http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 66
இதழ் 66 [ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
பேராவூரணி கட்டுமாவடிச் சாலையில் இரட்டைவயலில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது விளங்குளம். இவ்வூரின் நடுவே மூன்று நிலைக் கோபுரவாயிலுடன் அமைந்துள்ள அருள்தரு அட்சயபுரீசுவரர் திருக்கோயில் விமானம் ஒருதள வேசரமாய்ப் பிரதிபந்தத் தாங்குதளத்தில் எழுகிறது. வேதிகை சூழ எழும் சுவர் எண்முக அரைத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாகபந்தத்துடன் செவ்வகப் பாதமும் எண்முக உடலும் கொண்டு வளரும் இத்தூண்கள், மாலைத்தொங்கல், தானம் தவிர்த்த அனைத்து மேலுறுப்புகளும் பெற்று, பிற்பாண்டியர் கலைமுறைக்கே உரிய, பக்கமுகங்களில் தரங்கக் கோடுகளமைந்த வெட்டுப் போதிகைக் கைகளுடன் உத்திரம் தாங்குகின்றன. மேலே வாஜனம், வலபி, கூரை. கூரையின் வெளிநீட்டலான கபோதம் ஆழமற்ற கூடுகளுடன் அமைந்துள்ளது. விமானத்தின் முப்புறத்துமுள்ள கோட்டங்கள் பிரதிவரிவரை நீட்டப்பட்டுள்ளன. அவற்றை அணைத்துள்ள சட்டத்தலையுடனமைந்த உருளை அரைத்தூண்கள் அனைத்து உறுப்புகளும் பெற்று வீரகண்டத்தில் முடிகின்றன. மேலே உத்திரம், வாஜனம், வலபி, கூடுகளுடனான கபோதம், சாலை சிகரம். தெற்குக் கோட்டத்தில் மட்டும் பின்னாளைய தட்சிணாமூர்த்தி சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. பிறகோட்டங்கள் வெறுமையாக உள்ளன. ஜகதியிலிருந்து பூமிதேசம் ரை கல்லாலான இவ்விமானத்தின் கிரீவமும் சிகரமும் செங்கற் கட்டுமானமாய் உள்ளன. கிரீவத்தின் நாற்றிசைக் கோட்டங்களிலும் சுதையுருவங்களாக முறையே தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, நான்முகன், உமாசகிதர் அமர்ந்துள்ளனர். இடைப்பட்ட கிரீவ சுவரில் எண்திசைக் காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். விமானத்தின் முன்னுள்ள முகமண்டபம், விமானக் கட்டமைப்பிலேயே அமைந்துள்ளது. அதன் முன் ஒரு சிறிய மண்டபமும் பாதபந்தத் தாங்குதளத்துடனமைந்த பெருமண்ட பமும் ஏறத்தாழ ஒரே கட்டமைப்பில் உள்ளன. முகமண்டபக் கோட்டங்களில் சிற்பங்களில்லை. பெருமண்டபத்தின் வடபுறத்தே நீளும் அம்மன் திருமுன்னில் இறைவி அபிவிருத்தி நாயகியாய், முன்கைகளில் அபயம், வரதம் காட்டிப் பின்கைகளில் மலர்களேந்தி நின்றகோலத்தில் அருள்செய்கிறார். தலையில் சடைமகுடம். இடையில் கணுக்கால்கள்வரை தவழும் பட்டாடை. கச்சற்ற மார்பகங்களை கழுத்தணிகள் தொடமுயற்சிக்கின்றன. தோள்களில் ஸ்கந்தமாலை புரளத் தோள், கை வளைகள் கைகளை அலங்கரிக்கின்றன. செவிகளில் கடிப்பு வகைத் தோடுகள். கருவறையில் இறைவன் அட்சயபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் சிறிய இலிங்கபாண வடிவினராய்க் காட்சியளிக்கிறார். முழுக்காட்டு நீர் வெளியேறும் பிரநாளம் புறத்தேயுள்ள உருள்குமுதத்தின் மேல் அமைந்துள்ளது. திருச்சுற்றின் தென்மேற்கில் விநாயகர் திருமுன்னும் வடமேற்கில் முருகன் திருமுன்னும் உள்ளன. வடகிழக்கில் பைரவரும் சூரியனும் மேற்குப் பார்வையிலிருக்க, சனீசுவரன் தெற்குப் பார்வையாக உள்ளார். சண்டேசுவரர் தமக்குரிய இடத்தில் சிறியதொரு திருமுன்னில் காட்சிதருகிறார். பெருமண்டபத்தின் கிழக்குக் கோட்டத்தில் உள்ள சிறிய அளவிலான பெண்தெய்வம் 'கஜலட்சுமி' என வணங்கப்படுகிறது. இத்திருக்கோயில் அறங்காவலர் திரு. பெரியதம்பி வேண்டுகோளை ஏற்று இங்கு ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையக் கல்வெட்டாய்வாளர்கள் விமானத் தாங்குதளத் தெற்குப் பகுதியிலிருந்து முழுநீளக் கல்வெட்டொன்றையும் பெருமண்டபத்தின் கிழக்குச் சுவரில் இருந்து இரண்டு துண்டுக் கல்வெட்டுகளையும் படியெடுத்தனர். விமானக் கல்வெட்டுக் கி. பி. 1335லிருந்து 1362வரை அரசாண்ட பிற்பாண்டியர் குலத் தோன்றலான முதலாம் மாறவர்மர் பராக்கிரம பாண்டியரின் ஐந்தாம் ஆட்சியாண்டின்போது (1339), பிரமாதி ஆண்டு, ஆனித்திங்கள் இருபத்தைந்தாம் நாள் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் விளங்குளம் வடவெள்ளாற்று நாட்டைச் சேர்ந்த ஊராகக் குறிக்கப்படுகிறது. இறைவன் திருவிளாமுடைய தம்பிரானென்று அழைக்கப்பட்டுள்ளார். மன்னர் பராக்கிரம பாண்டியர் பெயரால் பராக்கிரம பாண்டிய சந்தியெனும் சிறப்பு வழிபாட்டை (மகா பூஜை) இக்கோயில் இறைவன் திருமுன் நிகழ்த்துவதற்கும் கோயில் திருப்பணிக்குமாக விளங்குடிப் பரவுப் புதுவயல் குடிக்காட்டைப் பராக்கிரம பாண்டியர் இக்கோயிலுக்குத் தேவதானமாக அளித்திருந்தார். மன்னரின் ஐந்தாம் ஆட்சியாண்டான கி. பி. 1339ல் இருந்து இத்தேவதான நிலத்தின் மீது பெறப்பட்ட பட்டடை, தலைவரி, ஆயம் உட்பட அனைத்து வரிகளும் விலக்கப்பட்டு, புதுவயல் குடிக்காட்டை கோயிலார் இறையிலித் தேவதானமாக, திருநாமத்துக்காணிகாகக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையில் முனைக்கூற்றம் வனத்தூருடையான் சீரங்கநாதன் மகன் திருவிணாரும் நெல்வேலி சீரங்கநாதன் மகன் பிறக்க ஒண்ணாதானும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அவறத்துக்குத் தீங்கு நினைப்பவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவையும் பிராமணனையும் தாய் தந்தையையும் கொன்ற பாவத்தைப் பெறுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக் குறிக்கும் முதலாம் மாறவர்மர் பராக்கிரம பாண்டியர் கி. பி. 1335 மார்ச்சு மாதம் முப்பதாம் தேதியிலிருந்து ஆகஸ்டு மாதம் 12ம் தேதிக்குள் முடிசூடினாரென்று என். சேதுராமன் குறிப்பிட்டுள்ளார். (பாண்டியர் வரலாறு, ப. 217) இப்போது கிடைத்துள்ள விளங்குளம் கல்வெட்டு, பிரமாதி ஆண்டு (1339) ஆனித்திங்களில் மன்னரின் ஐந்தாம் ஆட்சியாண்டு நடப்பிலிருந்ததாகத் தெரிவிப்பதால் மன்னர் 1335 ஆணித்திங்கள் இருபத்தைந்தாம் தேதிக்கு முன்னரே அதாவது 1335 ஜூலை மாத முதல் வாரத்திற்கு முன்னரே முடிசூட்டிக் கொண்டதை உறுதிப்படுத்தலாம். இம்மன்னரின் கல்வெட்டுகளாகச் சேதுராமன் இருபத்தைந்து கல்வெட்டுகளை அடையாளம் கண்டுள்ளார். அவற்றுள் எதுவும் பராக்கிரமரின் மெய்க்கீர்த்தியைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விளங்குளத்தில் புதிதாகக் கிடைத்திருக்கும் இம்மன்னரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு 'ஊழி ஊழி