![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 7
![]() இதழ் 7 [ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
நவம்பர் இதழில் வெளியான இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் பற்றிய அறிவிப்புக்கு உற்சாகமான வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி. பொன்னியின்செல்வன் நாவலால் வரலாற்றின் பக்கம் ஈர்க்கப்பட்ட நாம், அருஞ்செயல் பல புரிந்த அருமொழியின் சாதனைகளுள் மகுடமாக விளங்கும் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் மேல் காதல் கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
இராஜராஜீஸ்வரம் என்னும் கடலில் பல வருடங்களாய் எத்தனையோ ஆய்வாளர்கள் எத்தனையோ விதமாய் முங்கி எடுத்த நன் முத்துக்கள்தான் எத்தனை எத்தனை? இத்தனை காலம் ஆராய்ச்சி செய்தவரில் எவரேனும் தமது ஆய்வில் திருப்தி அடைந்திருக்கின்றனரா என்று கேட்டால், அதற்கான பதில் இல்லை என்பதே. பல வருடங்களாய் இக்கோயிலை ஆய்வு செய்யும் முனைவர் கலைக்கோவன், "இக்கோயிலை முழுமையாய் ஆய்வு செய்ய ஓராயுள் போதாது", என்கிறார். தஞ்சையிலேயே வசிக்கும் பேறினைப் பெற்ற வரலாற்றாய்வாளர், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியமோ, "நான் ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், அதுவரைக் கண்டிராத ஏதோ ஒன்று என் கண்ணில் படுகிறது", என்கிறார். வரலாற்றாய்வில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே இந்நிலையெனில், வரலாற்றாய்வு என்னும் மாளிகையைச் சாளரத்தினூடே எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது குழு எப்படிப் பிரமிப்படைந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல. வரலாற்றாய்வு செய்யும் நோக்கோடு இக்கோயிலுக்குள் நுழைந்தால் ஒருவிதமான இன்ப அவஸ்தையை அனுபவிப்பது நிச்சயம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவைகளை எந்தவிதக் குழப்பமும் தோன்றிடா வண்ணம் தெள்ளென விளக்கும் கல்வெட்டுகளைப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றால், கேரளாந்தகன் திருவாயில் சிற்பங்களே நம் காலைக் கட்டி நகர விடாமல் செய்து விடும். சிற்பத்தைத்தான் பார்க்கலாம் என்றால், வான் முட்டும் விமானம் நம் கண்ணைப் பறிக்கும். சரி கல்வெட்டும் வேண்டாம், சிற்பமும் வேண்டாம், கட்டிடக்கலையையாவது பார்க்கலாம் என்றால், விமானத்தின் உட்புறச்சுவரில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களைக் காண நம்மை இட்டுச் செல்லக்கூடிய இரும்புப் படிகள் நம்மை அதன்பால் இழுக்கும். இத்தனை இழுப்புக்களையும் மீறி ஆளுக்கொரு பக்கமாய்ப் பிரிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் இக்கோயிலை ஆராய முயற்சித்தோம். ஒரு சிறிய குழந்தை பெருங்கடலில் நீரள்ளினால் எப்படியிருக்கும்? மிகுந்திருக்கும் நீரில் கையில் சிக்கும் நீர் சொற்பம்தான். அதில் கையைக் குவிக்கக்கூடத் தெரியாத குழந்தையின் கை வழியே சிதறும் நீர் போக எவ்வளவு நீர் மிஞ்சும்? அதைப் போலத்தான், தஞ்சைப் பெருங்கடலில் நாம் காணாமல் விட்டது ஏராளம். கண்டதில், எம் சிற்றறிவை விட்டு நீங்கியது ஏராளம். நினைவிலிருப்பதில் நாங்கள் சொல்லாமல் விட்டது அநேகம். இத்தனை சேதாரங்கள் போக மிஞ்சியதை உமக்களிக்கிறோம். எது எப்படியாகினும், எமக்கேற்பட்ட பிரமிப்பும் களிப்பும் உங்களையும் தொற்றிக் கொள்ளும் என்பதில் மாத்திரம் எள்ளளவும் ஐயமில்லை. எமது முப்பெரும் விழாவுக்கு வருகை தந்தும் வாழ்த்து தெரிவித்தும் கௌரவித்த அனைவருக்கும் எங்கள் நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர் குழு. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |