http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > பயணப்பட்டோம்
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
ச.சுந்தரேசன்

 



வடக்குக் கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் வளம் சேர்க்கும் மாலப்ரபா ஆற்றுப் பள்ளத்தாக்கில் பதாமி, ஐஹொளே மற்றும் பட்டடக்கல் நகரங்கள் அமைந்துள்ளன. நெடிதுயர்ந்த செந்நிற மணற்கல்லிலான குன்றுகள் இப்பள்ளத்தாக்கிற்கு எல்லைகளாக அமைந்துள்ளன. இயற்கை வளம் சூழ்ந்த மாலப்ரபா நதிதீரத்தில் கிடைத்திருக்கும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அப்பள்ளத்தாக்கு பண்டை மனிதர்களின் வாழ்விடமாக இருந்தமையைத் தெரிவிக்கின்றன.



சதவாகனர்கள், கதம்ப   அரச மரபினரின் ஆட்சிக்குப் பின்னர், பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மாலப்ரபா பகுதிகள் சாளுக்கியரின் ஆளுகையின் கீழ் வந்தது. பொ.கா. 544 ஆம் ஆண்டில் முதலாம் புலகேசியால் அமைக்கப்பட்ட பதாமி சாளுக்கியர்களின் பேரரசு இன்றைய பாகல்கோட் மாவட்டம் பதாமியைத் தலைநகராகக் கொண்டு விளங்கியது. சாளுக்கிய மன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இந்து மதத்தின் வளர்ச்சியுடன் பௌத்தம், சமண மதங்களும் செழித்து வளர ஆதரவு அளித்து வந்தனர். கோயில் கட்டக்கலையில் சாளுக்கியர்கள் சிறந்து விளங்கினர்.  





பதாமி சாளுக்கியரின் அரச இலச்சினை



சாளுக்கியர்கள் பதாமி, ஐஹொளெ, பட்டடக்கல், மஹாகூடா போன்ற நகரங்களில் இயற்கையாகக் கிடைத்த செந்நிற மணற்கற்களைப் பயன்படுத்தி குடைவரைகளையும், நூற்றுக்கணக்கானக் கட்டுமானக் கோயில்களையும்  உருவாக்கியுள்ளனர். சாளுக்கிய மன்னர்களின் கலை ஆர்வத்தினாலும், கடுமையான உழைப்பினாலும் உருவான இக்கோயில் கட்டடக்கலை சாளுக்கியபாணி எனப் பெயர் பெற்று விளங்குகின்றது. 



இக்கட்டுமானங்களின் உருவாக்கத்தினை மூன்று கட்டங்களாகப் பிரித்து அறியலாம். 



முதல் கட்டமாக 6ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பதாமியில் மூன்று இந்து தெய்வங்களுக்கான குடைவரைகளும், சமண மதத்திற்கான குடைவரை ஒன்றும் உருவாக்கம் பெற்றன. ஐஹொளே  இராவணபாடியில் சிவனுக்கான குடைவரை ஒன்றும், ஐஹொளேவிலிருந்து சிறிது தொலைவில் சமணர் குடைவரை ஒன்றும் மெஹுட்டிக் குன்றில் பௌத்தக் குடைவரை ஒன்றும் ஆக ஐஹொளேவில் மூன்று குடைவரைகள் உள்ளன. ஐஹொளெவில் முற்றுப் பெறாத பௌத்த விஹாரை ஒன்று மெஹுட்டிக் குன்றின் அடிவாரத்தில் உள்ளது. 



இரண்டாம் கட்டமாக 7ஆம் நூற்றாண்டில் கட்டடக்கலையின் தொட்டில் என்றழைக்கப்படும் ஐஹொளேயிலும், பதாமி மற்றும் மஹாகூடாவிலும்  நூற்றுக்கணக்கான கட்டுமானக் கோயில்கள் கட்டப்பட்டன. 



மூன்றாம் கட்டமாக 8ஆம் நூற்றாண்டில் பட்டடக்கல்லில் பல்வகை கட்டடக்கலைக் கூறுகளுடன் கட்டுமானக் கோயில்களும், பதாமியில் பூதநாதா கோயிலும் கட்டப்பட்டன. 





