http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 66

இதழ் 66
[ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

செம்மொழி மாநாடு சிறப்புற...
மரபு வரிசையில் நாயக்க அரசர்களின் உருவச் சிற்பங்கள்
வாசிப்பில் வந்த வரலாறு - 1
சோழர் கால ஆடலாசான்கள்
விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்
அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!
இரண்டு சந்தோஷங்கள்
மீன்கொத்தியும் பரணரும் (தமிழரின் அறுவை சிகிச்சைப் பதிவு)
இதழ் எண். 66 > கலையும் ஆய்வும்
சோழர் கால ஆடலாசான்கள்
Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini

சோழர் காலத்தில் ஆடற்கலை நூல்களும் பயிலிடங்களும் இருந்தாற் போல் ஆடல் கற்பிக்க நட்டுவ ஆசான்களும் தலைக்கோல் மகளிரும் கூத்தர்களும் இருந்தனர். ஆடுவாருக்குப் பாடல்களும் இசையும் கற்றுத்தரப் பாணர்களும் பிடாரர்களும் உதவினர். கருவிக்கலைஞர்களிடம் இசைக்கருவிகளை இயக்கும் முறைகளை இவர்கள் கற்றுத்தேர்ந்தனர்.

இயல், இசை, நாடக முறைமை தெரிந்த அறிஞர்கள் நட்டுவர் என்றும் நடையறி புலவர் என்றும் அழைக்கப்பட்டனர்.1 ஆடற்கலை வளர்த்த அப்பெருமக்களைப் பற்றிப் பல கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக் கல்வெட்டு குறிப்பிடத்தக்கது. சோழ மண்டலத்தின் பல்வேறு தளிச்சேரிகளிலிருந்து இக்கோயில் தளிச்சேரிக்கு வரவழைக்கப்பட்ட நானூறு ஆடற் பெண்களுக்கும் நட்டுவம் செய்வதற்காக ஏழு ஆடலாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.2

அவர்களுள் நால்வர் கலை விற்பன்னர்கள் என்பதால் நிருத்தப் பேரையன், நிருத்த மாராயன் என்னும் சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். அந்நால்வருள் அபிமானதொங்கன், மணஞ்சேரியான வகையிலி, சுந்தரசோழன் என்னும் மூவரும் தம் பெயருக்கு முன்னால் அரையன் என்னும் மற்றொரு சிறப்புப் பெயரையும் கொண்டிருந்தனர். குமரன் வடவாயிலுக்கு அச்சிறப்பு இல்லை. வடவாயிலும் சுந்தர சோழனும் முதல் இராஜராஜரின் விருதுப்பெயர்களுள் ஒன்றான மும்முடிசோழன் என்பதை, நிருத்தப் பேரையன் என்னும் பட்டத்திற்கு முன்பாக இணைத்து வைத்திருந்தனர். அபிமானதொங்கன், முதல் இராஜராஜருக்குப் பெற்றோர் இட்ட பெயரான அருமொழி எனும் பெயரைத் தம் பட்டத்திற்கு முன் இணைத்து அருமொழி நிருத்தப் பேரையனாக விளங்கினார்.

ஏனைய மூவருள் விக்கிபட்டாலகன் எந்தச் சிறப்புப் பெயரும் இல்லாதிருந்த நிலையிலும் நிருத்தப் பேரையர் களுக்கும் நிருத்த மாராயர்களுக்கும் தரப்பட்ட அந்த உயர் ஊதியத்தைப் பெறுமளவு கலைத்திறன் கொண்டிருந்தார். இரண்டு வேலி நில வருவாயாக அமைந்த நெல் இருநூறு கலம் இவ்வாடல் ஆசிரியர்களுக்கு வாழ்வூதியமாகத் தரப்பட்டது. எழுவருள் எஞ்சிய இருவரான மல்லன் இரட்டையனும் சித்திரன் கேசுவனும் இந்த ஐந்து ஆடலாசான்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தவர்களாகலாம். இவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாடலாசான்களின் ஊதியத்தில் பாதியளவான நூறு கலம் நெல்லைப் பெற்றனர்.

இராஜராஜீசுவரம் போன்றே பல நட்டுவர்கள் இருந்த மற்றோர் இடமாக நங்கவரம் மறவனீசுவரர் கோயில் விளங்கியது. அங்கிருந்த நட்டுவர்களுள் ஒருவரான மாராயன் அய்யாறன் இராஜேந்திர சோழ நாடகமாராயனுக்கும் அவர் வழியினருக்கும் அரச ஆணையின் பேரில் சபையாரால் காணியுரிமைகள் மாற்றித் தரப்பட்டன. அவை ஏற்கனவே கோயிலாரால் பெருந்துறை எட்டி உள்ளிட்டாருக்கு உவச்சக்காணியாகவும் நியமதனன் எறியார் உள்ளிட்டாருக்குக் காளப் பங்காகவும் தரப்பட்டிருந்தவை. முதல் இராஜேந்திரரின் இருபதாம் ஆட்சியாண்டில் இவ்வுரிமை மாற்றம் நிகழ்த்தப்பட்டது.3

இதுபோன்ற உரிமை மாற்றங்கள் அரச ஆணைகளின் வழி நிகழ்த்தப்பட்டதற்குக் கண்டியூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு மற்றொரு சான்றாய்த் திகழ்கிறது.4 முதல் இராஜேந்திரரின் முப்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டால், கிழார்க் கூற்றத்தைச் சேர்ந்த ஆயிரத்தளி எனும் ஊர்ிலிருந்த பராந்தகதேவி ஈசுவரம் பற்றி அறியமுடிகிறது. இன்று சுவடழிந்து போய்விட்ட இக்கோயிலின் நட்டுவக்காணி, மெய்மட்டுக்காணி, மெராவியக்காணி இவை நட்டுவன் நித்தவிடங்கன் மல்லையனுக்கு உரியனவாக இருந்தன.

அவருடைய மறைவின் காரணமாக அவ்வுரிமைகளை அவரது மைத்துனரும் அரசரின் பாடகர்களுள் ஒருவருமான அரையன் இராஜராஜனான முடிகொண்டசோழ வாச்சிய மாராயனுக்கும் அவர் வழியினருக்கும் மாற்றித் தருமாறு அரசஆணை அனுப்பப்பட்டது. அவ்வாணையைப் பெற்ற கோயிலாரும் சபையாரும் இணைந்து கோயிலின் நட்டுவக் காணி, மெய்மட்டுக்காணி, மெராவியக்காணி ஆகிய மூன்று காணியுரிமைகளையும் அரையன் இராஜராஜனுக்கு மாற்றித் தந்தனர்.

இக்கல்வெட்டு வழி நட்டுவர்கள் கருவிக் கலைஞர்களாகவும் திகழ்ந்தமையை அறியமுடிகிறது. கல்வெட்டுக் குறிப்பிடும் மெராவியம் அந்நாளில் இருந்து பின்னால் வழக்கிழந்துபோன இசைக்கருவிகளுள் ஒன்றாகும். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக் கல்வெட்டும் திருவையாறு ஐயாறப்பர் கோயில் வளாகத்திலுள்ள வடகைலாயத்துக் கல்வெட்டொன்றும்5 மெராவியம் பற்றிக் கூறுகின்றன. அக்கருவியை வாசித்தவர்களுக்கு அதிக அளவில் ஊதியம் அளிக்கப்பட்டிருந்தமை நோக்க, அது அரிய இசைக்கருவிகளுள் ஒன்றாய் அக்காலத்துப் போற்றப்பட்டமை எளிதாய் விளங்கும்.

அரச ஆணை வழியமைந்த பணியமர்த்தல்களுக்கும் மாற்றங்களுக்கும் திருக்கடையூர், திருவிடைமருதூர்க் கல்வெட்டுகளும் சான்றுகளாய் அமைந்துள்ளன. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் நட்டுவம் பயிற்றுவிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த நட்டவநிலைக்கு (ஆசிரியப் பொறுப்பு), பாரசிவன் பொன்னனான கலாவினோத நிருத்தப் பேரையனை பணியமர்த்துமாறு உத்தரவிட்டதுடன் அந்நட்டவநிலைக்கு அங்கீகாரம் தந்தும் அரச ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டது. அதற்கான பரிந்துரையை அரசரது பிரியத்திற்குகந்த கவிஞர் வீராந்தகப் பல்லவரையன் மேற்கொண்டதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.6

திருவிடைமருதூர்க் கோயில் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியத் தேவகன்மிக்கும் மாகேசுவர கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வானுக்கும் வந்த அரசாணை ஒன்று அக்கோயிலில் இருந்த இருவகை நட்டுவமுறைகளை வெளிப்படுத்துகிறது.7 அவை அகமார்க்க நட்டுவம் என்றும் அவிநய நட்டுவமென்றும் அறியப்பட்டன. ஏற்கனவே இருந்த நட்டுவர்களுடன் ஆடவல்லானான குலோத்துங்க சோழ நிருத்தப் பேரையனைப் புதிதாக இணைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட அவ்வாணை, அவரை அவிநய நட்டுவராகக் காட்டுகிறது. அகமார்க்க நட்டுவருக்குத் தரப்பட்ட முறைகளிலேயே அவிநய நட்டுவருக்கும் நிலம் நட்டுவக்காணியாகத் தரப்பட்டது.

