http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 110

இதழ் 110
[ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

பத்தாம் ஆண்டு நிறைவு
கதை 13 - எருக்காட்டூர் பெருந்தச்சன்
தோழி
Kudumiyanmalai - 4
இராஜேந்திரசோழன் போற்றிய எசாலம் இராமநாதீசுவரர் திருக்கோயில்
திருக்கற்குடி விழுமியதேவர் கோயில்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 02
சிக்கல் மாடக்கோயில்
தேடலில் தெறித்தவை - 15
ஆத்தி சூடிய சோழ வீரமே!
இதழ் எண். 110 > கலைக்கோவன் பக்கம்
அன்புள்ள வாருணி,

ஜூன் இறுதியில் மேற்கொண்ட இந்தோனேசியப் பயணம் தமிழமுதத் தொடரில் தளர்ச்சி ஏற்படுத்திவிட்டது. அதனால்தான் அகவாழ்வின் சுடரொளி குறித்து எழுத முடியாது போயிற்று.

தமிழ் இலக்கியப் பக்கங்களில் படமாகும் காதல் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத உறுப்பினர்தான் அந்தச் சுடரொளி. ஆம் வாருணி, நீ ஊகிப்பது சரிதான். காலங்காலமாய் நம் உரையாடல்களில் நாயகியாய் எழுந்து நிற்கும் சங்கத் தோழிதான் அந்தச் சுடரொளி. சங்க இலக்கியங்களைப் பயின்றவர்கள், இந்தத் தோழியிடம் சிக்காமல் வெளிவந்திருக்க முடியாது. அகவாழ்க்கையின் இன்றியமையாத நடுப்புள்ளி தோழி. இவள் சார்ந்தே தலைவி வளர்கிறாள், வாழ்கிறாள். தளர்நடைக் காலந் தொட்டு, ஆற்றங்கரையில் மணல் வீடுகள் கட்டி, தினைப்புனத்தில் காவல் காத்து, வேட்டைக்கு வருபவனிடம் உள்ளம் தந்து, சில நேரங்களில் உடலையும் தந்து உருகிக் கசிந்து, மணந்து கொள்வானா, மாட்டானா என்று மருகிப் புழுங்கும் காலம் வரை தோழியே தலைவியை வழிநடத்துகிறாள். ஒரே பருவத்தினள், ஒத்த வயதினள், ஒன்று போல் உடனிருந்தே வளர்ந்தவள் என்றாலும், தோழி அறிவின் சுடரொளியாய் அநுபவங்களின் முத்ததாய்ப்பாய், வாழ்க்கையோட்டம் கண்டவளாய் எங்கெங்கு, எதுஎது சொல்ல வேண்டுமோ, அங்கங்கு அதுஅது சொல்லித் தலைவியின் வாழ்க்கையைத் தடம் மாறாது நடத்திச் செல்லும் அதிசயம் அவளை உளவியல் அறிஞராய்ப் படம்பிடிக்கிறது.



தோழி தலைவியிடம் மட்டுமா ஆளுமை செலுத்துகிறாள்? தலைவியின் குடும்பமே அவள் சார்ந்துதான் தலைவியை மதிப்பிடுகிறது. தலைவனோ, சந்திக்கவும் மகிழ்ந்திருக்கவும் சந்திக்கும் இடம் கேட்கவும்கூடத் தோழியிடமே மன்றாடுகிறான். காதல் தானாக முளைத்தாலும் அதை நீ%ற்றி வளர்ப்பவள் தோழியே. நீ கொண்ட உணர்வு காதல்தானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்; அதுதான் என்றால், நம் குடும்பச் சூழலுக்கு அது சரியாகுமா என்பதை நினைத்துப்பார். நீ சந்தித்தவர் சந்திப்புகளைத் தொடர்வாரா? அவர் வரும் வழித் துன்பங்கள் நினைத்தாயா! அத்தனையும் மீறி அவர் வருவாரா? மணவினை சாத்தியமா? இரகசிய சந்திப்புகள் தொடந்தால் ஊர் வம்பு பேசுமே, யாருக்கும் தெரியாமல் சந்தித்தல் கூடுமா? எதுவரை காதலை மறைக்கலாம், எப்போது, யாரிடம், எதன்வழி அதை வெளிப்படுத்தலாம் என்றெல்லாம் தொடர் சிந்தனைகளுடன் தலைவியிடம் தோழி கருத்துப் பரிமாற்றம் கொள்ளும் காட்சிகள் நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை ஆகிய இலக்கியங்களில் பாடல்களாய்ப் பதிவாகியுள்ளன.



சங்க இலக்கியப் பதிவுகளில் உயர்நிலைப் பதிவாய் உச்சம் தொட்டிருப்பவள் தோழியே. நாயக நாயகியரான தலைவனுக்கும் தலைவிக்கும்கூடச் சங்கம் அந்த இடத்தைத் தரவில்லை. தலைவனின் தோழனாக அங்கும் இங்குமாய்க் கண் காட்டும் பாங்கனும் தோழிக்கு முன் துகளாகவே தெரிகிறார். தலைவியை வளர்த்தெடுத்து, அவள் வாழ்வு கண்டு அகமகிழும் செவிலியும்கூடத் தோழிக்குக் கட்டுப்பட்டவளாகவே காட்சிப்படுகிறார். பெற்றவர்களும், உற்றவர்களும், ஊராரும், உடன்வாழ்நரும்கூடத் தொடமுடியாத இடமாகவே தோழியின் நிலைப்பாட்டைச் சங்க இலக்கியங்கள் வரைந்துள்ளன. ஒரு பறவைப் பார்வையில் பார்க்கும் போது, சங்க இலக்கிய மாந்தர்கள் அனைவருமே, சமகால அறிவியல், சமூகப் பார்வை, நாட்டு நடப்பு ஆகியவற்றில் தெளிவான பார்வை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருந்த போதும், தோழியின் அறிவு வளம், நம்மை மலைக்க வைக்கிறது. ஐவகை நிலஞ் சார்ந்த தாவரவியல், விலங்கியல் அறிவு, நில, நீர் வழிகள் பற்றிய தெளிவு, காலம் பற்றிய உணர்வு, மக்கள் சார்ந்த அனைத்து விதமான பண்பாட்டுப் பலகணிகள் வழியான பார்வை, வாழ்க்கை பற்றிய கூர்த்த சிந்தனை, அறிந்து உரியன திட்டமிடும் வினையாற்றல் எனத் தோழி பற்றிய சங்க இலக்கியங்களின் வரைதல் வெளிப்படுத்தும் பேருருக் காட்சிகள் அந்த வரிவடித்தை ஒரு வட்டத்திற்குள் அடக்கமுடியாமல் நம்மை அலைக்கழிக்கின்றன.

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், காணும் காட்சிகள் அனைத்திலும் இருப்பான் என்று இறைவனைப் புகழ்வது போலவே, தோழியும், சங்கச் சமூகத்தின் வாழ்க்கைப் பக்கங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறாள். தலைவியின் மனச்சான்றே தோழியாக உருவகிக்கப்பட்டுள்ளதோ எனக் கருதுமாறு பல பாடல்களும், சமூகத்தின் ஒருங்கிணைந்த பண்பாட்டுக் காட்சியாகத் தோழி காட்டப்பட்டிருக்கிறாளோ என்று கருதுமாறு பல பாடல்களும், காதல் என்னும் மென்மையான உணர்வின் அனைத்துப் பரிமாணங்களையும் மனித உள்ளங்கள் உள்வாங்கிக் கொள்ளவேண்டுமென்றே தோழி படைப்புக் கண்டிருக்கிறாளோ என்று எண்ணுமாறு பல பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்புகளில் சமைக்கப்பட்டுள்ளன. ஆழ்ந்து நோக்கும் போதுதான், இலக்கிய அடிகளுக்குள் மின்னும் தலைவி-தோழி-தலைவன் உரையாடல்கள் எவ்வளவு நுட்பமாகச் சங்க காலச் சமூக மாந்தரின் உளவியல் ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளன என்பதை அறியமுடியும். பரந்துவிரிந்த உலகத்தில், சிறுகுடிப் பிறந்த சிறுமகளாய்த் தோற்றம் காட்டும் தோழி, சாட்டையென அமைந்து பல பம்பரங்களின் வாழ்க்கை ஓட்டதையும் அவை ஆடவேண்டிய களங்களையும்கூட நிருணயிக்கிறாள். உலக இலக்கியங்கள் அனைத்தையும் ஒரு நோக்கில் வைத்துப் பார்க்கும் போதுதான், சங்கத் தோழிக்கு இணையான ஓர் உருவாக்கத்தை வேறெந்த நாகரிக மண்ணும் படைக்காமை புலனாகிறது! சங்கப் புலவர்களின் நிகரற்ற இந்த ஆளுமை இன்னமும் வரலாற்றில் சரியாகவும் முறையாகவும் பதிவாகாமை, பல்துறை சார்ந்த பார்வைகளின் கீழ்த் தோழி கொணரப்படாமையால்தான்.