வாழ்க', எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியோடு கிடைத்துள்ளமை சிறப்புக்குரியதாகும். ஆடுதுறையில் கிடைத்துள்ள கல்வெட்டு (1913:24) இம்மன்னரின் பிறந்த நட்சத்திரமாகப் பூராடத்தைக் குறிக்கிறது. சோழ மண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய இருபகுதிகளிலும் கிடைக்கும் இவரது கல்வெட்டுகளுள் சில, இவரை, 'முடிமன்னர் நாயகன்' என்று குறிக்கின்றன (1936: 94, 102). இவருக்கு ஒரு மகள் இருந்ததையும் அப்பெருமாட்டி குளித்தலை நீலமேகப்பெருமாள் கோயில் விமானத்தைக் கற்றள்ியாக்கியதையும் (1944 : 199) மற்றொரு கல்வெட்டால் அறியமுடிகிறது. தமிழகத்தின் பெரும்பகுதியைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்த முதலாம் மாறவர்மர் பராக்கிரம பாண்டியரின் கல்வெட்டுக் கிடைத்திருப்பது விளங்குளம் அட்சயபுரீசுவரர் திருக்கோயிலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது. பெருமண்டபத்தின் கிழக்குச் சுவரில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகள் மன்னர் ஒருவரின் ஆணைப்படிக் கோயிலுக்கு இறையிலித் தேவதானமாகத் தரப்பட்ட நிலக்கொடையைச் சுட்டுகின்றன. அந்தராயம், பாட்டம் முதலிய வரியினங்கள் குறிப்பிடப்பெற்றிருக்கும் இவ்ஆவணத்தை திருமந்திர ஓலை நெறியுடை மூவேந்தவேளான் எழுதியிருக்கிறார். 1 ஸ்வஸ்திஸ்ரீ ஊழி ஊழி வாழ்க என்றும் பங்கய முன்வர மங்கலங் கூறத் திருமகள் கலந்து மருவிவர . . . . வயப் போர்வல்லி செய 2 ப்புயத்திருப்ப அறநெறி தழைக்க மறைஒலி வளாக காயத்திர் ஒதுங்க கதிர்முடி கவித்து மாற்றவர் ஓதுவிக்க நாற்றிசை நடத்தித் தனி நின் 3 று வென்றான் செக வீரராமன் ஸ்ரீகோமாறுபன்மரான திறிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீபாண்டிய பெருமாள் பராக்கிறம பாண்டிய தேவற்கு 4 யாண்டு அஞ்சாவது பிறமாதிச வருஷம் ஆனி மாதம் 25 உ வடவெள்ளாற்று நாட்டு விளங்குளம் உடைய உடையார் திருவிளாமுடைய தம்பிரானாருக்கு மகா 5 பூசை நடப்பதாக தம் பேரால் கண்ட பராக்கிரம பாண்டியன் சந்திக்கும் திருப்பணிக்கும் குடுத்த நிலம் உதக பூறுவமாக விட்ட தேவதானம் ஆன இன்னா 6 ட்டு இவ்வூற் புரவு புதுவயல் குடிக்காடு அஞ்சாவது முதலுக்கு இந்த ஊ 7 ர் நான்கு எல்லைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை பட்டடை தலைவரியும் ஆயம் 8 உட்பட இறைகளும் கழித்து தேவதானம் ஆக சந்திராதித்தவற் செல்லத் திருநாம 9 த்துக்காணி ஆகக் கைகொண்டு கொள்ளவும் இதுக்கு அகுதம் நினைத்தவர்கள் கெங் 10 கை கரையில் காராம் பசுவையும் பிராமணனையும் மாதா பிதாவையும் கொன்ற பாவத்தே போகக் கடவராகவும் இப்ப 11 டிக்கு இந்தப் பட்டை 12 யப்படி ருமி முனைக் கூற் 13 றம் வனத்தூருடையான் 14 சீரங்கநாதர் மகன் திருவி 15 ணார் எழுத்து இப்படிக்கு 16 நெல்வேலி சீரங்கநாதர் மகன் 17 பிரக்க ஒண்ணாதான் எழுத்து உ 1 வேணுமென்று வீரசிங்க 2 நம் இட்டுக் கொள்வார்களாக வரிக்கூ 3 பசான முதல் அந்தராயம் பாட்டம் 4 உள்பட இத்தேவர்கு தேவதானம் 1 -- -- 2 சொன்னோம் இந்நிலம் இருபத் 3 வது பசான முதல் அந்தராயம் 4 எழுதினான் திருமந்திர ஓலை நெறி this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |