http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > பயணப்பட்டோம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
இரா. கலைக்கோவன்
மலர்வு: 31. 10. 1950

உதிர்வு: 6. 9. 2020

என் வாழ்க்கையில் ஒரு பயணம் முடிந்துவிட்டது. ஒரு கலைக்களஞ்சியம் இனி திறக்க முடியாதபடி மூடிக்கொண்டது. பல்துறைசார் தரவுகளைத் தேக்கிவைத்திருந்த அந்தக் கணினிப் பொறி இயக்கமுடியாதபடி ஆனது. யார் யாருக்கோ சொந்தமான எத்தனையோ சுமைகளைச் சுமந்த தோள்கள் துவண்டுவிட்டன. காலம் வரலாற்றின் ஒரு சிறந்த இயலை முடித்துவிட்டது. அன்பு என்னும் சொல்லுக்கு அடையாளமாக வாழ்ந்த ஒரு மனிதம் மறைந்துவிட்டது. யாது செய்வோம் இனி என உள்ளம் நொறுங்கிக் கிடக்கிறது. அனைவருக்கும் சொந்தமான அரசு கண்ணுறங்கிப் போனார்.

என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த தனித்துவமான நண்பர் அவர். உறவால் தம்பியாகி உள்ள உணர்வுகளில் எனை ஆளும் தோழனாக உருவெடுத்தவர். இளமையில் கருத்தோடு காவலாகத் துணையிருந்தவர். படித்ததையெல்லாம் பகிர்ந்து கொள்ளச் செவிகளைத் தந்தவர். டாக்டர் மா. இராசமாணிக்கனார் குடும்பத்தின் ஆணிவேராய் அமைந்து, விரிந்த கிளைகளையும் புதிதாய் விளைந்த விழுதுகளையும் தம் இறுதி மூச்சுவரை தாங்கி மகிழ்ந்தவர். உண்மையானவர். கொண்ட கொள்கைகளில் உறுதியானவர். பலரை உழைக்கச் செய்து, அதற்கென தம் உழைப்பையும் தந்து உயர வைத்தவர்.

அவருக்கும் எனக்குமாய் அமைந்த நட்பு வாழ்க்கையில் சில நிகழ்வுகளையேனும் இங்குப் பதிவுசெய்வது இன்றியமையாதது. இலக்கியம், வரலாறு இரு துறைகளிலுமே பரவலாகப் படிப்பவர் என்பதால் என் ஆய்வுக்கெனப் பல வழிகாட்டு நூல்களைப் பரிந்துரைத்திருக்கிறார். அரசுவின் படிப்பார்வம் அளப்பரியது. எங்கள் பெரிய அண்ணன் திரு. மா. ரா. இளங்கோவன் தந்தையைப் போலவே பெரிய நூலகம் வைத்திருந்தார். அவருக்கு இணையான நூல்தொகுப்பை அரசுவும் கொண்டிருந்தார். இரு நூலகங்களுக்கும் இடையிலான பெரிய வேறுபாடு வரலாறு சார்ந்தும் அரிய நூல்கள் பலவற்றை அரசு சேர்த்திருந்தமைதான். என்ன விலையாயினும் நல்ல நூல்களை வாங்க அஞ்சாதவர். பலர், நூல்களை வாங்கி அடுக்கி வைத்திருப்பர். அரசு வாங்கும்போதே அது எத்தனை பெரிய நூலாக இருந்தாலும் படித்த பிறகே நூலகத்தில் சேர்ப்பார். அவர் நூல்கள் அனைத்திலும் படித்ததற்கு அடையாளமாக அவரைத் தொட்ட இடங்கள் அடிக்கோட்டுடன் கண்சிமிட்டும். நான்கூட இது போல் விருப்பமான இடங்களை அடிக்கோடிடுவது உண்டு. ஆனால், அந்த அடிக்கோடிடும் செயலைக்கூட மிக ஒழுங்காக அடிக்குச்சிக் கொண்டு அழகுணர்ச்சியோடு செய்பவர் அவர்.

கல்வி பயிலும் காலத்தே ஒன்றாக இருந்த எங்களிடையே என் திருமணத்தால் பிரிவு நேர்ந்தது. நான் சிராப்பள்ளியிலும் அவர் சென்னையிலும் இருந்தமையால் கல்லூரிக் காலக் கலந்துரைகள் தொடரமுடியாமல் போயின. தஞ்சாவூர்க் கரந்தை உமா மகேசுவரனார் கல்லூரிக்கு அவர் மாற்றலாகி வந்த பிறகுதான், எங்களுக்குள் ஆழமான நட்பு ஏற்பட்டது. பெரும்பாலும் அனைத்து வார இறுதிகளிலும் அவர் சிராப்பள்ளி வந்துவிடுவார். அதனால் சனி, ஞாயிறு இரு நாள்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடிக் களிப்போம். தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தியவர்களுள் அரசு குறிப்பிடத்தக்கவர். இலக்கிய இளவல் பட்டப்படிப்பில் நான் சேர்ந்தபோது தம்மிடமிருந்த அனைத்து இலக்கிய, இலக்கண நூல்களையும் எனக்களித்து முழுமையாகப் பயில வாய்ப்பளித்தவர் அவர்.

முதலாண்டுப் பாடத்திட்டத்தில் இருந்த வைராக்கிய சதகம் நூல் எங்கும் கிடைக்கவில்லை என்று என் ஆசிரியர் புலவர் மாமணி சு. அரங்கசாமி தெரிவித்தபோது அந்நூலைப் பெற எனக்கு உதவியவர் அரசுதான். சென்னையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நூலகர்களும் அவரது இனிய நண்பர்கள். எந்த நூல் வேண்டுமென்றாலும் அதை ஏதாவது ஒரு நூலகத்திலிருந்து எப்படியாவது பெற்றுத் தருவதில் அவருக்கு இணை அவர்தான். குமாரவயலூர் சுந்தரதாண்டவச் செப்புத்திருமேனி குறித்த என் ஆய்வின்போது திருமந்திரம் படிக்குமாறு நெறிப்படுத்தியவர், அந்நூலில் நான் தேடிய தரவுகள் இல்லாமையைக் கூறி, நாட்டிய சாத்திரம் நூலைப் பெற்றுத் தருமாறு கேட்டபோது, அனைத்து நூலகங்களிலும் தேடி, இறுதியில் கன்னிமாரா நூலகத்திலிருந்து பெற்றுத்தந்தார். அவர் உதவியால்தான் கரணங்கள் குறித்த என் ஆய்வுகள் வளம்பெற்றன. அதுபோலவே திரு. மயிலை சீனி. வேங்கடசாமியின், 'இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்' நூலும் அவர் முயற்சியின் காரணமாகவே என்னை அடைந்தது. அவருடைய தேடல் தளர்வில்லாதது. தம்முடைய ஆய்வுக்குத் தேடுவது போலப் பலமடங்கு ஈடுபாட்டுடன் பிறர் ஆய்வுக்கும் தேவைப்படுவன தேடித் தந்து துணைநிற்பதில் அரசு இணையற்றவர். நான் முதுகலை வரலாறு முடிக்கும்வரை என் கல்விக்கும் ஆய்வுகளுக்கும் அவர் தேடித் தந்த நூல்கள் கணக்கில.

எங்கள் குடும்பத்தில் நான்கு ஆண் பிள்ளைகள் இருந்த போதும் சகோதரிகள் நால்வருக்கும் இணக்கமானவரும் நெருக்கமானவரும் அரசுதான். குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்தும் 1970களுக்குப் பிறகு குடும்பத் தலைவராகவே செயற்பட்டவர். அவராகவே பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது ஒருபுறமிருக்க, பொறுப்புகள் அவரைத் தேடிவந்து சரணடைந்ததும் உண்மைதான். யாருக்கும் எப்போதும் துணையிருக்கும் அன்புள்ளம் அவருடையது. தம் கடமைகளைக்கூடப் புறந்தள்ளி நம்பி வருவாருக்கு வேண்டியது செய்வது அவர் இயல்பு. இந்நற்பண்புகளால் அவர் இழந்தவை கணக்கிற்கு அப்பாற்பட்டது. மிகச் சிறந்த படைப்பாற்றல் இருந்தபோதும் உரிய அளவில் அவரது எழுத் துரைகள் வெளியாகாமைக்கு உறவாய்ச் சூழ்ந்து உதவும் இவ்வியல்பே முதன்மையான காரணமாகும்.

பணியாற்றிய இரண்டு கல்லூரிகளிலுமே மாணவர்களுக்கு மிகப் பிடித்தமான பேராசிரியர் அவர். குறிப்பாகக் கரந்தைக் கல்லூரியில் அவர் தொடங்கிய மாணவர்சார் பன்முகப் பணிகள் பெரும் புகழையும் உறவாய் நேசிக்கும் இளைஞர் படையையும் அவருக்குப் பெற்றுத்தந்தன. மிகப் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்களமாக விளங்கிய கரந்தைக் கல்லூரியில் கவிதை, பேச்சு, எழுத்து, ஆய்வு எனப் பல விதைகளைத் தூவி, செழிப்பான நாற்றுகளை வளர்த்தெடுத்த பெருமை அவருக்குண்டு. ஆய்வுக்காகத் தஞ்சாவூர் செல்லும்போதெல்லாம் மாலை நேரங்களில் இராஜராஜீசுவர வளாகத்தில் நாங்கள் சந்திப்பதுண்டு. மாணவர்கள் சூழ வருவார். அவர் மாணவர்கள் அன்பானவர்கள், அறிவுத் தேடலில் சளைக்காதவர்கள். அரசு தந்த ஊக்கத்தால் அவர்களுள் சிலர் கவிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் மலர்ந்துள்ளனர். சிலர் தகுதி சான்ற பேராசிரியர்களாக அதே கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் இடம்பிடித்துள்ளனர். அரசுவின் நட்பு காற்றோடு கரையும் உறவல்ல. அது எந்தப் புயலிலும் எந்தத் தோணியையும் கவனத்தோடு கரை சேர்க்கும் அன்பும் கவலையும் நிறைந்த நட்பு.

அரசுவின் பேச்சாற்றல் எனக்குப் பல வகைகளில் பயன்பட்டது. முயற்சியேயின்றி யாரையும் சிரிக்க வைக்கும் இயல்பான நகைச்சுவை அவர் பேச்சில் எப்போதும் மிளிரும். அவர் கரந்தையில் பணி செய்த காலகட்டத்தில் நான் சிராப்பள்ளியில் மக்கள் பயனுறுமாறு திங்கள்தோறும் தமிழில் மருத்துவச் சொற்பொழிவுகள் நிகழ்த்திக்கொண்டிருந்தேன். அவற்றுள் சில வழக்காடு மன்றங்களாக அமைந்தன. 'கண்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத பொதுமக்கள் குற்றவாளிகளே' என்பது போன்ற மருத் துவம்சார் தலைப்புகளில் காப்புமுறைகளை மக்களிடையே கொண்டு செலுத்துமாறு அவ்வழக்காடுமன்றங்களை அமைத்திருந்தேன். அவற்றில் நடுவராக இருந்து என் பணி செழிக்க உதவியுள்ளார். தம்மை முதன்மைப்படுத்திக் கொள்ளாமல், மருத்துவத்திற்கும் மக்களுக்கும் முதன்மை தந்து, வழிகாட்டுதல்களில் இருந்து வழுவாமல் அவற்றை அவர் நடத்தித் தந்தமையே அவற்றின் வெற்றிக்குத் தலையாய காரணமாயின.