அகஸ்தியர் தீர்த்தம் – பின்னணியில் மலைமேல் சிவாலயம்



1. பதாமியின் குடைவரைகள்:



பதாமியிலுள்ள ஆகஸ்தியர் தீர்த்தத்தின் தெற்கே மலைக்கோட்டையின் அடிவாரத்திலிருந்து மலைமுகடு செல்லும் படிவரிசையின் வலதுபுறத்தில் சிவபெருமானுக்குரிய குடைவரை ஒன்றும், விஷ்ணுவிற்குரிய குடைவரைகள் இரண்டும், சமண தீர்த்தங்கரருக்கான குடைவரை ஒன்றும் ஆக மொத்தம் நான்கு  குடைவரைக் கோயில்கள் உள்ளன. குடைவரைகள் நான்கும் வடக்குப் பார்வையாய் அமைந்திருக்கின்றன.

 



குடைவரைகள் அமைந்துள்ள பாதாமியின் தெற்குக் கோட்டை

 



குடைவரைகளுக்குச் செல்லும் நுழைவாயில்



குடைவரைகளின் நுழைவாயிலின் முன்புறத்தில் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. படிகளினூடே மலைமீது ஏறுகையில் இடதுபுறத்தில் அகஸ்தியர் தீர்த்தமும், தொலைவில் பதாமி நகரமும், தொடுவானமுமாய் கண்கொள்ளாக் காட்சியாய் விரிகின்றது.  



இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள படிவரிசைகள் குடைவரைகளை எளிதாகச் சென்றடையும் வகையில் சீராக அமைக்கப்பட்டுள்ளன. படிகளில் ஏறும்போது குரங்குகளின் தொல்லையை சமாளிக்க வேண்டியது அவசியமாகிறது. சிறிதளவு கவனக்குறைவு ஏற்படினும் கொண்டு செல்லும் பைகளுக்கும், கேமிராவிற்கும் ஆபத்தாக முடியும்.  



முதலாம் குடைவரை:

வடக்குப் பார்வையாய் அமைந்த இக்குடைவரை பாதாமியில் சிவபெருமானுக்குரிய ஒரே குடைவரையாகும். 

 



முதலாம் குடைவரை



குடைவரையின் முகப்பினை அடைய படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பின் மேற்குப் பகுதி வடபுறத்தில் நீட்சி பெற்று அதன் கிழக்கு முகம் நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. 



சீரமைக்கப்பட்ட சுவரில் பதினெட்டு கரங்களுடன் இலலிதகரணத்தில் சிவபெருமானின் எழிற்கோலம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அதன் தென்புறத்தில் உள்ள கோட்டச் சுவரில் மஹிஷாசுரமர்த்தினியின் புடைப்புச் சிற்பம் எளிமையாகக் காட்சியளிக்கின்றது. 

 



ஆடவல்லானின் இலலித கரணக்கோலம்



குடைவரை முகப்பின் கிழக்கே மேற்குப் பார்வையாய் முத்தலையீட்டி ஏந்தி நிற்கும் வாயிற்காவலரின் சிற்பம் உள்ளது. 

 



முத்தலையீட்டியுடன் வாயிற்காவலர்

 



முதலாம் குடைவரையின் உட்புறத் தோற்றம்



குடைவரைத் தளத்தினை அடைய படிகள் அமைக்கப்பெற்றுள்ளன. படிவரிசையின் இருபுறத்திலும் பூதகணங்களின் சிற்பங்கள் உள்ளன. பூதகணங்கள் அளவில் பெரியதாக உள்ளன. 



முகப்பினை அடுத்த நீள்சதுர மண்டபத்தின் இரு ஓரங்களிலும் அழகிய நின்றகோல இறைவடிவங்கள் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஹரிஹரனும், மேற்குச் சுவரில் வீணாதாரரும் காட்சி தருகின்றனர். 



