http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > கலையும் ஆய்வும்
விளக்கேற்றல் எனும் அறம்
இரா.கலைக்கோவன், மு.நளினி

 



சங்க காலத்திலிருந்தே பொதுவில் விளக்கேற்றுதல் சிறப்புக்குரிய நிகழ்வாகக் கருதப்பட்டமைக்கு, ‘கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தாவிளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்’ எனும் பட்டினப்பாலை அடிகள் சான்றாக மிளிரும். பொதியில் என்னும் பொதுவீடான இறையகத்தில் எப்போதும் ஒளிரும் விளக்கை ஏற்றும் பொறுப்பிலிருந்த மகளிர், மக்கள் குடிநீராகக் கொள்ளும் குளத்தில் மூழ்கி விளக்கேற்ற அனுமதிக்கப் பட்ட சூழல், பொதியில் விளக்கின் பெருமை உணர்த்தும். சங்க இலக்கியப் பக்கங்களில் பத்துப்பாட்டி லும் எட்டுத்தொகையிலுமாய்க் கண்சிமிட்டும் விளக்கேற்றல் காட்சிகளும் சிலப்பதிகாரப் படப்பிடிப்பில் பூம்புகார் மேனிலை மாடங்களில் அந்தியை வரவேற்பது போல் அழகிய பெண்களின் அல்லிமலரொத்த கைகள் விளக்கேற்றிய பெருமையும் விளக்கேற்றல் என்ற நிகழ்விற்கு அந்நாளைய சமூகம் எத்தனை முதன்மையளித்திருந்தது என்பதைச் சுட்ட வல்லவை. 



நந்தாவிளக்கு, கார்த்திகை விளக்கு, மலரணி விளக்கு எனச் சங்கம் சுட்டும் விளக்கு வகைகள் பத்திமைக் காலத்தில் பலவாய்ப் பெருகின. விளக்கேற்றலை அருஞ்செயலாய்ப் போற்றிப் பரவும் அப்பர் பெருமான், இறைவன் அருளைப் பெற உடல் உறுப்புகளால் ஆற்றக்கூடிய பணிகளைப் பேசுமிடத்தில், இயன்றபோதெல்லாம் ஒளி உமிழும் விளக்குகளை ஏற்றுவதே விரல்கள் பெற்றதன் பயன் என்கிறார். இவ்விளக்கேற்றும் பணி பல்லவ, பாண்டிய, சோழர் காலத்தில் ஓர் அறமாகவே கைக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளில் ஏறத்தாழ 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை விளக்கேற்றல் பற்றியே பேசுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் விளக்குக் கல்வெட்டு. தமிழ்நாட்டளவில் விளக்குகள் தொடர்பாகப் படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் மிக நீளமானதும் சமூக வரலாற்றுக் களஞ்சியமாகவும் விளங்கும் இக்கல்வெட்டு மிக விரிவான ஆய்வுக்குரியது. 



அக்காலத்தே தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த விளக்குகளின் வகைகள், அவை ஏற்றப்பட்டவிதம், விளக்கேற்றலின் நோக்கம், அதற்கென அளிக்கப்பட்ட கொடைப்பொருள் வகைகள், அவற்றின் அளவுகள், அதற்கான அறக்கட்டளை அமைப்புகள், அவை செயற்பட்ட ஒழுங்கு, அத்தகு அறக் கட்டளைகள் தணிக்கை செய்யப்பட்ட பாங்கு, விளக்குக் கொடையாளர்களின் விளக்கேற்றல் தொடர்பான விழைவுகள் என விளக்கேற்றும் செயல் சமுதாயத்தின் பல்வேறு ஒழுங்குகள், நம்பிக்கைகள் பற்றிய வரலாற்று விளக்கமாக விளங்கியதை இது உள்ளிட்ட பல விளக்குக் கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன. 



ஒரு நாளின் முக்கிய பொழுதுகளான காலை, உச்சி, மாலை ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு வேளையிலோ அல்லது மூன்று சந்திகளிலுமோ ஏற்றப்பட்ட விளக்குச் சந்திவிளக்கானது. பகலில் ஒளிர்ந்தது பகல் விளக்காகவும் அந்தியில் ஏற்றப்பட்டது சந்தியாதீபமாகவும் இரவில் வெளிச்சம் தந்தது இரவு விளக்காகவும் இரவும் பகலும் நில்லாமல் ஒளிவிட்டது நந்தாவிளக்காகவும் அமைந்தன. சில கல்வெட்டுகள் இவற்றைத் திருவிளக்கு, சோதிவிளக்கு என்றும் அழைக்கின்றன.  தொடரான விளக்குகள் தீபமாலை, விளக்குத்தோரணம், சோதிமாலை எனப் பல பெயர்களில் வழங்கின. ‘உலகும் சந்திராதித்தரும் உள்ள அளவும்’ ஒளிரவேண்டும், ‘பூமியும் ஆகாசமும் உள்ளமட்டுக்கெல்லாம்’ வெளிச்சம் தரவேண்டும் என்ற கருத்தோடு நிகழ்ந்த இந்த இறையக விளக்கேற்றல் பேரறமாகக் கருதப்பட்டதால், சமுதாயத்தின் பல தள மக்களும் பல்வேறு நோக்கங்களுக்காகக் காலங்காலமாகக் கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். உறவுகளின் நலம் காக்கவும் நீத்தார் நினைவு போற்றவும் ஏற்றப்பட்ட விளக்குகள், ‘இன்னாரைச் சாத்தி’ என்ற சுட்டலுடன் அமைந்துள்ளன. 



சாத்திய விளக்குகள்



புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையிலுள்ள உத்தமசோழர் காலத்ததாகக் கொள்ளத்தக்க குடைவரைத் தூண் கல்வெட்டு, நக்கம்புல்லியாள் என்னும் அம்மை, தம் மகன் கண்ணங்காடனைச் சாத்தி இறைவன் திருமுன் விளக்கேற்ற 4 கழஞ்சுப் பொன்னளித்த தகவலைத் தர, கிழவன் அருளாழி தம் மகன் கண்டன்தேவனைச் சாத்தித் திருவிளக்கேற்றியதாகத் திருச்சுழியல் சுந்தரபாண்டிய ஈசுவரத்துக் கல்வெட்டு பேசுகிறது. கடலூர் மாவட்டம் திருக்கண்டீசுவரத்திலுள்ள விக்கிரமசோழரின் 11ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கண்ணமங்கலத்து விடங்கன் தம் அன்னையைச் சாத்திச் சந்தி விளக்கேற்றியதாகக் கூற, லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலிலுள்ள முதல் பராந்தகர் காலக் கல்வெட்டு, அரையன் ஐயாற்றடிகள் தம் பெற்றோர் சூலபாணி, குவாவன் திருவடி ஆகியோரைச் சாத்தி இக்கோயிலில் விளக்கேற்றியதை வெளிப்படுத்துகிறது. இந்நான்கு கல்வெட்டு களிலும் யாரைச் சாத்தி விளக்குக் கொடைகள் வழங்கப் பட்டனவோ, அவர்கள் கொடையளிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தமைக்கான சான்றுகள் கல்வெட்டுகளில் இல்லாமையின், இங்கு, ‘சாத்தி’ என்ற சொல் அவர்தம் நினைவு போற்றும் பொருளில் ஆளப்பட்டுள்ளதா அல்லது நலம் நோக்கிய சொல்லாக அமைந்துள்ளதா என்பதை அறியக்கூடவில்லை. 



உறவுகளுக்காக மட்டுமல்லாது நண்பர்கள், குழு சார்ந்தவர்கள் என்ற நிலையிலும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. திருமறைக்காட்டீசர் கோயில் கல்வெட்டொன்று, கருவூரிருக்கும் வணிகரான சேனன் மரகதசெட்டியைச் சாத்தி அவர் சார்ந்திருந்த வணிகக் குழுவினரான திசையாயிரத்து ஐநூற்றுவர் இக்கோயில் இறைத்திருமுன் விளக்கேற்றியதைப் பகிர்ந்துகொள்கிறது. ‘கருவூரிருக்கும்’ என்ற சொல்லாட்சி விளக்குக்கொடை அமைக்கப்பட்ட காலத்தே மரகதசெட்டி வாழ்ந்திருந்தமையை உறுதிப்படுத்தும். 



குடுமியான்மலைச் சோழர் காலக் கல்வெட்டு, பூதை என்பார் தம்மையும் தம் அன்னையையும் சாத்தி இறைக்கோயிலில் விளக்கேற்றப் பத்துக் கழஞ்சுப் பொன்னளித்த தகவலைத் தருகிறது. இக்கல்வெட்டில் யாரைச் சாத்தி விளக்கேற்றப்பட்டதோ அவர்கள் கொடையளிக்கப்பட்ட காலத்தே வாழ்ந்தவர்கள் என்பது உறுதிப்படுவதால், இங்கு ‘சாத்தி’ என்ற சொல் ‘நலம் வேண்டி’ எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளமை அறியலாம். நலம் வேண்டி ஏற்றப்பட்ட இத்தகு விளக்குகள், ‘இன்னாருக்கு நன்றாக’ என்ற சொல்லாடலுடனும் ஒளிர்ந்தமையைப் பாண்டிமாதேவியின் பணிப்பெண் அரிஞ்சிகை மாதேவடிகள் தம் மகள் கண்டராதித்தியின் நலத்திற்காக நந்தாவிளக்கேற்றியதைக் கூறும் பழுவூர்க் கோயில் கல்வெட்டொன்றால் அறியலாம்.  



சுடர்விட்ட விளக்குகள் சுட்டெரித்த குற்றங்கள்!  



நினைவு போற்றியும் நலம் வேண்டியும் விளக்கேற்றினாற் போலவே குற்றங்களுக்கான தண்டனையாகவும் விளக்கேற்றப்பட்டது. அறியாமல் நேர்ந்த பிழைகளுக்காகவும் உணர்வு உந்தலால் விளைந்த குற்றங்களுக்காகவும் சமூகம் விதித்த தண்டனையாக இது அமைந்தாற் போலவே, தவறு செய்தவர்கள் பிழையை உணர்ந்து தாமே முன்வந்து இறந்தவரைச் சாத்தி (நினைவு போற்றி) கோயில்களில் விளக்கேற்றிய நிகழ்வுகளையும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. 



கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலிலுள்ள முதல் இராஜராஜரின் 8ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பழுவேட்டரையர் கண்டன்மறவனின் ஆட்சிக்காலத்தில், மன்னரின் இளைய ரணமுகராமன் படையைச் சேர்ந்த கைக்கோளர் பலதேவன் வயிரியும் குன்றக்கூற்றத்து மல்லூரைச் சேர்ந்த வேளாளர் கிழவன் நம்பனும் ஏதோ ஒரு காரணம் பற்றி உருவிய வாட்களுடன் சண்டையிட்டுக் கொண்டபோது பலதேவன் வயிரி கொலையுண்டார். அதற்கான தண்டனையாகப் பழுவூர்க் கோயிலில் இறைத்திருமுன் நந்தாவிளக்கேற்றுமாறு மன்னர் ஆணையிட, வயிரியைச் சாய்த்த நம்பன் கோயில் நிருவாகத்தாரிடம் காலாகாலத்திற்கும் அவ்விளக்கு வயிரியின் நினைவு போற்றி நின்றெரிய 90 சாவா மூவாப் பேராடுகளை அளித்தார். 



இவ்வாடுகளைப் பெற்றுக்கொண்ட கோயில் நிருவாகம் அவற்றைக் கோயில் சார்ந்த இடையர் பெருமக்களிடம் ஒப்புவித்தனர். ஆடுகளின் எண்ணிக்கை எப்போதும் குறையாதவாறு அவற்றை இனப்பெருக்கம் செய்து, அவற்றின் பால் வழி நந்தாவிளக்கேற்றத் தேவையான நெய்யைக் கோயிலுக்களித்து, எஞ்சியதைத் தங்கள் ஊதியமாகக் கொண்ட இப்பெருமக்களையும் இவர்தம் உறவுகளையும், ‘தேவர் இடைச்சான்றோர், கோயில் மன்றாடியர், திருவிளக்குக் குடிகள், அடைகுடிகள், மன்றாடிக்கலனை’ என்று கல்வெட்டுகள் பெருமைப்படுத்துகின்றன. இனப்பெருக்கம் வழிக் கொடையளிக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை சீராக அமைந்தமையால்தான் கல்வெட்டுகள் அவற்றைச் சாவா மூவாப் பேராடுகளாகக் குறிக்கின்றன.



இதே கோயிலிலுள்ள இராஜராஜரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மன்னர் கண்டன் மறவனின் கைக்கோளரான குஞ்சிரமல்லன் முருக்கனுக்கும் தென்பாளன்பாடி ஐயாறன்கானனுக்கும் இடையில் நிகழ்ந்த சச்சரவைப் பதிவு செய்துள்ளது. சண்டையின் முடிவில் முருக்கன் உயிரிழந்தமையால் அவ்விழப்பை நேர்செய்யுமாறு முருக்கன் நினைவாக, ஐயாறன் பழுவூர்க் கோயிலில் நந்தாவிளக்கு ஒளிரச் செய்தார். 



குற்றம் செய்தவர் தப்பிவிடும்போது உயிரிழந்தவருக்காக அரசரே கோயிலில் விளக்கேற்றுவதும் கீழப்பழுவூரில் நிகழ்ந்துள்ளது. முதுகுடியில் வாழ்ந்த வீரக்கலி அரங்கனும் மாதேவடிகள் என்பாரும் சச்சரவிட்ட நிலையில், வீரக்கலி அரங்கன் உயிர்நீத்தார். மாதேவடிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பழுவேட்டரையர் குமரன் மதுராந்தகன் 90 ஆடுகள் தந்து, இறந்தவர் நினைவாக நந்தாவிளக்கேற்றினார். 



மேலப்பழுவூருக்கும் கீழப்பழுவூருக்கும் இடையிலுள்ள கீழையூர் முற்சோழர் காலத்தில் அவனிகந்தருவபுரமாக அறியப்பட்டது. அவ்வூரிலுள்ள அவனிகந்தருவ ஈசுவரகிருகத்தின் தென்வாயில் ஸ்ரீகோயில், பழுவேட்டரையர் காலக் கலைவிற்பன்னர்களின் கைகளில் சிற்பக்களஞ்சியமாக உருவான எழிலார்ந்த கட்டுமானமாகும். அதன் தாங்குதளத்திலுள்ள முதல் இராஜேந்திரரின் 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அக்காலத்தே நிகழ்ந்த குற்றம், விபத்து இரண்டையும் பதிவுசெய்துள்ளது. அவனிகந்தருவபுரம் வணிகர் குடியிருப்பாக இருந்தமையால் அதன் ஊரவை நகரத்தார் பெருமக்களால் நிருவகிக்கப்பட்டது. அவ்வூரில் வாழ்ந்த சோமன்புவனி என்பாரைக் கத்தியால் குத்தி உயிரிழக்கச் செய்த அரங்கன்பட்டன், ஊரார் பிடியில் சிக்காமல் தப்பிவிட்டார். இறந்தவர் நினைவு போற்றிப் பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்து மகாதேவர் திருமுன் நந்தாவிளக்கேற்றும் பொறுப்பை ஏற்ற ஊராட்சி, தப்பிய அரங்கனை, ஊரார் யார் கண்டாலும் அவர்களே அவனுக்குத் தண்டனை வழங்கிட ஆணையிட்டது. 



பழுவூர் எண்ணெய் வணிகர் குமிழி மனப்பன் கோலொன்றால் அடிபட்டு இறந்தார். கோலை எய்தவர்களை அறியமுடியாத நிலையில், மனப்பன் நினைவாக அவனிகந்தருவ ஈசுவரகிருகத்தில் நந்தாவிளக்கேற்ற ஊராட்சியரே 50 காசுகள் கொடையாகத் தந்ததுடன், குமிழிமனப்பனின் மனை, நன்செய், புன்செய் நிலங்கள் ஆகியவற்றை அவருடைய துணைவியும் வழியினரும் நிலவும் கதிரும் உள்ளவரை வரி செலுத்தாமல் அனுபவித்துக்கொள்ளவும் வழிசெய்தனர். 



சுட்டியவாறே சுடர்விட்ட விளக்குகள்  



கோயில்களில் விளக்கேற்ற விழைந்தவர்கள் அச்செயல் அவர்கள் விரும்பியவாறு அமையச் சில வேண்டுகோள்களையும் வைத்தனர். தாங்கள் உவந்து ஏற்றிய விளக்குகள் கோயிலின் எப்பகுதியில் சுடர்விட வேண்டும் என்பதையும் அவை ஒளிரவேண்டிய காலத்தையும் கொடை ஆவணத்திலேயே அவர்கள் தெரிவித்துள்ள பாங்கைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. சில பதிவுகள் எத்தகு விளக்குத் தண்டுகளில் எந்த அளவிற்கு நெய்யிட்டு விளக்கேற்றல் வேண்டும் என்பதைச் சுட்ட, வேறு சிலவோ திரியின் தன்மையைக்கூடக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. ஒரு சில கல்வெட்டுகளில் விளக்கேற்றலில் நிகழ்ந்த தவறுகளும் அவை கண்டறியப்பட்ட நேர்த்தியும் அதற்கென வழங்கப்பட்ட தண்டனைகளும்கூடப் பதிவாகியுள்ளன. 



சுடர்விட்ட இடங்கள்



சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள உய்யக்கொண்டான் திருமலை விழுமிய நாயனார் கோயில் பதிகச் சிறப்புடையது. தேவார மூவரால் திருக்கற்குடி எனப் போற்றப்பட்ட இக்கோயிலில் 89 கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 75 சோழர் காலத்தவை. வரலாற்றுச் செல்வமாக விளங்கும் அவற்றுள் சில, கொடையாளிகளின் விருப்பத்திற்கேற்பக் கோயில் வளாகத்தின் குறிப்பிட்ட இடங்களில்  விளக்குகள் ஏற்றப்பட்டமை கூறுகின்றன. 



செருவிடை வெண்ணாவல் என்பாரும் முதலாம் இராஜேந்திரரின் படைத்தலைவரான முண்டங்குடி வாழ் விழுப்பரையரும் தஞ்சாவூர்ப் புறம்படி இருமுடிசோழப் பெருந்தெருவில் குடியிருந்த வணிகர் விச்சாதிரரும் இக்கோயில் உள்நாழிகையில் நந்தாவிளக்குகளை ஏற்றி மகிழ்ந்தனர். கோயில் உள்ளாலைச் சுவரில் ஒளிவிட்ட தீபமாலையின் மேற்புறத்தே தம் விளக்கை ஏற்றுமாறு ஜோகி திருப்பாற்குடியன் வேண்டியிருந்தார். அவ்வேண்டுகோளை நிறைவேற்றிய கோயிலார், அவர் அளித்த மற்றொரு விளக்கை அர்த்தமண்டபப் படிகளில் சுடர்விடச் செய்தனர். முதல் இராஜராஜரின் அரசியருள் ஒருவரான பிரிதிமாதேவியின் நந்தாவிளக்கு அவர் விழைவிற்கேற்பத் திருப்பள்ளிக்கட்டில் மண்டபத்தில் ஒளிர்ந்தது. 



சிராப்பள்ளிக் குழித்தலைச் சாலையில் ஜீயபுரத்தை அடுத்துள்ளது செந்துறை. கொடும்பாளூர் வேளிர் மரபைச் சேர்ந்தவரும் அரிஞ்சயசோழரின் தேவியுமான பூதிஆதித்தபிடாரி கற்றளியாக்கிய இவ்வூர்க் கோயிலின் உள்நாழிகையில், கொடும்பாளூர்ச் சிற்றரசர்களான செம்பியன் இளங்கோவேளான பூதிஆதித்தபிடாரனும் வீரசோழ இளங்கோவேளான ஆதித்தம் திருவொற்றியூரடிகளும் நந்தாவிளக் கேற்றி மகிழ்ந்துள்ளனர். முன்னவர் 4 விளக்குகள் ஏற்ற, பின்னவர் தம் திருமணக் காணிக்கையாகப் 12 விளக்குகள் ஒளிரச் செய்தார். அதே இடத்தில் ஊர்மக்களும் தங்கள் விளக்குகளை ஒளிரச் செய்தமைக்கு நாராயணன் நக்கனும் நக்கன் கண்டனும் சான்றாகின்றனர். வேற்றுமை ஏதுமின்றி அரசரும் குடிகளும் ஒரே இடத்தில் விளக்கேற்றிய இச்செய்தி அக்காலச் சமூக வாழ்க்கையின் பெருமை பேசுகிறது.



வலையன் கணபதி செந்துறைக் கோயிலின் உள்நாழிகைத் திருப்படிக்குள் மூன்று நந்தாவிளக்குகள் ஏற்ற 30 பசு, 12 எருமை, 100 வெள்ளாடுகளைக் கொடையாகத் தந்தார். கல்வெட்டு இக்கொடையை முந்நிரைக் கொடையாகச் சுட்டுகிறது. கோயில் தலமரமான திருப்பலாவின் கீழ் இருந்தவாறு ஊர்மருத்துவர் செந்தாமரைக்கண்ணன் முன்னிலையில் சிங்கன் அளித்த 4 காசுகளைப் பெற்றுக்கொண்ட செந்துறைக் கோயில் சிவபிராமணர்கள், கொடையாளி வேண்டியதற்கேற்ப நாளும் உழக்கு நெய் கொண்டு கோயில் திருஅணுக்கன் திருவாயிலுக்குள் நந்தாவிளக்கேற்ற இசைந்தனர். இது போலவே திருஏகம்பன் சொக்கனும் 4 காசுகள் தந்து அதே இடத்தில் நந்தாவிளக்கு ஒளிரச் செய்தார். 



திருஎறும்பியூரிலுள்ள பாடல் பெற்ற கோயிலான எறும்பீசுவரம் கண்டராதித்த சோழர் காலத்தில் செம்பியன் வேதிவேளான் எனும் பேராளரால் கற்றளியாக்கப்பட்டது. கல்வெட்டுக் களஞ்சியமாக விளங்கும் இக்கோயில் பல அரிய வரலாற்றுத் தரவுகளை வழங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று, சோழர் காலத்தே இங்கு வாழ்ந்த நாராயணன் என்பவர் பிள்ளையார் திருமுன் ஒரு விளக்கும் கருவறை இறைவனின் வலப்புறத்து ஒளிருமாறு மற்றொரு விளக்கும் அளித்தமை கூறுகிறது. அது போலவே இக்கோயிலில் சோழர் காலத்தே இருந்த கோயில்பிள்ளையார் என்றழைக்கப்பட்ட சேத்ரபாலர் திருமுன் 3 சந்திக்கும் 3 விளக்குகள் ஏற்ற அரசுஅலுவலர் சுந்தரசோழநல்லூர் உடையாரான நல்லூரடிகள் ஆமல்லவர் நிலக்கொடை வழங்கியதை மற்றொரு கல்வெட்டுச் செய்தியால் அறியமுடிகிறது.



சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள லால்குடிக் கோயில் சோழர் காலத்தது. நாவுக்கரசரால் வைப்புத் தலமாகச் சுட்டப்படும் இக்கோயிலில் திரும்பிய பக்கமெல்லாம் கல்வெட்டுகள்தான். இங்குள்ள கல்வெட்டொன்று, இரண்டாம் இராஜராஜர் காலத்தே சோமதேவன் அளித்த 41 அன்றாடு நற்காசுகளைப் பெற்றுக்கொண்ட கோயிலார், கொடையாளியின் வேண்டலுக்கேற்ப இறைவன் கருவறைத் திருப்படியில் விளக்கேற்றிய தகவலைத் தருகிறது. சாத்தமங்கலத்துத் தோன்றிப் பிராந்தகன் என்பாரும் உள்ளாலைத் திருப்படியிலேயே விளக்கேற்றி மகிழ்ந்தார். கோயில் பள்ளியறைக்குத் திருப்பள்ளிக்கட்டில் வழங்கிய புதுக்குடி இராயேரி ஆதித்தன் அக்கட்டிலருகே நந்தாவிளக்கேற்றக் கொடையளித்துள்ளார். சேரன்மாதேவி அம்மைநாதர் கோயிலில் இறையகத் தேவகோட்டத்திருந்த ஆலமர்அண்ணல் முன் விளக்கேற்றக் கொடை வழங்கப்பட்டது.



ஒளிர்ந்த பொழுதுகள்



இன்ன இடங்களில் விளக்கேற்ற வேண்டும் என்று விரும்பினாற் போலவே இன்ன பொழுதுகளில் இவ்வளவு காலம் விளக்கு ஒளிரவேண்டும் என்று விழைந்தவர்களையும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. அல்லூர்ப் பசுபதீசுவரத்திலுள்ள முதல் பராந்தகரின் கல்வெட்டு, அரிஞ்சிகை பாண்டனின் பொற்கொடை ஏற்ற கோயிலார், அவர் விரும்பியவாறே சிறுகாலைச் சந்தியில் திருக்காப்புத் திறந்தது முதல் மூன்று விளக்குகள் ஒரு சாமம் எரிப்பதாகவும், உச்சிச்சந்தியில் ஆறு நாழிகை எரிப்பதாகவும், அந்திச் சந்தியில் ஒரு சாமம் எரிப்பதாகவும் உறுதியளித்ததைத் தெரிவிக்கிறது. காளஹஸ்தியிலுள்ள காளத்திநாதர் கோயில் கல்வெட்டு, விஜயநகர அரசர் ஹரிஹரன் பெயரால் இறைத்திருமுன் இடப்பெற்ற 3 விளக்குகள் பகல் நாலு சாமமும் இரவு நாலு சாமமும் ஒளிவிட்டமை தெரிவிக்கிறது.



சிராப்பள்ளி மேல்குடைவரைக் கல்வெட்டு, திங்கள்தோறும் திருவாதிரைத் திருநாளில் அங்கேற்றப்பட்ட ஐந்து விளக்குகளும் இராப்புலரும் அளவும் ஒளிர்ந்தமை கூறுகிறது. இலால்குடி சப்தரிஷீசுவரர் கோயில் கல்வெட்டுகளுள் ஒன்று, ஞாயிறு மறைந்து மீண்டும் எழும் அளவும் அக்கோயிலில் சுடர்விட்ட விளக்கைச் சுட்ட, மற்றொரு கல்வெட்டு, இறைவன் அந்தியில் திருமுழுக்காட்டுக் கொள்ளும் போதிருந்து ஏழு நாழிகைக்கு 10 விளக்குகள் எரிய 5 கழஞ்சுப் பொன் அளிக்கப்பட்டமை தெரிவிக்கிறது. அதே கோயிலில் உள்ள வேறொரு கல்வெட்டு, ஞாயிறு எழுந்தது முதல் அந்தி பட்டு எழுநாழிகை அளவு ஆழாக்கே அரைப்பிடி எண்ணெய் கொண்டு விளக்குகள் ஒளிர்ந்தமை பேசுகிறது. 



திருமெய்ஞானம் கல்வெட்டு அந்தியம்பொழுது ஏழரைநாழிகை அளவிற்கு அங்கு விளக்கேற்றப்பட்டமை கூற, திருமறைக்காட்டுக் கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கர் காலத்தில் அப்பன் கழனியின் மனைவி பெரியாண்டாளான அன்னதானநங்கையும் சீலைச்செட்டி காரியாழ்வானும் இணைந்து அக்கோயிலில் ஏற்றிய நந்தாவிளக்கு, ‘உதய அஸ்தமனமும் அஸ்தமன உதயமும்’ (பகலும் இரவும்) ஒளிர்ந்த வரலாற்றை வெளிப்படுத்துகிறது.



திரி, நெய், விளக்கு



விளக்கேற்றல் கல்வெட்டுகள் ஆயிரக்கணக்கில் கிடைத்தபோதும், இன்ன திரியால் அல்லது இப்படித் திரியிட்டு விளக்கேற்ற வேண்டும் எனக் கேட்ட குரல்களை மிக அருமையாகவே கல்வெட்டுப் பதிவுகளில் சந்திக்கமுடிகிறது. திருப்பராய்த்துறையில் முதல் பராந்தகர் காலத்தில் 2 நந்தாவிளக்குகள் ஏற்றிய நக்கன் கண்டன், நாளும் உரி நெய் கொண்டு அவ்விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டியதுடன், அவற்றிற்கான திரி, ‘மஞ்சாடிக்குப் பதின் பலம் போகிய நூல் இழை’ கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 



இராஜராஜரின் திருமந்திர ஓலைகளை எழுதிய காறாயில் எடுத்தபாதம், தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்தில் தாம் ஏற்றிய நந்தாவிளக்கில் கற்பூரத்திரி இட்டு எரியச் செய்ய வேண்டினார். அதற்கு நாளும் மஞ்சாடிக் கற்பூரமாக ஆண்டிற்கு 18 கழஞ்சுக் கற்பூரம் பெற வாய்ப்பாக 50 காசுகள் அளித்தார். இக்காசுகளை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் கற்பூரவிளக்கு ஏற்றப்பட்டது. நாலூர் திருமெய்ஞானம் ஞானபரமேசுவரர் கோயிலிலுள்ள சோழர் கல்வெட்டு, அவ்வூர் வணிகர் சோழாடிகளான திருநாவுக்கரையர் 12 ஈழக்காசுகள் அளித்து அந்தியில் ஏழரைநாழிகை அளவிற்கு 12 விளக்குகள் ஏற்ற வகைசெய்தமை கூறுகிறது. அவ்விளக்குகளைத் தாங்களே எண்ணெயிட்டு அகில் தெடி திரிச்சு ஏற்றுவதாகக் கொடை பெற்ற கோயில் நிருவாகிகள் உறுதிகூறினர்.



விளக்கேற்றப் பயன்பட்ட நெய் ஆடு, பசு, எருமை எனும் முந்நிரைகளிடமிருந்து பெறப்பட்டது. விளக்கின் தன்மைக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்ப ஆழாக்கு, உழக்கு, நாழி, உரி எனப் பல அளவுகளில் இந்நெய் அளக்கப்பெற்றது. இதை அளந்து பெறக் கோயிலார் கொண்டிருந்த அளவு நிர்ணயம் செய்யப்பெற்ற அளவைகள் இறைவன், அரசர் பெயர்களிலும் பொதுப்பெயர்களிலும் வழங்கின. திருச்சோற்றுத்துறைக் கோயிலிலில் அளவைகளுக்கு மற்றாக ஐம்பிடி நெய் கொண்டு நந்தாவிளக்கு ஏற்றப்பட்டது.



திருமறைக்காட்டில் திருமறைக்காடன், வேதவனநாயகன் எனும் பெயர்களில் இருவகை நாழிகள் இருந்தன. இராஜராஜீசுவரத்து அளவை ஆடவல்லான் என அழைக்கப்பட்டது. திருவாரூர் நெய் அளவை திருநீலகண்டம் என்னும் பெயரில் வழங்கியது. குடுமியான்மலை உள்ளிட்ட சில கோயில்களில் கேரளாந்தகன் உழக்கும் திருப்புத்தூர் உள்ளிட்ட பல கோயில்களில் சூலஉழக்கும் வழக்கிலிருக்க, திருச்சுழியல் காளநாதசுவாமி கோயிலில் சோழாந்தக நாராயம் கையாளப்பட்டது. ஆத்தூர் சோமநாதீசுவரத்தில் பண்டார உழக்கும் சிராப்பள்ளி மலைக்கோயிலில் சூலநாழியும் கைக்கொள்ளப் பட்டன. காளஹஸ்தி கோயில் அளவை திருக்காளத்தி உடையான் எனும் பெயரில் வழங்கியது. 



விளக்கேற்றக் கொடையளித்தவர்களுள் பலர் விளக்கையும் சேர்த்தளித்தனர். நிலைவிளக்கு, தராவிளக்கு, தரா நிலைவிளக்கு என்றழைக்கப்பட்ட இவ்விளக்குகள் செம்பும் காரீயமுமம் சேர்ந்த உலோகக் கலவையால் செய்யப்பட்டவை. இவை பல்வேறு அளவுகளிலும் எடைகளிலும் அமைந்தன. கண்டராதித்தசோழரின் தேவியான செம்பியன்மாதேவி சிராப்பள்ளி மாவட்டம் பாச்சில் அமலீசுவரத்தில் இறைத்திருமுன் விளக்கேற்ற ஐந்து தராநிலைவிளக்குகளை வழங்கினார். அவற்றுள் இரண்டு 334, 240 பலம் நிறை கொண்டமைய, எஞ்சிய மூன்றனுள் ஒன்வொன்றும் 190 பலம் நிறை கொண்டிருந்தன. அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயிலில் 80 பலம் நிறையும் நான்கு சாண் உயரமும் கொண்ட விளக்கும் மாறமங்கத்தில் 36 பலம் நிறைகொண்ட விளக்கும் ஒளிர்ந்தன. கோயில்பட்டி ஆதனூர் ஆதிலிங்கேசுவரர் கோயிலில் இரண்டு சாண் நான்கு விரல் உயரமுடைய தராவிளக்கு பயன்படுத்தப்பட்டது. மன்னார்கோயிலில் அரை நந்தாவிளக்கு ஏற்ற விரும்பியவர் ஒரு சாண் இருவிரல் உயரமுடைய நிலைவிளக்கை அளித்தார். இருசாண் உயர விளக்கில் சந்தியாதீபம் ஏற்றப்பட்டதை ஆத்தூர் சோமநாதீசுவரர் கல்வெட்டு கூறுகிறது. திருஎறும்பியூரில் ஆறு சாண் நான்கு விரல் உயரத் தராவிளக்கு பயன்பாட்டில் இருந்தது. 1182 பலம் நிறையுள்ள ஐந்து நிலைக் குத்துவிளக்கு அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவரையரால் திருவக்கரை சந்திரமௌலீசுவரர் கோயிலுக்கு வழங்கப்பட்டது. திருமறைக்காட்டீசர் கோயிலில் ஒளிர்ந்த பித்தளைக் குத்துவிளக்கு பீடம், தலை, தாங்கி மூன்றும் உட்பட இரு சாண் நான்கு விரல் உயரம் கொண்டிருந்தது. 



தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் 41. 5 பலத் தராவிளக்கும், 120 பலம் நிறையுள்ள தராவிளக்கும் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளானால் வழங்கப்பட்டன. இவற்றுள் நிறை குறைந்த விளக்கு அவரால் வழங்கப்பெற்ற தேவாரமூவர் திருமேனிகள் முன்னும் நிறைமிகுந்த விளக்கு அவரால் செய்தளிக்கப்பெற்றுப் பெரியபெருமாள் என்று கல்வெட்டுகளில் சுட்டப்படும் முதல் ராஜராஜர் திருமேனி முன்னும் ஒளிர்ந்தன.  



இவை தவிர, மலையாண் விளக்கு, மலையாண் செயலி விளக்கு, ஈழச்சீயல் விளக்கு, ஆரக்குடவிளக்கு, பாவைவிளக்கு, தோழி விளக்கு, தூங்காவிளக்கு, மந்திரதீபம் எனப் பலவகை விளக்குகள் கல்வெட்டுகளில் சுட்டப்பட்டுள்ளன. இவை எத்தகு விளக்குகள் என்பதை அறியக்கூடவில்லை. தனியர் பெயரேற்றும் கோயில்களில் நந்தாவிளக்குகள் ஒளிர்ந்தன. திருச்சோற்றுத்துறையில் குமரமார்த்தாண்டன் என்னும் பெயருடன் 30 கழஞ்சுப் பொன்னால் ஒரு நந்தாவிளக்கு ஏற்றப்பட்டது. தொடரான விளக்குகள் தீபமாலை, விளக்குத்தோரணம், சோதிமாலை எனப் பல பெயர்களில் வழங்கின. இவை பற்றி அறியும் முன் விளக்கேற்றத் துணைநின்ற கால்நடைகளைப் பார்ப்போம். 



- வளரும் 

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.