http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > அறிஞர் பக்கம்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
சு.சீதாராமன்

2020 ஆம் ஆண்டு மனித குலத்தை உலுக்கிச் சென்றிருக்கிறது. ஆனால் அது தமிழ் கூறும் நல்லுலகில் “இதழியல் வேந்தர்” என்றறியப்பட்ட அனைவர்க்கும் நல்லோனாகிய மாறா அன்புள்ளம் கொண்ட திரு.மா.ரா.அரசுவையும் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்ட சோகம் நம்மிடமிருந்து மாறுவது எளிதில் சாத்தியப்படக்கூடியதல்ல.



டாக்டர் மா.ராசமாணிக்கனார் அவர்களின் புதல்வருள் ஒருவரும் டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களின் இனிய இளவலுமான திரு.மா.ரா.அரசு அவர்கள் டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களால் எங்களுக்கு அறிமுகமானார். டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களின் மாணவர்கள் நாங்கள் என்ற எங்களின் பெருமிதத்தை விட நாங்கள் டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களின் மாணவர்கள் என்ற உரிமையில் திரு.மா.ரா.அரசு அவர்களை விட நாங்கள் டாக்டரிடம் கொண்ட அண்மையை சுட்டிக் காட்டி அடிக்கடி பெருமிதம் கொண்டதை இவ்வேளையில் இனிமையாக நினைவு கூற கடமைப் பட்டுள்ளேன்! அனைத்தையும் விட பாசாங்கில்லா அன்பு செலுத்துவதில் அவருக்கிணை அவரேதான் என்றால் அது சற்றும் மிகையல்ல.அவரின் இருப்பு அவர் இருக்கும் சுற்றுச்சூழலில் ஒருவித உற்சாகத்தைப் பாய்ச்சத் தவறியதே இல்லை என்பது அடியேனின் அவதானிப்பு. அவர் எங்களை எப்போதும் நேசித்ததுடன் உரிய இடங்களில் உற்சாகப்படுத்தி தகுந்த முறையில் அங்கீகரித்து தேவையான போது தோள் கொடுத்து உதவிய சில நிகழ்வுகளை சுட்டி இக்கட்டுரையில் பதிவு செய்வதில் பேருவகை கொள்கிறேன். அது வரலாறு.காம் தொடங்கிய சில காலத்தில் நடந்த பெரு நிகழ்வு. ஆம் அடியேன் சிறு சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கிய நேரம்!( இப்பொழுதும் இந்நிலை தாண்டி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்பது வேறு- இது எனக்கு மட்டும் பொருந்தும் கூற்றாகும் என்னுடன் பயணித்த நண்பர்கள் பல்வேறு உயரங்கள் அடைந்துள்ளனர் என்ற மகிழ்வையும் பதிவு செய்வதில் பேருவகை கொள்கிறேன். அது சமயம் வரலாற்.காம் குழு வரலாற்று மேதை திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களை கௌரவிக்க “ஐராவதி” என்ற தொகுப்பு நூலை மிகுந்த தரத்துடன் தொகுத்து சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடியது. அடியேன் கிட்ட தட்ட ஒரு பார்வையாளர் என்ற முறையில் அவ்வளாகத்தில் ஒரு ஓரமாக நின்று விழா நிகழ்வுகளையும் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருந்த ஆளுமைகளின் வரலாற்றுப் பரிமாணங்களை வியந்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவ்விழா மேடையை அலங்கரித்த பெரியோர்களில் திரு.மா.ரா.அரசு அவர்களும் ஒருவர். அவர் பேசும் தருணம் வந்தது. அவர் பேசுகையில் மேடையில் அமர்ந்திருந்த பெரியோர்கள் பெருமையும் விழா நாயகர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களின் வரலாறு மற்றும் தமிழ்ப் பங்களிப்பு போன்றவைகளையும் பேசிக் கொண்டிருந்தவர் சட்டென்று வரலாறு.காம் பற்றியும் அதில் சிறு சிறு கட்டுரை எழுதும் எங்களையும் அந்த மேடையில் குறிப்பிடுவார் என்று நாங்கள் கனவிலும் நினைக்க வில்லை.



இந்த நிகழ்வு நடைபெறும் காலத்தில் ஒரு மாதத்திற்கு முன் வந்த வரலாறு.காம் இதழில் அடியேன் “வேண்டும் நல் வரங்கொள் விஜயமங்கை” என்று அரியலூர் மாவட்டத்திலமைந்துள்ள ”கோவிந்த புத்தூர்” ஆலயம் பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை எழுதிய காலம் தமிழ்ப்புத்தாண்டு நேரம். அக்கட்டுரையில் அந்த விடுமுறை தினத்தில் எந்த ஆலயத்திற்கு செல்லலாம் என்ற சிந்தனையை எதேச்சையாக வெளிப்படுத்தி செயலாக்கிய செய்தியை அம்மேடையில்



வெளிப்படுத்தி விடுமுறையன்று மனமகிழ்நிகழ்வுகளில் பொழுது போக்காது எந்த கோயில்களுக்கு செல்லலாம் என்று சிந்தித்து செயலாக்கவும் செய்யும் இளைஞர்கள் வரலாறு.காம் இதழில் உள்ளனர் என்றும் தேவாரப் பாடல் வரிகளை தலைப்பாக்கியதையும் சுட்டி பெருமைப் படுத்தினார் அத்துடன் நிற்கவில்லை அவர் கல்லூரியிலிருந்து அவரிடம் தமிழ் பயிலும் மாணாக்கர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் எங்களை பெருமிதத்துடன் பெருமைப் படுத்தி இவர் ஒரு ரியல் எஸ்டேட் பிரமோட்டர் என்றும் விளக்கிய தருணம் என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாததாகும். ( ரியல் எஸ்டேட் பிரமோட்டருக்கும் தமிழுக்கும் எப்படி இப்படி ஒரு சம்மந்தம் என்று வினவி பொதுமக்களின் இந்த தொழில் சார்ந்த பொது மதிப்பீட்டை வியந்து நல்கி )இச்சிறியோனை அச்சபைக்கு அறிமுகப்படுத்தி அவரே எனக்கு அம்மேடையில் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் மகிழ்ந்தார். இந்நிகழ்வு எனது தகுதியைத் தாண்டி அவர் காட்டிய அன்பாகவே நான் இன்று வரை கருதுகிறேன்! எனது பங்களிப்பு எழுத்துலகில் இன்று வரையும் கூட சொல்லிக் கொள்ளும் வண்ணம் பெரிதாக இல்லை. இருப்பினும் நான் எழுதியதையும் ஒருவர் எழுத்தாக பாவித்து அது போன்ற பெருஞ்சபையில் எடுத்துரைத்து ஊக்கப் படுத்திய இந்நிகழ்வு என் வாழ்நாளில் நான் உயிர் உள்ள அளவும் நினைவில்



கொள்ளத்தக்க நிகழ்ச்சியாகக் கருதுகிறேன் ! அவரிடம் நேரே பயிலாத ஒரு மாணவனுக்கு அந்த ஆசிரியப் பெருந்தகை வழங்கிய வாழ்நாள் ஆசீர்வாதம்! குறைந்த நாட்களே பழகினும் அவருடனான எனது அனுபவம்



இனிமையாக நிறைய உள்ளன. அவை ”ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிழக்க வேர்வீழ்க்கும்மே” என்ற அதிவீர ராம பாண்டியரின் வரிகளை வாழ்நாள் உள்ளவரை நினைவில் கொள்ளுமளவு வேர் பிடித்த அனுபவங்கள்.





*************************



வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்

வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்

சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்

பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே.



மேற்க்கண்ட அப்பர் பாடலுக்கு அவ்வாசிரியப்பெருந்தகை கொடுத்த மதிப்பாகவும் அதனை கட்டுரையில் எடுத்தாண்டதாலேயே இச்சிறியோனுக்கு அவர் அன்பால் கிடைத்த மாபெரும் கௌரவமாகக் கருதுகிறேன்! அவருக்கு நம் சமயக்குரவர்களின் பால் உள்ள பேரன்பு அந்நிகழ்வில் வெளிப்பட்டது. இதனைத்தாண்டி அப்பெருந்தகை அடியேனுக்குச் செய்த பேருதவி ஒன்றுண்டு! அதனை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்! நானும் நண்பர் கோகுல் அவர்களும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பட்ட ஆய்வை மேற்கொண்டு இனிதே நிறைவு செய்து எங்கள் ஆய்வுநிறைவை முறைப்படி சமர்ப்பித்தும் விட்டோம்! நண்பர் கோகுல் அவர்களுக்கு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டு விட்டது! அதன் பிறகு நீண்ட நாட்கள் காத்திருந்தும் அடியேனுடைய தேர்வு முடிவுகளும் சான்றிதழும் கிடைக்கப்பெறாமல் பல்கலைக்கழகத்திற்கே சென்று தகுந்த நபர்களிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் எனது ஆய்வுநிறைவு புத்தகம் எங்கிருக்கிறது என்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டு பலமுறை பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்றும் இழுபறியே நீடித்தது! ஆபத்பாந்தவானாக நமது திரு.மா.ரா.அரசு அவர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்! அவரது மாணவரே அப்பொழுது மேட்டூர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். எனக்காக திரு அரசு அவர்கள் அவரிடம் தொலைபேசியில் உரையாடினார். திரு.தமிழ் மாறன் என்பது அப்பெருந்தகையின் பெயர். திரு.அரசு அவர்களிடம் அப்பெருமகனார் காட்டிய அன்பும் மரியாதையும் அளப்பறியது! அவர் மேட்டூரிலிருந்து சேலத்திற்கு நேரில் வந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் கண்ட்ரோலர் ஆப் எக்சாமினேசன் அவர்களிடம் அடியேனை அறிமுகப்படுத்தினார்! விளைவு அடுத்த ஒரு வாரத்திற்குள் எனது சான்றிதழ் பாராட்டுக்களுடன் என் கைகளில் தவழ்ந்தது! இது போல் அப்பெருமகனாரின் அன்புத் தொண்டுகள் நிறையப் பேருக்கு ஆயிரமாயிரம் !



அடியார்க்கு நல்லான், தாயினும் நல்லான் வரிசையில் நாம் கண்ட ”அனைவருக்கும் நல்லோன்” நமது தெய்வத்திரு.மா.ரா.அரசு அவர்கள் என்றால் அது சற்றும் மிகையான கூற்று அல்ல என்பது இச்சிறியோனின் அவதானிப்பு என்று கூறி என் இதய அஞ்சலியை சமர்ப்பித்து நிறைவு செய்கிறேன்!



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.