சங்கம் தாண்டிய காப்பிய காலத்தும், பின்னால் வளரும் பெருங்கதை, சிந்தாமணிப் பருவத்தும் தோழியர் காட்சி உண்டென்றாலும், ‘சங்கத் தோழி’யின் புலப்பாடில்லை. அறிவார்ந்த அந்த அற்புதப் பெண்ணைக் காலத்திரைகள் கைக்கொண்டுவிடுவதால், வெற்றிடமாகவே ‘தோழியின்’ நிலை. கல்வெட்டுகள், வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சுவடுகளாய்க் கொண்டிருந்தபோதும், மனித உணர்வுகளை, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல இடங்களில் வெளிப்படுத்தி நின்றபோதும், தோழிக்கு அங்கு இடமில்லை. கடமைக் கடம் பூண்டவர்களையே அதிகமாய்க் காட்சிப்படுத்தும் கல்வெட்டுகளில், காதல்கூடக் கண் சிமிட்டலாகத்தான் பதிவாகியுள்ளது. ஆனால், சிற்பிகள், சங்கத் தொடர்களில் சங்கமித்தவர்கள் போல், தோழியைக் காப்பாற்றிக் கரை சேர்த்துள்ளனர்.

பல்லவ விரல்கள் வித்தகம் படைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கடலோரம், தமிழ்நாட்டுக் கலை வரலாறு உச்சத்தை தொட்ட இடம். சிறு குன்றுகளை, பெரும் பாறைகளை, மேலிருந்து கீழாக வேண்டாதன நீக்கி, ஒருகல்தளிகளாக இராஜசிம்மப் பல்லவர் உருவாக்கிய களம். அங்குதான், மேற்குப் பார்வையாய் வடக்கிலிருந்து இரண்டாம் தளியாய், ‘அருச்சுனரதம்’ என்று மக்களால் வழங்கப்படும் இருதள ஒருகல்தளி, கலப்புத் திராவிடமாய்க் கட்டமைந்து, தோழியையும் தலைவியையும் ஒரு சேரக் காட்சிப்படுத்துகிறது. வடிவமைத்த சிற்பி மிக வல்லவர். பாத்திரப் படைப்புகளின் பின்புலம் அறிந்தவர். சங்கச் செய்யுட்களில் அலைமோதும் உணர்வுச் சூழல்களை உள்வாங்கியவர். ஒருகல்தளியின் கீழ்த்தள கிழக்குமுகத் தெற்குப் பத்திகள் அவர் பொறுப்பில். ஒடுக்கப் பத்தியில் தோழியையும் தலைவியையும் படைத்தார். தெற்கு கர்ண பத்தியில் தலைவனை வீறுடன் செதுக்கினார். காத்து நிற்பவனாய்த் தலைவன், காணத் தயங்குபவளாய்த் தலைவி. அவள் கைப்பிடித்துத் திருப்பி, அவனைக் காணச் செய்யும் முயற்சியில் தோழி. மூவரின் முகங்களும் பண்பாட்டுப் பலகணிகளாய்ப் பேராண்மைத் தவிப்பு, சேர்த்துவைக்கும் துடிப்பு, சேர்க்கை தடுக்கும் நாணம் எனும் உடல்மொழி கலந்து காட்டும் காட்சி, எழுத்தில் வடிக்க முடியாத அற்புதம். கூடுதல் சிறப்பு, இந்தக் காட்சி, கதிரவன் பார்வையில் கிழக்கு நோக்கியிருப்பதுதான். தோழி ஞாயிறு போன்றவள் என்பதைக்கூடப் பல்லவச் சிற்பி மறந்துவிடாமல் பதிவு செய்திருக்கிறார்.

இதுமட்டும்தானா. இன்னமும் உண்டா? காத்திரு வாருணி, கதவுகள் திறக்கும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.