காளைமீது சாய்ந்த நிலையில் வீணையைக் கையில் ஏந்திய சிவபெருமானின் வலப்புறத்தில் கைகூப்பி தொழுத நிலையில் பிருங்கி முனிவரும், வலப்புறத்தில் பெண் அடியவரும் உள்ளனர். 



பெண்ணின் இடதுகை ஏந்தி நிற்கும் தட்டில் இருக்கும் பொருள் இன்னதென்று விளங்கவில்லை. மூர்த்தத்தின் பின்புறத்தில் வானில் பறந்த நிலையில் இருபுறத்திலும் வித்யாதரர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

 



வீணாதார அர்த்தனாரீஸ்வரர்

 



ஹரிஹரன்



இரண்டாம் குடைவரை: விஷ்ணு குடைவரை (சிறியது)



முதலாம் குடைவரையிலிருந்து சுமார் நூறு அடிகள் நடந்து சென்றால் இரண்டாம் குடைவரையை அடையலாம். இம்மலையில் இரண்டு விஷ்ணு குடைவரைகள் இருப்பதால் அவை புரிதலுக்காக சிறியதென்றும், பெரியதென்றும் வழங்கப்படுகின்றது. மலையேற்றத்தில் அடுத்தபடியாக நாம் காணவிருப்பது விஷ்ணுவிற்குரிய சிறிய குடைவரையாகும். விஷ்ணுவிற்காகக் குடைவிக்கப்பட்ட இக்குடைவரை முதலாம் குடைவரையைவிட அளவில் சிறியதாகும்.

 



இரண்டாம் குடைவரை 



குடைவரையை அடைய ஏதுவாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளப் பகுதியில் பூதகணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரை முகப்புத் தளத்தின் இரு புறத்திலும் சிறு மலரை கையில் ஏந்திய வண்ணம் வாயிற்காவலர்கள் நிற்பதைக் காணலாம். முகப்பினையடுத்த மண்டபத்தின் மேற்கு கோட்டத்தில் திருவிக்ரமனும், கிழக்குக் கோட்டத்தில் வராகர் சிற்பமும் புடௌப்புச் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன.



அமைப்பிலும், திட்டமிடுதலிலும் இக்குடைவரை, மூன்றாம் குடைவரையினைப் போலவே இருப்பினும் சிற்பங்களின் செழுமை குறைந்து காணப்படுகிறது. குடைவரையின் கூரையில் வைணவ புராணக் கதைகளைக் கூறும் சிற்பங்கள் உள்ளன. 

 



பூவராகர் தொகுதி

 



திருவிக்ரமன் தொகுதி



மூன்றாம் குடைவரை:



இரண்டாம் குடைவரையிலிருந்து பதாமிக் கோட்டையின் வடக்கு நுழைவாயில் செல்லும் வழியில் மூன்றாம் குடைவரை அமைந்துள்ளது. இக்குடைவரையை பொ.யு. 578இல் குடைவித்தவர் சாளுக்கிய மன்னரான மங்களேசா ஆவார். 



இக்குடைவரை தென்னிந்தியாவின் வைதீக மதத்திற்கான முதல் குடைவரை என்ற சிறப்பினையுடையது. பதாமி சாளுக்கியக் குடைவரைகளுள்  பெரிய குடைவரை இதுவாகும். மன்னர் மங்களேசா குடைவரைக் கோயிலுக்கு பொ.யு. 578இல்  அளித்த நன்கொடைகள் குறித்த பாறைக் கல்வெட்டு இம்மூன்றாம் குடைவரையில் காணக் கிடைக்கின்றது.

 



மூன்றாம் குடைவரை



தாங்குதளத்தின் கூறுகளைத் தெளிவாகப் பெற்றிருக்கும் இக்குடைவரையை முன்னிரு குடைவரைகளின் வளர்நிலை என்று கூறலாம். குடைவரையைச் சென்றடைய படிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. படிவரிசையின் இருபுறத்திலும் பூதகணங்கள் அமையப் பெற்றுள்ளது. சீரமைக்கப்பட்ட பாறைத்தளத்தின் கிழக்குக் கோட்டத்தில் விஷ்ணுவின் கிரீட மகுடத்தின் மேலே நரசிம்மரின் உருவம் காட்டப்பட்டுள்ளது. மேற்குக் கோட்டத்தில் நெடிதுயர்ந்த வாமன-திருவிக்கிரமன் சிற்பத் தொகுதி உள்ளது. திருவிக்கிரமன் தனது இடது காலை மேலே உயர்த்திய நிலை அச்சமூட்டுவதாக உள்ளது. 



முகப்பினையடுத்த மண்டபத்தின் கிழக்கு முகத்தில் எட்டு கைகளுடன் வைகுந்தவாசர் அனந்தன் மீதமர்ந்து காட்சியளிக்கிறார். பக்கவாட்டில் வடக்கு நோக்கிய நிலையில் பூவராகர் சிற்பம் உள்ளது. மேற்கு முகத்தில் நரசிம்மரின் நின்ற நிலை சிற்பம் உள்ளது. பக்கவாட்டில் வடதிசை நோக்கியவாறு ஹரிஹரன் சிற்பம் உள்ளது.



குடைவரையின் கூரைப் பகுதியில் விஷ்ணுபுராணக் கதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குடைவரை முழுவதும் வண்ண ஓவியங்களால் அலங்கரிப்பட்டிருந்தமைக்கான் அட்டையாளங்களாக ஓவியத்தின் எச்சங்கள் காணக் கிடைக்கின்றன.

 



மூன்றாம் குடைவரை வெளித்தோற்றம்

 



கவின்மிகு தூண்கள்

 





தூண்களின் அணிவகுப்பு - குடைவரையின் உட்புறத் தோற்றம் 





விஷ்ணுவும், பூவராகரும்





ஹரிஹரனும், நரசிம்மரும்

 



கருவறையின் தோற்றம்



நான்காம் குடைவரை:



மூன்றாவது குடைவரையிலிருந்து சிறிது தொலைவில் சமணர் குடைவரை உள்ளது. பாகுபலி மற்றும் பார்சுவநாதர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. பாதாமிக் குடைவரைகள் நான்கினுள் இக்குடைவரை அளவில் சிறியதாக உள்ள இக்குடைவரை முற்றுப் பெறாத ஒன்றாகும். 

 





பாகுபலி

 

2. பாதாமியின் கட்டுமானக் கோயில்கள்



பாதாமியின் அகஸ்திய தீர்த்தத்தின் வடக்கே உள்ள இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத் துறையின் அருங்காட்சியகத்திலிருந்து மலைமீது பயணித்தால் இடிபாடுகளுடன் கூடிய பாதாமியின் வடக்குக் கோட்டையை அடையலாம்.







 

லோயர் சிவாலயம்:



வடக்குக் கோட்டையில் சிதைவுற்ற நிலையிலுள்ள இக்கோயில் பதாமி சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. சிதலமடைந்த நிலையில் காணப்படும் இக்கோயில் கிழக்குப் பார்வையாய் அமைந்துள்ளது. பகைநாட்டு எதிரிகளால் போர்களின்போது இக்கோயில் சிதைவடைந்திருக்கலாம்.

 





லோயர் சிவாலயம்





தானியக் களஞ்சியங்கள்:

 

மலைமேல் சிவாலயம்: (Upper shivalaya)

 





மலைமேல் சிவாலயம்



மலேகெட்டி சிவாலயம்

 



மலேகெட்டி சிவாலயம்

 



பூதநாதா தொகுப்புக் கோயில்கள்:



அருங்காட்சியகத்திலிருந்து அகஸ்தியர் தீர்த்தக்கரையியினூடே கிழக்கு நோக்கிப் பயணித்தால் கோயில்கள் நிறைந்த பூதநாதா கோயில் வளாகத்தை அடையலாம். 

