http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 150
இதழ் 150 [ ஜனவரி 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
நம் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவைகளில் தலையாயது நம் பேச்சு. நம் பேச்சில் இனிய சொற்களும் உண்டு, வன் சொற்களும் உண்டு! எத்தகைய சொற்கள் நம் வாழ்வை இனிமையாக்கும் என்று தெரிந்து கொண்டால் நல்ல வளமான வாழ்வு வாழலாம் தானே! இச்சிறு கட்டுரையின் வாயிலாக நம் முன்னோர்களாகிய வள்ளுவர்,ஔவையார் மற்றும் சிவப்பிரகாசர் போன்றோரின் சில மொழிகள் சிந்தைக்குள் வந்து போன விந்தையை பகிரலாம் என்னும் சிறு முயற்சி! ”சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் பொடி வைத்துப் பேசுவதில் வள்ளுவக்கிழவனை மிஞ்ச ஆளில்லை! இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் என்று கூறுவதோடு நிறுத்தி இருக்கலாம் தானே? அதென்ன ”சிறுமையுள் நீங்கிய இன்சொல்” என்ற அடைமொழி? வள்ளுவனின் ஒன்றே முக்கால் அடியில் இது போன்ற பொடிகள் ஏராளம்! ஆம்! நாம் பெரும்பாலும் இனிமையாகப் பேசுகிறோம் என்ற நிலையிலும் நம்மையறியாமல் அடுத்தவரைக் காயப்படுத்தும் சொற்கள் பேசும்பொழுது வந்து விழுதல் தவிர்க்க இயலாதது என்பதை நாம் நடைமுறை வாழ்வில் ஒவ்வொருவரும் நிச்சயம் அனுபவித்திருப்போம். அதனை கவனமாகத் தவிர்த்து நல் மொழி பகன்றால் அது இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் இன்பம் தரும் என்பதே இக்குறளின் தீர்ப்பாகும்! இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ இனிமையான சொற்களைப் பேசுகிறவர்கள் எல்லோராலும் போற்றப்படுவார்கள். அப்படி இருக்க ஏன் தான் வன்சொற்களைப் பயன் படுத்துகிறார்களோ? என்றும் வள்ளுவர் நம் மக்களை நினைத்து கவலை கொள்கிறார்! கீழ்வரும் சிவப்பிரகாசர் பாடல் அழகான ஒப்புமையில் இன் சொற்களின் வலிமையை பறைசாற்றுகிறது! இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய் அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என் கதிர்வரவால் பொங்கும் கடல் (இருநீர் = கடல், வியன்உலகம் = அகன்ற உலகம்; பொன்செய் அதிர்வளையாய் = பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த பெண்ணே, அழல்கதிர் = சூரியன், தண்என்கதிர் = நிலவு) கதிரவனின் ஒளி வெப்பமானது. அந்த வெப்பத்தில் கடலின் அலைகள் பொங்கி எழுவதில்லை. நிலவின் ஒளி குளிர்ச்சியானதுதான். என்றாலும் கடலின் அலைகள் பொங்கி எழுகின்றன. அதைப் போல வன்சொல் பேசும்போது யாரும் மகிழ்வதில்லை; இன்சொல் பேசும்போது தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதில் அலை பொங்கி எழுவதை மகிழ்ச்சி பொங்குவதற்குச் சிவப்பிரகாசர் ஒப்புமைப்படுத்தியுள்ளார். இன்சொல் பேசுவதன் சிறப்பை நல்வழியில் கீழ்க்கண்டவாறு ஒளவையார் அருமையாக விளக்கியுள்ளார். ”வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்”. இப்பாடலை சந்தி பிரித்து புரிந்து கொள்ள முயல்வோமா? ”வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது – நெட்டு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்”. முன்பெல்லாம் நாம் பள்ளியில் பயிலும் போது இது போன்ற பாடலுக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் என்று ஆசிரியப் பெருமக்கள் மாணாக்கர்களுக்கு ஊட்டுவது வழக்கம். அதுபோல் இப்பாடலுக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் மூலம் ஒவ்வொரு பதமும் சுட்டும் பொருளை கீழே நாம் காணலாம் அருஞ்சொற்பொருள்: வெட்டனவை = வன்சொற்கள்; மெத்தனவை = இன்சொற்கள் ; வெல்லாவாம் = வெல்லமாட்டா ; வேழத்தில் = வலிய யானை மீது ; பட்டு உருவும் கோல் = பட்டு ஊடுருவும் அம்பானது ; பஞ்சில் பாயாது = (மெல்லிய) பஞ்சுப் பொதியினை ஊடுருவித் துளைத்துச் செல்லாது ; நெட்டு = நீண்ட ; இருப்பு = இரும்பாலான ; பாரை = கடப்பாரை ; நெக்கு விடாப் பாறை = பிளவாத கருங்கற் பாறை ; பசுமரத்தின் = பச்சை மரத்தின் ; வேருக்கு நெக்கு விடும் = வேர் ஊடுருவினால் பிளந்து போகும். பொருளுரை: வலிமையான யானை மீது பட்டு ஊடுருவும் அம்பானது, மென்மைத் தன்மை உடைய பஞ்சுப் பொதியில் பட்டு ஊடுருவிச் சென்று பஞ்சில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. நீண்ட இருப்புப் பாரை, தாக்கும் போது பிளவுபடாத கருங்கற் பாறையானது உயிருள்ள மரத்தின் வேர் ஊடுருவிச் செல்லும்போது பிளவுபட்டு விடுகிறது. அதுபோன்றே வன்சொற்களால் இன்சொற்களை வெல்ல முடியாது ! இன்சொற்களே வெல்லும் !வன்சொல் தோற்கும்; இன்சொல் எப்போதும் வெல்லும் என்பது இப்பாடலின் கருத்தாகும் ! இதுகாறும் வன்சொல் பேசுதலின் தீமை குறித்துப் பார்த்தோம் ஆனால் சில இடங்களில் வன்சொல்லும் இன்சொல்லே என்ற பொருள்பட நம் முன்னோர் குறிப்புக் காட்டியுள்ளனர்! கொடிய சொற்கள் பேசுகிறவர்களை யாரும் விரும்பமாட்டார்கள்; இனிய சொற்களைப் பேசுகிறவர்களை எல்லோரும் விரும்புவார்கள் என்று கூறிய சிவப்பிரகாசரே ‘கொடுஞ்சொல்லும் இனிய சொல்லே’ என்று கூறியுள்ளார். கொடுஞ்சொல்லைச் சிவப்பிரகாசர் ஏன் இனிய சொல் என்று கூறியுள்ளார் என்பது சிந்தனைக்கு உரியது அல்லவா? இதற்கு அவர் கூறும் விளக்கத்தை கீழ்க்கண்ட பாடலில் காண்போம்!
”மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க - ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு ”
என்னும் பாடலில் உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் ஒருவர் சொல்கின்ற வன் சொல்லும் இன்சொல்லே என்று அவர் கூறுகிறார். உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும். நண்பனை நல்வழிப்படுத்த இன்னொரு நண்பன் கூறும் வன் சொல்லும்,மாணவனைப் பார்த்து ஆசிரியர் சொல்லுகின்ற வன் சொல்லும், மகனைக் கண்டிக்கும் தந்தையின் கொடுஞ்சொல்லும் உண்மையில் கொடுமையானவைகள் அல்ல. அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகக் கூறுபவை. எனவே, அந்தக் கொடுஞ்சொற்களும் இன்சொற்களாகவே கருதப்பட வேண்டும் என்று நாம் அறிதல் வேண்டும். ஆம்! இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு கிராமியப் பழமொழியும் இன்றும் வழக்கத்தில் உள்ளதை நாம் காண்கிறோம். ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்’ நெல்லிக்காயை உண்ணும்போது அது முதலில் கசக்கும். பின்னர் அதுவே இனிக்கும். அதைப் போன்றே பெரியவர்கள் சொல்லும் அறிவுரையும் முதலில் நமக்கு மனக் கசப்பைத் தந்தாலும் அந்த அறிவுரைகள் நமது வாழ்க்கையில் பயன்படும்போது நமக்கு இனிப்பைத் தரும் என்பதே இப்பழமொழியின் விளக்கம். இந்தப் பழமொழி நல்கும் பொருளிலேயே சிவப்பிரகாசரும் ‘வன்சொல்லும் இன்சொல்லே’ என்று விளக்கியுள்ளார். அதோடு நில்லாமல் நம்மேல் அக்கறை இல்லாமல் பிறர் பேசும் இன்சொல் “பிறிதென்க” என்றும் எச்சரிக்கை செய்கிறார். எனவே நாம் பேசும் போது முடிந்த வரையில் இன்சொற்களே பேசுதலும், நம் நண்பர்கள் பெரியோர் பேசும் அக்கறையான வன்சொற்களை முறையாகப் புரிந்து கொண்டு வாழ்வை இனிமையாக்கி நம் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் அற்புதமான வாழ்வியல் உண்மைகளால் நம் வாழ்வை வளப்படுத்துவோம் என்று கூறியும் அனைவருக்கும் வரும் ஆண்டுகள் அனைத்து வளங்களையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி எமது வாழ்த்துக்களை வழங்கி இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன்! |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |