http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 75

இதழ் 75
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஏழாவது ஆண்டில்
ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்!
ஆவூர்க் குடைவரை
திரைக்கோயில் குடைவரை
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 1
இராஜராஜரின் ஆற்றல்கள்
தஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு
இராசராசனும் சோழமகாதேவியும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 3
தொறுத்த வயலும் பூத்த நெய்தலும்
இதழ் எண். 75 > கலையும் ஆய்வும்
இராஜராஜரின் ஆற்றல்கள்
மா. இலாவண்யா
இராஜராஜன் எனும் மாபெரும் பெருமை வாய்ந்த அரசன் நம் தென்னிந்தியாவில் வாழ்ந்து ஆட்சி புரிந்ததை நினைத்து நாம் இந்நாளில் பெருமை கொள்கிறோம். மிகப் பிரம்மாண்டமான தஞ்சை இராஜராஜீஸ்வரம் கோயிலை எடுப்பித்தது, பல நாடுகளையும் கைப்பற்றி சோழதேசத்தை விரிவடையச் செய்து ஒரு மாபெரும் இராஜ்ஜியத்தை ஏற்படுத்தியது என அவரின் சாதனைகள் பல. இந்தப் பெருமைகள் அவரை வந்தடையக் காரணங்களாக அவரின் வீரம், பக்தி இவற்றை சொல்லலாம். ஆனால் இவையெல்லாவற்றையும் விட அவரின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக நான் நினைப்பது எந்த ஒரு செயலையும் நேர்த்தியாக நிறைவுடன் செய்யும் அவரின் பாங்கும், அவரின் நிர்வகிக்கும் திறமையும் தான். இதை வெறும் வீண் புகழ்ச்சிக்காக கூறவில்லை. இது அவர் எழுப்பிய தஞ்சை இராஜராஜீஸ்வரத்து கல்வெட்டுகள் காட்டும் உண்மை. உதாரணங்கள் பல; அதில் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இராஜராஜரின் "நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும் ஸ்ரிவிமாநத்தில்க்கல்லிலே வெட்டுக" என்ற கல்வெட்டினைப் பற்றி முன்பே உங்களுக்கு தெரிந்திருக்கும். (பார்க்க). இதில் கோயிலுக்காக இராஜராஜர் கொடுத்தவைகளையும், அவரின் அக்கா குந்தவையார் கொடுத்தவைகளையும், அவரது மனைவியர் மற்றும் யார் என்ன கொடுத்தாலும் அவைகளையும் கோயிலில் கல்வெட்டில் பொறிக்கவேண்டும் என்பது தான்.

இன்றைய நாளில் ஒரு நல்ல நிர்வாகத்தின் அடிப்படையாக "Information Management" இருக்கிறது. அதாவது தகவல்களை சேகரித்து, முறைப்படுத்தி அதிலிருந்து செய்திகளை அறிவது மிக முக்கியமான ஒன்று. இந்த தகவல்கள் இல்லையென்றால் நல்ல நிர்வாகம் இல்லை. இந்தக் கோணத்திலிருந்து அவரின் ஆணையைப் பற்றி சிந்தித்தால் கோயிலின் நல்ல நிர்வாகத்திற்கு தேவையான தகவலை சேகரித்து அத்தகவல்கள் காலப்போக்கில் அழியாமல் பாதுகாக்க அவர் செய்த ஒரு ஏற்பாடாகவே இருக்கிறது.

ஆனால் கோயிலுக்கு வழங்கும் கொடைகளை கல்வெட்டில் பொறிப்பது என்பது அவர் ஆட்சிக்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே இருக்கும் ஒரு வழக்கம் தான். அதில் ஒரு புதுமையும் இல்லை. புதுமை என்னவென்றால் அப்படி பொறிக்கவேண்டுமென அரச ஆணையாக ஏற்படுத்தி அச்செய்தியையும் பொறிக்கச் செய்தது தான். மேலும் இராஜராஜீஸ்வரம் கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட செய்திகளில் கணக்குகள் துல்லியம்மாகக் காட்டப்பட்டிருப்பதும் ஒரு புதுமை தான். மிகச் சிறிய கொடையாக இருந்தாலும், கொடுக்கப்பட்ட பொருளின் எடை, தரம், அளவு இவைகள் கல்வெட்டில் மிக விரிவாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பொருள்களை ஒரே சீராக அளப்பதின் பொருட்டு நிறை கற்களையும், அளவைகளையும் பயன்படுத்தினர். அந்த நிறைகல் மற்றும் அளவைகளின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இப்படிப் பொறிப்பது பின்னாளில் குழப்பம் வராமல் தடுக்குமல்லவா. உதாரணத்திற்கு பார்க்க வரலாறு டாட் காம் ஏழாவது இதழில் வெளியான "இராஜராஜீஸ்வரம் கல்வெட்டுகள்" கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இராஜராரின் தமக்கையான குந்தவையாரின் கொடைக் கல்வெட்டு. (பார்க்க)

