http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 60

இதழ் 60
[ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பேராசிரியர் மா.ரா.அரசு
பேராசிரியர் மா.ரா.அரசு புகைப்படத்தொகுப்பு
அரசு என்னும் அறிஞர் பெருந்தகை
இதழியல் இமயம்
ஓய்வு ஏது ஐயா உங்களுக்கு
இங்கிவரை யாம்பெறவே...
அரசு என்னும் அரிய மனிதர்
பேராசிரியருக்கு, அன்புடன்...
இதழா...? இயக்கமா...?
நிலா நிலா போ! போ!
இதழ் எண். 60 > சிறப்பிதழ் பகுதி
ஓய்வு ஏது ஐயா உங்களுக்கு
மா. இலாவண்யா



இந்த வரலாறு டாட் காம் இதழ் தொடங்க முழுமுதற் காரணமாக இருந்தவர் திரு. கலைக்கோவன் அவர்கள் என்பது இந்த இதழ் படிக்கும் பெரும்பாலானவர்கள் அறிந்ததே.. அவரின் சகோதரரான திரு. அரசு அவர்கள் எங்களுக்கு அளித்த ஊக்கத்தைப் பற்றி நாங்கள் இதுவரை குறிப்பிட்டுக் கூறியதில்லை.. அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திரு ம. ரா. அரசு அவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதை அடுத்து அவரைப் பற்றிய ஒரு சிறப்பிதழ் வெளியிடலாமா என்று திரு கமலக்கண்ணன் அவர்கள் தொலைபேசியில் கேட்டதும், 'தாராளமாகச் செய்யலாமே. தமிழுக்கும் ஒருவகையில் வரலாறிற்க்கும் தொண்டாற்றியிருப்பவர் அவர்' என்று கூறினோம். அவரை சிறப்பித்து ஒரு இதழை இச்சமயம் வெளியிடுவது சாலப் பொருத்தமானது என்று கருதி குழுவினர் அனைவரும் உற்சாகமாக சிறப்பிதழுக்கான வேலையில் ஈடுபட்டோம். அவருடனான எனது அனுபவங்களை இக்கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

திரு. இராசமாணிக்கனார் பெற்ற மாணிக்கங்களான அவரின் மக்கள் அனைவருமே தமிழிலும் வரலாற்றுத் துறையிலும் நல்ல ஆர்வம் கொண்டவர்கள். ஆர்வம் மட்டுமின்றி நல் உழைப்பும், செய்வதைத் திருந்தச் செய்யவேண்டுமென்ற கொள்கையும் அதற்கான ஆற்றலும் கொண்டவர்கள். திரு இராசமாணிக்கனாரின் மக்களிலே எங்கள் குழுவிற்கு திரு கலைக்கோவன் மற்றும் திரு. அரசு அவர்கள் இருவருடன் மட்டுமே நல்ல பழக்கம். வரலாறு மின்னிதழ் தொடங்கி சில வருடங்கள் வரை எங்கள் குழுவில் கோகுலைத் தவிர்த்து நாங்கள் நால்வரும் சென்னை வாசிகளாகவே இருந்தோம். கலைக்கோவன் அவர்களுடன் கோயிலாய்வு பயணங்கள் மேற்கொள்ள பெரும்பாலும் அவரிருக்கும் திருச்சிக்கு பயணப்படுவோம். சில சமயங்களில் திரு. கலைக்கோவன் அவர்கள் சென்னைக்கு அருகில் இருக்கும் தலங்களை ஆய்வு செய்ய வருவார். அப்படி வரும்பொழுது பெரும்பாலும் அவர் திரு. அரசு அவர்களின் இல்லத்திலே தங்குவது வழக்கம். அச்சமயங்களில் திரு. கலைக்கோவன் அவர்களை சந்திக்கும் பொருட்டு திரு. அரசு அவர்களின் இல்லத்திற்கு பலமுறை சென்று அவரை சந்தித்து அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. திரு. அரசு அவர்கள் எத்தனை அருமையான மனிதர் என்பதும் தெரிந்தது.