அதே காலக்கட்டத்தில் சொல்லாற்றலும் கருத்துத் திறனும் சிறந்த பண்புகளும் பெற்ற இளைஞர் குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அருமையான இளைஞர்கள் சிலர் என்னுடன் நட்பாக இருந்தனர். அவர்களைக் கொண்டு சமுதாயத்திற்கு வழிகாட்டும் சிறந்த பட்டிமன்றங்களை உருவாக்குவதிலும் அரசு எனக்குத் துணையாக இருந்தார். பட்டிமன்ற நடுவராகவும் அணித்தலைவராகவும் பயிற்சியாளராகவும் பன்முகப் பேராற்றலுடன் அவர் என்னுடன் இணைந்து உழைத்தமையால்தான் சிராப்பள்ளி நகரே போற்றிய அருமையான உரைகளை எங்களால் அளிக்க முடிந்தது. தம் உழைப்போடு தம் நண்பர்கள் உழைப்பையும் இத்தகு உருவாக்கங்களில் ஒருங்கிணைத்த என் இளவல், தமக்குத் தெரிந்த, தம்முடன் பணியாற்றிய பேராசிரியர்களையும் எங்களுடன் இணைத்து நிகழ்ச்சிகளுக்குச் செழிப்பூட்டியமை என்றும் நினைக்கத்தக்கது.

வரலாற்றில் அவருக்குள்ள ஆர்வம் ஞாலத்தின் மாணப் பெரிது. தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோதும் இந்திய, தமிழ் நாட்டு வரலாறுகளை அவர் நன்கு பயின்றுள்ளார். வரலாற்று ஆய்வுகளில் அவர் முனைந்ததில்லையே தவிர, பரவலான படிப்பின் வழி அன்றாட ஆய்வு முடிவுகளை அறிந்திருந்தார். எங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து அவரிடம் கலந்துரையாடும் போதெல்லாம் அது தொடர்பாக அவர் அறிந்தவற்றைப் பகிர்ந்துகொண்டு எங்களை வியப்பிலாழ்த்துவார். வரலாற்றில் அவருக்குள்ள தோய்வு நான் அறிந்ததுதான் என்றாலும், வரலாற்றுப் பேராசிரியர்களையே மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு அதில் ஆழமான புலமை இருந்தமை சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறையில் அவர் நிகழ்த்திய வீரசிவாஜியைப் பற்றிய உரையின் போதுதான் தெரியவந்தது. துறைப் பேராசிரியர்கள் அனைவரும் அவரது வரலாற்று ஞானத்தைப் போற்றி மகிழ்ந்தனர்.

தமிழ், வரலாறு இவை இரண்டினும் மேலாக அவர் நேசித்துத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது இதழியல் ஆய்வுகளில்தான். 1980களில் இருந்தே அவரது இதழியல் திறமை வெளிப்படத் தொடங்கியது. தமிழ்நாட்டில் இதழியல் துறையில் ஈடுபட்டுள்ள எந்த அறிஞரும் நினைத்துப் பார்த்திராத பல புதுமைகளை மிக எளிதாகவும் சிறப்பாகவும் சாதித்துக் காட்டியவர். தெரிந்தெடுத்த இளைஞர் சிலருடன் அவர் தொடர்ந்து நிகழ்த்திய இதழியல் கருத்தரங்குகள் அறிஞர்களால் மிகுதியும் பேசப்பட்டவை. இதழியல் ஆய்வுகளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகவே தந்தையாரின் பெயரில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தைத் தொடங்கி பல அரிய இதழியல் ஆய்வுகளை மேற்கொண்ட பெருமை அவருக்கு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அவர் நிகழ்த்திய இதழியல் கருத்தரங்குகள் இளம் ஆய்வாளர்களுக்குப் புதையலாய் அமைந்தன. மிகுந்த முயற்சியும் தொடர் உழைப்பும் கொண்டு பல்லாண்டுகள் முயன்று தாம் அமைத்த அனைத்துக் கருத்தரங்குகளையும் நூல்களாக மாற்றித் தமிழுக்கு அருந்தொண்டு செய்திருக்கிறார் அவர்.

இதழியல் ஆய்வு மட்டுமல்லாது இதழ்களைத் தொடங்கி நடத்துவதிலும் முனைந்த அரசு, கரந்தையில் இருந்தபோது 'இளமையின் குரல்', 'கொறிப்பு' எனும் இரண்டு இதழ்களைக் கொணர்ந்தார். தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும், அந்தத் தொண்டும் இளைஞர்களின் வழிப்பட்டு அமையவேண்டும் என்பதில் கருத்தாக இருந்தமையால்தான் அவரது முதல் இதழின் பெயரே இளமையின் குரலாக அமைந்தது. பொருளாதாரப் பின்புலமே இல்லாமல், இளைஞர்களிடம் நன்கொடை பெறாமல் முற்றிலும் தம் ஊதியத்திலிருந்தே அந்த இதழை விடாமுயற்சியுடன் அவர் நடத்தியதுதான் அவரது பெருமை. இளமையின் குரலில் என் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

தாம் முனைவர் ஆவதற்கு முன்பே பல முனைவர்களைத் தம் ஆற்றலாலும் அறிவாலும் உருவாக்கிய பேராசிரியர்களை, அறிஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அத்தகைமைசால் குழுவில் அரசுவுக்கும் இடமுண்டு. நான் அறிந்தே மூன்று பேராசிரியர்கள் அரசு முனைவர் பட்டத்திற்கு ஆய்வு தொடங்கியிருந்த காலத்திலேயே அவரது வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆய்வு முடித்து உயர்நிலை பெற்றனர். ஆய்வுமாணவர்கள் எத்தகு உதவி கேட்டாலும் தம்மால் இயன்றது அனைத்தும் செய்துதரும் அவரது தழுவலில் அவர் வீட்டிலேயே தங்கியிருந்து ஆய்வுப்பட்டம் பெற்ற இளைஞர்களையும் நான் அறிவேன்.

எங்கள் தந்தையார் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தம்முடைய 60ஆம் வயதிலேயே அமரரானவர். அவருடைய 75ஆம் பிறந்தநாளைச் சிறப்புடன் கொண்டாடி மலர் வெளியிடவேண்டும் என விரும்பிய அரசு அதைத் தம் உழைப்பால் நிறைவேற்றினார். நானும் அவரும் இணைந்து கொணர்ந்த முதல் வெளியீடு அதுதான். என் பொறுப்பிலிருந்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய மன்றத்தின் பதிப்பாக 200 பக்க அளவில் 1982இல் வெளிவந்த அம்மலர் தந்தையாரின் பாடுகளையும் தமிழ்த் தொண்டையும் சமுதாயப் பணிகளையும் நிறைவாகப் பெற்றிலங்கியது. அம்மலரைப் பார்க்கும்போதெல்லாம் தந்தையாரிடம் அரசுவிற்கு இருக்கும் பத்திமை உணர்வுதான் என் கண்களைக் கலக்கும். அந்த உணர்வுதான் தந்தையாரின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நிகழ்த்தும் பேற்றை அவருக்கு அளித்தது.

2007இல் தமிழ்நாடு முழுவதும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டமைக்கு அரசுவின் முயற்சிகளே முழுமுதற் காரணம். சாகித்ய அகாதெமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தந்தையாரைப் பற்றிய நூல் கொணர்ந்தமைக்கும் அந்நூலை உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கும் அவரே காரணர். தந்தையாரைப் பற்றிய வரலாற்று நூல் எழுதும் பேறு எத்தனை பிள்ளைகளுக்குக் கிடைக்கும்! அந்த அரிய வாய்ப்பைக்கூடத் தாம் பெற்றுக் கொள்ளாமல் எனக்களித்து என்னைத் தவப்பேறுடையவனாக்கியவர் அரசு. அவர் அளவிற்குத் தந்தையாரின் நூல்களை நான் பயின்றிராமையால் எழுதப் பெரிதும் தயங்கினேன். என் தளர்வை நீக்கியவர், தந்தையார் எழுதி வெளியாகியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தேடிப் பெற்றிருப்பதாகக் கூறி, அனைத்தையும் தந்தார். நான் அவற்றைப் படித்து, இராசமாணிக்கனாரை அவர் நூல்கள் வழி உள்வாங்கியதால்தான், தகுதி சான்றதொரு நூலை உருவாக்க முடிந்தது. பின்னாளில் இத்தகு வாய்ப்புகள் உருவாகலாம் எனக் கருதியோ என்னவோ பல்லாண்டுகள் அரும்பாடுபட்டுத் தந்தையாருடைய அனைத்து நூல்களையும் பலரிடம் கேட்டுப் பெற்று அவர் சேர்த்திருந்த பாங்கு, அவரது கடமை உணர்வையும் தந்தையாரிடம் அவருக்கிருந்த அளவற்ற பத்திமையையும் காட்டுவதாகக் கொள்ளலாம். முற்றிலும் அவர் முயற்சியின் காரணமாகவே தந்தையார் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை டாக்டர் மா. இராச மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி அவருக்குப் பெருமை சேர்த்தது.

தந்தையார் மறைவுக்குப் பிறகு அவர் நூல்கள் தொடர்ந்து ஆய்வாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மிகுமுயற்சி எடுத்துத் தந்தையாரின் முதன்மையான ஆய்வுநூல்களைப் பதிப்பக நண்பர்கள் வழி மறுபதிப்புச் செய்தவர் அரசு. அதற்காக அவர் உழைத்த உழைப்பும் மேற்கொண்ட முயற்சிகளும் செலவிட்ட காலமும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவை. இன்றுவரை தந்தையாரின் அனைத்து நூல்களும் பார்வைக்குக் கிடைக்கிறதென்றால், அதன் பின்னால் அரசு என்ற தனி மனிதரின் ஓய்வற்ற உழைப்பு ஒளிர்வதை உணரலாம்.

அரசு அன்பு செலுத்துவதில் வள்ளல். அவர் அன்பை ஒருமுறை அனுபவித்தவர்கள் அவரை விட்டு விலகிச்செல்ல விரும்பார். எங்கள் குடும்ப வட்டத்தில் மூன்றாம் தலைமுறையினரும் அரசுவுக்கு நெருக்கம். யாருக்கு எது என்றாலும் அவருக்குத் துணையிருக்கும் முதல் ஆளாக அரசு நிற்பார். நான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எனக்கு இரத்தம் பெறுவதற்காக மாணவர்கள், நண்பர்கள் வழி அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் என் நினைவில் இருக்கும். என்னைப் போலவே பலர் அவரது அன்பு நிறைந்த உதவிகளை அனுபவித்துள்ளனர்.

