http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > இலக்கியச் சுவை
வாசிப்பில் வந்த வரலாறு - 4
ச. கமலக்கண்ணன்
குற்றம் : கண்ணகி செய்தது என்ன?

பால்நகையாள் வெண்முத்துப்
பல்நகையாள் கண்ணகி தன்
கால்நகையால்
வாய்நகை போய்த் தன்
கழுத்து நகை இழந்த கதை

- கவிஞர் மு. மேத்தா

முத்தமிழ்க் காப்பியமாய், மூத்த தமிழ்க் காப்பியமாய், அரசியல் பேசுவதால் அரசியல் காப்பியமாய், ஊழை வலியுறுத்துவதால் ஊழியல் காப்பியமாய், மகளிர் பெருமை மாண்புபடப் பேசுவதால் மகளிர் காப்பியமாய், வரலாற்றைத் தருகின்ற வரலாற்றுக் காப்பியமாய், தொழிலாளர் நலம் கூறுவதில் தொழிலாளர் காப்பியமாய், மெய்ப்பொருளிலே தனக்கு நிகர் இல்லையென்ற தத்துவக் காப்பியமாய், கலைகளைச் சொல்லுவதில் கலைக்காப்பியமாய் அனைத்தும் ஒன்றாகத் தன்னேரிலாத தனித்தமிழ்க் காப்பியமாய் விளங்குவது சிலப்பதிகாரம்.
- நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலன்

சிலப்பதிகாரம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட காப்பியமாகும். இதனை இயற்றிய கவிஞர் பெருமான், அரசியல்வாதி! ஆம்; சேரநாட்டின் இளவரசர். அரசியலில் நீதி - நெறி நிலவவேண்டும்; மண்ணாள்வோர், மக்களை மதித்துக் கோலோச்ச வேண்டும்; பொய்யுரைக்கும் புல்லரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - என்னும் சீரிய நெறிகளைச் சிந்தையில் கொண்டவர் சிலப்பதிகார ஆசிரியர். இந்த நெறிகளை என்றென்றும் தமிழகத்தில் நிலைநிறுத்தவே அவர் சிலப்பதிகாரத்தைத் தந்திருக்கிறார். எந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தின் நியதிகளைக் கூறுவதோடு அமையாமல், பிற்காலத்துக்குத் தேவைப்படும் நீதிகளைப் போதிப்பதாகவும் இருக்கவேண்டும். சேரநாட்டுக் கவிஞன் தந்த சிலப்பதிகாரத்திற்கு இந்தச் சிறப்பு உண்டு. சிலப்பதிகாரக் கதை புனைந்துரை அன்று; உண்மையில் நிகழ்ந்த வரலாறு. காப்பியத்தை அழகு செய்யவும், படிப்போர்க்குச் சுவைதரவும் அங்குமிங்குமாகக் குறைந்த அளவில் கற்பனைகளையும் கலந்து வைத்திருக்கிறார் இளங்கோ.
- சிலம்புச்செல்வர் ம.பொ.சி

சிந்து பைரவி திரைப்படத்தில் ஒரு வசனம் வருமே! சங்கீதத்தைப் பாடுவதும் கேட்பதும் ஒரு இன்பம் என்றால், அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது இன்னொரு வகை இன்பம். அதுபோலத்தான் இலக்கியங்களும். படிப்பதும் அதைப்பற்றி ஒத்த விருப்புடையவர்களுடன் உரையாடுவதும் விவாதிப்பதும் ஒரு இன்பம் என்றால், பிறர் விவாதிக்கும்போது அதைக் கேட்பதும் இன்னொரு வகை இன்பம். இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவது இதுபோன்ற இன்பத்தைப் பெறுவதற்காகத்தான். ஆனால் அவ்வாறு செல்ல வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு ஒரு மாற்றுதான் இலக்கியம் சார்ந்த ஒலிநாடாக்கள். அண்மையில் எனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்துக்குச் சென்றிருந்தபோது ஹைதர் காலம் ஒலியகத்தில் சிலப்பதிகாரத்தைப் பற்றிய சில ஒலித்தட்டுக்கள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் "கண்ணகி குற்றவாளியா?" என்ற தலைப்பில் அமைந்த வழக்காடுமன்றம்.

நடுவர் : நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலன்
வழக்குத் தொடுப்பவர் : செந்தமிழ் முழக்கம் முனைவர் ஆ. ஜகந்நாதன்
வழக்கை மறுப்பவர் : ஆய்வுரைத் திலகம் முனைவர் அ. அறிவொளி

இலக்கிய வழக்காடு மன்றம் என்பது, ஏதாவது ஒரு இலக்கியக் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அக்கதாபாத்திரம் செய்த செயல்களை ஆராய்ச்சிக் கோணத்தில் நல்லதா கெட்டதா என அலசிப் பார்க்கும் உத்தி. ஒருவர் அக்கதாபாத்திரம் செய்தது தவறு என்று குற்றம் சுமத்தி வழக்கைத் தொடுக்க, இன்னொருவர் அதை மறுத்து வாதிடுவார். வழக்கை மறுப்பவருக்கே பேச வாய்ப்பு அதிகம் என்பதால், அவரது பேச்சுத்திறமையைப் பொறுத்து நிகழ்ச்சி சிறப்பாக அமையும். கர்ணன், கிருஷ்ணன், தருமன், இராமன், பாஞ்சாலி போன்ற காப்பியக் கதாபாத்திரங்கள் செய்த செயல்களை அக்காப்பியத்தின் பின்புலத்தில் வாணி ஒலிநாடா நிறுவனம் ஏற்பாடு செய்த பல்வேறு வழக்காடு மன்றங்களில் சிறப்பாக விவாதித்திருக்கிறார்கள் முனைவர் சோ. சத்தியசீலன் மற்றும் முனைவர் அ. அறிவொளி குழுவினர். அவ்வரிசையில், கண்ணகி என்னும் இலக்கியப் பாத்திரம் செய்த குற்றங்களாக நான்கு குற்றச்சாட்டுக்களை முனைவர் ஆ. ஜகந்நாதன் அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்.