திரு. அரசு அவர்களுடனான உறையாடல்கள் மிகவும் சுவையானவை. இனிய தமிழ் நடையிலே, மிகவும் நகைச்சுவையாக உரையாற்றும் ஆற்றல் கொண்டவர் அவர். வரலாறு டாட் காம் தொடங்கும் முன்னர் எங்கள் குழுவில் சிலருக்கு பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்ததைத் தவிர தமிழில் வேறு கட்டுரைகள் எழுதிப் பழக்கமில்லை. அதனால் தமிழில் கட்டுரைகள் எழுதவேண்டும் என்றவுடன் சிறிது தயக்கமாக இருந்தது. அத்தயக்கத்துடனேயே தொடங்கி ஒருசில கட்டுரைகள் வெளிவந்த நிலையிலும் கட்டுரைகளில் பிழைகள் நேர்ந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது. நல்ல தமிழில் பிழையில்லாமல் கோர்வையாக எழுத வேண்டுமென்று ஒரு குறிக்கோளாகவும் இருந்தது. திரு. அரசு அவர்களை சந்திக்கும் பொழுது பிழையில்லாமல் தமிழ் எழுதுவதைப் பற்றிப் பலமுறை உரையாடியிருக்கிறோம். அவரை தமிழ் இலக்கணத்தில் பல கேள்விகள் கேட்டுமிருக்கிறோம். அவர் அக்கேள்விகளுக்கு பொறுமையாக அருமையான விளக்கங்கள் வழங்குவார். நாங்கள் எழுதிய கட்டுரைகளை படித்துவிட்டு அவற்றில் பிழையில்லை என்று கூறுவதோடு நில்லாமல் எங்கள் கட்டுரைகளின் நடை நன்றாக உள்ளது சொல்ல நினைப்பதை கோர்வையாக எளிய தமிழில் வழங்கும் ஆற்றல் இருக்கிறது என்றெல்லாம் பாராட்டுவார். அவரின் பாராட்டுதல்களாலேயே எங்களுக்கு அச்சம் நீங்கி, உற்சாகமும் மேலும் மேலும் நல்ல தமிழ் கட்டுரைகள் எழுத வேண்டுமென்ற ஆர்வமும் பெருகிவிடும். எங்கள் குழுவினரைப் பற்றி நல்ல மதிப்பு வைத்திருப்பவர் அவர். திரு. கலைக்கோவன் அவர்கள் நாங்கள் செய்யும் வரலாறு பணியை பாராட்டினாலும் எங்களால் செய்யக்கூடிய பணிகளும், நாங்கள் செய்ய வேண்டிய ஆய்வுகளும் இன்னும் நிறைய உள்ளது என்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டுவார். திரு. அரசு அவர்களோ நாங்கள் வெவ்வேறு துறையில் இருந்தாலும் வரலாற்றில் ஆர்வம் கொண்டு பொருளும் நேரமும் செலவழித்து ஆவன செய்கிறோம் என்று மிகவும் மகிழ்ந்து எங்களைப் பற்றி பலரிடமும் மிகவும் பாராட்டிக் கூறுவார். எந்த ஒரு கருத்தை சொல்லும் பொழுதும் எதற்காக அக்கருத்தைக் கொண்டுள்ளார் என்பதற்கு தக்க சான்றுகளுடன் உண்மையாகப் பேசுபவர் அவர். அதனால் அவரின் பாராட்டுதல்கள் எங்கள் குழுவினருக்கு உற்சாகமூட்டுபவையாக இருந்தன. அதற்கு ஏற்ப மேலும் பல ஆய்வுகள் செய்து அப்பாராட்டுதல்களை பொருளுடையதாக்க வேண்டுமென்று தோன்றி அதனால் விளைந்த ஆய்வுகளும் கட்டுரைகளும் பல.

சென்னைக்கு அருகில் இருக்கும் தலங்களை திரு கலைக்கோவன் அவர்கள் ஆய்வு செய்ய வரும்பொழுது அவருடன் சேர்ந்து அத்தலங்களைப் பார்க்கும் வாய்ப்பை நாங்கள் தவற விடுவோமா என்ன. நாங்களும் அப்பயணங்களில் கலந்து கொள்வோம். அப்பயணங்களுக்காக ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து நாங்கள் திரு. அரசு அவர்களின் இல்லத்திற்கு சென்று கலைக்கோவன் அவர்களையும் முனைவர் நளினியையும் அழைத்துக்கொண்டு செல்வோம். அப்பயணங்களின் மறக்கமுடியாத அனுபவங்களில் அரசு அவர்களின் இல்லத்தில் நடக்கும் விருந்தோம்பலும் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் அதிகாலையிலேயே பயணம் புறப்படுவதால் வீட்டிலிருந்து காபி மட்டும் அருந்தி புறப்பட்டுவிடுவோம். அரசு அவர்களின் இல்லத்தில் அந்த அதிகாலை நேரத்திலும் சுடச்சுட காலை உணவு தயாராக இருக்கும். ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் அவர் நாங்கள் காலை உணவு அருந்திவிட்டோமா என்று கேட்பார். இல்லை என்றால் உடனே எங்களுக்கு தட்டு எடுத்து வைக்கச்சொல்லி சாப்பிடலாம் வாருங்கள் என்று அழைப்பார். எத்தனை மறுத்தாலும் கேட்கமாட்டார். நாங்கள் கட்டாயம் உணவு அருந்தியே செல்லவேண்டுமென அன்பாக கடிந்துகொள்வார். ஒருமுறை கவனம் வயிற்றைப் பற்றி இல்லாமல் கோயில் ஆய்வில் இருக்க காலையில் உணவு அருந்தி செல்வது அவசியம் என்று கூறினார். அவர் கூறியது எவ்வளவு உண்மை என்பது என்றாவது சரியாக சாப்பிடாமல் செல்லும் பொழுது தான் தெரியும்.

