http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 75

இதழ் 75
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஏழாவது ஆண்டில்
ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்!
ஆவூர்க் குடைவரை
திரைக்கோயில் குடைவரை
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 1
இராஜராஜரின் ஆற்றல்கள்
தஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு
இராசராசனும் சோழமகாதேவியும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 3
தொறுத்த வயலும் பூத்த நெய்தலும்
இதழ் எண். 75 > கலையும் ஆய்வும்
தஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு
ஸ்தபதி வே.இராமன்


(கட்டுமானத் திறனும் - தொழில்நுட்பமும்)


பல்லவச் சிற்பிகள்

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரர் வழிகாட்டலில் செங்கல், சுண்ணம், மரம், உலோகம், சுதை போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல் புதிய அணுகுமுறையில் கல்லிலே கோயில்களை உருவாக்கினர் பல்லவச் சிற்பிகள்.

இக்கட்டுமான அமைப்பைக் குடைவரைக் கோயில்கள், ஒருகல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் என வகைப்படுத்தலாம். இத்தகைய கோயில்களை ஒன்றுபோல் ஒன்று அமையாமல் வேறுபட்டு அமைத்துத் தம் கலையுணர்வை வெளிப்படுத்தியிருக்கும் பல்லவச் சிற்பிகளின் கட்டுமானத் தொழில்நுட்பத்திறன் இன்றுவரையிலும் எல்லோராலும் வியந்து பாராட்டப்பட்டு வருகிறது.

சோழச் சிற்பிகள்

இந்தத் தொடக்க நிலையைப் பின்பற்றிப் பின்னாளில் கற்பாறைகளைச் சிறுசிறு கற்களாகத் துண்டுகளாக்கித் தாம் விரும்பிய இடத்தில் கோயில் எடுப்பித்தனர் சோழச் சிற்பிகள். சிற்பநூல் மரபுப்படிக் கற்களை முறையாகச் செதுக்கிக் கல்லின்மேல் கல்லடுக்கி இடையில் பிடிப்பிற்காகவும், உறுதிக்காகவும் எந்தப் பூச்சுமின்றி அழகாகவும், அறிவாற்றலோடும், பொறியியல் திறனோடும் கோயிலெடுத்துத் தமிழர்தம் கட்டுமானத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தியுள்ள சிற்பிகளின் முறை வியப்புக்குரியதாகும்.

விமானம்

சிற்ப ஆகம நூல்களும், கல்வெட்டுகளும் விமானம் என்பது கருவறையின் அடித்தள உறுப்பான உபானம் தொடங்கி அதன்மேல் எழும் கட்டுமானத்தின் இறுதி உறுப்பான தூபி வரையிலான பகுதியென வரையறுக்கின்றன.

ஆதார உறுப்புகள்

தமிழகக் கோயில்கள் சிற்ப ஆகம நூல் மரபுப்படியே அமைந்தன என்பதனைக் கோயிற்கட்டுமானங்கள் வெளிப்படுத்துகின்றன. விமானமானது ஆறு ஆதார உறுப்புகளைக் கொண்டமைவதாகும். அவை முறையே அதிட்டானம் (Basement), பாதம் (Piller), பிரஸ்தரம் (Roof), கண்டம் (Neck), சிகரம் (Sikhara), ஸ்தூபி (Final) என்பதாகும். இதனைப் பாதக்கட்டு, பாதச்சுவர், கூரை, கழுத்து, தலை, முடி என எளிமைப்படுத்தலாம். (1)அதிட்டானம்

தஞ்சை மாநகரில் அமைந்துள்ள இராசராசேச்சுரம் வரலாற்றுப் பழமைக்குரிய சான்றாகத் திகழ்கிறது. இக்கோயிலின் கருவறையில் கருங்கற்கட்டுமானமாக அமைந்த அதிட்டானத்தினைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகிறது. இங்கு அதிட்டானத்தின் தோற்றம், மாறுபாடு, நிலை, அமைப்பு மற்றும் அழகூட்டல்கள் வாயிலாகக் கட்டடக்கலையின் வளர்நிலைக் கட்டுமானத் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.,

கோயில் சிறிய அளவில் அதன் கட்டமைப்பு அமைந்தாலும், பெரியளவில் கட்டுமானங்கள் அமைந்தாலும் இவ்வங்கங்கள் அனைத்தும் முறையான அளவுகளைக் கொண்டே அமையப்பெறும். அளவு முறைகளுக்கேற்ப உரிய கட்டுமானத் தொழில்நுட்ப மரபினைப் பின்பற்றியிருக்கும் கட்டடக்கலை வரலாற்றைத் தமிழகக் கோயிற்கலை முறைகள் வெளிப்படுத்துகின்றன. மேற்குறிப்பிட்ட உறுப்புகளுக்கெல்லாம் அடித்தளக்கட்டுமானமாக அமையும் உறுப்பே அதிட்டானம் ஆகும். இவ்வங்கம் பாதச்சுவருக்குக் கீழே அமைவதாகும்.

அதிட்டானம் என்ற வடமொழிச் சொல்லிற்குத் தமிழில் தாங்குதளம், நிலை, அடித்தளம், அடி எனப் பொருள் கொள்ளலாம்.(2) பாதக்கட்டு எனவும் கூறுவர்.(3)

ஆலய அமைப்பில் அதிட்டானம் இல்லாமல் மேற்கட்டக் கட்டுமானங்களின் கட்டுமானங்களும், அழகூட்டல்களும் கட்டமைவதில்லை. அதிட்டானங்களின் அலங்காரமும், வடிவமும் புறத்தோற்றத்தின் பிதுக்கங்களாகவும் அடுக்குகளாகவும் அமைகின்றன. கோயிற்கட்டடத்தின் அலங்காரத் தோற்றத்திற்கும், உயரத் தோற்றத்திற்கும் அதிட்டானங்கள் சிறப்பிக்கப்படுகின்றன.

தமிழகக் கல்வெட்டுகளில் இடம்பெறும் அதிட்டானம் குறித்த சான்றுகள் கி.பி. 2,3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கப்பெறுகின்றன. சமணர்களின் பள்ளிக் கல்வெட்டுகள் அதிட்டானம் அமைக்கப்பட்டதைச் சிறப்பித்துக் கூறும்.

எருமிநாடு குமிழ் ஊர் பிறந்த
காவுடி ஈதேன்கு சிறுபோவில்
இளயர் செய்த அதிட் அனம் (4)

கருவூர் கல்வெட்டில் சமணத் துறவியர்களுக்கென்று அமைக்கப்பட்ட கற்படுக்கைகளைக் குறிப்பிடுவதாய்க் கல்மேடை, கல்தளம் என்னும் பொருளில் அதிட்டானம் என்ற சொல் இடம்பெறுகிறது. (5). அதிட்டானத்தைச் சிற்பநூல்கள் பூமி, தரணி, புவனம், வஸ்து, பிருதிவி, ஆதியங்கம் எனப் பலவகைப் பெயர்களால் குறிப்பிடுகின்றன. (6)

அதிட்டான அமைப்புகள் :

திருக்கோயில் கட்டமைப்பில் அதிட்டானங்கள் பலவிடங்களில் பலவித வடிவமைப்பு முறையில் இடம்பெறுகின்றன. கருவறை அமைப்பில் அதன் உன்னதத் தோற்றத்திற்கேற்ப எழில்கூட்டும் வகையில் அமைப்பது, எழில்மிகு மண்டபம், வாகன மண்டபம், பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றில் அதன் உயரமானத்திற்கு ஏற்ப அமைப்பதும், கோபுர அமைப்பில் அதன் உன்னதத் தோற்றத்திற்கு எழில்கூட்டும் வகையிலும் இடம்பெறுவது எனப் பலவகையாக அதன் வடிவமைப்பு முறைகள் சிற்பியின் சிந்தனைக்கேற்ப அமைகின்றன.

