http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 110
இதழ் 110 [ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர் இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டுக் கதைகள்
வானம் இரண்டாகப் பிளந்து விட்டதோ? என்று சந்தேகமே ஏற்பட்டுவிட்டது. அப்படியொரு அடைமழை. தாரை தாரையாய் தண்ணீர் பெருகி நிலத்தில் சிறு வெள்ளமே ஓடிக் கொண்டிருந்தது. ஆனி மாதத்தில் உஷ்ணம் படபடக்கும் மதிய நேரத்தில் திடீரென்று கருமேகக் கூட்டங்கள் திரண்டு நின்று இப்படி பேய்மழையாய்க் கொட்டுவதைப் பெருந்தச்சர் ஒரு போதும் கண்டதில்லை. காலம் மாறிக் கொண்டிருப்பதைப்போல் பருவ நிலைகளும் மாறிக் கொண்டிருக்கின்றன போலும் என்று அவருக்குத் தோன்றியது.
கண்களை மூடிக்கொண்டார். அந்த சளுக்க இளைஞனின் சிரித்த முகம் மனதில் ஒரு முறை தோன்றி மறைந்தது. அவரை ஒரு வாரகாலமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி வரும் அதே முகம். அதே கேள்வி. ‘நீர்தான் பெருந்தச்சரா?’ அவனை நினைத்தவுடன் கோபம் தலைக்கேறிற்று. வேண்டாம். அந்த நினைப்பே வேண்டாம் என்றுதானே ஊரை விட்டு இத்தனை தூரம் ஓடிவந்தது? இங்கு வந்தும் அவனையே நினைத்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? மனதை அதட்டினார். எண்ணங்களைத் திசைமாற்ற மழைக்காக அவர் ஒண்டிக் கொண்டிருந்த இருள் மண்டிய அந்த இடத்திற்குள் பார்வையைச் செலுத்தினார். ஒரு சிறிய குன்று அது. நாலெட்டு எடுத்து வைத்தால் உச்சிக்குச் சென்றுவிடலாம் என்று தோன்றியது. குன்றின் முன் பகுதியை எவரோ எப்போதோ நன்கு அகழ்ந்து வைத்திருந்தார்கள். அதனால் உள்ளே ஏறக்குறையப் பத்து பன்னிரண்டுபேர் மழைக்காக ஒதுங்கி நிற்க முடிந்தது. அவர்களில் ஒருவனாக அவரும் நின்றிருந்தார். சர்வ சாதாரணனாக. பெருந்தச்சன் மஹாசிற்பி முதலான பட்டங்கள் எதுவுமற்றவனாக. வெறும் மனிதனாக. மனம் கனத்திருக்கும் வேளைகளில் புதிய மனிதர்களுடன் நின்று கொண்டிருப்பதும் ஆறுதலாகத்தான் இருக்கிறது. இவர்களில் எவருக்கும் அவரைத் தெரியாது. அதனால் எவரும் இவரைக் கண்டுகொள்ளப் போவதில்லை. நலம் விசாரிக்கப் போவதில்லை. அடுத்து என்ன பணி நடந்து கொண்டிருக்கிறது? மஹாராஜாவே கூப்பிட்டனுப்பி மரியாதைகள் செய்தாராமே? என்றெல்லாம் விசாரிக்கப் போவதில்லை. ஊரைவிட்டுக் கிளம்பி வந்தது ஒருவகையில் நல்லதுதான். நிம்மதியாக இருக்கிறது. தாம் ஒதுங்கி நின்ற பகுதியில் தெரிந்த அகழப்பட்ட சுவரின் பக்கத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தார். அதிகம் பொளிசல்கள் விழாமல் நன்றாகத்தான் அகழ்ந்திருக்கி றார்கள். ஒரு வேளை.. இந்தப் பாறை.. செதுக்குவதற்கு ஏதுவானதாக இருக்குமா?? ‘இப்படித்தானே அங்கும் முயன்றாய்? என்ன ஆயிற்று? உன்னால் முடியாது. பேசாமல் இந்த முயற்சியை விட்டு விட்டு வேறு வேலையைப் பார்!’ - மனதுக்குள்ளிருந்து ஒரு குரல் எழும்பி அவரது உற்சாகத்தைக் குலைத்தது. ‘விட முடியாது. ஒருபோதும் விட்டுவிட முடியாது. பரம்பரை பரம்பரையாக நாங்கள் மேற்கொண்டு வரும் தொழிலும் அதன்மீது நான் கொண்டுள்ள பக்தியும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் தருணம் இது. இப்படியே விட்டுவிட முடியாது!’ - அவர் பதில் கூறினார். அவருக்குள் ஒரு பட்டிமன்றம் துவங்கியது. பெருந்தச்சரின் குடும்பம் அவரது சொந்த ஊரான பூங்குன்றம் பகுதியில் தச்சு வேலைகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. வழி வழியாக அவரது எள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டன், பாட்டன் என்று இதே தொழிலில் முந்நூறு நானூறு வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்கள். ‘தச்சுக்காரர் வீடு’ அல்லது ‘ஆசாரியார் வீடு’ என்று அந்தப் பகுதியில் எவர் விசாரித்தாலும் நேராக இவரது வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். தேர் செய்ய வேண்டுமா? பெருந்தச்சரைக் கூப்பிடு! மரச்சிற்பங்கள் செய்ய வேண்டுமா? பெருந்தச்சரைக் கூப்பிடு! வீட்டு நிலை.. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மரத் தூண்கள்.. உத்திரம்.. திருக்கோயில்... தெய்வத் திருவுருவங்கள்.. எதுவாக இருந்தாலும் குறிப்பிடத்தகுந்த பெரிய பணியாக இருந்தால் பெருந்தச்சருக்கு அழைப்பு வந்துவிடும். அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் சமயங்களில் வாரக்கணக்கில் பூங்குன்றத்திலேயே தங்கிப் பொறுமையாகக் காத்திருந்து வேலையை முடித்துக் கொண்டு போவோர் உண்டு. தொழிலில் அத்தனை சுத்தம். அத்தனை நுட்பம்! சில காலங்களுக்கு முன் பாண்டி தேசத்து அரண்மனையிலிருந்தே அழைப்பிதழ் வந்துவிட்டது. போய் ஆறு மாதகாலம் மதுரையிலேயே தங்கி அத்தனை வேலைகளையும் திருப்தியாக முடித்துக் கொடுத்துவிட்டு கை நிறையப் பொற்காசுகளோடும் நகை நட்டுக்களோடும் ஊருக்கு வந்து சேர்ந்தார். ஏற்கனவே அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஊர்க்காரர்களுக்குக் கர்வம் தாங்க முடியவில்லை. நாலா பக்கங்களிலும் ‘பெருந்தச்சர் எங்களூர்க்காரர்! இராஜாவிற்கு வேலை முடித்துக் கொடுத்து விட்டு வந்த பெருந்தச்சர் எங்களூர்க்காரர்!’ என்று பறையறைந்து அறிவிக்காததுதான் குறை. இத்தனை பெரிய கீர்த்தியும் புகழும் கொண்ட பெருந்தச்சருக்குப் பத்து நாட்களுக்கு முன் ஒரு இளைய சளுக்கச் சிற்பியின் வடிவில் ஒரு சோதனை வந்து சேர்ந்தது. காலை வேளையில் அவர் சீடர்கள் புடைசூழ ஆல மரத்தடியில் அமர்ந்து வெற்றிலையைக் குதப்பியவாறு ஊர்ப்பெரியவர்களுடன் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கே வந்து சேர்ந்தான் அவன். நெடிசலான தேகம். ஐந்து அல்லது ஐந்தரை அடி உயரம். மாநிறம். ‘ஐயா! நீர்தான் பெருந்தச்சரா?’ அவன் அவரை விட்டுவிட்டு அடுத்தபடியாக அமர்ந்திருந்த பெரியவரைப் பார்த்து வினவினான். ஏன்? என்னைப் பார்த்தால் தச்சனைப்போல் தெரியவில்லையா என்ன? என்று எடுத்த எடுப்பிலேயே கோபம் வந்தது. இருந்தாலும் அயலூர்க்காரன் என்பதால் அடக்கிக் கொண்டார். ‘நானில்லையப்பா. இவர்தான்!’ என்று பெரியவர் கைகாட்ட அவனது விழிகள் பெருந்தச்சரின் மீது படித்தன. கரங்கள் குவிந்தன. ‘ஐயா! என் பெயர் சுதாமன். சளுக்க தேசத்திலிருந்து வருகிறேன். நான் ஒரு பரம்பரைச் சிற்பி!’ - ஒரு சளுக்கன் எப்படி இத்தனை அட்சரசுத்தமாகத் தமிழ் பேசுகிறான்? ‘சொல்லுங்கள். என்ன வேண்டும்?’ ‘தெற்கிலிருந்து நன்கு வேலைப்பாடுகள் செய்யத்தெரிந்த சிற்பிகள் சிலரை அழைத்துக்கொண்டு வரச்சொல்லி எங்களின் பேரரசர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். பெரிய திருக்கோயில் பணியொன்று துவங்கப்போகிறது. எனது தாய் இந்தப் பகுதியைச் சேர்ந்தவராதலால் தங்கள் குடும்பத்தைப் பற்றிப் பலதும் சொல்லியிருக்கிறார்..’ ‘இருக்கட்டும், இருக்கட்டும். ம்..’ - கர்வத்துடன் தலையசைத்தபடி அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வந்தார் பெருந்தச்சர். தமது கீர்த்தி சளுக்க தேசம் வரை போயிருக்கிறது! என்ன இருந்தாலும் நமது பகுதியைச் சேர்ந்த பெண்ணல்லவா அங்கே போயிருக்கிறாள்? நம்மைப் பற்றிச் சொல்லாமல் இருப்பாளா? அவன் கேட்ட அடுத்த கேள்விதான் அவரைக் கலவரத்திற்குள்ளாக்கிவிட்டது. ‘தாங்கள் கல்லிலும் பாறைகளிலும்கூடச் சிற்ப வேலைகள் செய்வீர்கள்தானே?’ என்ன? கல்லிலா? என்ன சொல்கிறான் இவன்? ‘கல்லிலெல்லாம் வேலை செய்யும் மரபே இங்கு கிடையாதே தம்பி? அதையெல்லாம் அபர காரியங்களுக்கென்று பெரியவர்கள் ஒதுக்கி வைத்து விட்டார்கள்! நடுகல் மாதிரியான வேலைகளைத்தான் கல்லில் செய்வது வழக்கம். அந்த மாதிரி வேலைகளை நான் செய்வதில்லை..’ அவனது முகத்தில் ஒரு சிறிய எள்ளல் முறுவலாக விரிந்தது. ‘இப்போது காலம் மாறிக்கொண்டிருக்கிறது ஐயா. எங்கள் தேசத்தின் பண்டைய சிற்பிகள் கற் குன்றுகளில் விதவிதமாய் திருக்கோயில் வடித்திருக்கிறார்கள். ஒரு முறை வந்து பாருங்கள்.’ அவருக்குத் தலை சுற்றியது. ஊர்ப்பெரியவர்கள் அத்தனை பேருக்கும் முன்னால்... தன்னை அவமானப் படுத்துவதற்காகவே வந்து சேர்ந்திருக்கிறானா இவன்? ‘அளவில் பெரிய சிற்பங்கள் முதல் கையளவு சிற்பம் வரை கல்லில் வடிக்கும் சூட்சுமம் சளுக்கிய சிற்பிகளுக்கு உண்டு. இதோ பாருங்கள்!’ - அவன் இடைக்கச்சிலிருந்து சிறிய கருங்கல் விக்கிரகத்தைக் கையிலெடுத்தான். பளபளப்பான கல்லில் செய்த சிற்பம். நான்கங்குல உயரம். அதில் ஒரு குழந்தை யானை உடல் மடக்கிக் கையில் எதையோ வைத்துக்கொண்டு.. ஏதோ இனம்புரியாத வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அதனைக் கையில் வாங்கிப் பார்த்தார். ஓ! தலை மட்டும் தான் யானைத் தலை. உடல் குழந்தையின் உடல். கை கால்களெல்லாம் சொப்புச் சொப்பாக.. கொள்ளை அழகு! ‘இது போன்ற வேலைகளை நாங்கள் மரத்தில் சர்வ சாதாரணமாகச் செய்வோம். கல்லில் செய்து பழக்கமில்லை!’ என்றார் தச்சர். அவரது குரல் நம்பிக்கையில்லாமல் ஒலித்ததை அவராலேயே உணர முடிந்தது. ‘அப்படியா? உங்களுக்குக் கல்லிலும் வேலை செய்ய வரும் என்று எனது தாய் மிகவும் வற்புறுத்திக் கூறியதால்தான் நம்பிக்கையுடன் இத்தனை தூரம் பயணப் பட்டு வந்தேன். ஏமாற்றமாகி விட்டது..’ ஊரின் நடுவிருக்கைப் பெரியவர் அதவத்தூரார் கையை ஊன்றி எழுந்தார். அவரது முகம் மாறியிருப்பதைப் பெருந்தச்சர் கவனிக்கத் தவறவில்லை. ‘தம்பி! நீங்கள் இப்போதுதான் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். சத்திரத்திற்கு ஆள் அனுப்புகிறேன். சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு மூன்று நாட்களில் நல்ல செய்தியாகச் சொல்லி அனுப்புகிறோம்!’ அவன் தலை அங்கிருந்து மறைந்ததும் அதவத்தூராரும் மற்ற ஊர்ப்பெரியவர்களும் தலைக்குத் தலை பேசத்துவங்கி விட்டார்கள். ‘மிகப் பெரிய வாய்ப்பு பெருந்தச்சரே! சளுக்க தேசம் வரை உமது புகழ் பரவியிருக்கிறது. அங்கு சென்று ஒரு முறை வேலை செய்துவிட்டு வந்துவிட்டீர்களானால் இந்தப் பாண்டி தேசமே உங்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கொண்டாடாதோ? அந்தப் புகழில் சிறிதளவாவது எங்களுக்கும் கிடைக்காதோ?’ ‘மரவேலைகளில் புகுந்து விளையாடும் உமக்குக் கல்லில் வேலை செய்வது பிரமாதமா என்ன? முயற்சி செய்து பாருங்களேன்? இன்றே கம்மாளத் தெருவிலிருந்து ஆட்களை வரவழைத்துக் கல் பொளிக்கும் உளிகளைச் செய்து தரச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்!’ ‘ஆமாம் ஆசானே! நீங்கள் மட்டும் மனது வைத்தால் கல்லில் என்ன.. எந்தப் பொருளில் வேண்டுமானாலும்..’ - உற்சாகத்துடன் பேசத்துவங்கிய அவரது சீடனொருவன் அவரது பார்வையில் தெறித்த அனலைப் பார்த்துவிட்டுப் பேச்சை அடக்கிக் கொண்டான். அதவத்தூரார் துண்டை உதறிக்கொண்டு எழுந்து நின்றார். ‘அந்த சளுக்கனை ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி இரண்டு மூன்று வாரங்கள் இங்கேயே தங்கவைத்து விடுவோம். அதற்குள் நீங்கள் கல்லில் சிற்பங்கள் வடிக்கப் பழகி விடுங்கள். அவனுடன் உங்களையும் பரிவாரங்களையும் அனுப்பி வைத்தால்தான் எங்களுக்குப் பெருமை!’ அடுத்த இரண்டு நாழிகை நேரத்தில் கழுத்தைப் பிடித்துத் துரத்த மாட்டாத குறையாகக் கையில் கல் பொளிக்கும் உளியைக் கொடுத்துத் துரத்தி விட்டார்கள். அவர்கள் கொடுத்த உற்சாகத்தில் சற்று தூரத்திலிருந்த சிறிய மலைக்குச் சென்று பாறைகளை உளியால் தட்டிப் பார்த்தார். ம்ஹும்! கல் செதில் செதிலாகப் பொளிந்து விழத் துவங்கிவிட்டது! சரி, இந்தக் கல் சரியில்லை போலிருக்கிறது என்று அடுத்த பாறை.. அதற்கடுத்த பாறை என்று முயற்சி செய்து கொண்டே போனதில்.. அத்தனை பாறைகளும் உளி பட்டுச் சேதமானதுதான் மிச்சம்! வித்தியாசமான சப்தங்களைக் கேட்டு ஊரிலிருந்த சிறுவர்கள் வேறு அவரைச் சுற்றித் திரண்டு நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டார்கள். வெறுத்துப் போய்விட்டார் தச்சர். அதற்குப்பிறகு வண்டி பிடித்து மெய்யத்து மலைக்குச் சென்று அங்கும் தட்டிப் பார்த்து எதுவும் சரிவராமல் முழுவதுமாக நம்பிக்கை இழந்துபோய் நான்கு