பல நாடுகளைக் கைப்பற்றினார் ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் தான் கைப்பற்றிய நாடுகளில் உள்ள நிலத்தினை முழுவதுமாய் அளந்திருப்பதாகக் கல்வெட்டுகளின் வழி தெரிவது தான். கல்வெட்டுகளில் நில அளவுகள் பற்றிய விவரங்களில் மிகச் சிறிய நிலத்தின் அளவும் மிக விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இராஜராஜீஸ்வரத்துக் கல்வெட்டுகள் இராஜராஜரின் இரு சேனாபதிகளின் பெயர்களைத் தருகிறது. அதில் ஒருவர் ராஜராஜ மகாராஜன் என்று பெயர் கொண்ட குறவன் உலகளந்தான். உலகளந்தான் என்ற பட்டம் அந்த சேனாபதி நிலத்தை அளந்ததற்காக கொடுக்கப்பட்டிருக்கலாம்.

பல கல்வெட்டுகளில் பொலிசையூட்டாக கொடுத்த காசு என்று வரும். பொலிசையூட்டாக என்றால் வட்டிக்கு விடப்பட்ட காசு என்று பொருள். பல கோயில் கல்வெட்டுகளிலும் இப்படி பொலிசையூட்டாக கொடுக்கப்பட்ட கொடை பற்றிய செய்தி நமக்குக் கிடைக்கின்றன. பொதுவாக இப்படி கொடை கொடுக்கப்பட்ட காசுகள் கோயில் சார்பாக ஒரு தனி நபரிடத்திலோ, ஒரு கிராம சபையாருக்கோ கொடுப்பார்கள். அந்தக் காசிற்கு வட்டியாக தனி நபரோ, கிராமச்சபையாரோ படையலுக்கு வேண்டிய நெல், நெய், பால் அல்லது பூசைக்கு வேண்டிய பூ, வெற்றிலை, அகில் முதலிய பொருள்களை கோயிலுக்கு வழங்க வேண்டுமென கல்வெட்டில் இருக்கும். உதாரணத்திற்கு கீழேயுள்ள முதல் கல்வெட்டினைப் பாருங்கள். மிக அரிதாகவே வட்டியாக காசு கொடுக்கப்பட வேண்டுமென கல்வெட்டில் இருக்கிறது. வட்டியாக காசு கொடுக்கப்படவேண்டுமென்ற செய்தியைத் தரும் கல்வெட்டுகள், நான் பல South Indian Inscriptions புத்தகங்களிலும் தேடியவரை இராஜராஜீஸ்வரம் அல்லாத கோயில்களிலிருந்து இரண்டே இரண்டு கல்வெட்டுதான் கிடைத்தது. அதிலும் ஒன்று இராஜராஜர் காலத்தியது. பார்க்க கீழேயுள்ள இரண்டாம் கல்வெட்டு.

கல்வெட்டு 1 (Vol XVII Ins 445):

இடம்: தஞ்சாவூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் வேதாரண்யத்தில் இருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோயில் விமானச்சுவர்.

காலம்: மூன்றாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு (1182 A.D.)


1) ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்து[ங்கசொழதெவற்]க்கு யாண்டு நா
2) லாவது மினநாயற்று பூர்வபக்ஷத்து பஞ்சமியும் வியாழக்கிழமையும் பெற்[ற]
3) [உ]ரோசணி நாள் உம்பள நாட்டு குன்றூ[ர்]நாட்டு உடையார் திருமறைக்காடுடையார்க்கு சு
4) த்தம[ல்]லி வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து குணமலைப்பாடி உடையான் கங்கை கொ
5) ண்டான் இரா[ச]ரா[ச]தெவரான கொத்தப்பிச் சொழர் சந்திராதித்தவற்கு செல்
6) ல வைத்த திருனந்தாவிளக்கு ஒந்றுக்கு இக்கொயிற் சிவப்பிராமணக்காணி உ[டை]
7) ய கெமுதமந் உமையாழ்வான் ஆதித்ததெவனான திருமறைக்காடு பட்டனும் இ[வ]
8) ன் தம்பி கங்கைகொண்டானான அண்டமுற நிமிர்ந்தபட்டனும் [இக்]கொத்திரத்து உ
9) டையான் மருந்தா[ன நாயகர்]தெவபட்டனும் இக்கொத்திரத்து அரிகண்ட தெவன் உய்யக்கொ
10) ண்டாநான இரா[ச]ரா[ச]பட்டனும் இக்கொத்திரத்து அரிகண்டதெவன் ஆளுடையான் மானிக்க
11) கூத்தனும் இக்கொத்திரத்து அரிகண்டதெவன் ஆதித்ததெவனான எதிரிலிசொழபட்டனும்
12) இக்கொத்திரத்து வெதவனமுடையான் பிள்[ளா]நான விக்கிரம சொழபட்டனும் இக்கொ
13) த்திரத்து ஆதித்தன் அந்தியர்காலகெதியான குன்றூ[ர்]நாட்டு பட்டனும் இக்கொத்திரத்
14) து தெவன் பெருமாநான நாற்பத்தெண்ணாயிர பட்டனும் இக்கொத்திரத்து திருமறைக்காட்டு உடையா
15) ன் பெருமாநான குலொத்துங்கசொழபட்டனும் ஆத்திரையன் திருவையாறுடையான் பெ
16) ருமாநான வெத[வ]னநாயக பட்டனும் ஒமயிந்தன் முத்தான் தெவநாந ஆலால சுந்த
17) ரபட்டனும் பாரத்துவாசி பிச்சன் பெருமாநான பழியஞ்சிபட்டனும் இக்கொத்திரத்து ப
18) ஞ்சநெதிப் பிரநான ஆதித்தபட்டனும் இக்கொத்திரத்து திருச்சிற்றம்பலமுடையான் சங்
19) க[ர]நான திருமறைக்காடு பண்டிதனு[ம்] இவ்வனைவொமு முள்ளிட்டு மற்று முப்பது வட்டத்துக் கா
20) ணி உடைய சிவப்பிராமணரொம் இக்குணமலைப்பாடி உடையார் கங்கைகொண்டார் இரா[ச]
21) ரா[ச]தெவரான கொத்தப்பிச்சொழன் பக்கல் பொன்கொண்டு பொலியூட்டாக நாங்கள் கைக்கொ
22) ண்ட அன்றாடு நற்காசு ள[ருயம்] இக்காசு நூற்றைம்பது[ம்] கைக்கொண்டு முதல் நிற்க கடவதாக
23) வும் பொலிசைக்கு வெதவன நாயகநாலெ நித்தம் உழக்கு நெய்யாக வந்த நெ[ய்]யை அளந்து
24) திருவணுக்கன் திருவிளக்காக ஸந்திராதித்தவற் ஸாஸ்வதமாக எரிக்ககடவொமாக ஸம்மதித்
25) து இக்காசு நூற்றைம்பதுங் கைக்கொண்டு இவ்[வ]னைவோம் உபையத்திட்டு குடுத்தொம்
26) இவ்வனைவொம்--உ


கல்வெட்டு 2 (Vol XVII Ins 339):

இடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் திருகோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோயில் பாறைவிமானத்தின் தெற்குச்சுவர்.

காலம்: முதலாம் இராஜராஜரின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு (997-98 A.D.)