திரு கலைக்கோவன் அவர்களுடன் செல்லும் பயணங்களில் பலவற்றைப் பற்றியும் உறையாடுவோம். அப்பொழுது அவர் சிலசமயம் அவரின் இளவயது நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுவார். அவரின் தந்தை திரு. இராசமாணிக்கனார் மிகவும் கண்டிப்பானவர் என்றும், அவரிடம் எதுவும் கேட்கவேண்டுமென்றாலும் அச்சமாக இருக்குமென்றும், திரு அரசு அவர்கள் செல்லப்பிள்ளை ஆதலால் எது வேண்டுமென்றாலும் அவரே அச்சமின்றி தந்தையிடம் சென்று அவர்கள் அக்கா அண்ணன் அனைவரின் சார்பாகவும் கேட்பார் என்றும் இப்படியெல்லாம் சிறு வயது நிகழ்ச்சிகளை கூறும் பொழுது அரசு அவர்களைப் பற்றியும் நிறையக் கூறியுள்ளார். சாதரணமாகக் கேட்டால் இளவயது மலரும் நினைவுகள் தான் ஆனால் என்னைக் கவர்ந்தது கலைக்கோவன் அவர்கள் அரசுவிடமும் அவரின் தமக்கையிடமும் கொண்டுள்ள பாசம் அந்த உரையாடல்களில் வெளிப்படுவது தான். திரு. அரசு அவர்களும் ஒரு வகையில் வரலாற்றாய்வாளர் தான். இதழியலின் வரலாற்றை ஆய்வு செய்து பல புத்தகங்களை வெளியிட்டிருப்பவர். எங்கள் குழுவினருக்கே அவரைப் பற்றி இதுவரை தெரியாத பல புதிய செய்திகள் அவரை நேர்முகம் கண்டு இராம் எழுதிய கட்டுரையில் வெளிவந்திருக்கிறது. அவற்றைப் படிக்க மலைப்பாக இருக்கிறது. எத்தனை முறை அரசு அவர்களை சந்தித்திருக்கிறோம். எத்தனை அரிய ஆய்வுகளை செய்து சாதனை புரிந்தவர் இப்படி எளிமையாக எங்களுடன் ஒரு நண்பர் போல் பழகியிருக்கிறார் என்று எண்ணும் பொழுது வியப்பாக இருக்கின்றது. அவரின் எளிமை மனதை நெகிழச் செய்கிற.

அவர் பல ஆய்வுகள் செய்திருக்கும் பொழுதும், நல்ல ஒரு ஆசிரியராக இருந்தாலும் தன்னையும் ஒரு மாணவராகவே கருதும் உள்ளம் கொண்டவர். பலவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வமுடையவர். எவரிடம் நல்ல பண்புகள் இருந்தாலும் அதைக் கண்டு அவற்றை கடைபிடிப்பவர் அவர். மாணவர்களிடமும் அன்பாக ஒரு தோழர் போல பழகுபவர். அவரிடம் நாங்கள் கற்றிருப்பதும் பல அவ்வகையில் நாங்களும் அவரின் மாணவர்கள் தாம் என்று கூறுவதில் பெருமைப்படுகிறோம்.

அவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்று கேள்விப்பட்டவுடன், எனக்கு அவர் பணியிலிருந்து வேண்டுமானால் ஓய்வு பெறலாம் ஆனால் அவருக்கு அதனால் மாணவர்கள் இல்லாமல் போக மாட்டார்கள் என்று தோன்றியது. புலமை உள்ளவர்களிடம் பயில பலரும் விரும்புவார்கள் தானே. அவரும் என்றும் ஒரு ஆசிரியர் தான் மற்றவர்களுக்கு தனக்கு தெரிந்தவற்றை சொல்லாமல் இருக்கமாட்டார் என்றும் தோன்றியது. அவ்வகையில் அவருக்கு ஓய்வு என்பது இல்லைதானே. மேலும் முன்பு பணிக்கு செலவிட்ட நேரத்தில் இப்பொழுது கட்டாயம் பல ஆய்வுகளும் அதன் விளைவாக முத்துகளாக பல புத்தகங்களும் கிடைக்கப் போகின்றன என்று எண்ணுகிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்ற, அவரின் புகழ் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.