 



பூதநாதா கோயில்

 





புடைப்புச் சிற்பங்கள்

 



பள்ளிக்கொண்ட பெருமாள்



மஹாகூடா தொகுப்புக் கோயில்கள்:



பதாமியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் மஹாகூடா அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் இருக்கும் இயற்கை ஊற்றுக் குளமான விஷ்ணு புஷ்கரணியை மையமாகக் கொண்டு ஏராளமான கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள்  மல்லிகார்ஜுனா கோயில், மஹாலிங்கா கோயில், விருபாக்ஷேஸ்வரர் கோயில், சங்கமேஸ்வரர் கோயில், மஹாகூடேஸ்வரர் கோயில், போன்றவை இன்றியமையாதவை.

 



மஹாகூடா கோயில் வளாகம்

 



விஷ்ணு புஷ்கரணி

 



மல்லிகார்ஜுனா கோயில்

மல்லிகார்ஜுனா கோயில் மஹாகூடா வளாகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இவ்வளாகத்திலுள்ள கோயில்களைவிடச் சற்றே காலத்தால் பிற்பட்ட இக்கோயில் அழகிய வேலைப்பாடமைந்த சிற்பங்களைக் கொண்டது.

   



மஹாலிங்கேஸ்வரர் கோயில்

 



விருபாக்ஷேஸ்வரர் கோயில் 

 



சங்கமேஸ்வரர் கோயில் 



சங்கமேஸ்வரர் திருமுன்னின் மேற்குக் கோட்டத்தின் எழிலார்ந்த அம்மையப்பரின் சிற்பம்.

 



அர்த்தநாரீஸ்வரர்



சங்கமேஸ்வரர் திருமுன்னின் தெற்குக் கோட்டத்தின் இலகுலீசர் சிற்பம். 

 



இலகுலீசர்



மஹாகூடேஸ்வரர் கோயில்:



மஹாகூடேஸ்வரர் கோயில், சாளுக்கியப் பேரரசிற்கு அடிகோலிய முதலாம் புலகேசியினால் கட்டப்பட்டது. இக்கோயில், விஷ்ணு புஷ்கரணியின் வடக்கில் சங்கமேஸ்வரர் திருமுன் அருகில் உள்ளது. 

 



மஹாகூடேஸ்வரர் கோயில்



மஹாகூடேஸ்வரநாதருக்கு மன்னரின் பட்டத்தரசி துர்லபாதேவி, பட்டடக்கல், ஐஹொளெ உட்பட பத்து ஊர்களை நிவந்தமாக அளித்தமையையும், சாளுக்கிய பேரரசின் போர் வெற்றிகளையும் கூறும் தர்மஜெயஸ்தம்பம் ஒன்றினை நாட்டியுள்ளார்.



இக்கோயிலின் தாங்குதளத்தின் வேதிபாதத்தில் அழகிய வேலைப்பாடமைந்த குறுஞ்சிற்பங்கள் காணப்படுகிறது.





பாதாமி சாளுக்கியர்களின் குடைவரைகள் மற்றும் கட்டுமானக் கோயில்களின் கட்டடக்கலையும், அழகிய வேலைப்பாடமைந்த சிற்பங்களும் இந்தியக்கலை வரலாற்றில் உயரிய இடத்தைப் பெற்று விளங்குகின்றன என்பதில் ஐயமில்லை.  



பாதாமியும், உணவகங்களும்:



பதாமி பயணத்தின்போது நாங்கள் பெருமளவில் எதிர்கொள்ள நேர்ந்தது உணவுப் பிரச்னையே. அந்நிலத்தின் உணவிற்காக நம்மை மனதளவில் தயார் செய்து கொண்டிருந்த போதிலும் வரலாற்றுச் சின்னங்களுக்கு அருகாமையில் தரமான உணவகங்கள் எதையும் காண இயலவில்லை. உணவகங்கள் சுகாதாரமானவையாக இல்லை. உணவகங்களில் முக்கிய் உணவாக சோளமாவினால் செய்த பண்டங்கள் கிடைக்கின்றன. அனைத்து உணவுப் பண்டங்களிலும் அதிக மிளகாய் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. பாதாமி பயணம் மேற்கொள்பவர்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.



ஒளிப்படங்கள்:

ஆர்.கே.லக்ஷ்மி


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.