நாட்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து.. இப்போது எங்கிருக்கிறோம் என்பதே அவருக்கு மறந்து போய்விட்டது. ஏதோ ஒரு ஊர். அவ்வளவுதான். மாலை நேரத்தில் மழை நின்றதும் அங்கு கூடியிருந்த அத்தனை மனிதர்களும் கிளம்பிப்போக ஒரு ஓரத்தில் துண்டை விரித்துப் படுத்துவிட்டார் தச்சர். பசி. களைப்பு. மயக்கம். கோபம். இயலாமை என்று விதவிதமான உணர்வுகள் அவரை ஆக்கிரமித்தன. அழ்ந்த உறக்கத்தில் அவருக்கு ஒரு கனவு. அந்தக் கருநிற யானை.. இல்லை, குழந்தை.. எழுந்து நின்றது. கையை ஆட்டி அவரைப் பார்த்துச் சிரித்தது. வேடிக்கையாகத் துரத்தத் துவங்கியது. அவரும் சிரித்துக் கொண்டே விளையாட்டுக் காட்டியபடி ஓடினார். சிறிது நேரம் கழித்து யானை ஓடியது. இவர் துரத்தினார். குண்டு குண்டாய்க் கால்களை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி.. இறுதியில் அந்தக் குன்றை அடைந்த அந்தக் குழந்தை யானை விடுவிடுவென்று அங்கே அகழப்பட்டிருந்த குகைக்குள் நுழைந்து.. வேண்டாம்! உள்ளே இருட்டு! என்று அவர் கதறுவதைப் பொருட்படுத்தாமல்.. அதனைத் தொடர்ந்து வேகவேகமாய் உள்ளே நுழைந்தவர் இருட்டில் அதனைக் காணாமல் திடுக்கிட்டு அங்குமிங்கும் துழாவ.. பளீரென்ற காலை வெளிச்சம் முகத்தில் படிந்தது. ‘சாமி! சாமி!’ யாரது இந்த நேரத்தில் தம்மை அழைப்பது? என்று எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். எதிரே ஒரு மாட்டுக்கார மன்றாடிச் சிறுவன் கையில் கோலுடன் சிரித்த முகமாய் நின்று கொண்டிருந்தான். பொழுதா விடிந்துவிட்டது? ‘என்ன சாமி? ஏதோ வேண்டாம் வேண்டாமுன்னு புலம்பிக்கிட்டிருந்தீங்க? கனவுங்களா?’ சட்டென்று அந்தக் குட்டி யானை குன்றின் அகழ்வுக்குள் மறைந்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஆமாம் கனவுதான். என்ன ஊரப்பா இது?’ ‘இது எருக்காட்டூரூங்க. நீங்க வெளியூரா?’ ‘ஆமாம். இந்தக் குன்றுப் பகுதிக்கு யாராவது வருவார்களா?’ ‘இங்க யாரு சாமி வரப்போறாங்க? வழி தவறுன ஆடு மாடுங்கதான் வரும். ஊர் இங்கருந்து தொலைவுல இருக்குதுங்க. கோயில் குளம் பக்கத்துல இல்லாததால நேற்று மட்டும் ஆட்கள் போக்குவரத்து இங்க அதிகமாக இருந்திருக்கும். அவ்வளவுதான்..’ ‘சரி. எனக்குக் கொஞ்சம் உணவு எடுத்துக்கொண்டு வா. அத்துடன் ஒரு எண்ணை விளக்கும் வேண்டும். இந்தா பொற்காசு..’ ‘ஐயோ காசெல்லாம் எதுக்குங்க? இன்னும் ரெண்டு நாழில கஞ்சியோட வாரேனுங்க. வௌக்கு பெரிய வீட்டுல கேட்டுத்தான் எடுத்து வரணும்..’ என்று கூறிவிட்டு அவன் மறைந்து போனான். அகழப்பட்ட பின்பகுதிக்குச் சென்று பாறையைத் தடவிப் பார்த்தார். மழை ஈரம் எப்படியோ அதில் இறங்கியிருந்தது. ‘ஹி..ஹி.. ஹி..ஹி..’ அங்கு மறைந்த யானையின் மழலைச் சிரிப்பு சுவர்களில் பட்டுத் தெறிப்பது தெளிவாகக் கேட்டது. ஏதோ ஒரு தவிர்க்க முடியாத ஆவேசம் உந்தித் தள்ளியது. இடுப்பில் முடிந்து வைத்திருந்த உளியையும் சிறு சுத்தியலையும் எடுத்தார். கல்லைப் பொளிக்க ஆரம்பித்தார். அடுத்த ஐந்து ஆறு நாட்களுக்கு குகைக்குள்ளிருந்து இடைவிடாமல் உளிசப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவரை தொந்தரவு செய்வதற்கு அஞ்சி அந்த மன்றாடிச் சிறுவன் கஞ்சியையும் எண்ணையையும் வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவான். ஓரிரு நாழிகைகள் கழித்து வந்து பார்த்தால் அனைத்தும் தீர்ந்து போயிருக்கும். ஏழாம் நாள் காலை முகமெங்கிலும் புழுதியுடன் பித்துப் பிடித்தவராகப் அந்த மனிதர் குகை வாயிலில் படுத்துக் கிடப்பதை சிறுவன் கண்டான். அவரை எழுப்புவதற்கே தயக்கமாக இருந்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். ‘சாமி! சாமி!’ ‘உள்ளே போய்ப் பார்!’ - ஒரு முனகல் அவரிடமிருந்து வெளிப்பட்டது. சற்று பயத்துடன் உள்ளே நுழைந்தான் சிறுவன். குகையின் பின்புறச் சுவரில் விளக்கு ஏற்றப்பட்டிருக்க அதற்கு அருகே.. என்ன அது? அது போன்ற ஒரு உருவத்தை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. கீரீடம் தரித்த யானைத் தலை. மனித உடல். அதுவும் சிறு குழந்தையின் உடல். கால் மடக்கி அமர்ந்து வலது கையில் எதையோ வைத்துக்கொண்டு அதனை துதிக்கையால் சுவைத்துக்கொண்டு.. பார்த்தவுடன் அதனைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. இந்தப் பாறையில் இது எப்படி வந்தது? அப்படியானால்.. அந்தப் பெரியவர் சிற்பக்காரரா? அடுத்த ஒரு நாழிகையில் அவன் ஒட்டுமொத்த எருக்காட்டூரையும் அங்கு திரட்டிக் கொண்டு வந்துவிட்டான்! ‘ஒரு வார்த்தை தகவல் சொல்லியிருக்கக் கூடாதா? பூங்குன்றத்துப் பெருந்தச்சரை இத்தனை மரியாதை குறைவாக நடத்திவிட்டார்கள் எருக்காட்டூர்க்காரர்கள் என்று எங்களை ஏச மாட்டார்களா?’ என்று மாய்ந்துபோய் விட்டார் ஊர்த்தலைவர். அவரையும் மற்ற ஊர்க்காரர்களைச் சமாதானப்படுத்துவதற்குள் தச்சருக்கு உன்பாடு என்பாடு என்றாகி விட்டது. அவர்களுக்கு அந்த யானைமுகக் கடவுளை அறிமுகப்படுத்தினார். இன்னும் சில நாட்களில் தமது சீடர்களுடன் அங்கு வந்து அந்தக் குன்றை இன்னும் அகழ்ந்து ஒரு பெரிய திருக்கோயிலாகக் கட்டித் தருவதாகச் சொன்னார். ஊர்க்காரர்கள் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு ஒரு துண்டை விரித்துக் கையில் கழுத்தில் கிடந்ததையெல்லாம் திரட்டி அவரது காலடியில் வைத்தார்கள். ‘வேண்டாம். இந்தக் குன்று தெய்வம் உறையும் குன்று. இங்கு வந்ததால்தான் மரத்தச்சனான நான் கல் தச்சனானேன். இனி இந்தக் கடவுள் எமக்கும் எம் குலத்திற்கும் வழிகாட்டுவார். வருகிறேன்!’ இரண்டு நாட்கள் கழிந்தபின் அந்தச் சளுக்கச் சிற்பியும் பூங்குன்றத்து ஊர்ப் பெரியவர்களும் தச்சரின் சீடர்களும் எருக்காட்டூர் மண்ணில் நின்றார்கள். குன்றின் அகழ்வுக்குள் தனியே சென்ற சளுக்கச் சிற்பி சிறிது நேரத்தில் கண்களில் நீருடன் வெளியே வந்தான். அப்படியே பெருந்தச்சரின் கால்களில் வீழ்ந்தான். பதில் பேசாமல் உளியைக் கீழே வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். அவ்வாறு