அகமார்க்கம் என்பது சாந்திக் கூத்தின் ஒரு பிரிவான மெய்க்கூத்தாகும். இது தேசி, வடுகு, சிங்களமென மூவகைப்படும். 'இவை மெய்த்தொழில் கூத்தாகலின் மெய்க்கூத்தாயின. இவை அகச்சுவை பற்றி எடுத்தலின் அகமார்க்கமென நிகழ்த்தப்படும்' என்பார் அடியார்க்கு நல்லார்.8 அகமார்க்க மெய்க்கூத்தில் வல்லவராயிருந்தவர்கள் அகமார்க்க நட்டுவர்களாகச் சிறப்பித்துக் கூறப்பட்டனர். அவர்கள் தாங்கள் பொறுப்பேற்றிருந்த கோயில்களில் அகமார்க்கமான மெய்க்கூத்தை ஆங்கிருந்த தளியிலார்க்கும் பதியிலார்க்கும் தேவரடியார்க்கும் தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் கற்றுத் தந்தனர்.

தற்போது கிடைக்கும் சோழர் காலத்திருந்த கலைநூல்களுள் பஞ்சமரபு ஒன்றே மெய்க்கூத்தின் மூவகைகளான தேசி, வடுகு, சிங்களம் ஆகியன பற்றிக் குறிப்பிடுவதுடன் அவற்றுக்கான கால் தொழில்களையும் முறைப்படுத்திப் பேசுகிறது. அகமார்க்க நட்டுவர்கள் பஞ்சமரபைப் பின்பற்றி இம்மூவகைக் கூத்துகளையும் கற்றுத் தந்தனரெனக் கொள்ளுதல் தவறாகாது. அகமார்க்கம் திருவொற்றியூரிலும் பின்பற்றப்பட்டது. தேவரடியார்கள் அகமார்க்கம் நிகழ்த்தியதை இங்குள்ள ஆதிபுரீசுவரர் கோயில் கல்வெட்டொன்று எடுத்துரைக்கிறது.9

அவிநய நட்டுவமென்று திருவிடைமருதூர்க் கல்வெட்டுக் குறிப்பது சாந்திக் கூத்தின் ஒரு பிரிவான அவிநயக்கூத்தாகும். நட்டுவம் பற்றிப் பேசும் சோழர் காலக் கல்வெட்டுகள், அதை அகமார்க்கமாகவோ அவிநயமாகவோ வகைப்படுத்திக் காட்டாமையின், அவ்விருவகை நட்டுவ முறைகளுமே அந்நாளில் நட்டுவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாகக் கருதலாம். திருவிடைமருதூரில் அகமார்க்கத்திற்கு முதன்மை தரப்பட்டு நட்டுவ நிலைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக அவிநய நட்டுவம் இணைக்கப்பட்டதால் கல்வெட்டில் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.

கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருகத்துத் தென்வாயில் ஸ்ரீகோயிலில் குணசீலன் சந்திரசேகரனான மூவேந்த சிகாமணி நிருத்த விழுப்பரையன் நட்டுவப் பணியாற்றிவந்தார். அவருக்குக் கோயிலாரால் நட்டுவக்காணியாக நிலம் வழங்கப்பட்டிருந்தது. அக்கோயிலில் மற்றொரு நட்டுவராக இருந்த சந்தன குணசீலன் அவர் தம்பியாவார். சந்தன குணசீலனின் மறைவால் அவர் அனுபவித்து வந்த நட்டுவக்காணியை அவருடைய மக்களுக்கு உரிமையாக்குமாறு கோயிலாருக்கு அரசர் பிறப்பித்த உத்தரவை இரண்டாம் இராஜேந்திரரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.10