அதிட்டானம் பிரிவு

அதிட்டானம் இருபெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். அவை முறையே பாதபந்தம், பிரதிபந்தம் என்றும் பெயர் பெறும் (7). சிற்ப நூல்கள் பலவகையான அதிட்டானங்களைக் குறிப்பிடுகின்றன. அவையனைத்தும் மேற்சொன்ன பாதபந்தம், பிரதிபந்தம் ஆகிய இருபெரும் பிரிவுகளுக்குள் அடங்கும். அதிட்டானத்தின் பெயர், இடம்பெறும் உறுப்புகள், அளவுமுறைகள் ஆகியவற்றைச் சிற்பநூல்கள் விரிவாகத் தருகின்றன.

சிற்பநூல்களில் கூறப்படும் அதிட்டானங்களை ஆராய்ந்து பார்க்கும்போது கட்டட அமைப்பு பெரிய அளவில் இருப்பினும் அவற்றிற்கு அமையும் அதிட்டானத்தை மிகவும் எளிமையான முறையில் எழுப்பிடத் தக்கவகையில் அங்கங்களை ஒன்றோடொன்று கூட்டியும் குறைத்தும் இணைத்தும் பலவகையான அதிட்டானங்களை உருவாக்கியுள்ளதை அறியமுடிகிறது.

அதில் கூறப்படும் அதிட்டான அங்கங்களையும், அதன் வடிவ நெறிமுறைகளையும் ஆராய்ந்தால் உபானம், ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை என்ற ஆதார அங்கங்களைக் கொண்ட ஒருவகை அதிட்டானத்தையும், உபானம், மகாபத்மம், குமுதம், யாளிவரி என்ற ஆதார அங்கங்களைக் கொண்ட பிரிதொருவகைக் கலைவடிவுடைய அதிட்டானத்தையும் காணமுடிகிறது (9).

பாதபந்தம்

கோயிற்கட்டடக்கலைக் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் இடம்பெறும் பாதம் பூமியின் மட்டத்திலிருந்து எழுப்பப்படுவதாகும். அங்ஙனம் எழுந்த பாதத்தைச் சுற்றிலும் வரி வர்க்கங்கள் அலங்காரமாகக் கட்டாக அமைவதால் இவ்வகை அதிட்டானம் பாதபந்தம் எனப் பெயர் பெறுவதாகிறது.அதிட்டானப் பகுதியை வெறும் கட்டட உறுப்பாகிய சுவராக எழுப்புவது கலைச்சிறப்பல்ல. எனவே அலங்காரத்தோடும், கலைநுணுக்கமாகவும் உருவாக்குவதே தமிழகக் கோயிற் கட்டட மரபாகும். ஆதலால் வடிவமைக்கப்படும் அதிட்டான அங்கத்தின் உறுப்புகளைத் திரும்பத் திரும்பத் தேவையான வடிவங்களுக்கு ஏற்ப இடம்பெறச் செய்து பாதச்சுவரை மறைத்து அதாவது போர்த்திப் பிதுக்கத் தோற்றத்தில் அமைக்கப்படும் வடிவம் பாதபந்தம் எனப்பெயர் பெறுவதாகிறது. பாதபந்த அதிட்டானத்தில் பட்டிகை இடம்பெறுவதும், குமுதம் எண்முக வடிவமைப்பில் புறத்தோற்ற வடிவமாக இடம்பெறுவதும் தென்னகக் கோயில்களிலே மிக அதிகமாகக் காணும் கலைமுறை எனலாம் (10).

பாதபந்த அதிட்டானத்தின் அடிப்பகுதி விரிவடைந்தும், அதன்மேல் வரும் ஒவ்வொரு வடிவமாகிய அடுக்கும் படிப்படியாக உள்ளடக்கமாகவுள்ள கட்டமைப்பின் பாதச்சுவரோடு பொருந்திடக் கட்டமைப்பர். இதில் சிற்பியர்களின் கட்டுமானத்திறன் வெளிப்படுவதாகிறது.

பிரதிபந்தம்

அதிட்டானத்தின் இறுதியில் இடம்பெறும் ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம் என்ற சிற்றுறுப்புகளின் வடிவத்தால் ஒன்றுசேர்ந்த பேருறுப்பைப் பிரதி என்பர். இவ்வுறுப்புகளைக் கொண்ட (பிரதிவரி) அதிட்டானம் பிரதிபந்தம் என்று பெயர் பெறுவதாகிறது.ஒன்றன்மீது மற்றொன்றாக ஏற்றியமைக்கப்படும் அதிட்டான அடுக்குகளின் வடிவ வேறுபாடுகளைக் கொண்ட உறுப்புகளைக் கட்டமைப்பில் இணைக்கும்பொழுது அமையும் இடத்திற்கேற்ப வர்க்க அமைதி, கட்டுமான அமைவு, ஆகிய அனைத்தும் புலப்படுமாறு அமைத்தல் கோயிற்கட்டடக்கலை மரபாகும். பூக்களைத் தொகுத்தும், இணைத்தும் அழகான வடிவமைப்பில் எங்ஙனம் ஒரு மலர்மாலையை உருவாக்குகின்றார்களோ அதுபோல வரிவர்க்கங்களையும், யாளி உருவங்களையும், திருப்பங்களில் மகரத்தலையையும் ஒருவகை வடிவமைப்பு சார்ந்தோ அல்லது முன்பின் பக்கத் தோற்றப் புலப்பாட்டு உத்தியுடன் அமைத்து மலர்மாலைபோல் சுற்றிச் சுற்றி அமைத்திடுவர். அதிட்டானத்தின் இறுதியில் யாளிவரி, மகரவரி சந்திப்பு இணைப்பு முகத்தோற்றமாக இடம்பெறுவது தென்னகக் கட்டடக்கலை முறைக்கே உரிய தனிச்சிறப்புடையதாகக் கூறலாம் (11).

இதுவரை பொதுவான அதிட்டான அமைப்பு முறையைச் சிற்ப நூல்கள் வாயிலாக அறியப்பட்டது. இனி ராஜராஜன் காலக் கட்டமைப்பில் அதிட்டான வடிவமைப்பு தொழில்நுட்பத்துடன் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதனைக் காண்போம்.

ஒப்பீடு

தஞ்சாவூர் இராசராசேச்சுரம் கோயில் சிவபெருமான் வீற்றிருக்கும் கருவறை விமான அதிட்டானம் உபானவரி, ஜகதிவரி, குமுதவரி, யாளிவரி என நன்கு அடுக்குகளாகக் கட்டுமானத் திறனோடும், பொறியியல் திறனோடும் பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.இவ்வுறுப்புக்களைக் கொண்ட அதிட்டானத்தை ஸ்ரீகரம் என்பர். தமிழகத்தில் காணப்பெறும் மிகப்பெரிய அதிட்டானம் என்னும் சிறப்பினை இக்கட்டுமானம் பெறுகிறது. இக்கட்டுமானத்தில் ஜகதிவரியும், குமுத வரியும் பேருறுப்புகளாக அமைய, உபான வரியும், யாளிவரியும் அளவில் குறைவாகப் பெற்று அமைகிறது.

உபானம், பத்மம், கம்பு ஆகியன சேர்ந்த கட்டமைப்பு உபானவரி என்றும், ஜகதி, சிறுபத்மம் ஆகியன சேர்ந்த உறுப்பு ஜகதிவரி என்றும், கம்பு, சிறுபத்மம், வட்டக் குமுதம், சிறுபத்மம் ஆகியன சேர்ந்த உறுப்பு குமுதவரி என்றும், ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாசனம் ஆகியன சேர்ந்த உறுப்பு யாளிவரி என்றும் கூறுவது கட்டடக்கலை மரபாகும்.

அதிட்டானக் கட்டமைப்பானது தன்மேல் ஏற்றப்பட்டுள்ள மேற்கட்டுமான வலுவைத் தாங்கக்கூடிய வகையில் அடிப்பகுதி அகன்றும், அடுத்தடுத்த வர்க்கங்கள் உள்ளடங்கியும், வெளிவந்ததாயும் அழகுற அமைந்துள்ள வடிவமைப்பில் அதிட்டானத்தின் எழிலைக் காணமுடிகிறது. இவ்வமைப்பு அக்காலச் சிற்பிகளின் கட்டடக்கலைத் திறனை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. இவ்வாறு சிந்தனைத் திறனோடு கட்டமைக்கப்பெறும் இக்கட்டுமான முறையால் பெருங்காற்று, பேரிடி, மின்னல், பூமியதிர்வு போன்ற அழிவுசக்திகளைத் தாங்கும் நுட்பமாகக் கொள்ளப்படுகிறது. இதனைச் சிற்பிகளின் பொறியியல் திறன் எனக் கூறலாம்.

அதிட்டானத்தில் யாளிவரியானது மரக்கட்டுமானத் திறனை வெளிக்காட்டுவதாய் அமைகிறது. பண்டைக்காலத்தில் கட்டடங்களும் கோயில்களும், மண்டபங்களும் பெரும்பாலும் மரத்தாலேயே நிர்மாணிக்கப்பட்டன. மர உறுப்புகள் பலவற்றை இணைத்துப் பல கட்டடங்களை உருவாக்கினர். அக்காலகட்டத்தில் அமைந்த கட்டடங்களும், பிற கலைப் பொருட்களும் மரப்பாணியிலேயே அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. கல்லிலே உருவான பல்லவர் காலக் கோயில்களிலும், தொடக்கச் சோழர்காலக் கோயில் அமைப்புகளிலும் மரப்பாணியையே பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இராசராசர் கோயில் அமைப்பிலும் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிடலாம்.

இங்ஙனம் அமையப்பெற்ற அமைப்புகளில் தொழில்நுட்பங்களும், பிற கலையம்சங்களும் மரப்பாணியிலேயே அமைந்துள்ளதும் நினைவு கூறத்தக்கதாகும். இந்தவகை அதிட்டானத்தின் இறுதியில் நீட்சியாக அமையும் மகரத்த்அலை அமைப்பானது மரத்தினால் அமையும்போது உத்தரங்கள் எவ்வாறு குறுக்கு நெடுக்காக ஒன்றின்மேல் ஒன்று இணைகின்றதோ அதேபோன்று அமையப்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

இங்குச் சோழர்காலக் கலைமுறையில் அமைந்த இராசராசேச்சுரம் விமான அதிட்டானம் சிறந்த, தெளிவான எடுத்துக்காட்டாக அமைகிறது. இத்தொழில்முறை இன்றளவும் தொடர்ந்து தச்சர்களாலும், சிற்பிகளாலும் கையாளப்பட்டு வருகின்றதெனலாம்.

விமான அதிட்டானக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்புகள் 15 ஆகும். அவை முறையே கீழிருந்து உபானம், மகாபத்மம், கம்பு, ஜகதி, பத்மம், கம்பு, பத்மம், குமுதம், பத்மம், ஆலிங்கம், அந்தரி, பிரதி, எழுதகம், நாவடை, மேற்கம்பு என்பதாகும். 8'3" உயரமுடைய இக்கட்டுமானத்தைக் கூர்ந்து ஆராய்ந்தால் ஒவ்வொரு பேருறுப்போடும் சிற்றுருப்புக்கள் சேர்ந்து இடம்பெறுவதைக் காணமுடிகிறது. அதாவது குமுதம் என்ற பேருறுப்போடு கம்பு, கீழ்பத்மம், மேல்பத்மம் ஆகியன இடம்பெற்று அணி செய்வதாய் அமைந்துள்ளது. இவ்வமைப்பு சிற்பியர்களின் கட்டுமானத் திறனை வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு பேருறுப்பிலும் இடம்பெறும் பத்மங்கள் முனைகள் வெட்டப்பட்டு விரிந்த தாமரை இதழ்களாய் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளதில் சிற்பியரின் கலைத்திறன் கூர்ந்து நோக்கத்தக்கது.

யாளிவரியில் யாளிகள் இணையாகவும், வரிசையாகவும் அழகுபடச் செதுக்கப்பட்டுள்ளன. யாளியானது தம் முன்னங்கால்களை நெஞ்சில் வைத்தவாறு காட்சியளிக்கிறது. கூர்மையான நகங்களும், துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ள முடிகளும் நேர்த்தியாகக் காணமுடிகிறது. பிளந்தவாய், கூர்மையான பற்கள், துடிப்பான நாசி, மருண்ட விழிகள், கோடிட்ட நெளிந்த புருவம், விரைத்த நாசிகள் யாவும் யாளியின் எழிலைப் புலப்படுத்துகின்றன. யாளியின் முதுகில் அஞ்சலித்த நிலையில் கரண்டமகுடம் அணிந்த நிலையில் வீரன் பவனி வருவதாய்க் காட்டப்பட்டுள்ள சிற்பக்காட்சி நேரில் காணவேண்டிய அற்புதக் கலைப்படைப்பாகும்.திருப்பங்களிலும், முகப்பிலும் அமையும் மகரம் ஓர் அற்புதக் கலைப்படைப்பாகும். பிளந்தவாய், உயிர்த்துடிப்போடு சிம்மத்தின்மீது அமர்ந்த நிலையில் எதிரெதிரே போராடும் நிலையில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தொகுதியில் சோழர்காலச் சிற்பிகளின் சிற்பக்கலைத்திறனை அறியமுடிகிறது. தொடக்கச் சோழர்காலக் கட்டுமானத்திலும் காணப்படும் இத்தகு சிற்பத்தொகுதி சோழர் கலைமுறையிலும் பின்பற்றப்படுவது மரபுத்தொடர்ச்சி எனலாம்.

முடிவுரை

தமிழகக் கலைவரலாற்றில் பெரியளவில் கட்டமைத்த அதிட்டானம் இதுவேயாகும். சிற்பிகளது சிந்தனை, கலைத்திறன், கட்டுமானத்திறன் ஆகியனவற்றை இக்கட்டுமானம் வாயிலாக அறியமுடிகிறது. ஜகதிவரி கல் எழுத்துப் பொறிப்புகளைக்கூட வரிசையாக நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பது சிற்பியர்களின் உளியின் வலுவை இங்குத் தெளிவாகக் காணமுடிகிறது. மகரத்தலைகளும் யாளிவரிகளும், பத்ம இதழ்களின் வடிவமைப்பு யாவும் சோழர்காலச் சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்றாக அமைகிறது.

அடிக்குறிப்புகள்

1. ஸ்தபதி வே.இராமன் - கோயிலும் சிற்பமும் - பண்பாட்டு ஆய்வு மையம், கோவை.

2. இராசு பவுன் துரை - அதிட்டானம் - மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

3. ஸ்தபதி வே.இராமன் - வரலாறு இதழ் 9, ப.11

4. ஸ்தபதி வே.இராமன் - சித்தன்னவாயில் குடைவரை பிராமிக் கல்வெட்டு

5. சொ.சாந்தலிங்கம் - தமிழ்ப் பல்கலைக்கழகம், கருத்தரங்கம் - பேச்சு. நாள் : 23-2-1988.

6. மயமதம் - 14:182, தஞ்சை சரசுவதி மகால் நூலகம் வெளியீடு

7. காசியபம் - 6:72 மேலது

8. காசியபம் - மயமதம் - மேலது

9. ஸ்தபதி வே.இராமன் - தமிழ்ப் பல்கலைக்கழகம் கருத்தரங்கம் பேச்சு. நாள் - 23-2-1988

10. எடுத்துக்காட்டு -
சோழமாதேவி - கைலாயமுடையார் விமானம்
திருமங்கலம் - சாமவேதீசுவரர் விமானம்
திருஎறும்பியூர் - எறும்பீசுவரர் விமானம்
உய்யக்கொண்டான் திருமலை - உச்சிவனநாதர் விமானம்

11. எடுத்துக்காட்டு -
திருத்தவத்துறை - சப்தரிசீசுவரர் விமானம்
திருச்செந்துறை - சந்திரசேகரர் விமானம்
அவனிகந்தர்ப்ப ஈசுவரர் விமானங்கள்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.