மிகப்பெரிய பாராட்டுக்குரியவளாகக் கருதப்படுகிற கண்ணகி பெருமாட்டியினுடைய மறுபக்கம் குற்றம் செறிந்ததாக என்னுடைய ஆராய்ச்சிப் பார்வைக்குத் தெரிவதால், அதை இங்கே வழக்காக உங்கள் முன்னால் சமர்ப்பிப்பதற்கு நான் விரும்புகிறேன். சிலப்பதிகாரம் மிக அற்புதமான காப்பியம் என்பதிலே எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது. அதைப்போலவே, கண்ணகிப் பெருமாட்டி என்பவள், மிகச்சிறந்த கற்பின் திண்மையால் இந்த உலகத்துப் பத்தினிகளுக்குள் முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறவள் என்பதிலும் நான் எந்தவிதமான முரண்பாடும் கொள்ளவில்லை. ஆனால் கனம் நீதிபதி அவர்களே, அவளுடைய வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிப் பார்த்தால், எல்லோருடைய பாராட்டுக்கும் பாத்திரமாகி நிற்கும் அவளுடைய மறுபக்கம் இருள் நிறைந்ததாகத் தெரிவதை நான் உணருகிறேன். கண்ணகி மதுரையை எரித்தது குற்றம் என்ற வழக்கை இந்த மன்றத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தக் குற்றத்தை அவள் நிகழ்த்துவதற்கு முன்னால், எப்படிக் கூட்டுப்புழுவாக இருப்பது வளர்ந்து வளர்ந்து பின்னால் பெரியதொரு உயிராக மாறுவதைப் போலவே இவளது வாழ்க்கையின் ஆரம்பத்திலே இருக்கிற குறையானது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு நகரத்தையே சுட்டெரிக்கக்கூடிய வன்முறையாக முதிர்ச்சி பெற்றிருக்கிறது என்பதே என்னுடைய வழக்கு.

கனம் நீதிபதி அவர்களே, கண்ணகிப் பெருமாட்டி மீது நான் குற்றம் சுமத்துகிறபோது, பூம்புகார்க் கடலோரத்தில் அவள் புகழ்மணம் வீசுவதை நான் மறக்கவில்லை. பூம்புகார் உப்புக் கடற்கரை ஓரத்திலே பிறந்த அந்த ஒப்பில்லாத பத்தினிப்பெண் மலைச்சிகரத்திலே ஏறி மாபெரும் பத்தினியாக மாறினாள் என்பதையும் நான் மறுக்கவில்லை. இப்படி எல்லாம் சின்ன இடத்திலே இருந்து உயர்ந்து உயர்ந்து தேவர்களுக்கு நிகராக வளர்ச்சி பெற்ற அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் அவலத்தின் கூறுபாடுகள் இழையோடுகின்றன என்பதே என்னுடைய வழக்கு. அவள்மேல் நான் சுமத்துகிற குற்றச்சாட்டை நான்கு பிரிவுகளாக்கி இந்த மன்றத்திலே சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

1. கண்ணகிப் பெருமாட்டி தன் கணவன் கோவலனைச் சரியான விதத்தில் பேணவில்லை.

2. கணவன் தவறு செய்கிறபோது தட்டிக்கேட்டுத் தடுத்து நிறுத்தி அவன் அயலூர் புறப்படுகிறபோது, இல்லை அத்தான், இந்த ஊரிலேயே வாணிகம் செய்து நாம் வாழமுடியும் என்று கூறிப் பூம்புகாரிலேயே அவனை இருத்திக் கொள்ளத் தவறியது.

3. பாண்டியனிடம் வழக்குரைக்கிறபோது என்ன வார்த்தை பேசுவது என்கிற வரம்பைத் தாண்டிக்கொண்டு ஆத்திரத்தில் அங்கே பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசுகிறாள்.

4. மதுரை மாநகரத்தைச் சுட்டெரித்துத் தரைமட்டமாக்கிவிட்டாள்.


மேற்கண்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் சுவைபட விளக்கியிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக அறிவொளி அவர்கள் நகைச்சுவையாக மறுத்திருக்கிறார். ஒவ்வொரு குற்றச்சாட்டையும் மறுக்கும்போதும் திருக்குறள் முதலான பல்வேறு இலக்கியங்களிலிருந்தும் நடைமுறை வாழ்க்கையிலிருந்தும் எடுத்துக்காட்டுகளைப் பரவலாக எடுத்தாண்டு, கேட்போரை மயங்க வைக்கிறார். இங்கு முதல் 3 குற்றச்சாட்டுகளைவிட நான்காவது குற்றம் பல அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு, சரியென்றும் தவறென்றும் முடிவுக்கு வர முடியாமல் திணறும் காட்சியாகும். எனவே, இக்கட்டுரையில் மதுரை மாநகரை எரித்ததை மட்டும் விரிவாக அலசிவிட்டு, மற்ற குற்றச்சாட்டுக்களைப் பிறிதொரு சமயம் காண்போம்.

கண்ணகி மதுரையை எரித்தாளா இல்லையா என்று ஒரு வார்த்தை பதிலைக் கேட்டால், எரித்தாள் என்றுதான் ஒத்துக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வயிற்றை அறுத்தாரா இல்லையா என்று கேட்டால், அறுத்தார் என்றுதான் ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்காகக் கொலை செய்தார் என்றா அர்த்தம்? அதுபோல, எரிக்க வேண்டும் என்பதற்காக எரிக்கவில்லை. எரிக்காமல் எரித்திருக்கிறாள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அது என்ன எரிக்காமல் எரிப்பது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார் அறிவொளி அவர்கள்.

கண்ணகி மதுரையை எரித்தது எவ்வாறு குற்றம் என்பதை ஜெகந்நாதன் அவர்கள் உணர்ச்சி பொங்க விவரிக்கிறார்.

"மாட்சிமை தங்கிய நீதிபதி அவர்களே, இதுவரை இந்த உலகத்தில் எந்தப் பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒரு தீச்செயலைக் கண்ணகி செய்துவிட்டாள். மதுரை மாநகரத்தையே தீக்கிரையாக்கி விட்டாள் என்பதுதான் என்னுடைய அடுத்த குற்றச்சாட்டு. கனம் நீதிபதி அவர்களே, இந்தக் கண்ணகி, பாண்டியனிடத்தில் வாதிட்டு முடிக்கிறாள். அப்போது, தன்னுடைய காலிலே இருக்கிற சிலம்பில் உள்ளீடு பரலாக இருப்பது மாணிக்கக் கற்களே என்று சொல்லி அறிவிக்கிறாள். உடனே பாண்டியன் சொன்னான், 'என்னுடைய மனைவியின் காற்சிலம்பில் இருப்பன முத்துப்பரல்கள்'. கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பைக் கொண்டு வந்து தருக என்று மன்னவன் கட்டளை போட்டான். தருகெனத் தந்து, அவளுக்கு முன்னாலே அந்தச் சிலம்பைப் பாண்டியன் தந்தவுடனே, கண்ணகி தன் கையிலே அந்தச் சிலம்பை வாங்கி, தரையிலே ஓங்கி அடித்து, உடைக்கிறாள். அந்தச் சிலம்பு உடைபடுகிறது. உள்ளேயிருந்து மாணிக்கக் கற்கள் சிதறின. மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே என்று இளங்கோவடிகள் அந்த இடத்தை அருமையாக எழுதிக் காட்டினார். மாணிக்கக் கற்களைக் கண்டவுடன் மன்னவன் இதயம் சரிந்து விழுந்தது. உடனே அவன் பேசினான்.

பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்!

என்று தடுமாறித் தரையிலே விழுந்தான். இப்படியொரு தவறான செயலைச் செய்து விட்டேனே! இதுவரை என் முன்னோர்கள் காத்து வைத்த பெருமையை நான் இன்று தொலைத்து விட்டேனே! என்று குலைந்துபோய்க் கீழே விழுந்தான். 'கெடுக என் ஆயுள்' என்று சொன்னான், அவனது உயிர் அவனது உடல்கூட்டை விட்டு உடனடியாகப் பறந்து போய்விட்டது. பக்கத்திலிருந்த பாண்டியராணியும் கணவன் இறந்ததும் கீழே விழுந்து உயிரை விட்டுவிட்டாள்.

கனம் நீதிபதி அவர்களே! இந்தக் கண்ணகி சொன்னாளே!

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புண்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே


என்று பெருமை பேசினாளே! மனுநீதிச்சோழன் தன்னுடைய நாட்டில் நீதி தவறியதற்காக ஒரேயோர் உயிரைத்தான் கொடுத்தான். ஆனால் இங்கே பாண்டியன், தான் நீதி தவறியதற்காக இரண்டு உயிர்களைப் பரிகாரமாகத் தந்தான். இதற்கப்புறமும் கோபம் அடங்கவில்லையே! கண்ணகிப் பெருமாட்டியே! எங்கள் அன்னையல்லவா நீ! உனக்கிருக்கும் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு ஆக்கங்களைப் படைத்திருக்க வேண்டியவள் அல்லவா நீ! அன்றைக்கு உன் தலைவன் கோவலன் உன்னைப் பிரிந்து 13 ஆண்டுகள் பிரிந்திருந்தபோதுகூட ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாயே! இப்போது மட்டும் ஏனம்மா இந்தச் சீற்றம்? ஐம்பூதங்களையும் அடக்கியாளக் கூடிய ஆற்றல் வாய்ந்த கற்பின் செல்வியல்லவா நீ? இப்போது உன் இதயத்தை அடக்கியாளத் தெரியாமல் ஆத்திர வார்த்தைகளைக் கொட்டிவிட்டு அதற்கப்புறமும் சீற்றம் தணியாமல், உயிர்விட்ட பாண்டியனைப் பார்த்துக்கூட இரக்கத்தை உதிர்க்க உனக்குத் தோன்றவில்லையே அம்மா! அந்தப் பாண்டியன் மனைவி செத்து விழுந்த பிறகு உன்னைப்போல் ஒருத்தி அங்கே உயிர்விட்டுக் கிடக்கிறாளே! என்று உன் உதிரம் துடிக்க வில்லையே! பட்டாங்கில் யானுமோர் பத்தினியே ஆமாங்கில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் பத்திமையும் காண்புறுவாய் என்று சபதம் பேசினாயே! இது என்ன நியாயம் தாயே?

கனம் நீதிபதி அவர்களே! இவ்வாறு அவள் சபதம் செய்துவிட்டுச் சும்மா நின்று விடவில்லை. மதுரையை மும்முறை வலம் வந்தாள். ஆத்திரத்திலே அவள் இதயம் கொந்தளித்தது. தன்னுடைய இடது மார்பைத் திருகி மதுரை மாநகரத்தின் மீது விட்டெறிந்தாள். தீக்கடவுள் ஓடிவந்து மண்டியிட்டான். கனம் நீதிபதி அவர்களே! அந்த மதுரையைச் சுட்டெரிக்க வேண்டும் என்று அவள் சிந்தித்தாள். ஓடிவந்த தீக்கடவுள் இவளைப் பார்த்துக் கேட்டான். தாயே! யாரையெல்லாம் நான் எரிக்க வேண்டும்? அழித்து அழித்துப் பழக்கப்பட்ட அவனுக்குத் தோன்றுகிற இரக்கம் கூட இந்த அன்னைக்குத் தோன்றவில்லையே! அவன் கேட்ட பிறகு இவள் சொன்னாள்.

பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க


என்று சொன்னாள். கனம் நீதிபதி அவர்களே! அவனாகக் கேட்ட பின்னர் இவள் சொன்னாள். இல்லையென்றால், அந்த மதுரை மாநகரம் முழுவதுமே எரிந்து சாம்பலாகி இருக்கும். கெட்டவர்களை அழிக்க வேண்டும் என்று சொல்லுகிறாளே! கெட்டவர்களை அழிப்பதற்குக்கூட இவளுக்கு என்ன உரிமை? பூம்புகாரில் இருந்த கெட்டவர்களை இவள் அழிக்க நினைத்ததுண்டா? கெட்டவர்களே இல்லாத புனிதபூமி எங்காவது எப்போதாவது இருந்திருக்கிறதா? இவள் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள். வன்முறையைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டாள். அதனால் மதுரை எரிந்து போனது. அழகு கொஞ்சிய மதுரையை அவலம் நிறைந்த மதுரையாக மாற்றிவிட்டாளே கண்ணகி என்பதுதான் என் வருத்தம்.

கனம் நீதிபதி அவர்களே! தனிப்பட்ட ஒருவன் செய்த தவறு; அந்தத் தவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்யப்பட்டுவிட்டது. அதற்கப்புறமும் மதுரையை எரிப்பேன் என்று கொதிப்பது இருக்கிறதே! அது தன்முனைப்பினாலே விளைந்திருக்கிற மிக மோசமான செயலே தவிர, எந்த நியாயத்தின்பாலும் பட்டதல்ல என்பதே என் வழக்கு. இப்படித் தவறிழைக்கப்பட்டவர்கள் எல்லாம் தங்கள் கையிலேயே சட்டத்தை எடுத்துக்கொண்டு எரிப்பேன் நகரத்தை என்று புறப்பட்டு விட்டால், இந்த உலகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஒருதுளி இடம்கூட மிஞ்சாது."


மிகவும் நியாயமாகத் தோன்றும் இந்தக் குற்றச்சாட்டை அறிவொளி அவர்கள் எப்படி மறுத்தார் என்று பார்க்கும் முன்னர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் இந்த மதுரை எரிப்பையும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வது பற்றியும் என்ன சொல்கிறார் என்று பார்த்து விடுவோம்.

"நெறி வேறு; அதையொட்டிய நிகழ்ச்சி வேறு. பொற்கொல்லன் பொய்யுரையைக் கேட்டு, குற்றமற்ற கோவலனைக் கொன்ற கொடுங்கோலாட்சியைக் கண்ணகி எதிர்த்தாளே, அது அரசியல் நெறி. பிற்காலத்துக்கும், நாம் வாழும் காலத்துக்கும் பொருந்தக்கூடிய நீதியுமாகும். ஆனால், ஆற்றொணாத் துயரத்தால் வெறிகொண்டு மதுரை நகரைக் கண்ணகி எரித்தாளே, அது நெறியன்று. அந்நாளைய சூழ்நிலைக்கு ஏற்ப விளைந்த நியதி - நிகழ்ச்சி என்றே கொள்ள வேண்டும். அந்த நியதியை - நிகழ்ச்சியைப் பிற்காலத்தவர் பின்பற்றவில்லை. தற்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அது பொருந்தாது. ஆயினும், கண்ணகி வாழ்ந்த நாளில், அன்றிருந்த அரசியல் சூழ்நிலையில், அவள் மதுரையை எரித்தது சரியென்றே இளங்கோ சாதிக்கிறார்.

ஊரைக் கொளுத்தும் நிகழ்ச்சிகள் மேலும் தோன்றக்கூடாது என்று எண்ணுகிறது இளங்கோவின் உள்ளம். அதனால், மனித ஆற்றலால் இயலக் கூடாத வகையில் மதுரையைக் கொளுத்திய நிகழ்ச்சியைக் கூறியிருக்கிறார். கோவலனுக்கு வாய்த்த கண்ணகி தீப்பந்தத்தைக் கையிலேந்தி மதுரையைக் கொளுத்தினாள் என்று இளங்கோ கூறியிருந்தால், சிலப்பதிகாரத்திற்குப் பிந்திய இரண்டாயிரம் ஆண்டுகளில் கண்ணகியின் கொளுத்தும் குணத்திற்கு மட்டும் பிரதிநிதிகளாகப் பல்லாயிரம் கண்ணகிகள் தோன்றியிருப்பார்கள்".


அதனால், இளங்கோ மூன்று தடைகளை விதித்ததாகவும் ம.பொ.சி கூறுகிறார்.

"தடை 1 : பத்தினி ஒருத்தியால் மதுரை எரிக்கப்பட வேண்டுமென்ற தெய்வச் சாபம் ஒன்று உண்டு.

மாபத்தினி நின்னை மாணப் பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டையோர்ர்
ஏவல் உடையேன்


என்று வஞ்சின மாலையில் அக்கினிதேவன் கூறுவதால் அறிகின்றோம்.

தடை 2 : மதுரையை எரிப்பதற்கு முன்பு கண்ணகி முன் தோன்றிய அக்கினித் தெய்வம் அம்மாபத்தினியைப் பார்த்து,

யார் பிழைப்பார் ஈங்கு

என்று கேட்கின்றது. அதாவது, யாரையெல்லாம் விலக்கி மதுரையை எரிக்க வேண்டும் என ஆணை கேட்கிறது. இப்படி, நல்லோரை விலக்கி, தீயோரை மட்டும் கொளுத்துவதென்பது எல்லோருக்கும் சாத்தியமாகக் கூடியதன்று.

தடை 3 : மூன்றாவதாக இளங்கோ போட்டுள்ள தடை எவராலும் கடக்க முடியாததாகும். கண்ணகி மதுரையைக் கொளுத்தினாள் என்றால், அதற்குப் பயன்பட்ட கருவி தீப்பந்தம் அன்று. அவளுடைய கொங்கைகளில் ஒன்றே.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்...


இது, அறிவுக்குப் பொருந்தாத செய்தியாக இருக்கலாம். தீப்பந்தத்தைக் கையிலேந்தி மதுரையைக் கொளுத்தினாள் கண்ணகி என்று கூறுவது அறிவுக்குப் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால், 'தன் ஒரு மார்பைத் திருகி எறிந்து கண்ணகி மதுரையை எரித்தாள்' என்று கூறியதனால்தான் பின்னர் இத்தகைய கொளுத்தல்கள் நிகழவில்லை".


இதில் துணை வழக்காக இன்னொன்று வருகிறது.

பிராயச்சித்தம் செய்யப்பட்டுவிட்ட பிறகும் மதுரையைக் கண்ணகி ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பைக் கொண்டு எரித்ததால்தான், மற்றொரு பூதமான நீர் கண்ணகி வாழ்ந்த புகார் நகரை அழித்தது. ஆனால் இதுவும் இவ்வாறு இல்லை என்கிறார் அறிவொளி அவர்கள்.

"கண்ணகித்தாய் கடைசியாகக் காலடி வைத்தாள் என்னுடைய நாட்டில் என்று அந்த உணர்ச்சி எழுந்து, சேரன் படையெடுத்துப்போய் இமயமலையிலே கல்லெடுத்து கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு ஒரு சிலை செய்தான். காலடி வைத்ததனாலேயே இவ்வளவு பெரிய போர் நடத்தி ஒரு சிலையைச் செய்தான் சேரன் என்றால், எங்கே பிறந்தாளோ, எங்கே வாழ்ந்தாளோ, எங்கே புகழ் தேடிக் கொடுத்தாளோ, அந்தப் பூம்புகாரிலிருந்த சோழனல்லவா அந்தச் சிலையைச் செய்திருக்க வேண்டும்? செய்யவில்லை. அதற்கு மாறாக, சேரன் செய்த அந்தச் செயலை இழித்தான்; பழித்தான். அதனால்தான் பூம்புகார் அழிந்ததே தவிர, வேறு எதனாலும் அல்ல."

இதற்குப் பின்னர் வருகிறது ஒரு சுவையான விவாதம் நடுவருக்கும் வழக்கை மறுப்பவருக்கும்.

அ: வெளிநாட்டிலே ஓர் அருமையான சொற்றொடர் சொல்வார்கள். King is not an individual. He is an institution.

ச: ஆமாம். அரசன் என்பவன் தனிமனிதனல்ல; அவன் ஒரு நிறுவனம்.

அ: ஆகவே, அவன் செய்த தவறு ஒரு நிறுவனம் செய்த தவறே தவிர, ஒரு தனிப்பட்ட மனிதன் செய்த தவறல்ல. ஆகையினால், இனிமேலும் அதுமாதிரியான ஒரு நிறுவனத்தில் இதுமாதிரியான ஒரு தவறு நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஆழ்ந்த சிந்தனையோடுதான் கண்ணகி இந்தச் செயலைக் கண்ணகி செய்திருக்கிறாள். ஒருவன் செய்த தவறு; அதற்காக அவன் தன்னுடைய உயிரையும் கொடுத்தான்; அவன் மனைவியும் கூடச் செத்துவிட்டாள். ஆகவே, ஓர் உயிருக்கு இரண்டு உயிர்கள் போய்விடவில்லையா? இதற்குப் பிறகு அங்கே என்ன விதமான தீர்ப்பு தேவையாக இருக்கிறது? என்று அவர் கேட்கிறார். மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! ஓர் உயிருக்கு இன்னொரு உயிர் என்ற இணைப்பு அல்ல அங்கே முக்கியமானது. அங்கே நீதியல்லவா உயிர்போய்ச் செத்துக் கிடக்கிறது? அதுமாதிரி நீதியின் உயிர் போகக்கூடாது என்பதுதான் கண்ணகியின் நோக்கமே தவிர, என் கணவன் உயிருக்கு நிகராக இத்தனை உயிர்கள் தேவை என்று அவள் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கவில்லை.

ச: ஆனால், மதுரையை எரித்து விட்டால், அது சரியான நீதி ஆகிவிடும் என்று நினைக்கிறீர்களா?

அ: சுதந்திரம் கிடைத்து விட்டது நம் நாட்டுக்கு என்றவுடன், குற்றவாளிகளை எல்லாம் சிறைச்சாலையிலிருந்து நாம் வெளியேற்றி விட்டோமே? அது எந்த வகையிலே நியாயம்? அதைப்போல, ஒரு துன்பம் நிகழ்ந்து விட்டது என்பதற்காக துன்பத்தை இன்னும் துன்பப்படுத்துவதும் அதே நியாயம்தான். உங்கள் இன்பத்துக்காகக் குற்றத்தை நீங்கள் மன்னிக்கிறீர்கள். ஒரு துன்பத்துக்காகத் துன்பத்தை மேலும் தண்டிக்கிறோம். இரண்டு வகையிலும் பார்த்தாலும் தர்க்க சாஸ்திரத்தின்படி நியாயமாகவே படுகிறது. அக்கினிதேவன் வந்தான். யாரையெல்லாம் எரிக்க வேண்டும் அம்மா என்று கேட்டான். அப்போதுதான் இந்தப் பெருமாட்டி சொல்கிறாள். 'தீத்திறத்தோர் பக்கமே சேர்க'.

ச: அங்கேதான் ஒரு சிக்கல் வருகிறது. 'தீத்திறத்தோர் பக்கமே சேர்க' என்று சொல்லும்போது, நீங்கள் சொன்ன நியாயம் அங்கே செயல்படுத்தப்படுகிறது. ஆனால், நல்லவர்களாக இருப்பவர்களும் கூடத்தானே அரசன் என்னும் நிறுவனத்தில் உள்ளவர்கள்? அமைச்சர்களும் அங்கே இருந்திருக்கிறார்கள். அறங்கூறும் அவையத்தார்களும் அங்கே இருந்திருக்கிறார்கள். அரசனுக்குரிய சூழல் முழுவதும் இருந்திருக்கிறது. அதில் நல்லவர்களையெல்லாம் விடுத்துத் தீயவர்களை மட்டும் அழிப்பது என்றால், நிறுவனத்திற்கு தண்டனை கொடுத்த மாதிரி தெரியவில்லை. சம்பந்தப்படாத குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுத்ததாகத் தெரிகிறது.

அ: தீத்திறத்தோர் என்று சொன்னால், நிறுவனத்துக்கு உள்ளே இருக்கிற தீயவர்களையும் நாட்டிலேயுள்ள தீயவர்களையும் என்றுதான் அர்த்தம் ஆகும்.

ச: ஆனால், குற்றத்தில் சம்பந்தப்படாத தீயவர்கள் அழிக்கப்படுவது என்ன நியாயம்?

அ: புயலடிக்கிறபோது சம்பந்தமில்லாத எல்லாமே அழிந்து விடுவதைப்போல.

ச: புயல் என்ற ஒன்று ஆறறிவற்ற ஒரு ஜடம். ஆனால், அறிவோடு கூடிய, அருளோடு கூடிய, கருணையோடு கூடிய, தாய்மைப் பண்போடு கூடிய ஒருத்தி சபிக்கும்போது இவை பற்றி எல்லாம் சிந்தித்து இருக்க வேண்டும் அல்லவா?

அ: அதனால்தான், அறிவு உடையவளாகையினால்தான், நீதி என்ற புயலை அவள் வீசச்செய்தபோது, நல்லவர்களை விலக்கி விட்டு, தீயவர்களை அழி என்று சொன்னாள்.

ச: அதை எப்போது சொன்னாள்? அக்கினிதேவன் வந்து கேட்ட ஒரே காரணத்தினால். அவன் அவளிடத்திலே கேட்காமல் இருந்திருப்பானேயானால், அனைவரையும் அல்லவா சுட்டுப் பொசுக்கி நிர்மூலமாக்கி இருப்பான்?

அ: ஒரு தலைவன் தன்னுடைய வேலைக்காரனிடத்திலே ஒன்றைச் சொல்லுகிறபோது, விளக்கம் அவன் கேட்டுக்கொள்வான் என்று நம்பிக்கையில் சொல்வதைப்போல, ஊரை அழிக்கிறேன் என்று அவள் சொல்லுகிறாள் என்று சொன்னால், அக்கினிதேவன் வந்து கேட்பான், கேட்கும்போது சொல்லலாம் என்று உட்குறிப்பே தவிர, வேறொன்றுமில்லை.

ச: அப்படிப்பட்ட எண்ணம் கண்ணகிக்கு இருந்திருக்குமானால், அக்கினிதேவன் வந்த உடனே 'நீ யார்?' என்று கேட்டிருக்கமாட்டாள். 'அக்கினிதேவா! வா! என் ஆணையை நிறைவேற்று' என்றல்லவா சொல்லியிருப்பாள்?

அ: செயலைச் செய்யும்போது திறமாகச் செய்யவேண்டும் என்பதனால்தான் வந்தது அக்கினிதேவன்தானா? அல்லது அவன் போலவே இருக்கும் வேறு ஒருவனா என்று தெரிந்து கொண்டல்லவா செய்யவேண்டும்? தவறைக் கண்டிக்கப் போகின்ற இவள், தவறு செய்துவிடக்கூடாது என்பதற்காக நிதானமாக இருக்கிறாள். ஆகையினால், மூன்று முறை அந்த மதுரையை வலம் வந்தாள் என்றால், என்ன அர்த்தம்? அவள் நிதானத்தோடு இருக்கிறாள். மூன்றுமுறை என்ற அந்த எண்ணிக்கை எதற்கு? ஒருமுறை போதாதா? மூன்றுமுறை என்று சொல்கிறபோதே, எதையெல்லாம் எரிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறாள் என்றுதானே அர்த்தம்? அது மட்டுமில்லாமல், தீத்திறத்தோர் பக்கமே சேர்க என்று சொன்னதனால், நல்லவை எதுவுமே அங்கு அழிந்திருக்காது. கெட்டவைகள் அழிந்திருக்கும். ஆனால், என்றைக்கோ ஒரு தவறு செய்தவன், எப்படியோ தப்பித்துக் கொண்டிருப்பான் அல்லவா? அவனுக்கும் இன்றைக்குச் சேர்த்துத் தண்டனை கிடைக்கட்டும் என்றுதான் அவள் கருதுகிறாள். ஏன் இப்படிச் செய்கிறாள் என்று சிந்திக்கும்போதுதான், நமக்கு ஒரு கருத்து வருகிறது. திருவள்ளுவர் சொன்னார். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. மன்னவனே! உன்னுடைய செல்வத்தை, உன்னுடைய படையை, உன்னுடைய நாட்டை அழிப்பதற்கு இன்னொரு படை தேவை இல்லை. ஏழை மக்கள் அழுகிறார்களே! அந்தக் கண்ணீர் ஒன்று போதும். உன்னுடைய படையை அழிக்கின்ற படை வேறொன்று இல்லை என்று தெரிந்துகொள் என்று வள்ளுவர் சொன்னதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறாள் இந்தப் பெண் தெய்வம். வேடிக்கை என்ன என்றால், வழக்குரைக்கச் செல்லும் முன்னர், சான்றோர்களை அழைத்தாள்; பெண்களையெல்லாம் அழைத்தாள்; தெய்வத்தையும் அழைத்தாள். ஆனால் எந்தத் தெய்வமும் வரவில்லை. அப்போதுதான் அவள் சிந்திக்கிறாள். ஓஹோ! இந்த நாட்டு மன்னவன் நல்லவன்; நீதி உடையவன்; ஆகவே அவனுக்கு எதிராக வருகின்ற எந்தக் குரலுக்கும் எதிர்க்குரல் கொடுக்கக்கூடாது; ஒத்துழைக்கக்கூடாது என்று இந்த மக்கள் செம்மறி ஆடுகளாகப் போய்விட்டார்கள் என்பதைக் கண்டுகொண்டு விட்டாள். உன்னுடைய நாட்டு மன்னவன்கூடத் தவறு இழைப்பான் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? சான்றோர்களுக்காவது இது புரியவேண்டாமா? என்ற கோபத்திலேதான், ஒரு மாபெரும் செயலைச் செய்து முடித்த பிறகுதான் இவர்களுக்குப் புத்தி வரும் என்று நினைக்கிறாள்.

ச: சான்றோர் வராமல் இருக்கலாம். பெண்கள் வராமல் இருக்கலாம். ஆனால் தெய்வங்கள்கூடவா அந்த மதுரையில் வாயை மூடிக் கொண்டிருந்தன?

அ: ஆமாம். தெய்வங்கள்கூட இந்தத் தெய்வத்தைப் பார்த்து, ஓஹோ! நம்மைவிடப் பெரிய தெய்வம் என்று கருதிக்கொண்டு தெய்வங்களும்கூட வாய்மூடி மவுனியாக இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

ச: நடக்க வேண்டியவை நடக்கும் என்று அவையும் வாயை மூடிக்கொண்டு இருந்தன.

அ: ஆமாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. ஆடித்திங்கள், அட்டமி ஞான்று மதுரை எரியும் என்று முன்பே ஒரு சாபம் இருந்தது. அதனால்தான், கதிரவன் சொல்லும்போது, 'கருங்கயற்கண் மாதராய்! நின் கணவன் கள்வனல்லன்! அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீ உண்ணும்' என்று சொன்னான். அதுமட்டுமல்ல. இந்தப்பெண், மதுரை நகரத்தை வலம் வந்து கொண்டிருக்கிறபோது, மதுரையைக் காக்கின்ற மதுராபதித் தெய்வம், அவளுக்கு முன்னால் போகக்கூட அஞ்சியதாம். முன்னிலை ஈயாள்; பின்னிலை நின்று அந்த தெய்வம் சொல்லுகிறது, 'இந்த ஊர் இன்று எரி உண்ணும் என்று முன்பே ஒரு சாபம் இருக்கிறது'. இதைத்தான் கண்ணகி நினைத்துப் பார்க்கிறாள். இந்த ஊர் இன்றைக்குத் தீயினால் சாகும் என்று இருக்குமானால், அது என்னால் செத்ததாக இருக்கட்டும். ஏனென்றால், பாதிக்கப்பட்டவள் நான்! ஏன் பாதிக்கப்பட்டேன்? நிரபராதியாக இருக்கின்ற ஒருவனை, நீதியைக் கொல்வதற்காக அவனைக் கொன்றானே இந்த மன்னவன்! அதற்குப் பதிலாக இந்த ஊரை நான் எரித்தேன் என்று இருக்கட்டும். இந்த ஊர் எரிவதற்கு வேறு காரணம் இருந்தாலும், அந்தக் காரணம் என் காரணமாக இருக்கட்டும் என்று மாற்றி, நீதியிலே ஒரு புரட்சியைச் செய்திருக்கிறாள். தானே எரியப்போகிற இந்த ஊர், தானே ஏன் எரியவேண்டும்? என்னுடைய காரணமாக, நீதியை நிலைநாட்டுகின்ற இந்த ஒரு காரணத்தினால் இந்த ஊர் எரிந்தது என்று சொன்னால், அது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். ஒரு தனிப்பெண் ஒரு முடியரசைக்கூடக் கீழே தாழ்த்தி வீழ்த்துவாள் என்று உலகத்துக்கு ஒரு பாடம் கற்பிப்பேன் என்று கருதினாளே தவிர, வேறு வகையில் இன்னொருவரை எல்லாம் அழிக்க வேண்டும் என்று ஆத்திரம் அவளுக்கு இல்லை. இது எங்கே தெரிகிறது என்றால், காப்பியத்தின் கடைசிக் கட்டத்தில் இளங்கோவடிகள் உட்பட அத்தனைபேரும் மங்கலதேவிக் கோட்டத்தில் வழிபடும்போது அந்தத்தாய் மேலிருந்து சொல்கிறாள், 'தென்னவன் தீதிலன்; யான் அவன் தன் மகள்'. ஆகவே, கடைசிவரை சிந்திக்கும்போது, அந்தத்தாய் செய்தது தவறே இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது.'


இப்படி அறிவொளி அவர்கள் கண்ணகி செய்தது குற்றமில்லை என்று சொல்வது ஒருபுறமிருக்க, இளங்கோவே "நீதிதான்" என்று சொல்கிறார் என்று ம.பொ.சி அவர்கள் கூறுகிறார்.

"மதுரை எரிந்து கொண்டிருக்கும்போது, அந்த மாநகரிலுள்ள பெண்கள், அழற்படு காதையில் 'கொங்கைப் பூசல் கொடிதோ?' என்று வினா எழுப்பி, 'அன்று' என்ற விடையும் தருகின்றனர்.

வஞ்சி நகரத்துப் பெண்கள்கூடக் கண்ணகியை வாழ்த்துக் காதையில் வாழ்த்திப் பாடுங்கால்,

கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச்
செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும்


என அவள் கூடற்பதியைக் கொளுத்திய செய்தி குற்றமற்றதென்பதை நினைவூட்டி அவளுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

இது மட்டுமின்றி, இளங்கோ,

நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும், மாதவரும் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோன்நகர் சீறினேன்; குற்றமிலேன் யான்


கண்ணகியைக் கொண்டே நியாயப்படுத்துகிறார்."


இக்காப்பியம் இயற்றப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து அவள் செய்தது சரியா தவறா என்று விவாதிக்கிறோம். ஆனால், இக்காப்பியம் நிகழ்ந்த காலத்திலேயே இவ்விவாதம் இருந்திருக்கிறது என்கிறார் ம.பொ.சி. இளங்கோவின் சமகாலத்திய கவிஞரான கூலவாணிகன் சாத்தனார், வஞ்சியில் கோயில்கொண்ட தெய்வக் கண்ணகியின் வாக்குமூலமாகவே கூடற்பதியைக் கொளுத்திய செயல் குற்றம் என்று சொல்கிறார். ஆனால், இளங்கோவுக்கு ஆயிரம் ஆண்டுகட்குப் பின் வந்த கவியரசர் கம்பர், கொடுங்கோலன் நாட்டைக் கொளுத்துவது குற்றமன்று என்று சூடாமணிப்படலத்தில் கூறுகிறார்.

எனவே, இதுபோன்ற பயனுள்ள விவாதங்கள் இலக்கியங்களை நேரடியாகப் படித்து அனுபவிக்கத் தயங்குபவர்களுக்கு இருக்கும் தயக்கத்தைப் போக்கி, அவற்றின்பால் ஆர்வத்தை உருவாக்கி வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.