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயிலில் இருபத்திரண்டு தளியிலாருக்கு ஆடல் கற்றுத் தருவதற்காக நட்டுவர் ஒருவரைப் பண்ியமர்த்தியிருந்தனர். சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலத்திலிருந்த அறுபது வேலி தரிசு நிலத்தை விளை நிலமாகத் திருத்தி வீரராஜேந்திர விளாகமென்று பெயரிட்டு அதன் விளைச்சலில் இருந்து அவருக்கு ஊதியம் தரப்பட்டது.11

திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் கோயிலில் மோடன் ஆதிச்சன் என்பவர் நட்டுவராகப் பணியாற்றினார். சிவபுரி சுயம்பிரகாதேசுவரர் கோயில், பேரூர் கோஷ்தீசுவரர் கோயில் ஆகியவற்றிலும் நட்டுவர்கள் இருந்தனர். சிவபுரி நட்டுவருக்கு நட்டுவக் காணியாக நிலம் தரப்பட்டிருந்தது. பேரூர் நட்டுவர் நாளும் தூணிப் பதக்கு நெல் பெற்றார். வீரராஜேந்திர சோழர் காலத்தில் கூத்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழன் இருங்கோளன், கீரனூர் வாகீசுவரர் கோயில் நட்டுவராகப் பணியாற்றிய இடணைமாராயனுக்கு நட்டுவப்புறமாக நிலம் வழங்கினார். அதே கோயிலில் குலோத்துங்க சோழர் காலத்தில் நிருத்தப் பேரையன் எனும் நட்டுவருக்கு நிலம் வழங்கப்பட்டது.12

கொக்கராயன்பேட்டை பிரம்மபுரீசுவரர் கோயிலில் பணியமர்த்தப்பட்டிருந்த நட்டுவரின் ஊதியத்திற்கும் கோயில் திருப்பணிக்குமாக இரண்டு ஊர்கள் கொடையளிக்கப்பட்டிருந்தன. பந்தநல்லூர் பசுபதிஈசுவரர் கோயிலில் முதல் இராஜராஜர் காலத்தில் விக்கிரமாதித்தன் ஆச்சனான இராஜராஜ நாடகப் பேரையன் நட்டுவப் பணியில் இருந்தார். அதே கோயிலில் விக்கிரம சோழர் காலத்தில் அரையன் உய்யநின்றாடுவானான இராஜாஸ்ரய நிருத்தப் பேரையன் நட்டுவ ஆசானாக விளங்கினார். அவர் விக்கிரமாதித்தனின் மருமகனாவார்.13

திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் கோயிலில் நட்டுவன் சந்திரன் கூத்தனும் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் நட்டுவன் மல்லன் அரியப்பனும் பணியாற்றினர். ஐயாறப்பர் கோயில் வளாகத்திலுள்ள வடகைலாயம் கோயிலில் தெற்றிக் கணவதியும் அரையன் அருமொழியும் நட்டுவர்களாய் இருந்தனர். அவர்களோடு கரணன் அரையன் என்பாரும் பணியாற்றினார். கரணன் என்ற இந்தச் சொல்லாட்சி சாந்திக் கூத்தின் ஒரு பிரிவான சொக்கம் எனப்படும் நூற்றியெட்டு ஆடற்கரணங்களைச் சொல்லித் தந்தவரைக் குறிப்பதாகலாம்.14

திருச்சோற்றுத்துறையில் சோழர் காலத்தில் பல நட்டுவர்கள் இருந்தனர். அவர்களுள் உதயநாயகன் ஒருவர். மற்றொரு நட்டுவரான குலோத்துங்க சோழ நிருத்தப் பேரையன் உதயநாயகனின் நட்டுவக்காணி உரிமையை வாங்கித் தம் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தார். இதனால், அப்பெண்ணின் கணவர் அக்காணி பெற்று அதன் உதவியால் கோயிலில் பணியாற்றவும் காணியின் பலன்களை அனுபவிக்கவும் முடிந்தது.15 நட்டுவப்பணிக்குரிய உரிமைகள் விற்கப்பட்டமையையும் அவற்றைப் பெற்றவர்கள் கோயில்களில் பணியாற்ற முடிந்தமையையும் இதனால் அறியலாம்.

இக்கல்வெட்டுகளால் தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் சோழர் காலத்தில் நட்டுவர்கள் இருந்தமை, அவர்கள் அவிநயம், அகமார்க்கம் உள்ளிட்ட பல்வேறு ஆடல் வகைகளைக் கற்றுத் தந்தமை இவற்றை அறியமுடிகிறது. ஆடல் கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும் மரபு வழிக் கலைப்பணியாகத் தொடர்ந்ததையும் இக்கல்வெட்டுகள் வழி உணரமுடிகிறது.

ஆடலில் தலைசிறந்து விளங்கிய பெண்களுக்கே அக்காலத்தில் தலைக்கோலிப் பட்டம் வழங்கப்பட்டது. சங்கம் மருவிய காலத்தில் இருந்து இப்பழக்கம் வழங்கி வருவதைச் சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதை தெரிவிக்கிறது. சோழர் காலத்தில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தலைக்கோலியர் பலராய் இருந்து பணியாற்றியுள்ளனர். 'அரங்கியல் மகளிர்க்கு ஆடல் வகுக்கும் தலைக்கோல் பெண்டிர்' என்னும் பெருங்கதைப் பாடலடியால் தலைக்கோலியர் ஆடல் ஆசான்களாய்த் திகழ்ந்தமையை அறியமுடிகிறது. உடையார்குடி அனந்தீசுவரர் கோயிலில் உள்ள உத்தமசோழரின் பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, நக்கன் பிரதமாதேவியாகிய மும்முடிசோழத் தலைக்கோலியை ஆரூர்த் தேவனார் மகளாக அறிமுகப்படுத்துகிறது.16 அனந்தீசுவரர் கோயிலுக்குக் கொடையளித்துள்ள இப்பெருமாட்டி திருவாரூர்த் தியாகராஜர் கோயிலில் ஆடலாசானாகப் பணியாற்றியவர்.

திருவாரூர்த் தியாகராஜர் கோயிலில் உள்ள மூன்று சோழர் காலக் கல்வெட்டுகள் அத்திருக்கோயிலில் பணியாற்றிய மூன்று தலைக்கோலியர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.17 அக்கோயிலில் இன்றளவும் காணப்படும் தேவாசிரியன் மண்டபம் இலக்கியப் புகழும் கல்வெட்டுப் பெருமையும் கொண்டதாகும். அம்மண்டபத்தில் இறைத் திருமேனியை எழுந்தருளச் செய்து இறைத்திருமுன் ஆடல்கள் நிகழ்த்துவது ஆரூர்க் கோயிலில் மரபாக இருந்துவந்தமை இக்கல்வெட்டுகளால் உணரக் கிடக்கிறது.

வீதிவிடங்க தேவர் கோயில் திருக்காவணமான தேவாசிரியன் மண்டபத்தில் இறைத்திருமேனி எழுந்தருளிவிக்கப்பட்டபோது பூங்கோயில் நாயகத் தலைக்கோலியும் புக்கதுறை வல்லவத் தலைக்கோலியும் ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆரூர்க் கோயில் பதியிலார்களாக அறியப்படும் இவர்கள் அக்கோயிலில் இருந்த தேவரடியார்களுக்கு ஆடல் கற்றுத் தந்ததாகக் கொள்ளலாம். ஆரூர்ப் பதியிலாருள் உமையாள்வியான அழகிலும் அழகிய தேவத் தலைக்கோலி சன்னதித் திருவீதி வடசிறகில் வாழ்ந்தார்.

திருவிடைமருதூர்த் திருக்கோயிலிலும் தலைக்கோலியர் பலராக இருந்து ஆடற்கல்வி புகட்டினர். உத்தம சோழருடையதாகக் கருதத்தக்க பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் தளித்தேவனார் மகள் நக்கன் ஆச்சி நங்கையான இரண்டாயிரத் தலைக்கோலியையும் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிவர்மரான ஆதித்த கரிகாலரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் இளங்கிலிசானை தலைக்கோலியையும் மதுரைகொண்ட கோப்பரகேசரியான முதல் பராந்தகரின் கல்வெட்டால் தளித்தேவனார் மகளார் தலைக்கோலியையும் மற்றொரு கல்வெட்டால் திருவிடைமருதில் தலைக்கோலியையும் அறியமுடிகிறது.18 தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிகளுக்கு அதிக அளவிலான ஆடற்பெண்களை அனுப்பிய ஊர்களுள் திருவிடைமருதூரும் ஒன்று என்பது இங்கு நினைக்கத்தகுந்தது.

திருவையாறு ஐயாறப்பர் கோயில் வளாகத்தில் உள்ள வடகைலாயத்தில் தலைக்கோலியர் பலராய்ப் பணியாற்றினர். நக்கன் அரங்கமான ஜெயங்கொண்ட சோழத் தலைக்கோலி, நக்கன் பூமியான பரமாக்கவிடங்கத் தலைக்கோலி, நக்கன் சோழ விச்சாதிரியான ஒலோகமாதேவித் தலைக்கோலி, நக்கன் பவழக் குன்றான மதுராந்தகத் தலைக்கோலி, நக்கன் திரிபுவன மாதேவியான நிகரிலி சோழத் தலைக்கோலி, நக்கன் அல்லியான இராஜசூளாமணித் தலைக்கோலி, நக்கன் ஐயாறான கலியுக சுந்தரத் தலைக்கோலி ஆகியோர் அவர்களுள் சிலராவர். இத்தலைக்கோலியருடன் தெற்றிக் கணவதியும் அரையன் அருமொழியும் நட்டுவர்களாக அமைந்து வடகைலாயத்து ஆடற்பெண்கள் கலை பயில உதவினர்.19

தில்லைத்தானம் நெய்யாடியப்பர் கோயிலில் முதல் இராஜராஜர் காலத்தில் நக்கன் வட்டிலான நின்றவிடங்கத் தலைக்கோலி, தரகன் மண்ணையான அரங்கத் தலைக்கோலி ஆகியோர் இருந்தனர். அல்லூர் வடகுடிப் பரமேசுவரர் கோயிலில் இதே மன்னரின் காலத்தில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டு நக்கன் வெண்ணாவலான தில்லையழகத் தலைக்கோலியை வெளிப்படுத்துகிறது. இத்தலைக்கோலிப் பெருமக்கள் அவ்வக் கோயில்களில் ஆடல் நிகழ்த்தியதுடன், அங்கிருந்த தேவரடியார்களுக்கும் ஆடல் கற்றுத்தந்தனர். திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் கலைப் பணியாற்றிய பதியிலாருள் சோழத் தலைக்கோலி ஒருவர். கிரியம்பபுரம் அரிகேசநாதர் கோயிலில் நக்கன் செண்டாழ்வியான வீராபரணத் தலைக்கோலி அக்கோயில் தேவரடியாருக்கு ஆடல் பயிற்றுவித்தார்.20

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் ஆடலிலும் பாடலிலும் வல்லவராய்த் திகழ்ந்த தலைக்கோலியர் பலராய் இருந்தனர். அவர்கள் கோயில் நடைமுறைகளில் பங்கேற்றதுடன், தேவரடியாருக்கும் தளியிலாருக்கும் ஆடலமைத்துத்தரும் பணியையும் மேற்கொண்டிருந்தனர். கோயிலில் மிகச் சிறப்பாக நடத்தப்பெற்ற ஆவணித் திருநாளில் எட்டாம் நாள் இரவு திருக்கோயில் மண்டபத்தில் அத்தலைக்கோலியருள் ஒருவரான உறவாக்கின தலைக்கோலியின் அகமார்க்க ஆடல் நிகழ்வு நடைபெற்றது.21

திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலில் களஆய்வின் போது புதிதாகக் கண்டறியப்பட்ட சோழர் கல்வெட்டுகள் இரண்டால் அங்கும் பாச்சில் திருஅமலீசுவரத்திலும் பணியாற்றிய நக்கன் அழகியான சோழத் தலைக்கோலி, நக்கன் மோடியான மும்முடிசோழத் தலைக்கோலி, நக்கன் கொற்றமான வீதிவிடங்கத் தலைக்கோலி, நக்கன் குராவியான திருவரங்கத் தலைக்கோலி, நக்கன் கற்பகவல்லியான திருவையாற்றுத் தலைக்கோலி ஆகியோரை அறியமுடிந்துள்ளது. இக்கோயிலில் இரண்டாம் பாண்டியப் பேரரசின் காலத்தும் பதியிலாரும் தேவரடியாரும் இருந்து பணி செய்தமையை மற்றொரு புதிய கல்வெட்டுத் தெரிவிக்கிறது.22

கோயில் சார்ந்த நிலையிலிருந்து நட்டுவர்களும் தலைக்கோலியரும் அங்குப் பணியாற்றிய பெண்களுக்கு ஆடல் கற்பித்தமை போலவே, தனிப்பட்ட முறையிலும் சில கலைஞர்கள் ஆடற்கலையைப் போற்றி வளர்த்தனர். கூத்தர்கள் என்றழைக்கப்பட்ட அக்கலைஞர்கள் கோயில் திருவிழாக் களில் பங்கேற்று ஆடல் நிகழ்த்தினர். அவர்தம் குடும்பங்களில் ஆடல் மரபுவழிக் கலையாகப் பயிலப்பட்டது. சாந்திக் கூத்து, சாக்கைக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து, கழாய்க் கூத்து எனப் பலவகைக் கூத்து வடிவங்களை ஆண், பெண் இருபாலரும் தனியாகவும் இணைந்தும் நிகழ்ச்சிகளாக நடத்திப் பொருளீட்டி வாழ்ந்தனர். தந்தை - மகன், தாய் - மகள், மாமன்- மைத்துனன், அண்ணன் - தம்பி என்று உறவின் முறையாகக் குடும்பம் முழுவதுமே கூத்துவகைகளை முறைப்படி பயின்று ஆடியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, தை எனப் பெரும்பாலான மாதங்களில் நடந்த கோயில் பெருவிழாக்களில் இவர்தம் கூத்துகள் சிறப்பு நிகழ்ச்சிகளாய் அமைந்தன. நிகழ்ச்சிக்காக இக்கலைஞர்களுக்குச் சிறப்பூதியமும் நிலமும் வழங்கப்பட்டமையைக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. கோயில் சார்ந்த ஆடற்பெண்களும் இக்கூத்து வகைகள் சிலவற்றைப் பயின்றாடினர்.

நல்லூரைச் சேர்ந்த வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருவேகம்ப நங்கையின் மகளும் அக்கோயில் தேவரடியாருமான உடைய நாச்சி குலோத்துங்க சோழ மாணிக்கம் சாக்கைக் கூத்து நிகழ்த்தி வந்தார். அப்பெண்மணியின் மறைவிற்குப் பிறகு, அவருக்கு மாற்றாகப் பொற்கோயில் நங்கையின் மகளான பூமாழ்வியைத் திருவிழா நாட்களில் சாக்கையாடவும் இறைத் திருமுன் திருவெம்பாவை கடைக்காப்புப் பாடவும் கோயிலார் பணிக்கமர்த்தினர்.23

சில கோயில்களில் இக்கூத்தர்கள் கோயில் ஆடற்கலைஞர்கள் போலத் தொடர்ந்து புரக்கப்பட்டமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ஆத்தூர் சோமநாதீசுவரர் கோயில் கல்வெட்டொன்று அங்குள்ள நாடகக்கூடத்தில் சாந்திக் கூத்து நிகழ்த்தப்பட்டதாகவும் அதை நிகழ்த்திய சாந்திக் கூத்தருக்குக் கோயில் நிலம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஸ்ரீவல்லபப் பாண்டியரின் பதினாறாம் ஆட்சியாண்டில் அந்நிலக்காணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.24 கோயில்களால் தொடர்ந்து புரக்கப்பட்ட இக்கூத்தர்கள் அங்கிருந்த ஆடற் பெண்களுக்குத் தங்கள் கூத்துக் கலையைக் கற்றுத் தந்திருத்தல் இயல்பானதே.

1. சீவகசிந்தாமணி 3 : 672.
2. SII 2 : 66.
3. SII 8 : 644.
4. SII 5: 579.
5. இக்கல்வெட்டு களஆய்வின்போது புதிதாகக் கண்டறியப் பட்டதாகும்
6. ARE 1925 : 255.
7. SII 23 : 306.
8. சிலப்பதிகாரம் ப. 80.
9. ARE 1912 : 128, 211.
10. ARE 1924 : 361.
11. ARE 1912 : 128 and Part II Para 32.
12. SII 19 : 173; ARE 1928-29 : 25;SII 5 :241, 278, 282.
13. ARE 1913 : 467; 1930-31: 71 and Part II Para 14.
14. SII 5 : 518;
15. ARE 1930 -31: 206.
16. SII 19 : 283.
17. SII 17 : 593, 600, 606.
18. SII 19 : 92; 23 : 249, 223; 19 : 181
19. SII 5 : 520;
20. SII 5 : 603; 8 : 678; ARE 1921 : 383; 1916 : 468.
21. ARE 1912 : 21.
22. இக்கல்வெட்டு களஆய்வின்போது புதிதாகக் கண்டறியப் பட்டதாகும்.
23. ARE 1940-41 : 160.
24. ARE 1929 -30 : 439.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.