைகொடுத்ததால், பவளவிழாக் கலையரங்கத்தில் முன்பதிவு செய்து கொடுத்தார். ஒருவழியாக அரங்கம் முடிவாகி, அழைப்பிதழ் தயாராகி, நூலும் முழுவடிவம் பெற்றுவிட்டது. வெளியீட்டு விழாவில் வரலாறு.காம் பற்றி 'நடந்ததும் நடப்பதும்' என்ற தலைப்பில் உரையாற்ற ஒப்புக்கொண்டார்.

விழாவுக்கு முந்தையநாள் குழுவினர் அனைவரும் சென்னை அருகிலேயே இருக்கும் பல்லவத்தளி ஒன்றைப் பார்த்துவரச் செல்லலாம் என்று திட்டம் தீட்டி, அரசு அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த டாக்டரை அழைத்துக்கொண்டு பனைமலையை நோக்கி விரைந்தோம். பனைமலையில் இருந்தபோதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. சுந்தர் பரத்வாஜ்தான் அழைத்தவர். திடீரென அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உடல்நலமில்லாத காரணத்தால், திருச்சிக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும், அடுத்தநாள் விழாவில் கலந்துகொள்ள இயலுமா இயலாதா என்று நாளை மதியம்தான் தெரியும் என்றும் தெரிவித்தார். ஐராவதி சிறப்பிதழாக மலரும் வரலாறு.காமின் 50வது இதழைப் பெறுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். திடீரெனக் கடைசி நேரத்தில் யாரை அழைப்பது என்று குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் கைகொடுத்தார் பேராசிரியர் அரசு. அழைப்பிதழில் இல்லாவிட்டாலும், சுந்தரால் வர இயலாததால், அரசுவையே பெற்றுக்கொள்ள வைப்பது என்று முடிவு செய்தோம்.

நடந்ததும் நடப்பதும் உரைக்க ஆரம்பித்ததுமே, தான் யாருக்குப் பதிலாக இந்நிகழ்ச்சியில் நூலைப் பெற்றோம் என்று முதலிலேயே கூறிவிட்டுத்தான் தன் கருத்துக்கு வந்தார். பொன்னியின் செல்வன் படித்து வரலாற்றில் ஆர்வம் கொண்ட எங்களையும் எங்களுக்குப் பல்வேறு உதவிகள் செய்திருந்த திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்களையும் இவ்வாறு குறிப்பிட்டார். 'எந்தவொரு நிகழ்வுக்கும், எந்தவொரு செயல்பாடுக்கும் யாராவது ஒருவர் பின்புலமாக இருந்துகொண்டே இருப்பார்கள். ஆர்வம் எத்தனையோ பேர்களுக்கு இருக்கிறது. அந்த ஆர்வத்தை ஒருங்கிணைப்பதற்கு யாராவது ஒருவர் தேவையாக இருக்கிறது. இந்த ஆர்வம் நிறைந்த இளைஞர்களை முதன்முதலாக ஒருங்கிணைத்தவர் கல்கி. மனிதராக இருந்து நேர்முகமாக ஒருங்கிணைத்தவர் சுந்தர் பரத்வாஜ். மூன்றாவதாக இவர்களை நெறிப்படுத்தியவர் டாக்டர். கலைக்கோவன் அவர்கள்." அவரது பேச்சின் ஒளிப்பதிவை http://www.varalaaru.com/Default.asp?articleid=782 என்ற இணைப்பில் காணலாம். ஒரு தலைப்பில் பேசுவதற்குமுன் எவ்வளவு தூரம் தயார் செய்கிறார் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். அவர் உதவாவிட்டால் ஐராவதி நிகழ்ச்சி இவ்வளவு தூரம் சிறப்பாக நடந்திருக்குமா என்பது ஐயம்தான். இதையெல்லாம் குறிப்பிட்டு நன்றி சொன்னால், நீங்கள் இவ்வளவு பெரிய பணியைச் செய்ய முன்வந்திருக்கிறீர்கள். அணில் உதவுவதுபோல் நான் இதுகூடச் செய்யாவிட்டால் எப்படி? என்று தன்னடக்கத்துடன் மறுத்து விடுவார். ஐராவதிக்குப் பிறகு அனைவருக்கும் ஏற்பட்ட பணிச்சுமையாலும், அவரது உடல்நலத்தாலும், தொடர்பு கொள்ளும் அளவு சற்றுக் குறைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் உடல்நிலை தேறி, முன்புபோல் தொடர்பில் இருப்போம் என்று நம்புகிறோம்.

இவரைப்போன்றவர்கள் எங்களை ஊக்குவித்ததால்தான் இந்த அளவுக்கு உற்சாகத்துடன் எங்களால் செயல்பட முடிகிறது. துவண்டு நிற்கும் நேரங்களில் தோழராகவும், தவித்து நிற்கும் நேரங்களில் வழிகாட்டியாகவும், செயல்களை முடிக்கும் நேரத்தில் உளமாரப் பாராட்டுபவராகவும் எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பக்கபலமாக விளங்கிவரும் பேராசிரியர் அரசுவைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தோம் என்று தெரியவில்லை. இப்போது பணி ஓய்வு என்பது அவரது கல்லூரிக்கு மட்டுமே. மற்றபடி இதழியல் பணிகளுக்கோ, எங்களைப்போன்ற மாணவர்களை அறிவுறுத்துவதற்கோ என்றுமே ஓய்வில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருடனான எங்கள் நட்பு நிறைவானதாக இருக்கும்போதும், ஒரேயொரு குறை மட்டும் நெடுங்காலமாக எங்களுக்கு இருந்து வருகிறது. வரலாறு.காம் இதழில் அவர் இதுவரை கட்டுரைகள் எழுதியதில்லை என்ற குறைதான் அது. ஐராவதிக்காக தமிழ்மணி பற்றி எழுதிய கட்டுரை இவ்விதழில் வெளிவருகிறது என்றாலும், வரலாறு.காம் இதழுக்காக அவர் இன்னும் எழுதவில்லை. இதுநாள்வரை பணிச்சூழல், குடும்பச்சூழல் என்று நேரம் வாய்க்காததுதான் காரணம். பணிச்சுமை குறைந்த இனிவரும் நாட்களில் கண்டிப்பாக இம்மின்னிதழுக்குக் கட்டுரைகள் எழுதவேண்டும் என்று மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் எடுத்துக்கொண்ட பணிகள் அனைத்தையும் சிறப்பாக முடிக்க நீண்ட ஆயுளைத் தரப் பெருவுடையாரை வேண்டி, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.