1 ஸ்வஸ்தி
2 ஸ்ரீ [11*] சாலை
3 க்கலமறுத்
4 த கொவிராஜ
5 ராஜகெசரியப
6 ந்மற்கு யாண்டு [ய]
7 ஙு ஆவது பாம்பூர் நா
8 ட்டு அதம்பாருடையா
9 ன் வெளான் காரி தென்க
10 விர நாட்டு வெள்ளான் [ப]
11 ல நாட்டார் வசம் தெவதா
12 னம் ஸ்ரீ கொகர்ணத்து மா-
13 தெவர் இறை இறுக்க கடவ க*
14 டமைக்கு நாட்டார் வசம் வெ
15 ளான் காரி பொல ஊட்டு வைத்த
16 காசு உய இ[க்*]காசு இருபதுக்கும்
17 ஆட்டை பொலி ஊட்டு காசு ஐ
18 ஞ்சுக்கும் இத்தெவரிறை யிறு[க்கக்] கட
19 வ நிலத்தால் வந்த இறையுள்ளி[ட்ட*]து
20 எப்பெர்ப்பட்டதும் நாட்டொடெ யி
21 றை எற்றி நாட்டாரெ இறை இழிச்சு இ
22 த்தெவர்[க்*]கு இறைஇலி செய்த நிலம்
23 ஸ்ரீகொகர்ணமும் பன வயலும் புதுவெ
24 ட்டியும் இம்மூன்று வயலில் நாலெல்லை
25 [க்]கு நடுவு பட்ட நிர்நிலமு மிளநிலமு
26 ம் புன்செய்யும்...மாவு மற்று மெ நொக்கி[ன]
27 மரமும் உட்ப[ட்ட*] உடும்பொடியாமை தவழ்ந்த
28 எப்பெர்பட்டிது ... [தெ]வர்க்கு இறை இழித்து இ
29 சந்திராதித்த... நிவந்தஞ் செய்தபடி முறை1

இராஜராஜீஸ்வரம் கோயில் கல்வெட்டுகளிலோ பொலிசையூட்டாக விடப்பட்ட காசிற்கு வட்டியாக ஒரு சில கல்வெட்டுகளில் காசும் (அதை காசுவட்டிக் கல்வெட்டுகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்), வேறு கல்வெட்டுகளில் பொருள்களின் அளவுகளும் (பொருள்வட்டிக் கல்வெட்டுகள்) கொடுக்கப்பட்டிருக்கின்றன. பொருள்வட்டிக் கல்வெட்டுகளில் பூஜை பெறும் தெய்வம் அல்லது படிமத்தின் பெயர், ஒரு நாள் அல்லது ஒரு வேளை பூஜை அல்லது படையலுக்கு தேவையான பொருளின் அளவு, ஒரு வருடத்திற்கு தேவையான அளவு இதில் வட்டியாக கொடுக்கப்பட வேண்டிய பொருளின் அளவு என தேவையான அனைத்து செய்திகளும் அடக்கம். பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

கல்வெட்டு 6 (Vol II - Part I&II Ins 3):

இராஜராஜரின் தமக்கை குந்தவை கொடுத்த கொடையை குறிப்பிடும் மிக நீளமான இக்கல்வெட்டின் முழுப் பாடத்தையும் இங்கு தந்தால் கட்டுரையைவிட கல்வெட்டு பெரிதாகிவிடுமாதலால், இக்கட்டுரைக்கு தேவையான இடங்களை மட்டும் (கல்வெட்டில் அந்த இடங்கள் வரும் வரியை குறித்து) தருகிறேன். இக்கல்வெட்டின் முதல் வரியும், இரண்டாவது வரியில் முதல் சில எழுத்துக்களும் வரலாறு டாட் காம் ஏழாவது இதழில் வெளியான "இராஜராஜீஸ்வரம் கல்வெட்டுகள்" கட்டுரையில் பார்க்கலாம். (பார்க்க)

இடம்: தஞ்சை இராஜராஜீஸ்வரம் கோயில் விமானத்தின் தெற்குச்சுவர்

காலம்: முதலாம் இராஜராஜரின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டு


3 ..................... [கூ*] தக்ஷிணமெருவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமெஸ்வரியாருந் தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமெஸ்வரியாருந்திருவிழா எழுந்தருளும் பொது திருஅமிர்துக்குந்திருப்பள்ளித்தாமத்துக்குந்திருவிளக்கெண்ணைக்கும் உள்ளிட்டு வென்டும் அழிவுக்குப்பொலிசையூட்டுக்கு வைத்த காசில் நித்தவினோதவளநாட்டு முடிச்சொழநாட்டு ப்ரம்மதெயம் ஜநநாதச்சதுர்வெதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தெட்டாவது பசான் முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெற்பொலிசையாகத் தஞ்சாவூர் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் சந்திராதித்தவல் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு இருநூறினால் ஆட்டாண்டு தொறும் அளக்கக்கடவ நெல்லு ஐய்ம்பதின் கலம்.
6............................II- [யச*] இவர்க்கெ சார்த்தும் திருப்பர்சட்டத்துக்குக்காசு இருபத்தாறுந்திருநமனிகை நாலுக்குக்காசு இரண்டுந்[திரு]வொற்றாடை நாலுக்குக்காசு இரண்டுந்திருமெற்க்கட்டி நாலுக்குக்காசு இரண்டுந்திருப்பாவாடை பதினாறுக்குக்காசு நாலுந்திருப்பள்ளித்தாமத்துக்கு நிசதம் அக்கம் அரையாக ஓராட்டைக்கு அக்கம் நூற்று என்பது இவை காசு ஒன்றுக்கு அக்கம் பன்னிரண்டாகக்காசு பதினைஞ்சும் ஆகக்காசு ஐய்ம்பத்தொன்றுக்குக்காசு ஒன்றுக்குத் திங்கள் அரைக்கால் அக்கப்பலிசை ஆக சந்திராதித்தவல் செலுத்துவதற்க்கு வைத்த காசில் ராஜெந்திரசிங்கவளநாட்டுத்தனியூர் ஸ்ரீவீரநாராயணச்சதுர்வெதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசின் வாய்த்திங்கள் அரைக்கால் அக்கப்பொலிசையாக ஆட்டாண்டு தொறுந்தஞ்சாவூர் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் பண்டாரதிது சந்திராதித்தவல் பொலிசை இடக்கடவர்களாகக்கொண்ட காசு நூற்றுத்தொண்ணூற்று ஆறினால் ஆட்டாண்டு தொறும் இடக்கடவ காசு இருபத்துநாலரை II-


இக்கல்வெட்டுகளிலுருந்து அந்நாளின் பொருளாதாரம் பற்றிய செய்திகளை ஆராய்ந்து அரிய முடிகிறது. காசுவட்டிக் கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அந்நாளைய வட்டி விகிதத்தை கணக்கிட முடிகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ஆறாவது வரியில் இருக்கும் செய்தி ஸ்ரீவீரநாராயணசபையார் வட்டிக்கு கொண்ட காசு நூற்றித்தொண்ணூறு (196). அதற்கு ஆண்டு வட்டி இருபத்துநாலரை (24.5). அதாவது வட்டி விகிதம் பன்னிரண்டரை (12.5%). அது மட்டுமல்ல அக்கோயிலில் உள்ள காசுவட்டிக் கல்வெட்டுகள் அனைத்திலும், இராஜேந்திரர் காலக் கல்வெட்டுகள் உட்பட, இந்த ஒரு வட்டிவிகிதம் தான் தென்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வட்டியாக மூன்றாவது வரியில் நெல்லும், ஆறாவது வரியில் காசும் கொடுக்கப்பட்டிருக்கிறதல்லவா. ஜநநாதச்சதுர்வெதிமங்கலத்துச் சபையார் வட்டியாகக் கொண்ட காசு இருநூறுக்கு (200) வட்டியாக ஆண்டுக்கு நெல் ஐம்பது கலம் கொடுக்கவேண்டும். இதில் நெல் பன்னிரண்டரை (12.5%) சதவிகிதம் வட்டிக்கு ஈடாகக் கொண்டால், அதாவது ஐம்பது கலம் நெல் ஆண்டு ஒன்றுக்கு வட்டி இருபத்தைந்து காசுக்கு (25) ஈடாகக் கொண்டால் ஐம்பது (50) கலம் நெல்லின் விலை இருபத்தைந்து (25) காசு எனக் கணக்கிடலாம். அதாவது ஒரு கலம் நெல்லின் விலை அரைக்காசு (0.50). இதே கல்வெட்டில் வட்டியாக வாங்கிய ஒரு காசிற்கு முக்குறுணி நெல் பலிசை என்று வருகிறதல்லவா. அதாவது ஒரு காசுக்கு 12.5% வட்டி என்றால் முக்குறுணி நெல் (மூன்று குறுணி) .125 காசிற்கு ஈடு. எட்டால் பெருக்கினால் ஒரு காசிற்கு 24 குறுணி. முன்பு கணக்கிட்டபடி அரைக் காசிற்கு 1 கலம் நெல். அப்படியென்றால் 12 குறுணி என்பது ஒரு கலம் நெல்லுக்கு ஈடு.

வட்டியாக மற்ற பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளையும் ஆராய்ந்து பொருள்களை இதே வட்டி விகிதத்திற்கு ஈடு செய்து, அந்தந்த பொருள்களின் விலையையும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா. அது மட்டுமல்ல ஒரே கல்வெட்டில் ஒரு நாளைக்கு மற்றும் ஒரு வருடத்திற்குத் தேவையான பொருளின் அளவு கொடுக்கப்பட்டிருப்பதால் ஒரு வருடத்தில் 360 நாள் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள் என அறியமுடிகிறது.

இக்கோயிலில் உள்ள எல்லா கல்வெட்டுகளிலும் காசு, வட்டி சம்பந்தப்பட்டவைகள் கோயில் ஸ்ரீபண்டாரம் பொறுப்பில் விடப்பட்டிருப்பதைக் காணலாம். இப்படி கோயிலில் Treasury என்ற ஒன்றை ஏற்படுத்தி கோயில் வரவுசெலவுகளை கண்காணிக்க அந்த பண்டாரத்துக்கு அதிகாரம் கொடுத்திருப்பது வேறு எந்த கொயில் கல்வெட்டுகளிலும் காணமுடியாத ஒரு புதுமை. இந்த ஒன்றிலிருந்தே இராஜராஜரின் சிந்தித்து ஆற்றும் திறனும் நிர்வாகத்திறமையும் வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு கோயிலை நிர்வாகம் செய்ய இப்படி சிந்தித்து ஏற்பாடுகள் செய்தவர், தனது நாட்டை நிர்வகிக்க என்னவெல்லாம் புதுமைகள் செய்திருப்பார்.

இராஜராஜர் ஒரு நல்ல நிர்வாகத்திறமை கொண்டவர் மட்டுமில்லை, நல்ல வரலாற்றார்வம் கொண்டவரும் கூட. சேர பாண்டியர்களையும் மற்றும் சுற்றியுள்ள பல நாடுகளையும் கைப்பற்றியவர். தாம் கைப்பற்றிய நாடுகளின் பட்டியல் எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் வகையில் தன் மெய்க்கீர்த்தியில் இடம் பெறச்செய்தவர். கல்வெட்டு செய்திக்கு முன் தன் வெற்றிகளை மெய்க்கீர்த்தியாக பொறிக்கும் வழக்கமே இராஜராஜர் காலத்தில் தான் தொடங்கியது. இதன்வழி இராஜராஜரின் வரலாற்றார்வம் தெரிய வருகிறது. வரலாற்றினை பாதுகாத்து பிற்காலத்திற்கு கொண்டுசேர்க்க வேண்டுமென்ற நினைப்பில் வந்தது தான் கல்வெட்டுகளில் கொடைகளைப் பற்றிய செய்திகளை பொறிக்கவேண்டுமென்ற ஆணையும், மெய்க்கீர்த்தி வழக்கமும் என்று தோன்றுகிறது. தன் பெருமைகளை பறையரைவிக்கும் பொருட்டு அன்று. அவரின் வரலாற்றினை பாதுகாக்க வேண்டுமென்ற முனைப்பு திருமழவாடிக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 'இராஜராஜர் வைத்தியநாதஸ்வாமி ஆலயத்தினை புனர் நிர்மாணம் செய்யவேண்டுமென ஆணையிட்டதையும், அக்கோயிலை இடிக்கும் முன் அங்குள்ள கல்வெட்டுகளை பிரதி எடுத்து, புதிய கற்றளி எழுப்பிய பின்னர் பிரதி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மறுபொறிப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்ட' செய்தியையும் அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கட்டுரை இராஜராஜீஸ்வரம் கோயில் கல்வெட்டுகளில் ஒரு சிலவற்றை அவற்றையும் முழுமையாக இல்லை சில வரிகளை மட்டும் ஆராய்ந்ததால் விளைந்தது. இதை போல் எத்தனை கல்வெட்டுகள் அவற்றில் எத்தனை வரிகள். அவற்றை எல்லாம் ஆராய்ந்தால் ஒன்றல்ல பல புத்தகங்களையே கொடுக்கமுடியுமே.

இராஜராஜரின் பெருமைகளையும் திறமைகளையும் எடுத்துக்காட்டும் இராஜராஜீஸ்வரம் கோயில் கல்வெட்டுகளும், கல்வெட்டுகளைத் தாங்கும் கோயிலும், மற்றும் வரலாற்றினைக் காட்டும் எல்லா கல்வெட்டுகளும் கோயில்களும் இன்னும் ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்வரும் சந்ததியினரும் அறியும் வகையில் பல காலத்திற்கு அழியாமல் இருக்கவேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.