இந்திய விடுதலைப் போரின் வரலாறு பேராசிரியர் அரசுவுக்கு மிகப்பிடித்த பகுதியாகும். அது தொடர்பான அனைத் துத் தரவுகளையும் விரல்நுனிகளில் அவர் வைத்திருந்தார். தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களில் அவர் உள்ளம் கவர்ந்தவர் வ. உ. சிதம்பரனார். தம் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்காகச் சிதம்பரனாரின் பணிகளையும் படைப்புகளையும் விரிவான அளவில் ஆய்வு செய்ததோடு களப்பணிகளும் மேற்கொண்டவர். திலகரைப் பற்றி இலங்கையிலிருந்து வெளியான ஈழகேசரி இதழில் சிதம்பரனார் எழுதியிருந்த கட்டுரைத் தொகுப்பைப் பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் தனி வரலாறாகும். அக்கட்டுரைகளைத் 'திலக மகரிஷி' என்ற தலைப்பில் நூலாகவும் அவர் வெளியிட்டுள்ளார். வ. உ. சிதம்பரனாரின் இலக்கியப் பணிகளைப் பற்றிய அவரது ஆய்வுநூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சில நூல்களையே அவர் எழுதியிருந்தபோதும் அவை ஒவ்வொன்றும் அவர் உழைப்புப் பேசவல்லன. பதிப்பாசிரியராக இருந்து அவர் கொணர்ந்திருக்கும் நூல்கள் ஒவ்வொன்றும் அவரது ஒருங்கிணைப்பாற்றலுக்கும் பதிப்புத் திறனுக்கும் சிறந்த சான்றுகளாம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் குடும்பிகளை இந்நாளில் காண்பதரிது. அரசு அப்படியோர் அதிசயக் குடும்பி. உணவிட்டு மகிழ்விப்பதிலும் வேண்டுவன கேட்டு, அருகிருந்து பரிமாறி, உண்ண வைத்து மகிழ்வதிலும் அவருக்கு இணை அவர்தான். அவரது துணைவியார் திருமதி திரிபுரசுந்தரி அவர் உளமறிந்த பெருமாட்டி. சுவைபடச் சமைத்துச் சளைக்காமல் உண்டாட்டுச் செய்வதில் அரசுவுக்கு நிகரானவர். இருவர் அன்பையும் தொடர்ந்து அனுபவித்துவந்த நானும் என் வாழ்வரசியும் என்றென்றும் அவர்களுக்குக் கடமைப்பட்டவர்கள். சென்னை, செங்கற்பட்டுப் பகுதிக் கோயில்களுக்குக் களப்பயணங்களுக்குச் செல்லும்போதெல்லாம் அவர் வீடுதான் எனக்கும் என் மாணவர்களுக்கும் சரணாலயம். எப்போது போனாலும் எத்தனை பேருடன் போனாலும் எவ்வளவு நாள் தங்கினாலும் முதல்நாள் போலவே அன்புகாட்டும் அவரது உள்ள விரிவுக்கு இணையே கிடையாது. என்னைப் போலவே என் மாணவர்களையும் நேசித்து அன்புகாட்டும் அந்தப் பேருள்ளம் எத்தனை பேருக்கு வரும். என்னைச் சார்ந்தவர்கள், சூழ்ந்தவர்கள் அனைவருக்குமே அரசுவும் உறவுதான். அவரது அன்பு அத்தகையது.

பிறப்பு தந்த பெருமைக்குரிய உறவுகளில் அரசு குறிப்பிடத்தக்கவர். வாழ்க்கை தந்த வளமான துணைகளில் அவர் உடன் நடந்தவர். நானும் அவரும் அண்ணன், தம்பியாகப் பழகுவதினும் இனிய நண்பர்களாக இருப்பதையே விரும்பி வாழ்ந்தோம். பரந்து பட்ட அறிவு, இணையற்ற ஆற்றல், அணைத்துச் செல்லும் அரிய பண்பு, நட்புக்காக-உறவுக்காக உரியது எது செய்யவும் தயங்காத உள்ளம் இவற்றின் மொத்த வடிவமே அரசு. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் தேவையுள்ள ஒருவருக்கு வேண்டியது செய்வதையே தவமாகக் கருதி அன்பின் நிலைக்களனாய் வாழ்ந்த பேராசிரியர் முனைவர் அரசு இதழியல் உலகிற்குக் கிடைத்த இணையற்ற இமயம். எங்கள் குடும்பத்திற்கோ என்றென்றும் சுடர்விட்டொளிரும் நந்தாவிளக்கு.

அவரது மறைவு தமிழுக்கும் வரலாற்றுக்கும் இதழியலுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அறிவுச்செல்வமாக விளங்கிய இணையற்ற பேரன்பாளரான அரசுவிற்கு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள், மாணவர்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர். இனி வளரும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அவர் வழிநடத்தலில் அவர் நினைவுகளுடன் வரலாற்றை வளப்படுத்த உறுதியேற்போம். உடலால் பிரிந்திருந்தாலும் உணர்வுகளில் ஒன்றியிருக்கும் இனிய நண்பரே உங்கள் உழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் வரலாற்றின் கைகூப்பு.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.