சிற்பிகள் உளியைக் கீழே வைத்து விட்டால் மேற்கொண்டு அந்தத் தொழிலை மேற்கொள்ள மாட்டார்கள் என்பது பொருள். பெருந்தச்சருக்குப் பெரிய வருத்தம். அவனை எங்கு தேடியும் காணவில்லை. தச்சரின் சீடர்கள் அவரிடம் கல்பொளித்து சிற்பம் வடிக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டு அந்தக் கோயிலை மிகப்பெரியதாக அகழ்ந்தார்கள். எருக்காட்டூருக்குப் பெரிய பெருமை வந்துவிட்டது. பாண்டி நாட்டிலேயே கல்லில் அகழப்பட்ட முதல் கோயிலாயிற்றே? ஒரு பொற்கழஞ்சுகூட வாங்காமல் இத்தனை பெரிய கோயிலை தங்களின் ஊரில் வடித்த சிற்பிக்கு ஏதேனும் மரியாதை செய்ய வேண்டுமென்று நினைத்த எருக்காட்டூர் பெரியவர்கள் அவருக்கு ‘எருக்காட்டூர்க்கோன்’ என்று பட்டமளித்து கௌரவித்தார்கள். அத்துடன் கல்லில் எழுத்துப் பொளிக்கும் ஒருவனை மதுரையிலிருந்து வரவழைத்து அவரது பெயரைப் பிள்ளையாருக்கருகில் வடிக்கவும் செய்தார்கள். சங்ககாலப் புலவர் தாயங்கண்ணனாரின் சொந்த ஊரான எருக்காட்டூர் இன்னும் நல்நிலையில் உள்ளது. அங்குள்ள குன்றும் பத்திரமாக உள்ளது. குன்றின் ஒரு புறத்தில் சிவபெருமானுக்கான குடைவரைத் திருக்கோயில் அகழப்பட்டுள்ளது. அந்தத் திருக்கோயிலின் வெளிப்புறத்தில் பரிவார தெய்வமாக நமது குழந்தைப் பிள்ளையார் தாய்ப்பாறையில் செதுக்கப்பட்டு எழுந்தருளியிருக்கிறார். ஒரு கையில் மோதகம் தாங்கி (அதனை இலிங்கமாகக் காட்டுவது தவறு. அது சிதைந்த மோதகம்தான்!) மறு கையை இடுப்பில் இறுத்தி கால்கள் மடக்கி அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்து வலம்புரித் துதிக்கை மோதகத்தைச் சுவைக்கக் கண்களில் தெறிக்கும் மோனச் சிரிப்புடன் அமர்ந்திருக்கும் அந்தப் பிள்ளையார் தமிழர்கள் பலரின் விருப்ப தெய்வம். ஆகவே அவரைப் பேருந்துகளில்.. மணிபர்ஸ்களில்.. டாலர்களில்.. இன்னும் பல இடங்களிலும் தரிசிக்கலாம். பிள்ளையாருக்கு அருகிலிருக்கும் அரைத்தூணில் ஒரு பழைய வட்டெழுத்துக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. 1936ல் இக்கல்வெட்டினை மையத் தொல்லெழுத்தியல் துறையினர் பதிப்பித்துள்ளனர். 1992ல் இதே கல்வெட்டை மீள்வாசிப்பு செய்த வரலாற்றிஞர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் அதன் திருத்தப்பட்ட பாடத்தைக் கீழ்க்கண்டவாறு கொடுத்துள்ளார். எக்காட்டூரு- க் கோன் பெருந் தசன் எருக்காட்டூர் எனும் ஊரின் பெயர் கல்வெட்டில் எக்காட்டூர் என மருவி வந்துள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு குடைவரையின் காலத்தை அவர் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கருதுகிறார். ஆறாம் நூற்றாண்டெனில்.. இது தமிழகத்தின் ஆகத் தொன்மையான குடைவரை. பாறையில் அகழப்பெற்ற முதற் கோயில். இந்தப் பிள்ளையார் வாதாபி கணபதிக்கும் முற்பட்டவர். அப்புறம்.. சொல்ல மறந்து விட்டேனே? எருக்காட்டூரின் இன்றைய பெயர்.. பிள்ளையார்ப்பட்டி.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |